Saturday, 8 August 2026

மன்னன் நிருகன் | சர்க்கம் – 053 (26)

King Nriga | Sarga-053 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாடி வருபவர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு ராஜா விசாரிக்க வேண்டும் என்பதற்குத் தொடர்புடைய நிருகராஜனின் கதையை லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...

மன்னன் நிருகன் பசு பிராமணர்

இலக்ஷ்மணனின் அந்தப் பரம அற்புதமான வாக்கியத்தைக் கேட்டுப் பெரும்பிரீதியடைந்த {மிகவும் மகிழ்ந்த} ராமன்[1], {அப்போது} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "சௌம்யா {மென்மையானவனே}, மஹாபுத்தியுள்ளவனே, எத்தகைய நீ என் மனத்திற்கு இணங்குபவனாக இருக்கிறாயோ, இத்தகைய பந்து {உறவினன்} குறிப்பாக இந்தக் காலத்தில் அரிதானவன்.(2) சுபலக்ஷணமுடையவனே, என் மனத்தில் ஏதொன்று இருக்கிறதோ, அதைக் கவனமாகக் கேட்பாயாக. மேலும் அதைக் கேட்ட பிறகு, என் வசனத்தின்படி செயல்படுவாயாக.(3) 

[1] செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் இடம்பெறவில்லை. இங்கே உள்ள 53 முதல் 59ம் சர்க்கம் வரையும் கூட அங்கே இல்லை.

சௌம்யா, சௌமித்ரே {சுமித்ரையின் மகனே, லக்ஷ்மணா}, பௌரஜனங்களின் {நகரமக்களின்} காரியத்தைச் செய்யாத எனக்கு, அந்த நான்கு நாட்கள்[2] என் மர்மங்களை {உயிர்நிலைகளைப்} பிளக்கின்றன.(4) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, அதிகாரிகள், புரோகிதர்கள், மந்திரிகள் {ஆகியோரும்}, மேலும் தங்கள் காரியங்களை வேண்டி வரும் புருஷர்களும், ஸ்திரீகளும் {ஆண்களும், பெண்களும் இங்கே} அழைக்கப்படட்டும்.(5) எந்த ராஜா தினந்தினம் பௌர காரியங்களை {நகர மக்களின் காரியங்களைச்} செய்யவில்லையோ, அவன் கோரமானதும், அடைக்கப்பட்டதுமான நரகத்தில் வீழ்ந்தவன் ஆகிறான். இதில் சந்தேகமில்லை.(6)

[2] இங்கே குறிப்பிடப்படும் “நான்கு நாள்கள்”, சீதை வனத்தில் விடப்படுவதால் ஏற்பட்ட மனவேதனையை ஒட்டிய காலமாகவும், லக்ஷ்மணன் அவளை வனத்தில் விட்டுவிட்டு வர எடுத்துக் கொண்ட காலமாகவும் இருக்கலாம். கதையின் தொடர்ச்சிப்படி, லக்ஷ்மணன் சீதையை அழைத்துச் சென்று அந்த நாள் இரவில் கோமதியாற்றங்கரையில் தங்குகிறான். அடுத்த நாள் அவளை கங்கை ஆற்றைக் கடந்து விடுகிறான். மீண்டும் அயோத்திக்குத் திரும்புகையில் கேசினியில் இரவு தங்குகிறான். அதற்கடுத்த நாள் அயோத்தியை அடைகிறான். எனவே, லக்ஷ்மணனின் பயணம் மூன்று நாள்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதன் பிறகு ராமனிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டு, அடுத்த நாள் இந்த உரையாடல் நடைபெறுவதாக இருந்தால், ராமன் குறிப்பிடும் நான்கு நாள்கள் பொருந்துவதாகத் தெரிகிறது. அந்த நாள்களில் ராமன் நகரமக்களின் காரியங்களை விசாரிக்கும் அரசக் கடமையை மேற்கொள்ளவில்லை என்பது இச்சுலோகத்திலிருந்து தெரிகிறது.

முன்னர், நிருகர் என்ற பெயருடைய, பெரும்புகழுடைய ராஜா, பிருத்வீபாலராகவும் {பூமியைக் காப்பவனாகவும்}, பிரஹ்மண்யராகவும் {பிராமணர்களிடம் அன்பு கொண்டவராகவும்}, சத்திய வாக்குடையவராகவும், தூய்மையானவராகவும் இருந்தார் என்று கேட்கப்படுகிறது.(7) நிருபரான அந்த நிருதேவர் {அரசரும், மனிதர்களில் தேவருமான அந்த நிருகர்}, ஒரு சமயம் புஷ்கரைகளில் {புனிதத் தலங்களில்}, கன்றுகளுடன் கூடியவையும், ஸ்வர்ணத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டவையுமான கோடிக்கணக்கான கவங்களை {பசுக்களை} பூமிதேவர்களுக்கு தத்தம் செய்தார் {பிராமணர்களுக்குக் கொடுத்தார்}.(8) பிறகு, அனகா {பாவமற்றவனே}, வேள்வி அக்னியை நிறுவியவரும், தரித்திரரும் {ஏழையும்}, உஞ்சவிருத்தியால் வாழ்பவருமான[3] ஒரு பிராமணரின் ஸ்பரிசம் பெற்ற {அந்த பிராமணருக்கு தானமளிக்கப்பட்ட}, கன்றுடன் கூடிய தேனு {பசு} சங்கத்துடன் {பசுக்கூட்டத்துடன்} சேர்ந்து சென்றுவிட்டது.(9) அவர் {அந்த பிராமணர்}, பசியால் துன்புற்றவராகி, நஷ்டமான {தொலைந்த} பசுவை அங்குமிங்கும் தேடிக்கொண்டு, சர்வராஜ்ஜியங்களிலும் {அனைத்து நாடுகளிலும்} பல ஆண்டுக்கணக்காகத் தேடியும் அதைக் காணவில்லை[4].(10) பிறகு, கனகலத்திற்குச் சென்று, ஒரு பிராமணரின் நிவேசனத்தில் {இல்லத்தில்}, வளர்ந்த கன்றையுடையதும்[5], நோயற்றதுமான {நலமுடையதுமான} தன் தேனுவை {பசுவைக்} கண்டார்.(11)

[3] உஞ்சவிருத்தி என்பது, பிறரிடம் எதையும் கேட்காமல், அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சிக் கிடைக்கும் தானியங்களைச் சேகரித்து வாழும் ஒரு எளிய வாழ்க்கை முறையாகும்.

[4] 9ம் சுலோகத்திற்கும், 10ம் சுலோகத்திற்கும் இடையில் நடந்த நிகழ்வு ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 797ம் பாடலில் இருக்கிறது. அது பின்வருமாறு:

கொற்றவன் நிருகன் கோடிகோடி ஆக் கொடுக்கும் காலை
நற்றவ மறையோனுக்கு நல்லது ஓர் பசுவை நல்க
மற்றது தப்பி மன்னன் மாநிரை வந்துகூட
உற்றதை அறியான் மற்றோர் உயர் மறையோனுக்கு ஈந்தான்

பொருள்: அரசனான நிருகன் என்பவன் கோடி கோடிப் பசுக்களைத் தானம் கொடுக்கும்போது நல்ல தவத்தையுடைய ஒரு வேதியனுக்கு நல்லதாகிய ஒரு பசுவை தானமாகக் கொடுக்க, அந்தப் பசு அவனிடத்தில் இல்லாமல் தப்பித்து வந்து நிருகனுக்குரிய பெரிய பசுநிரையோடு சேர்ந்து வாழ, அவ்வாறு அப்பசு தப்பிவந்தது என்பதை அறியாதவனாய் அதனை வேறு ஒரு சிறந்த வேதியனுக்குத் தானமாகக் கொடுத்தான்.

[5] வளர்ந்த கன்றையுடைய பசு என்பதைப் பால் கறக்க முடியாத நிலையிலுள்ள பசு என்று பொருள் கொள்ள வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் கனகலம் என்பது, ஹரித்வார் அருகில், கங்கைக் கரையில் அமைந்த ஒரு புனிதத்தலமாகும். புராணங்களில் இது தக்ஷயாகம் நடைபெற்ற இடமாகவும் குறிப்பிடப்படுகிறது. கனகலத் தீர்த்தம் என்றும் பிற்கால நூல்களில் அழைக்கப்படுகிறது.

பிறகு, அந்த துவிஜர் {இருபிறப்பாளர், அந்தப் பசுவை} அதன் சொந்தப் பெயரால் அழைத்து, "சபலே[6], வா" என்று சொன்னார். அந்தக் கோ {பசு}, அந்த ஸ்வரத்தை {அழைப்புக் குரலைக்} கேட்டது.(12) பசியால் பீடிக்கப்பட்ட அந்த துவிஜரின் ஸ்வரத்தை {அழைப்புக் குரலை} அறிந்த அந்தக் கோ {பசு}, பாவகனுக்கு {அக்னிக்கு} ஒப்பான அவரின் பின்னால் தொடர்ந்து சென்றது.(13) எவர் அந்தப் பசுவைப் பராமரித்து வந்தாரோ, அந்த விப்ரரும் {வேதியரும்} துரிதமாக அந்தப் பசுவைப் பின்தொடர்ந்து சென்று, அவசரமாக அந்த ரிஷியிடம், "{இஃது} என்னுடைய கோ" என்று கூறினார்.(14) {அந்த ரிஷியோ}, "ராஜசிம்மனான நிருகனால் எனக்கு தத்தம் செய்யப்பட்டு {கொடுக்கப்பட்ட இந்தப் பசு} ஸ்பரிசிக்கப்பட்டது" {என்றார். இப்படி} ஞானமுள்ளவர்களான அவ்விரு பிராமணர்களிடையே பெரும் வாதம் ஏற்பட்டது.(15) அதன்பிறகு, அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} வாதம் செய்து கொண்டிருந்த அவ்விருவரும், தாதாவை {தானம் கொடுத்தவரான நிருகரை} அணுகினர். அவ்விருவரும் ராஜபவனத்தின் துவாரத்தில் {அரச மாளிகையின் வாயிலில்} நிருகரின் சாசனத்தை அடையவில்லை {தீர்ப்பைப் பெற நிருகரைச் சந்திக்க முடியவில்லை}.(16)

[6] புள்ளிகளும், பல நிறங்களும் கொண்ட பசுவை சபலை என்று அழைப்பர். வசிஷ்டரின் காமதேனு நந்தினி என்றும், பல இடங்களில் சபலை என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே, சபலை என்பது அந்தப் பசுவின் பெயராகும்.

அனேக பகல் ராத்திரிகள் {அங்கே} வசித்திருந்த மஹாத்மாக்களான அவ்விரு துவிஜசத்தமர்களும் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களும்} குரோதம் அடைந்தனர். பரமக்ரோதம் அடைந்த அவ்விருவரும் கோர நோக்கத்துடன் கூடிய {இந்த} வாக்கியத்தைக் கூறினர்:(17) "காரியசித்தியின் பொருட்டு {வந்த} அர்த்திகளின் {வேண்டுதலுடன் கூடியவர்களின்} தரிசனத்திற்கு எதனால் நீ வரவில்லையோ, அதனால் நீ சர்வ பூதங்களுக்கும் {உயிரினங்கள் அனைத்திற்கும்} புலப்படாதவனாக கிருகலாஸமாக {ஓணானாகக்} கடவாய்.(18) பல்லாயிரம் வருஷங்களும், பலநூறு வருஷங்களும் இந்தக் குழியில் ஓணானாக தீர்க்க காலம் வசிப்பாயாக.(19) இவ்வுலகில், யதுக்களின் கீர்த்திவர்த்தனனும் {யாதவர்களின் புகழை வளர்ப்பவனும்}, புருஷவிக்ரஹனும் {மனித வடிவம் கொண்டவனும்}, வாசுதேவன் என்று புகழ்பெற்றவனுமாக விஷ்ணு தோன்றுவான்.(20) இராஜனே, அவன் அந்தச் சாபத்திலிருந்து உன்னை விடுவிப்பான். அந்தக் காலத்தில் அவனால் செய்யப்பட்ட நிஷ்கிருதியும் {வினைமுறிவும் / சாபவிமோசனமும்} உனக்கு உண்டாகும்[7].(21) கலியுகம் வரும்போது, பாரத்தை இறக்குவதற்காக, மஹாவீரியர்களான நரநாராயணர்கள் இருவரும் தோன்றுவார்கள்" {என்று தங்கள் சாபத்தையும், சாபவிமோசனத்தையும் அவர்கள் தெரிவித்தனர்}.(22)

[7] நிருகனின் சாபவிமோசன நிகழ்வு ஹரிவம்சம், விஷ்ணு பர்வம் 172ஆம் அத்தியாயத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தம் 64ஆம் அத்தியாயத்தில் இந்நிகழ்வு விரிவாகக் கூறப்படுகிறது. சாம்பனும், யதுகுலச் சிறுவர்களும் வனத்தில் விளையாடிக் களைத்து தாகத்தால் ஒரு கிணற்றை அடைகின்றனர். அங்கே மலை போன்ற ஓர் ஓணானைப் பார்க்கின்றனர். அதை வெளியே எடுக்க முயன்றும் முடியாமல் கிருஷ்ணனிடம் தெரிவிக்கின்றனர். கிருஷ்ணன், தன் இடது கையால் தொட்டதும் ஓணான் தேவனாக மாறியது. கிருஷ்ணனிடம் தன் கதையைச் சொன்ன நிருகன், அந்தப் பிராமணர்களின் சாபத்தையும், அதற்கு விமோசனமாக இருவருக்கும் தலா ஒரு லக்ஷம் பசுக்களைக் கொடுக்க முன்வந்ததையும், அவர்கள் அதற்கு சம்மதிக்காததையும் கூறுகிறான். தான் இறந்தபோது, யமன், "உன் புண்ணியச் செயல்களுக்கான பலன்களை முதலில் அனுபவிக்கிறாயா?" என்று கேட்டதாகவும், தான் பாபச் செயல்களுக்கான பலன்களையே முதலில் அனுபவிப்பதாகச் சொல்லிவிட்டு ஓணான் வடிவம் பெற்றதாகவும் கூறுகிறான். அதன் பிறகு தெய்வீக விமானத்தில் தேவலோகம் செல்கிறான். இராமன் இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மன்னன் நிருகன் இன்னும் ஓணானாகவே இருந்தான். கிருஷ்ணாவதாரத்தில் தான் அவனுக்கு விமோசனம் கிடைக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சாபத்தை வெளியிட்டு ஜுவரம் நீங்கிய {கவலை என்ற பிணி விலகிய} அவ்விரு பிராமணர்களும், பலமிழந்ததும், முதிர்ந்ததுமான பசுவை {வேறு} ஒரு பிராமணருக்குக் கொடுத்தனர்.(23) இவ்வாறு அந்த ராஜா {நிருகர்} மிகக் கொடிய அந்த சாபத்தை அனுபவித்தார்.(24) காரியத்தை வேண்டி வருபவர்களின் நெரிசல் ராஜர்களுக்கு தோஷமாக {குற்றமாக} அமையும். எனவே, காரியத்திற்காக வந்தவர்கள் சீக்கிரம் என்னை தரிசிக்க வரட்டும்.(25) சௌமித்ரே, நன்றாகச் செய்யப்பட்ட காரியத்தின் பலன் பார்த்திபனை {மன்னனை} விட்டு நீங்காது. எனவே, செல்வாயாக. காரியவான்களான {காரியம் வேண்டி வந்த} ஜனங்கள் காத்திருக்கிறார்கள்.(26)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 053ல் உள்ள சுலோகங்கள்: 26

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி