Wednesday, 26 August 2026

இலவணனை வதம் செய்ய சத்ருக்னனை நியமித்த இராமன் | சர்க்கம் – 062 (21)

Rama Assigns Shatrughna to Slay Lavana | Sarga-062 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: முனிவர்களிடம் லவணனின் இயல்பைக் கேட்டறிந்த ராமன்; லவணனை அழிக்கும் பொறுப்பை சத்ருக்னனுக்கு அளித்து, அப்பணிக்கு முன்பு அவனுக்கு அபிஷேகம் செய்து வைத்தது...

இராமனிடம் பேசும் சத்ருக்னன்

அவ்வாறு கூறப்பட்டபோது, கைகளைக் கூப்பிய ராமன், அந்த முனிவர்களிடம், "லவணனின் ஆஹாரம் {உணவு} என்ன? ஆசாரம் என்ன {அவனது நடத்தை எப்படிப்பட்டது}? மேலும் இருப்பது எங்கே? {அவன் எங்கே வசிக்கிறான்?}" {என்று} மறுமொழியாகச் சொன்னான்.(1)

அந்த சர்வ ரிஷிகளும், ராகவனின் சொற்களைக் கேட்ட பிறகு, லவணன் எவ்வாறு வளர்ச்சியடைந்தான் என்பதை {பின்வருமாறு} தெரிவித்தனர்:(2) "சர்வ சத்வங்களும், மேலும் விசேஷமாக தாபசர்களும் ஆஹாரமாவர் {அனைத்து உயிரினங்களும், அதிலும் குறிப்பாக தவசிகளும் லவணனின் உணவாகின்றனர்}; ஆசாரம் நித்யம் ரௌத்திரமானது {அவனது நடத்தை எப்போதும் கொடூரமானது}; அவனது வாசம் மதுவனம் {இருப்பிடம் மதுவனமாகும்}.(3) பல்லாயிரம் சிங்கங்கள், வியாகரங்கள் {புலிகள்}, மிருகங்கள் {மான்கள்}, துவீபங்களை {யானைகளைக்} கொன்று, மேலும் மானுஷர்களையும் கொன்று, நித்யம் ஆஹ்னிகமான ஆஹாரமாகக் கொள்கிறான் {அவற்றையே / அவர்களையே தினப்படி எப்போதும் உணவாகக் கொள்கிறான்}.(4) மஹாபலவானான அவன் {லவணன்}, சம்ஹாரம் வந்தடைந்தபோது {அழிவுக்காலம் நேரிட்ட போது} வாயை அகலத் திறந்த அந்தகனை {யமனைப்} போல, வேறு சத்வங்களையும் {உயிரினங்களையும்} உண்கிறான்" {என்றனர் யமுனைக்கரை முனிவர்கள்}.(5)

அதைக் கேட்ட ராகவன் {ராமன்}, அந்த மஹாமுனிவர்களிடம் "அந்த ராக்ஷசனைக் கொல்வேன். உங்கள் பயம் நீங்கட்டுமாக" {என்ற} வாக்கியத்தைச் சொன்னான்.(6) உக்கிர தேஜஸ்ஸுடன் கூடிய அந்த முனிவர்களிடம் பிரதிஜ்ஞை செய்த பிறகு {உறுதிமொழி அளித்த பிறகு}, அந்த ரகுநந்தனன் {ராமன்}, தன்னுடன் சேர்ந்த சர்வ பிராதாக்களிடமும் {தன்னுடன் பிறந்தோர் அனைவரிடமும் பின்வருமாறு} சொன்னான்:(7) "இலவணனைக் கொல்லும் வீரன் யார்? அது யாருடைய அம்சமாகட்டும்[1]? மஹாபாஹுவான {பெரும் தோள்களையுடைய} பரதனுடையதா? அல்லது மதிமிக்க சத்ருக்னனுடையதா?[2]" {என்றான் ராமன்}.(8)

[1] இங்கு, "அம்சம்" என்பது இங்கு வெறும் "பகுதி" என்ற பொருளில் அல்ல; ஒருவரிடம் உள்ள "தெய்வீக சக்தி", "குணம்" அல்லது "ஒரு பணிக்கான பங்கு" என்ற பொருளில் வருகிறது. இராமாயண மரபில் ராமன், பரதன், இக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகிய நால்வரும் விஷ்ணுவின் அம்சங்களாகக் கருதப்படுகின்றனர். இங்கு லவணனை அழிக்கும் பொறுப்பு யாருடைய பங்காக அமைய வேண்டும் என்பதையே ராமன் இங்கே கேட்கிறான்.

[2] இங்கு ராமன் பரதனையும், சத்ருக்னனையும் மட்டுமே குறிப்பிடுகிறான்; லக்ஷ்மணனைக் குறிப்பிடவில்லை. லக்ஷ்மணன் ஏற்கனவே ராமனின் வனவாசம் மற்றும் யுத்தங்களில் முக்கியப் பங்காற்றியவனாகவும், எப்போதும் ராமனின் நெருங்கிய துணைவனாகவும் இருந்தான். சத்ருக்னனுக்கெனத் தனிப்பட்ட வீரப் பொறுப்பை வழங்கும் வகையிலும், பின்னர் அவனையே மதுராவின் அரசனாக நியமிக்கும் வகையிலும் இச்சம்பவம் அமைந்துள்ளது.

இராகவனால் {ராமனால்} இவ்வாறு கூறப்பட்டபோது, பரதன், "நான் இவனை வதம் செய்வேன் {லவணனைக் கொல்வேன்}. அஃது என்னுடைய அம்சமாக {பங்காக} விதிக்கப்படட்டும்" {என்ற} வாக்கியத்தைக் கூறினான்.(9) 

தைரியமும், சௌரியமும் {வீரமும்} நிறைந்த பரதனின் சொற்களைக் கேட்ட பிறகு, லக்ஷ்மணாவரஜன் {லக்ஷ்மணனின் தம்பியான சத்ருக்னன்}, சௌவர்ணாசனத்தை {பொன்னாலான ஆசனத்தை} விட்டு எழுந்து நின்றான்.(10) சத்ருக்னன், அப்போது நராதிபனின் {மனிதர்களின் தலைவனான ராமனின்} அடிபணிந்து, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவரும்}, மத்யமருமான {நடுவில் பிறந்தவருமான} ரகுநந்தனர் {பரதர்}  கர்மத்தை நிறைவேற்றியவர் ஆவர்.(11) ஆரியரின் {பெரியவர் ராமரின்} வருகையைக் குறித்த சந்தாபத்தை {வருத்தத்தை} ஹிருதயத்தில் {இதயத்தில்} வைத்து, அயோத்யை முன்பு சூனியமாயினும் {வெறுமையாயினும்} ஆரியரால் பரிபாலிக்கப்பட்டது {பெரியவர் பரதரால் பாதுகாக்கப்பட்டது}.(12) பார்த்திபரே, இங்கே துக்கங்கள் பலவும் {பரதரால்} அனுபவிக்கப்பட்டன. முன்பு துக்க சயனங்களில் {துன்பப் படுக்கைகளில்} சயனித்துக் கொண்டு நந்திகிராமத்தில் வசித்தார்[3].(13) பழங்களையும், கிழங்குகளையும் உண்பவராகி, ஜடீயாகி {சடாமுடியுடையவராகி}, அவ்வாறே மரவுரி தரித்தவராகி,  இத்தகைய துக்கத்தை அனுபவித்தார். அடியவனான நான் இருக்கையில், ராஜரே {ராமரே}, இனி மீண்டும் அவர் கிலேசத்தை {துன்பத்தை} அடைய வேண்டாம்" {என்றான் சத்ருக்னன்}.(14)

[3] ஒட்டக்கூத்தர், உத்தர காண்டம், இலவணன் வதைப் படலம், 856ம் பாடல் பின்வருமாறு:

