Lavana killed | Sarga-069 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் கொடுத்த கணையால் லவணனை வதம் செய்த சத்ருக்னன்; மீண்டும் சிவனை அடைந்த ருத்ரசூலம்; சத்ருக்னனைப் போற்றிய தேவர்களும் முனிவர்களும்...
மஹாத்மாவான சத்ருக்னனுடைய அந்தப் பேச்சைக் கேட்டதும், தீவிரமான குரோதத்தை அடைந்த அவன் {லவணன்}, "நில், நிற்பாயாக" என்று கூறினான்.(1) ஒரு கையை மற்றொரு கையால் இறுக்கமாக உரசி, பற்களைக் கடகடவென ஒலிக்கச் செய்த அவன் {லவணன்}, ரகுசார்தூலனை {ரகு குலப் புலியான சத்ருக்னனை} மீண்டும் மீண்டும் போருக்கு அழைத்தான்.(2)
அத்தகைய வாக்கியத்தைப் பேசிக் கொண்டிருந்தவனும், கோரதரிசனத்துடன் கூடியவனுமான லவணனை நோக்கி, தேவசத்ருக்னனான {தேவர்களின் பகைவரை அழிப்பவனான} சத்ருக்னன் இந்த வசனத்தைக் கூறினான்:(3) "பிறர் உன்னால் எவ்வாறு வீழ்த்தப்பட்டார்களோ, அவ்வாறு {வீழ்த்தப்படப்} பிறந்தவன் சத்ருக்னன் அல்லன். எனவே, இன்று என் பாணத்தால் தாக்கப்படும் நீ, யமஸாதனத்திற்குச் செல்வாய் {யமனின் இல்லத்திற்குச் செல்வாய்}.(4) பாபாத்மாவே, திரிதசர்கள் {தேவர்கள்} ராவணனை {அவனது வீழ்ச்சியைப் பார்த்ததைப்} போல, இன்று ரணத்தில் என்னால் ஹதம் செய்யப்படும் {போர்க்களத்தில் கொல்லப்படும்} உன்னை ரிஷிகளும், வித்வான்களான விப்ரர்களும் {அறிவுடைய பிராமணர்களும்} பார்க்கட்டும்.(5) நிசாசரா {இரவுலாவியே}, இன்று என் பாணத்தால் முற்றிலும் எரிக்கப்பட்டு நீ வீழ்ந்த நிலையில், புரத்திலும் {நகரத்திலும்}, ஜனபதத்திலும் {மக்கள் வாழும் நாட்டுப்பகுதியிலும்} நிச்சயம் க்ஷேமம் {நலம்} உண்டாகும்.(6) இன்று என் கையிலிருந்து புறப்படும் வஜ்ரத்திற்கு ஒப்பான முனையுடைய இந்தச் சரம், அர்க்கனிடமிருந்து {சூரியனிடமிருந்து} பிறந்த கதிர் பத்மத்தில் {தாமரைக்குள் நுழைவது} போல, உன் ஹிருதயத்தில் பிரவேசிக்கும்" {என்றான் சத்ருக்னன்}.(7)
இவ்வாறு கூறப்பட்ட லவணன், குரோதத்தால் மூர்ச்சித்து {கோபத்தால் நிறைந்து} ஒரு மஹாவிருக்ஷத்தை {பெரும் மரத்தைப் பிடுங்கி, அதை} சத்ருக்னனின் மார்பில் எறிந்தான். அவனும் அதை நூறு துண்டுகளாக வெட்டினான்.(8) அந்தக் கர்மம் {செயல்} பலனற்றதைக் கண்ட பலவானான ராக்ஷசன் {லவணன்}, மீண்டும் ஏராளமான மரங்களை எடுத்து {பிடுங்கி, அவற்றை} சத்ருக்னனை நோக்கி எறிந்தான்.(9) தேஜஸ்வியான சத்ருக்னன், வேகமாகப் பாய்ந்து வந்த ஏராளமான விருக்ஷங்களை, மூன்று, அல்லது நான்கு நதபர்வங்களால் {வளைந்த கணுக்களையுடைய கணைகளால்} ஒவ்வொன்றையும் வெட்டினான்.(10) பிறகு, வீரியசம்பன்னனான சத்ருக்னன் ராக்ஷசனின் மார்பில் பாணமயமான மழையைப் பொழிந்தான். அந்த ராக்ஷசனோ கலங்கவில்லை.(11) பிறகு, வீரியவானான லவணன், எள்ளி நகையாடி ஒரு விருக்ஷத்தை {மரத்தைத்} தூக்கி, சூரனான சத்ருக்னனின் சிரசில் அடித்தான். அவன் {சத்ருக்னன்}, அங்கங்கள் தளர்ந்தவனாக மயக்கமடைந்தான்.(12)
வீரனான அவன் {சத்ருக்னன்} விழுந்தபோது, ரிஷிகள், தேவசங்கத்தினர், அதேபோல கந்தர்வ அப்சரஸ்கள் ஆகியோருக்கிடையே, மஹா ஹாஹாகாரம் {ஹா, ஹா என்ற பேரொலி} உண்டானது.(13) கொல்லப்பட்டவன் போல் புவியில் விழுந்து கிடந்த சத்ருக்னனை அலட்சியம் செய்த அந்த ராக்ஷசன் {லவணன்}, வாய்ப்பிருந்தபோதிலும் தன் ஆலயத்திற்குள் {இருப்பிடத்திற்குள்} நுழையவில்லை.(14) அவன் {லவணன்}, புவியில் விழுந்து கிடந்தவனை {சத்ருக்னனைக்} கண்டு, தன் சூலத்தைக் கூட எடுத்தானில்லை. பிறகு அவன் {சத்ருக்னன்} கொல்லப்பட்டான் என்று கருதி, அந்த உணவுப்பொருள்களை எடுத்துச் சென்றான்.(15) சத்ருக்னன், ஒரு முஹூர்த்தத்திற்குப் பிறகு உணர்வு பெற்று, ஆயுதம் தாங்கி, மீண்டும் புரத்வாரத்தில் {நகரின் வாயிலில்} நின்றான்; ரிஷிகளால் சிறப்பாகப் பூஜிக்கப்பட்டான்[1].(16)
[1] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 895ம் பாடல் பின்வருமாறு:இறந்தனன் இங்கு இவன் என்னா இலவணன்என் பகையறுத்தேன் என்று நின்றான்சிறந்தவலித் தன்சூலம் சென்றுவாங்கிட ஏதும் சிந்தை செய்யான்அறம்கை கொடுத்து எழுந்து அளிப்ப ஆதிநாயகன் தம்பி அமளி நீங்கிஉறங்கி எழுந்தான் என்ன உணர்ந்து எழுந்தான்உயர் வானத்து உம்பர் வாழ்த்தபொருள்: இங்குள்ள இச்சத்ருக்கன் இறந்தனன் என்று கருதி, "எனது பகையை அறுத்துவிட்டேன்" என்று மகிழ்ந்து, இலவணன் சிறந்த வலிமையுடைய தனது சூலத்தை அரண்மனைக்குச் சென்று எடுத்துவர ஏதும் நினையானாய் நின்றான்; தருமம் கை கொடுத்து உதவிட, ஆதிநாயகனாகிய இராகவன் தம்பியாகிய சத்துருக்கன் உறங்கிப்பின் படுக்கைவிடுத்து எழுந்தான் என்று சொல்லுமாறு உணர்ச்சி பெற்று, உயர்ந்த வானுலகத்துள்ள தேவர்கள் வாழ்த்துமாறு எழுந்தான்.
பிறகு, சத்ருக்னன் திவ்யமானதும், அமோகமானதும் {தவறாததும்}, உத்தமமானதுமான அந்தச் சரத்தை எடுத்தான். அது தன் தேஜஸ்ஸால் கோரமாக ஜுவலித்து {பயங்கரமாக ஒளிர்ந்து}, பத்துத் திசைகளையும் நிறைத்தது.(17) வஜ்ர முனையையும், வஜ்ர வேகத்தையும் உடையதும், மேரு, மந்தர மலைகளுக்கு ஒப்பானதும், கணுக்கள் அனைத்திலும் வளைந்ததும், போர்களில் ஒருபோதும் வெல்லப்படாததும்,(18) குருதியும், சந்தனமும் பூசப்பெற்ற அங்கமுடையதும், அழகிய இறகுகளைக் கொண்டதும், தானவேந்திரர்களையும் {தானவர்களின் தலைவர்களையும்}, அசலேந்திரங்களையும் {சிறந்த மலைகளையும்}, அசுரர்களையும் பிளக்கவல்லதும்,(19) யுகாந்தத்தில் தோன்றும் காலாக்னியைப் போல ஒளிர்வதுமான அந்தச் சரத்தைக் கண்டு, சர்வ பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} பேரச்சத்தை அடைந்தன.(20)
தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரஸ்கணங்களுடன் கூடிய சர்வ ஜகத்தும் {மொத்த உலகமும்} கலக்கமடைந்து, பிதாமஹனிடம் சென்றது.(21) வரதனும், தேவதேவேசனுமான பிரபிதாமஹனிடம் {முதன்மைப் பெரும்பாட்டனான பிரம்மனிடம்}, தேவர்களின் பயத்தால் ஏற்பட்ட மோஹத்தையும் {கலக்கத்தையும்}, உலகங்களின் அழிவு குறித்த அச்சத்தையும் {அனைவரும் பின்வருமாறு} கூறினர்:(22) "பிரபிதாமஹனே {பிரம்மனே}, இத்தகையது முன்பு காணப்பட்டதுமில்லை; கேட்கப்பட்டதுமில்லை. உலகங்களின் அழிவு குறித்த தேவர்களின் பயத்தால் பெருங்கலக்கம் ஏற்பட்டுள்ளது" {என்று கூறினர்}.(23)
அவர்களின் அந்த வசனத்தைக் கேட்ட லோகபிதாமஹனான பிரம்மன், உலகங்களுக்கு அபயத்தை {அச்சமின்மையை} அளிப்பவனாக, பயத்திற்கான காரணத்தை விளக்கினான். பின்னர், மதுரவாணியில் {இனிய சொற்களில்} இவ்வாறு கூறினான், "சர்வதேவர்களே, கேட்பீராக.(24) ஸுரசத்தமர்களே {சிறந்த தேவர்களே}, போரில் லவணனை வதம் செய்வதற்காகச் சத்ருக்னனால் தரிக்கப்பட்ட இந்தச் சரத்தின் {கணையின்} தேஜஸ்ஸால் அனைவரும் திகைத்து நிற்கிறோம்.(25) வத்ஸர்களே {குழந்தைகளே}, இது பூர்வத்திலிருந்த தேவனான லோககர்த்தாவுடைய {உலகைப் படைத்தவனுடைய} சனாதனமான, தேஜோமயமான சரமாகும் {தொடக்கமும் முடிவும் இல்லாத ஒளிமயமான கணையாகும்}. இதனாலேயே நிச்சயம் இந்த பயம் ஏற்பட்டது.(26) உண்மையில் இந்த மஹாசரம், கைடபனும், மதுவுமாகிய அவ்விரு தைத்தியர்களின் வதத்திற்காக அந்த மஹாத்மாவால் சிருஷ்டிக்கப்பட்டது.(27) தேஜோமயமான இந்தச் சரத்தை விஷ்ணு ஒருவனே அறிவான். இதுவே மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் பூர்வ வடிவமாகும்[2].(28) இங்கிருந்து சென்று, மஹாத்மாவும், வீரனும், ராமானுஜனுமான {ராமனின் தம்பியுமான} சத்ருக்னனால் ராக்ஷசோத்தமனான லவணன் வதம் செய்யப்படுவதைப் பாருங்கள்" {என்றான் பிரம்மன்}.(29)
[2] தர்மாலயப் பதிப்பில், "விஷ்ணுபகவான் ஒருவர் மாத்திரம் தேஜோமயமாகிய சரத்தை உள்ளபடி அறிவார். இது பூர்வத்தில் அந்த பரமாத்மாவாகிய விஷ்ணுபகவானது சரீரமாயேயிருந்தது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "ஒளியுருவமான அற்புதமாகிய இந்த அம்பினது மஹிமையை யுணர்ந்தவர் ஸ்ரீமஹாவிஷ்ணு ஒருவரேயாம். ஆதியில் இதுவே திருமாலினது சரீரமாகியது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "ஒளிப்பிழம்பாகச் சுடர்விடும் இந்த பாணத்தை விஷ்ணு மட்டுமே அறிவார். ஏனென்றால், இந்த பாணம் சாட்சாத் விஷ்ணுவின் மூல வடிவமாகவே விளங்கியது" என்றிருக்கிறது.
அந்த தேவதேவனின் {பிரம்மனின்} வசனத்தைக் கேட்ட தேவர்கள், சத்ருக்னலவணர்கள் {சத்ருக்னனும், லவணனுமாகிய} இருவரும் யுத்தம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தனர்.(30) திவ்யத் தோற்றமுடையதும், சத்ருக்னனின் கரத்தால் ஏந்தப்பட்டதுமான அந்தச் சரத்தை, யுகாந்தாக்னியை {ஊழிக்காலத்தீயைப்} போல சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்} கண்டன.(31) தேவர்களால் ஆகாசம் சூழப்பட்டிருப்பதைக் கண்ட ரகுநந்தனன் {சத்ருக்னன்}, பெருஞ்சிங்கநாதம் செய்து, மீண்டும் லவணனைக்[3] கண்டான்.(32) மஹாத்மாவான அந்தச் சத்ருக்னனால் மீண்டும் அழைக்கப்பட்ட லவணன், குரோதத்தால் நிறைந்தவனாக யுத்தத்திற்கு முன்வந்தான்.(33) தன்விகளில் {வில்லாளிகளில்} சிறந்தவனான அவன் {சத்ருக்னன்}, அந்த தனுசை {வில்லைக்} காதுவரை இழுத்து, அந்த மஹாபாணத்தை லவணனின் பெரும் மார்பில் ஏவினான்.(34) {அந்த மஹாபாணம்} அவனது மார்பைப் பிளந்து, விரைவாக ரசாதலத்திற்குள் பிரவேசித்தது.(35) விபுதர்களால் பூஜிக்கப்பட்ட {விழிப்புணர்வு பெற்ற ஞானியரான தேவர்களால் போற்றப்பட்ட} திவ்யமான சரம், ரசாதலத்திற்குச் சென்று, மீண்டும் விரைவாக இக்ஷ்வாகுகுலநந்தனனிடம் வந்தது.(36)
[3] இங்கே மூலத்தில் "ததர்ஷ லக்ஷணம் புன꞉" என்றிருக்கிறது. நாம் ஒப்பிடும் அனைத்துப் பதிப்புகளிலும் இங்கே லவணன்தான் குறிப்பிடப்படுகிறான். லக்ஷணம் என்பது பாடச்சிதைவாக இருக்கலாம்.
நிசாசரனான அந்த லவணன், சத்ருக்னனின் சரத்தால் துளைக்கப்பட்டு, வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அசலத்தை {மலையைப்} போலத் திடீரெனப் பூமியில் விழுந்தான்.(37) அவனால் {சத்ருக்னனால்}, ராக்ஷசன் லவணன் கொல்லப்பட்டபோது, அந்த மஹத்தான சூலம், சர்வதேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ருத்ரனின் வசத்தை அடைந்தது {சிவனிடம் திரும்பிச் சென்றது}.(38) இரகுப்ரவீரன் {ரகுகுலத்தின் தலைசிறந்த வீரனான சத்ருக்னன்}, உத்தம சாபமும் {வில்லும்}, பாணமும் {கணையும்} ஏந்தியவனாக, ஒரே கணையின் வீச்சால் {லவணனை} வீழ்த்தி, மூன்று உலகங்களின் இருளை விலக்கிய ஆயிரங்கதிரோனை {சூரியனைப்} போலப் பிரகாசித்தான்.(39) பிறகு, தேவர்களும், ரிஷிகளும், பன்னகர்களும், சர்வ அப்சரஸ்களும் {சத்ருக்னனை} சிறப்பாகப் பூஜித்தனர் {போற்றினர்}. "நற்பேற்றால் தாசரதிக்கு {தசரதனின் மகனான சத்ருக்னனுக்கு} ஜயம் கிடைத்தது; பயத்தைத் துறந்த சர்ப்பம் {பாம்பு} போல சாந்தமடைந்தான் {அமைதியடைந்தான்}" {என்று அவர்கள் கூறினர்}[4].(40)
[4] இச்சுலோகத்தில் வரும் "சர்ப்பம் போல சாந்தமடைந்தான்" என்ற உவமை யாரைக் குறிக்கிறது என்பதில் உரையாசிரியர்களிடையே வேறுபட்ட விளக்கங்கள் காணப்படுகின்றன. சிலர் இது சத்ருக்னனைச் சுட்டுவதாகவும், சிலர் லவணனைச் சுட்டுவதாகவும் கொள்கின்றனர். தர்மாலயப் பதிப்பில், "அக்காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் பன்னகர்களும் அப்சரஸ்களுமாகிய எல்லோருமே ஒரு நல்லகாரியம் முடிந்ததென எண்ணிக் கொண்டார்கள். உலகத்தவர்கள் எல்லோருமே சத்ருக்னருக்கு வெற்றி ப்ராப்தமானது பாக்யமென உள்ளங்களித்தவர்களாய் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஸௌமித்திரி இவ்வாறு ஜயம்பெற்றது கண்டு, தேவர்கள் முனிவர்கள் பன்னகர்களாகிய பலரும் மிகக் கொண்டாடி, இவர் இவ்வரக்கனுக்குச் சிறிதுமஞ்சாது கொடிய விடநாகமெனப் பாய்ந்து இவனை வதைத்து வெற்றி கொண்டது நமது பாக்கிய விசேஷமேயென வியந்து போற்றினார்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "சர்ப்பத்தின் உயிர் பறிக்கப்பட்டதும், அது வாழ்ந்த இடத்தில் மக்கள் அச்சமில்லாமல் நடமாடுவார்கள். அதேபோல, நற்பேற்றின் காரணமாக சத்ருக்னனுக்கு வெற்றி கிடைத்துள்ளது. (சர்ப்பம் போல் அச்சம் விளைவித்துக் கொண்டிருந்த லவணன் மாய்க்கப்பட்டுவிட்டதால், இனி பயமில்லாமல் உலகெங்கும் சுற்றி வரலாம்.) இவ்வாறு மகிழ்ச்சியடைந்த தேவர்கள், முனிவர்கள், பன்னகர்கள், அப்சரசுகள் ஆகிய எல்லோரும் சத்ருக்னனை வாழ்த்திப் போற்றினார்கள்" என்றிருக்கிறது. ஆங்கிலப்பதிப்புகளில் மன்மதநாததத்தர் பதிப்பில், "சத்ருக்னனின் புகழைப் பாடியவாறே தேவர்கள், முனிவர்கள், பன்னகர்கள், அப்சரஸ்கள் ஆகியோர், 'தசரதனின் புதல்வனே, அச்சமின்றி நீ வெற்றி பெற்றதும், ராக்ஷசன் லவணன் ஒரு பாம்பைப் போல வீழ்த்தப்பட்டதும் உண்மையில் பெரும்பேறாகும்' என்று கூறினர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "அப்போது தேவர்கள், முனிவர்கள், பன்னகர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் ஒருசேரக் குரலெழுப்பினர், 'நல்லூழினால் தசரதனின் மைந்தன் வெற்றி பெற்றான்; அச்சம் நீங்கியது; பெரும் ஊர்வனவற்றில் ஒன்றைப் போல லவணன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்'" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சுலோகம் முழுமையாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 069ல் உள்ள சுலோகங்கள்: 40
| Previous | | Sanskrit | | English | | Next |
