Saturday, 25 July 2026

புஷ்பக விமானம் | சர்க்கம் – 041 (22)

Pushpaka Vimana | Sarga-041 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: குபேரனிடம் சென்ற புஷ்பக விமானம்; இராமனுக்கே வாகனமாகும்படி குபேரன் சொன்னதால் திரும்பி வந்தது; நினைக்கும் போது வந்தால் போதும் என விடைகொடுத்து அனுப்பிய ராமன்...

புஷ்பக விமானமும் ராமனும்

பெரும் தோள்களைக் கொண்ட ராமன், ரிக்ஷர்களுக்கும், வானரர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் உடன் பிறந்தவர்களுடன் இணைந்து சுகமாகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் மகிழ்ச்சியடைந்தான்.(1) பிறகு, பிற்பகல் சமயத்தில் உடன்பிறந்தாருடன் கூடிய ராகவன், அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} இருந்து பேசப்பட்ட மதுர வாணியை {இனிமையான குரலைப் பின்வருமாறு} கேட்டான்.(2) "சௌமியா {மென்மையானவனே}, ராமா, சௌம்யமான வதனத்தால் {முகத்தால்} என்னைப் பார்ப்பாயாக. பிரபோ, குபேரனின் பவனத்திலிருந்து {அரண்மனையிலிருந்து} வந்திருக்கும் என்னை புஷ்பகமாக {புஷ்பக விமானமாக} அறிந்துகொள்வாயாக.(3)

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, உன் சாசனத்தை {கட்டளையை} அறிந்து {ஏற்றுக் கொண்டு}, பணிவிடை செய்ய {குபேரனின்} பவனத்தை நோக்கிச் சென்றவனாக இருக்கிறேன்[1]. என்னிடம் அவனும் {குபேரனும் பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(4) "யுத்தத்தில் வெல்வதற்கரியவனும், ராக்ஷசேஷ்வரனுமான ராவணனைக் கொன்று, மஹாத்மாவும், நரேந்திரனுமான {மனிதர்களின் தலைவனுமான} ராகவனால் நீ வெல்லப்பட்டாய்.(5) துராத்மாவான அந்த ராவணன், {தன்} கணங்களுடனும் {கூட்டத்தாருடனும்}, புத்திரர்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} கொல்லப்பட்டதில் எனக்கும் பரம பிரீதியே.(6) சௌம்யா, பரமாத்மாவான ராமனால் லங்கையில் வெல்லப்பட்டவன் நீ. அவனையே {வாகனமாக} நீ சுமந்து செல்வாயாக; உனக்கு நான் ஆணையிடுகிறேன்.(7) உலகத்தாரின் வாகனமே, நீ ராகவநந்தனனை {ரகு குலத்தை மகிழ்ச்சியடையச் செய்பவனான ராமனைச்} சுமப்பாயாக. இத்தகைய இதுவே என் பரம விருப்பமாகும். ஜுவரம் {கவலை எனும் பிணி} தீர்ந்தவனாகச் செல்வாயாக" {என்றான் குபேரன்.(8)

[1] இராமாயணம், யுத்த காண்டம், 127ம் சர்க்கத்தில், 60ம் சுலோகத்தில் குபேரனிடம் செல்லுமாறு புஷ்பக விமானத்தை ராமன் கேட்டுக் கொள்கிறான். 62ம் சுலோகத்தில் குபேரனிடமே சென்றும் சேர்ந்தது. புஷ்பகம் சென்ற பிறகு ராமனின் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு உத்தர காண்டத்தின் 40ம் சர்க்கம் வரையுள்ள அகஸ்தியர் ராமன் உரையாடலும் இன்னும் பிறவும் புஷ்பகம் அயோத்தியிலிருந்து அளகாபுரிக்குச் சென்று திரும்பியதற்குள் நடந்ததெனக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மஹாத்மாவான தனதனின் சாசனத்தை {குபேரனின் கட்டளையை} அறிந்து {ஏற்றுக் கொண்டு} அத்தகைய நான் உன் அருகாமையை நோக்கி வந்து சேர்ந்திருக்கிறேன். சந்தேகமில்லாமல் என்னை ஏற்றுக்கொள்வாயாக.(9) தனதனின் ஆணையாலும் உன் ஆணையைப் பிரபாவத்தால் காத்து, சர்வ பூதங்களுக்கும் புலப்படாதவனாக நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்" {என்றது புஷ்பக விமானம்}.(10)

அப்போது, புஷ்பகத்தால் இவ்வாறு கூறப்பட்ட மஹாபலவானான ராமன், மீண்டும் {திரும்பி} வந்த புஷ்பக விமானத்தைப் பார்த்து {பின்வருமாறு} கூறினான்:(11) "விமானங்களில் சிறந்த புஷ்பகமே, இவ்வாறெனில் உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு} உண்டாகட்டும். தனேசனின் {குபேரனின்} அனுகூலத்தால் எங்களுக்கு விருத்த தோஷம் {நடத்தை சார்ந்த குற்றம்} ஏற்படாது" {என்றான் ராமன்}.(12)

அப்போது, பெருந்தோள்களைக் கொண்ட ராகவன், பொரிகளாலும், புஷ்பங்களாலும் {மலர்களாலும்}, சுகந்தமான தூபங்களாலும் {நறுமணம் மிக்க புகைகளாலும்} புஷ்பகத்தைப் பூஜித்துவிட்டு,(13) மேலும், "நீ செல்லலாம்" என்று {ராமன்} கூறினான். "சௌம்யா, எப்போது {உன்னை நான்} நினைக்கிறேனோ, {அப்போது} நீ வருவாயாக. சித்தர்களின் கதியிலும் {சித்தர்கள் செல்லும் பாதையிலும் நீ} வேதனையடைய வேண்டாம். இஷ்டப்படி திசைகளில் செல்லும்போது உனக்கு {எந்தத்} தடையும் ஏற்படாமல் இருக்கட்டும்" {என்றான் ராமன்}.(14)

அப்போது ராமனால் பூஜிக்கப்பட்டு, "அப்படியே ஆகட்டும்" என்று {நீ என் வாகனமாகிவிட்டாய் என்று ராமனால் கூறப்பட்டு}, விடைகொடுத்து அனுப்பப்பட்ட அந்தப் புஷ்பகம், அங்கிருந்து தான் விரும்பிய திசையை நோக்கிச் சென்றது.(15)

இவ்வாறு நல்வினை புரியுந்தன்மை கொண்ட {புண்ணிய ஆத்மாவான} அந்தப் புஷ்பகம் மறைந்தபோது, பரதன், ரகுநந்தனனிடம் கைகூப்பியவனாக {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(16) "வீரரே, விவிதாத்மரான {பலவிதமான தன்மைகளைக் கொண்ட} நீர் ஆளும்போது, அமானுஷ்யமான சத்வங்களின் {மனிதரல்லாத உயிரினங்களின்} பேச்சுகள் மீண்டும் மீண்டும் காணப்படுகின்றன {கேட்கப்படுகின்றன}.(17) மேலும், ராகவரே, {உயிரினங்களுக்கு} ஆரோக்கியமாக ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டபோதும், முதிர்ந்த சத்வங்களுக்குங்கூட {உயிரினங்களுக்குங்கூட} மிருத்யு {மரணம்} வருவதில்லை.(18) இராஜரே, நாரியைகள் {பெண்கள்} ஆரோக்கியமாக பிரசவிப்பவர்களாகவே {நலத்துடன் ஈன்றெடுப்பவர்களாகவே இருக்கின்றனர்}. மானவர்கள் {மனிதர்கள்} புஷ்டிமந்தர்களாகவே {ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்}. மேலும், புரவாசிகளான {அயோத்தி நகரத்தில் வசிக்கும்} ஜனங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியும் {இருக்கிறது}.(19) {உரிய} காலத்தில் மேகம் அம்ருதமான நீரை விழச் செய்து வர்ஷிக்கிறது {மழையைப் பொழிகிறது}. மேலும், இந்த வாதங்களும் {காற்றுகளும்} கூட ஸ்பரிசத்திற்குப் பொருத்தமான சுகத்தைத் தருபவையாகவும், மங்கலமானவையாகவும் வீசுகின்றன.(20) இராஜரே, "இத்தகைய நரேஷ்வரனான {மனிதர்களில் தலைவனான} ராஜா, அழிவற்றவனாக இருக்க வேண்டும்" என்று புரத்தில் {அயோத்தியா நகரத்தில்}, பௌர ஜானபதர்களும் {நகரமக்களும், நாட்டு மக்களும்} அதுபோலவே பேசிக் கொள்கிறார்கள்[2]" {என்றான் பரதன்}.(21)

[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 701ம் பாடல் பின்வருமாறு

மண் உலகு உள்ள மன்னர் 
  மைந்தர்கள் மங்கைமார்கள்
எண்ணிடும் எண்ணம் எல்லாம் 
  இராமனே அரசு செய்துஇக்
கண்அகல் ஞாலம் காக்க 
  என்று கட்டுரைப்பர் என்ன
அண்ணலும் அதனைக் கேட்டு ஆங்கு 
  அகம் மகிழ்ந்து இருந்த காலை

பொருள்: மண் உலகத்துள்ள அரச குமாரர்களும் அவர்கள் பெண்டிரும் எண்ணுகின்ற எண்ணம் எல்லாம் (யாவை எனின்?) "இராமனே அரசு செய்து இந்த இடமகன்ற உலகம் முழுவதையும் காப்பானாக என்று உறுதியாகக் கூறுவார்கள்" என்று பரதன் சொல்ல, பெருமை பொருந்திய இராமனும் அவன் சொல்லியது கேட்டு அங்கு மனம் மகிழ்ந்து வீற்றிருந்த பொழுது.

பரதனால் பேசப்பட்ட இந்த மிக இனியச் சொற்களைக் கேட்டுவிட்டு,  நிருபசத்தமனான {அரசர்களில் சிறந்தவனான} ராமன் மகிழ்ச்சியுடன் கூடியவனாக ஆனான்.(22)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 041ல் உள்ள சுலோகங்கள்: 22

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி