Showing posts with label இராவணன். Show all posts
Showing posts with label இராவணன். Show all posts

Monday, 5 October 2026

மீண்டும் வால்மீகி | சர்க்கம் – 071 (24)

Valmiki again | Sarga-071 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுராவிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் வழியில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சத்ருக்னன்; வால்மீகியின் பாராட்டு; இராமகதையின் இனிய கானத்தைக் கேட்டது.

மீண்டும் வால்மீகி

பிறகு, பன்னிரண்டாம் வருஷத்தில், சத்ருக்னன், அற்ப அளவிலான பணியாளர்களுடனும் பலத்துடனும் {படையுடனும்}, ராமனால் ஆளப்பட்ட அயோத்திக்குச் செல்ல விரும்பினான்.(1) பிறகு, அவன், மந்திரிகளை முன்னணியாகக் கொண்டவர்களையும், முக்கியப் படைத்தலைவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, சிறந்த ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, நூறு ரதங்களுடனும் சென்றான்.(2) பெரும்புகழுடைய அந்த ரகுநந்தனன் {ரகு வம்சத்தவரை மகிழ்விப்பவனான சத்ருக்னன்}, கணக்காக ஏழெட்டுத் தங்குமிடங்களில் {இரவுத் தங்கல்களில்} தங்கிச் சென்று, வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து வாசம் செய்தான்.(3) அந்தப் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான சத்ருக்னன்}, வால்மீகியின் பாதங்களை வணங்கிய பின்னர், முனிவரின் கையில் இருந்து பாத்யம், அர்க்கியம், ஆதித்யம் {விருந்தோம்பல்}[1] ஆகியவற்றை ஏற்றுக் கொண்டான்.(4) அந்த முனிவர் {வால்மீகி}, மஹாத்மாவான சத்ருக்னனுக்கு பலவகையான, மிக இனிய கதைகளை ஆயிரக்கணக்கில் கூறினார்.(5)

Friday, 25 September 2026

இலவணனைச் சந்தித்த சத்ருக்னன் | சர்க்கம் – 068 (20)

Shatrughna encounters Lavana | Sarga-068 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலவணன் வெளியே சென்றிருக்கும் தருணத்தில் கோட்டை வாயிலில் காத்திருந்த சத்ருக்னன்; திரும்பி வந்த லவணனைப் போருக்கு அழைத்தது...

சத்ருக்னனும் லவணனும்

அவர்கள் {முனிவர்கள்} கதைகளைச் சொல்லிக்கொண்டும், சுப ஜயத்தை {மங்கல வெற்றியை} விரும்பிக் கொண்டுமிருக்கையில் மஹாத்மா சத்ருக்னனுக்கு இரவு சீக்கிரம் கழிந்தது.(1) பிறகு, விமலமான பிரபாதத்தில் {களங்கமற்ற விடியல்காலையில்}, அந்தக் காலத்தில் {நேரத்தில்}, தீரனான அந்த ராக்ஷசன் ஆஹாரத்தை {உணவைத்} தேடும் எண்ணத்தால் தூண்டப்பட்டவனாகப் புரத்திலிருந்து {நகரத்திலிருந்து} வெளியேறினான்.(2) இதற்கிடையில், வீரனான சத்ருக்னன் யமுனை நதியைக் கடந்து, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன்} மதுபுரத்வாரத்தில் நின்றான் {மதுபுரியின் வாயிலில் லவணனை எதிர்பார்த்து நின்றான்}.(3) 

Friday, 10 July 2026

வாலி | சர்க்கம் – 034 (46)

Vali | Sarga-034 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வாலியைப் போருக்கு அழைத்த ராவணன்; தென் கடலுக்குச் சென்றிருந்த வாலி, ராவணனைக் கக்கத்தில் இட்டுக் கொண்டு சென்றது; வாலியுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்...

வாலி ராவணனுடன் கிஷ்கிந்தையின் அருகில் இறங்கியது

{அகஸ்தியர் ராமனிடம்}... {கார்த்தவீரிய} அர்ஜுனனால் விடுவிக்கப்பட்ட பிறகு, ராக்ஷசாதிபன் ராவணன், அவ்வாறு செய்யப்பட்ட போதிலும் மனந்தளராமல் சர்வ பிருத்வியிலும் சுற்றித் திரிந்தான்.(1) இந்த ராவணன், ராக்ஷசனோ, மனுஷ்யனோ, அதிக பலம் பொருந்தியவன் எனக் கேள்விப்பட்டால், செருக்குடன் அவனைச் சந்தித்து யுத்தத்திற்கு அழைப்பவனாக இருந்தான்.(2)

Tuesday, 7 July 2026

விடுதலையும் செருக்கும் | சர்க்கம் – 033 (23)

Freedom and Arrogance | Sarga-033 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை விடுவிக்குமாறு கார்த்தவீரியனை வேண்டிய புலஸ்தியர்; மறுபேச்சின்றி ராவணனை விடுவித்த கார்த்தவீரியன்...

புலஸ்தியரின் முன்னிலையில் ராவணனை விடுவிக்கும் கார்த்தவீரியார்ஜுனன்

{அகஸ்தியர் ராமனிடம்}... வாயுவைப் பிடித்ததைப் போல, ராவணன் பிடிக்கப்பட்டது {ராவணன் பிடிக்கப்பட்ட அந்தச் செய்தி},[1] திவத்தில் தைவதங்களால் {தேவலோகத்தில் தேவர்களால்} பேசப்படுவதைப் புலஸ்தியர் கேட்டார்.(1) பிறகு, பௌலஸ்திய தாயாத்யம் {புலஸ்தியரான தம் மரபுரிமை வாரிசும், தம் பேரனுமான ராவணன்} மீது கொண்ட சினேஹத்தால் பெரிதும் தூண்டப்பட்டவராக {தூண்டப்பட்ட புலஸ்தியர்}, எங்கே ராவணன் {இருந்தானோ, அந்த} மாஹிஷ்மதி என்ற பெயர் கொண்ட புரீக்குச் சென்றார்[2].(2) 

Monday, 6 July 2026

கார்த்தவீரியார்ஜுனன் | சர்க்கம் – 032 (73)

Karthavirya Arjuna | Sarga-073 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நர்மதையின் நீரோட்டத்தைத் தடுத்த கார்த்தவீரியன்; நீர் பின்னோக்கிப் பாய்ந்து ராவணனின் பூஜைப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டது; கார்த்தவீரியனுடன் போரிட்டுக் கட்டுண்ட ராவணன்...

இராவணனை மாஹிஷ்மதிக்குள் இழுத்துச் செல்லும் கார்த்தவீரியன்

{அகஸ்தியர் ராமனிடம்}... மிகக் கொடூரனான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, நர்மதையின் மணற்திட்டில் எங்கே புஷ்ப உபஹாரம் {மலர்களைக் கொண்டு பூஜை} செய்தானோ, அதே தேசத்திற்கு {இடத்திற்கு} சற்றுத் தொலைவில்[1],(1) வெற்றியாளர்களுள் சிறந்தவனும், மாஹிஷ்மதியின் பதியும் {தலைவனும்}, பிரபுவுமான {கார்த்தவீரிய} அர்ஜுனன், நாரீகள் சஹிதனாக {பெண்களுடன்} நர்மதையின் நீரில் இறங்கி கிரீடித்துக் கொண்டிருந்தான் {விளையாடிக் கொண்டிருக்கிறான்}.(2) 

Saturday, 4 July 2026

மாஹிஷ்மதியும் நர்மதையும் | சர்க்கம் – 031 (43)

Mahishmati and Narmada | Sarga-043 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கார்த்தவீரியனுடன் போரிட மாஹிஷ்மதி சென்ற ராவணன்; அவனில்லாததைக் கண்டு விந்திய மலையின் அருகில் உள்ள நர்மதையை அடைந்தது. ராவணன் செய்த சிவபூஜை...

Ravana dancing in worshiping Shiva in Narmada river basin

பிறகு, மஹாதேஜஸ்வியான ராமன் வியப்படைந்து, மீண்டும் வணங்கிவிட்டு, ரிஷிசத்தமரான {முனிவர்களில் முதன்மையானவரான} அகஸ்தியரிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்.(1) "பகவானே, துவிஜோத்தமரே {இருபிறப்பாளர்களில் உயர்ந்தவரே}, எப்போது முதல் மேதினியைக் குரூர ராக்ஷசன் {ராவணன்} சுற்றித் திரிந்தானோ, அப்போது {முதல்} உலகங்கள் சூனியமாகவே {வெறுமையாகத்தான்} இருந்தனவா என்ன?(2) அப்போது இங்கே {பூமியில்} ராஜாவோ, ராஜாவுக்கு இணையானவனோ எவனொருவனுமே இல்லையா என்ன? இராக்ஷஸேஸ்வரனான ராவணன் எதனால் {எவ்விடத்திலும்} அவமானத்தை {செருக்கொழிந்து தோல்வியை} அடையவே இல்லை?(3) அல்லது பிருத்வியை {பூமியை} ஆள்பவர்கள் வீரியம் இழந்தே விட்டார்களா? மேலும், பல நிருபர்கள் {அரசர்கள்} சிறந்த அஸ்திரங்களால் {யுத்த களத்திலிருந்து} துரத்தப்பட்டவர்களாக முற்றிலும் வெல்லப்பட்டனரா?" {என்று கேட்டான் ராமன்}.(4)

Friday, 3 July 2026

அகலிகை | சர்க்கம் – 030 (55)

Ahalya | Sarga-030 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனிடம் சென்ற பிரம்மன்; இந்திரஜித் வேண்டிய வரத்தை அளித்து, இந்திரனை விடுவித்தது; கௌதமரின் சாபத்தைக் குறித்து இந்திரனிடம் சொன்னது...

Ahalya and Gautama

{அகஸ்தியர் ராமனிடம்}... அதிபலவானான மஹேந்திரன், ராவணனின் மகனால் {இந்திரஜித்தால்} வெல்லப்பட்டபோது, ஸுரர்கள் {தேவர்கள்}, பிரஜாபதியை {பிரம்மனை} முன்னிறுத்திக் கொண்டு லங்கைக்குச் சென்றனர்.(1) அங்கு, புத்திரர்களாலும், பிராதாக்களாலும் {உடன்பிறந்தோராலும்} சூழப்பட்டிருந்த ராவணனை அடைந்து, ககனத்தில் {ஆகாயத்தில்} நின்றுகொண்டு, பிரஜாபதி ஸாமப் பூர்வமாக {பிரம்மன் சமாதானமான முறையில் பின்வருமாறு} கூறினான்:(2) "வத்சா {குழந்தாய்}, ராவணா, உன் புத்திரனின் {இந்திரஜித்தின்} யுத்தத்தில் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன். ஆஹோ {என்னே ஆச்சரியம்}, இவனுடைய விக்ரமமும், அதன் உயர்வும், உனக்குத் துல்லியமாகவோ, அதிகமாகவோ கூட இருக்கின்றன.(3) உன் தேஜஸ்ஸால் {ஆற்றலால்} திரிலோகங்கள் முழுமையுமே வெல்லப்பட்டிருக்கின்றன; {எடுத்த} பிரதிஜ்ஞை {உறுதிமொழி} பலனுள்ளதாகச் செய்யப்பட்டது; நிச்சயம் உன் புத்திரனால் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன்.(4) இராவணா, மேலும், அதிபலவானும், வீர்யவானுமான உன்னுடைய இந்தப் புத்திரன் {மேகநாதன்}, ஜகத்தில் “இந்திரஜித்” என்றே நன்கு அறியப்பட்டவனாக இருப்பான்.(5) இராஜனே, எவனைத் துணையாகக் கொண்டு உன்னால் திரிதசர்கள் {முப்பத்து முக்கோடி தேவர்கள்} வசத்தில் வைக்கப்பட்டார்களோ, {அந்த} ராக்ஷஸன் {இந்திரஜித்} பலவானே; {அவன்} வெல்வதற்கரியவனுமே ஆவான்.(6) எனவே, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, பாகசாஸனனான[1] மஹேந்திரன் {இந்திரன்} விடுவிக்கப்படட்டும். மேலும், இவனுடைய விடுதலைக்காகத் திவௌகஸர்கள் {விண்ணில் வாழ்பவர்களான தேவர்கள் ஏதேனும்} கொடுக்கட்டும்" {என்றான் பிரம்மன்}.(7)

Wednesday, 24 June 2026

பிடிபட்டான் இந்திரன் | சர்க்கம் – 029 (42)

Indra captured | Sarga-029 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கட்டிய இந்திரன்; இந்திரனை மாயையில் கட்டிய இந்திரஜித்; இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்திரன்...

Indrajit captured Indra and showed him to Ravana

{அகஸ்தியர் ராமனிடம்}... பிறகு, இருள் சூழ்ந்த போது, அந்த சர்வ தேவராக்ஷசர்களும் தங்கள் பலத்தில் மதங்கொண்டவர்களாகப் பரஸ்பரம் அழித்தபடியே {தொடர்ந்து} போர் செய்தனர்.(1) ஆனால், பிறகு, தேவசைனியத்தால் ராக்ஷசர்களின் பெரும்பலம் {பெரிய படையானது} யுத்தத்தில் பத்தில் ஒரு பங்காக ஸ்தாபிதம் செய்யப்பட்டது {எஞ்சியிருக்குமாறு செய்யப்பட்டது}. மிச்சமுள்ள பகுதி யமக்ஷயத்திற்கு {யமனின் இருப்பிடத்திற்குக்} கொண்டு செல்லப்பட்டது.(2) எனினும், அந்த இருள் சூழ்ந்த யுத்தத்தில், பரஸ்பரம் யுத்தம் செய்கிறவர்களான அந்த சர்வ தேவ ராக்ஷசர்களும் அன்யோன்யம் அறிந்து கொண்டார்களில்லை {ஒருவரையொருவர் அடையாளம் கண்டார்களில்லை}.(3)

Friday, 19 June 2026

சுமாலி வதம் | சர்க்கம் – 027 (50)

Sumali killed | Sarga-027 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவலோகஞ் சென்ற ராவணன்; விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்த இந்திரன்; அவதார காரணத்தைச் சொல்லி ராவணனுடன் போரிடுமாறு இந்திரனுக்கு ஆணையிட்ட விஷ்ணு; சுமாலி கொல்லப்பட்டது...

Indra praying to Vishnu

{அகஸ்தியர் ராமனிடம்}... பிறகு தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, கைலாசத்தைக் கடந்தான். மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் இந்திரலோகத்தை அடைந்தான்.(1) இராக்ஷச சைனியம், நாலாபுறமிருந்தும் {இந்திரலோகத்தை நோக்கி} முன்னேறிச் சென்றது. அர்ணவம் {கடல்} கடையப்படுவதைப் போன்ற சப்தம் தேவலோகத்தை எட்டியது.(2) 

Wednesday, 17 June 2026

அரம்பை | சர்க்கம் – 026 (61)

Rambha | Sarga-026 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நளகூபரனிடம் சென்று கொண்டிருந்த ரம்பையை, பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய ராவணன்; நடந்ததை உள்ளபடியே நளகூபரனிடம் சொன்ன ரம்பை; ராவணன் அடைந்த சாபம்...

Rambha and Ravana

{அகஸ்தியர் ராமனிடம்}... வீரியவானான அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தன் சைனியத்துடன் அங்கே {கைலாசத்தில்} இருந்தபோது, தினகரன் அஸ்தத்தை {சூரியன் அஸ்த மலையை / மறைவை} அடைந்ததால், தன் வசிப்பிடத்தை {முகாமை} அமைத்துக் கொள்ள விரும்பினான்.(1) பர்வதத்திற்குத் துல்லியமான ஒளியைக் கொண்ட {அந்தக் கைலாச மலையைப் போலவே வெண்மையாக விளங்கிய}, விமலமான சந்திரன் உதித்தபோது, தாக்குதலுக்குரிய நானாவித ஆயுதங்களுடன் கூடிய மஹத்தான சைனியம் {ராவணனின் பெரும் படை} உறக்கத்தில் ஆழ்ந்தது.(2) மஹாவீரியவானான அந்த ராவணனோ, சைலமூர்த்தத்தில் {மலையுச்சியில்} அமர்ந்திருந்தவனாக, அங்கே சந்திரனின் கதிர்களால் சோபிக்கும் குணங்களை {அழகுறும் இயற்கையழகைக்} கண்டான்.(3)

Monday, 15 June 2026

மது சக்யம் | சர்க்கம் – 025 (52)

Friendship forged with Madhu | Sarga-025 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வரங்களைப் பெற்ற இந்திரஜித்; கும்பீனசியைக் கவர்ந்து சென்ற மது; மதுவுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்; இந்திரனை வெல்ல கைலாசத்தில் இறங்கியது...

Ravana Kumbinasi Madhu

{அகஸ்தியர் ராமனிடம்}... கோரமான அந்த {தண்டக} வனத்தைக் கொடுத்துத் தன் பகினியை {சகோதரி சூர்ப்பணகையைத்} தேற்றிய பிறகு, அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மகிழ்ச்சியும், ஸ்வஸ்தமும் {நலமும் / நிம்மதியும்} அடைந்தான்.(1) பலவானான அந்த ராக்ஷசேந்திரன், பிறகு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிகும்பிலை என்ற பெயரைக் கொண்ட, லங்கையின் உத்தம உபவனத்தில் பிரவேசித்தான் {சிறந்த சோலையில் நுழைந்தான்}.(2) நூற்றுக்கணக்கான யூப ஆகீர்ணங்களால் {வேள்வித் தூண்களால்} நிறைந்தும், சௌம்யமான சைத்யங்களால் {அழகான வேள்வி மேடைகளால்} அலங்கரிக்கப்பட்டும், செழிப்புடன் {ஒளியுடன்} பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் போல, அங்கே நடந்து கொண்டிருக்கும் யஜ்ஞத்தை {வேள்வியை ராவணன்} கண்டான்.(3) கருப்பு மான் தோல் அணிந்தவனும், கமண்டலம், சிகை {குடுமி}, துவஜம் ஆகியவற்றுடன் கூடியவனும், பயத்தை உண்டாக்குபவனுமான தன் மகன் மேகநாதனை அப்போது அங்கே {இந்திரஜித்தை ராவணன் அந்த வேள்விச் சாலையில்} கண்டான்.(4)

Tuesday, 9 June 2026

சாபமும், சூர்ப்பணகையும் | சர்க்கம் – 024 (42)

The curse and Shurpanakha | Sarga-024 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனால் கடத்தப்பட்ட பெண்களின் அழுகையும், புலம்பலும்; அவர்கள் அவனுக்கு அளித்த சாபம்; சூர்ப்பணகை, கரன் ஆகியோரை தண்டகாரண்யத்தில் வசிக்கச் செய்தது...

Ravana and Shurpanakha

{அகஸ்தியர் ராமனிடம்}துராத்மாவான ராவணன் மகிழ்ச்சியுடன் திரும்பி வரும் வழியில்[1], நரேந்திரர்கள், ரிஷிகள் {மன்னர்கள், முனிவர்கள்}, தேவர்கள், கந்தர்வர்களின் கன்னிகைகளைக் கவர்ந்து சென்றான்.(1) பார்வைக்கு அழகான கன்னிகைகளையும், ஸ்திரீகளையும் கண்டதும், அந்த ராக்ஷசன் {ராவணன்}, அவர்களுடைய பந்துஜனங்களை {உற்றார் உறவினரைக்} கொன்றுவிட்டு, {புஷ்பக} விமானத்திலேயே அவர்களைச் சிறை பிடித்தான்.(2) இவ்வாறு பன்னக {நாக} கன்னிகைகளையும், ராக்ஷச, அசுர, மானுஷ, யக்ஷ, தானவ கன்னிகைகளையும் விமானத்தில் அவன் வலுக்கட்டாயமாக ஏற்றினான்.(3) துக்கத்தினால் ஒரே நேரத்தில் அவர்கள் யாவரும், சோகம், பயம் என்ற அக்னியில் {நெருப்பில்} உண்டான நெருப்பு ஜுவாலைகளுக்குத் துல்லியமாக {தீப்பொறி போல்} கண்ணீர் பெருக்கினர்.(4)  நதிகளால் {நிறையும்} சாகரத்தைப் போலக் களங்கமற்றவர்களான அவர்களின் பயம், சோகம் ஆகியவற்றில் உண்டான மங்கலமற்ற கண்ணீரால் அந்த விமானம் நிறைந்தது.(5) நாக, கந்தர்வ கன்னிகைகளும், மஹரிஷிகளின் தனயைகளும் {மகள்களும்}, நூற்றுக்கணக்கான தைத்திய, தானவ கன்னிகைகளும் அந்த விமானத்தில் அழுது கொண்டிருந்தனர்.(6) 

Friday, 5 June 2026

வருணன் | சர்க்கம் – 023 (54)

Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

{அகஸ்தியர் ராமனிடம்}... இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3) 

Monday, 1 June 2026

இயமன் | சர்க்கம் – 022 (51)

Yama | Sarga-022 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இயமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; யமனை வேண்டிய பிரம்மன்; யமன் மறைந்தது...

Brahma stops Yama from using his Kaladhanda against Ravana


{அகஸ்தியர் ராமனிடம்}... அந்த வைவஸ்வதப் பிரபு {சூரியனின் மகனும், தலைவனுமான யமன்}, அவனுடைய மஹாநாதத்தை {ராவணனின் பெரும் முழக்கத்தைக்} கேட்டுவிட்டு, தன் சத்ரு விஜயமடைந்தான் என்றும், தன் சொந்த பலம் {படை} அழிவடைகிறது என்றும் கருதினான்.(1) மேலும் அவன் {யமன்}, தன் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன், தன் சூதனிடம் {தேரோட்டியிடம்}, "இந்தத் தேரைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக" என்று கூறினான்.(2) 

Wednesday, 27 May 2026

பாசுபதாஸ்திரம் | சர்க்கம் – 021 (46)

Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...

Ravana Yama war in a Yamaloka

{அகஸ்தியர் ராமனிடம்}... இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2) 

Monday, 25 May 2026

நாரதர் | சர்க்கம் – 020 (33)

Naradha | Sarga-020 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாரதரைக் கண்ட ராவணன்; அவரால் தூண்டப்பெற்றது; யமனை எதிர்த்து யமலோகம் சென்ற ராவணன்...

Conversation betwee Ravana and Naradha

{அகஸ்தியர் ராமனிடம்}... இராக்ஷசாதிபன் {ராவணன்} பிருத்வியில் இருந்த மர்த்தியர்களை {பூமியில் இருந்த மனிதர்களை} அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, மேகக் கூட்டத்திற்கிடையில் இருந்த முனிபுங்கவரான நாரதரை அணுகினான்.(1)  நிசாசரன் தசக்ரீவன், அவரை வணங்கி, குசலம் விசாரித்து, அவர் வந்ததற்கான காரணத்தையும் கேட்டான்.(2)

Tuesday, 19 May 2026

அனரண்யன் | சர்க்கம் – 019 (32)

Anaranya | Sarga-019 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குச் சென்ற ராவணன்; அனரண்யனைக் கொன்றது; இராவணன் அடைந்த சாபம்...

Ravana defeats Ayodhya king Anaranya

{அகஸ்தியர் ராவணனிடம்}... இராக்ஷசாதிபன் தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, மருத்தனை வென்று, அங்கிருந்து புறப்பட்ட பிறகு, நரேந்திரர்களின் நகரங்களுடன் யுத்தம் செய்ய விரும்பினான்.(1) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பான வலிமையுள்ள ராஜேந்திரர்களை அணுகிய அந்த ராக்ஷசேந்திரன், "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பீராக.(2) அல்லது, "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறுவீராக. இதுவே என் நிச்சயமாகும் {தீர்மானமாகும்}. இதற்கு முரணாகச் செயல்படுபவர்களுக்கு மோக்ஷம் உண்டாகாது {விடுதலை கிடைக்காது}.(3) தர்ம நிச்சயம் கொண்டவர்களும், அச்சமற்றவர்களும், பிராஜ்ஞர்களுமான பார்த்திபர்களும் {அறிஞர்களுமான மன்னர்களும்}, மஹாபலவான்களான ராஜர்களும் அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} ஆலோசனையில் ஈடுபட்டனர். அவர்கள், தங்கள் ரிபு {பகைவன்} அடைந்திருக்கும் வரத்தின் பலத்தை அறிந்து, தாங்கள் வெல்லப்பட்டதாகக் கூறினர்.(4) தாதா {ஐயா, ராமா}, துஷ்யந்தன், ஸுரதன், காதி, கயன், ராஜா புரூரவன் {புரூரவஸ்}[1] உள்ளிட்ட இந்த சர்வ பார்த்திபர்களும், "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறினர்.(5)

Monday, 18 May 2026

மருத்தன் | சர்க்கம் – 018 (36)

Maruttha | Sarga-018 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடனான போரில் இருந்து விலகிய மருத்தன்; தாங்கள் மறைந்து கொள்ள இடமளித்த உயிரினங்களுக்கு வரங்களைக் கொடுத்த தேவர்கள்...

Ravana's war challenge to King Marutta, who was doing Maheshwara Yajna

{அகஸ்தியர் ராமனிடம்}... வேதவதி ஹுதாசனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசித்த பிறகு, அந்த ராவணன் புஷ்பகத்தில் ஏறி, மேதினியைச் சுற்றி வந்தான்.(1) பிறகு, உசீரபீஜத்தை {உசீர பீஜம் / காந்தாரம் என்ற நாட்டை} அடைந்து, நிருபதியான {மன்னனான} மருத்தன் யஜ்ஞம் செய்வதைக் கண்டான்.(2) சாக்ஷாத் பிருஹஸ்பதியின் பிராதாவும் {நேரடியாகப் பிருஹஸ்பதியுடன் பிறந்தவரும்}, தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, சம்வர்த்தர் என்ற பெயருடையவருமான பிரம்மரிஷி, சர்வ தேவ கணங்கள் சூழ, அங்கே {காந்தாரத்தில்} யாகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.(3) 

    அந்த ராக்ஷசன் {ராவணன்} பெற்ற வரங்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதை தேவர்கள் கண்டனர். அவனைக் கண்டு பீதியடைந்த அவர்கள் திர்யக்யோனிகளுக்குள் நுழைந்தனர் {அச்சமடைந்த தேவர்கள் விலங்குகள், பறவைகளின் உடல்களுக்குள் மறைந்து கொண்டனர்}.(4) இந்திரன் மயூரமாகவும் {மயிலாகவும்}, தர்மராஜா வாயஸமாகவும் {யமன் காகமாகவும்} மாறினர். தனாதியக்ஷன் {குபேரன்} ஓணானாகவும், வருணன் ஹம்சமாகவும் {அன்னப்பறவையாகவும்} மாறினர்.(5)

Sunday, 17 May 2026

வேதவதி | சர்க்கம் – 017 (43)

Vedhavathi | Sarga-017 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேதவதியைக் கண்டு காமுற்ற ராவணன்; சாபம் கொடுத்துத் தீக்குளித்த வேதவதி, சீதையாக அவதரித்தது...

Vedhavathi and Ravana

{அகஸ்தியர் ராமனிடம்}பிறகு, ராஜனே {ராமா}, மஹீதலத்தில் சுற்றித் திரிந்த மஹாபாஹுவான ராவணன், ஹிமவத் வனத்தை {இமய மலையில் உள்ள ஒரு காட்டை} அடைந்து அங்கே சுற்றித் திரிந்தான்.(1) அங்கே கருப்பு மான் தோல் அணிந்தவளும், ஜடை தரித்தவளுமான ஒரு கன்னிகையை அவன் கண்டான். ஆர்ஷ விதிகளுக்குப் பொருத்தமாக {வேதவிதிப்படி தபம் செய்யும்} தேவதையைப் போல அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(2)

Saturday, 16 May 2026

நந்தீஷ்வரன் | சர்க்கம் – 016 (50)

Nandheeshwara | Sarga-016 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை சபித்த நந்தி; கைலாசத்தை பெயர்த்த ராவணன்; அவனது செருக்கு அழிந்தது; தன் பெயரை அடைந்தது; சங்கரனிடம் ஒரு வாளைப் பெற்றது...

Nandi condemning Ravana

{அகஸ்தியர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, ராக்ஷசாதிபன் {ராவணன்} தன் பிராதாவான தனதனை {குபேரனை} வென்றான். பிறகு அவன், மஹாசேனன் {முருகன்}[1] பிறந்த மஹத்தான ஷரவணத்திற்கு {நாணல் காட்டிற்குச்} சென்றான்.(1) பிறகு, ருக்மமயமாக {தங்க மயமாக} இருக்கும் மஹத்தான ஷரவணத்தைக் கண்டான். அஃது, இரண்டாவது பாஸ்கரனை {சூரியனைப்} போல ஒளிக் கதிர்களின் வலைப்பின்னல்களால் சூழப்பட்டிருந்தது.(2) அவன், அந்த பர்வதத்தின் மீதேறி ரம்மியமானதொரு வனாந்தரத்தை {காட்டுப் பகுதியைக்} கடந்து சென்றான். பிறகு, ராமா, அங்கேயே அந்தப் புஷ்பகம் {புஷ்பக விமானம்} நகராமல் நிற்பதைக் கண்டான்.(3) விருப்பத்தை அறிந்து செல்லக்கூடிய புஷ்பகம் அங்கேயே நிற்பதைக் கண்ட ராக்ஷசேந்திரன், தன் அமைச்சர்கள் சூழ {பின்வருமாறு} சிந்தித்தான்:(4) "என் விருப்பப்படி செல்ல வேண்டிய புஷ்பகம், எதன் நிமித்தம் செல்லாமல் இருக்கிறது? இது பர்வதத்தின் உச்சியில் உள்ள எவனோ ஒருவனின் செயலாகவே இருக்க வேண்டும்" {என்று நினைத்தான்}.(5)

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி