Yayati | Sarga-058 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: யயாதியின் கதையைச் சொன்ன ராமன்; யதுவின் தூண்டுதலால் துயருற்ற சர்மிஷ்டை; யயாதியைச் சபித்த சுக்கிரர்...
இராமன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, பகைவீரர்களை அழிப்பவனான லக்ஷ்மணன், தேஜஸ்ஸால் ஜொலிப்பவனைப் போன்ற அந்த மகாத்மாவுக்கு {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "இராஜசார்தூலரே {மன்னர்களில் புலியே}, வசிஷ்டருக்கும், விதேஹரான நிமிக்கும் இடையிலான புராதன {பண்டைய} நிகழ்வு மஹத்தானதும், அற்புதமானதுமான ஆச்சரியமாகும்.(2) க்ஷத்திரியரும், வீரரும், விசேஷமாக தீக்ஷை பெற்றவருமான நிமி ராஜாவோ, மஹாத்மாவான வசிஷ்டரிடம் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(3)
அவனால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, க்ஷத்திரியபுங்கவனான இந்த ஸ்ரீமான் {ராமன்}, சர்வசாஸ்திர விசாரதனான லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்.(4) மகிழ்விப்பவர்களில் சிறந்தவனான ராமன், ஒளிரும் தேஜஸ்ஸுடன் கூடிய சகோதரனிடம் {லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} கூறினான், "வீரா, புருஷர்களிடம் அனைத்து இடங்களிலும் {எல்லா சூழல்களிலும்} பொறுமை காணப்படுவதில்லை.(5) சௌமித்ரே {சுமித்ரையின் மகனே, லக்ஷ்மணா}, தாங்குவதற்கரிய ரோஷம் {கோபம்} எவ்வாறு யயாதியால் பொறுத்துக் கொள்ளப்பட்டதோ, {அவ்வாறு} சத்துவானுகத்தை முன்னிறுத்தி, சமாஹிதத்துடன் {நல்லியல்பைச் சார்ந்த சத்துவகுணத்தை முன்னிறுத்தி, ஒருமுகப்பட்ட கவனத்துடன்} அதை {கோபத்தைப் பொறுத்துக் கொண்ட யயாதியின் வரலாற்றை} அறிந்து கொள்வாயாக[1].(6)
[1] தர்மாலயப் பதிப்பில், "ஹே லக்ஷ்மண! கோபமென்பது அளவுக்குள்ளடங்கியிருப்பது அருமை. யயாதியால் ஸத்வ குணத்தையே பாராட்டி பொறுமையானது அனுஷ்டிக்கப்பட்டது எப்படியோ அதை சொல்லுகிறேன், கேள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "லக்ஷ்மணா! கேள் அதன் வரலாற்றை: க்ஷமையென்பது யாவருக்கும் கைகூடுமோ? கோபத்தையடக்குவதருமை. ஸதுதவகுணமேலிட்டவராகிய யயாதி மஹாராஜா பொறுத்தவாறு மற்றெவரும் பொறார்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "லட்சுமணா! யயாதி மன்னர், சத்துவகுணத்தை மேற்கொண்டு, பொறுக்கவியலாத கோபத்தை அடக்கிக் கொண்டார். அந்த வரலாற்றைச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்றிருக்கிறது.
சௌம்யா {மென்மையானவனே, லக்ஷ்மணா}, நஹுஷரின் மகனான யயாதி[2], பௌரவர்களின் வளர்ச்சிக்குக் காரணமானவனாக இருந்தார். அவருக்குப் புவியில் ரூபத்தில் {வடிவழகில்} இணையற்ற பாரியைகள் {மனைவியர்} இருவர் இருந்தனர்.(7) இராஜரிஷியான அந்த நாஹுஷருடையவளும்[3], விருஷபர்வனின் மகளும், சர்மிஷ்டை என்ற பெயருடையவளுமான தைதேயி {தைத்தியப் பெண்} ஒருத்தியோ சிறப்பிக்கப்பட்டவளாக இருந்தாள்.(8) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே, லக்ஷ்மணா}, யயாதியின் பத்தினியான மற்றொருத்தியோ, உசனஸுடைய {சுக்கிராசாரியரின் மகளான} தேவயானி[4]. ஆனால், அழகிய இடையைக் கொண்டவளான அவள், {யயாதி} ராஜரால் அன்புடன் நேசிக்கப்பட்டவளாக இல்லை.(9) அவ்விருவருக்கும் ரூபவந்தர்களும் {அழகானவர்களும்}, சமாஹிதமுடையவர்களுமான {ஒருமுகப்பட்ட அமைதியுடையவர்களுமான} புத்திரர்கள் இருவர் பிறந்தனர். சர்மிஷ்டை பூருவைப் பெற்றாள். அப்போது, தேவயானி யதுவைப் பெற்றாள்[5].(10)
[2] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மாமரம் யாதென வினாவினவ னொருவனுக்குப் பலாமரமின்னதெனப் புகலுமாறுபோல், நிமிசக்கரவர்த்தி யேன் பொறைகொண்டிலரென வினாவிய ஸௌமித்திரிக்கு ஸ்ரீராமன் யயாதி சரித்திரம் சொல்லத் தொடங்கியது பொருந்துமோ வெனில், பொருந்தும். பிறரிடமுள்ள தோஷங்களைச் சிந்திப்பது கூடாதெனத் திருவுள்ளம் பற்றி அதை யவ்வளவோடு நிறுத்தி, பொறுமையென்னும் நற்குணத்தின் பெருமையையும், அருமையையும் அருளிச் செய்யலாயின ரெனவறிக" என்றிருக்கிறது.
[3] "நஹுஷனின் மகனான யயாதியுடைய மனைவியும்" என்பது இங்கே பொருள்.
[4] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 824ம் பாடல் பின்வருமாறு:பார்க்கவன் கண்ணாய் உள்ளோன் பகையறக் களைந்து காத்தோன்பார்க்கவன் தவத்தை என்றும் பண்ணுவோன் விண்ணோர் தன்மைபார்க்க வன்அனந்த யாகம் பண்ணுவான் சன்மிட்டைக்கும்பார்க்கவன் பயந்த தெய்வ யானிக்கும் பதியாய் உள்ளோன்பொருள்: சுக்கிரனைக் கண்ணாகக் கொண்டுள்ளவன், பூமியைப் பகை நலியாமல் களைந்து காப்பினவன், சிவனை நோக்கிச் செய்யும் தவத்தை எக்காலத்தும் செய்கின்றவன், தேவர்கள் தன்மையைப் பார்க்க வேண்டி வலிய எண்ணிறந்த யாகங்களைச் செய்கின்றவன்; சன்மிட்டைக்கும், சுக்கிரன் பெற்ற தெய்வயானிக்கும் கணவனாக உள்ளவன்.
[5] மஹாபாரதம், ஆதிபர்வம் 75 முதல் 94ம் பகுதி வரை யயாதி, தேவயானி, சர்மிஷ்டை மற்றும் அவர்களின் பிள்ளைகள் குறித்த கதை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. தேவயானியே யயாதியின் மூத்த மனைவி. ஆதிபர்வம் 83ம் பகுதி, 8, 9ம் சுலோகங்களில் தேவயானிக்கு யது, துர்வசு என்ற இரு மகன்களும், சர்மிஷ்டைக்கு திருஹ்யூ, அனு, பூரு என்ற மூன்று மகன்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களில் யதுவே மூத்தவன்; பூரு இளைய மகன் {ஐந்தாவது மகன்}.
பூருவோ, குணங்களாலும், மாதாவின் காரணத்தாலும் {சர்மிஷ்டையாலும்} ராஜரால் அன்புடன் நேசிக்கப்பட்டார். அதனால் துக்கத்தால் நிறைந்த யது, தன் மாதாவிடம் {பின்வருமாறு} கூறினார்:(11) "பார்கவரின் குலத்தில் பிறந்தவளே, தடையற்ற கர்மங்களையுடைய தேவரின் {சுக்கிராசாரியரின்} ஹிருதயத்தில் உள்ள துக்கத்தையும், தாங்குவதற்கரிய அவமானத்தையும் நீ சகித்துக் கொள்கிறாய்.(12) தேவி, நாம் இருவரும் சேர்ந்து ஹுதாசனத்திற்குள் {வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்டதை உண்ணும் அக்னிக்குள்} பிரவேசிப்போம். இராஜரோ, தைத்தியபுத்திரியுடன் {விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டையுடன்} சேர்ந்து பல இரவுகள் மகிழ்ந்திருக்கட்டும்.(13) ஒருவேளை இஃது உனக்கு சகிக்கத்தக்கதாக இருந்தால் என்னை அனுமதிப்பதே உனக்குத் தகும். நீ பொறுத்துக் கொள்வாயாக. நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்; மரித்துவிடுவேன். இதில் சந்தேகமில்லை" {என்றார் யது}.(14)
பெருந்துயரமடைந்து அழுதுகொண்டிருந்த புத்திரனின் பேச்சைக் கேட்ட தேவயானியோ, அப்போது பெருங்குரோதமடைந்து தன் பிதாவை நினைத்தாள்[6].(15) அந்த இங்கிதத்தை {குறிப்பை} பார்கவர் {பிருகு குலத் தோன்றலான சுக்கிராசாரியர்} அறிந்தபோது, தம் மகளான அந்த தேவயானி எங்கிருந்தாளோ அங்கே துரிதமாக வந்தார்[7].(16) பிதாவும் {சுக்கிராசாரியரும்}, இயல்புநிலையில் இல்லாதவளும், மகிழ்ச்சியற்றவளும், சேதனமற்றவளுமான {உணர்வற்றவளுமான} தம் மகளைக் கண்டு, "இஃது என்ன?" என்ற வாக்கியத்தைக் கூறினார்.(17)
[6] இதற்கு முன்பு நடந்த கதை மஹாபாரதத்தில், ஆதிபர்வம் 83ம் பகுதியில் பின்வருமாறு சொல்லப்படுகிறது. தேவயானி யயாதியுடன் காட்டில் உலவிக் கொண்டிருக்கும்போது மூன்று அழகிய குழந்தைகளைப் பார்க்கிறாள். அவர்களிடம் யாரெனக் கேட்கும்போது, யயாதியின் பிள்ளைகள் என்கின்றனர். அப்போதுதான் யயாதி சர்மிஷ்டையையும் மனைவியாகக் கொண்டிருக்கிறான் என்பதை அறிகிறாள். யயாதியிடம் பிணக்கு கொண்டு நேரே சுக்கிராசாரியரிடம் சென்றதாக மஹாபாரதம் கூறுகிறது. ஆனால் இங்கே யது தன் தாயிடம் முறையிட்டு, அதன்பிறகு அவள் வருந்தி நினைத்ததால் சுக்கிராசாரியரே நேரடியாக வந்ததாக வருகிறது.
[7] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 829ம் பாடல் பின்வருமாறு:ஆயவன் இனைய கூற ஆயிழை அழன்று பொங்கித்தூய நன்பவளச் செவ்வாய் துடித்திடக் கண்ணீர் சோரச்சேயினை உடனே கொண்டு செயிபுகழ்த் தந்தை தன்பால்போய் அவன் அடியில் வீழ்ந்து பொருமிநின்று அழுது சொல்லும்பொருள்: அந்த யது என்பவன் இத்தன்மையான சொற்களைச் சொல்ல, ஆராய்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த தெய்வயானி மனம் வெதும்பிக் கோபித்து, தூய்மையான நற்பவளம் போன்று சிவந்த வாய் துடித்திடவும் கண்ணீர் பொழியவும் தன் மகனை உடன் அழைத்துக் கொண்டு நெருங்கிய புகழையுடைய சுக்கிரனாகிய தந்தையிடத்திற்குப் போய் அத்தந்தையின் திருவடியில் வீழ்ந்து தேம்பிக் கொண்டு நின்று வாய்விட்டு அழுது சொல்லுவாள்.
ஒளிரும் தேஜஸ் உடைய பார்கவர் {சுக்கிராசாரியர்} பலமுறை கேட்டுக் கொண்டிருக்கையில், பெருங்குரோதமடைந்த தேவயானியோ, தன் பிதாவிடம் {இந்த} வாக்கியத்தைக் கூறினாள்:(18) "முனிசத்தமரே {முனிவர்களிற் சிறந்தவரே}, நான் அக்னியிலோ, நீரிலோ பிரவேசிப்பேன்; அல்லது கொடிய விஷத்தை பக்ஷிப்பேன். ஆனால், என்னால் ஜீவித்திருக்க முடியாது.(19) பிரஹ்மரே {பிராமணரே}, துக்கிப்பவளும், அவமானமடைந்தவளுமான என்னை நீர் புறக்கணிக்காதீர். விருக்ஷத்தைப் புறக்கணித்தால், விருக்ஷஜீவினங்கள் {மரத்தைச் சேர்ந்து வாழ்பவை} துண்டிக்கப்படுகின்றன.(20) பார்கவரே, ராஜரிஷி {யயாதி} அலட்சியத்தால் என்னை இகழ்ந்து புறக்கணிக்கிறார். மேலும் அவர் என்னை மதிப்பதேயில்லை" {என்றாள் தேவயானி}[8].(21)
[8] மஹாபாரதம், ஆதிபர்வம் 83ம் பகுதியில் 29-30ம் சுலோகங்களில் தேவயானி தன் தந்தையிடம், "என் கணவர் நல்லொழுக்கத்தைக் கைவிட்டார். சர்மிஷ்டையால் உள்ளம் புண்பட்டேன். அவளிடம் மூன்று பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார். நான் இரண்டு மகன்களையே பெற்றிருக்கிறேன். தர்மத்தை நன்கறிந்தவராக அறியப்படும் அவர் நேர்மையின் பாதையில் இருந்து வழுவிவிட்டார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்" என்கிறாள்.
அவளுடைய அந்த வசனத்தைக் கேட்டு, கோபத்தால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்ட பார்கவர், நஹுஷாத்மஜரிடம் {நஹுஷரின் மகனான யயாதியிடம் பின்வருமாறு} பேசத் தொடங்கினார்:(22) "நாஹுஷா {நஹுஷனின் மகனான யயாதியே}, எதனால் நீ என்னை அலட்சியம் செய்தாயோ, {அதனால்} துராத்மாவான நீ பெரும் ஜரையால் ஜீர்ணமடைந்து சைதில்யத்தை அடைவாயாக {பெரும் முதுமையால் வலுவிழந்து, தளர்வை அடைவாய்}" {என்றார் சுக்கிராசாரியர்}[9].(23)
[9] மஹாபாரதம், ஆதிபர்வம், 83ம் பகுதி, 32ம் சுலோகத்தில் சுக்கிராசாரியர், "அன்பாக உன்னைப் பின்தொடர்ந்தவளை தர்மத்தை அறிந்தவனான நீ களங்கப்படுத்தியதால், வெல்வதற்கரிய பலவீனமான முதுமை உன்னை நிலைகுலையச் செய்யட்டும்" என்கிறார்.
பெரும்புகழுடைய பிரம்மரிஷியான பார்கவர் {சுக்கிராசாரியர்}, இவ்வாறு கூறியும், தம் மகளை ஆசுவாசப்படுத்தியும், மீண்டும் தம்முடைய பவனத்திற்கு {இருப்பிடத்திற்குச்} சென்றார்.(24) சூரியனுக்கு சமமான தேஜஸ் உடையவரும், துவிஜபுங்கவாக்ரருமான அவர் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களுள் முதன்மையானவருமான சுக்கிராசாரியர்}, இவ்வாறு கூறி, தம் மகளான தேவயானியை ஆசுவாசப்படுத்தி, நஹுஷாத்மஜனுக்கு {யயாதிக்கு} சாபத்தையும் அளித்து திரும்பிச் சென்றார்.(25)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 058ல் உள்ள சுலோகங்கள்: 25
| Previous | | Sanskrit | | English | | Next |
