Shatrughna encounters Lavana | Sarga-068 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலவணன் வெளியே சென்றிருக்கும் தருணத்தில் கோட்டை வாயிலில் காத்திருந்த சத்ருக்னன்; திரும்பி வந்த லவணனைப் போருக்கு அழைத்தது...
அவர்கள் {முனிவர்கள்} கதைகளைச் சொல்லிக்கொண்டும், சுப ஜயத்தை {மங்கல வெற்றியை} விரும்பிக் கொண்டுமிருக்கையில் மஹாத்மா சத்ருக்னனுக்கு இரவு சீக்கிரம் கழிந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {களங்கமற்ற விடியல்காலையில்}, அந்தக் காலத்தில் {நேரத்தில்}, தீரனான அந்த ராக்ஷசன் ஆஹாரத்தை {உணவைத்} தேடும் எண்ணத்தால் தூண்டப்பட்டவனாகப் புரத்திலிருந்து {நகரத்திலிருந்து} வெளியேறினான்.(2) இதற்கிடையில், வீரனான சத்ருக்னன் யமுனை நதியைக் கடந்து, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன்} மதுபுரத்வாரத்தில் நின்றான் {மதுபுரியின் வாயிலில் லவணனை எதிர்பார்த்து நின்றான்}.(3)
பிறகு, நண்பகல் வந்தபோது, குரூர கர்மங்களைச் செய்பவனான அந்த ராக்ஷசன், பல்லாயிரம் பிராணிகளின் பாரத்தை {உயிரினங்களின் சுமையைச்} சுமந்துகொண்டு வந்தான்.(4) அப்போது, துவாரத்தில் {வாயிலில்}ஆயுதம் தரித்து நின்றிருந்த சத்ருக்னனைக் கண்டான். பிறகு அவன் {லவணன்} அவனிடம் {சத்ருக்னனிடம் பின்வருமாறு} சொன்னான், "இதனால் செய்யப்போவது என்ன? {உன்னுடைய வில்லைக் கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்?}[1](5) ஹே நராதமா {மனிதர்களில் இழிந்தவனே}, ஆயுதம் ஏந்திய இத்தகைய ஆயிரக்கணக்கானோரை நான் கோபத்தால் பக்ஷித்திருக்கிறேன் {உண்டிருக்கிறேன்}. ஏன் காலனை {உன் மரணத்தை} எதிர்பார்க்கிறாய்?(6) ஹே புருஷாதமா {மனிதர்களில் இழிந்தவனே}, ஹே துர்மதியுடையோனே, நீயாகவே இன்று என் வாய்க்குள் பிரவேசித்துவிட்டாய் {வந்து விழுந்துவிட்டாய்}; இதனால் இன்றைய என் ஆஹாரம் சம்பூர்ணமானது {முழுமையடைந்துவிட்டது}. என்னை அடைந்த பிறகு நீ எவ்வாறு தப்புவாய்?" {என்றான் லவணன்}[2].(7)
[1] லவணனின் தந்தையான மது என்ற அசுரனின் தவத்திற்கு மெச்சி, எவராலும் வெல்ல முடியாததும், ஏந்தியவரைத் தோல்வியுறச் செய்யாததுமான ஒரு தெய்வீகச் சூலாயுதம் சிவனால் அருளப்பட்டிருந்தது. சத்ருக்னன் மதுபுரிக்கு வந்தபோது, லவணன் அந்தச் சூலாயுதத்தைக் கோட்டைக்குள்ளேயே வைத்துவிட்டு, காட்டில் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் மீண்டும் கோட்டைக்குள் புகுந்து அச்சூலத்தை எடுத்துக்கொண்டால், அவனை யாராலும் வெல்ல முடியாது என்பதை அறிந்தே, அவன் வேட்டையிலிருந்து பல்லாயிரக்கணக்கான மிருகங்களைச் சுமந்து கொண்டு வாயிலுக்குத் திரும்பும் உச்சிவேளையில், கோட்டை வாசலை வழிமறித்துத் தனுஷ்பாணியாகச் சத்ருக்னன் நின்றான். இலவணன், தனக்கு ஆயுதமே தேவையில்லை என்ற மமதையாலும், தன் உடல் பலத்தின் மீதிருந்த மமதையினாலும், தன் சிவ சூலத்தின் சக்தியைப் பற்றிய கர்வத்தினாலும், சத்ருக்னனின் வில்லைப் பார்த்து ஏளனமாக "இதைக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று வினவுகிறான்.
[2] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 886ம் பாடல் பின்வருமாறு:தன்னுடைய நகர்வாயில் தனுதரனாய்ப்போர்செய்யச் சமைந்து நிற்கும்மன்னனுடைய மகன்நின்ற வலிகண்டுவாய்மடித்து, வஞ்சன் கூறும்என்னுடைய காவல் அழித்து அஞ்சாதேஎன்நகரில் வந்தாய் யாரைஉன்னுடைய பேர் ஏது நீவந்தகாரணம்என் உரைத்தி என்றான்பொருள்: வஞ்சகனான லவணன் தன்னுடைய நகரத்தின் வாயிலில் வில்லை ஏந்தியவனாய்ப் போர்செய்தற்கு ஆயத்தனாய் நிற்கின்ற அரச குமாரனாகிய சத்ருக்னன் நின்றிருக்கும் வலிமையான தோற்றத்தைக் கண்டு வெகுண்டு வாய்மடித்துக் கொண்டு சொல்லுவான்: "என்னுடைய காவலையெல்லாம் பயன்படாமல் அழித்துவிட்டுச் சிறிதும் அஞ்சாமல் என் நகரத்திற்குள் வந்த நீ யார்? உன்னுடைய பேர் யாது? நீ இங்குப் போர்க் கோலத்துடன் வந்த காரணம் யாது? சொல்" என்று வினவினான். ஒட்டக்கூத்தரில் தன் காவலை அழித்து நகருக்குள் நுழைந்த சத்ருக்னனிடம் "நீ யார்?" என இலவணன் வினவுகிறான்; வால்மீகியிலோ லவணன் இல்லாத நேரத்தில் வாயிலில் காத்திருந்த சத்ருக்னன், அவன் திரும்பியதும் தன்னை யார் என்றும் கேட்காமல் அதட்டிக் கொண்டிருந்த அவனிடம் தானே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான்.
இவ்வாறு அவன் {லவணன்} பேசிக் கொண்டும், மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தபோது, வீரியசம்பன்னனான {வீரம் நிறைந்தவனான} சத்ருக்னன் கோபத்தால் கண்ணீரைச் சிந்தினான்.(8) கோபத்தால் ஆட்கொள்ளப்பட்ட மஹாத்மா சத்ருக்னனுடைய சர்வ காத்திரங்களில் இருந்தும் தேஜோமயமான கதிர்கள் வெளிப்பட்டன {உடல் உறுப்புகள் அனைத்திலிருந்தும் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டன}.(9) பெருங்குரோதமடைந்த சத்ருக்னன் அந்த நிசாசரனை நோக்கி {இரவுலாவியான லவணனை நோக்கிப் பின்வருமாறு} சொன்னான், "துர்புத்தியுடையவனே, உன்னுடன் துவந்த யுத்தம் செய்ய விரும்புகிறேன் {நேருக்கு நேர் போர்புரிய விரும்புகிறேன்}.(10) நான் தசரதருடைய புத்திரன்; மதிமிக்க ராமரின் பிராதா {சகோதரன்}; நித்யசத்ருக்னனான {எப்போதும் பகைவரை அழிப்பவனான} சத்ருக்னன். உன்னை வதம் செய்ய விரும்பி வந்திருக்கிறேன்.(11) யுத்தம் செய்ய விரும்பும் எனக்கு துவந்த யுத்தம் {நம் இருவருக்கிடையிலான நேருக்கு நேரான போர்} வழங்கப்படட்டும். சர்வபூதங்களுக்கும் சத்ருவான நீ {அனைத்து உயிரினங்களுக்கும் பகைவனான நீ}, என்னிடமிருந்து ஜீவனுடன் செல்லமாட்டாய் {உயிருடன் செல்லமாட்டாய்}" {என்றான் சத்ருக்னன்}.(12)
அவன் {சத்ருக்னன்} அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும்போது, அந்த ராக்ஷசன் {லவணன்} கேலியாகச் சிரிப்பவனைப் போல நரசிரேஷ்டனிடம் {மனிதர்களில் சிறந்தவனான சத்ருக்னனிடம் பின்வருமாறு} பதில் சொன்னான், "துர்மதியுடையோனே, அதிர்ஷ்டவசமாக நீ வந்திருக்கிறாய்.(13) ஹே துர்புத்தியுடையவனே, ஹே புருஷாதமா {மனிதர்களில் இழிந்தவனே}, என் மாதாவுடைய சகோதரியின் பிராதாவும்[3], ராக்ஷசாதிபருமான ராவணர், ஸ்திரீயின் காரணமாக ராமனால் கொல்லப்பட்டார்.(14) இராவணரின் குலநாசம் உள்பட அவை அனைத்தையும் நான் பொறுத்துக் கொண்டேன். குறிப்பாக உங்களை {ராமனின் குலத்தாரை} அலட்சியத்துடன் புறக்கணித்தேன்..(15) என்னால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புல்லைப் போல இகழப்பட்டார்கள். முன்பு வந்தவர்களும், இனி வரப்போகிறவர்களும், புருஷாதமர்களான நீங்களும்கூட {என்னால் கொல்லப்பட்டு புல்லைப் போல இகழப்படுவீர்கள்}.(16) ஹே துர்மதியுடையோனே, யுத்தம் செய்ய விரும்பும் உனக்கு அந்த யுத்தத்தைத் தருவேன். நீ ஒரு முஹூர்த்தம் காத்திருப்பாயாக. நான் ஆயுதத்தைக் கொண்டு வருகிறேன். உனக்கு எப்படிப்பட்டது {எப்படிப்பட்ட ஆயுதம்} விருப்பமோ, அத்தகைய ஆயுதத்துடன் ஆயத்தமாகி வருவேன்" {என்றான் லவணன்}.(17)
[3] இலவணனின் தாய் கும்பீநசி ஆவாள். கும்பீநசி, மால்யவானின் மகளான அனலையின் மகள். சூர்ப்பணகை, கைகசியின் மகள்; ராவணன் அவளது சகோதரன். கும்பீநசியும் சூர்ப்பணகையும் மால்யவான்–ஸுமாலி வம்ச உறவால் சகோதரிகள் முறை ஆவர். எனவே, சூர்ப்பணகையின் சகோதரனான ராவணன், கும்பீநசிக்கும் சகோதரன் முறையாவான் என லவணன் குறிப்பிடுகிறான். உத்தர ராமாயணம் 5ம் சர்க்கத்தில் உள்ள மால்யவான், மாலி, சுமாலி ஆகியோரின் வம்சப்பட்டியலில் கும்பீனசி கைகசியுடன் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். அதாவது ராவணனின் சிற்றன்னையாகச் சொல்லப்படுகிறாள். உத்தர ராமாயணம் 25ம் சர்க்கத்தில் கும்பீனசி ராவணனின் சகோதரி முறையாகக் குறிப்பிடப்படுகிறாள். இஃது அந்தந்த சர்க்கங்களில் உள்ள வம்சவிருக்ஷப் படங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. உத்தர ராமாயணம் 61ம் சர்க்கத்தில் இதே உறவுமுறை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. எனவே, இந்தச் சுலோகம் 25ம் சர்க்க உறவுமுறையையே பின்பற்றுகிறது. ஆரண்ய காண்டம் 17ம் சர்க்கம் 6ம் சுலோகத்தில் சூர்ப்பணகை ராவணனின் தங்கையாகக் குறிப்பிடப்படுகிறாள். உத்தரராமாயணம் 9ம் சர்க்கம் 34ம் சுலோகத்தில் சூர்ப்பணகை கைகசியின் மகளாகக் குறிப்பிடப்படுகிறாள். இதற்கு முரணாகும் வகையில் மஹாபாரதம், வனபர்வம் 273ம் அத்தியாயத்தில் கரனும், சூர்ப்பணகையும் கைகசியின் சகோதரியான ராகை என்பவளுக்கும், விஸ்ரவஸுக்கும் பிறந்த இரட்டைப் பிள்ளைகள் என்று சொல்லப்படுகிறது.
உடனே சத்ருக்னன் அவனிடம் {பின்வருமாறு} சொன்னான், "என்னிடமிருந்து நீ ஜீவனுடன் எங்கே செல்வாய்? கிருதாத்மாவானவன் {தன்னைக் கட்டுப்படுத்தியவன்} யத்ருச்சயாக {தற்செயலாக எதிரில்} காணப்பட்ட சத்ருவை விட்டுவிடக்கூடாது[4].(18) எவன் கலங்கிய புத்தியினால் சத்ருவுக்கு வாய்ப்பளிக்கிறானோ, அவன் அந்த மந்தபுத்தியின் காரணமாக, ஒரு கோழை எவ்வாறோ {எவ்வாறு கொல்லப்படுவானோ}, அவ்வாறே கொல்லப்படுவான்.(19) எனவே, இந்த ஜீவலோகத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வாயாக. மூவுலகங்களுக்கும் ராகவருக்கும் {ராமருக்கும்} பகைவனும், பாபியுமான உன்னை விதவிதமான கூர்மையான சரங்களால் யமனின் கேஹத்தை {வீட்டை} நோக்கி அனுப்புவேன்" {என்றான் சத்ருக்னன்}.(20)
[4] இலவணன் சத்ருக்னனிடம், "நான் சென்று என் ஆயுதத்தை (சிவ சூலத்தை) எடுத்துக்கொண்டு வருகிறேன், அதுவரை நில்" என்று கூறியபோது சத்ருக்னன் மறுக்கிறான். 'ந மோக்தவ்ய꞉ க்ருதாத்மனா': கடமையை உணர்ந்த, மன உறுதி கொண்ட க்ஷத்திரிய வீரன், தன் எதிரி தற்செயலாக ஆயுதமின்றித் தன்முன் சிக்கியிருக்கும் தருணத்தில், கருணை காட்டி அவனை விட்டுவிடக் கூடாது; எதிரிக்கு இடம் கொடுப்பது கோழைத்தனத்திற்குச் சமம். குறிப்பாக, சிவ சூலம் கிடைத்துவிட்டால் லவணனால் உலகிற்குப் பேரழிவு நேரிடும் என்பதை முன்னரே உணர்ந்து, சத்ருக்னன் அவனுக்குக் கோட்டைக்குள் செல்ல வாய்ப்பளிக்காமல் அங்கேயே போருக்கு அறைகூவல் விடுக்கிறான்.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 068ல் உள்ள சுலோகங்கள்: 20
| Previous | | Sanskrit | | English | | Next |
