The anointment of Shatrughna | Sarga-063 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சத்ருக்னனுக்கு அபிஷேகஞ் செய்வித்த ராமன், லவணாசுரனை வதைக்கும் உபாயத்தை அவனுக்கு விளக்கிச் சொன்னது...
இராமனால் இவ்வாறு கூறப்பட்டதும், வீரியசம்பன்னனான {வீரம் நிறைந்தவனான} சத்ருக்னன், பெரும் நாணத்தை அடைந்து, மெது மெதுவாக {தயக்கத்துடன் பின்வருமாறு} சொன்னான்:(1) "காகுத்ஸ்தரே {ககுத்ஸ்தரின் வழித்தோன்றலான ராமரே}, நரேஷ்வரரே {மனிதர்களின் தலைவரே}, இந்த விஷயம் அதர்மமெனக் கருதுகிறோம். மூத்தவர்கள் இருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது எவ்வாறு?(2) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, பாக்கியசாலியே, உமது சாசனம் {கட்டளை} அவசியம் செய்யப்பட வேண்டியதாகும். மேலும் சாசனம் {அரசக்கட்டளை} மீறமுடியாததாகும்.(3) வீரரே, உம்மிடம் இதை நான் கேட்டிருக்கிறேன்; மேலும் சுருதிகளிலும் {வேதங்களிலும்} நான் கேட்டிருக்கிறேன். மத்யமர் {நடுவில் பிறந்தவரான பரதர்} உறுதி கூறும்போது, அதற்கு என்னால் மறுமொழி கூறப்பட வேண்டியதில்லை.(4)
புருஷரிஷபரே, கோரமான கொடுஞ்சொல்லைக் கூறிவிட்டேன். "நான் போரில் லவணனைக் கொல்வேன்" என்று அவ்வாறு தவறாகக் கூறிய எனக்கு ஏற்பட்டதே இந்த துர்கதியாகும்[1][2].(5) மூத்தவர் கூறிய பிறகு மீண்டும் மறுமொழி கூறப்பட வேண்டியதில்லை. அஃது அதர்மத்துடன் கூடியதாகவும், பரலோகப் பலனற்றதாகவும் இருக்கும்.(6) காகுத்ஸ்தரே, மானதரே {மரியாதை அளிப்பவரே}, அத்தகைய நான், உமக்கு இரண்டாம் முறையாக மறுமொழி கூறப் போவதில்லை. இரண்டாவது முறையாக {மீண்டும்} தண்டனை என் மீது விழாதிருக்கட்டும்.(7) இராஜரே, புருஷரிஷபரே, காகுத்ஸ்தரே, ரகுநந்தனரே, நான் உமது விருப்பப்படி செயல்படுபவனாக இருக்கிறேன். எனக்காக அதர்மத்தை விலக்குவீராக[3]" {என்றான் சத்ருக்னன்}.(8)
[1] இங்கே “துர்கதி” என்பது அழிவைக் குறிப்பதல்ல. “துர்கதிஃ” {துன்பமான நிலை / கெட்ட விளைவு} என்றும், “துருக்தஸ்ய” {தவறாகக் கூறியவனுடைய} என்றும் கூறப்படுவது சத்ருக்னன் தன்னையே தாழ்த்திக் கூறிய சொற்களாகும். இராமனின் ஆணையைப் பெறும்போது தயக்கத்துடன் பேசியதையும், "நான் போரில் லவணனை வதைப்பேன்" என்று கூறியதையும் தகாத பேச்சாகக் கருதி, அவ்வாறு கூறியதன் விளைவாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகக் கூறுகிறான்.
[2] தர்மாலயப் பதிப்பில், "போரில் லவணனை நான் வதைக்கின்றேன் என்று சொல்லியது நிந்தனைக்குரியது. விஷமாய் முடிந்தது. ஹே புருஷோத்தம! சொல்லக்கூடாததை சொல்லிவிட்ட அந்த எனக்கு இந்த கஷ்டம் விளைந்தது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "லவணாசுரனை யடியேன் வதைக்கின்றேனென அடியேன் வாய்க்கொழுப்பன்றோ கூற நேரிட்டது? ஹே புருஷர்ஷப! அவ்வாறு மறுத்து மொழிந்ததன் பயனே இங்ஙனம் விபரீதமாக வந்து விளைந்தது போலும்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "என்னுடைய வாயிலிருந்து, "நானே சென்று லவணனைக் கொல்கிறேன்" என்று பதற்றமான சொல் வெளிவந்திருக்கக் கூடாது. அப்படி அநாகரிகமாகக் கூறியதால்தான், இப்படிப்பட்ட (பட்டம் சூட்டிக்கொள்ளுதல் என்ற) பரிதாபநிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
[3] இங்கு ராமன் சத்ருக்னனுக்குப் பொறுப்பு வழங்குவது “அதர்மம்” என்று குறிப்பிடப்படவில்லை. மூத்தவர்கள் இருக்கையில் இளையவனுக்கு அபிஷேகம் செய்வது என்ற சத்ருக்னனின் கருத்து முன்வைக்கும் தர்மச் சிக்கலே "அதர்மம்" என்று குறிப்பிடப்படுகிறது.
சூரனும், மஹாத்மாவுமான சத்ருக்னன் இவ்வாறு கூறியபோது, மகிழ்ச்சியடைந்த ராமன், பரதனையும், அவ்வாறே லக்ஷ்மணனையும் {நோக்கிப் பின்வருமாறு} சொன்னான்:(9) "சமாஹிதத்துடன் {ஒருமுகப்பட்ட கவனத்துடன்} இருப்பீராக. அபிஷேகத்திற்கான பொருள்களைக் கொண்டு வருவீராக. புருஷவியாகரனான ராகவனுக்கு {மனிதர்களில் புலியும், ரகுவின் வழித்தோன்றலுமான சத்ருக்னனுக்கு} நான் அபிஷேகம் செய்விப்பேன்.(10) என் ஆணைப்படி புரோஹிதரையும், காகுத்ஸ்தனையும் {சத்ருக்னனையும்}, நைகமர்களையும் {வேத அறிஞர்களையும் / நகரவாசிகளையும்}, ருத்விக்குகளையும், அவ்வாறே மந்திரிகளையும் ஆகிய அவர்கள் அனைவரையும் அழைத்து வருவீராக" {என்றான் ராமன்}.(11)
மஹாரதர்களான {பெருந்தேர்வீரர்களான} அவர்கள், ராஜனின் சாசனத்தை {அரசக்கட்டளையை} அறிந்து, புரோதஸரை {புரோஹிதரான வசிஷ்டரை} முன்னிட்டுக் கொண்டு, அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தனர். இராஜர்களும், அதேபோல பிராஹ்மணர்களும் ராஜபவனத்திற்குள் பிரவேசித்தனர் {அரச மாளிகைக்குள் நுழைந்தனர்}.(12) மஹாத்மாவான சத்ருக்னனின் அபிஷேகம் அவ்வாறே ஸ்ரீமானாக {சிறப்புற்று}, ராகவனுடைய புரத்திற்கும் {ராமனின் அயோத்தியா நகரத்திற்கும்} பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக வளர்ந்தது.(13) அபிஷேகிக்கப்பட்ட சத்ருக்னன், முற்காலத்தில் இந்திரன் உள்ளிட்ட மருத் கணங்களால் அபிஷேகிக்கப்பட்ட ஸ்கந்தனைப் போல, ஆதித்யனுக்கு ஒப்பான ஒளியுடன் விளங்கினான்.