Saturday, 15 August 2026

ஊர்வசி | சர்க்கம் – 056 (29)

Urvashi | Sarga-056 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மீண்டும் உடல் உண்டாகுமாறு பிரம்மனை வேண்டிய வசிஷ்டர்; உபாயம் சொன்ன பிரம்மன்; ஊர்வசியிடம் காமுற்ற வருணன்; ஊர்வசி அடைந்த சாபம்...

அப்சரஸ் ஊர்வசியிடம் பேசும் வருணன்

இராமனின் பேச்சைக் கேட்டவனும், பகைவீரர்களை அழிப்பவனும், கைகூப்பியவனுமான லக்ஷ்மணன், ஒளிரும் தேஜஸ்ஸுடைய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்யரே, தேகத்தைத் துறந்த துவிஜரும், பார்த்திபருமான அவ்விருவரும் {மன்னர் நிமியும், வசிஷ்ட ரிஷியும்}, தேவர்களால் மதிக்கப்பட்டவர்களாக தேகத்துடனான சேர்க்கையை மீண்டும் எவ்வாறு அடைந்தனர்?"(2)

இலக்ஷ்மணனால் இவ்வாறு கூறப்பட்டபோது, இக்ஷ்வாகுநந்தனனும், மஹா தேஜஸ்வியும், புருஷரிஷபனுமான ராமன், லக்ஷ்மணனிடம் {பின்வரும்} பதிலைச் சொன்னான்:(3) "தார்மிகர்களான அவ்விருவரும், பரஸ்பரம் அளித்த சாபத்தால் {தங்கள்} தேகங்களைத் துறந்தனர். தபோதனர்களும், நிருபவிப்ரரிஷிகளுமான அவ்விருவரும் வாயுபூதங்களாகினர் {மன்னர் நிமியும், வேதம் பயின்ற பிராமண முனிவர் வசிஷ்டரும் காற்றின் வடிவமடைந்தனர்}.(4) மஹாதேஜஸ்மிக்கவரும், மஹாமுனிவருமான வசிஷ்டர், வேறொரு சரீரத்தைப் பெறுவதற்காக, சரீரமற்றவராக பிதாவின் {தம் தந்தையான பிரம்மனின்} அருகில் சென்றார்.(5) 

தர்மவித்தான அவர் {தர்மத்தை அறிந்தவரான வசிஷ்டர்}, வாயுபூதராக {காற்றின் வடிவத்தில் இருந்து கொண்டு} தேவதேவனின் {பிரம்மனின்} பாதங்களை வணங்கிய பிறகு, அந்தப் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னார்:(6) "பகவானே, லோகநாதரே, மஹாதேவரே, நிமியின் சாபத்தால் விதேஹத்வத்தை {உடலற்ற நிலையை நான்} அடைந்தேன். அண்டஜரும் {முட்டையில் இருந்து பிறந்தவரும்}, அம்புஜரும் {தாமரையில் இருந்து பிறந்தவரும்} நீர்.(7) பிரபோ, தேகமற்ற அனைவருக்கும் மஹத்தான துக்கம் உண்டாகும். தேகத்தை இழந்தவனின் சர்வ காரியங்களும் அழிந்தே போகின்றன. வேறொரு தேகம் கிடைப்பதற்கு {எனக்கு} அருள் செய்வதே உமக்குத் தகும்" {என்று கேட்டார் வசிஷ்டர்}.(8) 

பிறகு, அளவற்ற ஒளி கொண்டவனும், ஸ்வயம்பூவுமான பிரம்மா, அவரிடம் {வசிஷ்டரிடம் பின்வருமாறு} சொன்னான், "பெரும்புகழுடையவனே, நீ மித்ராவருணர்களிடமிருந்து பிறந்த தேஜஸ்ஸில் பிரவேசிப்பாயாக {மித்ரன், வருணன் ஆகியோரிடமிருந்து பிறந்த ஒளியாற்றலுக்குள் நுழைவாயாக}.(9) அங்கும் கூட நீ அயோனிஜனாகவே {யோனியில் பிறக்காதவனாகவே}[1] இருப்பாய். துவிஜசத்தமா {இருபிறப்பாளர்களில் முதன்மையானவனே}, பெரும் தர்மத்துடன் கூடியவனாக மீண்டும் என் வசத்தையே அடைவாய்" {என்றான் பிரம்மன்}[2].(10)

[1] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அயோனிஜன் - ஒருசரீரத்தின் வழியாகப்பிறவாது வேறுவிதமாக உற்பவித்தவன்" என்றிருக்கிறது.

[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 810ம் பாடல் பின்வருமாறு:

ஒத்தவர் தம்மை இல்லா உருப்பசி நிமித்தம் ஆக
மித்திர வருணர் விட்ட வீரியம் தன்னை எய்திக்
குத்திர யோனி யில்லாக் கும்பமாம் தெய்வ யோனிப்
புத்திரன் ஆக வந்து தோன்றுதி போநீ என்றான்

பொருள்: "தன்னை ஒத்த அழகியரை இல்லாத பேரழகியாகிய ஊர்வசி காரணமாக, மித்திரனும் வருணனும் விட்ட வீரியம் தன்னை எய்தி இழிவான கருப்பையில்லாத கும்பமாகிய தெய்வக் கருப்பையில் புத்திரனாக வந்து நீ தோன்றுவாய் போ" என்று பிரமன் சொன்னான்.

தேவனால் {பிரம்மனால்} இவ்வாறு கூறப்பட்டபோது, அவர் {வசிஷ்டர்}, பிதாமஹனை வணங்கி பிரதக்ஷிணம் செய்துவிட்டு {பிரம்மனை வலம் வந்து}, துரிதமாக வருணாலயத்திற்கு {வருணனின் இருப்பிடத்திற்குச்} சென்றார்.(11) மித்ரனும்கூட அதே காலத்தில் வருணத்வத்தை {வருண நிலையை} அடைந்தான். க்ஷீரோதனுடன்[3] கூடியவனாகவும், ஸுரோத்தமர்களால் பூஜிக்கப்பட்டவனாகவும் {சிறந்த தேவர்களால் வழிபடப்பட்டவனாகவும் அவன்} இருந்தான்.(12)

[3] “க்ஷீர” என்பது பால், “உத” என்பது நீர். எனவே, “க்ஷீரோதம்” என்பது பாற்கடல் எனப் பொருள்படும். “க்ஷீரோதன்” என்பது பாற்கடலுடன் தொடர்புடையவன்; அல்லது, பாற்கடலையே வடிவமாகக் கொண்டவன் என்ற பொருளைத் தரும். இங்கு “க்ஷீரோதன்” என்பது வருணனைக் குறிப்பதாக உரையாசிரியர்களால் கருதப்படுகிறது. தர்மாலயப் பதிப்பில், "அதேகாலத்தில் மித்ரனென்னும் ஒரு தேவன் (வருணனது தோழன்) க்ஷீரஸமுத்திரத்தில் இருந்துகொண்டு தேவோத்தமர்களாலும் கொண்டாடப்பட்டவனாய் வருணனது அதிகாரத்தை செலுத்திவந்தான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அக்காலத்தில் மித்ரனென்னும் ஒருதேவன் வருணனுக்கு மித்ரனாகி அவனுக்கு இணங்கியவனாகவே ஆங்கு அவ்வுலகத்தைப் பரிபாலித்து வந்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "அந்தக் காலகட்டத்தில் மித்திரன் (என்ற தேவதையும்) வருணனுடைய அதிகாரத்தைப் பெற்று, வருணனோடுகூட இருந்து கொண்டு தேவோத்தமர்களால் பூஜிக்கப்பட்டு வந்தார்" என்றிருக்கிறது.

அதே காலத்தில், பரம அப்சரஸான ஊர்வசி, சகிகளால் {தோழிகளால்} சூழப்பட்டவளாக யத்ருச்சையாக {தற்செயலாக} அவ்விடத்திற்கு வந்தாள்[4].(13) வருணாலயத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் ரூபசம்பன்னையான {வடிவழகியான} அவளைக் கண்டதும், ஊர்வசியின் பொருட்டு வருணனைப் பெரும் மகிழ்ச்சி ஆட்கொண்டது.(14) அந்த வருணன், பத்ம இதழ் {தாமரையிதழ்} போன்ற கண்களையுடையவளும், பூர்ணச் சந்திரனுக்கு ஒப்பான முகத்தைக் கொண்டவளும், அப்சரஸ்களில் சிறந்தவளுமான அவளை மைதுனத்திற்காக {அவளுடன் உறவு கொள்வதற்காகத் தன்னை ஏற்குமாறு} விரும்பினான்[5].(15) அப்போது, கைகூப்பி நின்ற அவள் {ஊர்வசி}, வருணனிடம், "ஸுரேஷ்வரரே {தேவர்களின் தலைவரே, வருணரே}, நான் பூர்வத்திலேயே சாக்ஷாத் மித்ரராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டேன்" {என்ற} பதிலைச் சொன்னாள்.(16) 

[4] கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "அந்தச் சமயத்தில் மிகச் சிறந்த அப்சரப் பெண்ணான ஊர்வசி, தன் தோழிகள் புடைசூழ, வருணன் இருந்த இடத்திற்கு வந்தாள்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "அதேஸமயத்தில் அப்ஸரஸ்த்ரீகளில் முதன்மையானவளான ஊர்வசியும் தோழிமார்களால் சூழப்பெற்றவளாய் தற்செயலாய் கடற்கரைக்கு வந்தாள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "இஃது இங்ஙனமாக, அத்தருணத்தில் ஊர்வசியென்னும் தெய்வப்பெண் தன்தோழிமார்களுடனே கூடிக் கையிற் குடமேந்திக் கடற்கரைக்கு வந்து விளையாடலாயினாள்" என்றிருக்கிறது.

[5] கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "மிக்க அழகுடன் கூடியவளும், கடலில் நீராடித் திளைத்துக் கொண்டிருந்தவளுமான ஊர்வசியைக் கண்டதும் வருணன், மனம் கிறங்கிப் போனார். மலர்ந்த தாமரை போன்ற கண்களை உடையவளும், முழுநிலா போன்று மனங்கவரும் முகமுடையவளுமான அவளைச் சிற்றின்ப உறவுக்கு அழைத்தார்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "அழுகு வாய்ந்து வருணாலயத்தில் உல்லாசமாய்ப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த அவளை கண்ணுற்றதால் ஊர்வசி மீது வருணனுக்கு அதிக காதல் உண்டாயிற்று. அந்த வருணன் செந்தாமரையிதழ் போன்ற கண்களுற்றவளும் முழுமதிபோன்ற முகமுடையவளும் அப்ஸரோத்தமியுமான அவளை சம்போகத்திற்கு வேண்டினான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அற்புதமான அழகுவாய்ந்த அவ்வணங்கினைக் கண்ணுற்றவளவில் வருணனுக்கு அவள் மீது அதிகமான காதலுண்டாகியது. அதனால் அவன் அகமகிழ்ச்சிகொண்டு ஊர்வசியின் அருகே சென்று, செந்தாமரையிதழ் போன்ற கண்களும் முழுமதிபோன்ற முகமுமமைந்த அவ்வழகியை நோக்கி, "கண்மணி! நீ யென்னுடன் புணர்ந்து எனக்குப் பேரின்பம் விளைவிப்பாயாக" என வேண்டினான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "குடத்தைக் கையிலேந்தித் தோழிமார்களுடனே ஊர்வசி யொருகாலத்தில் விளையாடக் கடலோரஞ் சென்றனள். மித்திரன் அவளை முதலில் கண்ணுற்று மோகித்தனன். அத்தருணம் புணரவியலாது அவர்களிருவரும் மனத்தின் கண்ணே காதல் கொண்டிருந்தனர்கள். அதனால் ஸ்கலிதமான மித்திரனது வீரியத்தை ஊர்வசி தனது குடத்தில் ஏற்றுக்கொண்டனள். அதன் பின்னர் வருணன் அவளைக் கண்ணுற்றுக் காதல்கொண்டு அவளுடன் இன்பம் நுகர ஆவல் கொண்டனன். அதுகண்டு ஊர்வசி தான் முன்னமே மித்திரனுக்கு உடன்பட்டுப்போயின செய்திகூறி, அதுகாரணமாக வெளிப்பட்ட வருணனது வீரியத்தினையும் தன் குடத்திலேயே ஏற்றுக் கொண்டனள். தமக்குச் சரீரத்தை வேண்டியப் பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்ற வாயுவடிவமான வஸிஷ்டர் அத்தருணத்தில் அக்கடற்கரை சேர்ந்து பிரமதேவர் அனுக்கிரஹித்தவாறே ஊர்வசியினது குடத்திலிருந்த மித்ரா வருணர்களது வீரியத்திற் புகுந்தனர். அதினின்று முதலாவது அகஸ்தியரும், இரண்டாவது வஸிஷ்டரும் உற்பவித்தனர்கள். அகஸ்தியரும், வஸிஷ்டருமாகிய இருவரும் மித்திரா வருணர்களுடைய வீரியத்தினின்று தோன்றியவர்களாதலின், மைத்ராவருணர் எனவும், கும்பத்தினின்று தோன்றியவர்களாதலின், கும்பஸம்பவர் எனவும், ஊர்வசி காரணமாக உதித்தவர்களாலின் ஊர்வசி புத்திரர் எனவும் பெயர் பெற்று விளங்குகின்றனர்; ஒரே இடத்தில் தோன்றியவர்களாதலின், அவர்கள் ஸோதரரு மாகின்றனர்; மானிட சரீரத்தினின்று முற்பவித்த வரவல்லராதலின், அயோநிஜராகவு மெண்ணப் படுகின்றனர். பிறகு மித்திரனிடஞ் சென்ற ஊர்வசி, அவள் வருணனை விரும்பிய காரணத்தால் அம்மித்திரனால் சபிக்கப்பட்டவளாகிப் பூலோகத்தில் புரூரவ சக்கரவர்த்தியைச் சேர்ந்து அவனிடம் ஆயுவென்னும் புத்திரனைப் பெற்றனள் என்பது புராணகதை" என்றிருக்கிறது.

கந்தர்பனின் சரங்களால் {மன்மதக்கணைகளால்} பீடிக்கப்பட்ட வருணன், இந்த வாக்கியத்தைக் கூறினான், "தேவர்களால் நிர்மிதம் செய்யப்பட்ட இந்தக் கும்பத்தில் {குடத்தில்} இந்தத் தேஜஸ்ஸை வெளியிடுவேன்.(17) அழகிய இடையுடையவளே, வரவர்ணினியே {சிறந்த நிறமுடையவளே}, நீ சங்கமத்தை இச்சிக்கவில்லை என்றாலும், இவ்வாறு {என் தேஜஸ்ஸைக் கும்பத்தில்} வெளியிட்டு, உன்னிடம் {உன்னைப் பொறுத்தவரையில்} விருப்பம் நிறைவேறியவனாக நான் இருப்பேன்" {என்றான் வருணன்}.(18)

அந்த லோகபாலனான வருணனால் நன்றாகப் பேசப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, பரமப்ரீதியடைந்த ஊர்வசி {பின்வருமாறு} சொன்னாள்:(19) "பிரபோ, இஃது {இந்த விருப்பம்} இவ்வாறே இருக்கட்டும். என் ஹிருதயம் உம்மில் நிலைத்துள்ளது; என் பாவமும் {உணர்வும்} கூட உம்மிடமே அதிகம் உள்ளது. என் தேகமோ மித்ரருடையது" {என்றாள் ஊர்வசி}.(20)

ஊர்வசியால் இவ்வாறு கூறப்பட்ட அவன் {வருணன்}, மஹத்தானதும், அற்புதமானதும், ஜுவலிக்கும் அக்னிச் சிகையை {நெருப்புச் சுடரைப்} போன்றதுமான அந்த ரேதஸ்ஸை {விந்தை} அந்தக் கும்பத்திலேயே வெளியிட்டான்.(21) ஊர்வசியோ, தேவதையான மித்ரன் எங்கிருந்தானோ, அங்கே சென்றாள். மித்ரனோ, அந்த ஊர்வசியை அணுகி இவ்வாறு கூறினான்:(22) "பூர்வத்திலேயே என்னால் அழைக்கப்பட்டவளான {ஏற்றுக்கொள்ளப்பட்டவளான} நீ, எதனால் {என்னைவிட்டு} விலகிச் சென்று, வேறொரு பதியை {கணவனைத்} தேர்ந்தெடுத்தாய்? எனவே, நீ துஷ்டசாரிணியாவாய் {தீய நடத்தை உடையவளாவாய்}.(23) இந்தத் தீச்செயலால் களங்கப்பட்ட நீ, என் குரோதத்தால் {பீடிக்கப்பட்டு} மனுஷ்யலோகத்தை அடைந்து, கொஞ்ச காலம் வசிப்பாயாக.(24) துர்புத்தியுடையவளே, புதனின் புத்திரனும், ராஜரிஷியும், காசிராஜனுமான அந்தப் புரூரவஸ்ஸிடம் {புரூரவனிடம்}[6] இப்போது செல்வாயாக. அவன் உனக்குப் பர்த்தாவாக {கணவனாக} இருப்பான்" {என்றான் மித்ரன்}[7].(25)

[6] மஹாபாரதம், ஆதிபர்வம் 75ம் பகுதியில் 18 முதல் 24ம் சுலோகங்கள் வரை புரூரவஸ்ஸின் கதை சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் 23, 24ம் சுலோகங்களில் புரூரவஸ், ஊர்வசியை கந்தர்வலோகத்திலிருந்து அழைத்து வந்ததாகவும், அவளிடம் அவன் ஆறு மகன்களைப் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் மஹாபாரதம், சாந்தி பர்வம் 72ம் பகுதியில் புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலை பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறார். சாந்தி பர்வம் 73ம் பகுதியில் புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொல்கிறார். 

[7] தர்மாலயப் பதிப்பில் இங்கே இந்த சர்க்கம் நிறைவடைகிறது.

பிறகு, அவள் சாபத்தின் தோஷத்தால், புதனின் ஔரஸ ஆத்மஜரான {புதனுடைய மனைவியான இளையின் கருவில் பிறந்த} புரூரவஸை அடைந்தாள். புரூரவஸ் {அவளைவிட்டுத்} திரும்பிச் சென்றபோது,(26) அவருக்கு {புரூரவருக்கு} மஹாபலவானான ஸ்ரீமான் ஆயு என்ற புத்திரர் பிறந்தார். பிறகு, அவருடைய புத்திரனாக {ஆயுவின் மகனாக} இந்திரனுக்கு சம ஒளி படைத்த நஹுஷர் {பிறந்து} இருந்தார்.(27) விருத்திரனுக்கு எதிராக வஜ்ரத்தை ஏவிய பிறகு, {பிரம்மஹத்தி தோஷத்தால்}[8] திரிதிவத்தின் ஈஷ்வரன் {இந்திரன்} கலங்கியபோது, எவரால்  நூறாயிரம் வருஷங்கள் இந்திரத்வம் வகிக்கப்பட்டதோ, {அந்த நஹுஷனாலேயே ஒரு லக்ஷம் ஆண்டுகள் இந்திரப் பதவி வகிக்கப்பட்டது என்பது பொருள்}[9].(28)

[8] மஹாபாரதம், சாந்தி பர்வம் 282ம் பகுதியில் விருத்திரனைக் கொன்றதால் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி குறிப்பிடப்படுகிறது. 

[9] மஹாபாரதம், உத்யோக பர்வம், பகுதி 11ல் நஹுஷன் இந்திர பதவியை அடைந்தது விவரிக்கப்படுகிறது. 

அந்த சாபத்தால் அவள் {ஊர்வசி}  பூமியை அடைந்தாள். அப்போது, அழகிய பற்களையும், அழகிய நேத்திரங்களையும் {கண்களையும்}, அழகிய புருவங்களையும் உடைய ஊர்வசி, பல வருஷங்கள் {பூமியில்} வசித்துவிட்டு, சாபம் நீங்கியதால் இந்திரனின் சதனத்திற்கும் {இருப்பிடத்திற்கும்} சென்றாள்" {என்றான் ராமன்}.(29)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 056ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி