Friendship forged with Madhu | Sarga-025 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வரங்களைப் பெற்ற இந்திரஜித்; கும்பீனசியைக் கவர்ந்த சென்ற மது; மதுவுடன் நட்பேற்படுத்திக் கொண்ட ராவணன்; இந்திரனை வெல்ல கைலாசத்தில் இறங்கியது...
கோரமான அந்த {தண்டக} வனத்தைக் கொடுத்துத் தன் பகினியை {சகோதரி சூர்ப்பணகையைத்} தேற்றிய பிறகு, அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, மகிழ்ச்சியும், ஸ்வஸ்தமும் {நலமும் / நிம்மதியும்} அடைந்தான்.(1) பலவானான அந்த ராக்ஷசேந்திரன், பிறகு, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நிகும்பிலை என்ற பெயரைக் கொண்ட, லங்கையின் உத்தம உபவனத்தில் பிரவேசித்தான் {சிறந்த சோலையில் நுழைந்தான்}.(2) நூற்றுக்கணக்கான யூப ஆகீர்ணங்களால் {வேள்வித் தூண்களால்} நிறைந்தும், சௌம்யமான சைத்யங்களால் {அழகான வேள்வி மேடைகளால்} அலங்கரிக்கப்பட்டும், செழிப்புடன் {ஒளியுடன்} பிரகாசித்துக் கொண்டிருப்பதைப் போல, அங்கே நடந்து கொண்டிருக்கும் யஜ்ஞத்தை {வேள்வியை ராவணன்} கண்டான்.(3) கருப்பு மான் தோல் அணிந்தவனும், கமண்டலம், சிகை {குடுமி}, துவஜம் ஆகியவற்றுடன் கூடியவனும், பயத்தை உண்டாக்குபவனுமான தன் மகன் மேகநாதனை அப்போது அங்கே {இந்திரஜித்தை ராவணன் அந்த வேள்விச் சாலையில்} கண்டான்.(4)
அவனிடம் நெருங்கிச் சென்ற லங்கேசன் {லங்கையின் தலைவனான ராவணன்}, தன் கைகளால் அவனைத் தழுவிக் கொண்ட பிறகு, "வத்சா {குழந்தாய்}, நீ செய்து கொண்டிருக்கும் இஃது என்ன? உண்மையைச் சொல்வாயாக" என்று வினவினான்.(5)
அப்போது, துவிஜ சிரேஷ்டரும் {இருபிறப்பாளர்களில் சிறந்தவரும்}, மஹா தபஸ்வியுமான உசனஸ் {சுக்கிராசாரியர்}, அங்கே யஜ்ஞ சம்பத்து {வேள்விப் பலன்} முழுமையாக நிறைவேறியபின், ராக்ஷசர்களில் சிறந்தவனான ராவணனிடம் {பின்வருமாறு} கூறினார்:(6) "இராஜனே, நான் உனக்கு இவை யாவற்றையும் அப்படியே விளக்குகிறேன். உன் புத்திரனால் மிக விஸ்தாரமாக நடத்தப்பட்ட சப்த யஜ்ஞங்களும் {ஏழு வேள்விகளும்} வெற்றிகரமாக நிறைவடைந்தன.(7) அக்னிஷ்டோமம்<1>, அஷ்வமேதம்<2>, பஹுசுவர்ணக யஜ்ஞம்<3>, அதேபோல ராஜஸூய யஜ்ஞமும்<4>, கோமேதமும்<5>, அதே போல வைஷ்ணவமும்<6>,(8) மனிதர்களுக்கு மிக துர்லபமான {மனிதர்களால் அடைவதற்கரியதான} மாஹேஸ்வர யஜ்ஞமும்<7> நடந்து முடிந்த போது, உன் புத்திரன் இஹத்தில் {இந்த வேள்விச் சாலையில்} சாக்ஷாத் பசுபதியிடமிருந்து {சிவனிடம் இருந்து} வரங்களைப் பெற்றுக் கொண்டான்.(9)
விரும்பியபடி இயக்கப்படக் கூடியதும், அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} பறப்பதும், அழிவற்றதும், திவ்யமானதுமான சியந்தனமும் {தேரும்}, எதனால் அனைத்தும் {உலகம்} இருள்மயமாகுமோ அந்த தாமஸீ என்ற பெயருடைய மாயையும் {இந்திரஜித்தால்} அடையப்பட்டன.(10) இராக்ஷசேஷ்வரா, போர்க்களத்தில் இந்த மாயை பிரயோகிக்கப்பட்டால், நிச்சயம் கதியை {இவனது நடமாட்டத்தை} ஸுராஸுரர்களும் அறிந்து கொள்வது சாத்தியமே இல்லை.(11) இராஜனே, ரணத்தில் பாணங்கள் அக்ஷயமாகும் {போர்க்களத்தில் கணைகள் வற்றாதிருக்கும்} இரண்டு அம்பறாத்தூணிகளும், பெரிதும் வெல்வதற்கரிய ஒரு சாபமும் {வில்லும்}, சத்ருக்களை முற்றிலும் அழிக்கக்கூடிய வலிமைமிக்க ஒரு அஸ்திரமும் {அடையப்பட்டன}.(12) தசானனனா {பத்து முகங்களைக் கொண்டவனே}, இத்தகையவனான உன் புத்திரன் இந்த வரங்கள் அனைத்தையும் பெற்றிருக்கிறான். இன்று யஜ்ஞம் நிறைவடைந்த நிலையில், உன்னைக் காணும் ஆவலுடன் {இவனுடன்} நானும் இங்கே நிற்கிறேன்" {என்றார் சுக்ராசாரியர்}.(13)
அப்போது தசக்ரீவன் {பின்வருமாறு} கூறினான், "இந்திரனை முன்னிட்டுள்ள சத்ருக்கள் {தேவர்கள்} திரவியங்களால் {வேள்விப் பொருள்களால்} பூஜிக்கப்படும் வகையில் இப்படிச் செய்யப்பட்டது சோபனமானதல்ல {நல்லதல்ல}.(14) சௌம்யா {அன்பானவனே / மேகநாதா}, இதோ இங்கே வருவாயாக. உன்னால் எது செய்யப்பட்டதோ, அது நன்றாகவே செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வாயாக. இதில் சந்தேகமில்லை. என்னுடன் வருவாயாக. நம் சொந்த பவனத்திற்கு {மாளிகைக்குச்} செல்வோம்" {என்றான் ராவணன்}.(15)
பிறகு, தசக்ரீவன், தன் புத்திரனுடனும், விபீஷணனுடனும் {தன் அரண்மனைக்குச்} சென்றான். கண்ணீர் மல்கி, குரல் விம்மி நின்ற ஸ்திரீகளை {புஷ்பக விமானத்தில் இருந்து} கீழே இறக்கினான்.(16) தேவ, தானவ, ராக்ஷசர்களின் லக்ஷணங்களைக் கொண்டவர்களும், பெண்களில் ரத்தினம் போன்றவர்களுமான அவர்களிடமுள்ள அவனுடைய மதியை {ராவணனின் எண்ணத்தை} அறிந்து கொண்ட தர்மாத்மா {விபீஷணன், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(17) "புகழ், அர்த்தம் {செல்வம்}, குலம் ஆகியவற்றை நாசமாக்கக்கூடிய இத்தகைய சமாசாரங்களால் ஞாதிகளுக்கு {உமது நடத்தை குறித்த செய்திகளால் நம் உறவினர்களுக்கு} இழிவு ஏற்படுவதை அறிந்தும், நீர் உமது மதியின்படி {மனம் போன போக்கிலேயே} செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்.(18) இராஜரே, அந்தந்த ஞாதிகளுக்கு {இந்தப் பெண்களின் உறவினர்களுக்கு} இழிவை ஏற்படுத்தும் வகையில், உம்மால் இந்த வராங்கனைகள் {அழகிய பெண்கள்} கவர்ந்து வரப்பட்டுள்ளனர். {அதே வேளையில்} உம்மையும் மீறி மதுவால் {மது என்ற அரக்கனால் நம் தங்கையான} கும்பீனசீ கடத்தப்பட்டிருக்கிறாள்" {என்றான் விபீஷணன்}.(19)
அதற்கு ராவணன், {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "இஃது என்ன? எனக்குப் புரியவில்லை. நீ மது என்ற பெயரில் எவனைச் சொன்னாயோ, அவன் எவன்?" {என்று கேட்டான் ராவணன்}.(20)
பெருங்குரோதமடைந்த விபீஷணனோ, தன் பிராதாவிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "இந்தப் பாப கர்மத்தின் பலனே விளைந்திருக்கிறது; கேட்பீராக.(21) எவர் மாதாமஹரான {நம் தாய்வழி தாத்தவான} ஸுமாலியின் மூத்த சகோதரரோ, அந்த விருத்தரும் {முதியவரும்}, பிராஜ்ஞரும் {அறிஞரும்}, மால்யவான் என்று {என்ற பெயரில்} புகழ்பெற்றவருமான நிசாசரர் {இரவுலாவி},(22) நம் ஜனனியின் மூத்த பிதா {நம் அன்னை கைகசியின் பெரியப்பா} ஆவார். நமக்கும் ஆரியகரே {மூத்தவரே / குருவே/ தாத்தாவே} ஆவார். கும்பீனசி என்ற பெயருடையவள் அவரது மகளின் மகளாக {பேத்தியாக} இருந்தாள்.(23) அந்தக் கன்னிகை, நம் மாதாவின் சகோதரியான {நம் சிற்றன்னையான} அனலைக்குப் பிறந்தவள். பிராதாக்களான {உடன்பிறந்தோரான} நமக்கு தர்ம முறைப்படி இவள் சகோதரி {தங்கை} ஆகிறாள்.(24)
இராஜரே, உமது புத்திரன் {மேகநாதன் / இந்திரஜித்} யஜ்ஞத்தில் ஈடுபட்டிருந்த போதும், நான் நீருக்கடியில் {தபத்தில்} இருந்த போதும், பலம்வாய்ந்த ராக்ஷசனான மதுவால் அவள் {கும்பீனசி} கவர்ந்து செல்லப்பட்டாள்.(25) மஹாராஜாவே, கும்பகர்ணர் நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரத்தில், இங்கே {லங்கையில்} மதிப்புமிக்கவர்களும், ராக்ஷசர்களில் சிறந்தவர்களுமான அமைச்சர்கள் {காவலர்கள்} கொல்லப்பட்டனர்.(26) மஹாராஜாவே, உமது அந்தப்புரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவளும் {கும்பீனசியும்} அபகரிக்கப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டாள். அவன் {மது} இன்னும் கொல்லப்படவில்லை.(27) எதனால் ஒரு கன்னிகை, பிராதாக்களால் பர்த்தாவுக்கு {தன்னுடன் பிறந்தவர்களால் ஒரு கணவனுக்கு} அவசியம் கொடுக்கப்பட வேண்டுமோ, அதனாலேயே இது விளைந்தது. துர்மதி கொண்டவரே, உமது பாப கர்மத்தின் பலனே இது[1].(28) {அதுவே} இவ்வுலகத்தில் உம்மை வந்தடைந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வீராக" {என்றான் விபீஷணன்}. விபீஷணனின் சொற்களைக் கேட்டதும் அந்த ராக்ஷசேந்திரன் ராவணன், தன் சொந்த ரௌத்திரத் தன்மையால் {கொடூர குணத்தால்}, கொதிக்கும் சாகர நீரைப் போலக் குதித்தெழுந்தான்.(29)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மதுவின் செயலானது, ராவணனுடைய தீச்செயல்களின் விளைவு என்று விபீஷணன் குறிப்பிடுகிறான்" என்றிருக்கிறது.
பிறகு, குரோதத்தில் கண்கள் சிவந்த ராவணன், {பின்வருமாறு} கூறினான்[2], "என் ரதம் {தேர்} சீக்கிரம் ஆயத்தமாகட்டும். நம் சூரர்கள் {படைவீரர்கள்} தயாராகட்டும்.(30) என் பிராதா {என்னுடன் பிறந்தவனான} கும்பகர்ணனும், இன்னும் எவர் முக்கிய நிசாசரர்களோ {இரவுலாவிகளோ}, அவர்களும், தாக்குதல் தொடுக்கும் நானாவித ஆயுதங்களுடன் தங்கள் வாகனங்களில் ஏறி அமரட்டும்.(31) இராவணன் {ராவணனாகிய என்} மீது பயமேதுமில்லாத அந்த மதுவை இன்று சமரில் கொன்றுவிட்டு, மேலும் யுத்தத்தில் ஆவலுடன், நண்பர்களால் சூழப்பட்டவனாக ஸுரலோகம் {தேவலோகம்} நோக்கிச் செல்லப் போகிறேன்" {என்றான் ராவணன்}[3].(32)
[2] ஏக வீர இது கிடக்க இயம்பக்கேள் முன்பு எய்தியதைமேகநாதன் வேள்வியினான் வீரன்ஆய உம்பி துயில்போகம் மேவி அவன் கிடந்தன் புனலில்மூழ்கி யான் கிடந்தேன்ஆக மதுவாம் அடல் அசுரன் அணிநீள்இலங்கை அரண்புகுந்தான்.(451)உற்ற கரி தேர் பரி காலாள்உலைய நூறி உயர் மௌலிக்கொற்றவா நம் சிற்றவையைகும்பி நசியாம் குணவதியைப்பற்றிக் கொண்டு தன்னுடைய பதியில்புக்கான் என தம்பிசொற்ற வார்த்தை கேட்டு அழன்றுதுடிக்கும் நெஞ்சன் இவை சொன்னான்.(452)- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 451, 452ம் பாடல்கள், திக்கு விசயப் படலம்பொருள்: "தனிச்சிறப்புடைய வீரனே, {உன்னால் பெண்கள் கடத்தப்பட்டது கிடக்கட்டும்}, முன்பு நிகழ்ந்ததை நான் சொல்லக் கேட்பாயாக. நம் வீரன் மேகநாதன் {இந்திரஜித்} வேள்வியில இருந்தான். வீரனாகிய உன் தம்பி {கும்பகருணன்}, உறக்கமெனும் போகத்தைப் பொருந்திப் படுக்கையில் கிடந்தான். அந்நிலையில் நான் {தபம் செய்து} நீரில் மூழ்கிக் கிடந்தேன். இவ்வாறிருக்க, மது என்ற வலிமைமிக்க அசுரன், அழகிய நீண்ட லங்கை நகரத்தின் அரணுக்குள் புகுந்தான்.(451) உயர்ந்த முடியணிந்து விளக்கும் வெற்றி அரசே, லங்கையில் இருந்த யானை, தேர், குதிரை, காலாள் ஆகியவையும் வருந்துமாறு அழித்து விட்டு, நமது சிற்றன்னையின் மகளை - கும்பிநசி என்னும் பெயருடைய குணவதியை - வலிந்து பற்றிக் கொண்டு தன் நகருக்குப் போய்விட்டான்" என்று தம்பி {விபீஷணன்} சொன்ன வார்த்தையைக் கேட்டுக் கோபித்துத் துடிக்கும் நெஞ்சினனாக {ராவணன்} இவற்றைச் சொன்னான்.(452)
[3] தர்மாலயப்பதிப்பில் இதன் பிறகு, இன்னும் ஒரு சுலோகத்தின் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "அவ்விடத்தில் இந்திரனை அடிமைத்தனத்தில் நிறுத்திவிட்டு ஸ்வர்க்கலோகத்தை வசமாக்கி, கவலை ஒழிந்தவனாய் திரிலோகாதிபத்தியம் பெற்று விளங்குகிறவனாய் எங்கும் திரிவேன்". ஸ்ரீநிவாசராகவாசாரியர் பதிப்பிலும் இதன் பிறகு, "ஆங்கு தேவேந்திரனை வென்று வசமாக்கிக் கொண்டு, திரிலோகாதிபத்தியம் பெற்றுச் செருக்குற்றுச் சந்தோஷமடைந்து எங்கும் ஸஞ்சரிப்பேன்" என்றிருக்கிறது.
அப்போது, மிகச் சிறந்த ராக்ஷசர்களுடன் கூடிய நான்காயிரம் அக்ஷௌஹிணிகளும், யுத்தத்தில் ஆவலுடன், தாக்குதல் தொடுக்கும் நானாவித ஆயுதங்களுடன் விரைந்து {லங்கையைவிட்டுப்} புறப்பட்டுச் சென்றன.(33) இந்திரஜித்தோ, சைனியங்களிலிருந்து சைனிகர்களை {படைவீரர்களை} அழைத்துக் கொண்டு, முன்னணியில் சென்றான். மேலும், ராவணன் மத்தியிலும் {படைப்பிரிவுகளின் நடுப்பகுதியிலும்}, கும்பகர்ணன் பின்புறத்திலும் {சென்றனர்}.(34) தர்மாத்மாவான விபீஷணனோ, லங்கையிலேயே இருந்து, தர்மத்தை ஆசரித்தான் {தர்மத்தின் வழியிலான கடமைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தான்}. மஹாபாக்கியசாலிகளான அனைவரும், மீதமுள்ளோரும் மதுபுரம் {மது என்ற ராக்ஷசனின் நகரத்தை}[4] நோக்கிச் சென்றனர்.(35) கரங்கள் {கழுதைகள்}, ஒட்டகங்கள், ஒளிரும் ஹயங்கள் {குதிரைகள்}, முதலைகள், மஹா உரகங்கள் {பெரும்பாம்புகள்} முதலியவற்றில் ஏறிய சர்வ ராக்ஷசர்களும் ஆகாசத்தை இடைவெளியற்றதாக்கிச் சென்றனர்.(36) தைவதங்களுடன் வைரம் பூண்டிருந்த {தேவர்களுடன் பகைமை கொண்டிருந்த} நூற்றுக்கணக்கான தைத்தியர்களும் அங்கே சென்று கொண்டிருந்த ராவணனைப் பார்த்துவிட்டு, {அவனுக்குப்} பின்னாலேயே பின்தொடர்ந்து சென்றனர்.(37)
[4] இங்கே மதுபுரம் என்றழைக்கப்படும் இந்த மதுவனம்தான் பிற்காலத்தில் மதுரா நகரானது.
அந்த தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, மதுபுரத்தை அடைந்து, அதற்குள் பிரவேசித்தான். அங்கே, மதுவை {மது என்ற ராக்ஷசனைக்} கண்டானில்லை. எனினும், தன் பகினியை {தங்கை கும்பீனசியை} அங்கே கண்டான்.(38) அவளும், பணிவுடன் சிரசில் கைகளைக் குவித்துக் கொண்டு, சரணங்களில் {ராவணனின் காலடியில்} விழுந்தாள்.(39) கும்பீனசி, அந்த ராக்ஷசராஜனிடம் அச்சமடைந்த போது, அவனும், "பயப்படாதே" என்று சொல்லிக் கொண்டே, அவளை நேராகத் தூக்கி நிறுத்தினான்.(40)
இராக்ஷசர்களில் சிறந்தவனான ராவணன், "நான் செய்ய வேண்டியது வேறென்ன?" {என்று கேட்கவும்}, அவள் {பின்வருமாறு} கூறினாள், "இராஜரே, பெருந்தோள்களைக் கொண்டவரே, மதிப்பளிப்பவரே, நீர் எனக்கு அருள்வதாக இருந்தால், இன்று இங்கே என் பர்த்தாவைக் கொல்வது உமக்குத் தகாது.(41) இஹத்தில் {இம்மையில் / இவ்வுலகில்} குலஸ்திரீகளுக்கு இத்தகையதைப் போன்ற பயம் வேறேதும் சொல்லப்பட்டதில்லை. சர்வ பயங்களைக் காட்டிலும், வைதவ்யமே மஹத்தான விசனமாகும் {விதவைக் கோலம் பூணுவதே பெருந்துன்பமாகும்}.(42) இராஜேந்திரரே, யாசித்து நிற்கும் என்னை, தயவுடன் பார்ப்பீராக. மஹாராஜரே, நேரடியாகவே, "பயப்படாதே" என்று உம்மால் சொல்லப்பட்டது. அதை சத்திய வாக்காக்குவீராக" {என்றாள் கும்பீனசி}.(43)
மகிழ்ச்சியடைந்த ராவணனும், அங்கே நின்று கொண்டிருந்த தன் தங்கையிடம் {பின்வருமாறு} கூறினான், "உன்னுடைய அந்த பர்த்தா {கணவன்} எங்கே இருக்கிறான்? எனக்கு சீக்கிரம் தெரிவிப்பாயாக.(44) உன்னுடைய காருண்யத்தாலும், சௌஹார்த்தத்தாலும் {சகோதர வாஞ்சையினாலும்} நான் மதுவைக் கொல்வதிலிருந்து விலகிவிட்டேன். ஜயத்தைத் தரும் போருக்காக, அவனுடன் {மதுவுடன்} சேர்ந்து ஸுரலோகம் {தேவலோகம்} செல்லப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(45)
இவ்வாறு சொல்லப்பட்டதும், ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த நிசாசரனை {இரவுலாவியான தன் கணவன் மதுவை} எழுப்பிய அந்த ராக்ஷசி {கும்பீனசி}, பெரிதும் மகிழ்ச்சியடைந்தவளைப் போலத் தன் பதியிடம் {கணவனிடம், பின்வரும்} சொற்களைச் சொன்னாள்:(46) "மஹாபலவானும், ஸுரலோகத்தை ஜயங்கொள்ளும் ஆவல் கொண்டவருமான தசக்ரீவர் இதோ வந்திருக்கிறார். மேலும், தம் சஹாயனாக உம்மையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.(47) எனவே, ராக்ஷசரே, நீர் உமது பந்துக்களுடன் {உறவினர்களுடன்} சேர்ந்து, இவரின் சகாய அர்த்தத்திற்காகச் செல்வீராக {இந்த ராவணருக்கு உதவி செய்யும் பொருட்டுச் செல்வீராக}. நம் மீதான சினேகிதத்தினால், நம்மை நாடி வந்தவருக்கு நன்மை செய்ய முற்படுவதே தகுந்ததாகும்" {என்றாள் கும்பீனசி}.(48)
அவளுடைய {கும்பீனசியின்} அந்த வசனத்தைக் கேட்டதும், மது, "அப்படியே ஆகட்டும்" என்ற சொற்களைச் சொன்னான்.(49) அவன் {ராக்ஷசனான மது}, எது நியாயமோ, அதன்படி ராவணனருகில் சென்று, ராக்ஷசர்களில் சிறந்தவனும், ராக்ஷாசதிபனுமான அவனைக் கண்டு, {விருந்தினரை உபசரிக்கும்} தர்ம முறைப்படி பூஜித்தான்.(50)
வீரியவானான தசக்ரீவன், மதுவின் வேஷ்மத்தில் {அரண்மனையில்} பூஜைகளை ஏற்றுக் கொண்டு, அங்கே ஏக நிசி {ஓர் இரவு முழுவதும்} தங்கியிருந்துவிட்டு, {தேவலோகத்திற்குப்} புறப்பட ஆயத்தமானான்.(51) பிறகு, மஹேந்திரனுக்கு ஒப்பான பிரகாசம் {பராக்கிரமம்} கொண்ட ராக்ஷசேந்திரன் {ராவணன்}, வைஷ்ரவணனின் ஆலயமான {குபேரனின் இருப்பிடமான} கைலாச சைலத்தை அடைந்து, தன் சேனையை முகாமிடச் செய்தான்.(52)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 025ல் உள்ள சுலோகங்கள்: 52
| Previous | | Sanskrit | | English | | Next |
