Monday, 5 October 2026

மீண்டும் வால்மீகி | சர்க்கம் – 071 (24)

Valmiki again | Sarga-071 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுராவிலிருந்து அயோத்திக்குத் திரும்பும் வழியில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கிய சத்ருக்னன்; வால்மீகியின் பாராட்டு; இராமகதையின் இனிய கானத்தைக் கேட்டது.

மீண்டும் வால்மீகி

பிறகு, பன்னிரண்டாம் வருஷத்தில், சத்ருக்னன், அற்ப அளவிலான பணியாளர்களுடனும் பலத்துடனும் {படையுடனும்}, ராமனால் ஆளப்பட்ட அயோத்திக்குச் செல்ல விரும்பினான்.(1) பிறகு, அவன், மந்திரிகளை முன்னணியாகக் கொண்டவர்களையும், முக்கியப் படைத்தலைவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, சிறந்த ஹயங்களுடனும் {குதிரைகளுடனும்}, நூறு ரதங்களுடனும் சென்றான்.(2) பெரும்புகழுடைய அந்த ரகுநந்தனன் {ரகு வம்சத்தவரை மகிழ்விப்பவனான சத்ருக்னன்}, கணக்காக ஏழெட்டுத் தங்குமிடங்களில் {இரவுத் தங்கல்களில்} தங்கிச் சென்று, வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்து வாசம் செய்தான்.(3) அந்தப் புருஷரிஷபன் {மனிதர்களில் காளையான சத்ருக்னன்}, வால்மீகியின் பாதங்களை வணங்கிய பின்னர், முனிவரின் கையில் இருந்து பாத்யம், அர்க்கியம், ஆதித்யம் {விருந்தோம்பல்}[1] ஆகியவற்றை ஏற்றுக் கொண்டான்.(4) அந்த முனிவர் {வால்மீகி}, மஹாத்மாவான சத்ருக்னனுக்கு பலவகையான, மிக இனிய கதைகளை ஆயிரக்கணக்கில் கூறினார்.(5)

[1] பாத்யம் என்பது விருந்தினரின் பாதங்களைக் கழுவுவதற்காக அளிக்கப்படும் நீர். அர்க்கியம் என்பது மதிப்பிற்குரிய விருந்தினருக்கு மரியாதையாக அளிக்கப்படும் நீர். ஆதித்யம் என்பது விருந்தினருக்குச் செய்யப்படும் உபசாரங்களையும் விருந்தோம்பலையும் குறிக்கும். இவை பாரதத்தின் பண்டைய விருந்தோம்பல் மரபில் சிறப்பு விருந்தினரை வரவேற்கும் முறைகளாகும்.

மேலும் அந்த {வால்மீகி} முனிவர், லவணனின் வதம் தொடர்பான {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார், "லவணனைக் கொன்ற உன்னால் செய்வதற்கு மிக அரிய கர்மம் {செயல்} செய்யப்பட்டிருக்கிறது.(6) சௌம்யா {மென்மையானவனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, படைகளுடனும், வாஹனங்களுடனும் கூடியவர்களாக, யுத்தம் செய்த மஹாபலவான்களான பார்த்திபர்கள் பலர் லவணனால் கொல்லப்பட்டுள்ளனர்.(7) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, அந்தப் பாபி {லவணன்} உன்னால் லீலையாக {விளையாட்டாக / எளிதாகக்} கொல்லப்பட்டான். உன் தேஜஸ்ஸால் ஜகத்தின் பயமும் {உலகத்தின் அச்சமும்} அங்கே தணிந்தது.(8) இராவணனின் கோரமான வதம் மஹத்தான யத்னத்தால் {பெரும் முயற்சியால்} செய்யப்பட்டது. இந்த மிகப் பெரும் கர்மமோ உன்னால் யத்னமின்றி {முயற்சியின்றி} செய்யப்பட்டது.(9) இலவணன் கொல்லப்பட்டதில் தேவர்களுக்குப் பரமப்ரீதியுண்டானது. மேலும் அனைத்து பூதங்களுக்கும் {உயிரினங்களுக்கும்} ஜகத்துக்கும் {உலகத்துக்கும்} பிரியமானது {விருப்பமான ஒரு காரியம்} செய்யப்பட்டது.(10) புருஷரிஷபா, ராகவா {ரகு குலத்தவனே}, வாசவனுடைய {இந்திரனுடைய} சபையில் அமர்ந்திருந்த என்னால்[2], அந்த யுத்தம் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே காணப்பட்டது.(11) சத்ருக்னா, என் ஹிருதயத்திலும் பரமப்ரீதி நிலைத்திருக்கிறது. உன் உச்சந்தலையை முகர்ந்து கொள்வேன்; இது சினேகத்தின் உயர்ந்த கதியாகும் {வெளிப்பாடு / நிறைவு ஆகும்}" {என்றார் வால்மீகி}.(12)

[2] இராமாயணத்தில் வால்மீகியே தாம் இந்திரசபையில் இருந்ததாகக் கூறும் இத்தகைய குறிப்பு வேறிடங்களில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த சர்க்கம் முழுமையும் ஆங்கிலச் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இல்லை.

மஹாமுனிவர் {வால்மீகி} இவ்வாறு கூறிவிட்டு, சத்ருக்னனின் உச்சந்தலையை முகர்ந்து, அவனுக்கும், அவனைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கும் ஆதித்யம் {விருந்தோம்பல்} செய்தார்.(13) நரர்களுள் சிறந்தவனான அவன் {சத்ருக்னன்} உணவருந்தி முடித்த அந்தக் காலத்தில் {அவ்வேளையில்} உத்தமமான கீதமாதுர்யத்துடன் {கானத்தின் இனிமையுடன்} ராமசரிதம் முறையாகப் பாடப்படுவதைக் கேட்டான்.(14) அந்தக் காலத்தில் {அவ்வேளையில்} தந்த்ரீயும் {வீணையும்} லயமும் நன்கு பொருந்தியதும், மூன்று ஸ்தானங்களின் கரணங்களுடன் {குரல் வெளிப்பாட்டு முறைகளுடன்} கூடியதும், சம்ஸ்கிருதமானதும் {சம்ஸ்கிருத மொழியில் அமைந்ததும் / செம்மைப்படுத்தப்பட்டதும்}, {இலக்கண} லக்ஷணத்துடன் கூடியதும், சீரான தாளத்துடன் அமைந்ததும், முன்பு இயற்றப்பட்டதுமான ராமசரிதத்தைக் கேட்டான்[3].(15) அந்தப் புருஷசார்தூலன் {மனிதர்களில் புலியான சத்ருக்னன்}, முன்பு நிகழ்ந்தவற்றை நிகழ்ந்தவாறே கூறும் அந்த உண்மையான அக்ஷரங்களை {சொற்களைக்} கேட்டு, கண்ணீர் மல்கத் தன்னுணர்வை இழந்தான்.(16) ஒரு முஹூர்த்தம் தன்னுணர்வற்றவனைப் போல இருந்த அவன், மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டு, அந்த கீதத்தில் நிகழ்ந்தவாறே கூறப்பட்டவற்றை அப்போது நிகழ்ந்து கொண்டிருப்பவை போலவே கேட்டான்.(17)

[3] இச்சுலோகம் ராமசரிதம் எவ்வாறு இசையுடன் பாடப்பட்டது என்பதை இசை மற்றும் மொழியியல் கலைச்சொற்களால் விளக்குகிறது. உரையாசிரியர்கள், "தந்த்ரீ" என்பதை "வீணை" என்றும், "லய" என்பதை "தாளத்தின் கால அளவு" என்றும் விளக்குகின்றனர். "த்ரிஸ்தானகரணான்விதம்" என்பதிலுள்ள ‘மூன்று ஸ்தானங்கள்’ என்பது "ஹிருதயம் (மார்பு), கண்டம் (தொண்டை), முகம்" ஆகிய ஒலி பிறக்கும் மூன்று இடங்களைக் குறிக்கிறது; இம்மூன்று ஸ்தானங்களிலும் முறையாக ஒலி எழுப்பிப் பாடப்பட்டதென்பது பொருள். சம்ஸ்கிருத அகராதிகளிலும் இச்சுலோகத்தையே மேற்கோளாகக் காட்டி "த்ரிஸ்தானம்" என்பதற்கு தலை/வாய் சார்ந்த மேற்பகுதி, கழுத்து, மார்பு ஆகிய மூன்று குரலிடங்கள் என்று விளக்கம் தரப்படுகிறது. மூன்றாவது ஸ்தானத்தை ‘முகம்’ அல்லது தலை/வாய் சார்ந்த மேற்பகுதி என்று விளக்குவதில் ஆதாரங்களிடையே சிறு வேறுபாடு காணப்படுகிறது. மேலும், உரையாசிரியர்கள் "ஸம்ஸ்க்ருதம்" என்பதை இங்கு ‘செம்மைப்படுத்தப்பட்டது’ என்ற பொதுப்பொருளில் கொள்ளாமல், "ஸம்ஸ்க்ருதஶப்தரூபம்" ‘சம்ஸ்கிருதச் சொற்களால் அமைந்தது’ என்று விளக்குகின்றனர். "லக்ஷணம்" என்பது "வியாகரண லக்ஷணம்", அதாவது இலக்கண விதிகள்; "ஸமதாலஸமன்விதம்" என்பது பாடலுக்கேற்ற சீரான தாளத்துடன் அமைந்தது என்று விளக்கப்படுகிறது. ஆகவே இப்பகுதி, இராமசரிதம் வீணை, லயம், மூன்று குரலிடங்களின் முறையான ஒலியெழுப்பல், சம்ஸ்கிருத மொழியின் இலக்கணச் செம்மை, சீரான தாளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த இசைப்பாடலாகப் பாடப்பட்டதை விவரிக்கிறது.

இவ்விசைநுட்பச் சொற்களுக்கு வெவ்வேறு பதிப்புகள் சற்றே வேறுபட்ட விளக்கங்களைத் தருகின்றன. தர்மாலயப் பதிப்பில், "அந்தக் காலத்தில் அந்த புருஷோத்தமர் போஜனமானபிறகு எப்படிப்பட்ட குறைக்கும் இடங்கொடாததாய், வீணையின் லயத்துடன் வாசிக்கப்படுகிறதாயும் பாட்டில் த்ரீஸ்தான மென்கிற ஸ்வரபேதங்களின் நிபுணத்வம் பெற்று விளங்குகிறதாயும், தாளத்திற்கேற்றபடி இசை ஒத்திருக்கிறதாயும் ஸம்ஸ்கிருதபாஷையில் ஒரு லக்ஷணம் அமையப்பெற்றதாயும் ஒப்புயர்வில்லாத ஸ்ரீராமரது கிருத்தியங்களைப்பற்றியதாயும் மனோஹரமாயிருக்கின்ற பாட்டைக் கேட்டார்" என்றிருக்கிறது.

ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "ரகுவீரன் வால்மீகியாச்சிரமத்தில் வினோதமாக விருந்து அமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதிமதுரமான ஸங்கீதமொன்று கேட்டது. ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்கிருத பாஷையில் இசையொத்த தாள லயைகளுடனே யாழிலிட்டு சுலக்ஷணமாக மறைவிலே பாடப்பட்டது" என்றிருக்கிறது.

கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "உணவு அருந்திய பின்னர், ஓய்வான அந்த நேரத்திற்கு ஏற்ற செவிக்கினிய இசையும், சுவையும் பொருந்திய இராமனுடைய வரலாற்றைக் கேட்டு மகிழ்ந்தான், சத்ருக்னன். அப்போது அவன் கேட்ட இராமகாதை, செய்யுள் இலக்கியமாக முன்னரே இயற்றப்பட்டிருந்தது. இராமகாதை என்ற குரலிசை வீணை ஒலியோடு ஒத்து வந்தது. குரலிசையில் சொற்கள் எழவேண்டிய இருதயம், கழுத்து மற்றும் தலைப்பகுதியிலிருந்து மந்த்ரம்-மத்யமம்-தாரம் முதலான ஸ்வர பேதங்களுடன் தெளிவான உச்சரிப்புடன் சொற்கள் வெளிப்பட்டன. நன்கு செம்மைப்பட்ட மொழியில் இலக்கணம், சந்தஸ், இலக்கிய விதி, இசை விதி ஆகியவற்றிற்கேற்ப அமைக்கப்பட்டு உரிய தாளங்களுடன் பாடப்பட்டது" என்றிருக்கிறது.

அந்த ராஜனை {சத்ருக்னனைப்} பின்தொடர்ந்து வந்தவர்கள் அந்த கீதத்தின் சிறப்பைக் கேட்டு, முகம் தாழ்த்தி மனம் நெகிழ்ந்தவர்களாகி, "ஆச்சர்யம்" என்றும் கூறினர்.(18) அங்கே இருந்த சைனிகர்கள் {படைவீரர்கள்}, பரஸ்பரம் {ஒருவரோடொருவர் பின்வருமாறு} பேசிக் கொண்டனர், "இஃது என்ன? நாம் எங்கே இருக்கிறோம்? இது ஸ்வப்ன தரிசனமா? {இது கனவில் காணும் காட்சியா?}(19) நாம் முன்பு கண்ட அந்த அர்த்தத்தையே {நிகழ்ச்சியையே} இந்த ஆசிரமபதத்தில் நன்கமைக்கப்பட்ட கீதமாக {இசை வடிவில்} மீண்டும் இப்போது கேட்கிறோம். இது ஸ்வப்னமா? {கனவா?}[4]"(20) பெரும் வியப்படைந்த அவர்கள், சத்ருக்னனிடம், "நரர்களில் சிறந்தவரே, முனிபுங்கவரான வால்மீகியிடம் இதை நன்றாகக் கேட்டறிவீராக" என்று கூறினர்.(21)

[4] தர்மாலயப் பதிப்பில், "விஷயம் ஒவ்வொன்றும் முன் நமக்கு கட்புலனாயிருந்தது. ஆச்சிரமத்தில் அதை மீளவும் ஒப்புயர்வில்லாதபடி பாட்டாய்ப் புனைக்கப்பட்டதாய் நாம் இப்போது கேட்கின்றோம். இது ஸ்வப்னமா என்ன?" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "முன் யாம் கண்டவையாவும் இப்பொழுது இவ்வாச்சிரமத்தில் கேட்கின்றோமே; கனவில் இவ்விதமான கீதமும் கேட்கலாகுமோ?" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "'நாம் முன்னர் ஒரு சமயம் கண்ணால் பார்த்த நிகழ்ச்சிகளை, அப்போது நடந்த அதே மாதிரியே, இப்போது இந்த ஆசிரமத்தில் இசை வடிவில் கேட்டுக் கொண்டிருக்கிறோமே!' என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்" என்றிருக்கிறது.

சத்ருக்னனோ, கௌதூஹலம் {ஆவல்} கொண்டிருந்த அனைவரிடமும் {பின்வருமாறு} கூறினான், "சைனிகர்களே, இங்கே இத்தகையதை நாம் கேட்டறிவது தகுந்ததல்ல.(22) இங்கே இந்த முனிவருடைய ஆசிரமத்தில் பல ஆச்சர்யங்கள் நிகழ்கின்றன. ஆனால் கௌதூஹலத்தால் {ஆவலால்} அந்த மஹாமுனிவரை ஆராய்வது தகுந்ததல்ல".(23) இரகுநந்தனன், சைனிகர்களிடம் அந்த வாக்கியத்தை இவ்வாறு கூறிவிட்டு, அந்த மஹரிஷியை வணங்கியபிறகு, தன் நிவேசத்திற்கு {இருப்பிடத்திற்குச்} சென்றான்[5][6].(24)

[5] வால்மீகி ஆசிரமத்தின் அருகிலேயே இருக்கும் சீதையையோ, சீதையின் மகன்களையோ சந்தித்ததாகவோ, நினைத்ததாகவோ கூட இந்த சர்க்கத்தில் குறிப்பில்லை. உத்தரராமாயணம் 66ஆம் சர்க்கத்தின் 12ஆம் சுலோகத்தில் குசன், லவன் பிறந்ததும், சீதையிடம் சத்ருக்னன் பேசினான் என்று வருகிறது. ஆனால் பல்வேறு பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் 66ஆம் சர்க்கத்தில் சத்ருக்னன் குழந்தைகள் பிறந்ததை அறிந்தான் என்பது மட்டுமே உறுதி ஆகிறது. அவன் அவர்களை நேரில் பார்த்தான் என்று எல்லாப் பதிப்புகளும் ஒரேவிதமாகக் கூறவில்லை. சீதைக்குக் குழந்தைகள் பிறந்த செய்தியை மட்டுமே அறிந்திருந்தான் என்று கொண்டாலும், பன்னிரண்டாண்டுகள் கழித்து மீண்டும் வால்மீகியின் ஆசிரமத்திற்கு வரும் சத்ருக்னன், தன் அண்ணியையோ, அண்ணனின் குழந்தைகளையோ தேடியதாக இந்த சர்க்கத்தில் ஒரு சிறு குறிப்புமில்லை. இராமசரிதத்தைப் பாடியவர்கள் யார் என்று இந்த சர்க்கம் சொல்லவில்லை. அவர்கள் குசலவர்களே என்பது பின்வரும் சர்க்கங்களில் வெளிப்படுகிறது.

[6] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், சம்புவன் வதைப் படலம், 903, 904ம் பாடல்கள் பின்வருமாறு:

அன்ன தன்மையனாய் ஆறிரண்டு ஆண்டு அவ்
    வணிநகர் அரசு வீற்றிருந்து
தன்னெடும்படையை அங்குவைத்ததன்பின்
    தானையும் தலைவரும் தானும்
மன்னவன் இராமன் மலரடி பணிவான்
    வல்வினை எனும் விலங்கு அறுத்து
நன்னெறி கண்ட காட்சி வான்மீகி
    நலங்கொள் ஆச்சிரமத்தை நண்ணி.(903)

வண்ண ஒண்சிலைக்கை இளையவன்தன்னை
    வரன்முறை பூசித்து நாங்கள்
எண்ணிய எண்ணம் முடித்தனை என்ன
    எழில்முனி இயம்பி அவ்விரவில்
புண்ணிய கதைகள் உரைத்தன கேட்டுப்
    புலர்ந்தபின் பூம்பொழில் அயோத்தி
நண்ணி நன்னகரி எதிர்கொளப் புகுந்து
    நாயகன் திருவடி பணிந்தான்.(904)

பொருள்: அந்தத் தன்மையனாய் பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் அந்த மதுநகரில் அரசனாக வீற்றிருந்து, தனது பெரும்படையை ஆட்சியில் அங்கு நிலைபெற வைத்துவிட்டுப் பின்பு தனக்கேயுரிய சிறிய சேனையும் படைத்தலைவர்களும் தானுமாக, தனக்கு மன்னனாகிய இராமனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பணியும் பொருட்டு, வலிய இருவினைகளாகிய விலங்கினை அறுத்துவிட்டு வீட்டு நெறியைக் கண்ட அறிவுக் காட்சியனாகிய வான்மீகியின் நலன் பொருந்திய தவக்குடிலை அடைந்து.(903) வண்ணம்பூசப்பெற்ற ஒளிவாய்ந்த வில்லையேந்திய கையையுடைய இராமனுக்கு இளையவனாகிய தன்னை, மேலான முறையில் உபசரித்து, "நாங்கள் எண்ணிய எண்ணத்தை முடித்துவிட்டாய்", என்று அவ்விரவில் அவர் சொல்லிய புண்ணிய கதைகளைக் கேட்டுவிட்டு விடிந்த பின்பு, மலர்ப்பொழில்கள் சூழ்ந்த அயோத்தி நகரத்தை அடைந்து அந்த நகரம் எதிர்கொள்ளப் புகுந்து தனக்குத் தலைவனாகிய இராமன் திருவடிகளைப் பணிந்தான். ஒட்டக்கூத்தரில் ஆசிரமத்தில் ஓர் இரவு கதை கேட்டதோடு நிகழ்ச்சி முடிகிறது. ராமசரித கானமோ வீரர்களின் வியப்போ அங்கே இல்லை.


உத்தர ராமாயணம் சர்க்கம் – 071ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி