Nimi and Vasishtha | Sarga-055 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரஸ்பரம் சபித்துக் கொண்ட நிமியும், வசிஷ்டரும்...
நிருகருடைய இந்த சாபத்தின் விரிவான விவரம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. ஒருவேளை, கேட்பதில் சிரத்தை இருந்தால், இப்போது மற்றொரு கதையைக் கேட்பாயாக" {என்றான் ராமன்}.(1)
இராமனால் இவ்வாறு கூறப்பட்ட சௌமித்ரியோ {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணனோ} மீண்டும், "நிருபரே {மன்னரே}, ஆச்சரியமான கதைகளில் ஒருபோதும் எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை" {என்று} கூறினான்.(2)
இக்ஷ்வாகுநந்தனனான ராமன், லக்ஷ்மணனால் இவ்வாறு கூறப்பட்டபோது, உயர்ந்த தர்மம் நிறைந்த {ஒரு} கதையை உரைக்கத் தொடங்கினான்:(3) "மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களின் ராஜாவான நிமி என்ற பெயருடையவர், பன்னிரெண்டாவது புத்திரராகவும் {இக்ஷ்வாகுவின் பன்னிரெண்டாவது மகனாகவும்}, வீரியத்திலும், தர்மத்திலும் நன்கு நிலைபெற்றவராகவும் இருந்தார்.(4) வீரியசம்பன்னரான {வீரியம் நிறைந்த} அந்த ராஜா, {முனிவர்} கௌதமரின் அருகில், தேவ புரத்திற்கு {அமராவதிக்கு} நிகரான புரத்தை {நகரத்தை} நிறுவினார்.(5)
பெரும் புகழுடைய ராஜரிஷியான நிமி எங்கே {அந்நகரத்தை} நிறுவினாரோ, {அங்கே அந்த} புரத்திற்கு நன்கு அமைந்த {சிறப்பாக அமைந்த} பெயர் வைஜயந்தம்[1] என்று {அப்போது} கேள்விப்படப்பட்டது.(6) மாபெரும் புரத்தை {வைஜயந்த நகரத்தை} நிறுவியபிறகு, {தம்} பிதாவின் மனத்தை மகிழ்வித்து, தீர்க்க சத்ரம் என்ற யஜ்ஞத்தைச் செய்ய வேண்டும் என்று அவருக்கு ஒரு புத்தி உண்டானது.(7) பூர்வத்தில் {முதலில்} மனுவின் மகனும், {தம்} பிதாவுமான இக்ஷ்வாகுவை அழைத்து {கலந்தாலோசித்து}, பின்னர், {அந்த நிமி தம் வேள்விக்குப் புரோஹிதராக} பிரம்மரிஷிகளில் முதன்மையான வசிஷ்டரைத் தேர்ந்தெடுத்தார்.(8) பிறகு, இக்ஷ்வாகுநந்தனரான அந்த ராஜரிஷி நிமி, அத்ரியையும், அங்கிரஸையும், மேலும் தபோதனரான பிருகுவையும் {புரோகிதர்களாகத் தேர்ந்தெடுத்தார்}.(9)
[1] நகருக்கு வைஜயந்தம், (இந்திரனது அரண்மனையின் பெயர்) என்று பெயர் கொடுக்கப்பட்டது. அதிக அழகுவாய்ந்ததாக பெயர்பெற்றது. அதில் ராஜரிஷியென பெயர்பெற்ற நிமி வாஸஞ்செய்து வந்தார்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அவர் மஹா சுவரியமுடையவராகி கௌதம முனிவராச்சிரமத்திற்கருகே அமராவதி பட்டணத்திற்கு நிகராக வைஜயந்தமெனப் பெயர்பெற்ற அற்புதமான நகரமொன்றை நிருமிக்கச் செய்து அதில் வசிக்கலாயினார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "பெரும்புகழ் கொண்ட ராஜரிஷியான நிமி வாசம் செய்த நகரம், தேவலோக நகரத்திற்கு இணையாக இருந்ததால், வைஜயந்தம் என்ற அதே பெயர் வைக்கப்பட்டுப் புகழ்பெற்றது" என்றிருக்கிறது. வைஜயந்தம் என்பது இந்திரனுடைய தேவபுரமான அமராவதியுடன் தொடர்புடைய பெயர். அந்நகரம் அமராவதிக்கு நிகரான அழகுடையதாக இருந்ததால் வைஜயந்தம் என்று பெயர்பெற்றிருக்கலாம்.
வசிஷ்டரோ, ராஜரிஷிகளில் சிறந்தவரான நிமியிடம்[2], "நான் பூர்வத்தில் {முன்பே வேள்வி நடத்த} இந்திரனால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். {அதற்கான கால} இடைவெளியை {மட்டும்} காத்திருப்பாயாக" {என்று} சொன்னார்.(10)
[2] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 804ம் பாடல் பின்வருமாறு:சத்துரு காலன் ஆகித்தரணியைக் காத்தோன் தீர்க்கசத்திர யாகம் செய்யச் சமைந்து மாதவத்தின் மிக்கஅத்திரி பிருகு தூய அங்கிரா வசிட்டன் என்னும்மித்திர முனிவர் தம்மை விளித்திட, வசிட்டன் சொல்வான்பொருள்: பகைவர்களுக்கு யமனாகி அழித்துப் பூவுலகத்தைத் தானே ஆண்டு காப்பாற்றிய நிமி, தீர்க்க சத்திர யாகம் என்கின்ற வேள்வியைச் செய்வதற்கு ஒருப்பட்டுப் பெரிய தவத்தில் மிக்க அத்திரி முனிவர், பிருகு முனிவர், தூய்மையுடைய அங்கிரா முனிவர், வசிட்ட முனிவர் என்னும் நட்புமிக்க முனிவர்களை அந்த யாகம் நடத்தும் பொருட்டு அழைத்திட வசிட்ட முனிவன் சொல்கின்றான்.
பிறகு, மஹாவிப்ரரான கௌதமர் {அந்த வேள்வியை} நிறைவேற்றினார். பெரும் தேஜஸ்ஸை உடைய வசிஷ்டரும் இந்திரயஜ்ஞத்தைச் செய்தார்.(11) நராதிபரான நிமியோ, அந்த விப்ரர்களை ஒன்று சேர்த்து அழைத்துவந்து, தன் புரத்தின் சமீபத்தில் ஹிமவத்தின் {இமய மலையின்} அருகில் யஜ்ஞம் செய்தார். இராஜா {நிமி} ஐந்தாயிரம் வருஷங்கள் தீக்ஷையை[3] மேற்கொண்டார்.(12)
[3] ஒரு வேள்வியைத் தொடங்குவதற்கு முன், உடல், மனம், நடத்தை ஆகியவற்றை சில கட்டுப்பாடுகளுடன் தூய்மைப்படுத்திக் கொண்டு வாழ்வதே தீக்ஷை நிலையாகும்.
இந்திரயஜ்ஞம் நிறைவடைந்ததும், குற்றமற்றவரும், பகவானுமான வசிஷ்ட ரிஷி, {நிமி} ராஜனிடம் ஹௌத்ரம் செய்வதற்காக[4] வந்தார்.(13) பிறகு, பிரம்மனின் மகனான வசிஷ்டர், {அப்பணி} கௌதமரால் நிறைவேற்றப்பட்டதைக் கண்டபோது, மஹத்தான கோபத்தால் ஆட்கொள்ளப்பட்டார்.(14) இராஜனைக் காண விரும்பிய அவர், ஒரு முஹூர்த்தம் {கொஞ்ச நேரம்}[5] அமர்ந்திருந்தார். அந்த நாளில் ராஜரிஷி {நிமி} பெரும் நித்திரையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்.(15) பிறகு, மஹாத்மாவான வசிஷ்டருடைய சீற்றம் வெளிப்பட்டது. இராஜரிஷியின் {நிமியின்} தரிசனம் கிடைக்காததால், அவர் {பின்வருமாறு} கூறத் தொடங்கினார்:(16) "பார்த்திபா, எதனால் நீ என்னை அவமதித்து மற்றொருவரைத் தேர்ந்தெடுத்தாயோ, அதனால் உனது தேகம், சேதனம் {உடல், உணர்வு / நனவு / உயிர்} இல்லாததாக ஆகட்டும்[6].(17)
[4] ஹோத்ரு என்பது ரிக் வேத மந்திரங்களை ஓதி யாகத்தில் முக்கிய பங்காற்றும் ரித்விக்கைக் குறிக்கும் சொல்லாகும். ஹௌத்ரம் என்பது ஹோத்ரு செய்யும் செயல் ஆகும். எனவே இங்கே வசிஷ்டர் ஹோத்ருவின் பணியை மேற்கொள்ள வந்தார் என்பது பொருளாகும்.
[5] பொதுவாக ஒரு முஹூர்த்தம் என்பது சுமார் 48 நிமிடங்களைக் கொண்ட கால அளவைக் குறிக்கும்.
[6] தர்மாலயப் பதிப்பில், "அரசனே! என்னை அவமதித்து நீ வேறொருவரை வரித்தாய் என்கிற காரணத்தால் உனது உடல் உயிரை விட்டுப் பிரிந்ததாய் ஆகக்கடவது" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பில், "அரசனே! நீயென்னை யவமதித்து வேறொரு முனிவரை வரித்து வேள்வியை நடத்துகின்றமையின், உனது உயிர் உடலை விட்டுப் பிரியக்கடவது" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "மன்னனே! என்னை அலட்சியப்படுத்திவிட்டு, வேறொருவரைக் கொண்டு யாகத்தை நிறைவேற்றிவிட்டாய். அதனால், உன் உடல் உணர்வற்றதாக ஆகப்போகிறது (சவம் போல் ஆகப் போகிறாய்)" என்றிருக்கிறது. "உயிர்" என்றும், "உணர்வு" என்றும் இந்தப் பதிப்புகளில் பொருள் கொள்ளப்படும் சொல், சம்ஸ்கிருத மூலத்தில் "சேதனம்" என்று உள்ளது. அதன் நேரடிப் பொருள் உணர்வு / நனவு என்பதாகும்.
அந்த சாபம் உரைக்கப்பட்டதைக் கேட்டு விழித்தெழுந்த ராஜரிஷி {நிமி}, குரோதத்தால் மூர்ச்சித்தவரானபோது {கோபத்தால் மயங்கியவரானபோது}, ஆத்திரத்துடன் பிரம்மயோனியானவரிடம் {பிரம்மனின் மகனான வசிஷ்டரிடம் பின்வருமாறு} சொன்னார்:(18) "அறியாத நிலையில் சயனித்துக் கொண்டிருந்தவன் மீது, குரோதத்தால் களங்கப்பட்டவர், மற்றொரு யமதண்டத்தைப் போன்ற சாப அக்னியைச் செலுத்தினார் {உறங்கிக் கொண்டிருந்த என் மீது, கோபத்தால் களங்கமடைந்த நீர், மற்றொரு யமதண்டத்தைப் போன்ற சாபத் தீயைச் செலுத்தினீர்}.(19) எனவே, பிரம்மரிஷியே, உமது தேகமும் சேதனம் இல்லாததாகச் செய்யப்பட்டு, மிக அழகான தோற்றத்துடன் இருக்கும். இதில் சந்தேகமில்லை" {என்றான் நிமி}[7].(20)
[7] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 808ம் பாடல் பின்வருமாறு:அன்னவன் சபிக்கக் கேட்ட அரசர்கோன் அழலில் பொங்கித்தன்வரவு அறியேன் பாயல் சார்ந்து நித்திரையான் பண்ணஎன்னை அந்நியாயத்தாலே சபித்த இச்சாபம் அன்னோன்தன்னையும் சார்க என்று சபித்தனன் தவத்தின் மிக்கான்.பொருள்: அந்த வசிட்ட முனிவன் சபிக்க அதனைக் கேள்வியுற்ற தவத்தின் மிக்கவனாகிய நிமி என்னும் மன்னர் மன்னன் நெருப்புப் போலக் கோபித்து, "தனது வரவினை அறியாது பாயலில் கிடந்து யான் நித்திரை செய்து கொண்டிருக்க, நியாயம் அற்ற முறையில் என்னைச் சபித்த இந்தச் சாபம், அந்த வசிட்டனையும் சார்வதாக" எனச் சபித்தான்.
இவ்வாறு கோபத்தின் வசத்தால் அப்போது நிருப, துவிஜர்களின் இந்திரர்களான இருவரும் அன்யோன்யம் {மன்னர்களிற் சிறந்த நிமியும், இருபிறப்பாளர்களிற் சிறந்த வசிஷ்டருமான அவ்விருவரும் ஒருவரையொருவர்} சபித்துக் கொண்டனர். உடனேயே துல்லிய பிரபாவத்தை உடையவர்களான அவ்விருவரும் தேகமற்றவர்களாக ஆனார்கள் {இணையான ஆற்றல் படைத்தவர்களாக அவ்விருவரும் உடலற்றவர்களானார்கள்}" {என்றான் ராமன்}.(21)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 055ல் உள்ள சுலோகங்கள்: 21
| Previous | | Sanskrit | | English | | Next |
