The Atrocities of Lavanasura and the Sages’ Appeal to Rama | Sarga-061 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலவணனை எதிர்க்க ராமனின் உதவியை நாடிய முனிவர்கள்; லவணனின் பிறப்பும், சிவவரமும், அவனது தந்தையான மது குறித்தும் விளக்கிய சியவனர்...
இவ்வாறு கூறிக் கொண்டிருந்த ரிஷிகளிடம் காகுத்ஸ்தன் {ராமன்}, "முனிவர்களே, என்ன காரியம்? கூறுங்கள். முதலில் உங்களுடைய பயம் நீங்கட்டும்" என்ற வாக்கியத்தைக் கூறினான்.(1)
அவ்வாறு காகுத்ஸ்தன் கூறியபோது, பார்கவர் {பிருகு வம்சத்தில் தோன்றிய சியவனர்}, "நரேஷ்வரா {மனிதர்களின் தலைவா, ராமா}, இந்த தேசத்தின் {இடத்தின்} பயங்களுக்கு எது மூலமோ {காரணமோ} அதைக் கேட்பாயாக.(2) இராஜனே, பூர்வத்தில் கிருதயுகத்தில், லோலையின் மூத்த புத்திரனும், தைத்தியனும், மஹாபலமிக்கவனும், மது என்ற பெயருடையவனுமான மூத்த மஹாசுரன் இருந்தான்.(3) அவன் பிரஹ்மண்யனாகவும் {பிராமணர்களிடம் அன்புடையவனாகவும்}, சரண்யனாகவும் {சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவனாகவும்}, புத்தியில் சிறந்து நிலைபெற்றவனாகவும் இருந்தான். பெருந்தன்மைமிக்க ஸுரர்களிடம் {தேவர்களிடம்} அவனுக்கு ஒப்பற்ற பிரீதி {அன்பு} இருந்தது.(4) வீரியசம்பன்னனான {வீரம் நிறைந்தவனான} அந்த மது, தர்மத்தில் நன்கு நிலைபெற்று, ருத்திரப்ரீதிக்காக {சிவனின் மகிழ்ச்சிக்காகப்} பல்லாயிரம் வருஷங்கள் தபம் செய்தான்.(5) அவனிடம் பிரிதீயடைந்த ருத்திரன், அவனுக்கு வரமளிக்க வந்தான். மேலும், ருத்திரனின் பஹுமானத்தால் {பெரும் மதிப்பினால்} அவனுக்கு அற்புதமான வரம் கொடுக்கப்பட்டது.(6)
பெரும்பிரீதியடைந்த மஹாத்மா {சிவன்}, தன் சூலத்திலிருந்து, மஹாவீரியமும், மஹாபிரபையும் கொண்ட {பேராற்றலும், பேரொளியும் கொண்ட} சூலத்தை உருவியெடுத்து {பிரித்தெடுத்துக்} கொடுத்தான். மேலும் இந்த வாக்கியத்தையும் சொன்னான்:(7) "எனக்கு ப்ரஸாதம் {மகிழ்ச்சி / மனநிறைவு} உண்டாக்கும் வகையில் உன்னால் இந்த ஒப்பற்ற தர்மம் செய்யப்பட்டது. பரமப்ரீதியுடன் கூடியவனாக {இந்த} உத்தம ஆயுதத்தை {சூலத்தைக்} கொடுக்கிறேன்.(8) மஹாஸுரா {பெரும் அசுரா}, எதுவரையில் நீ ஸுரர்களுடனும், விப்ரர்களுடனும் {வேதம்பயின்ற பிராமணர்களுடனும்} விரோதம் கொள்ளமாட்டாயோ, அதுவரை இந்தச் சூலம் உன்னிடம் இருக்கும். அவ்வாறு இல்லையெனில் நாசத்தை {அழிவை} அடையும்.(9) மேலும் எவன் ஜுவரமின்றி {கவலையென்ற பிணியின்றி} உன்னுடன் யுத்தம் புரிய வருவானோ, அவனை பஸ்மமாக்கிவிட்டு {சாம்பலாக்கிவிட்டு இந்த} சூலம் மீண்டும் உன் கரத்திற்கு வந்து சேரும்" {என்றான் சிவன்}.(10)
இவ்வாறு ருத்திரனிடமிருந்து வரத்தைப் பெற்ற மஹாசுரன் {மது}, மீண்டும் மஹாதேவனைப் பணிந்து வணங்கி இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(11) "பகவானே, இந்த ஈடுயிணையற்ற சூலம் எப்போதும் என் வம்சத்திற்குரியதாக இருக்கட்டும். தேவா, நீயே ஸுரர்களின் ஈஷ்வரராக இருக்கிறாய்" {என்றான்}.(12)
சர்வபூதபதியும் {அனைத்து உயிரினங்களின் தலைவனும்}, மஹாதேஜஸ்வியுமான சிவன், அவ்வாறு கூறிக்கொண்டிருந்த மதுவிடம், {பின்வரும்} பதிலைச் சொன்னான், "இஃது இவ்வாறாகாது.(13) என் அருளால் கூறப்பட்ட இந்த சுப வாணீ {மங்கல வாக்கு} உனக்குப் பலனில்லாமல் போகாதிருக்கட்டும். உன் ஏக புத்திரனுக்கே {ஒரே மகனுக்கே} இந்தச் சூலம் உரியதாகும்.(14) எதுவரை இந்தச் சூலம் உன் மகனின் கரத்தில் இருக்குமோ, அதுவரை அவன் சர்வபூதங்களாலும் {அனைத்து உயிரினங்களாலும்} வதம் செய்யப்பட முடியாதவனாகவும், சூலஹஸ்தனாகவும் {கையில் சூலத்தைக் கொண்டவனாகவும்} இருப்பான்" {என்றான் சிவன்}.(15)
இவ்வாறே மது, மஹத்தான, அற்புதமான வரத்தை தேவனிடமிருந்து {சிவனிடமிருந்து} பெற்றான். {பிறகு}, அஸுரசிரேஷ்டனான அவன் {அசுரர்களில் சிறந்தவனான அந்த மது} பெரும்பிரபையுடைய பவனத்தை {பேரொளிமிக்க மாளிகையைக்} கட்டச் செய்தான்.(16) மஹாபாக்கியம் பெற்றவளும், பிரியத்திற்குரியவளுமான கும்பீனசி என்பவள் அவனது பத்னியாக {மதுவின் மனைவியாக} இருந்தாள். அவளே {தன் தாய்} அனலையின் மூலம் மஹாபிரபை {பேரொளி} கொண்டவளாக, {கந்தர்வன்} விஸ்வாவசுவின் புதல்வியானாள்[1].(17) மஹாவீரியனும், லவணன் என்ற பெயருடையவனும், கொடியவனும், துஷ்டாத்மாவுமான அவளுடைய புத்திரன் {கும்பீனசியின் மகன்}[2], பால பருவத்திலேயே பாபங்களையே செய்து வந்தான்.(18)
[1] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவளே மாலியவானது மகளான அநலையினது புத்திரி; இராவணனது சகோதரி. மதுவென்பவன் அபஹரித்துக் கொண்டு சென்றனனென முன்னம் இராவணனிடம் விபீஷணன் கூறியது இவளையேயாம்" என்றிருக்கிறது. மது கும்பீனசியைக் கவர்ந்து சென்றதும், ராவணன் மதுவுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டதும் உத்தரராமாயணம் 25ம் சர்க்கத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கும்பீனசி, இராவணனின் தங்கை என்பதும் அந்த சர்க்கத்தில் சொல்லப்படுகிறது. இராவணனின் தாய்வழித் தாத்தனான {ராவணனின் அன்னை கைகசியின் தந்தையான} ஸுமாலியின் அண்ணன் மால்யவான் ஆவான். அந்த மால்யவந்தனின் மகள் அனலை; அவளது தாய் சுந்தரி என்று உத்தர காண்டம் 5ம் சர்க்கம், 35ம் சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனலை விஸ்வாவசு என்ற கந்தர்வனின் மூலம் பெற்ற மகளே கும்பீனசி ஆவாள். ஆகையால், மால்யவான் வழியில் கும்பீனசி இராவணனின் தங்கையாகிறாள். மேலும் இராமாயணம், யுத்த காண்டம், 7ம் சர்க்கத்திலும் கும்பீனசி குறிப்பிடப்படுகிறாள்.
[2] வம்ச விருக்ஷம்சுகேசனின் மகன்கள் │ ┌───────────────┴───────────────┐ சுமாலி மால்யவான் (தாய்வழிப் பாட்டனார்) (சுமாலியின் மூத்த சகோதரன்) │ │ கைகேசி அனலை (கணவன்: விஸ்வாவஸு) லோலை (இராவணனின் தாய்) │ │ │ │ │ ┌──────┴──────┐ └──────────────┐ ┌────────────────┘ இராவணன், விபீஷணன் கும்பீனசி ═ மது (அசுரன்) மற்றும் பிறர் │ │ லவணன் (லவணாசுரன்)
அந்த மது, துர்வினீதனான அந்தப் புத்திரனை {தீய நடத்தை கொண்ட தன் மகன் லவணனைக்} கண்டு, குரோதங்கொண்டு சோகத்தை அடைந்தவனானான். மேலும் அவனிடம் எதையும் கூறவில்லை.(19) அவனோ {மதுவோ}, இந்த உலகத்தை விட்டு வருணாலயத்திற்குள் பிரவேசித்தான். இலவணனிடம் சூலத்தை ஒப்படைத்து, அவனுக்கு அந்த வரத்தை அறிவித்தான் {வரம் குறித்துத் தெரிவித்தான்}[3].(20) அவன் சூலத்தின் பிரபாவத்தினாலும், தன் தௌராத்மத் தன்மையாலும் {கொடிய இயல்பினாலும்}, மூன்று உலகங்களையும், விசேஷமாக {குறிப்பாக} தாபஸர்களையும் {தபசிகளையும்} சந்தாபமடையச் செய்தான் {வருத்தமடையச் செய்தான்}.(21) இத்தகைய பிரபாவமுடைய லவணனையும், அவ்விதமான சூலத்தின் பிரமாணத்தையும் {உண்மைத் தன்மையையும்} கேட்டு அறிந்து, காகுத்ஸ்தா {ராமா}, நீயே எங்களுக்குப் பரம கதியாவாயாக {உயர்ந்த புகலிடமாவாயாக}[4].(22)
[3] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வரத்தின் பெருமையாவது, சூலம் கையிலிருக்குமளவுமே எவராலும் கொல்லப்பட திருப்பனென்பது" என்றிருக்கிறது.
[4] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 848ம் பாடல் பின்வருமாறு:அங்கு அது கைக்கொண்டு இந்தஅவனியை அடங்க நூறித்தங்கு மாதவத்தோர் தம்மைத்தவஞ்செயா வண்ணம் செய்தான்இங்கு எமக்கு இடையூறு உற்றால்இந்நகர் வருவது அன்றிப்பொங்கு அரவணையாய் வேறுபுகலிடம் உண்டோ என்றார்பொருள்: "இன்பம் பொங்குகின்ற பாம்பணையில் பள்ளி கொள்வோனே! அவ்விடத்துத் தந்தை கொடுத்த அச்சூலத்தைத் தன் கையில் கொண்டு, இந்த உலக முழுவதையும் அழித்து, வனத்தில் தங்கியுள்ள பெரிய தவமுனிவர்களைத் தவஞ்செய்யாதபடி செய்துவிட்டான்; இவ்வுலகத்தில் எங்கட்கு இடையூறு நேர்ந்தால், இந்த அயோத்தி நகர்க்கு வருவதன்றி இதற்கு வேறாக அடைக்கலம் புகுதற்கோர் இடம் உண்டோ" என்று கூறினார்கள்.
வீரா, ராமா, முன்பு பயத்தால் துன்புற்ற ரிஷிகளால் பல பார்த்திபர்கள் {அரசர்கள்} அபயம் {பாதுகாப்பு} அளிக்குமாறு யாசிக்கப்பட்டனர். ஆனால் திராதாவை {காப்பவனை} நாங்கள் அறியவில்லை.(23) தாதா {ஐயா}, பலம் {படை} வாஹனங்களுடன் கூடிய ராவணன் ஹதம் செய்யப்பட்டதை {கொல்லப்பட்டதைக்} கேட்டு, திராதாவை {காப்பவனை} அறிந்தோம். புவியில் வேறு எந்த நராதிபனும் {மனிதர்களின் தலைவனையும்} நாங்கள் அறியவில்லை. எனவே, லவணனிடம் ஏற்பட்ட பயத்தால் பீடிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம்.(24) இராமா, இவ்வாறு பயத்தினால் பிறந்த காரணம் உனக்கு அறிவிக்கப்பட்டது. எது உதித்ததோ அதை {அத்துன்பத்தை} முழுமையாக நீக்க வல்லவன் நீ. அஹீனவிக்கிரமா {குறையாத ஆற்றல் உடையவனே}, அந்த விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" {என்றனர் முனிவர்கள்}.(25)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 061ல் உள்ள சுலோகங்கள்: 25
| Previous | | Sanskrit | | English | | Next |
