The sages of the Yamuna banks | Sarga-060 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனைக் காண யமுனைக் கரையிலிருந்து வந்த முனிவர்கள்; ராமன் அவர்களுக்குத் தந்த வாக்குறுதி; அவர்களின் வேண்டுதல்...
இவ்வாறு ராமலக்ஷ்மணர்கள் இருவரும் {ராமன், லக்ஷ்மணன் ஆகிய இருவரும்} உரையாடிக் கொண்டிருந்தபோது, குளிரும் இல்லாத, வெப்பமும் இல்லாத வசந்தத்தின் நிசி {வசந்தகால இரவு} வந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {தெளிவான விடியற்காலையில்}, முற்பகலில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றியவனும், பௌரகார்யவித்துமான காகுத்ஸ்தன் தரிசனத்திற்காகச் சென்றான் {நகர மக்களின் காரியங்களை அறிந்தவனும், காகுத்ஸ்த வம்சத்தவனுமான ராமன் மக்களைக் காணச் சென்றான்}.(2)
பிறகு, சுமந்திரன் வந்து ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "இராஜரே, இந்த தாபஸர்கள் {தவசிகள்} தடுக்கப்பட்டு துவாரத்தில் {வாயிலில்} நிற்கின்றனர்.(3) நரவியாகரரே {மனிதர்களில் புலியே}, மஹாராஜரே, யமுனாதீரவாசிகளான {யமுனை ஆற்றங்கரையில் வசிப்பவர்களான} மஹரிஷிகள், பார்கவரான {பிருகு வம்சத்தைச் சேர்ந்த} சியவனரை முன்னிட்டுக் கொண்டு, பிரீதியுடன் கூடியவர்களாக ஆவலுடன் விரைந்து {அவசரமாக} உமது தரிசனத்தை வேண்டுகின்றனர்" {என்றான் சுமந்திரன்}.(4)
அவனது அந்த வசனத்தைக் கேட்டு, தர்மவித்தான {தர்மத்தை அறிந்தவனான} ராமன், "பார்கவரை {சியவனரை} முதன்மையாகக் கொண்ட மஹாபாக்யவான்களான துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} உள்ளே பிரவேசிக்கட்டும்" {என்று} கூறினான்.(5)
வாயிற்காப்போனோ, ராஜனின் ஆணையை முன்னிட்டு, தலைக்குமேல் கைகூப்பியவனாக, அணுகுவதற்கு மிக அரியவர்களான தாபஸர்களை {அந்த தவசிகளை} உள்ளே பிரவேசிக்கச் செய்தான்.(6) தங்கள் தேஜஸ்ஸால் ஒளிர்ந்து கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான, மஹாத்மாக்களான தாபஸர்கள் ராஜபவனத்திற்குள் {அரசமாளிகைக்குள்} பிரவேசித்தனர்.(7) அந்த துவிஜர்கள், சர்வ தீர்த்தங்களின் நீரால் புனிதமாக்கப்பட்ட பூர்ண கலசங்களையும், ஏராளமான பழங்களையும், கிழங்குகளையும் எடுத்துக் கொண்டு ராமனுக்குக் கொண்டு வந்தனர்.(8)
இராமனோ, பிரீதியை முன்னிட்டு, சர்வ தீர்த்த நீர்களையும், விதவிதமான பழங்களையும் {கிழங்குகளையும் என}, அவை அனைத்தையும் பெற்றுக் கொண்டான்.(9) மஹாபாஹு {பெருந்தோள்களை உடைய ராமன்}, அந்த மஹாமுனிவர்கள் அனைவரிடமும், "இந்த முக்கிய {சிறந்த} ஆசனங்களில் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப அமர்வீராக" {என்று} சொன்னான்.(10)
இராமனுடைய பேச்சைக் கேட்ட அந்த சர்வ மஹரிஷிகளும், அழகியவையும், காஞ்சனத்தாலானவையுமான புல்லாசனங்களில் {பொன்னாலானவையும், தர்ப்பை விரிக்கப்பட்டவையுமான முனிவர்களுக்கான ஆசனங்களில்} அமர்ந்தனர்.(11)
பரபுரஞ்ஜயனான ராகவன் {பகைவரின் நகரங்களை வெல்பவனும், ரகு வம்சத்தவனுமான ராமன்}, அங்கு அமர்ந்திருந்த ரிஷிகளைக் கண்டு, பணிவான நன்மனத்துடன் கைகூப்பியவனாக {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(12) "நீங்கள் வந்த காரியம் {நோக்கம்} என்ன? சமாஹிதத்துடன் கூடிய {ஒரு மனப்பட்டவனான} நான் செய்ய வேண்டியது என்ன?[1] மஹரிஷிகளால் ஆணையிடப்பட வேண்டிய நான், உங்கள் சர்வ விருப்பங்களையும் சுகமாக {மகிழ்ச்சியுடன்} நிறைவேற்றுவேன்.(13) இந்த சகல ராஜ்ஜியமும், ஹிருதயத்தில் நிலைத்துள்ள ஜீவிதமும் {என் உயிரும் என}, என்னுடைய இவை அனைத்தும் துவிஜர்களின் பொருட்டே {இரு பிறப்பாளர்களுக்காகவே உள்ளவை என்பதை} உங்களுக்கு சத்தியமாகக் கூறுகிறேன்" {என்றான் ராமன்}.(14)
[1] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 844ம் பாடல் பின்வருமாறு:பொருத்திகழ் வாயில் காப்போன்போய் அவண் விடுப்பப் புக்கவிருத்தராம் முனிவர்தம்மை விதிமுறைஅருச்சித்து ஏதும்அருத்தி மாதவத்துக்கு இப்போழ்துஅழிவு ஒன்றும் இல்லையே என்றுதிருத்திகழ் மார்பன் கூச் சிதைவு இலாதஅவர்கள் சொல்வார்.பொருள்: தனக்குத்தானே ஒப்பாகத் திகழ்கின்ற வாயிலைக் காப்பவன் சென்று முனிவர்களை விதிப்படி அருச்சனை செய்துவிட்டு, விருப்பத்தோடு செய்கின்ற நும் பெரிய தவத்திற்கு இப்போது ஏதும் கெடுதி நேரவில்லையே? என்று திருமகள் விளங்கும் மார்பினனாகிய இராமன் வினவ, குற்றமற்றவர்களாகிய அம்முனிவர்கள் சொல்லலானார்கள்.
உக்கிர தபம் செய்பவர்களும், யமுனாதீரவாசிகளுமான அந்த ரிஷிகள், அவனது {ராமனின்} வசனத்தைக் கேட்டதும், {அந்த ரிஷிகளின் மத்தியில்} மஹத்தான சாதுகாரம் {நன்று நன்று என்ற பாராட்டொலி} எழுந்தது.(15) அந்த மஹாத்மாக்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தவர்களாக {பின்வருமாறு} கூறினர், "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, புவியில் இஃது[2] உனக்கு மட்டுமே பொருத்தமானது; வேறு எவருக்குமல்ல.(16)
[2] இஃது என்பது, இந்த சர்க்கத்தின் 14ம் சுலோகத்தில் ராமன் குறிப்பிடும், "தன் இராஜ்யத்தையும், உயிரையும், இன்னும் அனைத்தையும் இருபிறப்பாளர்களுக்காக அர்ப்பணிக்கும் மனப்பான்மை"யைக் குறிக்கும்.
இராஜனே, கடந்து சென்ற {முன்பு வாழ்ந்த} மஹாபலவான்களான பார்த்திபர்கள் பலர், காரியத்தின் கௌரவத்தை {காரியத்தின் பெருமை, முக்கியத்துவத்தை, கடினத்தன்மை ஆகியவற்றைக்} கருதி பிரதிஜ்ஞையை ஏற்க விரும்பவில்லை.(17) நீயோ, பிராமண கௌரவத்தால் {பிராமணர்களின் பெருமையை மதித்து}, அதன் காரணத்தை {விளைவை} கவனிக்காமல் இந்த ப்ரதிஜ்ஞையைச் செய்தாய் {உறுதிமொழியை ஏற்றாய்}. எனவே, இந்த மஹாபயத்திலிருந்து ரிஷிகளைக் காக்கும் கர்த்தாவாக {பெரும் ஆபத்திலிருந்து முனிவர்களைக் காப்பவனாக} நீ இருப்பாய். இதில் சந்தேகம் ஏதுமில்லை" {என்றனர் யமுனையாற்றங்கரை முனிவர்கள்}.(18)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 060ல் உள்ள சுலோகங்கள்: 18
| Previous | | Sanskrit | | English | | Next |
