Monday, 27 July 2026

சீதையின் விருப்பம் | சர்க்கம் – 042 (36)

The desire of Sita | Sarga-042 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சீதையுடன் நந்தவனத்தில் மகிழ்ந்திருத்தல்; மதுவும், மாமிசமும்; சீதை கருத்தரித்தல்; தபோவனங்களுக்குச் செல்லும் சீதையின் விருப்பம்...

சீதைக்கு மைரேயக மதுவைத் தரும் ராமன்

பிறகு, பெருந்தோள்களைக் கொண்ட அந்த ராமன், ஹேமத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்ட புஷ்பகத்தை அனுப்பிவிட்டு, அப்போது அசோகவனிகைக்குள்[1] பிரவேசித்தான்.(1) சந்தனங்களாலும், அகுருக்களாலும் {அகில் மரங்களாலும்}, மாமரங்களாலும், உயர்ந்த காலேயகங்களாலும் {மஞ்சள் சந்தன மரங்களாலும்}, தேவதாரு வனங்களாலும், சுற்றிலும் {அந்த அசோக வனிகை} மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.(2) 

[1] அசோக வனிகை (அசோக வனம்) என்றவுடன் இராவணனுடைய லங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த அந்த அசோகவனம் தான் நம் நினைவுக்கு முதலில் வரும். இந்தச் சுலோகத்தில் குறிப்பிடப்படும் அசோக வனிகை என்பது அயோத்தியில் உள்ள இராமனின் அரண்மனைத் தோட்டம் ஆகும். அயோத்தி அரண்மனைக்குச் சொந்தமான, அசோக மரங்கள் நிறைந்த நந்தவனம் ஆகும்.

சம்பகங்களாலும் {செண்பகங்களாலும்}, அசோகங்களாலும், புன்னாகங்களாலும் {புன்னை மரங்களாலும்}, மதூகங்களாலும் {இலுப்பைகளாலும்}, பனசங்களாலும் {பலாமரங்களாலும்}, ஆசனங்களாலும் {வேங்கைகளாலும்}, புகையற்ற நெருப்பின் பிரபையைக் கொண்ட பாரிஜாதங்களாலும் {அது} சோபித்திருந்தது.(3) லோத்ரங்களாலும் {வெள்ளிலொத்தி மரங்களாலும்}, நீபங்களாலும் {கடம்ப மரங்களாலும்}, அர்ஜுனங்களாலும் {மருத மரங்களாலும்}, நாகங்களாலும் {நாகலிங்க மரங்களாலும்}, சப்தபர்ணங்களாலும் {ஏழிலைப்பாலை மரங்களாலும்}, அதிமுக்தகங்களாலும் {மாதவிக் கொடிகளாலும்}, மந்தாரங்களாலும் {மந்தாரை மரங்களாலும்}, கதலிகளாலும் {வாழை மரங்களாலும்}, புதர்களாலும், கொடிகளின் கூட்டங்களாலும் நாலாபக்கமும் சூழப்பட்டிருந்தது.(4) பிரியங்குகளாலும் {புலிக்கொன்றை மரங்களாலும்}, கதம்பங்களாலும் {கடம்ப மரங்களாலும்}, அப்படியே வகுலங்களாலும் {மகிழ மரங்களாலும்}, ஜம்பூக்களாலும் {நாவல் மரங்களாலும்}, மேலும் தாடிமங்களாலும் {மாதுளைச் செடிகளாலும்}, கோவிதாரங்களாலும் {செம்மந்தாரை மரங்களாலும்} சோபித்திருந்தது.(5) 

எப்போதும் அழகிய மலர்களாலும், நிறைந்த பழங்களாலும், மனோஹரமானவற்றாலும், திவ்யமான மணத்தோடும் சுவையோடும் கூடியவைகளாலும், இளந்தளிர்களோடும் முளைகளோடும் கூடியவற்றாலும் {மரங்களாலும்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(6) அவ்வாறே, சிற்பிகளால் {தோட்டக்கலை நிபுணர்களால்} அமைக்கப்பட்டவையும், அழகான தளிர்களாலும் மலர்களாலும் நிறைந்தவையும், மதங்கொண்ட வண்டுகளின் கூட்டங்களால் சூழப்பட்டவையுமான திவ்யமான மரங்களாலுமே {அஃது} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(7) கோகிலங்களாலும் {குயில்களாலும்}, கரிச்சாங்குருவிகளாலும், நானாவர்ணங்களிலான பக்ஷிகளாலும் {பறவைகளாலும்}, நூற்றுக்கணக்கான விசித்திரமான மாமரங்களான அணிகலன்களைக் கொண்டதுமாக {அது} சோபித்திருந்தது.(8)

அங்கிருந்த மரங்களில் சில சாதகும்பத்திற்கு {தங்கத்திற்கு} ஒப்பானவையாகவும், சில அக்னி சிகைக்கு {நெருப்புச் சுடருக்கு} ஒப்பானவையாகவும், மற்றவை நீல அஞ்சனத்திற்கு {கரிய மைக்கு} ஒப்பானவையாகவும் பிரகாசித்தன.(9) நறுமணமிக்க புஷ்பங்களும், விதவிதமான மாலைகளும், தூய்மையான நீரினால் விதவிதமான வடிவங்களில் நிறைந்த தீர்க்கிகைகளும் {நீண்ட தடாகங்களும் / வாவிகளும் அங்கிருந்தன}.(10) மாணிக்கத்தால் செய்யப்பட்ட படிக்கட்டுகளுடனும், ஸ்படிகங்கள் உள்ளே பதிக்கப்பட்ட தரைகளுடனும், முற்றும்மலர்ந்த பத்ம, உத்பல வனங்களுடனும் {தாமரை, நெய்தல் மலர்களின் கூட்டங்களுடனும்}, சக்கரவாகங்களுடனும் {அந்தத் தடாகங்கள்} சோபித்திருந்தன.(11) நீர்க்காகம், கிளி ஆகியவற்றின் ஒலிகளால் எங்கும் நிறைந்தவையும், ஹம்ஸம் {அன்னப்பறவை}, சாரஸம் {நாரை} ஆகியவற்றின் நாதங்களைக் கொண்டவையும், மேலும் தீரங்களில் {கரைகளில்} தோன்றும் புஷ்பித்த மரங்களுடனும் {அந்த வாவிகள்} சோபித்திருந்தன.(12) 

மேலும், அங்கேயே அந்த வனப் பகுதியில், விதவிதமான வடிவங்களுடன் கூடிய பிராகாரங்களுடனும் {மதிற்சுவர்களுடனும்}, மேலும் வைடூரியமணி போன்ற சிலாதலங்களுடனும் {கல் தளங்களுடனும் அவை} சோபித்திருந்தன.(13) பச்சைப் புல்வெளிகளால் பொருந்தப் பெற்ற புஷ்பித்த மரங்களுடன் கூடிய கானகங்களைக் கொண்ட அங்கே, புஷ்பங்களால் சோபிக்கும் விருக்ஷங்களில் ஒன்றோடொன்று போட்டியிட்டும் வளர்ந்தவை போன்ற கூட்டங்கள் இருந்தன.(14) தாராகணங்களால் நபம் போல {நட்சத்திரக் கூட்டங்களால் ஆகாயம் போல}, புஷ்பங்களால் பலவண்ணங்களிலான பாறைகளைக் கொண்டதும், இந்திரனின் நந்தனமே போன்றதும், பிரம்மனின் {வனம் மற்றும் குபேரனின்} சைத்ரரதம் எப்படியோ, அப்படியே அமைந்திருந்த ராமனின் கானனம் {தோட்டம் இத்தனைக்கும்} உறைவிடமாகத் திகழ்ந்தது.(15) 

இரகுநந்தனன் {ரகு குலத்திற்கு மகிழ்ச்சியைத் தருபவனான ராமன்}, பல ஆசனங்களுடைய கிருஹங்களுடன் கூடியதும், லதா கிருஹங்களால் {கொடியாலான வீடுகளால்} எங்கும் சூழப்பட்டதும், மிகப் பரந்ததுமான அசோகவனத்திற்குள் பிரவேசித்தான்.(16) இராமன், சுபமான வடிவம் கொண்டதும், புஷ்பங்கள் தூவப்பட்டதும், தர்ப்பை விரிப்பால் சூழப்பட்டதுமான ஆசனத்தில் உண்மையில் அமர்ந்தான்.(17) புரந்தரன் சசிக்கு {இந்திரன் இந்திராணிக்கு புகட்டியதைப்} போல, காகுத்ஸ்தன் சீதையைக்  கையால் பற்றிக் கொண்டு, தூய்மையான மைரேயக மதுவைப்[2] பருகச் செய்தான்.(18) கிங்கரர்கள் {பணியாள்கள்} ராமனின் ஆஹார அர்த்தத்திற்காக {உணவுக்காக} நன்கு சமைக்கப்பட்ட மாமிசங்களையும், விதவிதமான பழங்களையும் துரிதமாகக் கொண்டு வந்தனர்[3].(19) நடனத்திலும், கீதத்திலும் விசாரதைகளும் {தேர்ச்சி பெற்றவர்களும்}, ரூபவதிகளுமான {அழகிய வடிவம் கொண்டவர்களுமான} இளம்பெண்களும், {மது} பானத்திற்கு வசப்பட்ட ஸ்திரீகளும் {பெண்களும்} ராஜாவை {ராமனை}ச் சுற்றி நடனமாடினர்.(20)

[2] மைரேயகம் என்பது அக்காலத்தில் அரச குலத்தினர் அருந்திய ஒருவகையான நறுமண மதுபானம் ஆகும். இது தானியங்களை நொதிக்க வைத்துச் செய்யப்படும் 'சுரா' என்ற மதுபானத்தையும், கரும்புச்சாறு அல்லது வெல்லத்தைக் கொண்டு செய்யப்படும் 'ஆசவம்' என்ற மதுபானத்தையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த மதுக்கலவையுடன் மிளகு, லவங்கம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களும், காட்டுத்தாத்திரி மலர்களும் சேர்க்கப்பட்டு இரண்டாம் கட்டமாக மீண்டும் நொதிக்க வைக்கப்படும். மலர்கள் மற்றும் இதரப் பொருள்களின் சேர்க்கையால் இது மிகுந்த நறுமணத்துடனும், இன்சுவையுடனும், பளபளப்பான தூயத் தோற்றத்துடனும் விளங்கும். மஹாபாரதம், ஆசிரமவாசிக பர்வம் பகுதி 1ல் உள்ள, 21ம் சுலோகத்தில் திருதராஷ்டிரனுக்கு மைரேயக மது கொடுக்கப்பட்டது குறிப்பிடப்படுகிறது. மஹாபாரதம், ஆதிபரவம் பகுதி 224ல் உள்ள, 23ம் சுலோகத்தில் திரௌபதியும், சுபத்திரையும் மதுமயக்கதில் இருந்தது குறிப்பிடப்படுகிறது. சுந்தரகாண்டம் 36ம் சர்க்கம் 41ம் சுலோகத்தில் "இராகவர் மாமிசம் உண்பதுமில்லை; மது பருகுவதுமில்லை. நித்தியம் மாலையில் பக்குவப்படுத்தப்படும் வன உணவையே உண்கிறார்" என்று ஹனுமான் சீதையிடம் சொல்கிறான்.

[3] தர்மாலயப் பதிப்பில், "காகுத்ஸ்தர் இந்திரன் இந்திராணியை எவ்வண்ணமோ அவ்வண்ணமே சீதையைக் கையால் பற்றிக் கொண்டு புண்ணியம் தருகிறதும், இனிப்பாயிருக்கிறதுமான மைரேயகமென்னும் மதுவை பருகச் செய்தார். சேவகர்கள் ஸ்ரீராமருக்கும் அமுதுசெய்வதற்காக ருசிகரமாய் பாகம் செய்யப்பட்ட மாம்ஸங்களையும் அனேகவிதமான பழங்களையும் சீக்கிரமாய் கொண்டு வந்தார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "காகுஸ்தன் தமது காதலியைக் கையிற்பிடித்துக் கொண்டு, இந்திராணிக்கு இந்திரன் அளிக்குமாறு மைரேயம் என்கிற மதுரமான ஒருவகை மத்தியத்தை அம்மைதிலிக்கும் உண்பிக்கலானாயினார். அப்பொழுது ஸ்ரீராகவனுக்கு அமுதுசெய்வதற்காகச் சிறந்த மாமிசத்தையும், நாநாவிதமான கனிகளையும் கிங்கரர்கள் கொண்டுவந்தளித்தனர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "தேவேந்திரன் தன் கையால் இந்திராணிக்கு அமுதத்தை எடுத்துக் கொடுப்பதைப் போல, இராமன், தன் கையால் சீதைக்கு இனிய பானங்களை எடுத்துக் கொடுத்தார். அப்போது இராமன் உண்பதற்காக அரச போகத்திற்குரிய உயர்வகை உணவுகளையும், பல்வகைப் பழங்களையும் (பணியாளர்கள்) வெகுவிரைவில் கொண்டு வந்தார்கள்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பில், "சசியுடன் கூடிய புரந்தரனைப் போல, அவன் சீதையின் கையைப் பிடித்து, அவளை அமர வைத்து, மீரா என்ற பகுதியில் தயாரிக்கப்பட்ட மதுவை அவளுக்குப் பருகக் கொடுத்தான். சிறிது நேரத்திலேயே பணியாளர்கள் அவனுக்காகச் சிறப்பாகச் சமைக்கப்பட்ட இறைச்சியையும், பலவிதமான பழங்களையும் கொண்டு வந்தனர்" என்றிருக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில், "காகுத்ஸ்தன் சீதையைத் தன் கைகளால் அணைத்துக் கொண்டு, இந்திரன் சசிக்கு அமிர்தத்தை அளிப்பதைப் போல, அவள் சிறந்த மைரேய மதுவை அருந்தச் செய்தான். பல்வேறு வகையான இறைச்சி, பலவிதமான பழங்கள் மற்றும் பயன்பாட்டுக்குத் தகுந்த தேவையான பிற பொருள்களை விரைவாகக் கொண்டுவருமாறு ராமன் பணியாளர்களைப் பணித்தான்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "காகுத்ஸ்தன் சீதையின் கையைப் பிடித்துக் கொண்டு, முன்பு புரந்தரன் சசிக்கு அளித்தது போலவே, தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான மதுவை அவளுக்குப் பருகக் கொடுத்தான். பிறகு, தூய்மையான உணவு வகைகளும், பலவிதமான பழங்களும் பணியாளர்களால் கொண்டு வரப்பட்டன" என்றிருக்கிறது.

மகிழ்விப்பவர்களில் சிறந்தவனும், தர்மாத்மாவும், பரம பூஷிதனுமான {நன்கு அலங்கரிக்கப்பட்டவனுமான} ராமன், மனத்திற்கு மிக இனியவர்களான அந்த ராமைகளை {ஸ்திரீகளை} நித்யம் மகிழ்வித்தான்.(21) அந்த சீதையுடன் சேர்ந்து அமர்ந்திருந்த அவன் {ராமன்}, அருந்ததியுடன் சேர்ந்து அமர்ந்திருந்த வசிஷ்டரைப் போலத் தேஜஸ்ஸால் பிரகாசித்தான்[4].(22) இவ்விதம் மகிழ்ச்சியுடன் இருந்த ராமன், ஸுரர்களின் மகளுக்கு {தேவகன்னிகைக்கு} ஒப்பானவளும், வைதேஹியுமான {விதேஹ நாட்டு இளவரசியுமான} சீதையை தேவன் போல தினம்தினம் மகிழ்வித்தான்.(23) அவ்வாறு அந்த சீதாராகவர்கள் இருவரும் நீண்ட காலம் மகிழ்ந்திருந்தபோது, சதா போகத்துக்குரியதும், சுபமானதுமான சிசிர காலம் {பின்பனிக் காலம்} கடந்து சென்றது[5].(24) விதவிதமான போகங்களை அனுபவித்த அந்த மஹாத்மாக்கள் {சீதை, ராமன் ஆகிய} இருவருக்கும் பத்தாயிரம் வருஷங்கள்[6] கழிந்துவிட்டன. மேலும் சிசிரத்தின் {பின்பனிக் காலத்தின்} வருகையும் கடந்து சென்றது.(25)

[4] அசோகவனத்தில் பல பெண்கள் சூழ நடனமாடிக் கேளிக்கை புரிந்தாலும், பேரொளி பொருந்திய வசிஷ்ட முனிவர் தன் பத்தினியான அருந்ததியோடு அமர்ந்திருப்பது போல, சீதையோடு மட்டுமே அமர்ந்து தன் ஏகபத்தினி விரத நெறி மாறாமல் ராமன் பிரகாசித்தான் என்பதை இந்த சுலோகம் அழகாகப் புலப்படுத்துகிறது.

[5] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்பு வாநரர் முதலிய நண்பர்களுடனே பேசிப் பொழுதுபோக்கியது ஓராண்டளவு, இப்பொழுது இல்லாளுடன் அகமகிழ்ந்திருந்தது ஓராண்டளவு; ஆக அபிஷேகமானபின் இரண்டாண்டுகள் கழிந்தனவென்க" என்றிருக்கிறது.

[6] பாலகாண்டம், முதல் சர்க்கம், 97ம் சுலோகத்தில் ராமன் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்று கூறப்பட்டுள்ளது. பாலகாண்டம், 15ம் சர்க்கம், 30ம் சுலோகத்திலும் அவ்வாறே 11000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது, யுத்தகாண்டம், 128ம் சர்க்கம், 107ம் சுலோகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சர்க்கங்கள் அனைத்தும் இடைச்செருகல் என்று நம்பப்படும் பட்டியலில் இருப்பவை. அஹரேவ ஸம்வத்ஸரஹ்" என்ற வேத விதியின்படி, தர்ம நெறி தவறாத ஒரு சக்கரவர்த்தியின் ஆட்சியில் 'ஒரு நாள் என்பது ஒரு வருடத்திற்குச் சமம்' என்று கணக்கிடப்பட்டாலும் 30 ஆண்டுகளும், 6 மாதங்களும் என்ற கணக்கு வருகிறது. அந்த பதினோராயிரம் ஆண்டுகளில் சீதையுடன் அரண்மனை நந்தவனத்தில் இன்புற்றிருந்த காலம் மட்டும் பத்தாயிரம் ஆண்டுகள். அயோத்தியின் அசோகவனத்தில் ராமனும் சீதையும் கவலையின்றி காதலில் திளைத்திருந்ததால் நெடுங்காலமே கூட மிகக் குறுகிய காலம் போல சட்டென்று கடந்ததை இவ்வாறு உணர்த்துகிறார் ஆசிரியர்.

அந்த தர்மவித் {தர்மத்தை அறிந்தவனான ராமன்}, முற்பகலில் தர்மப்படியான தர்ம காரியங்களை {அரச கடமைகளைச்} செய்துவிட்டு, மீதமுள்ள பிற்பகலில் அந்தப்புரத்தை அடைந்தான்.(26) சீதையும் முற்பகலுக்குரிய தேவகாரியங்களைச் செய்துவிட்டு, மாமியார்கள் அனைவரையுமே வேறுபாடின்றி பூஜித்தாள்.(27) பிறகு, விசித்திரமான ஆபரணங்களையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்து, திரிவிஷ்டபத்தில் {சுவர்க்கத்தில்} வீற்றிருக்கும் சஹஸ்ராக்ஷனை சசி {இந்திரனை இந்திராணி அடைவது} எப்படியோ, அப்படியே ராமனை அடைந்தாள்.(28) இராகவனோ, மங்கலம் நிறைந்த பத்தினியை {தன் மனைவி சீதையைக்} கண்டு, நிகரற்ற பெருமகிழ்ச்சியை அடைந்து, "சாது, சாது {நன்று, நல்லது}" என்றும் கூறினான்[7].(29)

[7] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 720ம் பாடல் பின்வருமாறு

விழிபெரும் பசலை பூத்தது மேனி 
  வெளுத்தது மெல்லியல் முன்கை
தழுவிய சரிகள் சரிந்தன கர்ப்பம் 
  தரித்தது சான்றவர்க்கெல்லாம்
மொழிவன போல முலைகள் பால் பாய 
  அம்முகம் கறுத்தன ஆக
எழுதருஞ் சீதைக்கு இவ்வகை ஆய 
  இலக்கணம் பலவும் உண்டான.

பொருள்: கண்களில் பெரிய பசலை நிறம் உண்டாயிற்று. மேனியின் பொன்னிறம் மாறி வெளுத்தது. மெல்லிய இயல்பையுடைய முன்கைகளைத் தழுவியிருந்த வளைகள் சரிந்து வீழ்ந்தன. வயிற்றில் கருப்பம் உண்டாயிற்று என்பதைச் சான்றோர்கட்கு எல்லாம் சொல்லுவன போல முலைகள் பால் பரவ அவற்றின் அழகிய முகங்கள் கறுத்தன ஆக. ஓவியனாலும் எழுதுதற்கு அரிய பேரழகையுடைய சீதைக்கு இவ்வகையான இலக்கணம் பலவும் உண்டாகின.

இராமனும் சீதையும்

ஸுரர்களின் மகளுக்கு {தேவகன்னிகைக்கு} ஒப்பானவளும், அழகிய இடையைக் கொண்டவளுமான சீதையிடம் {ராமன் பின்வருமாறு} கூறவும் செய்தான், "வைதேஹி, உன்னிடம் எனக்கு அபத்ய லாபம் {சந்ததிப் பேறு}[8] கைகூடியுள்ளது.(30) அழகான இடையைக் கொண்டவளே, என்ன விரும்புகிறாய்? உன்னுடைய எந்த விருப்பம் நிறைவேற்றபட வேண்டும்?" {என்று கேட்டான் ராமன்}.(31)

[8] பத் / பததி: கீழே விழுதல், நரகத்தில் வீழ்தல் அல்லது அழிந்து போதல். அபத்ய: எவன் ஒருவன் (அல்லது எவள் ஒருத்தி) தன் பெற்றோரையோ, தன் முன்னோர்களின் வம்சத்தையோ நரகத்திலோ, அழிவிலோ "வீழாமல் காக்கிறானோ" அவனே 'அபத்யம்' ஆவான். எனவே, இதன் நேரடி பொருள்: "வம்சத்தை வீழ்ச்சியில் இருந்து காக்கும் வாரிசு" என்பதாகும்.

பிறகு, சீதை புன்னகைத்தபடியே ராமனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள், "இராகவரே, புண்ணியமான தபோவனங்களைக் காண இச்சிக்கிறேன்[9].(32) தேவரே, கங்காதீரத்தில் வீற்றிருப்பவர்களும், உக்கிர தேஜஸ்விகளும், பழங்களையும், மூலங்களையும் {கிழங்குகளையும்} உண்பவர்களுமான ரிஷிகளின் பாதமூலங்களில் வசிக்க வேண்டும்.(33) காகுத்ஸ்தரே, மூலங்களையும் {கிழங்குகளையும்}, பழங்களையும் போஜிப்பவர்களின் {உண்பவர்களின்} தபோவனத்தில் ஏகராத்திரி {ஓர் இரவு} ஆகினும் வசிக்க வேண்டும் என்பது எதுவோ, அதுவே என் பரம விருப்பமாகும்" {என்றாள் சீதை}.(34) 

[9] இராமன் ஆசையோடு கேட்ட கேள்விக்குச் சீதை வெட்கத்துடனும் புன்னகையுடனும் தன் விருப்பத்தை வெளியிடுகிறாள். அவள் உலகியல் சார்ந்த ஆடம்பரப் பொருட்களையோ, அணிகலன்களையோ கேட்கவில்லை. சீதையின் இந்தத் தபோவன ஆசையே பிற்காலத்தில் அவள் கானகத்திற்குத் துறக்கப்படுவதற்குக் காரண நிமித்தமாக மாறப்போகிறது என்பதால், இந்தச் சுலோகம் உத்தர ராமாயணத்தின் மிக முக்கியமான, அதே சமயம் சோகம் கலந்த ஒரு திருப்புமுனைச் சுலோகமாகக் கருதப்படுகிறது.

சிரமமின்றி கர்மங்களை {செயல்களைச்} செய்பவனான ராமனால், "அப்படியே {ஆகட்டும்}" என்று பிரதிஜ்ஞை செய்யப்பட்டது. "வைதேஹி, நம்பிக்கையுடையவளாக இருப்பாயாக. நாளை சந்தேகமில்லாமல் செல்வாய்" {என்றான்}.(35)

காகுத்ஸ்தனான ராமனோ, ஜனகாத்மஜையான மைதிலியிடம் {ஜனகனின் மகளும், மிதிலையின் இளவரசியுமான சீதையிடம்} இவ்வாறு கூறிவிட்டு, நண்பர்களால் சூழப்பட்டவனாக {அரண்மனையின்} நடுவறையின் மத்தியில் சென்றான்.(36)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 042ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசிஷ்டர் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி