Vali | Sarga-034 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வாலியைப் போருக்கு அழைத்த ராவணன்; தென் கடலுக்குச் சென்றிருந்த வாலி, ராவணனைக் கக்கத்தில் இட்டுக் கொண்டு சென்றது; வாலியுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்...
{கார்த்தவீரிய} அர்ஜுனனால் விடுவிக்கப்பட்ட பிறகு, ராக்ஷசாதிபன் ராவணன், அவ்வாறு செய்யப்பட்ட போதிலும் மனந்தளராமல் சர்வ பிருத்வியிலும் சுற்றித் திரிந்தான்.(1) இந்த ராவணன், ராக்ஷசனோ, மனுஷ்யனோ, அதிக பலம் பொருந்தியவன் எனக் கேள்விப்பட்டால், செருக்குடன் அவனைச் சந்தித்து யுத்தத்திற்கு அழைப்பவனாக இருந்தான்.(2)
பிறகு ஒருமுறை வாலியால் பாலிதம் செய்யப்பட்ட {ஆளப்பட்ட} கிஷ்கிந்தா நகருக்குச் சென்று, ஹேமமாலையணிந்தவனான வாலியை யுத்தத்திற்கு அழைத்தான்.(3) அதன்பிறகு, வானரர்களின் அமைச்சனும், தாரையின் பிதா {சுஷேணன்}, பிரபு {சுக்ரீவன் ஆகியோருடன் கூடியவனுமான} வானரன் தாரன்[1], யுத்தத்தை விரும்பி அங்கு வந்து சேர்ந்தவனிடம் {ராவணனிடம் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(4) "இராக்ஷசேந்திரா, எவர் உனக்கு இணையான பலவானாக இருக்க முடியுமோ, அந்த வாலி {வெளியே} சென்றிருக்கிறார். வேறு எந்தப் பிலவங்கமன் {தாவிச் செல்லும் குரங்கானவன்} உனக்கு நேருக்கு நேர் நிற்கக் கூடிய சக்திவாய்ந்தவன்?(5) இராவணா, நான்கு சமுத்திரங்களிலும் சந்தியாவந்தனம் செய்துவிட்டு இந்த முஹூர்த்தத்திற்குள் வாலி திரும்பி வந்துவிடுவார். ஒரு முஹூர்த்த காலம் {இங்கே} காத்திருப்பாயாக.(6)
[1] தர்மாலயப் பதிப்பில், "வானரர்களின் மந்திரியும், தாரையின் தந்தையும், மஹாசாமர்த்தியசாலியுமாகிய தாரனென்ற வானரன் அங்கே போரில் உத்தேசம் கொண்டவனாய் வந்திருக்கின்ற அவனுக்கு, இது விஷயத்தில் இந்த பதிலைச் சொன்னான்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அப்போது அவ்விடத்திலிருந்த வாலியினது மந்திரியும் மாமனுமான பிரபுவாகிய தாரனென்னும் வாநரன், அமர்புரிய ஆவல் கொண்டு வந்திருக்கின்ற இராவணனைநோக்கி" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "தாரனென்பவன் வாலிக்கு நேராக மாமனல்ல னாகையால், மந்திரியான தாரனும், தாரையின் தந்தையான சுஷேணனும், பிரபு (யுவராஜாவான சுக்ரீவனுமாகி) மூவருமெனவும் பொருள் கூறுவர்" என்றுமிருக்கிறது.
ஆங்கிலப் பதிப்புகளில், மன்மதநாததத்தர் பதிப்பில், "தாரையும், அவளது தந்தையான சுஷேணனனும், பிரபுவான சுக்ரீவனும் ராக்ஷச மன்னனிடம்" என்றிருக்கிறது. விவேக்தேவ்ராய் பதிப்பில், வானரர்களின் ஆலோசகனும், பிரபுவுமான தாரன் எனும், தாரையின் தந்தை, போரிட விரும்பி வந்திருக்கும் ராவணனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இந்த ஆண் குரங்கு தாரனாவான். இவன் வாலியின் மனைவியான தாரையின் தந்தையாவான்" என்றுமிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "அங்கே அவன் {ராவணன்}, அந்தக் குரங்கின் உறவினர்களை மட்டுமே கண்டான், தாரை, அவளது தந்தையான சுஷேணன், தலைவன் சுக்ரீவன் ஆகியோர் சற்று முன் வந்த அந்தப் போர்வெறி கொண்டவனிடம் பின்வருமாறு பதிலளித்தனர்" என்றிருக்கிறது.
மேற்கண்ட பதிப்புகள் சிலவற்றில் உள்ளதுபோல், "வானரர்களின் அமைச்சனும், தாரையின் பிதாவும், பிரபுவுமான வானரன் தாரன், யுத்தத்தை விரும்பி அங்கு வந்து சேர்ந்த ராவணனிடம் பின்வரும் வாக்கியத்தைச் சொன்னான்" என்று பொருள் கொண்டால், தாரன், தாரையின் பிதா ஆகிவிடுவான். ஆனால் தாரையின் பிதா சுஷேணனே ஆவான். தாரன் உண்மையில் சுக்ரீவனின் மனைவியான ருமையின் தந்தை ஆவான். வாக்கியத்தின் இறுதிச் சொல் "சொன்னான்" என்று ஒருமையில் முடிகிறது. எனவே, மூவரும் சேர்ந்து சொன்னார்கள் என்றும் பன்மை வினைமுற்றுடன் வாக்கியத்தை அமைக்க முடியாது. இந்த சர்க்கத்தின் 11ம் சுலோகத்தில், தாரனே மீண்டும் நேரடியாகக் குறிப்பிடப்படுவதால், இனி வரப்போகும் வாக்கியத்தைப் பேசுபவன் தாரனே எனக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேற்கண்ட பதிப்புகள் சிலவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, சுக்ரீவன் பேசுவதாகவோ, அங்கே இருந்த மூவரும் சேர்ந்து பேசியதாகவோ பொருள் கொள்ள இயலாது. ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் ராவணன், வாலியின் மனைவியான தாரையிடமே பேசுகிறான். அடுத்து தாரையே ராவணனுக்குப் பதிலளிக்கிறாள், தாரையின் சொல் கேட்டே ராவணன் வாலியைத் தேடி தென்கடலுக்குச் செல்கிறான்.
இராஜனே, சங்குபோல் வெண்மையான இந்த அஸ்தி {எலும்புக்} குவியல்களைப் பார்; எவை இங்கே கிடக்கின்றனவோ, இவை வானராதிபரின் தேஜஸ்ஸால் {மடிந்த} யுத்தத்தில் விருப்பம் கொண்டவர்களுடையவை.(7) இராக்ஷசா, ராவணா, ஒருவேளை உன்னால் அம்ருத ரசம் பருகப்பட்டிருந்தாலும் {நீ இறப்பில்லாதவனாக இருந்தாலும்}, அப்போதும் வாலியை எதிர்கொண்டால் உன் ஜீவிதம் அத்தோடு முடிந்துவிடும்.(8) விஷ்ரவஸ்ஸின் மகனே {ராவணா}, இப்போதே இந்த ஜகத்தின் சித்திரத்தை {உலகத்தின் அழகைப்} பார்த்துக் கொள்வாயாக. இந்த முஹூர்த்தம் காத்திருப்பாயாக {இங்கே உயிருடன் இருப்பாயாக. பிறகு} உனக்கு {உயிருடன் இருப்பதே} துர்லபம் ஆகிவிடும் {சாத்தியமில்லாமல் போகும்}.(9) ஒருவேளை மரிப்பதற்கு நீ அவசரப்பட்டால் தக்ஷிண சாகரத்திற்கு {தென்கடலுக்குச்} செல்வாயாக. அங்கே பூமியில் நிலைபெற்றிருக்கும் பாவகனை {அக்னியைப்} போன்ற வாலியைக் காண்பாய்" {என்றான் தாரன்}.(10)
அந்த லோகராவணனான {உலகைக் கதறச் செய்பவனான} ராவணனோ, தாரன் முதலியோரை அதட்டிவிட்டு அந்தப் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறிக் கொண்டு தக்ஷிணார்ணவத்தை {தென்கடலை} நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(11) அங்கே ஹேமகிரி {பொன்னாலான மலை} போன்ற உடலமைப்பையும், தருண அர்க்கனை {இளஞ்சூரியனைப்} போன்ற பிரகாசமான முகத்தையும் கொண்டவனும், சந்தியாவந்தன வழிபாட்டில் ஆழ்ந்திருப்பவனுமான வாலியை ராவணன் கண்டான்.(12) பிறகு, அஞ்சனத்திற்கு ஒப்பான {கரிய நிறம் கொண்ட} ராவணன் புஷ்பகத்தில் இருந்து இறங்கி வாலியைப் பிடிப்பதற்காக, சப்தமில்லாத {நடை} அடிகளுடன் வேகமாக நெருங்கினான்.(13) அப்போது அந்த ராவணன் வாலியாலுங்கூட யதேச்சையாகப் பார்க்கப்பட்டான். பாப அபிப்ராயம் கொண்டவனைக் கண்டாலும் {வாலி} கலக்கத்தை அடையவில்லை.(14) சிங்கம் முயலை, அல்லது கருடன் பன்னகத்தை அலட்சியம் செய்வது எப்படியோ, {அப்படியே} வாலி, பாபநிச்சயம் கொண்ட அந்த ராவணனைச் சிந்திக்கவுமில்லை {ராவணனைக் குறித்துக் கவலைப்படவில்லை}.(15) "{என்னைப்} பிடிக்க விரும்பும் பாப உள்ளத்துடன் {வரும்} அந்த ராவணனை {என்} கக்கத்தில் தொங்கச் செய்து {மற்ற} மூன்று மஹார்ணவங்களுக்கு {பெருங்கடல்களுக்கும்} செல்வேன்.(16) கருடனின் பன்னகம் {கருடனின் அலகில் தொங்கும் பாம்பைப்} போல, {என்} அங்கத்தில் {கக்கத்தில்} நிலைத்துத் தொங்குபவனும், நழுவும் தொடைகள், கைகள், அம்பரங்களை {ஆடைகளைக்} கொண்டவனுமான அரி தசக்ரீவனை {பகைவனான ராவணனை உலகத்தினர்} பார்ப்பார்கள்" {என்று வாலி தனக்குள் நினைத்தான்}.(17)
