Karthavirya Arjuna | Sarga-073 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நர்மதையின் நீரோட்டத்தைத் தடுத்த கார்த்தவீரியன்; நீர் பின்னோக்கிப் பாய்ந்து ராவணனின் பூஜைப் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டது; கார்த்தவீரியனுடன் போரிட்டுக் கட்டுண்ட ராவணன்...
மிகக் கொடூரனான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, நர்மதையின் மணற்திட்டில் எங்கே புஷ்ப உபஹாரம் {மலர்களைக் கொண்டு பூஜை} செய்தானோ, அதே தேசத்திற்கு {இடத்திற்கு} சற்றுத் தொலைவில்[1],(1) வெற்றியாளர்களுள் சிறந்தவனும், மாஹிஷ்மதியின் பதியும் {தலைவனும்}, பிரபுவுமான {கார்த்தவீரிய} அர்ஜுனன், நாரீகள் சஹிதனாக {பெண்களுடன்} நர்மதையின் நீரில் இறங்கி கிரீடித்துக் கொண்டிருந்தான் {விளையாடிக் கொண்டிருக்கிறான்}.(2)
[1] நர்மதையின் மணற்பரப்பில் ராவணன் இருந்த இடத்திற்கு மேற்கில் அரை யோஜனை தொலைவில் கார்த்தவீரியன் இருந்ததாக இதே சர்க்கத்தின் 13ம் சுலோகம் சொல்கிறது. ஒரு யோஜனை 8 கி.மீ என்று கொண்டால், இந்தத் தொலைவு 4 கி.மீ. ஆகும்.
அப்போது, அவர்களின் {அந்தப் பெண்களின்} மத்தியில் இருந்த ராஜா அர்ஜுனன், ஆயிரம் கரேணுக்களின் {பெண்யானைகளின்} மத்தியில் நிற்கும் குஞ்சரத்தை {ஆண் யானையைப்} போலக் காட்சியளித்தான்.(3) அவனோ, தன் ஆயிரம் தோள்களின் உத்தம பலத்தை {சோதித்து} அறிய விரும்பியவனாக, பல கைகள் சூழ நர்மதையின் வேகத்தை {நர்மதை ஆற்றின் நீரோட்டத்தைத்} தடுத்தான்.(4) கார்த்தவீரியனின் புஜங்களால் தடுக்கப்பட்ட அந்த நிர்மலமான ஜலம் {தூய்மையான நீர்} தேங்கி, மலர் உபஹாரத்தை {மலர்களாலான பூஜைப் பொருள்களை} மூழ்கடித்தபடி பின்னோக்கிப் பாய்ந்தது.(5) மீன்கள், முதலைகள், மகரங்கள் ஆகியவற்றுடனும், {ராவணனின் வழிபாட்டிற்குப் பயன்பட்ட} அந்தப் புஷ்பங்கள், குசப்புற்கள் {தர்ப்பைகள்} ஆகியவற்றின் பரப்புடனும் அந்த நர்மதை நீரின் வேகமானது மழைக்காலத்தை {மழைக்காலத்து வெள்ளத்தைப்} போல விளங்கியது.(6) அந்த நீரின் வேகமானது கார்த்தவீரியனால் ஏவிவிடப்பட்டதுபோல, ராவணனின் சகல புஷ்ப உபகாரங்களையும் அடித்துச் சென்றது.(7) அப்போது ராவணன், பாதி முடிந்த தன் நியமத்தை {பூஜையை} விட்டு, தனக்கு எதிராக நடக்கும் பிரிய காந்தையை {அன்பான காதலியை} எப்படியோ, அப்படியே {பின்னோக்கிப் பாயும்} நர்மதையைப் பார்த்தான்.(8) மேற்கிலிருந்து சாகர அலைகள் பொங்குவதைப் போலப் பெருகி வரும் அந்த நீரின் வேகம் அதிகரிப்பதைக் கண்டு, கிழக்கை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான்[2].(9) பிறகு, ராவணன், கலக்கமடைந்த பறவைகளுடன் கூடியதும், ஸ்வபாவமான {இயல்பான} ஓட்டம் தடுக்கப்பட்டதும் அசைவில்லாத அங்கனையை {பெண்ணைப்} போன்ற தோற்றம் கொண்டதுமான {நர்மதா} நதியைப் பார்த்தான்.(10) அந்த தசானனன், வலது கை விரலின் அந்த சப்தத்துடன் {சொடுக்கு சப்தத்துடன், ஆற்று நீரின்} வேகத்தின் பிரபாவத்தை கண்டறியும்படி சுக, சாரணர்கள் இருவருக்கும் ஆணையிட்டான்[3].(11)
[2] நர்மதை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறாகும். இராவணன் ஆற்றின் மேல்பகுதியில் {கிழக்கில்} சிவபூஜை செய்து கொண்டிருக்கிறான். கார்த்தவீரியார்ஜுனன் ஆற்றின் கீழ்ப்பகுதியில் {மேற்கில்} கிரீடை செய்து கொண்டிருக்கிறான். மேற்கில் கார்த்தவீரியன் தடுத்த ஆற்றின் நீரோட்டம் தேங்கி மேற்கிலிருந்து கிழக்கை நோக்கிப் பின்னோக்கிப் பாய்கிறது. இராவணன், தன் இருப்பிடத்திற்கு மேற்கில் கடலலை பொங்குவது போல நீர் வருவதைக் கண்டு, நீரின் வேகம் கிழக்கை நோக்கிப் பாய்வதைப் பார்க்கிறான்.
[3] தர்மாலயப் பதிப்பில், "அந்த தசானனன் சுகனையும் சாரணனையும் பிரவாஹத்தின் காரணத்தை தெரிந்துவர அர்த்தமாகும்வண்ணமாய் வலகைக் கட்டைவிரலினாலேயே சமிக்ஞை செய்து ஆக்ஞாபித்தான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "பறவைகள் பயந்தோடத் தன் இயற்கைக்கு மாறாயொழுகும் நருமதா நதியினைக் கண்ணுற்று இராவணன், "அந்நதி அவ்வாறு பெருக்கெடுப்பதற்குக் காரணம் யாது? அஃது அதனியல்பேயோ, அல்லது அதற்கு வேறு காரணமுளதோ?" என்பதைக் கண்டுணர்ந்து வருமாறு வாய் திறந்து பேசாமலே, விரைவிற்சென்று தெரிந்துவர வேண்டு மென்பதற்கறிகுறியான உங்கார கோஷத்துடனே வலது கைவிரலை நீட்டிச் சுகஸாரணர்களுக்குக் குறிகாட்டினான்" என்றிருக்கிறது.
இராவணனால் ஆணையிடப்பட்ட பிராதாக்களும் {உடன்பிறந்தோரும்}, வீரர்களுமான சுக, சாரணர்கள் இருவரோ, வான்வெளியினிடையே சென்று {விண்ணில் ஏறி}, மேற்கு முகமுடையவர்களாக {மேற்கை நோக்கிப்} புறப்பட்டுச் சென்றனர்.(12) ஆனால், அந்த ரஜனீசரர்கள் {இரவுலாவிகள்} இருவரும், அரை யோஜனை மாத்திரம் சென்றதுமே, நீரில் யோசிதைகள் சஹிதனாக கிரீடித்துக் கொண்டிருக்கும் புருஷனைக் கண்டனர் {நீரில் பெண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஓர் ஆண்மகனைக் கண்டனர்}.(13) பெரும் சால மரத்தின் தோற்றத்தையும், நீரில் கலைந்த தலைமுடியையும், மதத்தால் {மதுவால் / வெறியால்} சிவந்த கடை நயனங்களையும் {கடைக் கண்களையும்}, மதத்தில் {செருக்கில்} ததும்பும் தேஜஸ்ஸையும் {ஆற்றலையும்} உடையவனும்,(14) அரிமர்தனனும் {பகைவரை அழிப்பவனும்}, ஆயிரம் வேர்களால் மேதினியை {பூமியைத்} தாங்கி நிற்கும் கிரியை {மலையைப்}[4] போல, ஆயிரம் கைகளால் நதியைத் தடுப்பவனும்,(15) மதங்கொண்ட ஆயிரம் கரேணுக்களால் {பெண் யானைகளால் சூழப்பட்ட} குஞ்சரத்தை {ஆண் யானையைப்} போல, பாலைகளான ஆயிரம் சிறந்த நாரீகளால் {சிறந்த இளம்பெண்கள் ஆயிரம்பேரால்} சூழப்பட்டவனுமான அவனை {ஓர் ஆண்மகனை கார்த்தவீரியார்ஜுனை} அவர்கள் கண்டனர்},(16) அந்த {கார்த்தவீரியனின்} அற்புதச் செயலைக் கண்ட ராக்ஷசர்களான சுக, சாரணர்கள் இருவரும் {அங்கிருந்து} திரும்பி வந்து, ராவணனை நெருங்கி வந்த பிறகு, அவனிடம் {பின்வருமாறு} கூறினர்:(17) "இராக்ஷசேஷ்வரரே, பெரும் சாலத்தின் {ஆச்சா மரத்தின்} தோற்றமுடைய எவனோ ஒருவன் அணை போல நர்மதையைத் தடுத்து, யோசிதைகளை {பெண்களை} விளையாட வைத்துக் கொண்டிருக்கிறான்.(18) அவனுடைய ஆயிரம் தோள்களால் ஜலம் முற்றிலும் தடுக்கப்பட்ட நதி, மீண்டும் மீண்டும் சாகரத்தின் அலைகள் பொங்குவதைப் போன்ற அலைகளை எழுப்புகிறது" {என்றனர்}.(19)
[4] விவேக்தேவ்ராய் பதிப்பில், "பூமியைத் தன் ஆயிரம் கால்களால் தடுக்கும் மலையைப் போல பகைவரை அழிப்பவனான அவன், தன் ஆயிரம் கைகளால் ஆற்றைத் தடுத்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மேரு மலையை இது குறிக்கிறது" என்றிருக்கிறது.
இவ்வாறு சுக, சாரணர்கள் இருவரும் பேசுவதைக் கேட்ட ராவணன், "அர்ஜுனனா?" என்று கூறி, யுத்தம் செய்யும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றான்.(20) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், அர்ஜுனனுக்கு நேர்முகமாகப் புறப்பட்டபோது, சண்டபவனம் {கடுஞ்சூறாவளி} பெரும் நாதத்துடன் வீசியது. அப்படியே பெரும் தூசியும் {எழுந்தது}.(21) மஹோதர, மஹாபார்ஷ்வ, தூம்ராக்ஷ, சுக, சாரணர்களுடன் {ராவணன் சென்றபோது}, மேகங்களால் ரத்தம் பொழியப்பட்டது. ஒரே ஒருமுறை மட்டுமே {பயங்கர இடியின்} பேரொலி உண்டானது.(22) {படைகளால்} சூழப்பட்ட ராக்ஷசேந்திரனோ, எங்கே அர்ஜுனன் இருந்தானோ அங்கே சென்றான். அப்போது அஞ்சனப் பிரபையுடன் கூடியவனும், பலவானுமான அந்த ராக்ஷசன், குறுகிய காலத்திலேயே பயங்கரமான அந்த நர்மதா ஹிரத்தை {மடுவை} வந்தடைந்தான்.(23) அப்போது ராக்ஷசர்களின் ராஜாவான அவன் {ராவணன்}, அங்கே வாஷிதைகளால் {பெண் யானைகளால் சூழப்பட்ட} திவிபத்தை {ஆண் யானையைப்} போல ஸ்திரீகளால் சூழப்பட்டவனும், நரேந்திரனுமான {மனிதர்களின் தலைவனுமான} அர்ஜுனனைப் பார்த்தான்.(24)
அந்த ராக்ஷசேந்திரன் ரோஷத்தால் சிவந்த நயனங்களுடனும், பலத்தில் ஏற்பட்ட செருக்குடனும்,(25) இவ்வாறாக, கம்பீரக் குரலில், அர்ஜுனனின் அமைச்சர்களிடம், "அமாத்தியர்களே {அமைச்சர்களே}, ஹைஹயர்களின் நிருபனை {கார்த்தவீரிய அர்ஜுனனைக்} குறித்து சீக்கிரம் சொல்லுங்கள்" என்று கூறினான்[5].(26)
[5] ஓர் அரசன் மற்றோர் அரசனுடன் நேரடியாகப் போரிடும் முன், அவனது தூதர்களிடமோ, அமைச்சர்களிடமோ போருக்கான காரணத்தை அறிவிப்பது மரபு. இராவணன் அர்ஜுனனைப் பார்த்துவிட்டாலும், அவனது அமைச்சர்களிடம் தன் வருகையைத் தெரிவித்து, போருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், "பெண்களோடு விளையாடும் இவனா நான் தேடி வந்த வீரன்? உங்கள் ஹைஹய அரசன் எங்கே? போருக்கு வரச் சொல்லுங்கள்" என்று அலட்சியமாகவும் கேட்கிறான்.
"யுத்த ஆர்வத்துடன் ராவணன் என்ற பெயருடைய ராக்ஷசன் வந்துவிட்டான்" {என்ற} ராவணனின் வசனத்தைக் கேட்ட பிறகு அந்த அர்ஜுனனின் மந்திரிகள் தங்கள் ஆயுதங்களுடனும், அஸ்திரங்களுடனும் எழுந்து ராவணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினர்:(27) "ஓ ராவணா, யுத்தத்திற்கான {தகுந்த} காலத்தை அறிந்து கொள்வாயாக. ஸாது, ஸாது {நன்று, நல்லது}[6]".(28) என்ற அந்த அர்ஜுனனின் மந்திரிகள், "{மதுவால்} மதங்கொண்டு, ஸ்திரீகளால் சூழப்பட்டிருக்கும் நிருபருடன் {மன்னனுடன்} எவன் போர் புரிய விரும்புவான்? வாஷிதைகளின் {பெண் யானைகளின்} மத்தியில் இருக்கும் மதங்கொண்ட குஞ்சரத்தை சார்தூலம் {ஆண் யானையைத் தாக்கும் புலி} போல, ஸ்திரீகளின் முன்னிலையில் அர்ஜுனருடன் நீ எப்படிப் போரிடத் துணிகிறாய்?(29) தசக்ரீவா, இன்று பொறுத்துக் கொள்வாயாக. உன்னால் ரஜனி {இவ்விரவு இங்கேயே} கழிக்கப்படட்டும். யுத்தத்தில் சிரத்தை உண்டானால், தாதா {ஐயா}, நாளை சமரில் அர்ஜுனரை {எதிர்த்துப் போரிடலாம்}.(30) யுத்த தாகத்தால் ஆட்கொள்ளப்பட்ட {உன்} மதி இப்போதே போரிட வேண்டும் என்று இருக்குமேயானால் {இப்போதே போரிட உன் மனம் தூண்டினால்} எங்களைக் கொன்ற பிறகு, அர்ஜுனருடன் {நீ} யுத்தத்தைப் பெறலாம்" {என்றனர்}[7].(31)
[6] "எங்கள் அரசன் இப்போது பெண்களுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டிருக்கிறான். ஒரு வீரன் எப்போது போரிட வேண்டும் என்ற விவேகம் கூட இல்லாமல், இந்த நேரத்தில் வந்து சண்டைக்கு அழைக்கிறாயே, நன்று நன்று உன் போர் அறிவு" என்று ராவணனை ஏளனம் செய்யும் தொனியில் அர்ஜுனனின் அமைச்சர்கள் இந்த சொற்களைக் கூறுகின்றனர். அடுத்த சுலோகத்தில் இதே பொருள் கொண்ட வினாக்களையே ராவணனிடம் முன்வைக்கின்றனர்.
[7] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் கார்த்தவீரியார்ச்சுனப் படலம், பாடல் 591தன்தெரிவையர் பால் தாழ்ந்த நெஞ்சினனாய்த்தாழ்குழலார்களும் தானும்நின்று பேராற்றில் நீர் விளையாட்டில்நிகழ்வுழி நீ அமர் புரிதல்நன்று இது அன்று நாளை நீர் பொருமின்என்று அவர் நவின்றிட அரக்கன்சென்றுமேல் வீழச் செறுவலி அமைச்சர்அவன் எதிர் சென்று போர் மூண்டார்.பொருள்: தனக்குரிமை பூண்ட பெண்டிரிடம் பதிந்த காதல் மனத்தனாய் நீண்ட கூந்தலையுடைய அப்பெண்டிரும் தானுமாய் நின்று பெரிய ஆற்றில் நீர் விளையாட்டில் இன்புற்றிருக்கும்பொழுது நீ சென்று போர்புரிதல் ஆகிய இது நன்றன்று. நாளைக்கு நீங்கள் போர் செய்யுங்கள்; என்று அந்த அமைச்சர்கள் சொல்ல, அரக்கனாகிய இராவணன் அவர் சொல் கேளாது அருச்சுனன் மேல் போர்க்குப் புறப்பட, பகைவெல்லும் மிகுந்த வலிமையுடைய அவ்வமைச்சர்கள் அந்த ராவணனை எதிர்த்துச் சென்று போர் செய்யத் தொடங்கினார்கள்.
பிறகு, ராவணனின் அமைச்சர்களால், பார்த்திபனின் {மன்னன் கார்த்தவீரியனின்} அந்த அமைச்சர்கள் முற்றிலுமாக வதைக்கப்பட்டனர். மேலும், பசியோடு இருந்தவர்களால் {ராக்ஷசர்கள்} பக்ஷிக்கப்பட்டனர்.(32) பிறகு, அர்ஜுனனின் படைவீரர்களுக்கும், ராவணனுடைய மந்திரிகளுக்கும் {இடையில்} நர்மதா தீரத்தில் {நடந்த போரில்}, "ஹலஹலா" என்ற சப்தம் எழுந்தது.(33) கணைகளாலும், தோமரங்களாலும், சூலங்களாலும், திரிசூலங்களாலும், வஜ்ரம் போன்ற கூர்மையான ஆயுதங்களாலும் அந்த ராவணனுடன் கூடியவர்களை {ராக்ஷசப் படையினரைத்} துன்புறுத்தியபடியே {கார்த்தவீரியனின் வீரர்கள்} சுற்றிலும் வேகமாகப் பாய்ந்தனர்.(34) முதலைகள், மீன்கள், மகரங்களுடன் கூடிய சமுத்திரத்தின் பேரிரைச்சலைப் போல, ஹைஹயாதிபனின் போர்வீரர்களின் வேகம் மிகக் கொடூரமானதாக இருந்தது.(35) பிரஹஸ்தன், சுகன், சாரணன் உள்ளிட்ட அந்த ராவணனின் அமைச்சர்களோ, குரோதமடைந்தவர்களாக கார்த்தவீரியனின் பலத்தை {படையைத் தங்கள்} தேஜஸ்ஸால் முற்றிலும் எரித்தனர்.(36)
அந்த மந்திரிகளுடன் கூடிய ராவணனின் அந்தக் கர்மத்தை {செயலைக்} குறித்து துவாரரக்ஷகர்களான {வாயில் காப்போரான} புருஷர்களால், {நீரில்} விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுனனிடம் தெரிவிக்கப்பட்டது.(37) {அதைக் கேட்ட} பிறகு, அர்ஜுனன் அந்த ஸ்திரீ ஜனங்களிடம், "பயப்பட வேண்டாம்" என்று {கூறிவிட்டு}, கங்கை நீரிலிருந்து {வெளிப்படும் திக்கஜமான} அஞ்சனத்தைப் போல அந்த ஜலத்திலிருந்து வெளியேறி வந்தான்.(38) பிறகு, குரோதத்தால் சிவந்த கண்களுடன் கூடிய அந்த அர்ஜுனன் எனும் பாவகன் {அக்னி}, யுகாந்தத்தில் மஹாகோரமான பாவகனை {ஊழிக்கால நெருப்பைப்} போல கொழுந்துவிட்டெரிந்தான்.(39) சிறந்த ஹேம அங்கதங்களை {தோள்வளைகளை} அணிந்தவனான அவன் கதையை {கதாயுதத்தை} மிக வேகமாகக் கைகளில் ஏந்திக் கொண்டு, திவாகரன் இருளை {விரட்டுவது} போல ராக்ஷசர்களைத் தாக்கப் பாய்ந்தான்.(40) அந்த அர்ஜுனன் கைகளை வீசி சுழற்றுவதற்குக் காரணமான மஹா கதையை {கதாயுதத்தை} நன்றாக மேலே தூக்கி காருட வேகத்தை {கருடனின் அதிவேகத்தை} மேற்கொண்டு {அந்த ராக்ஷசப் படையின் மீது} விழுந்து தாக்கினான்.(41)
முஸலத்தை {உலக்கையை} ஆயுதமாகக் கொண்டவனும், விந்தியத்தைப் போல அசைக்கப்பட முடியாதவனுமான பிரஹஸ்தன், அர்க்கனின் மார்க்கத்தை {சூரியனின் வழியைத்} தடுக்கும் விந்திய பர்வதத்தைப் போல[8] அவனை {அர்ஜுனனை} எதிர்த்து நின்றான்.(42) பிறகு, மஹா ஆணவமுடையவனும், குரோதமடைந்தவனுமான பிரஹஸ்தன், அவன் மீது இரும்புப் பூண் போடப்பட்ட கோரமான முஸலத்தை {உலக்கை ஆயுதத்தை} வீசிவிட்டு, மழைக்கால மேகம் எப்படியோ, {அப்படி} பயங்கர முழக்கம் செய்தான்.(43) பிரஹஸ்தனின் கைகளில் இருந்து {வேகமாக} ஏவப்பட்ட அந்த முஸலத்தின் நுனியில், அசோக மலர் மாலையைப் போன்ற {செந்நிறமுடைய} அக்னி {எதிரில் உள்ளவற்றை} எரிப்பது போல உண்டானது.(44) அதற்குப் பின், கதையுடன் {கதாயுதத்துடன்} கூடியவனும், அகத விக்ரமனுமான {சிதையாத ஆற்றலுடையவனுமான} கார்த்தவீரிய அர்ஜுனனோ, {நெருப்பைக் கக்கியபடி} வந்து கொண்டிருந்த முஸலத்தை நிபுணத்துடன் வஞ்சித்தான் {அதில் அடிபடாமல் விலகித் தப்பினான்}.(45)
[8] விந்திய மலை சூரியனின் வழியை மறைக்கும்படி பிரம்மாண்டமாக வளர்ந்து நின்ற நிகழ்வு மஹாபாரதம், வனபர்வம் அத்தியாயம் 104ல் குறிப்பிடப்படுகிறது. அதில் அகஸ்தியர் விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறார். இப்போது ராமனிடம் இந்தக் கதையைக் கூறிக் கொண்டிருப்பவரும் அதே அகஸ்தியர்தான். அதேபோல, சூரியனைப் போன்ற வேகத்துடன் பாய்ந்து வந்த அர்ஜுனனின் வழியை, உலக்கையை ஏந்திய பிரஹஸ்தன் அசைக்கப்பட முடியாத விந்திய மலை போலத் தடுத்து நிறுத்தி நின்றான்.
பிறகு, ஹைஹயாதிபன் {அர்ஜுனன்}, பாரம் மிக்கதும், ஐந்நூறு கைகளின்[9] நீளத்திற்கு ஓங்கப்பட்டதுமான கதையை {கதாயுதத்தைச்} சுழற்றியபடி, அந்தப் பிரஹஸ்தனைத் தாக்கப் பாய்ந்தான்.(46) அப்போது அதிவேகத்துடன் கதையால் அப்படி தாக்கப்பட்ட பிரஹஸ்தன், வஜ்ரியின் {இந்திரனின்} வஜ்ரத்தால் தாக்கப்பட்டு நின்ற சைலம் {மலை} எப்படியோ {எப்படி விழுமோ, அப்படி} விழுந்தான்.(47) பிரஹஸ்தன் விழுந்ததைக் கண்ட மாரீச, சுக, சாரணர்களும், மஹோதர தூம்ராக்ஷர்களும் போர்முனையில் இருந்தே பின்வாங்கினர்.(48) அமைச்சர்கள் பின்வாங்கியபோதும், பிரஹஸ்தனே வீழ்ந்துவிட்டபோதும், ராவணன், நிருப சத்தமனான {மன்னர்களில் சிறந்தவனான} அர்ஜுனனை நோக்கி வேகமாகப் பாய்ந்தான்.(49) அங்கே {அந்த நர்மதை ஆற்றங்கரையில்} ஆயிரம் கைகளைக் கொண்டவனுக்கும் {கார்த்தவீரியனுக்கும்}, இருபது கைகளைக் கொண்டவனுக்கும் {ராவணனுக்கும் என} நிருப ராக்ஷசர்களுக்குள் {மன்னனுக்கும், ராக்ஷசனுக்கும் இடையில்} கொடூரமானதும், ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்துவதுமான அந்த யுத்தம் ஆரம்பித்தது.(50) பொங்கியெழும் சாகரங்கள் இரண்டைப் போலவும், மூலங்கள் {வேர்கள் / அடிவாரங்கள்} அசைந்து நடுங்கும் அசலங்கள் {மலைகள்} இரண்டைப் போலவும், தேஜஸ்ஸுடன் உதித்த ஆதித்யர்கள் இருவரைப் போலவும், சுட்டெரிக்கும் அநலர்கள் {அக்னிகள்} இருவரைப் போலவும்,(51) பலத்தால் செருக்குற்ற நாகங்கள் {யானைகள்} இரண்டைப் போலவும், வாஷிதைகளுக்காக {பெண்மாடுகளுக்காக மோதிக்கொள்ளும்} ரிஷபங்கள் {காளைகள்} இரண்டைப் போலவும், இடிமுழக்கத்துடன் பொழியும் மேகங்கள் இரண்டைப் போலவும், பேராற்றல் வாய்ந்த சிங்கங்கள் இரண்டைப் போலவும்,(52) அப்போது குரோதமடைந்த ருத்திர காலர்களைப்[10] போல அந்த ராக்ஷச, அர்ஜுனர்கள் இருவரும் பரஸ்பரம் கதைகளால் {கதாயுதங்களால்} கடுமையாக தாக்கிக் கொண்டனர்.(53) அசலங்கள் {மலைகள்} எவ்வாறு கோரமான வஜ்ரத்தின் தாக்குதலைத் தாங்கிக் கொள்ளுமோ, அவ்வாறே அந்த நர ராக்ஷசர்கள் இருவரும் அங்கே கதைகளின் தாக்குதல்களைப் பொறுத்துக் கொண்டனர்.(54) அசனி {இடி} முழக்கத்தின் பின் எப்படி பிரதிசுருதி {எதிரொலி} உண்டாகிறதோ, அப்படியே அவ்விருவரின் கதைகளின் தாக்குதலால் சர்வ திசைகளும் எதிரொலித்தன.(55)
[9] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "அர்ச்சுனனுக்கு வலது கைகள் ஐந்நூறாதலின், ஐந்நூறு கரமென்பது" என்றிருக்கிறது.
[10] ருத்திர காலர்கள் என்பது பிரளயத்தை உண்டாக்கும் சிவனையும், ஆயுளை முடிக்கும் காலனையும் குறிக்கும். பிரளய காலத்தில் அவ்விருவரும் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்களோ, அதே போலவே இவ்விருவரும் மோதிக்கொண்டனர்.
அந்த அர்ஜுனனின் கதாயுதமோ, அஹிதனின் {பகைவனின்} மார்பில் தாக்கும்போது, மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் மின்னல் தோன்றுவது எப்படியோ, அப்படியே நபத்தை {வானத்தை} காஞ்சன {பொன்} ஒளியடையச் செய்தது.(56) அவ்வாறே, ராவணனாலும் மீண்டும் மீண்டும் அடிக்கப்பட்ட கதை, அர்ஜுனனின் மார்பில் {தாக்கும்போது}, மஹாகிரியில் உல்கத்தை {பெரும் மலையின்மீது விழும் விண்கல்லைப்} போல ஒளிர்ந்தது.(57) அர்ஜுனனும் சோர்வை அடையவில்லை, ராக்ஷசகணேஷ்வரனும் இல்லை {ராவணனும் சோர்வை அடையவில்லை}. இவ்விருரின் இந்த யுத்தம் முற்காலத்தில் பலி இந்திரர்களுக்கிடையில் {நடந்த போர்} எப்படியோ, அப்படியே இருந்தது.(58) இரு ரிஷபங்கள் சிருங்கங்களால் {காளைகள் தங்கள் கொம்புகளால் தாக்கிக் கொள்வதைப்} போலவும், இரு குஞ்சரங்கள் {யானைகள்} தந்தங்களின் நுனிகளால் போலவும், நரராக்ஷச சத்தமர்களான அவ்விருவரும் {மனிதர்களில் சிறந்தவனான கார்த்தவீரியனும், ராக்ஷசர்களில் சிறந்தவனான ராவணனும்} பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர்.(59)
பிறகு, குரோதமடைந்த அர்ஜுனனால் முழு பலத்தையும் திரட்டி {பயன்படுத்தப்பட்ட} அந்த கதை, ராவணனின் அகன்ற மார்பின் நடு நெஞ்சுக்கூட்டில் அடிக்கப்பட்டது.(60) வரதானத்தால் செய்யப்பட்ட காப்புடன் கூடிய ராவணனின் மார்பில் அந்த கதை எவ்வளவு வேகத்துடன் {மோதிய போதும்} பலமற்ற ஒன்றைப் போல இரண்டாகி {இரு கூறுகளாகித்} தரையில் விழுந்தது.(61) அந்த ராவணனோ, அர்ஜுனனால் வீசப்பட்ட கதையின் தாக்குதலால் தனு மாத்திரம் பின்வாங்கிச் சென்றான் {ஒரு வில்லளவு தூரம் தூக்கி வீசப்பட்டான்}. மேலும் வலியால் முனகிக் கொண்டே கீழே விழுந்தான்.(62) பிறகு, அந்த அர்ஜுனன் அவ்வாறு தடுமாறிக் கிடந்த தசக்ரீவனைப் பார்த்து, பன்னகத்தை கருத்மான் போல {பாம்பைப் பிடிக்கும் கருடனைப் போலச்} சட்டெனப் பாய்ந்து பற்றிக் கொண்டான்.(63) பலவானான அந்த ராஜாவோ {கார்த்தவீரியனோ}, ஆயிரம் கைகளால் தசானனனை பலவந்தமாகப் பிடித்து, நாராயணன் பலியை {வாமனாவதாரம் மஹாபலியைக் கட்டிப் போட்டது} எப்படியோ {அப்படியே} கட்டினான் {சிறைப்படுத்தினான்}.(64)
தசக்ரீவன் கட்டப்படும்போது, "ஸாது {நன்று}" என்று முழங்கிக் கொண்டு சித்த, சாரண, தேவதங்கள் அர்ஜுனனின் தலையில் புஷ்பங்களைத் தூவினர்.(65) வியாக்ரம் மிருகத்தைப் போலவும் {புலி மானைக் கவ்விப் பிடிப்பது போலவும்}, தந்தியை மிருகராட் போலவும் {தந்தங்கொண்ட யானையை மிருகங்களின் ராஜாவான சிங்கம் போலவும் ராவணனைப்} பற்றிக் கொண்டு ஹைஹய ராஜா {கார்த்தவீரியன்} மகிழ்ச்சியால் மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் நாதம் செய்தான் {முழங்கினான்}.(66)
உணர்வடைந்த பிரஹஸ்தனோ, கட்டப்பட்டிருக்கும் தசானனனைக் கண்டு, குரோதமடைந்து, {எஞ்சியிருந்த} அந்த ராக்ஷசர்கள் சகிதனாக பார்த்திபனை {மன்னன் கார்த்தவீரியனை} நோக்கிப் பாய்ந்தான்.(67) பாய்ந்து வந்த அந்த நக்தஞ்சரர்களின் {இரவுலாவிகளின்} வேகமோ, வெயில் தணியும்போது அம்புதியில் {கடலில்} திரண்டெழும் கார்மேகங்களை {கார்மேகங்களின் வேகத்தைப்} போல விளங்கியது.(68) அப்போது, "{எங்கள் தலைவன் ராவணனை} விடு, விடுவாயாக" என்றும், "நில், நிற்பாயாக" என்றும், மீண்டும் மீண்டும் முழக்கமிட்ட அவர்கள், சூலங்களையும், முஸலங்களையும் அர்ஜுனன் மீது வீசினர்.(69) சற்றும் கலங்காதவனும், அரிநிசூதனனுமான {பகைவரை அழிப்பவனுமான} அர்ஜுனன், அப்போது, அமர அரீக்களின் {தேவர்களுடைய பகைவரான ராக்ஷசர்களின்} அந்த ஆயுதங்கள் வந்தடைவதற்கு முன்பே, வரும்போதே {அவற்றைப்} பிடித்துக் கொண்டான்.(70) பிறகு, அவன் தடுப்பதற்கரிய அந்தச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டே ராக்ஷசர்களைப் பிளந்து, வாயு அம்புதங்களைப் போல {காற்றானது மேகங்களைச் சிதறடிப்பதைப் போல} விரட்டியடித்தான்.(71) கார்த்தவீரிய அர்ஜுனனோ, ராக்ஷசர்களை அச்சமடையச் செய்தபிறகு, ராவணனை {தன் கைகளில்} பற்றிக் கொண்டு நண்பர்கள் சூழ {மாஹிஷ்மதி} நகரத்திற்குள் பிரவேசித்தான்.(72) அப்போது, புருஹூதனுக்கு {வேள்விகளில் பலரால் அழைக்கப்படும் இந்திரனுக்கு} ஒப்பான அர்ஜுனனோ, சஹஸ்ரலோசனன் பலியைப் பிடித்தது போல {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் மஹாபலியைச் சிறைபிடித்து தன் அமராவதி நகருக்குள் நுழைந்ததைப் போல}, துவிஜர்களாலும், பௌரர்களாலும் {இருபிறப்பாளர்களாலும், நகர மக்களாலும் தூவப்பட்ட} மலர்கள், அக்ஷதைகளின் குவியல்களால் வாரி இறைக்கப்பட்டவனாக அந்தப் புரீக்குள் {மாஹிஷ்மதி நகருக்குள்} பிரவேசித்தான்.(73)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 032ல் உள்ள சுலோகங்கள்: 73
| Previous | | Sanskrit | | English | | Next |
