Rama is Vishnu | Sarga-051 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற விஷ்ணு; பிருகு முனிவர் விஷ்ணுவுக்கு அளித்த சாபம்; "விஷ்ணுவே ராமனாகப் பிறந்தான்" என துர்வாசர் சொல்வது...
அவ்வாறு மஹாத்மாவான லக்ஷ்மணனால் தூண்டப்பட்ட சூதன் {சுமந்திரன், துர்வாச} ரிஷியால் கூறப்பட்ட அந்த வாக்கியத்தை {பின்வருமாறு} உரைக்கத் தொடங்கினான்:(1) "முன்பு அத்ரி புத்திரரும் {அத்ரி முனிவரின் மகனும்}, பெயரால் துர்வாசருமான {துர்வாசர் என்றழைக்கப்படுபவருமான} மஹாமுனிவர்[1], புண்ணியமான வசிஷ்டரின் ஆசிரமத்தில் வார்ஷிக்யத்திற்காக {சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதற்காகத்} தங்கியிருந்தார்[2].(2) மஹாதேஜஸ்வியும், பெரும் புகழுடையவருமான உம் பிதா {தசரதர்}, மஹாத்மாவான புரோஹிதரை {வசிஷ்டரைக்} காண விரும்பி அந்த ஆசிரமத்திற்கு தாமே[3] சென்றார்.(3) அவர் {தசரதர்}, சூரியனுக்கு ஒப்பாக, தேஜஸ்ஸால் பிரகாசிப்பவரைப் போன்ற மஹாமுனிவர் {துர்வாசர்}, வசிஷ்டரின் இடது பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.(4) அவர் பாத்யத்தாலும் {பாதங்களைக் கழுவுவதற்கான நீராலும்}, பழ, மூலங்களாலும் {கனி, கிழங்குகளாலும் உபசரிக்கப்பட்டு}, முனிவர்களுடன் சேர்ந்து {அங்கே} வசித்தார்.(5)
