Friday, 28 August 2026

சத்ருக்னனின் பயணத் தொடக்கம் | சர்க்கம் – 064 (18)

Shatrughna’s Journey Begins | Sarga-064 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணாசுரனை அழிக்க சத்ருக்னனை அனுப்பி, படை, செல்வம், வீரர்களுடன் செல்லவும், மதுராவை தர்மத்துடன் ஆட்சி செய்யவும் அறிவுறுத்திய ராமன்...

சத்ருக்னன் தன் அன்னையரிடமும் தன்னுடன் பிறந்தோரிடமும் குருவிடமும் விடைபெறுவது

இவ்வாறு கூறி, காகுத்ஸ்தனை {ககுத்ஸ்தனின் வழித்தோன்றலான சத்ருக்னனை} மீண்டும் மீண்டும் புகழ்ந்த ரகுநந்தனன் {ரகு வழித் தோன்றல்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான ராமன்}, மீண்டும் {பின்வரும்} மற்றொரு வாக்கியத்தைச் சொன்னான்:(1) "புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நான்காயிரம் அஷ்வங்களும் {குதிரைகளும்}, இரண்டாயிரம் ரதங்களும் {தேர்களும்}, நூறு உத்தம கஜங்களும் {சிறந்த யானைகளும்} இதோ.(2) {இவற்றின்} இடையில் நானாவித பண்யங்களால் {பல்வேறு விற்பனைப் பொருள்களால்} அலங்கரிக்கப்பட்ட பணவீதிகளும் {கடைத்தெருக்களும்}, அதேபோல நடநர்த்தகர்களும் {நடிகர்களும், நடனக் கலைஞர்களும்} காகுத்ஸ்தனை {சத்ருக்னனைப்} பின்தொடர்ந்து செல்லட்டும்.(3) புருஷரிஷபா, சத்ருக்னா, ஹிரண்யமான ஸுவர்ணத்தின் {ஒளிமிக்க, நல்ல நிறமுள்ள தங்கத்தின்} ஒரு நியுதத்தை[1] எடுத்துக் கொண்டு, போதுமான தனமும், வாகனங்களும் உடையவனாகச் செல்வாயாக.(4) 

[1] தர்மாலயப் பதிப்பில், "புருஷோத்தம, ஹே சத்துருக்கின! வேண்டியமட்டும் தனங்களையும் வாஹனங்களையுமுடையவனாய் தங்க நாணயத்தின் பத்தாயிரம் கோடிகளையும் எடுத்துக் கொண்டு போ" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "கோடிக்கணக்கான சுவர்ணமும், அளவற்ற பசுக்களும் வாஹனங்களும், கொழுத்துக் களித்த போர்வீரர்களும் உனக்கு விசேஷமாக வேண்டுவனவன்றோ?" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "புருஷோத்தமனே! பத்து லட்சம் பொற்காசுகளை எடுத்துக் கொள். மற்றும் தேவையான பிற பொருள்களையும் வாகனங்களையும் உன்னுடன் கொண்டு செல்வாயாக" என்றிருக்கிறது. இன்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் மன்மதநாததத்தர் பதிப்பில், "நீ நிஜுதமளவு தங்க, வெள்ளி நாணயங்கள், தேவையான செல்வம், வாகனங்களுடன் புறப்பட்டுச் செல்வாயாக" என்றிருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பில், "பத்தாயிரம் பொற்காசுகளை எடுத்துக் கொண்டு, போதுமான அளவு செல்வத்துடனும், வாகனங்களுடனும் புறப்பட்டுச் செல்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "நான் உனக்குத் தங்க, வெள்ளி நாணயங்களைத் தருகிறேன். ஆயுதங்கள், உணவு, மேலும் பயணத்திற்கான வாகனங்கள் ஆகியவற்றைச் சேகரித்துக்கொண்டு, தேவையான அளவு தங்கத்துடன் புறப்படுவாயாக" என்றிருக்கிறது. மூலத்தில் "ஹிரண்யஸ்ய ஸுவர்ணஸ்ய நியுதம் ஆதாய" என்றிருக்கிறது. இதன் நேரடி மொழியாக்கம், "ஹிரண்யத்தின், ஸுவர்ணத்தின் ஒரு நியுதத்தை எடுத்துக் கொள்" என்பதாகும். ஹிரண்யம் என்பது தங்கத்தின் ஒளி மற்றும் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பெயர்; ஸுவர்ணம் என்பது அதன் சிறந்த நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர். நியுதம் என்பதில் பல்வேறு பதிப்புகளும் பல்வேறு கணக்குகளைத் தருகின்றன. இணைய வழி சம்ஸ்கிருத அகராதியில்  {sanskritdictionary.comல்} "1. பத்து லட்சம் | 2. ஒரு லட்சம் | 3. பத்தாயிரம் கோடி" என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, "நியுதம்" என்ற சொல்லுக்கு, அது பயன்படும் இடத்திற்கு ஏற்ப பொருள் தரும் எண்ணிக்கை மாறும் போல் தெரிகிறது. இங்கு படை மற்றும் அரச செல்வம் வழங்கும் சூழல் என்பதால், "பத்து இலட்சம்” என்று கொள்ளலாம்.

வீரா, நகேத்தமா {மலைகளில் சிறந்தவனே, சத்ருக்னா}[2], நன்கு பராமரிக்கப்பட்டதும், மகிழ்ச்சியும் {வீரர்களின்} செழித்த நலமும் கொண்டதும், அடக்கமானதுமான பலத்தை {படையை}, இன்மொழிகளாலும், பரிசுகளாலும் மகிழ்விப்பாயாக.(5) இராகவா {ரகுவின் வழித்தோன்றலே, சத்ருக்னா}, நீ எங்கு இருக்கிறாயோ, அங்கே அர்த்தங்கள் {செல்வங்கள்}, தாரங்கள் {மனைவியர்}, பந்துக்கள் {உறவினர்கள்} நிலைக்காமல் இருந்தாலும் பிரீதிமிக்க பிருத்யவர்கம் இருக்கும் {நெருக்கடியில் உறுதுணையாக நிற்கும் பெரும் மகிழ்ச்சியுடைய பணியாளர்க் கூட்டம் நிலைத்திருக்கும்}.(6) பிறகு, மகிழ்ச்சியுள்ள ஜனங்கள் நிறைந்த மஹத்தான சமூவை {பெரும்படையைப்} புறப்படச் செய்து, நீ ஏகனாகவும் {தனியாகவும்}, தனுஷ்பாணியாகவும் {கையில் வில்லுடனும்} மதுவின் வனத்திற்குச் செல்வாயாக.(7) எவ்வாறு மதுவின் புத்திரன் லவணன், யுத்த விருப்பத்துடன் செல்லும் உன்னை அறிந்து கொள்ளாதிருப்பானோ, அவ்வாறே சந்தேகத்திற்கு இடமளிக்காமல் செல்வாயாக.(8)

[2] இங்கு ஏதோ பாடபேதம் அல்லது எழுத்துப் பிழை ஏற்பட்டிருக்கலாம். விக்கியிலுள்ள மூலத்தில் "நகேத்தம" என்றே உள்ளது. அதற்கு "மலைகளில் சிறந்தவனே" என்பது பொருள். ஆனால் இது சத்ருக்னனுக்கான வழக்கமான அடைமொழியாக அறியப்படவில்லை. நாம் ஒப்பிடும் தமிழ் மொழிபெயர்ப்புகள் சூழலுக்கு ஏற்ப இதை "புருஷோத்தமா", "இளஞ்சிங்கமே" போன்ற வீர அழைப்பாகக் கொண்டுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்புகள் இதை முற்றாகத் தவிர்த்துள்ளன.

புருஷரிஷபா, அவனுக்கு {லவணனுக்கு} வேறு மிருத்யு எதுவும் இல்லை. எவன் அவனை தரிசிக்கச் செல்கிறானோ, அவனே லவணனால் கொல்லப்படுவான்[3].(9) சௌம்யா {மென்மையானவனே}, கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வந்ததும், துர்மதியுடைய இந்த லவணனை நீ கொல்வாயாக. அதுவே அவனுக்குரிய {அவன் முடிவுக்குரிய} காலமாகும்.(10) கோடைக்காலத்தின் இறுதியில் ஜாஹ்நவீஜலத்தை {நீர் குறைந்திருக்கும்போது கங்கை நீரை} எவ்வாறு கடப்பார்களோ, {அவ்வாறே} மஹரிஷிகளை முன்னிறுத்திக் கொண்டு உன் சைனிகர்கள் {படைவீரர்கள்} செல்லட்டும்.(11) அங்கே நதிதீரத்தில் சர்வ பலத்தையும் ஸ்தாபித்து, சமாஹிதனாகவும், லகுவிக்ரமனாகவும், துனுசுடன் கூடியவனாகவும் {ஆற்றங்கரையில் படை முழுவதையும் நிறுத்தி வைத்து, ஒருமுகப்பட்ட கவனமும் விழிப்புணர்வும் கொண்டவனாகவும், விரைவாகச் செயலாற்றுபவனாகவும், வில்லுடன் கூடியவனாகவும்} நீ முன்னால் செல்வாயாக" {என்றான் ராமன்}.(12)

[3] இங்கு “அவனுக்கு வேறு மிருத்யு எதுவும் இல்லை” என்பது லவணனின் அசாதாரண வலிமையைக் குறிக்கிறது. முந்தைய சுலோகத்தில் கூறியபடி, லவணன் சத்ருக்னனின் வருகையை அறியாத நிலையில் அவனை எதிர்கொள்வதே வெற்றிக்கான வழியாக இருப்பதால் சத்ருக்னனின் வருகையை லவணன் அறிந்து கொள்ளாத வகையில் செல்லுமாறு ராமன் இங்கே அறிவுறுத்துகிறான்.

இராமனால் இவ்வாறு கூறப்பட்ட சத்ருக்னன், மஹாபலவான்களான அந்த சேனாமுக்யர்களை {படையின் முக்கிய வீரர்களைத்} திரட்டிய பிறகு, அவர்களிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(13) "இவை உங்களுக்கு ஏற்படுத்திய இருப்பிடங்கள். எவருக்கும் இடையூறின்றி, விரோதமின்றி {முரண்பாடின்றி} அந்தந்த இடங்களில் தங்குவீராக" {என்றான் சத்ருக்னன்}.(14)

அவ்வாறு அவர்களுக்கு அறிவுறுத்தி, மஹத்தான பலத்தை {பெரும்படையைப்} புறப்படச் செய்து, கௌசல்யையையும், சுமித்ரையையும், கைகேயியையும் வணங்கினான் {சத்ருக்னன்}.(15) சத்ருதாபனனான {பகைவரை அழிப்பவனான} சத்ருக்னன், ராமனை பிரதக்ஷிஞ்செய்து {வலம் வந்து}, சிரத்தால் {தலையால்} பணிந்து வணங்கினான். பிறகு ராமனால் அனுமதிக்கப்பட்டான்.(16) மஹாபலவானும், பிரயதாத்மவானுமான {பணிவான தூய மனம் கொண்டவனுமான} சத்ருக்னன், கைகளைக் கூப்பி லக்ஷ்மணனையும், பரதனையும், புரோஹிதரான வசிஷ்டரையும் பணிந்து வணங்கிய பின்னர், அவர்களையும் பிரதக்ஷிணஞ்செய்து புறப்பட்டுச் சென்றான்[4].(17) 

[4] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 862ம் பாடல் பின்வருமாறு:

பரதனைப் பதினால் ஆண்டு 
  பரமனைக் காவல்பூண்ட
விரதனை விளங்கு சோதி 
  வெய்யவன் குலத்தோர்க்கு என்றும்
வரதனாம் வசிட்டன் தன்னை 
  வணங்கி அவ்வஞ்சன் தன்னைச்
சரதம் நான் கொல்வென் என்று 
  சமைந்து சத்துருக்கன் போனான்

பொருள்: பரதனையும், பதினான்காண்டு இராமனாகிய பரமனைக் காவல் செய்து கொண்டிருந்த விரதமுடையவனாகிய இலக்குவனையும், எங்கும் விளங்குகின்ற ஒளியையுடையவனாகிய சூரியன் மரபில் தோன்றியவர்கட்கு எக்காலத்தும் வரந்தரும் குருவாகிய வசிட்டனையும் வணங்கிக் கொண்டு, "அந்த இலவணனாகிய வஞ்சகனை நான் நிச்சயம் கொல்வேன்" என்று உறுதிபூண்டு சத்துருக்கன் புறப்பட்டுப் போனான்.

இரகுவம்சவர்தனனான அவன் {ரகு வம்சத்தை வளர்ப்பவனான சத்ருக்னன்}, அப்போது கஜேந்திரங்கள் {சிறந்த யானைகள்}, வாஜிகள் {குதிரைகள்}, சிறந்த படைப்பிரிவுகளின் பெருங்கூட்டம் ஆகியவற்றால் நிறைந்த சேனையை {படையை} முன்னால் புறப்படச் செய்து, பிறகு நரேந்திரனின் {மனிதர்களின் தலைவனான ராமனின்} அருகில் ஒரு மாசம் தங்கியிருந்து, அதன்பிறகு புறப்பட்டுச் சென்றான்.(18)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 064ல் உள்ள சுலோகங்கள்: 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி