Valmiki again | Sarga-071 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மதுராவிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் வழியில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சத்ருக்னன்; வால்மீகியின் பாராட்டு; இராமகதையின் இனிய கானத்தைக் கேட்டது.
பிறகு, பன்னிரண்டாம் வருஷத்தில், சத்ருக்னன், அற்ப அளவிலான பணியாளர்களுடனும் பலத்துடனும் {படையுடனும்}, ராமனால் ஆளப்பட்ட அயோத்திக்குச் செல்ல விரும்பினான்.(1) பிறகு, அவன், மந்திரிகளை முன்னணியாகக் கொண்டவர்களையும், முக்கியப் படைத்தலைவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, சிறந்த ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, நூறு ரதங்களுடனும் சென்றான்.(2) பெரும்புகழுடைய அந்த ரகுநந்தனன் {ரகு வம்சத்தவரை மகிழ்விப்பவனான சத்ருக்னன்}, கணக்காக ஏழெட்டுத் தங்குமிடங்களில் {இரவுத் தங்கல்களில்} தங்கிச் சென்று, வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து வாசம் செய்தான்.(3) அந்தப் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான சத்ருக்னன்}, வால்மீகியின் பாதங்களை வணங்கிய பின்னர், முனிவரின் கையில் இருந்து பாத்யம், அர்க்கியம், ஆதித்யம் {விருந்தோம்பல்}[1] ஆகியவற்றை ஏற்றுக் கொண்டான்.(4) அந்த முனிவர் {வால்மீகி}, மஹாத்மாவான சத்ருக்னனுக்கு பலவகையான, மிக இனிய கதைகளை ஆயிரக்கணக்கில் கூறினார்.(5)


