Fate | Sarga-050 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தேரில் ஏறிய லக்ஷ்மணன் துன்புறுவதைக் கண்ட சுமந்திரன்; துர்வாசர் சொன்னது...
தீனமான {தளர்ந்த} உள்ளமுடைய லக்ஷ்மணனோ, ஆசிரமத்தில் பிரவேசிக்கச் செய்யப்பட்ட மைதிலியான சீதையைக் கண்டு, கோர சந்தாபத்தை {கடும் வருத்தத்தை} அடைந்தான்.(1) மேலும், மஹாதேஜஸ்வியானவன் {பேராற்றல்வாய்ந்த லக்ஷ்மணன்}, ராமனின் சாரதியும், மந்திரசாரதியுமான {ஆலோசனைகளில் தேரோட்டியைப் போல வழிகாட்டக் கூடியவனுமான} சுமந்திரனிடம் {பின்வருமாறு} கூறினான், "சீதையின் சந்தாபத்தால் {வருத்தத்தால்} உண்டான துக்கத்தைப் பார்ப்பீராக.(2) சுத்த சமாசாரமுடைய பத்தினியான {தூய ஒழுக்கமுடைய மனைவியான} ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைக்} கைவிடுவதைவிட ராகவருக்கு அதிக துக்கம் உண்மையில் வேறென்ன இருக்கும்?(3) சாரதே, வைதேஹியைப் பிரிந்திருக்கும் ராகவரின் நிலை தைவத்தாலானதாக {விதியாலானதாக} நான் தெளிவாக கருதுகிறேன். தைவம் {விதி} நித்யம் கடப்பதற்கரியது.(4)
குரோதமுற்ற எந்த ராகவர், கந்தர்வர்களுடன் கூடிய தேவர்களையும், ராக்ஷசர்களுடன் கூடிய அசுரர்களையும் அழிக்கவல்லவரோ, அவரே தைவத்துக்கு {விதிக்கு} இணங்கி நடக்கிறார்.(5) முன்பு பிதாவின் வாக்கியத்தால், மஹாவனமான ஜனமற்ற தண்டக வனத்தில் நவ பஞ்ச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} ராமர் வசித்திருந்தார்.(6) பௌரர்களின் {நகரமக்களின்} வசனத்தைக் கேட்டு, சீதையின் வெளியேற்றம், அதைவிடவும் {பதினான்காண்டு வனவாசத்தைவிடவும்} அதிக துக்கமானதாகவும், கொடுமையானதாகவும் எனக்குத் தோன்றுகிறது.(7) சூதரே, மீண்டும் அடைந்த மைதிலியை உடையவரும், தர்மத்தைச் சார்ந்தவருமான எவர்தான், ஈன அர்த்த வாதிகளான பௌரர்களால் {தாழ்ந்த கருத்துகளைப் பேசும் நகர மக்களால்} புகழைப் பறிக்கும் கர்மத்தில் {செயலில்} ஈடுபடுவர்?" {என்றான் லக்ஷ்மணன்}(8)
பிராஜ்ஞனான {அறிவுடையவனான} சுமந்திரன், லக்ஷ்மணனால் பேசப்பட்ட இந்தப் பலவிதமான சொற்களைக் கேட்டு, சிரத்தையுடன் {அக்கறையுடனும் நம்பிக்கையுடனும்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(9) "சௌமித்ரே, மைதிலி தொடர்பாக உம்மால் சந்தாபம் கொள்ள {வருத்தம் கொள்ள} வேண்டியதில்லை. இலக்ஷ்மணரே, உம் பிதாவின் {உமது தந்தை தசரதரின்} முன்னிலையில், விப்ரர்களால் {ஞானிகளான வேதியர்களால்}[1] இது முன்பு காணப்பட்டது {அறியப்பட்டது}.(10) 'இராமன், துக்கமயமானவனாக இருந்தாலும், உறுதியாக சௌக்கியத்தை அனுபவிப்பான். மேலும், மஹாபாஹுவானவன் {பெரும் தோள்களை உடைய ராமன்} உறுதியாக பிரியர்களிடமிருந்து {அன்புக்குரியவர்களிடமிருந்து} விப்ரயோகத்தை {பிரிவு நிலையை} அடைவான்' {என்று விப்ரர்களால் அறியப்பட்டது}.(11)
[1] வி + ப்ரு / ப்ர் - விரிவடைதல், முன்னேறுதல் என்ற அமைப்பிலிருந்து வந்ததாக விளக்கப்படுகிறது. வி - சிறப்பு, தனித்த, விரிவு, பிரிவு என்ற முன்னொட்டு. ப்ரு -செல்லுதல், முன்னேறுதல், விரிவடைதல். இதனால்: விப்ர - “சிறப்பாக விரிவடைந்த அறிவுடையவர்” - “ஞானத்தில் சிறந்தவர்” என்று பொருள். பின்னர் வழக்கில் இது குறிப்பாக “பிராமணர்” என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டது. விப்ர என்ற சொல்லின் “வேதியர்கள்” என்பது ஓரளவு பொருந்தினாலும், நேரடிப் பொருள் “ஞானி / அறிவுடையவர்” என்பதே ஆகும்.
தர்மாத்மாவான அந்த மஹான் {ராமர்}, நீண்ட காலப்போக்கில் உம்மையும், மைதிலியையும், சத்ருக்னபரதர்கள் இருவரையும் கூடக் கைவிடுவார்.(12) சௌமித்ரே, இஃது உம்மிடத்திலோ, பரதரிடத்திலோ கூட சொல்லக்கூடாது. துர்வாசர் எதைக் கூறினாரோ, அதுவே ராஜரால் உங்களிடம் கூறப்பட்டது.(13) நரரிஷபரே {மனிதர்களில் காளையே}, மஹாஜனங்களின் சமீபத்திலும், மேலும் என்னுடைய {சமீபத்திலும்}, மேலும் வசிஷ்டரின் சந்நிதியிலும் {முன்னிலையிலும்} ரிஷியால் {துர்வாச முனிவரால்} இந்த வாக்கியம் கூறப்பட்டது[2].(14)
[2] அதாவது பெரியோரின் அருகிலும், சுமந்திரனின் அருகிலும், வசிஷ்ட முனிவரின் முன்னிலையிலும் இது துர்வாச முனிவரால் தசரதனுக்குச் சொல்லப்பட்டது என்பது பொருள்.
புருஷரிஷபர் {தசரதர்}, ரிஷியின் {துர்வாச முனிவரின்} வசனத்தைக் கேட்டு, என்னிடம், "சூதா {தேரோட்டியே}, ஜனசந்நிதானத்தில் {மக்கள் முன்னிலையில்} உன்னால் இவ்வாறு ஒருபோதும் கூறப்படக்கூடாது" என்று கூறினார்.(15) சௌமியரே, அந்த லோகபாலரின் வாக்கியத்தை நன்கு ஏற்று, ஒருபோதும் உண்மையற்ற காரியம் செய்யக்கூடாது என்பது என் தரிசனமாகும் {கருத்தாகும்}.(16) சௌமியரே, ரகுநந்தனரே, என்னால் எவ்வகையிலும் உமது முன்னிலையில் சொல்லப்படக்கூடாது. ஒருவேளை உமக்குக் கேட்பதில் சிரத்தை {அக்கறையுடன் கூடிய நம்பிக்கை} இருந்தால் கேட்பீராக.(17) முன்பு நரேந்திரரால் ரஹஸ்யம் {ரகசியம்} கேட்கச் செய்யப்பட்டவன் நான் என்றாலும், 'தைவம் {விதி} கடப்பதற்கு அரியது' என்பதை எடுத்துக் கூறுவேன்.(18) எதனால் இவ்வாறான சோகத்துடன் கூடிய துக்கம் ஏற்பட்டதோ, அஃது உம்மால் பரதரிடமும், மேலும் சத்ருக்னரின் முன்னிலையிலும் கூடச் சொல்லப்படக்கூடாது" {என்றான் சுமந்திரன்}[3].(19)
[3] தசரதன் தனக்கு ஒரு ரகசியத்தைச் சொன்னான். அதை வெளிப்படுத்தக் கூடாது என்றான். ஆனால் இப்போது லக்ஷ்மணனின் துயரத்தைப் போக்கவும், விதியின் உண்மையை விளக்கவும் சுமந்திரன் அதைச் சொல்கிறான். அந்த ரகசியம் என்ன? துர்வாச முனிவர் வசிஷ்டர் முன்னிலையில் கூறிய தீர்க்கதரிசனம்: இராமன் நீண்ட காலம் அரசாள்வான். பின்னர் காலத்தின் கட்டளையால், சீதையைப் பிரிவான்; லக்ஷ்மணனையும் பிரிவான்; பரதன், சத்ருக்னன் ஆகியோரிடமிருந்தும் பிரிவு ஏற்படும். இவை எல்லாம் ராமனின் விருப்பத்தால் அல்ல; விதியின் இயக்கத்தால் நடைபெறும். இதைத்தான் சுமந்திரன் சொல்கிறான். அடுத்த சர்க்கத்தில் ரகசியத்தைச் சொல்வான். மேலும் இந்த சர்க்கம், அடுத்த சர்க்கம் ஆகியவற்றில் உள்ள செய்திகள் ஒட்டக்கூத்தர் உத்தர காண்டத்தில் இல்லை.
சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, அவனுடைய கம்பீர அர்த்த பதங்களை {சுமந்திரனின் ஆழ்ந்த பொருள் அமைந்த சொற்களைக்} கொண்ட மஹத்தான உரையைக் கேட்டு, பிறகு சூதனிடம் {சமந்திரனிடம்}, "உண்மையைக் கூறுவீராக" என்று கூறினான்.(20)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 050ல் உள்ள சுலோகங்கள்: 20
| Previous | | Sanskrit | | English | | Next |