இவ்வாறான மதியை {எண்ணத்தை} அடைந்த வாலி, காதை[2] மட்டுமே செலுத்திக் கொண்டும் {ராவணனின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டும்}, நைகமங்களில் {வேதங்களில்}[3] உள்ள மந்திரங்களை ஜபித்துக் கொண்டும் பர்வதராட்டை {மலையரசனைப்} போல {அசையாமல் நிலைத்து} நின்றான்.(18) {தங்கள்} பலத்தில் செருக்குள்ள ஹரி ராக்ஷச பார்த்திபர்கள் இருவரும் அன்யோன்யம் {குரங்கு மன்னன் வாலி, ராக்ஷச மன்னன் ராவணன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர்} பிடிக்க விரும்பியவர்களாக, பிரயத்னமுடையவர்களாக அந்தக் கர்மத்தை {பிடிக்கும் செயலைச் செய்ய} முனைந்தனர்.(19) {இராவணனின்} பாத சப்தத்தால், {அவன் தன்னைக்} கைகளால் பிடிக்க நெருங்கியதை உணர்ந்தும், ஆனால் முகத்தைத் திருப்பாமலும், அண்டஜன் சர்ப்பத்தைப் போல {முட்டையிலிருந்து பிறந்த பறவை ஒரு பாம்பைப் பிடிப்பதைப் போல} வாலி அந்த ராவணனைப் பிடித்தான்.(20) {தன்னைப்} பிடிக்க விரும்பியவனும், ராக்ஷசர்களின் ஈஷ்வரனுமான அவனை {ராவணனைத் தன் வாலால் சுருட்டிப்}[4] பிடித்து, {தன்} கக்கத்தில் தொங்கச் செய்த ஹரி {குரங்கான வாலி}, வேகமாக வானத்தில் எழுந்தான்.(21) {வாலியின் கக்கத்தில்} நன்கு அழுத்தப்பட்டாலும், {தப்பிக்க நினைத்து} நகங்களால் அடிக்கடி கீறித் துன்புறுத்தும் அந்த ராவணனை, பவனன் மேகத்தை {காற்றானவன் மேகத்தை இழுத்துச் செல்வதைப்} போல, வாலி கொண்டு சென்றான்.(22)
[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "செம்பதிப்பின் உரை இங்கே ஒரு மொழிபெயர்ப்புச் சிக்கலை ஏற்படுத்துகிறது. வேறு பதிப்புகள், "மௌனம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. இதன் பொருள் வாலி அமைதியாகக் காத்திருந்தான் என்பதாகும். செம்பதிப்போ, அதற்குப் பதிலாக, "கர்ணம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இதன் பொருள் காது என்பதாகும். எனவே வாலியின் கண்கள் மூடியிருந்ததால், அவன் தன் காதுகளால் கேட்டான் என்று நாம் பொருள் கொள்கிறோம். ஆனால் அந்தச் சொல்லுக்கு மூலைவிட்டம், அல்லது ஒரு வட்டத்தின் விட்டம் என்றும் பொருள் உண்டு. சந்தியாவந்தனச் சடங்குகளின் ஒரு பகுதியாக வாலி தரையில் மங்கலகரமான சின்னங்களை வரைந்திருக்கவும் வாய்ப்புள்ளது" என்றிருக்கிறது.
[3] வேதங்களுக்கு 'சுருதி', 'ஆமநாயம்', 'நிகமம்' எனப் பல பெயர்கள் உண்டு. வேதங்கள் ஏன் 'நிகமம்' (நைகமம்) என்று அழைக்கப்படுகின்றன. 'நிகமம்' என்றால் "மறைபொருளான உன்னத உண்மைகளை மிக உறுதியாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் முழுமையாக அறியச் செய்யும் நூல்" என்று பொருள். அது, நிச்சயமான பொருளைத் தருவது; சொற்களின் மாறாத கட்டமைப்பைக் கொண்டது; வேள்வி மற்றும் சடங்குகளின் வழிகாட்டியாகத் திகழ்வது. வாலி அங்கு அமர்ந்து ஜபித்துக் கொண்டிருந்த மந்திரங்கள் ஆதிவேதங்களில் மிகத் துல்லியமாக ஓதப்படும், சற்றும் பிசகாத, ஆழமான மறைபொருளைக் கொண்ட வேத மந்திரங்கள்.
[4] 18ம் சுலோகத்தில் காதால் மட்டுமே கவனித்தான் என்றும், 20ம் சுலோகத்தில் பாத சப்தத்தால் உணர்ந்தும், முகத்தைத் திருப்பாமலும் இருந்த வாலி ராவணனைப் பிடித்தான் என்றும், 21ம் சுலோகத்தில் ராவணனைக் கக்கத்தில் தொங்கச் செய்தான் என்றும் வருகிறது. அதை எப்படிச் செய்திருப்பான் என்பதையே இந்த அடைப்புக்குறி விளக்குகிறது. ஆனால் மூலத்தில் எங்கும் இப்படிக் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை கக்கத்திலேயே அழுத்திப் பிடித்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில், ஒரு படலத்தின் பெயரே, "வாலி வாலால் கட்டுண்ட படலம்" என்றிருக்கிறது. வாலி, ராவணனைக் கக்கத்தில் இட்டுக் கொள்ளாமல் வாலிலேயே கிஷ்கிந்தை வரை தூக்கிச் செல்கிறான்.
பிறகு, {வாலியால்} தூக்கிச் செல்லப்பட்ட தசானனனை விடுவிக்க விரும்பிய அந்த ராக்ஷச அமைச்சர்கள் அலறியபடியே வாலியைப் பின்தொடர்ந்து விரைந்தனர்.(23) மேகக் கூட்டங்களால் பின்தொடரப்படும் அம்பரத்தின் அம்சுமானை {ஒளிக்கதிர்களுடன் கூடிய சூரியனைப்} போல, அவர்களால் பின்தொடரப்படுபவனாக அம்பரத்தின் {ஆகாயத்தின்} மத்தியில் வாலி ஒளிர்ந்தான்.(24) அந்த ராக்ஷசோத்தமர்கள் {ராக்ஷசர்களில் சிறந்த அமைச்சர்கள்} வாலியை நெருங்குவதற்கு இயலாதவர்களாக, அவனுடைய கைகள், {மற்றும்} தொடைகளின் {வேகத்தால் உண்டான காற்றின்} வேகத்தால் மிகவும் சோர்வடைந்தவர்களாக {மேற்கொண்டு செல்ல முடியாமல்} அப்படியே நின்று விட்டனர்.(25) {அப்படிச்} செல்லும் வாலியின் மார்க்கத்தில் பர்வதேந்திரங்களே {வாலி செல்லும் வழியில் இருந்து பெரும் மலைகளே} விலகியபோது, ஜீவிதத்தைக் காக்க விரும்பி மாமிச சோணிதங்களைச் சுமக்கிறவனைக் குறித்துப் பிறகு என்ன {சொல்வது}?(26) வானரேந்திரன் {வானரர்களின் தலைவனான வாலி}, மஹா வேகங் கொண்டவனாகப் பக்ஷிகணங்களே {பறவைக் கூட்டங்களே} சென்றடைய முடியாத சர்வ சாகரங்களுக்கும் கிரமப்படி {அனைத்துக் கடல்களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாகச்} சென்று சந்தியா காலத்தை வணங்கினான்.(27)
ஆனால், கைசரோத்தமனான வாலி {ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களில் சிறந்தவனான வாலி}, கைசரபூதங்களால் {தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்ட ஆகாயத்தில் சஞ்சரிக்கும் உயிரினங்களால்} போற்றித் துதிக்கப்படுபவனாக அந்த ராவணனுடன் மேற்கு சாகரத்தை வந்தடைந்தான்.(28) அங்கே ஸ்நானம் செய்த வானரன் {மேற்குக் கடலில் நீராடிய வாலி}, சந்தியை உபாசித்துவிட்டு {சந்தியாகால வழிபாட்டைச் செய்துவிட்டு}, மேலும் {வேத மந்திரங்களை} ஜபித்துவிட்டு, தசானனனை {தன் கக்கத்தில்} சுமந்தபடியே உத்தர சாகரத்துக்கு {வடக்கிலுள்ள கடலுக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(29) சத்ரு சகிதனான மஹா ஹரி {பகைவனான ராவணனுடன் கூடிய பெருங்குரங்கான வாலி, ராவணன் என்ற} சுமையுடன் கூடியவனாக, வாயுவையும், மனத்தையும் போல பல்லாயிரம் யோஜனைகளைக் கடந்தான்.(30) தசானனனை {ராவணனைச்} சுமப்பவனான அந்த வாலி, உத்தர சாகரத்தில் சந்தியை உபாசித்துவிட்டு, பூர்வ மஹோததியையே {கிழக்குக் கடலையே} அடைந்தான்.(31) அங்கேயும் {நான்காவதான கிழக்குக் கடலிலும்} சந்தி வழிபாட்டை முடித்த வாசவி {வசுக்களின் தலைவனான இந்திரனின் மகன் வாலி}, உடனிருக்கும் ராக்ஷசேஷ்வரன் ராவணனைப் பிடித்துக் கொண்டு கிஷ்கிந்தைக்கு அருகில் வந்தடைந்தான்.(32) நான்கு சமுத்திரங்களிலுமே சந்தி வழிபாட்டை நிறைவேற்றிய[5] வானரன் {வாலி}, ராவணனைச் சுமந்த களைப்பால் கிஷ்கிந்தையின் உபவனத்தில் விழுந்தான் {கிஷ்கிந்தையின் எல்லையிலுள்ள தோட்டத்தில் இறங்கினான்}.(33)
[5] 10ம் சுலோகத்தில் வாலி தென்கடலில் இருக்கிறான் என்று தாரனால் சொல்லப்படுகிறது. இதே சர்க்கத்தின் 11 முதல் 26ம் சுலோகம் வரை வாலி ராவணனைப் பிடித்து எப்படிக் கொண்டு சென்றான் என்றும், 27ம் சுலோகத்தில் அனைத்துக் கடல்களுக்கும் வாலி சென்றான் என்றும், 28ம் சுலோகத்தில் ராவணனுடன் வாலி மேற்குக் கடலுக்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டு, 31ம் சுலோகத்தில் உத்தர சாகரத்திலும் {வடக்குக்கடலிலும்} வழிபாட்டை முடித்துவிட்டு, அதே 31ம் சுலோகத்தில் கிழக்குக் கடலுக்குச் செல்கிறான். 32ம் சுலோகத்தில் கிழக்குக் கடலில் தன் வழிபாட்டை நிறைவு செய்கிறான். இவ்வாறு நான்கு கடல்களில் தன் சந்தி வழிபாட்டை நிறைவேற்றுகிறான். ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸந்தியாவந்தனம் ஒரேயிடத்தில் ஒரேதரம் செய்துமுடிக்க வேண்டிய செய்கையாயிருக்க, நான்கு ஸமுத்திரங்களிலும் நான்குதரம் செய்தானென்பது எவ்வாறு பொருந்துமெனின், முதலிலே தென்கடலில் சௌசம் முதலியவையும், மேற்குக் கடலில் ஸ்நாநஜபங்களும், வடகடலில் புரோக்ஷணம் முதலியவையும், கிழக்குக் கடலில் அர்க்கியப் பிரதானம் முதலியவையும் செய்யப்பட்ட வாதலின், பொருந்துமென்பர்" என்றிருக்கிறது.
அப்போது ராவணனைத் தன் கக்கத்தில் இருந்து விடுவித்து விட்ட கபி சத்தமன் {குரங்குகளில் சிறந்தவனான வாலி}, மீண்டும் மீண்டும் ராவணனை நோக்கிச் சிரித்தபடி, "நீ எங்கிருந்து வருகிறாய்?"[6] என்று சொன்னான்.(34)
[6] வாலிக்குத் தன்னை எதிர்க்க வந்தவன் ராவணன் என்று தெரிந்திருந்தாலும், அவனைக் கேலி செய்யும் தொனியில் 'என்னுடைய கக்கிலேயே இவ்வளவு தூரம் தொங்கிக் கொண்டு வந்தாயே, நீ எந்த ஊரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பதாக இஃது அமைகிறது.
பெரும்வியப்பை அடைந்தவனும், களைப்பினால் சுழலும் கண்களைக் கொண்டவனுமான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, ஹரீந்திரனிடம் {குரங்குகளின் தலைவனான வாலியிடம்} இந்த வசனத்தைக் கூறினான்:(35) "வானரேந்திரா {வானரர்களின் தலைவா}, மஹேந்திரனைப் போன்றவனே, ராக்ஷசேந்திரன் ராவணனான நான் யுத்தம் செய்யும் விருப்பத்துடன் இங்கே வந்தேன். அத்தகைய நான் இன்று உன்னால் {இந்நிலையை} அடையச் செய்யப்பட்டேன் {வளைத்துப் பிடிக்கப்பட்டேன்}[7].(36) எத்தகைய உன்னால் நான் ஒரு விலங்கைப் போல் பிடிக்கப்பட்டு, நான்கு அர்ணவங்களுக்கும் {கடல்களுக்கும்} இழுத்துச் செல்லப்பட்டேனோ, {அத்தகையவனான} அஹோ {என்னே உன்} பலம், அஹோ {என்னே உன்} வீரியம், அஹோ {என்னே உன்} காம்பீர்யம்.(37) வீரா, இவ்வாறு சோர்வில்லாமல் சீக்கிரமாகவே, என்னையும் சுமந்து கொண்டு மஹார்ணவங்களை {பெருங்கடல்களை} வேறு எந்த வீரன் தாண்டுவான்?(38) பிலவங்கமா {தாவிச் செல்லும் குரங்கானவனே}, இத்தகைய கதி {வேகம்}, மனம், அநிலன் {வாயு}, சுபர்ணன் {கருடன் ஆகிய} மூன்று பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு / பொருள்களுக்கு} மட்டுமே உரியது; மற்றும் உனக்கும் {உரியது}. இதில் சந்தேகம் இல்லை.(39) வானரபுங்கவா {வானரர்களில் முதன்மையானவனே}, {உன்} பலத்தைக் கண்ட அத்தகைய நான், உன்னுடன் சேர்ந்து பாவகனின் {நெருப்பின்} முன்னிலையில் நீண்ட காலம் நீடிக்கும் மிக ஆழமான நட்பை உனக்கு {வழங்க} விரும்புகிறேன்.(40) ஹரீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, தாரங்கள், புத்திரர்கள், புரங்கள் {தலைநகரங்கள்}, ராஷ்டிரங்கள் {நாடுகள்}, போகப் பொருள்கள் {செல்வங்கள்}, ஆடைகள், போஜனங்கள் {உணவுகள் என} இவை அனைத்துமே நம் இருவருக்கும் பிரிக்கப்படாததாக இருக்கும்" {என்றான் ராவணன்}.(41)
[7] இங்கே வாலி, கிஷ்கிந்தை நகருக்குள் நுழைவதற்கு முன்பே தன் விருப்பத்தில் தானே ராவணனைக் கக்கத்தில் இருந்து விடுவிக்கிறான். ஆனால் ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் கிஷ்கிந்தை நகருக்குள்ளேயே கொண்டு சென்று தன் மனைவி தாரை கேட்டுக் கொண்டதால் அவனை விடுவிக்கிறான். மேலும், ராவணன் வந்த காரணம் யாது என்றும் கேட்கிறான். அது வாலி வாலால் கட்டுண்ட படலம், பாடல் 618, 619ம் பாடல்களில் சொல்லப்படுகிறது. அது பின்வருமாறுஆங்கு அவன் வரக்கண்டு அகமகிழ்தாரைஅவன் நெடுவாலிடைக் கிடந்துதூங்கிய அரக்கன் தன் துயர் கண்டுதுறுகழல் வாலியை நோக்கிஈங்கு இவன் யாவன்? இவனை நீ போகஇனி விடு என மனம் இரங்கித்தேம்கமழ் குழலி செப்பிட விடுத்துத்தீயவன் தனக்கு இவை செப்பும்.(618)பிஞ்ஞகன் பூசை பேணுதல் வேண்டிப்பெருங்கடல் தொறும் செலப் பாயும்அந்நிலை அதனில் அரக்கன் நீ வந்தகாரியம் அறிந்திலேன், அரக்காஎன்இடை வந்த காரணம் அதனைவிளம்பு என இராவணன் இயம்பும்உன்னொடு பொருவான் வந்து அகப்பட்டேன்உண்மைஈது என அவன் உரைக்கும்.(619)பொருள்: அவ்விடத்தில் அவ்வாலி வரக்கண்டு மனமகிழ்ந்த தாரை, அவனது வாலில் கிடந்து தொங்கிக் கொண்டுள்ள ராவணனாகிய அரக்கன்தன் துயரைக் கண்டு வலிய வீரக் கழலையுடைய வாலியைப் பார்த்து, "இங்குள்ள இவன் யார்? இவனை இனி போகவிடுக" என்று மனம் இரங்கித் தேன்மணக்கும் கூந்தலையுடைய தாரை சொல்ல, அவனை விடுவித்துவிட்டு அந்தக் கொடும் ராவணனுக்கு இவற்றைச் சொல்லுவான்,(618) "பிஞ்ஞகம் என்னும் தலையணியை அணிந்துள்ள சிவனின் பூசையை விரும்பிச் செய்ய வேண்டி, பெருங்கடல்கள்தோறும் செல்வதற்காகப் பாயும் அந்த அவசர நிலையில் அரக்கனாகிய நீ வந்த காரியத்தை அறிந்து கொள்ளவில்லை. அரக்கனே, நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல்வாயாக" என வாலி கேட்க, இராவணன் சொல்வான், "உன்னோடு போர் செய்வதற்காகவே வந்து அகப்பட்டுக் கொண்டேன். இஃது உண்மையாகும்" என்று சொல்ல, வாலி சொல்லுவான்.(619)
பிறகு, ஹரிராக்ஷசர்கள் ஆகிய {குரங்கான வாலியும், ராக்ஷசனான ராவணனுமான} அவ்விருவரும், அக்னியை வளர்த்து {நெருப்பை மூட்டி}, பரஸ்பரம் தழுவிக் கொண்டு பிராத்ருத்வத்தை {அண்ணன் தம்பி முறையை} அடைந்தனர்.(42) பிறகு, அன்யோன்யம் கரங்களை கோர்த்துக் கொண்ட {கைகளைத் தோளோடு தோளாகத் தொங்கவிட்டுக் கொண்ட} அந்த ஹரிராக்ஷசர்கள் இருவரும், பெரும் மகிழ்ச்சியுடன் கூடியவர்களாக, இரண்டு சிங்கங்கள் கிரியின் {மலையின்} குகைக்குள் {நுழைவதைப்} போல, கிஷ்கிந்தைக்குள் நுழைந்தனர்.(43) இராவணன், அங்கே சுக்ரீவனைப் போல ஒரு மாதம் தங்கியிருந்தான். மூன்று உலகங்களையும் அழிக்கும் விருப்பம் கொண்டவர்களாக {அங்கே} வந்து சேர்ந்த அமைச்சர்களால் அவன் {மீண்டும் லங்கைக்கு} அழைத்துச் செல்லப்பட்டான்[8].(44)
[8] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில், வாலி வாலால் கட்டுண்ட சர்க்கத்தில் 603 முதல் 621ம் பாடல் வரை இந்த சர்க்கத்தில் உள்ள செய்திகள் முழுமையாகவே வேறொரு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே பாடல்களும், பொருள் விளக்கங்களும் தந்தால், அதுவே இந்த சர்க்கத்தைவிடப் பெரிதாகும் என்பதால் அந்தப் பாடல்களின் பொருள் சுருக்கம் மட்டும் இங்கே தரப்படுகிறது. அது பின்வருமாறு:பிரம்மனால் கார்த்தவீரியார்ச்சுனனிடம் இருந்து விடுவிக்கப்பட்ட ராவணன், வலிமையில் சிறந்த வாலி வாழ்கின்ற வளமான நகரை வந்தடைந்தான்.(603) வாலியின் அரண்மனையில் ராவணன் வினவ, வாலியின் மனைவி தாரை, "பிசாசுகளைப் போல் இரவில் நீ வந்த காரணம் என்ன" என்று கேட்டாள்.(604) வாலியோடு போரிட வந்ததாக ராவணன் சொல்ல, தாரை, "காலனோடு கோபித்துப் பிழைக்க முடியுமா" என்று சொல்லிவிட்டு, மேலும்,(605) "துந்துபி உள்ளிட்ட பகைவர் வந்து வாலியுடன் போரிட்டனர். அவர்களின் எலும்புக் குவியல்தான் இந்தப் பெரிய மலை. நீ அறிவாயாக.(606) எனவே வாலியுடன் போரிட்டால் நீ சாவது உறுதி. நான்கு கடலினும் சிவபூசை செய்து முடித்துப் பாய்ந்து வருவான். நீ பதறாதே" என்றாள்.(607) பிறகு, "அரக்கனே, நீ அவர் வரும் வரை பொறுக்கமாட்டாய் என்றால் தென்திசைக் கடலுக்குச் செல்வாயாக" என்றாள் தாரை. இராவணன், அவள் சொன்னபடி சென்று சிவபூஜையில் இருக்கும் வாலியை அணுகி நோக்கினான்.(608) வாலி, கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்திட, ராவணன், "இந்த வாலியைக் கட்டிப் போடுவேன்" என்று நினைத்தான்.(609) வாலி, கண்விழித்துப் பார்த்து, அரக்கன் வந்திருப்பதை அறிந்தும் அறியாதவன் போல் மீண்டும் கண்ணை மூடிக் கொள்ள, ராவணன் மெல்லெனப் பின்னால் ஒளிந்து வந்து வாலியைப் பற்றினான்.(610) இராவணன் தன் இருபது கைகளாலும் பற்றவும், வாலி, தன்னிரு கைகளால் அந்த ராவணனை இறுக்கிப் பிடித்து, வாலினால் கட்டி, சிவபூசையை முடித்துக் கொண்டு, தன் வாலிலேயே ராவணன் தொங்க மேற்குக் கடல் நோக்கிப் பாய்ந்தான்.(611) வாலி பாயும் வேகத்தால் உண்டான காற்றால் மலைகளும் மரங்களும் முறிந்தன. மகோதரன் முதலிய அமைச்சர்கள் ராவணனை மீட்க வாலியின் பின்னே சென்றனர்.(612) வாலியின் உடல் வேகத்திற்குப் பின் செல்லும் காற்றே அவர்களை வருத்த, அவர்கள் அனைவரும் வீழ்ந்தனர்.(613) பாரத வர்ஷம் பரவியுள்ள ஒன்பதாயிரம் யோசனைகளைக் கடந்து, இமையம் நிலைத்துள்ள இரண்டாயிரம் யோசனைகளைக் கடந்து, சிறப்புள்ள ரதங்களைக் கொண்ட சிறந்த கிம்புருட தேசத்தின் ஒன்பதினாயிரம் யோசனைத் தொலைவைக் கடந்து, ஏமகூட மலை இரண்டாயிரம் யோசனை வழியை இமைக்கும் நேரத்தில் கடந்து,(614) பொன்மயமான அரி வர்ஷத்தின் ஒன்பதாயிரம் யோசனைகளைக் கடந்து, இரண்டாயிரம் யோசனையுடைய நிடதம் எனும் நாட்டைக் கடந்து மேற்குக் கடலை அடைந்து, சிவபூசை செய்துவிட்டு, இரமிய வர்ஷத்தின் ஒன்பதாயிரம் யோசனைகளைத் தொலைவைக் கடந்து,(615) நீலமலையின் இரண்டாயிரம் யோசனைகளைக் கடந்து, இளாவிருத தேசம், சுவேத மலை இவற்றின் பரப்பான பதினோராயிரம் யோசனைகளைக் கடந்து, குருவம் என்ற நாட்டையும், சிருங்கம் எனும் மலையையும் கடந்து, வடகடலை அடைந்து சிவனின் திருவடியைப் போற்றி அர்ச்சனை செய்து முடித்தான்.(616) மேலைக் கடலோடு, வடகடலுக்குள்ள யோசனைகளின் தொலைவை விரைந்து கடந்து கீழ்த்திசையிலுள்ள கருங்கடலை அடைந்து சிவனைப் பூசித்து, பின் மேல் கூறிய கீழ்க்கடலோடு தென்கடலுக்குள்ள யோசனைகளைக் கடந்து, மணிகளைக் கொண்டு அழகு பெற்ற நகரமான கிட்கிந்தையில் வாலி புகுந்தான்.(617) வாலி வந்ததைக் கண்டு மகிழ்ந்த தாரை, வாலில் தொங்கும் ராவணனைக் கண்டு மனம் இரங்கி, "இவனை விடுக" என்று சொல்ல, அவனை விடுவித்துவிட்டு வாலி,(618) "நீ வந்த காரணம் யாது" எனக் கேட்க, "போரிட வந்து அகப்பட்டேன்" என்று ராவணன் சொல்ல,(619) "என்னுடன் போர் செய்யும் ஆசையிருந்தால் இப்போதே போரிடுக" என்று வாலி சொல்ல, "உன் வாலிடை கட்டுண்டு கலங்கி துன்புற்றேன். இனி போர் வேண்டாம். இன்று முதல் நான் உன் தோழன்" என்று ராவணன் சொன்னான்.(620) உள்ளத்தில் மகிழ்ச்சியடைந்த வாலி, ராவணனைத் தழுவிக் கொண்டு, தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று ஒரு மாதம் வரை விருந்தோம்பல் செய்து, "இன்று முதல் என் தோழன் நீ" என்று சொல்லி ராவணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(621)
பிரபோ {ராமா}, இவ்வாறு இது பூர்வத்தில் நடந்தது. வாலியால் ராவணன் அவமதிக்கப்பட்டும், {பிறகு} பாவகனின் சன்னிதானத்தில் {நெருப்பின் முன்னிலையில்} பிராதாவாகவும் கூட ஆக்கப்பட்டான்.(45) இராமா, வாலியின் பலம் ஒப்பற்றதாகவும், உத்தமமானதாகவும் {மிகச் சிறந்ததாகவும்} இருந்தது. அத்தகைய அவனுங்கூட அக்னியினால் வெட்டுக்கிளி எவ்வாறோ {சாம்பலாகுமோ, அவ்வாறே} உன்னால் முற்றிலும் எரிக்கப்பட்டான் {அழிக்கப்பட்டான்}[9].(46)
[9] இராமாயணம், கிஷ்கிந்தா காண்டம் 17ம் சர்க்கத்தில், 49 முதல் 51ம் சுலோகம் வரை வாலி பின்வருமாறு இராமனிடம், "சுக்ரீவனின் விருப்பத்திற்குரிய ஆசையை நிறைவேற்றும் வகையில், உன்னால் நான் எதற்காக கொல்லப்பட்டேனோ அந்த அர்த்தத்தை {ராவணனை} நீ பூர்வத்தில் என்னிடமே வேண்டியிருந்தால், நான் ஒரே நாளில் உன் பாரியையை அபகரித்த துராத்மாவான ராக்ஷசன் ராவணனை போரில் கொல்லாமல், கழுத்தில் சுருக்கிட்டு இழுத்து வந்து உன்னிடம் கொடுத்திருப்பேன். சாகரத்தின் நீரிலோ, பாதாளத்திலோ மைதிலியை வைத்திருந்தாலும், உன் ஆணையின் பேரில் சுவேத அசுவத்தைப் போல நான் கொண்டு வந்திருப்பேன்" என்று சொல்கிறான்.
உத்தர ராமாயணம் சர்க்கம் – 034ல் உள்ள சுலோகங்கள்: 46
| Previous | | Sanskrit | | English | | Next |
