Friendship forged with Madhu | Sarga-025 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வரங்களைப் பெற்ற இந்திரஜித்; கும்பீனசியைக் கவர்ந்து சென்ற மது; மதுவுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்; இந்திரனை வெல்ல கைலாசத்தில் இறங்கியது...
{அகஸ்தியர் ராமனிடம்}... கோரமான அந்த {தண்டக} வனத்தைக் கொடுத்துத் தன் பகினியை {சகோதரி சூர்ப்பணகையைத்} தேற்றிய பிறகு, அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மகிழ்ச்சியும், ஸ்வஸ்தமும் {நலமும் / நிம்மதியும்} அடைந்தான்.(1) பலவானான அந்த ராக்ஷசேந்திரன், பிறகு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிகும்பிலை என்ற பெயரைக் கொண்ட, லங்கையின் உத்தம உபவனத்தில் பிரவேசித்தான் {சிறந்த சோலையில் நுழைந்தான்}.(2) நூற்றுக்கணக்கான யூப ஆகீர்ணங்களால் {வேள்வித் தூண்களால்} நிறைந்தும், சௌம்யமான சைத்யங்களால் {அழகான வேள்வி மேடைகளால்} அலங்கரிக்கப்பட்டும், செழிப்புடன் {ஒளியுடன்} பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் போல, அங்கே நடந்து கொண்டிருக்கும் யஜ்ஞத்தை {வேள்வியை ராவணன்} கண்டான்.(3) கருப்பு மான் தோல் அணிந்தவனும், கமண்டலம், சிகை {குடுமி}, துவஜம் ஆகியவற்றுடன் கூடியவனும், பயத்தை உண்டாக்குபவனுமான தன் மகன் மேகநாதனை அப்போது அங்கே {இந்திரஜித்தை ராவணன் அந்த வேள்விச் சாலையில்} கண்டான்.(4)
