Tuesday, 9 June 2026

சாபமும், சூர்ப்பணகையும் | சர்க்கம் – 024 (42)

The curse and Shurpanakha | Sarga-024 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனால் கடத்தப்பட்ட பெண்களின் அழுகையும், புலம்பலும்; அவர்கள் அவனுக்கு அளித்த சாபம்; சூர்ப்பணகை, கரன் ஆகியோரை தண்டகாரண்யத்தில் வசிக்கச் செய்தது...

Ravana and Shurpanakha

{அகஸ்தியர் ராமனிடம்}துராத்மாவான ராவணன் மகிழ்ச்சியுடன் திரும்பி வரும் வழியில்[1], நரேந்திரர்கள், ரிஷிகள் {மன்னர்கள், முனிவர்கள்}, தேவர்கள், கந்தர்வர்களின் கன்னிகைகளைக் கவர்ந்து சென்றான்.(1) பார்வைக்கு அழகான கன்னிகைகளையும், ஸ்திரீகளையும் கண்டதும், அந்த ராக்ஷசன் {ராவணன்}, அவர்களுடைய பந்துஜனங்களை {உற்றார் உறவினரைக்} கொன்றுவிட்டு, {புஷ்பக} விமானத்திலேயே அவர்களைச் சிறை பிடித்தான்.(2) இவ்வாறு பன்னக {நாக} கன்னிகைகளையும், ராக்ஷச, அசுர, மானுஷ, யக்ஷ, தானவ கன்னிகைகளையும் விமானத்தில் அவன் வலுக்கட்டாயமாக ஏற்றினான்.(3) துக்கத்தினால் ஒரே நேரத்தில் அவர்கள் யாவரும், சோகம், பயம் என்ற அக்னியில் {நெருப்பில்} உண்டான நெருப்பு ஜுவாலைகளுக்குத் துல்லியமாக {தீப்பொறி போல்} கண்ணீர் பெருக்கினர்.(4)  நதிகளால் {நிறையும்} சாகரத்தைப் போலக் களங்கமற்றவர்களான அவர்களின் பயம், சோகம் ஆகியவற்றில் உண்டான மங்கலமற்ற கண்ணீரால் அந்த விமானம் நிறைந்தது.(5) நாக, கந்தர்வ கன்னிகைகளும், மஹரிஷிகளின் தனயைகளும் {மகள்களும்}, நூற்றுக்கணக்கான தைத்திய, தானவ கன்னிகைகளும் அந்த விமானத்தில் அழுது கொண்டிருந்தனர்.(6) 

[1] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில் இதற்கு முன்பு இன்னும் 5 சர்க்கங்கள் இருக்கின்றன. அவை தொடங்குவதற்கு முன்பான அடிக்குறிப்பில், "இது முதல் 5 - ஸர்க்கங்கள் அதிக பாடமென்பர்; ஆயினும் அநேக ஸ்ரீகோசங்களில் காணப்படுவதால், யாமும் இங்கு அவற்றை விடாதெழுதுகின்றோம்" என்றிருக்கிறது. அந்த சர்க்கங்கள் இங்கு இடம்பெறாது. அந்தந்த சர்க்கங்களின் தொடக்கத்தில் வரும் சுருக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு, "1) இராவணன் பாதாளலோகத்தில் மஹாபலி யிருக்குமிடஞ்சென்று, ஆங்கு அவனை வெல்ல முயன்று முடியாமல் வீணே திரும்பிவிட்டது. 2) இராவணன் சூரியலோகஞ்சென்று ஜயம்பெற்றது. 3) இராவணன் சந்திரலோகஞ் சென்றதும், வழியே பல புண்ணியசாலிகள் விமானமேறி விண்ணுலகஞ் செல்வதைக் கண்டதும், இறுதியில் மாந்தாதாவுடன் போர்புரிந்துதும். 4) இராவணன் அநேகமாயிரம் யோஜனை தூரங் கடந்து சென்று சந்திரலோகஞ் சேர்ந்து சந்திரனுடன் அமர்புரியத் தொடங்கியதும், அது தெரிந்து திசைமுகன் ஆங்கு விரைந்துசென்று தசாநநனை சமாதானப்படுத்தி யவனுக்கு ஒரு மந்திர முபதேசித் தனுப்பியதும். 5) இராவணன் மேற்கு ஸமுத்திரஞ் சென்று ஆங்கு ஒரு தீவினிடை நின்ற கபிலரூபியான நாராயணனைக் கண்டு போர்தொடுக்கப் புகுந்து பராஜய மடைந்ததும், பிறகு அந்தப் புருஷன் சென்றவழியே பாதாளலோகஞ் சென்று அங்கு அநந்தமான தேவர்களையும் பாம்பணையிற் பள்ளிகொண்ட பரமபுருஷனையுங் கண்ணுற்று அவனால் அவமானமடைந்து செருக்கொழிந்து இலங்கைக்கு ஓடிப்போனதும்". அதிகபாடமான இந்த 5 சர்க்கங்கள் ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர் பதிப்பிலும், ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பிலும் இருக்கின்றன.

நீண்ட கேசம், அழகிய அங்கங்கள், பூர்ணச் சந்திரனுக்கு நிகரான முகம், பருத்த ஸ்தனங்கள், அதேபோல, வஜ்ரம், வேதிகை {வேள்விப்பீடம்} ஆகியவற்றின் மத்தியப் பகுதிக்கு சமமான பிரபை {ஒளி / பிரகாசம்},(7) இரதகூபரத்தை {தேரின் நுகத்தடியைப்} போன்ற இடை ஆகியவற்றுடன் மனோஹரமாக இருந்த {மனத்தைக் கொள்ளை கொள்பவர்களான} அந்த ஸ்திரீகள், ஸுராங்கனைகளுக்கு {தேவலோக மங்கையருக்கு / அப்சரஸ்களுக்கு} நிகரானவர்களாக உருக்கிய கனகத்தை {தங்கத்தைப்} போன்ற பிரபை கொண்டிருந்தனர் {பிரகாசத்துடன் இருந்தனர்}.(8) சோகம், துக்கம், பயம் ஆகியவற்றால் நடுங்கி, மனம் வருந்துபவர்களும், அழகிய இடையைக் கொண்டவர்களுமான அவர்களுடைய பெருமூச்சின் வாதத்தால் {வெப்பக் காற்றால், அந்த விமானம்} எங்கும் அனலாகக் கொதித்தது.(9) தசக்ரீவன் வசம் அகப்பட்டவர்களும், சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான அந்த ஸ்திரீகளுடைய பெருமூச்சின் அக்னியால் அடைக்கப்பட்டுக் கொதித்த புஷ்பகம் {அந்தப் புஷ்பக விமானம்}, அக்னிஹோத்ரத்தை {வேள்விக் குண்டத்தைப்} போலப் பிரகாசித்தது.(10) 

சிங்கத்தின் வசமடைந்த பெண்மான்களைப் போன்ற அந்த சியாமைகள் {இளம்பருவ அழகிகள்}, தீனமான முகத்துடனும், மருண்ட பார்வையுடனும் இருந்தனர். அங்கே ஒருத்தி {அந்தப் புஷ்பக விமானத்தில் அடைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருத்தி}, "இவன் என்னை பக்ஷித்துவிடுவானோ {விழுங்கிவிடுவானோ}?" என்று சிந்தித்தாள் {என்று நினைத்து வருந்தினாள்}.(11) பெருந்துக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்த வேறொருத்தி, "இவன் என்னைக் கொன்றுவிடுவானோ?" என்றெண்ணித் திகைத்தாள். 

தங்கள் மாதாக்கள் {அன்னையர்}, பிதாக்கள் {தந்தையர்}, பர்த்தாக்கள் {கணவர்கள்}, அதேபோல தங்கள் பிராதாக்களையும் {தன்னுடன் பிறந்தவர்களையும்} நினைவு கூர்ந்து, துக்கத்தினாலும், சோகத்தினாலும் பீடிக்கப்பட்ட அந்த ஸ்திரீகள் ஒருவரோடொருவர் சேர்ந்து {பின்வருமாறு} அழுது புலம்பினர்:(12) "ஐயோ, என்னவாகப் போகிறதோ? நான் இல்லாமல் என் மகன் எப்படி இருப்பான்? என் மாதா எப்படி இருப்பாள்? என் பிராதா {என்னுடன் பிறந்தவன்} எப்படி இருப்பான்? சோகசாகரத்தில் {அவர்கள் அனைவரும் துயரக்கடலில்} மூழ்கிப் போவார்களே.(13) ஹா, என் பர்த்தா {கணவன்} இல்லாமல் நான் எப்படி இருப்பேன்? {இனி} என்ன செய்வேன்? மிருத்யுவே {மரண தேவா}, துக்கத்தையே பங்காக அடைந்து, உன்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் என்னை {உன் உலகத்திற்கு} அழைத்துக் கொள்வாயாக.(14) பூர்வத்தில் {முற்பிறவியில்} வேறு தேகத்தில் இருந்த போது, {என்னால்} தீமை செய்யப்பட்டிருக்க வேண்டும். {என்னால்} செய்யப்பட்ட அந்தக் கர்மம் {செயல்} என்னவாக இருக்கும்?(15) இவ்விதம் துக்கத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும் சோகசாகரத்தில் {துன்பக்கடலில்} விழுந்துவிட்டோம். இப்போது எங்களுடைய இந்த துக்கத்திற்கான அந்தத்தை {முடிவை} நிச்சயம் நாங்கள் பார்க்கவில்லை.(16) 

அஹோ, சீச்சீ, மானுஷலோகத்தைவிட அதமமானது {கீழ்மையானது} நிச்சயம் வேறு எதுவும் இல்லை. அதனாலேயே, பலவானான ராவணனால் எங்களுடைய பர்த்தாக்கள் {கணவன்மார்} பலவீனர்களாக்கப்பட்டனர்.(17) உதய சூரியனின் காலத்தில் நக்ஷத்திரங்களைப் போல அவர்கள் நாசிதம் செய்யப்பட்டனர் {சூரியன் உதிக்கும் அதிகாலை வேளையில் மறையும் நட்சத்திரங்களைப் போல எங்களுடைய கணவன்மார் வீழ்த்தப்பட்டனர்}. அஹோ, பெரும்பலம் பொருந்திய ராக்ஷசன் {ராவணன்}, வதம் செய்வதற்கான உபாயங்களிலேயே {வழிமுறைகளிலேயே} ஈடுபட்டிருக்கிறான்.(18) அஹோ, தீய நடத்தையை மேற்கொண்டுள்ள போதிலும் இவன் வெட்கப்படுகிறானில்லை. இந்த துராத்மாவின் விக்கிரமமானது {ஆற்றலானது}, அனைத்து வகையிலும் இவனையே ஒத்திருக்கிறது {இவனைப் போன்று கீழ்த்தரமானதாகவே இருக்கிறது}.(19) பரதாரம் {பிறன்மனை} நாடும் இத்தகைய கர்மம் தகாதது என்பது எதனாலோ, அதனாலேயே இந்த ராக்ஷசாதமன் {அந்தக் கீழ்த்தரமான புத்தியினாலேயே ராக்ஷசர்களில் இழிந்தவனான இந்த ராவணன்}, அன்னியப் பெண்களுடன் இன்புற்றிருப்பதில் மகிழ்கிறான்.(20) ஆகையால், இந்த துர்மதியோன் {ராவணன்}, ஒரு ஸ்திரீயின் மூலமாகவே வதமடைவான் {ஒரு பெண்ணின் காரணமாகவே கொல்லப்படுவான்}" என்ற வாக்கியம் {சாபம்} ஸதீக்களான அந்தச் சிறந்த நாரீகளால் {பதிவிரதைகளான அந்த உத்தமப் பெண்களால்} பிரகடனம் செய்யப்பட்டது[2].(21)

[2] கன்னியர்கள் தாய்மார்கள் கன்று இழந்த
  பசுப்போலக் கதறி எங்கள்
நன்னுதலார்தமை எல்லாம் நடுங்கக்
  கண்டிடுதலால் நறுமென் கூந்தல்
அன்னநடை யவள் பொருட்டால் அடல் இலங்கை
  பாழாகி அரக்கர் கோமான்
தன்னுடைய முடியோடும் தலையற்று
விழுக எனச் சபித்தார் அன்றே

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 422ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: அந்தக் கன்னியரின் தாய்மார், (ராவணனின் அடாத செயலைக் கண்டு) கன்றினை இழந்த பசுவைப் போலக் கதறி அழுது, "எங்கள் கன்னியரையெல்லாம் நடுங்குமாறு கொண்டு சென்றமையால், நறுமணம் கமழும் மெல்லிய கூந்தலையுடையவளும், அன்னம் போன்ற நடையுடையவளுமான ஒருத்தியின் பொருட்டாக, வலிமைமிக்க நகரான இலங்கை பாழாகி,  இந்த அரக்கர் கோமான் {ராவணன்} தன்னுடைய மணிமுடியோடு கூடிய தலை அற்றுத் தரையில் விழுக" என்று சபித்தனர்.

வானில் துந்துபிகள் முழங்கின, புஷ்ப விருஷ்டி {மலர்மாரி} பொழிந்தது. ஸ்திரீகளால் ஒரே நேரத்தில் சபிக்கப்பட்டவனோ {ராவணனோ}, ஓஜஸ்ஸை {வலிமையை} இழந்தவனைப் போலப் பிரபையிழந்து போனான் {ஒளியிழந்தவனாக மாறினான்}.(22) பதிவிரதைகளான அந்த ஸாத்விகளால் {உத்தமப் பெண்களால் சபிக்கப்பட்டதால்} அவன் மனம் உடைந்தவன் போலத் தோன்றினான். இராக்ஷசபுங்கவன் {ராக்ஷசர்களில் முதன்மையான அந்த ராவணன்}, இவ்விதம் அவர்கள் {அந்தப் பெண்கள்} அழுது புலம்புவதைக் கேட்டுக் கொண்டே, நிசாசரர்களால் {இரவுலாவிகளால்} பூஜிக்கப்பட்டவனாக லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(23)

இதற்கிடையில், காமரூபிணியும், கோரமானவளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளும், பயங்கரத் தோற்றமுடையவளும்}, ராவணனின் தங்கையுமான அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, திடீரெனப் பூமியில் விழுந்தாள்[3].(24) இராவணன், தன்னுடன் பிறந்தவளை {தன் தங்கையான சூர்ப்பணகையைத்} தூக்கி நிறுத்தி, ஆறுதல் கூறும் வகையில், "பத்ரே {அன்பானவளே}, இஃது என்ன? நீ எதைச் சொல்ல விரும்புகிறாயோ, அதைத் துரிதமாக என்னிடம் சொல்வாயாக" என்று கூறினான்.(25)

[3] இதற்கு முன்பு நடந்ததை ஒட்டக்கூத்தரின் உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள வகையில் பார்ப்போம். இது நாம் பின்பற்றும் மூலத்தில் இல்லை. இந்த அடிக்குறிப்பு மிக நீண்டதுதான். இருப்பினும், சூர்ப்பணகையின் குமுறலை படம்பிடித்துக் காட்டும் இந்தப் பகுதியைப் புறக்கணிக்க இயலவில்லை. பாடல்களையும் கொடுத்து, விளக்கத்தையும் கொடுத்தால் இஃது இன்னும் நீளும் என்ற அச்சத்தால் பொருள் மட்டும் இங்கே தரப்படுகிறது. ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 423 முதல் 432ம் பாடல் வரை, திக்கு விசயப் படலத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு, "அந்த இராவணன், தனது அழகிய லங்காநகரத்தை அடைந்ததும், மாறுபட்ட காலகேயர் போர் செய்யும் போர்க்களத்தில் கிளர்ந்தெழுந்த அரக்கரின் பெருஞ்சேனை பின்னிடுமாறு போர் செய்து அழித்துவிட்டுத் தன் கணவன் {வித்யுத்ஜிஹ்வன்} இறந்துபோக, அதைக் கேள்வியுற்ற தீயவளும், கொடியவளுமான சூர்ப்பணகை செய்தவற்றை இனி சொல்வோம்.(423) 

கோபம் பொருந்திய துயருடன் கூடியவளாக சூர்ப்பணகை தானே தரையில் விழுந்து புரண்டு வாய்விட்டு அலறிப் பின்பு தலைமேலே கைகளை வைத்துக் கொண்டு, தன் கணவன் விழுந்து கிடக்கும் கொலைத் தொழிலே விரும்பும் போர்க்களத்தை அணுகி, தரையில் கிடந்த மலையின் மேல் மற்றொரு மலை விழுந்ததைப் போல அவன் உடலின் மேல் விழுந்தாள்.(424) நெடு நேரம் வெப்பமான மூச்சுக்காற்று சிறிதும் இல்லாமல் இருந்தவளை {சூர்ப்பணகை},  "தன் கணவனுடன் இறந்துவிட்டாளோ?" என்று நினைத்து மனமிரங்கிய பெண்கள், செழித்த மழைநீரையள்ளி அவள் முகத்தில் தெளித்து எழுப்ப, இறந்தவர்கள் மீண்டும் எழுந்தாற்போல் எழுந்த சூர்ப்பணகை இவற்றைச் சொல்லிப் புலம்பினாள்.(425)

{சூர்ப்பணகை}, "காதலினால் கைப்பிடித்து மணந்தது முதல் இன்று வரை, பேதை நான் சொன்ன சொல்லைத் தவறாமல் செய்தவனே, பேரவுணனே {பேரசுரனே}, நாதனே, என் நடுக்கத்தைக் காண விரும்பாதே. ஊருக்குச் செல்ல எழுவாயாக. பொய்த் தூக்கம் வேண்டாம்.(426) சூர்ப்பணகை எனக்குப் பின் இருப்பாளோ? இருக்க மாட்டாளோ? என்று எண்ணி அதைச் சோதிப்பதற்காக உள்ளே உயிர்ப்பை அடக்கிக் கிடந்தாயோ? நான் அவ்வாறு பிற்காலத்து நிலைத்து நிற்கின்ற பழியைப் பூண்டு, உன் பிரிவால் பெருந்துயரமடைந்தவளாக, உனக்குப் பின் இருக்க மாட்டேன். உத்தமனே, எழுவாயாக.(427) மாலையணிந்த அசுரர்கள் தம் அரசனே, முன்னரே என்னை முறைப்படி தானே உமக்கு மணம் செய்து கொடுத்துவிட்டுப் பின்பு என்னை மங்கல நாண் இழக்கச் செய்த என் அண்ணன் ராவணன் தன்னை மூன்று உலகங்களையும் ஆள்வோனாகப் பார்த்துக் கொண்டு இந்த உடலைச் சுமந்து கொண்டு, வாழ்வேனோ? நான் வாழ்வேனோ?(428) பகைவரைப் போரில் அழிக்கும் ஆற்றலுடையவனே, கையை வளைவாக முறுக்கிக் கொண்டும், வாயை மடித்துக் கடித்துக் கொண்டும் நீ தரையில் கிடக்கின்ற கருத்து யாது என்பதை நான் அறிய மாட்டேன். மையினையும் முறித்துக் கீழ்ப்படுத்திய கரிய மனத்தினையுடைய கொடும் அரக்கர்கோமான் ராவணனை உடல் முறிக்க பெற்றிலேனே என்று நினைந்துதானோ? வேறு காரணம் என்னவோ? சொல்ல மாட்டாயோ?"(429) 

என்று இத்தன்மையான பலவற்றைப் பலவாறு சொல்லிக் கொண்டு, அழகிய கணவனை அணைத்துக் கொண்டு, வருந்திய மனத்தினளாகிக் கதறி அழுகின்ற சூர்ப்பணகையின் தோழியர், அவளைக் கையால் தாங்கி நடத்திக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, மலைபோன்ற தோளையுடைய வித்துருசிங்கனை விதிப்படி ஈம விறகேற்றிக் கொளுத்தினார்கள்.(430) அந்த சூர்ப்பணகை தன் காதலன் உடலைத் தீயிட்டுக் கொளுத்தினர் என்று கேள்விப்பட்டு, எரியும் கொடும் நெருப்புப் போல் வெதும்பும் மனத்துடனும், ஓயாமல் இடிக்கும் மேகம்போலக் கதறும் வாயுடனும் அழுது, செம்மையான அணிகள் பூண்ட பெண்கள் ஆறுதல் கூறியும் தேறாமல் இருந்தாள்.(431) "ஒரு பொருளை உண்டாக்கியவனே அதை அழிப்பது அழகல்ல என்பதை உணராமல் என் கணவனைக் கொன்று தரையில் வீழ்த்திய ராவணனின் நாக்கைப் பிடுங்கிவிட்டு, என் துன்பநோய் தீர எனது உயிரைப் போக்கிக் கொள்வேன்" என்று கருதி சூர்ப்பணகை புறப்பட்டாள்.(432)

கண்ணீரால் மறைக்கப்பட்ட கண்களைக் கொண்டவளும், {துக்கத்தினால்} சிவந்த கண்களை உடையவளுமான அவள் {சூர்ப்பணகை, பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்: "இராஜரே, பலவானான உம்மால், பலவந்தமாக விதவை ஆக்கப்பட்டிருக்கிறேன்.(26) இராஜரே, காலகேயர்கள் என்று பிரசித்திபெற்ற அந்த பதினான்காயிரம் வீர தைத்தியர்கள் உம்மால் ரணத்தில் {போர்க்களத்தில்} முற்றாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.(27) என் பிராணனை விட மேலானவரும், மஹாபலவானுமான என் பர்த்தாவும் {கணவர் வித்யுத்ஜிஹ்வரும்} அங்கே இருந்தாரே!(28) தாதா {ஐயா}, பேராசை கொண்ட பிராதாவும் {சகோதரரும்}, ரிபுவை {பகைவரைப்} போன்றவருமான உம்மால் அவரும் அங்கே கொல்லப்பட்டார். இராஜரே, பந்துவான {உற்ற உறவான} உம்மாலேயே நேரடியாக நான் முற்றாக அழிக்கப்பட்டேன் {விதவையாக்கப்பட்டேன்}.(29) இராஜரே, {அத்தகைய} உமது செயலாலேயே நான் வைதவ்ய சப்தத்தையும் அனுபவிக்கப் போகிறேன் {விதவை என்ற சொல்லையும் கேட்கப் போகிறேன்}[4]. மைத்துனர் என்பவர்[5] போர்க்களத்திலும் உம்மால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர். இல்லையா? அத்தகையவர் யுத்தத்தில் உம்மாலேயே நேரடியாகக் கொல்லப்பட்ட பிறகும் நீர் லஜ்ஜையடையாமல் இருக்கிறீரே {வெட்கப்படாமல் இருக்கிறீரே?" என்று கேட்டாள் சூர்ப்பணகை}.(30)

[4] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தப் பத்தியின் நேரடி மொழிபெயர்ப்பானது, "உன்னால் நான் என்றென்றும் விதவையாக அறியப்படுவேன்" என்பதாகும்" என்றிருக்கிறது.

[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உரையில் உள்ள சொல், "ஜாமாதா" என்பதாகும். அதன் நேரடிப் பொருள் மருமகன் என்பதாகும். ஆனால் அவள் அவனது சகோதரியாக இருப்பதால், ஒருவேளை இவளது கணவன் {ராவணனின் மைத்துனன்} என்று பொருள்படலாம்" என்றிருக்கிறது.

கதறி அழுது கொண்டிருந்த தன் பகினியால் {சகோதரியால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், தசக்ரீவன் {ராவணன்}, அவளைத் தேற்றும் வகையில் சாமப்பூர்வமான {சாம, தான, பேத, தண்டத்தின் அடிப்படையில் முதல் உபாயமான அன்பு நிறைந்த} இந்தச் சொற்களைக் கூறினான்:(31) "வத்ஸே {குழந்தாய்}, நீ அழுதது போதும். எவ்விதத்திலும் அச்சம் வேண்டாம். தான {பரிசுகள்}, மான {கௌரவங்கள்}, பிரசாதங்களால் {சலுகைகளால்} உன்னை மகிழ்விக்க யத்தனஞ் செய்வேன் {முயற்சிப்பேன்}.(32) சுபே {மங்கலமானவளே}, யுத்த பிரமத்தனாக {போர் வெறி கொண்டவனாக}, கவனம் சிதறியவனாக, ஜயத்தில் {வெற்றியில்} விருப்பம் கொண்டவனாக சரங்களை எய்து கொண்டிருந்த நான், யுத்தத்தில் நம்முடையவர்களையோ, அன்னியர்களையோ புரிந்து கொண்டேனில்லை {பிரித்து அறிந்தேனில்லை}.(33) யுத்த துர்மதத்துடன் தாக்கிக் கொண்டிருந்தபோது, மைத்துனனை அறியாது {கவனிக்காமல்} போனேன். எனவேதான், உடன்பிறந்தவளே, உன் பர்த்தாவானவன் {உன் கணவனான வித்யுத்ஜிஹ்வன்}, போரில் என்னால் கொல்லப்பட்டான்.(34) 

இந்தச் சூழ்நிலையில் எது பிராப்தமாகுமோ {செய்யத்தக்கதோ}, அந்த ஹிதத்தை {நன்மையை நான்} உனக்குச் செய்வேன். ஐஷ்வர்யம் நிறைந்த நம் பிராதா {சகோதரன்} கரனின் அருகில் நீ வசிப்பாயாக.(35) மஹாபலவானான உன் பிராதா {கரன்}, பிரயாணங்களிலும் {படையெடுப்புகளிலும்}, தானங்களிலும் {வேண்டிய பொருள்களையும் கொடுப்பதிலும்} பிரபுவாக இருந்து, பதினான்காயிரம் ராக்ஷசர்களை நிர்வகிப்பான்.(36) அங்கே உன் சிற்றன்னையின் மகனும், நிசாசரர்களின் பிரபுவுமான உன் பிராதா கரன், சதா உன் கட்டளைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான்.(37) இந்த வீரன் {கரன்}, தண்டகத்தை {தண்டகாரண்யத்தை} ரக்ஷிப்பதற்காக சீக்கிரம் புறப்பட்டுச் செல்வான். மஹாபலவானான தூஷணன் இவனுடைய பலாத்யக்ஷனாக {படைத்தலைவனாக} இருப்பான்.(38) சூரனான கரன், அங்கே {தண்டகவனத்தில்} சதா உன் வசனத்தின்படியே செயல்படுவான். இவன், காமரூபிகளான {விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்களின் பிரபுவாக இருப்பான் {என்றான் ராவணன்}[6].(39) இவ்வாறு கூறிவிட்டு, வீரியசாலிகளான பதினான்காயிரம் ராக்ஷசர்களைக் கொண்ட சைனியத்தை அவனுடன் {கரனுக்குத் துணையாக} அனுப்பிவைத்தான் தசக்ரீவன் {ராவணன்}[7].(40)

[6] விவேக்தேவ்ராய் பதிப்பில், ராவணனின் வாக்கியம் இங்கேயே முடியாமல், இன்னும் ஒன்றையும் அவன் சொல்வதாக வருகிறது, அது பின்வருமாறு, "முன்பு, கடுஞ்சினங்கொண்ட உஷனஸ் {சுக்கிராசாரியர்}, அரக்கர்கள் வசிக்கும் இந்தக் காட்டுப் பகுதியில் இவன் வசிக்க வேண்டும் என்று இவனைச் சபித்திருந்தார். இது நிச்சயம் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றிருக்கிறது. இந்தச் செய்தி இந்த சர்க்கத்தில் நாம் ஒப்பிடும் எந்தப் பதிப்பிலும் இடம்பெறவில்லை.

[7] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், 433 முதல் 443ம் பாடல் வரை, திக்கு விசயப் படலத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு, "விலங்கான யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்த, நெடிதாக வளர்ந்த சடையுடையவன் {சிவன்} வாழும் கயிலையைப் பெயர்த்தவனும், தன் பெரும் வலிமையால் புவனங்கள் மூன்றையும் வென்று, போர் செய்யும் ஆற்றலைக் கொண்ட சேனை அருகில் சூழ்ந்து வரப் பொன்மயமான லங்கையில் தங்கியிருக்கும் தன் அண்ணனுமான ராவணனை, இளையவளாகிய சூர்ப்பணகை பார்த்து இவற்றைச் சொல்லி முறையிட்டாள்.(433) "இருளைத் தாங்கினாற் போல் கரிய குடுமியைக் கொண்ட என் கணவன் தலை மாய்த்த ஓ அண்ணா! ஓ அண்ணா! உன் பழியைச் சொல்லால் எடுத்துத் தூற்றித் துன்பத்தைச் சுமந்து கொண்டு என் வீடு கல்லெடுப்பு நடத்தவும்{சாவுச் சடங்கில் நிறுத்திய கல்லை எடுக்கவும்}, நல்ல உறவினர்களெல்லாம் மனங்கரைந்து ஏங்கவும், கடைசியில் நீ வில்லை எடுத்தல் உன் வீரத்திற்கு இழிவு இல்லையா?(434) ஓ அண்ணா! ஓ அண்ணா! உயிரை வளர்க்கும் முலைப்பாலே உயிரையுண்ணும் நஞ்சானது போல, "ஒருக்காலும் கொல்லத்தகாதத் தன் மைத்துனனைக் கொன்ற புலைத் தன்மைமிக்க பாவியான உன் அண்ணன் கொடியவன்" என்று அனைவரும் என்னைப் பார்த்து அலைத்தலாலே முழுவதும் அலைப்புண்டேன்.(435) திக்குக்கு அப்புறத்தும் ஆணை செலுத்துகின்ற அண்ணா! என் அண்ணா! காசுக்காகவும், பொன்னுக்காகவும், மோதிரம் முதலிய அணிகளுக்காகவும், கடுஞ்சொல்லின் மிகுதிக்காவும், கோபம் கொண்டு உண்ணாமல் இருக்கின்ற மணவாளனின் கோபம் தீர்த்து நீ பூசித்தது, போர்க்களத்தில் அப்பிள்ளையைக் கொன்று பூமியில் புரட்டிடத்தானோ?(436) பொன்மலையான மேருவை வில்லாகக் கொண்டவனின் {சிவனின்} வெள்ளிமலையை எடுத்த அண்ணாவோ! அண்ணாவோ! "குற்றங்கள் எல்லாம் செய்தாரேயானாலும், விளையாட்டாம் வகையால் செய்தார் என்று கொள்வதன்றி, ஒருக்காலும் மைத்துனர்மாரோடு பகை கொள்ளுதல் இல்லை" என்கிற அந்தப் பழமொழியையும் எண்ணிப் பார்க்கவில்லையோ?"(437)

என்று சொல்லி முறையிட்டு இலங்கைக்கு அரசனான ராவணன் முன்னே மலைவந்து விழுவது போல், விரிந்த கூந்தலும், வெறுங்கழுத்தும், கலங்குகின்ற மனமும் உடையவளாய் கையெடுத்து அழைத்துக் கொண்டு புலம்பி, அந்த ராவணனின் பாதங்களில் விழுந்து மண்பொடியில் கிடந்து புரண்டு அழுதாள்.(438)

தங்கை தன் முன் விழுந்து, இவ்வாறு தரையில் புரண்டு அலறி நிற்க, ராவணன் தன் கையால் தூக்கி எடுத்து நிறுத்தி, "மங்கைப் பருவமுடைய உனக்கு இந்த வலிய துயரம் வந்தது எக்காரணத்தால்?" என்று வினவ, "கங்கையை முடிக்கணிந்தவனின் {சிவனின்} மலையை அள்ளியெடுத்தவனே, காலகேயர் போர் செய்த போர்க்களத்தில் உனது அகங்கையிற்பிடித்திருந்த வாளால் என் கணவனின் உயிரைப் போக்கினாய்" என்று சொல்லி அழுதாள் {சூர்ப்பணகை}.(439) "அண்ணா! உன் குடியில் பெண்ணாகப் பிறந்த நான் பெருந்துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்க, நீ மகிழ்ச்சியுடன் மூவுலகங்களையும் அரசாண்டு கொண்டிருந்தால் அரக்கர் குலத்திற்கு ஏற்ற அறனாகுமோ? எண்ணிப் பார்க்காமல் மாறுபாட்டால் செய்கின்ற போரில் என் காதலனைக் கொன்றுவிட்டாய். இந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் தேவர்கள் என்ன சொல்லுவார்கள்?" என்று சொல்லித் தேம்பிப் பெருமூச்சு விட்டாள்.(440) 

இத்தகையவற்றையும், இன்னும் பலவற்றையும் சொல்லி அழுகின்ற இந்த சூர்ப்பணகைக்கு, இலங்கை வேந்தனான ராவணன் இதைச் சொல்லலானான், "உன்னை மனைவியாகக் கொண்ட உன் கணவனை நான் ஒன்றும் உணராமல் கொன்றுவிட்டேன்; என்னைப் போரில் ஆர்வங்கொள்ளுமாறு என் புத்தியை மயக்கி, அவன் மைத்துனனாகிய என்னாலே இப்போது அவனுடைய உயிரைக் கவர்ந்த விதியைத் தடுக்க வல்லவரும் உண்டோ?"(441) என்று அமைதி கூறி, தங்கையின் மனம் மகிழுமாறு எல்லாவகையான பூசைகளையும் செய்து, பொருந்தும் குணமுடைய தன் நற்றாயோடு பிறந்தவளின் {தன் சிற்றன்னையின்} வயிற்றிலே தோன்றியவர்களும், வெற்றியையுடைய வீரர்களுமான கரனும், அவனது விரிவான சேனைக்குத் தலைவனாகிய வில்லேந்திய கைகளுடன் கூடிய தூடணனும், யாருக்கும் தோல்வியுறாத வலிமையுடைய திரிசிரனும்,(442) இம்மூவரும் தண்டகம் என்ற பெயருடைய அழகு பொருந்திய வனத்தில் இருப்பார்கள்; முன்னமே அங்குள்ள அவர்களுக்கு (உன்னைப் பற்றி) நான் சொல்லி அனுப்பியிருக்கிறேன்; அந்த மூவரோடும் மனம் மகிழ்ந்து அவ்விடத்தில் இருப்பாயாக" என்று ராவணன் கட்டளையிட, தேவர்கள் செய்த தபத்தால் அந்த சூர்ப்பணகை என்ற அரக்கி, அத்தண்டக வனத்தில் அந்த அண்ணன்மாரோடு தங்கியிருந்தாள்.(443)

அந்தக் கரன், கோர தரிசனந்தரும் அந்த சர்வ ராக்ஷசர்களாலும் சூழப்பட்டவனாக அச்சமில்லாமல் சீக்கிரம் சென்று தண்டகத்தை அடைந்தான்.(41) அவன் அங்கே கண்டகமற்ற {முட்களற்ற / எதிரிகளற்ற} ராஜ்ஜியத்தை நிலைநாட்டி ஆண்டான். அந்த சூர்ப்பணகையும் அங்கே தண்டக வனத்திலேயே வசித்து வந்தாள்.(42) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 024ல் உள்ள சுலோகங்கள்: 42

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி