Rambha | Sarga-026 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நளகூபரனிடம் சென்று கொண்டிருந்த ரம்பையை, பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய ராவணன்; நடந்ததை உள்ளபடியே நளகூபரனிடம் சொன்ன ரம்பை; ராவணன் அடைந்த சாபம்...
{அகஸ்தியர் ராமனிடம்}... வீரியவானான அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தன் சைனியத்துடன் அங்கே {கைலாசத்தில்} இருந்தபோது, தினகரன் அஸ்தத்தை {சூரியன் அஸ்த மலையை / மறைவை} அடைந்ததால், தன் வசிப்பிடத்தை {முகாமை} அமைத்துக் கொள்ள விரும்பினான்.(1) பர்வதத்திற்குத் துல்லியமான ஒளியைக் கொண்ட {அந்தக் கைலாச மலையைப் போலவே வெண்மையாக விளங்கிய}, விமலமான சந்திரன் உதித்தபோது, தாக்குதலுக்குரிய நானாவித ஆயுதங்களுடன் கூடிய மஹத்தான சைனியம் {ராவணனின் பெரும் படை} உறக்கத்தில் ஆழ்ந்தது.(2) மஹாவீரியவானான அந்த ராவணனோ, சைலமூர்த்தத்தில் {மலையுச்சியில்} அமர்ந்திருந்தவனாக, அங்கே சந்திரனின் கதிர்களால் சோபிக்கும் குணங்களை {அழகுறும் இயற்கையழகைக்} கண்டான்.(3)






