Shatrughna encounters Lavana | Sarga-068 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலவணன் வெளியே சென்றிருக்கும் தருணத்தில் கோட்டை வாயிலில் காத்திருந்த சத்ருக்னன்; திரும்பி வந்த லவணனைப் போருக்கு அழைத்தது...
அவர்கள் {முனிவர்கள்} கதைகளைச் சொல்லிக்கொண்டும், சுப ஜயத்தை {மங்கல வெற்றியை} விரும்பிக் கொண்டுமிருக்கையில் மஹாத்மா சத்ருக்னனுக்கு இரவு சீக்கிரம் கழிந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {களங்கமற்ற விடியல்காலையில்}, அந்தக் காலத்தில் {நேரத்தில்}, தீரனான அந்த ராக்ஷசன் ஆஹாரத்தை {உணவைத்} தேடும் எண்ணத்தால் தூண்டப்பட்டவனாகப் புரத்திலிருந்து {நகரத்திலிருந்து} வெளியேறினான்.(2) இதற்கிடையில், வீரனான சத்ருக்னன் யமுனை நதியைக் கடந்து, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன்} மதுபுரத்வாரத்தில் நின்றான் {மதுபுரியின் வாயிலில் லவணனை எதிர்பார்த்து நின்றான்}.(3)


