Sumali killed | Sarga-027 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தேவலோகஞ் சென்ற ராவணன்; விஷ்ணுவிடம் தஞ்சம் அடைந்த இந்திரன்; அவதார காரணத்தைச் சொல்லி ராவணனுடன் போரிடுமாறு இந்திரனுக்கு ஆணையிட்ட விஷ்ணு; சுமாலி கொல்லப்பட்டது...
பிறகு தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, கைலாசத்தைக் கடந்தான். மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் இந்திரலோகத்தை அடைந்தான்.(1) இராக்ஷச சைனியம், நாலாபுறமிருந்தும் {இந்திரலோகத்தை நோக்கி} முன்னேறிச் சென்றது. அர்ணவம் {கடல்} கடையப்படுவதைப் போன்ற சப்தம் தேவலோகத்தை எட்டியது.(2)
இராவணன் வந்துவிட்டான் என்பதைக் கேட்ட இந்திரனோ, தன் ஆசனத்திலிருந்து நிலைகுலைந்து எழுந்தவனாக, அங்கே கூடியிருந்த அந்த சர்வ தேவர்களிடமும் {பின்வருமாறு} கூறினான்:(3) "{சூரியனின் பன்னிரு அம்சங்களான} ஆதித்யர்களே {சூரியர்களே}, {எட்டு / அஷ்ட} வசுக்களே, {பதினோரு} ருத்திரர்களே, {பத்து} விஸ்வர்களே {விஸ்வேதேவர்களே}, {பன்னிரு} சாத்யர்களே {ஸாத்ய தேவர்களே}, {நாற்பத்தொன்பதின்மரான} மருத்கணங்களே, துஷ்டாத்மனான ராவணனுடன் யுத்தம் செய்வதற்கு ஆயத்தமாவீராக" {என்றான் இந்திரன்}.(4)
இவ்வாறு சக்ரனால் {இந்திரனால்} கூறப்பட்டதும், யுத்தக்களத்தில் சக்ரனுக்கு சமமானவர்களும், மஹாசத்வர்களும் {பெரும் வலிமைமிக்கவர்களும்}, யுத்தத்தில் கவனம் {ஆவல்} மிக்கவர்களுமான தேவர்கள் {கவசம் பூண்டு} போருக்கு ஆயத்தமாகினர்.(5) மஹேந்திரனோ, ராவணனைக் குறித்து தீனனாகி {ராவணனின் பேராற்றலைக் குறித்த கவலையில் மனமுடைந்தவனாகி}, நடுக்கத்துடன் விஷ்ணுவின் சமீபத்தை அடைந்து இந்த வாக்கியத்தையே சொன்னான்:(6) "விஷ்ணோ, மஹாவீரியனும், பராக்கிரமனும், பலவானுமான இந்த ராக்ஷசன் {ராவணன்} போரிடுவதற்காகவே முன்னேறி வருகிறான். நான் என்ன செய்வேன்?(7) {பிரம்மன் மூலம்} வரங்கள் கொடுக்கப்பட்டதால், {இவன்} பலசாலியாக இருக்கிறானேயன்றி, வேறு எந்த ஹேதுவாலும் {காரணத்தாலும்} இல்லவே இல்லை. பத்மயோனினனால் {தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரம்மனால்} எது கூறப்பட்டதோ, அத்தகையது, சத்தியமான சொற்களாக்கப் பட வேண்டும்.(8) எனவே, நமுசி, விருத்ரன், பலி ஆகியோரும், நரகசம்பரர்கள் {நரகன், சம்பரன் என்ற} இருவரும், எப்படி உன் பலத்தையே முழுமையாகச் சார்ந்து, என்னால் எரிக்கப்பட்டனரோ, அப்படியே {இப்போதும்} செயல்படுவாயாக.(9)
தேவதேவேசா {தேவாதி தேவர்களுக்கும் ஈசனே}, மதுசூதனா {மது என்ற அசுரனை அழித்தவனே}, சராசரங்களுடன் {அசைவன, அசையாதன ஆகியவற்றுடன்} கூடிய இந்தத் திரிலோகங்களிலும், உன்னைத் தவிர, வேறு எந்த கதியோ, உயர்ந்த புகலிடமோ இல்லவே இல்லை.(10) நீயே நாராயணன் {உயிர்களின் இருப்பிடமாகத் திகழ்பவன்}; ஸ்ரீமான் {லட்சுமி தேவியை மார்பில் தாங்கியவன்}; பத்மநாபன் {தொப்புளில் தாமரையைக் கொண்டவன்}; சநாதனன் {ஆதியும், அந்தமும் இல்லாத நித்தியன்}. உன்னாலேயே லோகங்கள் ஸ்தாபிதம் செய்யப்படுகின்றன {உலகங்கள் அனைத்தும் படைத்துக் காக்கப்படுகின்றன}. மேலும் நானும், {உன்னாலேயே} ஸுரேஷ்வரனான சக்ரன் {தேவர்களின் தலைவனான இந்திரன்} ஆக்கப்பட்டேன்.(11) பகவானே, உன்னாலேயே சர்வ சராசரங்கள் {அசைவன, அசையாதன} உள்ளிட்ட மூவுலகங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. யுக க்ஷயத்தில் {யுகத்தின் அழிவில்} சர்வமும் உனக்குள்ளேயே ஒடுங்குகின்றன.(12) எனவே, தேவதேவா, பிரபோ, எஃது உண்மையோ, அதை எனக்கு ஸ்வயமாக {நீயே நேரடியாக} உரைப்பாயாக. அல்லது, நீயே உன் சக்கரத்தின் சஹாயத்துடன் ராவணனை எதிர்க்கப்போகிறாயா?" {என வினவினான் இந்திரன்}.(13)
சக்ரனால் இவ்வாறு கூறப்பட்ட தேவனும், பிரபுவுமான அந்த நாராயணன் {பின்வருமாறு} கூறினான், "அச்சம் வேண்டாம். மேலும், என்னிடம் {நான் சொல்லப் போவதைக்} கேட்பாயாக.(14) {தான் பெற்ற} வர தானத்தால் வெல்லப்பட முடியாதவனாகி இருக்கும் இந்த துஷ்டாத்மாவை ஸுராஸுரர்களே {தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து} எதிர்கொண்டாலும் இப்போது வெற்றி கொள்வதோ, கொல்வதோ சாத்தியமில்லை.(15) ஆனால் எப்படியும், பலத்தினால் மதங்கொண்ட ராக்ஷசன் {ராவணன்}, தன் புத்திரன் {இந்திரஜித்} சஹிதனாக மஹத்தான கர்மத்தைச் செய்யப் போகிறான். இஃது இயற்கையாகவே {காலத்தின் கட்டாயமாகவே} விதிக்கப்பட்டது.(16) ஸுரேஷ்வரா {தேவர்களின் தலைவா}, "யுத்தம் செய்வாயாக" என்று என்னிடம் கூறினாய், அல்லவா? நான் யுத்தகளத்தில் அந்த ராக்ஷசன் ராவணனை எதிர்த்துப் போரிடப் போவதில்லை.(17)
சமரில் {போர்க்களத்தில்} சத்ருவைக் கொல்லாமல் விஷ்ணு திரும்புவதில்லை. {நம்முடைய} இப்போதைய விருப்பம், வரத்தால் காக்கப்படும் ராவணனிடம் துர்லபமே {ராவணனை வெற்றி கொள்வது அடைதற்கரிதானதே}.(18) தேவேந்திரா, சதக்ரதோ {நூறு வேள்விகளைச் செய்தவனே}, உன் சமீபத்தில் இதோ பிரதிஜ்ஞை செய்கிறேன். எப்படியும் நானே இந்த ராக்ஷசனின் மிருத்யுவிற்குரிய {மரணத்திற்குரிய} காரணமாவேன்.(19) இராவணனையும், அவனுக்கு முன்னால் செல்பவர்களையும் சேர்த்துக் கொல்லப்போகிறவன் நானே. காலம் கனிந்து வருவதை அறிந்து, தேவர்களை மகிழ்ச்சியடையச் செய்வேன். தேவராஜாவே, சசீபதே {சசியின் கணவனே}, இந்த உண்மை உனக்குக் கூறப்பட்டுவிட்டது.(20) மஹாபலவானே, அச்சம் நீங்கியவனாக அனைவருடன் சேர்ந்து யுத்தம் செய்வாயாக[1]" {என்றான் விஷ்ணு}.(21)
[1] மூலத்தில் இந்த இடத்தில், "காலம் கனிந்து வருவதை அறிந்து செல்கிறேன்" என்ற பொருள் தரும் 20ம் சுலோகத்தின் ஒரு பகுதி ஒட்டிக் கொண்டிருக்கிறது. "மகிழ்ச்சியடையச் செய்வேன்" என்ற பொருள் கொண்ட அந்த சுலோகம் இங்கே, "செல்கிறேன்" என்ற பொருளில் எப்படி மாறுகிறது? அந்த சுலோகத்தில் முதல் வரியில் உள்ள "நந்த-யிஷ்யாமி" என்ற பெரிய சொல்லின் இறுதிப் பகுதியான "யாமி" என்ற எழுத்துகள் மட்டும் இங்கே தனியாகப் பிரிந்து வந்திருக்கிறது. அதனாலேயே இந்த அடிக்குறிப்பின் முதல் வரியில் வரும் பொருள் வருகிறது. இது தவறுதலாக வந்த அரைவாக்கியமாகத் தெரிவதால், அந்த வரியை மீண்டும் இங்கே சேர்க்கவில்லை.
அப்போது, ருத்திர, ஆதித்தியர்களுடன், வசுக்கள், மருத்துகள் ஆகியோரும், அஸ்வினிகள் இருவரும் {கவசங்கள் பூண்டு} ஆயத்தமாகி, புரத்திலிருந்து {அமராவதி நகரத்திலிருந்து} வெளியேறி, ராக்ஷசர்களை எதிர்த்து விரைந்து முன்னேறிச் சென்றனர்.(22) இரவு முடிவதற்கிடையில், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் யுத்தத்தில் இறங்கிய அந்த ராவண சைனியத்தின் நாதம் {பேரொலி} கேட்கப்பட்டது.(23) யுத்தம் செய்யத் திரண்ட மஹாவீரியர்களான அவர்கள் {தேவர்களும், ராக்ஷசர்களும்} அன்யோன்யம் நோக்கியபடியே பெரும் மகிழ்ச்சியுடன் போர்க்களத்தை நோக்கி முகம் திருப்பியவர்களாக முன்னேறியபடியே இருந்தனர்.(24) பிறகு, போர்க்களத்தின் முகப்பில் அந்த அளவிடமுடியாத மஹா சைனியத்தைக் கண்டு, தைவத சைனியங்களுக்குள் {தேவ படைகளுக்குள்} கலக்கம் ஏற்பட்டது.(25) பிறகு, குழப்பமான பேரொலியுடன் நானாவித ஆயுதங்களை ஏந்திய தேவ, தானவ, ராக்ஷசர்களுக்கிடையே கோரமான யுத்தம் உண்டாயிற்று.(26)
இதற்கிடையில் கோரதரிசனங்கொண்டவர்களும், சூரர்களும் அந்த ராவணனின் அமைச்சர்களுமான ராக்ஷசர்கள் யுத்தம் செய்வதற்காகத் திரண்டு முன்னேறி வந்தனர்.(27) மாரீசனும், {ராவணனின் தளபதியான} பிரஹஸ்தனும், மஹாபார்ஸ்வ மஹோதரர்கள் இருவரும், அகம்பனனும், {கும்பகர்ணனின் மகன்} நிகும்பனும், சுகனும், சாரணனும்,(28) சம்ஹ்லாதனும், தூமகேதுவும், {பெரும் கோரைப் பற்களைக் கொண்ட} மஹாதம்ஷ்டிரன், {குடம் போன்ற வயிற்றைக் கொண்ட} கடோதரன், {பிரஹஸ்தனின் மகன்} ஜம்புமாலி, மஹாஹ்ராதன் ஆகியோரும், ராக்ஷசன் விரூபாக்ஷனும்,(29) {உறங்குபவர்களைக் கொல்பவனான} ஸுப்தக்னனும், {வேள்விகளில் கோபமடையும்} யஜ்ஞகோபனும், துர்முகன், தூஷணன், கரன், திரிசிரன், கரவீரக்ஷன் ஆகியோரும், ராக்ஷசன் ஸூர்யசத்ருவும்,(30) மஹாகாயனும், அதிகாயனும், தேவாந்தக, நராந்தகர்கள் இருவரும் என இவர்கள் அனைவராலும், நாற்புறமும் சூழப்பட்டவனும், மஹாவீரியனும், மஹாபலவானுமான,(31) ராவணனின் ஆர்யகன் {தாய்வழி தாத்தன்} சுமாலி, {தேவர்களின்} சைனியத்திற்குள்ளேயே பிரவேசித்தான். பெருங்குரோதமடைந்த அவன், கூர்மையான நானாவித ஆயுதங்களால் சர்வ தைவத கணங்களையும் {தேவர்களின் கூட்டங்களையும்}, ஜலதரங்களை வாயு போலத் துவம்சம் செய்தான் {நீருண்ட மேகங்களைக் காற்று போல சிதறடித்தான்}.(32) இராமா, நிசாசரர்களால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அந்த தைவத பலம் {தேவர்களின் படை}, சிங்கத்தால் விரட்டப்படும் மிருகங்களை {மான்களைப்} போல திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடியது.(33)
இதற்கிடையில், வசுக்களில் அஷ்டம {எட்டாவது} வசுவும், சாவித்ரன்[2] என்று {என்ற பெயரில்} புகழ்பெற்றவனுமான சூரன், போர்க்களத்தில் பிரவேசித்தான்.(34) அதேபோலவே, போர்க்கோலம் பூண்ட மஹாவீரியர்களும், பயமற்றவர்களும், ஆதித்யர்களுமான துவஷ்டா, பூஷா ஆகிய இருவரும், அப்போது தங்கள் சைனியத்துடன் ரணத்தில் {போர்க்களத்தில்} பிரவேசித்தனர்.(35) பிறகு, ஸுரர்களுக்கும் {தேவர்களுக்கும்}, போர்களில் ஒருபோதும் பின்வாங்காத ராக்ஷசர்கள் என்ற கீர்த்தியுடையவர்களும், குரோதமடைந்தவர்களுமான ராக்ஷசர்களுக்கும் இடையில் யுத்தம் மூண்டது.(36) அப்போது, அந்த சர்வ ராக்ஷசர்களும், சமரில் நின்று கொண்டிருந்த விபுதர்களை {தேவர்களை}, நானாவித ஆயுதங்களால் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்றனர்.(37) தேவர்களும் கூட, சமரில் கோரமானவர்களும், மஹாபலவான்களும், பராக்கிரமர்களுமான ராக்ஷசர்களை விமலமான {கறையின்றி பிரகாசமாக ஒளிரும்} கூரிய ஆயுதங்களைக் கொண்டு யமக்ஷயத்தில் கொண்டு சேர்த்தனர் {யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தனர்}.(38)
[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "எட்டு வசுகளின் பெயர் வெவ்வேறு நூல்களில் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இங்கே சாவித்ரன் என்று குறிப்பிடப்படுபவன், பொதுவாக பிரபாசன் என்று அறியப்படுகிறான்" என்றிருக்கிறது. இந்த அஷ்டவசுக்களில் தியோ என்பவனே தேவவிரதனாக {பீஷ்மராகப்} பிறப்பான் என்று மஹாபாரதம், ஆதி பர்வம், 99ம் பகுதி 44ம் சுலோகத்திலும், 100ம் பகுதி 21ம் சுலோகத்திலும் குறிப்பிருக்கிறது.
இதற்கிடையில், ராமா, குரோதமடைந்தவனும், சுமாலி என்ற பெயர் கொண்டவனுமான அந்த ராக்ஷசன், நானாவித ஆயுதங்களுடன் அந்த சைனியத்தை {தேவர்களின் படையை} எதிர்த்து முன்னேறினான்.(39) பெருங்குரோதமடைந்த அவன், கூர்மையான நானாவித ஆயுதங்களைக் கொண்டு சர்வ தைவத பலத்தையும் {தேவர்களின் மொத்த படையையும்} ஜலதரத்தை {நீருண்ட மேகத்தை} வாயு எப்படியோ, அப்படியே துவம்சம் செய்தான் {சிதறடித்தான்}.(40) அவர்களால் {ராக்ஷசர்களால்} மிகக் கொடிய மஹாபாண வர்ஷங்களாலும் {மாபெரும் கணை மழையாலும்}, சூல, பிராசங்களாலும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த சர்வ ஸுரர்களும் {தேவர்கள் அனைவரும்} ஒன்றுகூடியும் நிலைக்காமல் சிதறி ஓடினர்.(41) அப்போது சுமாலியால் தைவதங்கள் {தேவர்கள்}, சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, வசுக்களில் எட்டாமவனும், குரோதமடைந்தவனுமான சாவித்ரன், {போர்க்களத்தில்} உறுதியாக நிலைத்து நின்றான்.(42) தன் சொந்த ரத அநீகங்களால் {தேர்ப்படைகளால்} நாலாபுறமும் சூழப்பட்ட அந்தத் தேஜஸ்வி {சாவித்ரன்}, போர்க்களத்தில் {தேவர்களைத்} தாக்கிக் கொண்டிருந்த நிசாசரனை {இரவுலாவியான சுமாலியைத்} தன் விக்ரமத்தினால் தடுத்து நிறுத்தினான்.(43)
அப்போது, அவ்விருவருக்கும் இடையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் மஹாயுத்தம் மூண்டது.(44) ஒருபோதும் பின்வாங்காத சுமாலிக்கும், அந்த வசுவுக்கும் இடையிலான அந்தப் போரில், மஹாத்மாவான அந்த வசுவின் மஹா பாணங்களால் அவனது பன்னக ரதம் {சுமாலியின் பாம்பின் வடிவம் கொண்ட தேர்} தாக்கப்பட்ட க்ஷணத்திலேயே நொறுக்கித் தள்ளப்பட்டது.(45) போர்க்களத்தில் நூறு பாணங்களால் துளைக்கப்பட்டிருந்த அவனது ரதத்தை அழித்த பிறகு, வசு {சாவித்ரன்}, அவனது {சுமாலியின்} வதத்தின் பொருட்டுத் தன் கையில் கதையை {கதாயுதத்தை} ஏந்தினான்.(46) பிறகு, சாவித்ரன், ஒளிரும் நுனியுடையதும், காலதண்டத்திற்கு ஒப்பானதுமான கதையை ஓங்கி அதை {அந்த கதாயுதத்தின் அடியை} சுமாலியின் தலையிலேயே விழச்செய்தான்.(47) உல்கத்தை {எரிகல்லைப்} போன்ற பிரகாசத்துடன் அவனது தலையின் மீது விழுந்து கொண்டிருந்த அந்த கதை, கிரியின் மீது இந்திரனால் ஏவப்பட்டு, கர்ஜித்தபடியே செல்லும் மஹா அசனியை {பேரிடியை / பெரும் வஜ்ரத்தைப்} போல் விளங்கியது.(48) அப்போது, போர்க்களத்தில் கதையால் பஸ்ம {சாம்பல்} நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வதம் செய்யப்பட்ட அவனது அஸ்திகூட {சுமாலியின் எலும்புகள் கூடக்} காணப்படவில்லை; காண்பதற்கு சிரமும் {தலையும்} இல்லை, மாம்ஸமும் இல்லை[3].(49)
[3] ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தில் சுமாலி இந்திரனால் வதம் செய்யப்படுகிறான். சாவித்ரன் என்ற வசுவைப் பற்றிய எந்தக் குறிப்பும் அங்கில்லை.ஒண் திறலோர்க்ள தம்மேல்உற்றமர் செய்யும் காலைக்கண்டவர் வியப்பம் சாலஇந்திரன் கனன்று பொங்கித்திண்திறல் சுமாலி தேரைச்சின்னம் செய்து அவன்தன் சென்னித்தண்டினை வாங்கி ஆற்றல்தடக்கையால் சுழற்றி விட்டான்.(523)கால வெந்தண்டம் என்னக்கடவுளர் சீற்றம் என்னஆலமதுவென்ன ஊழிஅனலென்ன அரனார் விட்டசூலமதுவென்ன மாயோன்சுடர்விடு நேமி என்னசீலமொன்று இல்லான் தன் மேல்சென்றது தேவர் வாழ்த்த. (524)குன்றில்வீழ் அசனியென்னஅமரர்கோன் குலிசமென்னவென்றிசேர் சுமாலி சென்னிவீழ்ந்து அவன் வெற்புமேனிஒன்றிய அங்கம் எல்லாம்உருத்தெரிவுறாத வண்ணம்கன்றிய குருதி நீராய்க்கரைத்தது கதையாம் கூற்றம்.(525)- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 523, 524, 525ம் பாடல்கள், திக்கு விசயப் படலம்பொருள்: ஒளிமிக்க திறனுடைய வசுக்கள் மேல் பாய்ந்து சுமாலி போர் செய்யும்போது, கண்டவர்தம் வியப்பு மிகுமாறு இந்திரன் மனம் கனன்று வெகுண்டு, திண்மையும் திறமையுமுடைய சுமாலியின் தேரைச் சின்ன பின்னம் செய்துவிட்டு அவன் தலைமேல் தன் தண்டாயுதத்தை எடுத்து, வலிமைமிக்க தன் பெரிய கையால் சுழற்றி விடுத்தான்.(523) எமன்விட்ட கொடிய தண்டாயுதம் போலும், முனிவரின் சீற்றம் தப்பாது செல்லுதல் போலும், நஞ்சு போலும், ஊழிக்கடையில் எழும் நெருப்புப் போலும், சிவபிரான்விட்ட சூலப்படை போலும், திருமாலின் சுடர்விடுகின்ற சக்கரப்படை போலும், தேவர்கள் வாழ்த்த, ஒழுக்கமற்றவனின் {சுமாலியின்} மேல் சென்றது.(524) {அந்த கதாயுதமான} கூற்றம் {யமன்}, குன்றின் {மலையின்} மேல் வீழ்ந்த இடி போலும், தேவர்களுடைய அரசனின் குலிசம் போலும் தாக்கி {இந்திரனின் வஜ்ரம் போலும் தாக்கி}, வெற்றிபொருந்திய சுமாலியின் தலையை {தரையில்} வீழ்த்தி, மலைபோன்ற அவனது மேனியில் பொருந்திய அங்கங்கள் அனைத்தும் உருத்தெரியாதபடி கன்றிப்போன குருதிநீராகக் கரைந்துவிட்டது.(525)
போர்க்களத்தில் அவன் {சுமாலி} கொல்லப்பட்டதைக் கண்ட அந்த சர்வ ராக்ஷசர்களும், நாலாபுறமிருந்தும் ஒன்று கூடி, பரஸ்பரம் கூச்சலிட்டுக் கொண்டு, சிதறி ஓடினர். வசுவால் {சாவித்ரனால்} விரட்டப்பட்ட அந்த ராக்ஷசர்கள் நிலைத்து நிற்காமல் பின்வாங்கினர்.(50)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 027ல் உள்ள சுலோகங்கள்: 50
| Previous | | Sanskrit | | English | | Next |