அரசு இலா அயோத்தி எய்தி 
  அரசு நாம் செய்தோம் என்றே
நரர் பழி இடுவர் என்று 
  நந்தி நல்கிராமம் நண்ணி
மரவுரி உடுத்து வார்ந்த 
  சடையனாய்க் கண்ணீர் மாறாப்
பரதனை ஏவல்ஆகுமோ 
  பார்புகழ் பைம்பொன் பூணாய்

பொருள்: உலகமெலாம் புகழ்கின்ற பசுமையான பொன்னாலியன்ற அணிகலன்களையுடையவனே! "உரிமையுள்ள அரசன் இல்லாத அயோத்தியை அடைந்து தாம் அரசு செய்தோம்" என்று மக்கள் நம்மேல் பழிபோடுவார்கள் என்று கருதி, அயோத்தியை விடுத்து நந்திக் கிராமம் என்கின்ற நல்ல சிற்றூரை அடைந்து மரவுரியை யுடுத்துக் கொண்டு பின்னால் தொங்கும் நீண்ட சடையையுடையவனாய்க் கண்ணீர் மாறாமல் சொரிந்துகொண்டு தவஞ் செய்த பரதனைப் போர்க்கு அனுப்புதல் தக்கது ஆகுமோ?

சத்ருக்னன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, ராகவன் {ராமன்} மீண்டும் {பின்வருமாறு} கூறினான், "காகுத்ஸ்தா {ககுத்ஸ்தரின் வழித்தோன்றலே, சத்ருக்னா}, அவ்வாறே ஆகட்டும். என் சாசனம் {கட்டளை} நிறைவேற்றப்படட்டும்.(15) மஹாபாஹோ {பெருந்தோள்களையுடையவனே}, நீ விரும்பினால் உன்னை ராஜ்ஜியத்தில் அபிஷேகம் செய்வேன். மேலும், மதுவின் சுபமான நகரத்தில் பரதனை அமர்த்துவாயாக {நிறுவுவாயாக}.(16) நீ சூரனாகவும், வித்யையில் தேர்ச்சியடைந்தவனாகவும் {கற்றறிந்தவனாகவும்}, மேலும் நிறுவுவதில் திறனுடையவனாகவும் இருக்கிறாய்.(17) சத்ருவை முற்றாக அழித்துவிட்டு, அந்தப் பார்த்திபனின் அழிவுக்குப் பிறகு அங்கே மீண்டும் நிருபனை {ஓர் அரசனை} நியமிக்காதவன் எவனோ, அவன் நரகத்தையே அடைகிறான்[4].(18) 

[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அராஜகத்தை {அரசில்லாத நிலையைத்} தவிர்க்க ஓர் அரசன் வேண்டும். எனவே, பதவியில் உள்ள மன்னனைக் கொல்பவன், அவனுக்குப் பிறகு மற்றொரு அரசன் அரசில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

என்னுடைய வாக்கியத்தை நீ ஏற்றுக் கொள்வாயெனில், மதுவின் மகனும், பாப நிச்சயம் கொண்டவனுமான {தீய எண்ணம் கொண்டவனுமான} லவணனைக் கொன்று, தர்மப்படி நீ ராஜ்ஜியத்தை ஆள்வாயாக.(19) சூரா, என்னுடைய வாக்கியத்திற்கிடையில் பதில் கூற வேண்டாம். பாலனால் {இளையவனால்} பூர்வஜனின் {மூத்தவனின்} ஆணை கடைப்பிடிக்கப்பட வேண்டும்; இதில் சந்தேகமில்லை.(20) காகுத்ஸ்தா, என்னால் ஆயத்தம் செய்யப்பட்டதும், வசிஷ்டர் முதலான விப்ரர்களால் {வேத அறிஞர்களால்} விதிமுறைகளுடனும், மந்திரங்களுடனும் முன்னெடுக்கப்பட்டதுமான இந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொள்வாயாக" {என்றான் ராமன்}.(21)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி