Showing posts with label இராமன். Show all posts
Showing posts with label இராமன். Show all posts

Monday, 5 October 2026

மீண்டும் வால்மீகி | சர்க்கம் – 071 (24)

Valmiki again | Sarga-071 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுராவிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் வழியில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சத்ருக்னன்; வால்மீகியின் பாராட்டு; இராமகதையின் இனிய கானத்தைக் கேட்டது.

மீண்டும் வால்மீகி

பிறகு, பன்னிரண்டாம் வருஷத்தில், சத்ருக்னன், அற்ப அளவிலான பணியாளர்களுடனும் பலத்துடனும் {படையுடனும்}, ராமனால் ஆளப்பட்ட அயோத்திக்குச் செல்ல விரும்பினான்.(1) பிறகு, அவன், மந்திரிகளை முன்னணியாகக் கொண்டவர்களையும், முக்கியப் படைத்தலைவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, சிறந்த ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, நூறு ரதங்களுடனும் சென்றான்.(2) பெரும்புகழுடைய அந்த ரகுநந்தனன் {ரகு வம்சத்தவரை மகிழ்விப்பவனான சத்ருக்னன்}, கணக்காக ஏழெட்டுத் தங்குமிடங்களில் {இரவுத் தங்கல்களில்} தங்கிச் சென்று, வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து வாசம் செய்தான்.(3) அந்தப் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான சத்ருக்னன்}, வால்மீகியின் பாதங்களை வணங்கிய பின்னர், முனிவரின் கையில் இருந்து பாத்யம், அர்க்கியம், ஆதித்யம் {விருந்தோம்பல்}[1] ஆகியவற்றை ஏற்றுக் கொண்டான்.(4) அந்த முனிவர் {வால்மீகி}, மஹாத்மாவான சத்ருக்னனுக்கு பலவகையான, மிக இனிய கதைகளை ஆயிரக்கணக்கில் கூறினார்.(5)

Thursday, 1 October 2026

சத்ருக்னன் அமைத்த மதுராபுரி | சர்க்கம் – 070 (17)

Mathura established by Shatrughna | Sarga-070 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணனை வென்ற பிறகு, தேவர்களின் வரத்தால் மதுராபுரியை அமைத்து, பன்னிரண்டு ஆண்டுகளில் அதைச் செழிப்புறச் செய்த சத்ருக்னன், அண்ணன் ராமனைக் காண விரும்பியது.

சத்ருக்னன் அமைத்த மதுராபுரி

இலவணன் கொல்லப்பட்ட பிறகு, அக்னியை முன்னிட்ட, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், சத்ருதாபனனான {பகைவரை வாட்டுபவனான} சத்ருக்னனை நோக்கி நல்ல மதுரவாணியைக் கூறினர் {பின்வரும் மிக இனிய வாக்கைக் கூறினர்}:(1) "வத்ஸா {அன்புக்குழந்தாய்}, நல்லவேளையாக உனக்கு விஜயம் {வெற்றி} கிடைத்தது. நல்லவேளையாக ராக்ஷசன் லவணன் கொல்லப்பட்டான். புருஷசார்தூலா {மனிதர்களில் புலியே}, நல்விரதனே, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக.(2) மஹாபாஹோ {பெரும் தோள்களைக் கொண்டவனே}, வரம் அளிப்பவர்களான நாங்கள் அனைவரும் உன் விஜயத்தை {வெற்றியை} விரும்பி ஒன்று கூடியுள்ளோம். எங்களுடைய தரிசனம் உண்மையில் அமோகமானதாகும் {வீண்போகாததாகும்}" {என்றனர் தேவர்கள்}.(3)

தேவர்கள் பேசியதைக் கேட்டவனும், சூரனும், மஹாபாஹுவும், மனத்தை அடக்கியவனுமான சத்ருக்னன், தன் தலையின் மீது கைகளைக் கூப்பியபடியே {பின்வருமாறு} பதில் சொன்னான்:(4) "இரம்யமான இந்த மதுபுரி, தேவர்களால் நிர்மிதம் செய்யப்பட்ட {உருவாக்கப்பட்ட} மதுரா {நகரம்}, சீக்கிரம் நிலையான குடியிருப்பைப் பெறட்டும். இதுவே எனக்கு மேலான வரமாகட்டும்" {என்றான் சத்ருக்னன்}.(5)

மனப்ரீதியடைந்த தேவர்கள் அந்த ராகவனை {ரகு குலத்தவனான சத்ருக்னனை} நோக்கி, "பாடம் {அப்படியே ஆகட்டும்}. இரம்யமான இந்தப் புரி சூரசேனா ஆகும்[1]; இதில் சந்தேகமில்லை" என்று கூறினர்.(6)

[1] "ஷூரஸேனா" என்ற மூலச் சொல்லின் பொருளில் பதிப்புகளிடையே வேறுபட்ட விளக்கங்கள் காணப்படுகின்றன. தர்மாலயப் பதிப்பில், "புரியானது சூரசேனா வீரர்களால் நிறையப் பெற்று மனோஹரமாயும் ஆகும்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "மஹாசூரர்களான சேனாவீரர்களால் நிறைந்து இஃது உமது மநோரதப்படியே மேன்மைபெற்ற பட்டணமாகும்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "சூரர்களான படைவீரர்களைக் கொண்ட உனக்கு, இந்த அழகிய நகரம் தலைநகரமாகட்டும்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில், மன்மதநாததத்தர் பதிப்பில், "உண்மையில், உனது நகரம் சூரசேனா என்ற பெயரில் ஒரு கண்கவர் தலைநகராக மாறும்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இந்த அழகிய நகரம் நிச்சயம் சூரசேனா ஆக மாறும்" என்றிருக்கிறது. ஆங்கிலச் செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில், "இந்த அழகிய நகரம் சூரசேனர்களால் நிறைந்திருக்கும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சொற்படி பார்த்தால், சூரசேனர்கள் என்பது வீரமிக்க போர்வீரர்களைக் குறிக்கிறது" என்றிருக்கிறது. இவையாவும் இவ்வாறிருக்கப் பின்வரும் 9ம் சுலோகத்தில் "சூரசேனர்களுக்குரிய விஷயம் {ஆட்சிப்பகுதி}" என்ற சொல் வருவதால், இது பெயரைக் குறிப்பதாகவே தெரிகிறது.

அந்த மஹாத்மாக்கள் அவ்வாறு கூறிவிட்டு திவத்திற்கு {தேவலோகத்திற்கு} உயர்ந்து சென்றனர். மஹாதேஜஸ்வியான சத்ருக்னனோ, அந்தச் சேனையை {நகருக்குள்} கொண்டு வந்தான்.(7) சத்ருக்னனின் சாசனத்தை {கட்டளையைக்} கேட்ட அந்தச் சேனை, சீக்கிரமே வந்து சேர்ந்தது. சத்ருக்னன் சிராவணத்தில் நிவேசனம் செய்ய ஆரம்பித்தான் {ஆவணி மாதத்தில் அந்நகருக்குள் குடியேற்றம் செய்யத் தொடங்கினான்}[2].(8) திவ்யமான தோற்றத்துடன் கூடிய அந்தப் புரம் {மதுரா நகரம்}, சுபமான பன்னிரண்டாவது வருஷத்தில் நிலைபெற்றது. சூரசேனர்களின் விஷயமும் {ஆட்சிப்பகுதியும் / நாடும்} எங்கிருந்தும் பயமில்லாததாக இருந்தது[3].(9) {உரிய} காலத்தில் வாசவன் {இந்திரன்} மழையைப் பொழிந்தான்; க்ஷேத்ரங்களில் {வயல்களில்} பயிர்கள் செழித்தன. அஃது {அந்நகரம்} ரோகமற்ற {பிணியற்ற} வீரப் புருஷர்களைக் கொண்டதாகவும், சத்ருக்னனின் புஜங்களால் பாலிக்கப்பட்டதாகவும் {கைகளால் பாதுகாக்கப்பட்டதாகவும்} இருந்தது.(10)

[2] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 902ம் பாடல் பின்வருமாறு:

தய்யலர் பல்லாண்டு இசைப்பச் சாமரைகள்
  பணிமாறத் தாளம் ஓங்கும்
தெய்வமா இன்னிசைகள் செவிநுழைய
  மாகதர்கள் திரண்டு போற்ற
மெய்யெலாம் ஆபரணம் விரிசோதியால்
  விளங்க விண்ணோர் வாழ்த்தப்
பொய்யிலா உள்ளத்தான் பொங்குஅணைமேல்
  வீற்றிருந்தான் புடவி வாழ

பொருள்: பெண்டிர் பல்லாண்டு சொல்லவும், வெண்சாமரைகளை இருபுறமும் நின்று பெண்டிர் வீசவும், தாளச் சிறப்புடைய தெய்வத்தன்மையுடைய சிறந்த இன்னிசைப் பாடல்கள் தன் செவியில் நுழையவும், மாகதர்கள் திரண்டு அமர்ந்து ஏத்தவும், உடம்பெலாம் அணிந்துள்ள அணிகலன்கள் வீசுகின்ற ஒளியால் அந்த மண்டபமே விளக்கம் பெறவும் தேவர்கள் வாழ்த்தவும் பொய் இல்லாத உள்ளத்தையுடைய சத்ருக்கன் அழகு பொங்கும் அரியணைமேல் இவ்வுலகம் வாழ வீற்றிருந்தான். ஒட்டக்கூத்தர் இதை முடிசூட்டு நிகழ்வாக விவரிக்கிறார்.

[3] தர்மாலயப் பதிப்பில், "பூர்வம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாக்கியவிஷயத்தில் தெய்வத்தன்மைக்கு ஸமானமான அது சூரசேனர்களுக்கு வாஸஸ்தானமான தேசமெல்லாம் எப்படிப்பட்ட பயத்திற்கும் நிவாரணமாய் விளங்கிற்று" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "பூர்வம் பன்னிரண்டாண்டுகளுக்கு முன்னர் சிறந்த நகரமாயிருந்த மதுராபுரி மறுபடியிப்பொழுது சூரசேனர்களுக்குச் சிறிதும் பயமில்லாத வாஸஸ்தானமாகியது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அந்த நகரத்தில், சூரர்களான படைவீரர்கள் முழுமையாகப் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். தேவப்பட்டணம் போல் விளங்கிய அந்த நகரத்தில் எல்லா சுகசாதனங்களும் அமைந்திருந்தன" என்றிருக்கிறது.

அஃது {அந்த மதுரா நகரம்} அர்த்தச்சந்திரனை {பிறைநிலவைப்} போன்ற வடிவில், யமுனாதீரத்தால் சோபித்தது {யமுனைக் கரையால் அழகுடன் விளங்கியது}; முக்கிய கிருஹங்கள் {வீடுகள்}, சத்வரங்கள் {நாற்சந்திகள்}, ஆபணவீதிகளாலும் {கடைத்தெருக்களாலும்} சோபித்தது; சாதுர்வர்ணத்தாருடன் கூடியதாகவும் {நான்கு வர்ணத்தினரைக் கொண்டதாகவும்}, நானாவித வாணிபங்களாலும் சோபிப்பதாகவும் {சிறப்புற்றதாகவும்} இருந்தது.(11) முன்பு எதை {எந்த நகரத்தை} லவணன் மஹத்தான ஒளிமிக்கதாகச் செய்திருந்தானோ, அதைச் சத்ருக்னன் நானாவித வர்ணங்களால் {நிறங்களால்} சோபிக்கச் செய்து சிறப்பித்தான்[4].(12) அது {அந்த மதுரா நகரம்} நாற்புறமும் பூங்காக்களாலும், விஹாரங்களாலும் {உல்லாசமாக விளையாடும் இடங்களாலும்} சோபித்துக் கொண்டிருந்தது. மேலும் பிற தைவமானுஷச் சிறப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(13) அந்தப் புரீ {மதுரா நகரம்} திவ்யமான தோற்றத்துடன், நானாவித வணிகப் பொருள்களால் சிறப்புற்றிருந்தது; நானாவித தேசங்களில் இருந்தும் வந்த வணிகர்களாலும் சிறப்புற்றிருந்தது.(14)

[4] தர்மாலயப் பதிப்பில், "பூர்வம் அந்த லவணனால் எது பாழாய்க்கிடந்ததோ அதை சத்ருக்னர் அதி சுப்ரமாயும் எந்தவிதத்திலுமழகு வாய்ந்ததாயும் அமைத்து வைக்கலானார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "முன்னம் லவணாசுரனால் நிருமிக்கப்பட்ட அந்நகரத்தைச் சத்ருக்கனாழ்வான் விசித்திரமான பல்பல மாளிகைகளுடனே மிகப்புதுமையான பட்டணமாக்கினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில் 11, 12, 13-ஆம் சுலோகங்களின் பொருள் விரிவாக ஒன்றிணைத்துப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, "முன்னொரு காலத்தில் லவணனால் யமுனைக் கரையை ஒட்டினாற்போல் பிறைநிலா வடிவத்தில் அமைக்கப்பட்ட அந்த நகரத்தில், கணக்கற்ற மாளிகைகளும், நாற்சந்திகளும், வணிகர் வீதிகளும் சந்துகளும் இருந்தன. அங்கு நான்கு வருணத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பற்பல வியாபார நிலையங்கள் செல்வச் செழிப்பைக் கூட்டிக் காட்டின. பற்பல வண்ண ஓவியங்களால், சத்ருக்னன் அந்நகரை மேலும் அழகுபடுத்தினான். நாற்புறங்களிலும் பூங்காக்களையும், உல்லாசமாக விளையாடித் திரிவதற்கான இடங்களையும் ஏற்படுத்தினான்" என்றிருக்கிறது.

நோக்கம் நிறைவேறிய பரதானுஜன் {பரதனின் தம்பியான சத்ருக்னன்}, செழிப்புற்ற அதை {மதுரா நகரைக்} கண்டு, பரமப்ரீதியடைந்து பெரும் மகிழ்ச்சியையும் அடைந்தான்.(15) பன்னிரண்டாவது வருஷம் வந்தபோது[5], "மதுரா புரியை {மதுரா நகரை} நிறுவிவிட்டு, நான் ராமரின் பாதங்கள் இரண்டையும் காண்பேன்" என்ற புத்தி {எண்ணம்} அவனுக்குத் தோன்றியது.(16) பிறகு, ரகுகுல வம்ச வர்த்தனனான அந்த நராதிபன் {சத்ருக்னன்}, அமரபுரிக்கு ஒப்பானதும், விதவிதமான ஜனங்களால் சூழப்பட்டதுமான அந்தப் புரீயை நிறுவிவிட்டு, ரகுபதியின் {ரகு குலத் தலைவனான ராமனின்} பாதங்களை தரிசிப்பதில் தன் மதியைச் செலுத்தினான்.(17)

[5] ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிராதாக்கள் பன்னிரண்டு வருஷகாலம் ஒருவரையொருவர் பாராது பிரிந்துபோனால், பிறகு பார்க்கலாகாதென்பராதலால், அந்த தோஷத்திற்கிடமுண்டாகாதபடி பன்னிரண்டாண்டு கழிவதற்கு முன்னமே சத்துருக்கனன் சகோதரர்களைக் காணச் சென்றனரென்க" என்றிருக்கிறது.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 070ல் உள்ள சுலோகங்கள்: 17

Previous | Sanskrit | English | Next

Friday, 25 September 2026

இலவணனைச் சந்தித்த சத்ருக்னன் | சர்க்கம் – 068 (20)

Shatrughna encounters Lavana | Sarga-068 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணன் வெளியே சென்றிருக்கும் தருணத்தில் கோட்டை வாயிலில் காத்திருந்த சத்ருக்னன்; திரும்பி வந்த லவணனைப் போருக்கு அழைத்தது...

சத்ருக்னனும் லவணனும்

அவர்கள் {முனிவர்கள்} கதைகளைச் சொல்லிக்கொண்டும், சுப ஜயத்தை {மங்கல வெற்றியை} விரும்பிக் கொண்டுமிருக்கையில் மஹாத்மா சத்ருக்னனுக்கு இரவு சீக்கிரம் கழிந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {களங்கமற்ற விடியல்காலையில்}, அந்தக் காலத்தில் {நேரத்தில்}, தீரனான அந்த ராக்ஷசன் ஆஹாரத்தை {உணவைத்} தேடும் எண்ணத்தால் தூண்டப்பட்டவனாகப் புரத்திலிருந்து {நகரத்திலிருந்து} வெளியேறினான்.(2) இதற்கிடையில், வீரனான சத்ருக்னன் யமுனை நதியைக் கடந்து, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன்} மதுபுரத்வாரத்தில் நின்றான் {மதுபுரியின் வாயிலில் லவணனை எதிர்பார்த்து நின்றான்}.(3) 

Friday, 28 August 2026

சத்ருக்னனின் பயணத் தொடக்கம் | சர்க்கம் – 064 (18)

Shatrughna’s Journey Begins | Sarga-064 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணாசுரனை அழிக்க சத்ருக்னனை அனுப்பி, படை, செல்வம், வீரர்களுடன் செல்லவும், மதுராவை தர்மத்துடன் ஆட்சி செய்யவும் அறிவுறுத்திய ராமன்...

சத்ருக்னன் தன் அன்னையரிடமும் தன்னுடன் பிறந்தோரிடமும் குருவிடமும் விடைபெறுவது

இவ்வாறு கூறி, காகுத்ஸ்தனை {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலான சத்ருக்னனை} மீண்டும் மீண்டும் புகழ்ந்த ரகுநந்தனன் {ரகு வழித் தோன்றல்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான ராமன்}, மீண்டும் {பின்வரும்} மற்றொரு வாக்கியத்தைச் சொன்னான்:(1) "புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நான்காயிரம் அஷ்வங்களும் {குதிரைகளும்}, இரண்டாயிரம் ரதங்களும் {தேர்களும்}, நூறு உத்தம கஜங்களும் {சிறந்த யானைகளும்} இதோ.(2) {இவற்றின்} இடையில் நானாவித பண்யங்களால் {பல்வேறு விற்பனைப் பொருள்களால்} அலங்கரிக்கப்பட்ட பணவீதிகளும் {கடைத்தெருக்களும்}, அதேபோல நடநர்த்தகர்களும் {நடிகர்களும், நடனக் கலைஞர்களும்} காகுத்ஸ்தனை {சத்ருக்னனைப்} பின்தொடர்ந்து செல்லட்டும்.(3) புருஷரிஷபா, சத்ருக்னா, ஹிரண்யமான ஸுவர்ணத்தின் {ஒளிமிக்க, நல்ல நிறமுள்ள தங்கத்தின்} ஒரு நியுதத்தை[1] எடுத்துக் கொண்டு, போதுமான தனமும், வாகனங்களும் உடையவனாகச் செல்வாயாக.(4) 

Wednesday, 26 August 2026

சத்ருக்னாபிஷேகம் | சர்க்கம் – 063 (31)

The anointment of Shatrughna | Sarga-063 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சத்ருக்னனுக்கு அபிஷேகஞ் செய்வித்த ராமன், லவணாசுரனை வதைக்கும் உபாயத்தை அவனுக்கு விளக்கிச் சொன்னது...

அபிஷேகிக்கப்படும் சத்ருக்னன்

இராமனால் இவ்வாறு கூறப்பட்டதும், வீரியசம்பன்னனான {வீரம் நிறைந்தவனான} சத்ருக்னன், பெரும் நாணத்தை அடைந்து, மெது மெதுவாக {தயக்கத்துடன் பின்வருமாறு} சொன்னான்:(1) "காகுத்ஸ்தரே {ககுத்ஸ்தரின் வழித்தோன்றலான ராமரே}, நரேஷ்வரரே {மனிதர்களின் தலைவரே}, இந்த விஷயம் அதர்மமெனக் கருதுகிறோம். மூத்தவர்கள் இருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது எவ்வாறு?(2) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாக்கியசாலியே, உமது சாசனம் {கட்டளை} அவசியம் செய்யப்பட வேண்டியதாகும். மேலும் சாசனம் {அரசக்கட்டளை} மீறமுடியாததாகும்.(3) வீரரே, உம்மிடம் இதை நான் கேட்டிருக்கிறேன்; மேலும் சுருதிகளிலும் {வேதங்களிலும்} நான் கேட்டிருக்கிறேன். மத்யமர் {நடுவில் பிறந்தவரான பரதர்} உறுதி கூறும்போது, அதற்கு என்னால் மறுமொழி கூறப்பட வேண்டியதில்லை.(4) 

இலவணனை வதம் செய்ய சத்ருக்னனை நியமித்த இராமன் | சர்க்கம் – 062 (21)

Rama Assigns Shatrughna to Slay Lavana | Sarga-062 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: முனிவர்களிடம் லவணனின் இயல்பைக் கேட்டறிந்த ராமன்; லவணனை அழிக்கும் பொறுப்பை சத்ருக்னனுக்கு அளித்து, அப்பணிக்கு முன்பு அவனுக்கு அபிஷேகம் செய்து வைத்தது...

இராமனிடம் பேசும் சத்ருக்னன்

அவ்வாறு கூறப்பட்டபோது, கைகளைக் கூப்பிய ராமன், அந்த முனிவர்களிடம், "லவணனின் ஆஹாரம் {உணவு} என்ன? ஆசாரம் என்ன {அவனது நடத்தை எப்படிப்பட்டது}? மேலும் இருப்பது எங்கே? {அவன் எங்கே வசிக்கிறான்?}" {என்று} மறுமொழியாகச் சொன்னான்.(1)

Thursday, 20 August 2026

இலவணாசுரனின் கொடுமையும் முனிவர்களின் முறையீடும் | சர்க்கம் – 061 (25)

The Atrocities of Lavanasura and the Sages’ Appeal to Rama | Sarga-061 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணனை எதிர்க்க ராமனின் உதவியை நாடிய முனிவர்கள்; லவணனின் பிறப்பும், சிவவரமும், அவனது தந்தையான மது குறித்தும் விளக்கிய சியவனர்...

இலவணனிடம் சூலத்தைக் கொடுக்கும் மது

இவ்வாறு கூறிக் கொண்டிருந்த ரிஷிகளிடம் காகுத்ஸ்தன் {ராமன்}, "முனிவர்களே, என்ன காரியம்? கூறுங்கள். முதலில் உங்களுடைய பயம் நீங்கட்டும்" என்ற வாக்கியத்தைக் கூறினான்.(1)

Tuesday, 18 August 2026

யமுனைக்கரை முனிவர்கள் | சர்க்கம் – 060 (18)

The sages of the Yamuna banks | Sarga-060 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனைக் காண யமுனைக் கரையிலிருந்து வந்த முனிவர்கள்; ராமன் அவர்களுக்குத் தந்த வாக்குறுதி; அவர்களின் வேண்டுதல்...

இராமனின் சபாமண்டபத்தில் யமுனையாற்றங்கரை முனிவர்கள்

இவ்வாறு ராமலக்ஷ்மணர்கள் இருவரும் {ராமன், லக்ஷ்மணன் ஆகிய இருவரும்} உரையாடிக் கொண்டிருந்தபோது, குளிரும் இல்லாத, வெப்பமும் இல்லாத வசந்தத்தின் நிசி {வசந்தகால இரவு} வந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {தெளிவான விடியற்காலையில்}, முற்பகலில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியவனும், பௌரகார்யவித்துமான காகுத்ஸ்தன் தரிசனத்திற்காகச் சென்றான் {நகர மக்களின் காரியங்களை அறிந்தவனும், காகுத்ஸ்த வம்சத்தவனுமான ராமன் மக்களைக் காணச் சென்றான்}.(2) 

Monday, 17 August 2026

யயாதி | சர்க்கம் – 058 (25)

Yayati | Sarga-058 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யயாதியின் கதையைச் சொன்ன ராமன்; யதுவின் தூண்டுதலால் துயருற்ற சர்மிஷ்டை; யயாதியைச் சபித்த சுக்கிரர்...

சுக்கிராசாரியர் யயாதி தேவயானி யது

இராமன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, பகைவீரர்களை அழிப்பவனான லக்ஷ்மணன், தேஜஸ்ஸால் ஜொலிப்பவனைப் போன்ற அந்த மகாத்மாவுக்கு {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "இராஜசார்தூலரே {மன்னர்களில் புலியே}, வசிஷ்டருக்கும், விதேஹரான நிமிக்கும் இடையிலான புராதன {பண்டைய} நிகழ்வு மஹத்தானதும், அற்புதமானதுமான ஆச்சரியமாகும்.(2) க்ஷத்திரியரும், வீரரும், விசேஷமாக தீக்ஷை பெற்றவருமான நிமி ராஜாவோ, மஹாத்மாவான வசிஷ்டரிடம் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(3)

Saturday, 15 August 2026

ஊர்வசி | சர்க்கம் – 056 (29)

Urvashi | Sarga-056 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மீண்டும் உடல் உண்டாகுமாறு பிரம்மனை வேண்டிய வசிஷ்டர்; உபாயம் சொன்ன பிரம்மன்; ஊர்வசியிடம் காமுற்ற வருணன்; ஊர்வசி அடைந்த சாபம்...

அப்சரஸ் ஊர்வசியிடம் பேசும் வருணன்

இராமனின் பேச்சைக் கேட்டவனும், பகைவீரர்களை அழிப்பவனும், கைகூப்பியவனுமான லக்ஷ்மணன், ஒளிரும் தேஜஸ்ஸுடைய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்யரே, தேகத்தைத் துறந்த துவிஜரும், பார்த்திபருமான அவ்விருவரும் {மன்னர் நிமியும், வசிஷ்ட ரிஷியும்}, தேவர்களால் மதிக்கப்பட்டவர்களாக தேகத்துடனான சேர்க்கையை மீண்டும் எவ்வாறு அடைந்தனர்?"(2)

நிமியும் வசிஷ்டரும் | சர்க்கம் – 055 (21)

Nimi and Vasishtha | Sarga-055 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரஸ்பரம் சபித்துக் கொண்ட நிமியும், வசிஷ்டரும்...

மன்னன் நிமியும் வசிஷ்டரும்

நிருகருடைய இந்த சாபத்தின் விரிவான விவரம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. ஒருவேளை, கேட்பதில் சிரத்தை இருந்தால், இப்போது மற்றொரு கதையைக் கேட்பாயாக" {என்றான் ராமன்}.(1) 

Saturday, 8 August 2026

நாரதரும் பர்வதரும் | சர்க்கம் – 054 (19)

Narada and Parvata | Sarga-054 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நிருகராஜன் சாபத்தை அனுபவித்த வகையை லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...

குழி அமைக்க ஆணையிடும் மன்னன் நிருகனும் அமைக்கப்பட்ட குழியும்

பரமார்த்தவித்தான {உயர்ந்த பொருளை அறிந்தவனான} லக்ஷ்மணன், ராமனுடைய உரையைக் கேட்டுக் கைகூப்பியவனாக, ஒளிரும் தேஜஸ்ஸுடன் கூடிய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்தரே {ராமரே}, அல்ப அபராதத்திற்கு {சிறிய குற்றத்திற்கு}, ராஜரிஷியான நிருகருக்கு இரு துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால் அளிக்கப்பட்ட} இத்தகைய சாபம் மற்றொரு மஹா யமதண்டத்தைப் போன்றதாகும்.(2) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாபத்துடன் கூடிய தம் நிலையைக் கேட்டு, ராஜா நிருகர் குரோதத்தால் நிறைந்திருந்த அவ்விரு துவிஜர்களிடம் என்ன சொன்னார்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(3)

மன்னன் நிருகன் | சர்க்கம் – 053 (26)

King Nriga | Sarga-053 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாடி வருபவர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு ராஜா விசாரிக்க வேண்டும் என்பதற்குத் தொடர்புடைய நிருகராஜனின் கதையை லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...

மன்னன் நிருகன் பசு பிராமணர்

இலக்ஷ்மணனின் அந்தப் பரம அற்புதமான வாக்கியத்தைக் கேட்டுப் பெரும்பிரீதியடைந்த {மிகவும் மகிழ்ந்த} ராமன்[1], {அப்போது} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "சௌம்யா {மென்மையானவனே}, மஹாபுத்தியுள்ளவனே, எத்தகைய நீ என் மனத்திற்கு இணங்குபவனாக இருக்கிறாயோ, இத்தகைய பந்து {உறவினன்} குறிப்பாக இந்தக் காலத்தில் அரிதானவன்.(2) சுபலக்ஷணமுடையவனே, என் மனத்தில் ஏதொன்று இருக்கிறதோ, அதைக் கவனமாகக் கேட்பாயாக. மேலும் அதைக் கேட்ட பிறகு, என் வசனத்தின்படி செயல்படுவாயாக.(3) 

Thursday, 6 August 2026

இலக்ஷ்மணன்தானா? | சர்க்கம் – 052 (19)

Is this Lakshmana? | Sarga-052 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை வனத்தில் விட்டு வந்த செய்தியை ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன், சோகமுற்றிருந்த ராமனைத் தேற்றியது...

சீதையை வனத்தில் விட்டு வந்து ராமனிடம் பணியும் லக்ஷம்ணன்

இரகுநந்தனனான லக்ஷ்மணன், அங்கே கேசினியில் {கேசினி ஆற்றங்கரையில்}[1] அந்த ரஜனியை {இரவைக்} கழித்து, பிரபாதத்தின்போது {விடியற்காலை நேரத்தில்} மீண்டும் எழுந்து புறப்பட்டுச் சென்றான்.(1) பிறகு, நடுப்பகல் வந்தபோது, ரத்தினங்களால் நிறைந்ததும், மகிழ்ச்சியும், செழிப்புமுடைய மக்களால் சூழப்பட்டதுமான அயோத்யைக்குள் {அந்த} மஹாரதன் {பெரும் தேர்வீரனான அந்த லக்ஷ்மணன்} பிரவேசித்தான்.(2) மஹாமதிமிக்க சௌமித்ரியோ, பரம தைனியத்தை {பெருந்துயரை} அடைந்தான். "இராமரின் பாதங்களை அடைந்து, நான் அடைந்த நிலையை என்னவென்று கூறுவேன்?" {என்று நினைத்தான்}.(3) 

Sunday, 2 August 2026

விதி | சர்க்கம் – 050 (20)

Fate | Sarga-050 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேரில் ஏறிய லக்ஷ்மணன் துன்புறுவதைக் கண்ட சுமந்திரன்; துர்வாசர் சொன்னது...

சீதை செல்வதைப் பார்த்து சுமந்திரனிடம் பேசு லக்ஷ்மணன்

தீனமான {தளர்ந்த} உள்ளமுடைய லக்ஷ்மணனோ, ஆசிரமத்தில் பிரவேசிக்கச் செய்யப்பட்ட மைதிலியான சீதையைக் கண்டு, கோர சந்தாபத்தை {கடும் வருத்தத்தை} அடைந்தான்.(1) மேலும், மஹாதேஜஸ்வியானவன் {பேராற்றல்வாய்ந்த லக்ஷ்மணன்}, ராமனின் சாரதியும், மந்திரசாரதியுமான {ஆலோசனைகளில் தேரோட்டியைப் போல வழிகாட்டக் கூடியவனுமான} சுமந்திரனிடம் {பின்வருமாறு} கூறினான், "சீதையின் சந்தாபத்தால் {வருத்தத்தால்} உண்டான துக்கத்தைப் பார்ப்பீராக.(2) சுத்த சமாசாரமுடைய பத்தினியான {தூய ஒழுக்கமுடைய மனைவியான} ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைக்} கைவிடுவதைவிட ராகவருக்கு அதிக துக்கம்  உண்மையில் வேறென்ன இருக்கும்?(3) சாரதே, வைதேஹியைப் பிரிந்திருக்கும் ராகவரின் நிலை தைவத்தாலானதாக {விதியாலானதாக} நான் தெளிவாக கருதுகிறேன். தைவம் {விதி} நித்யம் கடப்பதற்கரியது.(4) 

Tuesday, 28 July 2026

சீதையைத் துறந்த ராமன் | சர்க்கம் – 045 (25)

Rama renounced Sita | Sarga-045 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் கருத்தைத் தம்பிகளிடம் சொன்ன ராமன்; சீதையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தருகில் விடுமாறு லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...

இராமனும் தம்பியரும்

உள்ளம் வருந்திய அவர்கள் அனைவரும் ஆசனங்களில் அமர்ந்திருக்கையில், வாட்டமுறும் முகத்துடன் காகுத்ஸ்தன் {ராமன் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "அனைவரும் கேட்பீராக. உங்களுக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. மனத்தை வேறுவிதமாக்கிக் கொள்ள வேண்டாம். என் சீதையைக் குறித்து பௌரர்களிடம் {நகரமக்களிடம்} எத்தகைய கதை நிலவுகிறதோ {அதைக் கேட்பீராக}.(2) என்னைக் குறித்து, பௌர அபவாதமும் {நகர மக்களின் அவதூறும்}, அப்படியே ஜனபதர்களின் {நாட்டுப்புற மக்களின்} மிகப்பெரும்பழியும் நிலவுகிறது. அஃது என் மர்மங்களை {இதயத்தைப்} பிளக்கிறது[1].(3) நான் மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களின் குலத்தில் பிறந்தவனன்றோ? சீதையுங்கூட மஹாத்மாக்களான ஜனகர்களின் நற்குலத்தில் பிறந்தவளே.(4)

தம்பியர் வருகை | சர்க்கம் – 044 (21)

The arrival of brothers | Sarga-044 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தனக்கு நேர்ந்த பழியைக் குறித்து ஆலோசிப்பதற்குத் தம்பிகளைத் தன்னிடம் வரவழைத்த ராமன்...

இராமனிடம் வந்த தம்பிகள்

மேலும் ராகவன், நண்பர்கள் கூட்டத்தை விடைபெறச் செய்த பிறகு, புத்தியால் நிச்சயம் செய்து கொண்டு, சமீபத்தில் அமர்ந்திருந்த வாயிற்காப்போனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(1) "சுபலக்ஷணங்களை உடையவனும், சௌமித்ரியுமான {சுமித்திரையின் மகனுமான} லக்ஷ்மணனையும், மஹாபாக்கியவானான பரதனையும், அபராஜிதனான {வெல்வதற்கரியவனான} சத்ருக்னனையும் சீக்கிரம் அழைத்து வருவாயாக" {என்றான் ராமன்}.(2)

புகழும் பழியும் | சர்க்கம் – 043 (23)

Praise and Blame | Sarga-043 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகர மக்களின் கருத்துகளை பத்ரனிடம் கேட்ட  ராமன்; மக்கள் ஆட்சியைப் புகழ்ந்தாலும், சீதையைப் பழித்துப் பேசுவதையும் தெரிவித்த பத்ரன்; துக்கமடைந்த ராமன்...

தன் சபையில் பத்ரனுடன் பேசும் ராமன்

நாற்புறமும் அறிஞர்களும், ஹாசியக்காரர்களும் {நகைச்சுவைக் கலைஞர்களும்} பலவிதமான கதைகளுடன் அங்கே வீற்றிருக்கும் ராஜனை {ராமனை} உபாசித்து {வழிபட்டுக்} கொண்டிருந்தனர்.(1) விஜயன், மேலும் மதுமத்தன், காசியபன், மங்கலன், குடன், சுராஜன், காலியன், பத்ரன், தந்தவக்ரன், சுமாகதன்,(2) {ஆகிய} இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக மஹாத்மாவான ராகவனின் முன்னிலையில் பரிஹாசம் கலந்த பலவிதமான கதைகளைக்[1] கூறிக் கொண்டிருந்தனர்.(3) 

Monday, 27 July 2026

சீதையின் விருப்பம் | சர்க்கம் – 042 (36)

The desire of Sita | Sarga-042 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சீதையுடன் நந்தவனத்தில் மகிழ்ந்திருத்தல்; மதுவும், மாமிசமும்; சீதை கருத்தரித்தல்; தபோவனங்களுக்குச் செல்லும் சீதையின் விருப்பம்...

சீதைக்கு மைரேயக மதுவைத் தரும் ராமன்

பிறகு, பெருந்தோள்களைக் கொண்ட அந்த ராமன், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்ட புஷ்பகத்தை அனுப்பிவிட்டு, அப்போது அசோகவனிகைக்குள்[1] பிரவேசித்தான்.(1) சந்தனங்களாலும், அகுருக்களாலும் {அகில் மரங்களாலும்}, மாமரங்களாலும், உயர்ந்த காலேயகங்களாலும் {மஞ்சள் சந்தன மரங்களாலும்}, தேவதாரு வனங்களாலும், சுற்றிலும் {அந்த அசோக வனிகை} மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.(2) 

Saturday, 25 July 2026

புஷ்பக விமானம் | சர்க்கம் – 041 (22)

Pushpaka Vimana | Sarga-041 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குபேரனிடம் சென்ற புஷ்பக விமானம்; இராமனுக்கே வாகனமாகும்படி குபேரன் சொன்னதால் திரும்பி வந்தது; நினைக்கும் போது வந்தால் போதும் என விடைகொடுத்து அனுப்பிய ராமன்...

புஷ்பக விமானமும் ராமனும்

பெரும் தோள்களைக் கொண்ட ராமன், ரிக்ஷர்களுக்கும், வானரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் உடன் பிறந்தவர்களுடன் இணைந்து சுகமாகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் மகிழ்ச்சியடைந்தான்.(1) பிறகு, பிற்பகல் சமயத்தில் உடன்பிறந்தாருடன் கூடிய ராகவன், அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} இருந்து பேசப்பட்ட மதுர வாணியை {இனிமையான குரலைப் பின்வருமாறு} கேட்டான்.(2) "சௌமியா {மென்மையானவனே}, ராமா, சௌம்யமான வதனத்தால் {முகத்தால்} என்னைப் பார்ப்பாயாக. பிரபோ, குபேரனின் பவனத்திலிருந்து {அரண்மனையிலிருந்து} வந்திருக்கும் என்னை புஷ்பகமாக {புஷ்பக விமானமாக} அறிந்துகொள்வாயாக.(3)

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி