Tuesday, 28 July 2026

புகழும் பழியும் | சர்க்கம் – 043 (23)

Praise and Blame | Sarga-043 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகர மக்களின் கருத்துகளைக் கேட்ட பத்ரனிடம் ராமன்; மக்கள் ஆட்சியைப் புகழ்ந்தாலும், சீதையைப் பழித்துப் பேசுவதையும் தெரிவித்த பத்ரன்; துக்கமடைந்த ராமன்...

தன் சபையில் பத்ரனுடன் பேசும் ராமன்

நாற்புறமும் அறிஞர்களும், ஹாசியக்காரர்களும் {நகைச்சுவைக் கலைஞர்களும்} பலவிதமான கதைகளுடன் அங்கே வீற்றிருக்கும் ராஜனை {ராமனை} உபாசித்து {வழிபட்டுக்} கொண்டிருந்தனர்.(1) விஜயன், மேலும் மதுமத்தன், காசியபன், மங்கலன், குடன், சுராஜன், காலியன், பத்ரன், தந்தவக்ரன், சுமாகதன்,(2) {ஆகிய} இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக மஹாத்மாவான ராகவனின் முன்னிலையில் பரிஹாசம் கலந்த பலவிதமான கதைகளைக்[1] கூறிக் கொண்டிருந்தனர்.(3) 

[1] 'பரிஹாஸஸமந்விதாஃ கதாஃ' - நகைச்சுவை கலந்த கதைகள் என்ற பகுதி, அரசவையில் நிலவிய நிதானமான மற்றும் மகிழ்ச்சியான சூழலைக் காட்டுகிறது. ராமனின் தர்ம பாரத்தினாலும், சீதையின் பிரிவாற்றாமையினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ராமனின் நண்பர்கள் உலகியல் கதைகளைக் கூறி மகிழ்வித்தனர் என்பதை இஃது உணர்த்துகிறது.

பிறகு, ஏதோவொரு கதையின்போது ராகவன் {பின்வருமாறு} உரையாடினான், "பத்ரா, நகரத்திலும், {நாட்டின்} பிற பகுதிகளிலும் என்ன கதைகள் நிலவுகின்றன?(4) பௌர, ஜானபத ஜனங்கள் {நகரத்து, கிராமத்து மக்கள்} என்னைக் குறித்து என்னென்ன கூறுகிறார்கள்? மேலும் சீதையைக் குறித்தும், பரதன், லக்ஷ்மணன் ஆகியோரைக் குறித்தும் என்ன கூறுகிறார்கள்?(5) சத்ருக்னனைக் குறித்து என்ன {பேசுகிறார்கள்}? மாதா கைகேயியைக் குறித்து என்ன {பேசுகிறார்கள்}? மேலும் சிறந்த ராஜ்ஜியத்தின் ராஜாக்களுங்கூட விமர்சனத்தை அடைகிறார்கள்" {என்றான் ராமன்}.(6)

இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, பத்ரன் கைகளைக் கூப்பியவனாக {பின்வருமாறு} கூறினான், "இராஜரே, புரவாசிகளிடம் {அயோத்தியா நகரவாசிகளிடம்} சுபக் கதைகளே நிலவி வருகின்றன.(7) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, சௌம்யரே,  தசக்ரீவ வதத்தில் ஈட்டப்பட்ட விஜயத்தை {உமது வெற்றியைக்} குறித்தே, {உமது} சொந்த புரத்தில், பௌரர்கள் {ஆயோத்தி நகர மக்கள்} பெரும்பாலும் பேசுகின்றனர்" {என்று சொன்னான் பத்ரன்}.(8)

பத்ரனால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, ராகவன் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "அனைத்தையும் உள்ளது உள்ளபடியே மிச்சமில்லாமல் கூறுவாயாக.(9) புரவாசிகள் எத்தகைய சுபாசுப {நன்மையான, தீமையான} வாக்கியங்களை பேசுகிறார்களோ {அவற்றை} இப்போது கேட்டு சுபத்தைச் செய்வேன். மேலும் அசுபத்தைச் செய்யமாட்டேன்.(10) மேலும், நீ பயமின்றியும், ஜுவரமில்லாமலும் {கவலையெனும் பிணியின்றியும்} நம்பிக்கையுடையவனாகவும் கூறுவாயாக. பௌரர்களும், ஜனபதர்களும் எவ்வாறான பாபங்களை {குற்றச்சாட்டுகளைப்}[2] பேசுகிறார்கள்?" {என்றான் ராமன்}.(11)

[2] 'பாபாஃ' என்ற சொல் சில அச்சுப் பிரதிகளில் 'பாவிகள்' என்று பொருள் கொள்ளத் தூண்டினாலும், ராமாயண வியாக்கியானங்களின்படி இது 'பாபவாக்கியங்கள்' அல்லது 'அபவாதங்கள்' (அவதூறுகள் / நிந்தனைப் பேச்சுகள்) என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. மக்கள் ராமன் மீது சுமத்தும் பாவமான குற்றச்சாட்டுகளைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராகவனால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, பெரும் சமாஹிதனான {மன ஒருமைப்பாடு மிக்கவனான} பத்ரன் கைகளைக் கூப்பியவனாக, மஹாபாஹுவிடம் {பெருந்தோள்களைக் கொண்ட ராமனிடம் பின்வரும்} உரையை மறுமொழியாகக் கூறினான்:(12) "இராஜரே, பௌரர்கள் {நகரமக்கள்} நாற்சந்திகளிலும், கடைவீதிகளிலும், வனங்களிலும், உபவனங்களிலும் {சோலைகளிலும்} சுபாசுபங்களை {நன்மை தீமைகளை} எவ்வாறு பேசுகிறார்கள் என்பதைக் கேட்பீராக.(13) 

'இராமன் சமுத்திரத்தில் செயற்கரிய சேதுபந்தனத்தைச் செய்தான். முன்னோர் எவரொருவராலும், தானவர்களுடன் கூடிய தேவர்களாலும் கூட {இது} கேட்கப்படாதது.(14) மேலும், வெல்வதற்கரியவனான ராவணன், பலத்துடனும் {தன் படையுடனும்}, வாகனங்களுடனும் ஹதம் செய்யப்பட்டான். வானரர்களும் {குரங்குகளும்}, ரிக்ஷர்களும் {கரடிகளும்}, ராக்ஷசர்களுடன் சேர்த்து வசப்படுத்தப்பட்டனர்.(15) மேலும் ராகவன் போர்க்களத்தில் ராவணனைக் கொன்று, சீதையை மீட்டுக் கொண்டு, கோபத்தைப் புறந்தள்ளி மீண்டும் சொந்த வேஷ்மத்திற்கு {தன் இல்லத்திற்கு அவளை} அழைத்து வந்தான்.(16) முன்பு ராவணனால் பலவந்தமாக அங்கத்தில் {மடியில்} ஏற்றி அபகரிக்கப்பட்டாலும், அவனுடைய {ராமனின்} ஹிருதயத்தில் சீதா சம்போகத்தால் {சீதையுடன் கூடி வாழ்வதால்} உண்டாகும் சுகம் எத்தகையது?(17) முன்பு லங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அசோக வனிகையை அடைந்தவளை, ராக்ஷசர்களின் வசத்தை அடைந்தவளை ராமன் எவ்வாறு பழிக்காமல் இருக்கிறான்?[3](18) நம்முடைய தாரங்களிடமுங்கூட {இது} சகித்துக் கொள்ளத்தக்கதாகிவிடும். ஏனெனில், ராஜா எப்படிச் செயல்படுகிறானோ, {அப்படி} பிரஜைகளும் {மக்களும்} அவனையே பின்தொடர்கிறார்கள்[4]'.(19) 

[3] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 727ம் பாடல் பின்வருமாறு

மன்னவர் இராமன் மானபங்கத்தை 
  மனத்தினால் நினைக்கிலன் வானோர்க்கு
இன்னல் செய்து ஒழுகும் இராவணன் 
  கொடுபோய் இடைவிடாது ஈரறு திங்கள்
தன்நெடுநகரில் தனிச்சிறை வைத்த
  தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேர் இழுக்கு என்று 
  பேசுவர் பெருநிலத்து உள்ளோர்

பொருள்: இந்தப் பெரிய நாட்டில் உள்ளவர்கள், "நம் மன்னவனாகிய இராமன் மானக்குறைவை மனத்தினால் நினைத்தும் பாராதவனாய்த் தேவர்க்குத் துன்பம் செய்து ஒழுகுகின்ற இராவணன் கவர்ந்துகொண்டு போய் இடைவிடாமல் பன்னிரெண்டு மாதங்கள் வரையில் தனது நெடிய இலங்கை மாநகரில் (அசோகவனத்தில்) தனித்திருக்கும்படி சிறை வைத்திருந்த சீதையைத் தன் மனைவியாகக் கொண்டு பின்பும் வாழ்தல் பெரிய குற்றமாகும்" என்று பேசுவர்.

[4] "இராவணனின் மடியில் அமர வைக்கப்பட்டு, அசோகவனத்தில் ராக்ஷசர்களின் வசம் இத்தனைக் காலம் இருந்த சீதையை ராமன் எப்படி மீண்டும் ஏற்றுக்கொண்டான்?" என்ற கேள்வி, அக்காலத்துச் சமுதாயக் கட்டுப்பாடுகளையும், ஓர் அரசனின் தனிப்பட்ட வாழ்க்கை, மக்களின் ஒழுக்கத்திற்கு எப்படி முன்னுதாரணமாக அமையக்கூடும் என்ற தர்ம சங்கடத்தையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.

இவ்வாறே, ராஜரே, சர்வ நகரங்களிலும், ஜனபதங்களிலும் புரவாசிகள் {குடிமக்கள் அனைவரும்} பலவிதமான சொற்களைப் பேசுகின்றனர்" {என்றான் பத்ரன்}.(20)

அவனுடைய {பத்ரனின்} இந்தப் பேச்சைக் கேட்டு, ராகவன் பெருந்துக்கமடைந்தவனைப் போல, தன் நண்பர்கள் அனைவரிடமும், "என்னிடம் எவ்வாறு இதைக் கூறுகிறீர்கள்?" என்று சொன்னான்.(21)

அனைவரும் பூமியில் சிரசால் {தலையால்} வழிப்பட்டு, மேலும் வணக்கங்களைச் செலுத்தி, "இது சந்தேகத்திற்கு இடமின்றி இவ்வாறே {இருக்கிறது}" என்று தீனனான {துக்கமடைந்த} ராகவனிடம் மறுமொழியாகக் கூறினர்.(22)

அப்போது, சத்ருசூதனனான காகுத்ஸ்தன் {பகைவரை அழிப்பவனும், காகுத்ஸ்தன் வழி வந்தவனுமான ராமன்}, அனைவராலும் ஒருமித்துக் கூறப்பட்ட வாக்கியத்தைக் கேட்ட பிறகு, நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு {அவர்களை} அனுப்பிவைத்தான்.(23)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 043ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி