Rama renounced Sita | Sarga-045 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் கருத்தைத் தம்பிகளிடம் சொன்ன ராமன்; சீதையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தருகில் விடுமாறு லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...
உள்ளம் வருந்திய அவர்கள் அனைவரும் ஆசனங்களில் அமர்ந்திருக்கையில், வாட்டமுறும் முகத்துடன் காகுத்ஸ்தன் {ராமன் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "அனைவரும் கேட்பீராக. உங்களுக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. மனத்தை வேறுவிதமாக்கிக் கொள்ள வேண்டாம். என் சீதையைக் குறித்து பௌரர்களிடம் {நகரமக்களிடம்} எத்தகைய கதை நிலவுகிறதோ {அதைக் கேட்பீராக}.(2) என்னைக் குறித்து, பௌர அபவாதமும் {நகர மக்களின் அவதூறும்}, அப்படியே ஜனபதர்களின் {நாட்டுப்புற மக்களின்} மிகப்பெரும்பழியும் நிலவுகிறது. அஃது என் மர்மங்களை {இதயத்தைப்} பிளக்கிறது[1].(3) நான் மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களின் குலத்தில் பிறந்தவனன்றோ? சீதையுங்கூட மஹாத்மாக்களான ஜனகர்களின் நற்குலத்தில் பிறந்தவளே.(4)
[1] பீபத்ஸா: இந்தச் சொல் அருவருப்பின் சுவையைக் குறிக்கிறது. சீதையைப் பற்றி மக்கள் பேசும் பேச்சுகள் எவ்வளவு தரம் தாழ்ந்ததாகவும், கேட்பதற்கே அருவருப்பானதாகவும் இருந்தன என்பதை ராமன் இச்சொல்லின் மூலம் வெளிப்படுத்துகிறான். மர்மணி க்ருந்ததி: 'மர்மம்' என்பது உடலின் மிக முக்கிய உயிர்நிலைகளைக் குறிக்கும். அம்புகள் பாய்ந்து உடலைத் துளைப்பதைக் காட்டிலும், அவதூறான இந்த வார்த்தைகள் தன் இதயத்தின் மிக மென்மையான மர்மக் கதவுகளைக் கத்தியைக் கொண்டு அறுப்பது போன்ற வலியைத் தருகிறது என இங்கே ராமன் புலம்புகிறான்.
சௌம்யா {மென்மையானவனே லக்ஷ்மணா}[2], ஜனங்களற்ற தண்டகத்தில் ராவணனால் சீதை எவ்வாறு அபகரிக்கப்பட்டாள், மேலும் அவனும் {ராவணனும்} என்னால் {எவ்வாறு} முற்றிலும் அழிக்கப்பட்டான் என்பதை நீ அறிவாய்.(5) அங்கே {லங்கையிலேயே} ஜனகரின் மகளை {சீதையைக்} குறித்து, "இங்கே வசித்த இந்த சீதையை {என்} புரிக்கு {அயோத்திக்கு} எப்படிக் கூட்டிச் செல்வேன்?" {என்ற} புத்தி எனக்குப் பிறந்தது[3].(6) பிறகு, சௌமித்ரே, சந்தேகத்திற்கிடமின்றி உறுதியேற்பட சீதை நெருப்பில் பிரவேசித்தாள். உனக்குப் பிரத்தியக்ஷமாக {உன் கண் முன்னாலேயே} தேவர்களின் ஹவ்யவாஹனனும் {தேவர்களுக்கு ஹவிசைச் சுமந்து செல்லும் அக்னியும்}, ஆகாசகோசரனான {ஆகாயத்தில் சஞ்சரிப்பவனான} வாயுவும், "மைதிலி பாபமற்றவள்" என்று உரைத்தனர்.(7) முன்பு {லங்கையில் அன்று}, ஸுரர்கள் {தேவர்கள்}, சர்வ ரிஷிகள் ஆகியோரின் சந்நிதியில் {முன்னிலையில்} சந்திர, ஆதித்யர்களுங்கூட {சந்திரனும், சூரியனுங்கூட} ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையை} பாபமற்றவள் என்று புகழ்ந்துரைத்தனர்.(8) இலங்காத்வீபத்தில் {லங்கைத் தீவில்}, தேவ, கந்தர்வர்களின் சந்நிதியில் {முன்னிலையில்}, இவ்வாறு {சூரிய, சந்திர, அக்னி, வாயு சாட்சியங்களால்} சுத்த சமாசாரங்கள் {மாசற்ற ஒழுக்கம்} உடையவள் {சீதை} மஹேந்திரனால் என் கைகளில் ஒப்படைக்கப்பட்டாள்.(9)
[2] இராமன் இங்கே லக்ஷ்மணனையே 'சௌம்ய' (அன்பானவனே/அழகிய குணமுடையவனே) என்று அழைக்கிறான். ஏனெனில், தண்டகாரண்யத்தில் சீதை கடத்தப்பட்டபோதும், ராவண வதத்தின்போதும் ராமனுடன் நிழல் போல உடனிருந்த சாட்சி லக்ஷ்மணன் மட்டுமே ஆவான். மேலும் 7ம் சுலோகத்தில் நேரடியாகவே சௌமித்ரி {சுமித்திரையின் மகனே} என்றும் ராமன் அழைக்கிறான்.
[3] நாட்டு மக்களுக்கு இப்போது ஏற்படும் அதே வெறுப்பு, யுத்த காண்டம் 115ம் சர்க்கம், 20, 21ம் சுலோகங்களில் ராமனிடமே வெளிப்பட்டது. "ராவணனின் அங்கத்தில் {மடியில்} இருந்தவளும், {அவனது} துஷ்டக் கண்களால் பார்க்கப்பட்டவளுமான உன்னை மீண்டும் எப்படி ஏற்றுக் கொள்வேன்? புகழ் என்னால் மீட்கப்பட்டது. அந்த அர்த்தத்திற்காகவே என்னால் நீ வென்றெடுக்கப்பட்டாய். எனக்கு உன்னை அரவணைக்கும் பற்று இல்லை. யதேஷ்டமாக {உன் விருப்பத்திற்கேற்றவாறு} இங்கிருந்து நீ செல்வாயாக" என்றே ராமன் அங்கே சீதையிடம் சொல்கிறான்.
என் அந்தராத்மாவும் சீதையை சுத்தத்தில் புகழ்பெற்றவளாக அறிந்திருக்கிறது. பிறகு வைதேஹியை ஏற்றுக் கொண்டு அயோத்திக்கு நான் வந்தேன்.(10) என்னுடைய ஹிருதயத்திலோ பெரும் வாதமும் {பழியும்}, சோகமும் நிலவுகிறது. அப்படியே, பௌராபவாதமும் {நகர மக்களின் அவதூறும்}, ஜனபதர்களுடையதும் {நாட்டுப்புற மக்களின் அவதூறும்} மிகப் பெரியதாக நிலவுகிறது.(11) உலகில் எந்த பூதத்தின் {உயிரினத்தின்} அபகீர்த்தி {அவப்பெயர்} பாடப்படுகிறதோ, எவ்வளவு {காலம்} பழிச்சொல் பேசப்படுகிறதோ {அவ்வளவு காலமும் அந்த பூதமான} அவன் அதமமான உலகங்களை {கீழான நரகங்களை} அடைகிறான்.(12) அபகீர்த்தி தேவர்களால் நிந்திக்கப்படுகிறது. கீர்த்தி உலகங்களில் பூஜிக்கப்படுகிறது. பிறகு, சிறந்த மஹாத்மாக்கள் அனைவரின் முயற்சியும் கீர்த்தியின் பொருட்டே {அமைகிறது}.(13)
புருஷரிஷபர்களே {மனிதர்களில் காளைகளே}, அபவாத பயத்தால் {அவப்பெயரின் அச்சத்தால்} பீதியடையும் நான் ஜீவிதத்தையோ, உங்களையோ கூட துறப்பேன்; ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைத் துறப்பேன் எனச்} சொல்லவும் வேண்டுமோ?(14) அதனால், சோக சாகரத்தில் விழுந்தவனாக நீங்கள் என்னைப் பார்ப்பீராக. இதைக்காட்டிலும் அதிக துக்கத்தை எந்த பூதத்திலும் {உயிரினத்திலும்} நான் பார்க்கவே இல்லை.(15)
சௌமித்ரே {லக்ஷ்மணனே}, நாளை பிரபாதத்தில் {அதிகாலையில்} சுமந்திரரால் நடத்தப்படும் ரதத்தில் ஏறிக் கொண்டு, சீதையை ஏற்றிக் கொண்டு எல்லைப்புறத்தில் {அவளை} இறக்கி விடுவாயாக.(16) பிறகு, கங்கையின் அக்கரையிலோ, தமசாதீரத்தை {தமசை நதிக்கரையைச்} சார்ந்த மஹாத்மா வால்மீகியின் திவ்ய ஒளி பொருந்திய ஆசிரமம் இருக்கிறது.(17) இரகுநந்தனா {லக்ஷ்மணா}[4], அங்கே ஜனமற்ற தேசத்தில் {மனித நடமாட்டமில்லாத இடத்தில்} இவளைக் கைவிட்டு சீக்கிரம் வருவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. என் வசனத்தை நிறைவேற்றுவாயாக.(18)
[4] ரகுநந்தன: ராமன் தன் தம்பியைப் பெயரிட்டு அழைக்காமல் 'ரகு குலத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே' என்று அழைக்கிறான். இரகு வம்சத்தின் தர்மத்தையும், குலப் புகழையும் காப்பதற்காகத் தான் எடுத்துள்ள இந்த முடிவை உணர்ச்சிவசப்படாமல் கடமையாக எண்ணி நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்த விளி லக்ஷ்மணனுக்கு நினைவூட்டும்.
சீதையைக் குறித்த இதில் {இவ்விஷயத்தில் நான்} எவ்வகையிலும் எதிர்த்துப் பேச வேண்டியவனல்லன். மேலும், சௌமித்ரே, இங்கே விசாரணைக்கான காரியம் {ஏதும்} இல்லை[5]. எனவே, நீ செல்வாயாக.(19) உன்னால் இது மறுக்கப்பட்டால் எனக்கு பரம அப்ரீதியே {எல்லையற்ற மனவருத்தமே ஏற்படும்}. நீங்கள் அனைவரும் என்னால் இரு புஜங்கள் மீதும், ஜீவிதத்தின் மீது சபதமே செய்யப்பட்டிருக்கிறீர்கள்.(20) யாவர் எவ்விதத்திலாவது என்னை இணங்க வைக்க மாற்று வாக்கியம் பேசுவார்களோ, அவர்கள் என் அபி இஷ்டத்தை {உயர்ந்த விருப்பத்தைத்} தகர்ப்பதால் நித்யம் அஹிதர்கள் {பகைவர்கள்} என்ற பெயருடையவர்களாவர்.(21) நீங்கள் என் சாசனத்தில் {கட்டளையில்} நிலைத்திருப்பவர்கள் என்றால் என்னை மதிப்பீராக. இன்று சீதை இங்கிருந்து அழைத்துச் செல்லப்படட்டும். என் வசனத்தை நிறைவேற்றுவாயாக[6].(22) "கங்காதீரத்தில் ஆசிரமங்களை நான் பார்ப்பேனாக" என்று முன்பு இவளால் நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அவளுடைய இந்த விருப்பமும் பூர்த்தி செய்யப்படட்டும்" {என்றான் ராமன்}.(23)
[5] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 731ம் பாடல் பின்வருமாறு:ஓதநீர் வேலை உலகு உளோர் இல்லதுஉளது எனில் உள்ளது ஆம் உள்ளதுயாதொரு பொருளை இல்லை என்றுஉரைக்கில் இல்லையாம் ஈது உலகியற்கைஆதலால் அவளை அருந்தவத்தோர்கள்ஆச்சிரமத்து அயல் விடுத்தும்ஈது நான் துணிந்த காரியம் இனி வேறுஎண்ணுவது ஒரு பொருள் இல்லைபொருள்: அலைகளையுடைய நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தில் உள்ளவர்கள், இல்லாத ஒரு பொருளை உளது என்று ஒருமித்துச் சொல்வாராயின் உள்ளதாகவே கொள்ளப்படும். உள்ளதாகிய ஒருபொருள் இல்லை என்று அவ்வுலகத்தார் ஒருமித்துச் சொல்வாராயின் இல்லையாகிவிடும். இது உலக இயற்கை. ஆதலால் அச் சீதையை அரிய தவ முனிவர்களின் ஆச்சிரமத்துக்கருகில் கொண்டுபோய் விடுவாயாக. இது நான் சிந்தித்துத் துணிந்த காரியம் ஆகும். இனி, இதற்கு வேறாக எண்ணக்கூடியது ஒன்றும் இல்லை.
[6] இராமன் தன் தம்பிகள் மூவரையும் நோக்கி, "நீங்கள் என் ஆணைக்குக் கட்டுப்பட்ட தம்பிகள் என்றால் என் முடிவுக்கு மதிப்பளியுங்கள்" என்று பொதுப்படையாகவும், அடுத்த வரியிலேயே லக்ஷ்மணனை மட்டும் ஒருமையில் அழைத்து, "இன்றே சீதையை இங்கிருந்து அழைத்துச் சென்று என் வார்த்தையை நிறைவேற்று" என்றும் கட்டளையிடுகிறான்.
அந்த தர்மாத்மா, இவ்வாறு கூறிவிட்டு, கண்ணீரால் மறைந்த அனனம் {முகம்} உடையவனாக, பிராதாக்களால் {தம்பிகளால்} சூழப்பட்டவனாக {அந்தப்புரத்திற்குள்} பிரவேசித்தான்.(24) சோகத்தால் பற்றப்பட்ட ஹிருதயத்தை {மனத்தைக்} கொண்டவனாக, திவிபம் {யானை} போலப் பெருமூச்சுவிட்டான்.(25)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 045ல் உள்ள சுலோகங்கள்: 25
| Previous | | Sanskrit | | English | | Next |