(14) அக்லிஷ்டகர்மனான {சிரமமின்றி செயல்களை நிறைவேற்றுபவனான} ராமனால் சத்ருக்னன் அபிஷேகிக்கப்பட்டபோது, பௌரர்கள் {நகர மக்கள்} பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மேலும் பலவற்றைக் கற்றறிந்த பிராஹ்மணர்களும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.(15) கௌசல்யையும், சுமித்திரையும், அவ்வாறே கேகயியும் {கைகேயியும்}, ராஜபவனத்திலிருந்த வேறு ராஜயோசிதைகளும் {அரசகுலப் பெண்களும்} மங்கலத்தை {மங்கலச் சடங்குகளைச்} செய்தனர்.(16) யமுனாதீரவாசிகளும் {யமுனையாற்றங்கரையில் வசிப்பவர்களும்}, மஹாத்மாக்களுமான ரிஷிகளும், சத்ருக்னனின் அபிஷேகத்திற்குப் பிறகு லவணன் கொல்லப்படுவானென எதிர்பார்த்தனர்.(17)
பிறகு, அபிஷேகிக்கப்பட்ட சத்ருக்னனை அங்கத்தில் {தன் மடியில்} ஏற்றிக் கொண்ட ராகவன், அவனுடைய தேஜஸ்ஸைப் பெருக்கியபடி {பின்வரும்} மதுரவாணியை {இனிய சொற்களைச்} சொன்னான்:(18) "இரகுநந்தனா, சௌம்யா, திவ்யமானதும் {தெய்வீகமானதும்}, அமோகமானதும் {வீண்போகாததும்}, உனக்குரியதுமான இந்தச் சரம் {கணை}, பகைவரின் நகரங்களை வெல்லக்கூடியதாகும். இதனால் நீ லவணனைக் கொல்லலாம்.(19) காகுத்ஸ்தா, இந்தச் சரம் சிருஷ்டிக்கப்பட்டு எப்போது மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} இருந்தோ, {அப்போது},(20) ஸ்வயம்பூவும் {தானாகத் தோன்றியவனும்}, அஜிதனுமான {வெல்லப்பட முடியாதவனுமான} எந்த தேவனை, ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} காண முடியாதோ, அவனுடைய {அந்த விஷ்ணுவுடைய} இந்த உத்தமச் சரம், சர்வ பூதங்களுக்கும் {உயிரினங்கள் அனைத்திற்கும்} புலப்படாததாக இருந்தது.(21)
வீரா, மூன்று உலகங்களை சிருஷ்டிக்க விரும்பியவனும், குரோதத்தால் ஆட்கொள்ளப்பட்டவனுமான அவனால் {விஷ்ணுவால்} துராத்மாக்களான மது, கைடபர்களை அழிக்கும் பொருட்டு, இந்தச் சரம் சிருஷ்டிக்கப்பட்டது. அழிவை நெருங்கிக் கொண்டிருந்த அவ்விருவரும், யுத்தத்தில் இதனால் {இந்தச் சரத்தால்} கொல்லப்பட்டனர்.(22) அவன் {விஷ்ணு} இந்த முக்கிய சரத்தால் கைடபன், மது என்ற இருவரையும் கொன்ற பிறகு, ஜனங்களின் போக அர்த்தத்திற்காக {மக்களின் அனுபவத்திற்காக} உலகங்களை உண்டாக்கினான்.(23) பூதங்களுக்கு பேரச்சம் ஏற்படும் என்று, சத்ருக்னா, ராவணனை வதம் செய்ய விரும்பிய என்னாலும் இந்தச் சரம் பூர்வத்தில் {முன்பு} ஏவப்பட்டதில்லை[4].(24)
[4] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணனைப் பார்க்கிலும் லவணாசுரன் மஹாபலிஷ்டனென்பது இதனால் குறிப்பிட்டதாயிற்று" என்றிருக்கிறது.
மேலும், அவனுடைய {லவணனுடைய} மஹத்தான சூலம் எதுவோ, {அது} மஹாத்மாவான திரையம்பகனால் {முக்கண்ணனான சிவனால்} சத்ருக்களை அழிப்பதற்காக வழங்கப்பட்ட மதுவின் உத்தம ஆயுதமாகும்.(25) அவன் {லவணன்} அதை {அந்தச் சூலத்தை} பவனத்தில் {தன் மாளிகையில்} வைத்து, மீண்டும் மீண்டும் பூஜிக்கப்பெற்றவனாக {போற்றப்படுபவனாக} சர்வ திசைகளுக்கும் சென்று உத்தம ஆஹாரத்தைப் பெறுகிறான் {அவனுக்குச் சிறந்த உணவைப் பெறுகிறான்}[5].(26) எப்போது எவனாவது யுத்தம் செய்ய விரும்பி அவனைப் போருக்கு அழைப்பானோ, அப்போது ராக்ஷசன் {லவணன்} சூலத்தை எடுத்துக் கொண்டு அவனை பஸ்மமாக்குகிறான் {சாம்பலாக்குகிறான்}.(27)
[5] தர்மாலயப் பதிப்பில், "இக்காரணத்தினாலேயே அவன் அதை பூஜிக்கப்பெற்றதாய் வீட்டில் வைத்துவிட்டு இடையிடையே பல திசைகளிலும் சென்று முக்கியமான உணவை அடைகிறான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "அதனையிவன் பூஜித்துத் தனதுகிருகத்திலேயே வைத்துவிட்டு நாடோறும் பலதிசைகளிலும் சென்று தனக்கு உணவு தேடுகின்றனன்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "லவணன், தற்போது அந்தச் சூலத்தை, தன் மாளிகையில் வைத்து சிறப்பாக வழிபாடு செய்து வருகிறான். (அந்தச் சூலம் தன்னிடம் இருக்கும் தைரியத்தால்) அவன் எல்லாப் பக்கங்களிலும் சுற்றித் திரிந்து, தனக்குத் தேவையான அளவிறந்த உணவை அடைந்து விடுகிறான்" என்றிருக்கிறது. மூலத்தில், "பவனே நிக்ஷிப்ய புநஃ புநஃ பூஜ்யமானஃ" என்றிருக்கிறது. இங்கே "பூஜ்யமானஃ" என்ற செயப்பாட்டு வினை ஆண்பால் ஒருமை நிகழ்காலப் பெயரெச்சமாகும். எனவே அது லவணனைக் குறிப்பதாகக் கொண்டால், "பூஜிக்கப்பெறுதல்" என்பதற்கு "போற்றப்படுதல்" என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும்.
புருஷசார்தூலா {மனிதர்களில் புலியே}, நீ இந்த ஆயுதத்தை {கணையை} ஏந்தியவனாக நிற்பாயாக. அவன் ஆயுதமில்லாமல் இருக்கும் நிலையில் {கையில் சூலமில்லாத அவன்}, புரத்தில் பிரவேசிப்பதற்கு முன் துவாரத்தில் {வாயிலில்} நிற்பாயாக.(28) புருஷரிஷபா, மஹாபாஹோ, பவனத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாகவே, அந்த ராக்ஷசனை {லவணனை} யுத்தத்திற்கு அழைப்பாயாக. பிறகு ராக்ஷசனைக் கொல்வாயாக.(29) வீரா, வேறு விதமாகச் செயல்பட்டால் அவன் வதைக்கப்பட முடியாதவனாகிவிடுவான். இவ்வாறு செயல்பட்டாலோ அவன் அழிவை அடைவான்.(30) சூலத்தின் மாறுபட்ட நிலை உட்பட இவை அனைத்தும் உனக்குக் கூறப்பட்டன. ஸ்ரீமத் சிதிகண்டனின் {மகிமைமிக்க நீலகண்டனான சிவனின்} செயல் நிச்சயம் மீறப்பட முடியாததாகும்" {என்றான் ராமன்}.(31)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 063ல் உள்ள சுலோகங்கள்: 31
| Previous | | Sanskrit | | English | | Next |
