Thursday, 6 August 2026

இலக்ஷ்மணன்தானா? | சர்க்கம் – 052 (19)

Is this Lakshmana? | Sarga-052 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை வனத்தில் விட்டு வந்த செய்தியை ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன், சோகமுற்றிருந்த ராமனைத் தேற்றியது...

சீதையை வனத்தில் விட்டு வந்து ராமனிடம் பணியும் லக்ஷம்ணன்

இரகுநந்தனனான லக்ஷ்மணன், அங்கே கேசினியில் {கேசினி ஆற்றங்கரையில்}[1] அந்த ரஜனியை {இரவைக்} கழித்து, பிரபாதத்தின்போது {விடியற்காலை நேரத்தில்} மீண்டும் எழுந்து புறப்பட்டுச் சென்றான்.(1) பிறகு, நடுப்பகல் வந்தபோது, ரத்தினங்களால் நிறைந்ததும், மகிழ்ச்சியும், செழிப்புமுடைய மக்களால் சூழப்பட்டதுமான அயோத்யைக்குள் {அந்த} மஹாரதன் {பெரும் தேர்வீரனான அந்த லக்ஷ்மணன்} பிரவேசித்தான்.(2) மஹாமதிமிக்க சௌமித்ரியோ, பரம தைனியத்தை {பெருந்துயரை} அடைந்தான். "இராமரின் பாதங்களை அடைந்து, நான் அடைந்த நிலையை என்னவென்று கூறுவேன்?" {என்று நினைத்தான்}.(3) 

[1] தர்மாலயப் பதிப்பில், "அந்த இரவை அந்த கோமதீதீரத்தில் கழித்து" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "கேசினி நதிக்கரையில் நிசியை நீத்து" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கேசினி நதிக்கரையில் அன்றிரவைக் கழித்துவிட்டு" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோர் பதிப்புகளில், "கேசினி ஆற்றங்கரை", என்றும், "கேசினி" என்றும் இருக்கிறது. செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில், "கோமதி" என்றிருக்கிறது.  கோமதி ஆற்றை இன்றும் நம் நிலவரைபடங்களில் காணலாம். கேசினியை அவ்வாறு அடையாளங்காண முடியவில்லை. மேலும் இதிஹாச, புராணங்களில் வேறிடங்களில் எங்கும் கேசினி ஆற்றை பற்றிய குறிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. இதிஹாசங்களில் கேசினி என்ற பெயரில் பெண்கள் இருந்துள்ளனர். இரா.பா.கா.38ல் வரும் மன்னன் சகரனின் மனைவி, ம.ஆ.ப.65ல் வரும் ஓர் அப்சரஸ், ம.ஆ.ப.94ல் வரும் மன்னன் அஜமீடனின் மனைவி, ம.வ.ப.74-76ல் வரும் தமயந்தியின் பணிப்பெண், ம.உ.ப.35ல் வரும் விரோசனன் திருமணம் செய்ய நினைத்தவள் ஆகியோருக்கும் கேசினி என்றே பெயர். சென்ற சர்க்கத்தின் இறுதி சுலோகத்திலும் சரி, இந்த சர்க்கத்தின் முதல் சுலோகத்திலும் சரி, "கேசினி" என்று மட்டுமே குறிப்பிடப்படுவதால் இஃது ஓர் இடத்தைக் குறிப்பதாகவும் இருக்கலாம். கேசினி என்பது கோமதியின் கிளையாறாகவோ, கோமதியின் பழைய பெயராகவோ, கோமதி ஆற்றங்கரையில் அமைந்த ஓர் இடமாகவோ கூட இருக்கலாம்.

இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த அவனுக்கு முன்னால், சசிக்கு ஒப்பானதும் {சந்திரனைப் போன்றதும்}, பெருஞ்சிறப்புடையதுமான ராமனின் பவனம் {மாளிகை} காணப்பட்டது.(4) அவன் {லக்ஷ்மணன்}, உத்தம ரதத்திலிருந்து {சிறந்த தேரிலிருந்து} இறங்கி, கீழ் நோக்கிய முகத்துடனும், தீனமனத்துடனும்  {துயரடைந்த மனத்துடனும்}, ராஜனின் பவன துவாரத்தில் {ராமனின் மாளிகை வாயிலில்} தடுக்கப்படாமல் பிரவேசித்தான்.(5) அவன் {லக்ஷ்மணன்}, பரமாசனத்தில் தீனமாக அமர்ந்திருக்கும் ராகவனை {ராமனைக்} கண்டான். கண்ணீரால் நிறைந்த தன்னிரு நேத்ரங்களால் அக்ரஜனை {கண்களால் தன் அண்ணனைப்} பார்த்தான்.(6) 

தீனசேதனனான {உள்ளந்தளர்ந்த} லக்ஷ்மணன், அவனுடைய சரணங்களை {ராமனின் பாதங்கள் இரண்டையும்} பற்றினான். கைகூப்பி, நல்ல சமாஹிதத்துடன் {நன்கு ஒருமுகப்பட்ட அமைதியுடன்}, தீனச் சொற்களால் {துயரமான சொற்களால் பின்வருமாறு} சொன்னான்:(7) "ஆரியரின் ஆணையை முன்னிறுத்தி, ஜனகாத்மஜையை {சீதையை} விட்டுவிட்டு, கங்கா தீரத்தில் {கங்கைக்கரையில்} குறிப்பிடப்பட்டிருந்த தூய்மையான வால்மீகியின் ஆசிரமத்தில்,(8) சுப ஆசாரம் கொண்டவளும், புகழுடையவளுமான அவளை {சீதையை}, அங்கே ஆசிரம எல்லையில் {இருக்கவிட்டு}, வீரரே, மீண்டும் {உமது} பாத மூலத்தை உபாசிக்க வந்தேன்.(9) புருஷவியாகரரே {மனிதர்களில் புலியே}, வருந்தாதீர். காலத்தின் கதி {போக்கு} இத்தகையது. உம்மைப் போன்ற புத்திமான்களும், மன உறுதியுடையவர்களும் துக்கப்படுவதில்லை.(10) 

திரட்டப்பட்டவை {குவிக்கப்பட்ட செல்வங்கள் முதலியவை} அனைத்தும் அழிவையே அந்தமாக {முடிவாகக்} கொண்டவை; உயர்வுகள் வீழ்ச்சியை அந்தமாகக் கொண்டவை; சம்யோகங்கள் விப்ரயோகத்தை அந்தமாகக் கொண்டவை {இணைவுகள் பிரிவையே முடிவாகக் கொண்டவை}; ஜீவிதமும் மரணத்தையே அந்தமாகக் கொண்டது.(11) எனவே, புத்திரர்களிடமும், தாரங்களிடமும், மித்ரர்களிடமும் {நண்பர்களிடமும்}, தனங்களிடமும் {செல்வங்களிடமும்} அதிப்ரசங்கம் {அளவுக்கு மீறிய பற்று} கூடாது. அவர்களிடமிருந்து பிரிவு நிச்சயமாகும்.(12) காகுத்ஸ்தரே, நீர் மனத்தினாலேயே தம்மைத்தாமே கட்டுப்படுத்தி வழிநடத்தவல்லவர்; உலகங்கள் அனைத்தையுங்கூட {கட்டுப்படுத்தி வழிநடத்தவல்லவர்}. பிறகு உமது சோகத்தை என்ன சொல்ல?(13) 

உம் விதமான புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}, இத்தகையவற்றில் {இத்தகைய சூழலில்} மனங்கலங்குவதில்லை. இராகவரே, அந்த அபவாதம் நிச்சயம் உமக்கு மீண்டும் வரும்[2].(14) நிருபரே, அபவாத பயத்தால் எக்காரணத்திற்காக மைதிலி {மிதிலையின் சீதை} கைவிடப்பட்டாளோ, அந்த அபவாதம் புரத்தில் {அயோத்தியில்} ஏற்படும்; இதில் சந்தேகமில்லை.(15) புருஷசார்தூலரே {மனிதர்களில் புலியே}, அத்தகைய நீர், தைரியத்தால் நன்கு சமாஹிதமடைந்து {நன்றாக நிலைபெற்று}, இந்த துர்பலமான புத்தியை {உறுதியற்ற எண்ணத்தைக்} கைவிடுவீராக. சந்தாபம் {வருத்தம்} கொள்ள வேண்டாம்" {என்றான் லக்ஷ்மணன்}.(16)

[2] தர்மாலயப் பதிப்பில், "ஹே ஸ்ரீராகவ! தேவரீரைப்போன்ற புருஷோத்தமர்கள் இவ்விதமான விஷயங்களில் மனநிலைகலங்கார்கள். அப்படியிராதிருந்தால் தேவரீருக்கு அந்த அபவாதம் புதிதாய் உண்டாகும்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "எல்லா முணர்ந்தவர்களும் ஸத்துவகுணமுடையவர்களுமான தேவரீரைப் போன்ற மஹாபுருஷர்கள் இவ்விதமான விஷயங்களில் மனநிலை கலங்கார்களன்றோ? தேவரீர் இவ்வாறு மனங்கலங்கினால், ஹேராகவ! மறுபடியும் லோகாபவாதம் வந்து விளையுமன்றோ?" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஸ்ரீராமன் மனையாளிடத்தில் அதிகமான மனப்பற்றுடையவர்; அவளைவிட்டு விடமனம் வராமல் மிகவும் துக்கிக்கின்றனர் - என நிந்திபார்களென்றபடி" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "தங்களைப் போன்ற ஆண்காளைகள், இம்மாதிரியான தருணங்களில் மனமயக்கம் அடைவதில்லை. தாங்கள் துக்கத்தை வெளிப்படுத்திக் காட்டினால், அந்தப் பழிச்சொல் மீண்டும் தங்களையே வந்து சேரும்" என்றிருக்கிறது.

மஹாத்மாவான லக்ஷ்மணனால் இவ்வாறு கூறப்பட்டதும், மித்ரவத்ஸலனான காகுத்ஸ்தன் {நண்பர்களிடம் அன்பு கொண்டவனான ராமன்}, பரம பிரீதியுடன் சௌமித்ரியிடம் {பின்வருமாறு}  சொன்னான்:(17) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, லக்ஷ்மணா, {நீ} எவ்வாறு கூறுகிறாயோ, அவ்வாறே இஃது {இருக்கிறது}. என்னுடைய காரியத்தின் சாசனத்தை {கட்டளையை நீ} நிறைவேற்றியதில் எனக்கு மனநிறைவே {உண்டானது}.(18) சௌம்யா, லக்ஷ்மணா, நிவர்த்தியும் வந்துவிட்டது {விலகலும் ஏற்பட்டுவிட்டது / நிம்மதியும் உண்டானது}; சந்தாபமும் {வருத்தமும்} நீக்கப்பட்டது. மிக இனிய உன் சொற்களால் நான் தேற்றப்பட்டேன்[3]" {என்றான் ராமன்}.(19)

[3] தர்மாலயப் பதிப்பில், "புருஷோத்தமா! வீரனாகிய ஹே லக்ஷ்மண! எனது ஆக்கினையைச் செய்து முடித்ததில் எனக்கு அதிகஸந்தோஷந்தான். நீ சொல்லுகிறது ஏதோ இது உண்மையே. மஹா புண்யசாலியாகிய ஹே லக்ஷ்மண! அதிக அனுகூலமாயிருக்கின்ற உன் பிரமாணங்களால் மனந்தேறியவனாய் நான் ஆயினேன். ஸந்தாபமும் ஒழிந்தது. மனத்திருப்தியும் உண்டாயிற்று" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஹேலக்ஷ்மணா! நீ உரைத்தவையாவும் உண்மையே; என் வாக்கைத் தவறாது நான் சொன்ன வண்ணமே நீ செய்து வந்தது எனக்கு மிகுந்த ஸந்தோஷத்தை விளைவிக்கின்றது. நீ சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேட்டு நான் மனக்கவலை யொழிந்து களிப்புறலாயினேன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "புருஷோத்தமனே! லட்சுமணா! நீ கூறியதனைத்தும் உண்மைதான். நீ என் ஆணையை நிறைவேற்றிவிட்டாய். அதனால், நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். அன்பனே! துக்கத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்; மனவேதனையைத் துரத்திவிட்டேன். உன்னுடைய இனிய சொற்களால் எனக்கு அமைதி கிடைத்துவிட்டது" என்றிருக்கிறது. மேலும் முன்பு சொன்னதுபோல், இந்த சர்க்கத்தின் செய்தியும் ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் இல்லை. சென்ற அத்தியாயத்திலும், அதற்கு முந்தைய அத்தியாயங்களிலும் சீதைக்காக அப்படி வருந்திய லக்ஷ்மணன், இங்கு ராமனிடம் இப்படி அடிபணிந்து இருக்கிறானே என்பதற்காக அமைக்கப்பட்டதே இந்த சர்க்கத்தின் தலைப்பு. இப்படிப்பட்ட சர்க்கங்கள்,  ராமாயணத்தில்தானாகட்டும், உத்தர ராமாயணத்தில்தானாகட்டும் பெரும்பாலும் இடைச்செருகல்கள் என்றே கருதப்படுபவை ஆகும்.

உத்தர ராமாயணம் சர்க்கம் – 052ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி