Saturday, 8 August 2026

நாரதரும் பர்வதரும் | சர்க்கம் – 054 (19)

Narada and Parvata | Sarga-054 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நிருகராஜன் சாபத்தை அனுபவித்த வகையை லக்ஷ்மணனிடம் சொன்ன ராமன்...

குழி அமைக்க ஆணையிடும் மன்னன் நிருகனும் அமைக்கப்பட்ட குழியும்

பரமார்த்தவித்தான {உயர்ந்த பொருளை அறிந்தவனான} லக்ஷ்மணன், ராமனுடைய உரையைக் கேட்டுக் கைகூப்பியவனாக, ஒளிரும் தேஜஸ்ஸுடன் கூடிய ராகவனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்தரே {ராமரே}, அல்ப அபராதத்திற்கு {சிறிய குற்றத்திற்கு}, ராஜரிஷியான நிருகருக்கு இரு துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால் அளிக்கப்பட்ட} இத்தகைய சாபம் மற்றொரு மஹா யமதண்டத்தைப் போன்றதாகும்.(2) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாபத்துடன் கூடிய தம் நிலையைக் கேட்டு, ராஜா நிருகர் குரோதத்தால் நிறைந்திருந்த அவ்விரு துவிஜர்களிடம் என்ன சொன்னார்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(3)

இலக்ஷ்மணனால் இவ்வாறு கூறப்பட்டதும் ராகவன் மீண்டும் {பின்வருமாறு} கூறினான், "சௌம்யா {மென்மையானவனே}, பூர்வத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா எவ்வாறு இருந்தார் {என்பதைக்} கேட்பாயாக.(4) பிறகு, அந்த நிருகர், விப்ரர்கள் இருவரும் {தங்கள்} பாதையில் சென்றுவிட்டதை அறிந்தபோது[1], சர்வ மந்திரிகளையும், புரோஹிதர்களுடன் கூடிய நைகமர்களையும் {வேத அறிஞர்களையும்} அழைத்தார்.(5) துக்கத்தால் சூழப்பட்டிருந்த ராஜா நிருகர், அவர்களிடமும், சர்வ பிரகிருதிகளிடமும் {கீழ்ப்படியும் மக்கள் அனைவரிடமும் பின்வருமாறு} கூறினார், "சமாஹிதத்துடன் {ஒருமுகப்பட்ட அமைதியுடன்} எனக்குச் செவிசாய்ப்பீராக.(6) எனக்கு மஹத்தான பயத்தை அளித்துவிட்டு, பத்ரர்களாகவும் {மங்கலமானவர்களாகவும்}, அநிந்திதர்களாகவும் {நிந்திக்கத்தகாதவர்களாகவும்}, வாயு பூதமாகி, திரிபுவனங்களுக்கும் {காற்றின் வடிவை அடைந்து, மூவுலகங்களுக்கும்}  சென்ற இருவரும் நாரதரும், பர்வதருமே {ஆவர்}.(7) 

[1] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 801ம் பாடல் பின்வருமாறு:

போய் இருவரும் அக்கோவைப் புரைஅறு தவத்தின் மிக்க
தூயமா முனிவற்கு ஈந்து தொன்று காரியத்தில் போனார்
ஆய மன்னவனும் கோம்பி ஆகி ஆழ்கிணற்றில் வீழ்ந்தான்
தேயம் நாள்தொறும் நாடாத் திறல் மன்னன் கேடு ஈது என்றான்

பொருள்: "பசுவின் பொருட்டு விவாதித்த இரு வேதியர்களும் அரண்மனையிலிருந்து புறப்பட்டுப் போய் அந்தப் பசுவைக் குற்றமில்லாத தவத்தினால் சிறந்த தூய மாமுனி ஒருவர்க்குக் கொடுத்து விட்டுத் தம் பழைய வேலைக்குப் போனார்கள்; அந்த நிருகனாகிய அரசனும் ஓணான் ஆகி ஆழ்ந்துள்ள கிணற்றில் வீழ்ந்தான்; நாட்டின் நடப்பினை நாள்தொறும் ஆராயாத திறமையுடைய மன்னன் கேடு இதுவாகும்" என்று கூறினான் {ராமன்}. 

மேலும், 7ம் சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, இம்முனிவர்கள் நாரதரும் பர்வதரும் என்று நிருகன் கூறியதாக ஒட்டக்கூத்தர் குறிப்பிடவில்லை.

இந்தக் குமாரன், வசு என்ற பெயருடையவன். அந்த தேவன் இன்று அபிஷேகிக்கப்படட்டும் {முடிசூட்டப்படட்டும்}. எது சுகமான ஸ்பரிசத்தை உடையதோ, பிராமணர்களிடமிருந்து வெளிப்பட்ட சாபத்தை எங்கே நான் அழிப்பேனோ, {அந்தக்} குழி[2] என் சில்பிகளால் அமைக்கப்படட்டும்.(8) மழையில் இருந்து காக்க ஒரு குழி, பனியில் இருந்து காக்க மற்றொன்று, அவ்வாறே கோடையில் இருந்து காக்க ஒன்றும் {என மூன்று குழிகள் ஒவ்வொன்றும்} சுகமான ஸ்பரிசம் உடையதாக  சில்பிகளால் அமைக்கப்படட்டும்.(9) பழங்களையுடைய எந்த விருக்ஷங்களும், புஷ்பங்களுடைய எந்த லதைகளும் {கொடிகளும்}, நிழலைத் தரக்கூடிய பலவிதமான புதர்களும் மறுபடியும் வளர்க்கப்படட்டும்.(10) திசைகளெங்கும் ரமணீயமாக {அழகுள்ளவையாக} குழிகள் அமைக்கப்படட்டும். {சாபத்திற்குரிய} காலத்தின் முடிவு எதுவரையோ, {அதுவரை} இங்கே சுகமாக வசித்திருப்பேன்.(11) அவற்றில் {அந்தக் குழிகளில்} நித்யம் சுகந்தமான புஷ்பங்கள் அமைக்கப்படட்டும். என்னைச் சுற்றி  எவ்வாறோ {எவ்வாறு அமையுமோ}, அவ்வாறே ஒன்றரை யோஜனைக்கு {மலர்கள்} இருக்கட்டும்" {என்றார் நிருகர்}.(12)

[2] தர்மாலயப் பதிப்பில், "எனக்கு சுகமாய் வசிப்பதற்கேற்ற ஒரு குகை எது ஆகுமோ அது சில்பிகளால் நிருமிக்கப்படட்டும்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "சிற்பிகளை யுடனேவரவழைத்து யான் சுகமாக வசிப்பதற்கேற்றபடி சிறந்த குழியொன்று நிருமிக்குமாறு கட்டளையிடுக" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "கைதேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு, நான் வசிப்பதற்கு ஏற்ற, மென்மையான பொந்து செய்யச் சொல்லுங்கள்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பின் படி இங்கே அமைக்கப்படுவது குகை எனக் கொண்டால், ஹரிவம்சத்தில் மாந்தாதாவின் மகன் முசுகுந்தன், தேவாசுரப் போரில் ஈடுபட்ட களைப்பால், அவன் உறங்குவதற்கு இமய மலையில் குகை அமைத்து, அவனை விழித்தெழச் செய்பவன் அவனது பார்வை பட்டால் எரிந்து போவான் என்ற வரத்தை தேவர்கள் கொடுக்கின்றனர். பிறகு இமய மலைக் குகைக்குள் நுழைந்து, கிருஷ்ணனால் காணப்படும் வரை, அதாவது திரேதாயுகம் முதல் கலியுகத் தொடக்கம் வரை இரண்டு யுகங்கள் அங்கேயே உறங்கிக் கிடந்தான். இதை அறியாத காலயவனன் அந்தக் குகைக்குள் நுழைந்து முசுகுந்தனை மிதித்து எழுப்ப, அவனது பார்வை பட்டதும் எரிந்து மடிந்து போகிறான். பிறகு, முசுகுந்தன் கடுந்தபங்களில் ஈடுபட பதரிகாசிரமத்தை அடைகிறான். அங்கே இறந்த பிறகு, தேவலோகத்தை அடைகிறான். இந்தக் கதை ஹரிவம்சம், விஷ்ணு பர்வம் 114ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. முசுகுந்தன் வரத்தை அடைந்து 2 யுகங்கள் குகைக்குள் உறங்கிக் கிடந்தான். இங்கே மன்னன் நிருகனோ, நல்லது செய்தும், தன் கவனக்குறைவால் சாபத்தை அடைந்து 2 யுகங்கள் குழிக்குள் {குகைக்குள்} ஓணானாக மாறிக் கிடக்கிறான்.

இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, அவர் வசுவை {பின்வருமாறு} அறிவுறுத்தினார், "புத்திரா, தர்மநித்யனாக க்ஷத்ரதர்மத்தால் பிரஜைகளைப் பாதுகாப்பாயாக {எப்போதும் தர்மத்தில் நிலைத்தவனாக க்ஷத்திரிய தர்மப்படி குடிமக்களைப் பாதுகாப்பாயாக}.(13) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, அத்தகைய அபராதத்திலும் {சிறு குற்றத்திலும்} கூட, கோபத்துடனிருந்த துவிஜர்கள் இருவரால் எனக்கு சாபம் எவ்வாறு அளிக்கப்பட்டதோ, அஃது உனக்குப் பிரதியக்ஷமானதே {நேரடியாகத் தெரிந்ததே}.(14) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, புத்திரா, எவனால் நான் விசனத்திற்கு உள்ளாக்கப்பட்டேனோ {வேதனையடையச் செய்யப்பட்டேனோ}, அந்தக் கிருதாந்தன் குசலனாவான் {வினை முடிக்கும் காலன் வல்லவனாவான்}. என்னைப் பொருட்டாகக் கொண்டும் கூட, உடலுக்கு சந்தாபத்தை {வருத்தத்தை} ஏற்படுத்திக் கொள்ளாதே.(15) {மனிதன்} அடைய வேண்டியவற்றை மட்டுமே அடைகிறான்; செல்ல வேண்டியவற்றுக்கு மட்டுமே செல்கிறான்; துக்கங்களிலும் சுகங்களிலும் கூடப் பெற வேண்டியவற்றை மட்டுமே பெறுகிறான்.(16) வத்ஸா {குழந்தாய்}, பூர்வத்தில் வேறு பிறவியில் {நிகழ்ந்தவற்றைக் குறித்து} விசாதம் {வருத்தம்} கொள்ளாதே" {என்றான் நிருகன்}.(17) 

புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, லக்ஷ்மணா}, நிருபராக {மக்களைக் காப்பவராகப்} பெரும்புகழுடைய ராஜா {நிருகர்}, அங்கே மகனிடம் இவ்வாறு கூறிவிட்டு, {தாம்} வாசம் செய்வதற்கு நன்றாக அமைக்கப்பட்ட குழிக்குச் சென்றார்.(18) அப்போது, மஹாத்மாவான நிருபர் {மன்னர் நிருகர்}, மஹா ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட குழியில் இவ்வாறு பிரவேசித்து,[3]  இரு துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால்} கோபத்துடன் விடப்பட்ட சாபத்தை நிறைவேற்றினார் {உண்மையாக்கிக் கொண்டார்}" {என்றான் ராமன்}.(19)

[3] சென்ற 53ம் சர்க்கத்தின் [7]ம் அடிக்குறிப்பில்  குறிப்பிடப்பட்ட பாகவதத்தின் கதைக்கு முற்றிலும் முரணாக, இங்கே இறக்காமல், யமனிடம் செல்லாமல், பாவ, புண்ணியச் செயல்களுக்குரிய பலனை எவ்வாறு அனுபவிப்பது என்று தேர்ந்தெடுக்காமல், அதே ஜன்மத்திலேயே நிருகன் அந்தக் குழிக்குள் நுழைகிறான். ஆனால் ஓணானாக மாறினான் என்பது, இங்கே [1]ம் அடிக்குறிப்பில் குறிப்பிடப்பட்ட ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டக் கூற்றைப் போல் சொல்லப்படவில்லை. இருப்பினும், குழிக்குள் பிரவேசித்து, சில காலத்திற்குப் பிறகு இறந்து, மீண்டும் அதே இடத்தில் உள்ள குழியில் ஓணானாகப் பிறந்ததாகக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.

உத்தர ராமாயணம் சர்க்கம் – 054ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி