Tuesday, 28 July 2026

தம்பியர் வருகை | சர்க்கம் – 044 (21)

The arrival of brothers | Sarga-044 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தனக்கு நேர்ந்த பழியைக் குறித்து ஆலோசிப்பதற்குத் தம்பிகளைத் தன்னிடம் வரவழைத்த ராமன்...

இராமனிடம் வந்த தம்பிகள்

மேலும் ராகவன், நண்பர்கள் கூட்டத்தை விடைபெறச் செய்த பிறகு, புத்தியால் நிச்சயம் செய்து கொண்டு, சமீபத்தில் அமர்ந்திருந்த வாயிற்காப்போனிடம் இந்த வசனத்தைக் கூறினான்:(1) "சுபலக்ஷணங்களை உடையவனும், சௌமித்ரியுமான {சுமித்திரையின் மகனுமான} லக்ஷ்மணனையும், மஹாபாக்கியவானான பரதனையும், அபராஜிதனான {வெல்வதற்கரியவனான} சத்ருக்னனையும் சீக்கிரம் அழைத்து வருவாயாக" {என்றான் ராமன்}.(2)

வாயிற்காப்போன், ராமனின் வசனத்தைக் கேட்டு, தலைக்கு மேல் கைகளைக் குவித்து, லக்ஷ்மணனின் கிருஹத்திற்குச் சென்று, தடுப்பாரின்றி {உள்ளே} பிரவேசித்தான்.(3) கைகளைக் குவித்து {வணங்கி}, மஹாத்மாவை {லக்ஷ்மணனை} வாழ்த்தி {பின்வருமாறு} சொன்னான், "இராஜா {ராமர்} உம்மைக் காண விரும்புகிறார். அங்கே செல்வீராக. தாமதம் வேண்டாம்" {என்றான்}.(4)

சௌமித்ரி {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணன்}, ராகவனின் சாசனத்தை {கட்டளையைக்} கேட்டு "அப்படியே {ஆகட்டும்}" என்று {சொல்லி}, ரதத்தில் ஏறி ராகவனின் நிவேசனத்திற்கு {இருப்பிடத்திற்கு} விரைந்தான்.(5) வாயிற்காப்போன், புறப்பட்டுச் செல்லும் லக்ஷ்மணனைக் கண்டு, சமீபத்தில் இருந்த பரதனிடம் கைகளைக் குவித்து, அங்கே பரதனை[1] வாழ்த்தி {பின்வருமாறு} உரைத்தான்:(6) "இராஜா உம்மைக் காண விரும்புகிறார்" என்று ராமனால் ஏவப்பட்டு வினயத்துடன் {பணிவுடன்} சொல்லப்பட்ட வாயிற்காப்போனின் வசனத்தை பரதன் கேட்டான்.(7) பலவானான பரதன், ஆசனத்திலிருந்து துரிதமாக எழுந்தான்; பாதநடையாகவே சென்றான். அவசரமாகக் கைகளைக் குவித்தவன் {வாயிற்காப்போன்}, புறப்பட்டுச் செல்லும் பரதனைக் கண்டான்.(8) 

[1] மூலத்தில் 'பரதம்' என்ற சொல் இருமுறை வந்துள்ளது. சில உரையாசிரியர்கள் இதைச் சொல் அடுக்கு எனக் கொண்டு, அருகில் இருந்த பரதனை, அவனது மாளிகையிலேயே பரதனை நோக்கிச் சொன்னான் என உரைப்பர். பல பதிப்புகளில் இரண்டாவது 'பரதம்' என்ற சொல் 'த்வரிதம்' என மாற்றப்பட்டு, "அங்கே பரதனை வேகமாக வாழ்த்திச் சொன்னான்" என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

சத்ருக்னனின் பவனத்திற்குச் சென்று, பிறகு {பின்வரும்} வாக்கியத்தையே சொன்னான், "இரகுசிரேஷ்டரே {ரகு குலத்தில் சிறந்த சத்ருக்னரே}, வாரும். இராஜா உம்மைக் காண விரும்புகிறார்; வருவீராக" {என்றான்}.(9) இலக்ஷ்மணன் முன்னரே சென்றுவிட்டான்; பெரும்புகழ்பெற்றவனான பரதனும் {அவ்வாறே சென்றுவிட்டான்}. அவனுடைய {வாயிற்காப்போனின்} வசனத்தைக் கேட்டு, பிறகு சத்ருக்னன் பரமாசனத்திலிருந்து {எழுந்தான்}[2].(10) சிரசினால் தரணீயை {தலையால் தரையைத்} தொட்டு, எங்கே ராகவனோ {எங்கே ராமன் இருந்தானோ அங்கே} சென்றான். பிறகு வாயிற்காப்போன் {ராமனின் அரண்மனைக்கு} வந்தபோது, ராமனிடம் கைகளைக் குவித்தவனாக, "உமது பிராதாக்கள் {உம்முடன் பிறந்த தம்பிகள்} அருகில் வந்து சேர்ந்தனர்" என்று தெரிவித்தான்.(11) 

[2] தர்மாலயப் பதிப்பில், "அதிவேகமாய் நடப்பவனாய் உடனே சத்ருக்னனது மாளிகைக்கு வந்து சேர்ந்து விஷயத்தை அஞ்சலிஹஸ்தனாகி இப்படி விண்ணப்பம் செய்தான்: "ரகூத்தம! மன்னர் தேவரீரை பார்க்க திருவுள்ளங்கொண்டிருக்கிறார். புறப்படும். போய்ச்சேரும். முதலில் லக்ஷ்மணரும் பின்னர் மஹாயசஸ்வியாகிய பரதரும் போய் இருக்கிறார்கள்". சத்ருக்னர் அவனது சொல்லை கேட்ட க்ஷணமே ஸ்ரீராகவர் எவ்விடத்திலோ அவ்விடத்திற்கே சிறந்த ஆஸனத்தை விட்டெழுந்து பூமியில் முடிதாழ்த்தி நமஸ்கரித்து சென்றார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ஸேவகன் சத்ருக்கினனது ஸதனஞ் சென்று, அவரைக் கைகூப்பி வணங்கி, "ஸ்வாமி! நம்மரசர் தேவரீரைக் காணவேண்டு மென வரவழைக்கின்றனர்; இளையபெருமாளும் பரதாழ்வானும் முன்னரே அவ்விடத்திற் கெழுந்து சென்றனர்கள்" என வுரைத்தனன். அதனைச் செவியுற்றவளவில் சத்துருக்கினனெழுந்து அவ்விடத்திலேயே ஸ்ரீராகவனைத் திக்கு நோக்கி நமஸ்கரித்து, அவரது மந்திரநோக்கிச் சென்றனர்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "வாயிற்காப்போன், விரைவாகச் சத்ருக்னன் இல்லம் சென்று, அவனைப் பார்த்துக் கைகூப்பி, "ரகுகுலத் திலகமே! அரசர் தங்களைக் காண விரும்புகிறார். உடனே வாருங்கள்" என்று தெரிவித்தான். "லட்சுமணரும், பரதரும் முன்னமேயே சென்று விட்டார்கள்" என்றும் கூறினான். அவன் சொல்லியவற்றைக் கேட்ட சத்ருக்னன் சிம்மாசனத்திலிருந்து உடனே எழுந்து (இராமனை மனத்தில் தியானித்து) தரையில் விழுந்து வணங்கிவிட்டு, இராமன் இருப்பிடத்திற்குச் சென்றான்" என்றிருக்கிறது.

குமாரர்கள் {இளவரசர்களான தம்பிகள்} வந்ததைக் கேட்டுக் கவலையால் கலங்கிய இந்திரியங்களை {புலன்களை} உடையவனாக, கீழ்நோக்கிய முகத்தை உடையவனாக, தீனமான மனத்தை உடையவனாக வாயிற்காப்போனிடம் {ராமன் பின்வரும்} வசனத்தைக் கூறினான்:(12) "குமாரர்களை {தம்பிகளைத்} துரிதமாக என் சமீபத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக. எனது ஜீவிதம் அவர்களிடம் உள்ளது. அவர்கள் எனக்குப் பிரியமான பிராணன்கள் {ஆவர்" என்றான் ராமன்}.(13)

நரேந்திரனால் {மனிதர்களின் தலைவனான ராமனால்} ஆணையிடப்பட்ட பிறகு, சக்ர தேஜஸ்விகளான {இந்திரனுக்கு நிகரான ஒளியும் ஆற்றலும் கொண்டவர்களான} அந்தக் குமாரர்கள் {தம்பிகள்}, பணிவுடன் கைகளைக் கூப்பியவர்களாக, சமாஹிதம் கொண்டவர்களாக {உள்ளே} நுழைந்தனர்.(14) பிறகு அவர்கள் கிரஹணத்துடன் கூடிய சசினனை {சந்திரனைப்} போலவும், சந்திப் பொழுதை அடைந்து, பிரபையிழந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும் இருந்த அவனுடைய {ராமனின்} முகத்தைக் கண்டனர்.(15) மதிமிக்கவனான ராமனின் கண்ணீர் நிறைந்த நயனங்களையும் {கண்களையும்}, சோபையிழந்த பத்மத்தை {பொலிவிழந்த தாமரையைப்} போன்ற அவனது வாடிய முகத்தையும் அவர்கள் கண்டனர்.(16) பிறகு அவர்கள் அனைவரும், துரிதமாகத் தங்கள் தலைகளால் ராமனின் பாதங்களை வணங்கி, சமாஹிதர்களாக {அமைதியுடன்} இருந்தனர். இராமனோ, கண்ணீர்த்துளிகளைச் சிந்தினான்.(17)

மஹாபலவான் {வலிமைமிக்கவனான ராமன்}, இரு கைகளாலும் அவர்களை எழுப்பி, மேலும் {அவர்களைத்} தழுவிக் கொண்டு, "ஆசனங்களில் அமருங்கள்" என்று கூறிய பிறகு, உண்மையில் {பின்வரும்} வாக்கியத்தை உரைத்தான்:(18) "நரேஷ்வரர்களே {மனிதர்களின் தலைவர்களே}, என்னுடைய சர்வமும் நீங்களே; என்னுடைய ஜீவிதமும் நீங்களே. மேலும், உங்களால் நிலைநாட்டப்பட்ட ராஜ்ஜியத்தை {நான்} பாலனம் செய்கிறேன் {ஆள்கிறேன்}.(19) நரேஷ்வரர்களே, நீங்கள் சாஸ்திரங்களின் அர்த்தங்களை அறிந்தவர்களாகவும், புத்தியாலும் நன்கு உறுதியடைந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். என் அர்த்தம் {காரியமானது} ஒன்றுகூடி ஆராயப்பட வேண்டியதாக இருக்கிறது" {என்றான் ராமன்}[3].(20)

[3] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், சீதை வனம்புகு படலம், 729ம் பாடல் பின்வருமாறு:

என்உயிர் நீங்கள் என்வலி நீங்கள் 
  என்னுறு துணைவரும் நீங்கள்
என்நிதி நீங்கள் என்தவம் நீங்கள் 
  என் பிராதாக்களும் நீங்கள்
என் அரசு இன்பம் நீங்களே ஆனால் 
  என் பழி உம்பழி புகழும்
அன்னதே யாகும் ஆனபின் யான் இங்கு 
  அறைகுவன் அனைவரும் கேண்மின்.

பொருள்: என் உயிரும் நீங்கள், வலிமையும் நீங்கள், துணைவரும், நிதியும், தவமும், சகோதரர்களும், அரசும், இன்பமும் நீங்களே; ஆனால், என் பழியும் உம் பழியேயாகும். என் புகழும் உம் புகழேயாகும். அப்படியான பின்பு யான் இங்கு ஒளிக்காமல் சொல்வேன். நீங்கள் அனைவரும் கேளுங்கள்.

காகுத்ஸ்தன் {ராமன்} அவ்வாறு பேசுகையில், மிகுந்த கவனத்துடன் இருந்த அனைவரும் {தம்பிகள் மூவரும்} "இராஜா என்னதான் கூறப்போகிறாரோ" {என்று} மனக்கலக்கமுற்றனர்.(21)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 044ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி