Wednesday, 17 June 2026

அரம்பை | சர்க்கம் – 026 (61)

Rambha | Sarga-026 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நளகூபரனிடம் சென்று கொண்டிருந்த ரம்பையை, பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய ராவணன்; நடந்ததை உள்ளபடியே நளகூபரனிடம் சொன்ன ரம்பை; ராவணன் அடைந்த சாபம்...

Rambha and Ravana

வீரியவானான அந்த தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தன் சைனியத்துடன் அங்கே {கைலாசத்தில்} இருந்தபோது, தினகரன் அஸ்தத்தை {சூரியன் அஸ்த மலையை / மறைவை} அடைந்ததால், தன் வசிப்பிடத்தை {முகாமை} அமைத்துக் கொள்ள விரும்பினான்.(1) பர்வதத்திற்குத் துல்லியமான ஒளியைக் கொண்ட {அந்தக் கைலாச மலையைப் போலவே வெண்மையாக விளங்கிய}, விமலமான சந்திரன் உதித்தபோது, தாக்குதலுக்குரிய நானாவித ஆயுதங்களுடன் கூடிய மஹத்தான சைனியம் {ராவணனின் பெரும் படை} உறக்கத்தில் ஆழ்ந்தது.(2) மஹாவீரியவானான அந்த ராவணனோ, சைலமூர்த்தத்தில் {மலையுச்சியில்} அமர்ந்திருந்தவனாக, அங்கே சந்திரனின் கதிர்களால் சோபிக்கும் குணங்களை {அழகுறும் இயற்கையழகைக்} கண்டான்.(3)

ஒளிரும் கர்ணிகார வனங்களாலும் {சரக்கொன்றை மரங்கள் அடர்ந்த காடுகளாலும்}, கதம்ப கஹனங்களாலும் {கடம்ப மரங்கள் அடர்ந்த காடுகளாலும்}, அதே போலவே மலர்ந்திருக்கும் பத்மினிகளாலும் {தாமரைப் பொய்கைகளாலும்}, மேலும் மந்தாகினியின் ஜலத்தாலும் {மந்தாகினி ஆற்றின் நீராலும்},(4) செண்பக, அசோக, புன்னை, மந்தார மரங்களாலும், அதுபோலவே, மா, பாதிரி, லோத்ரங்களாலும் {வெள்ளிலாத்திகளாலும்}, மேலும் பிரியங்கு {ஞாழல்}, அர்ஜுன {மருதம்}, கேதகைகளாலும் {தாழை மரங்களாலும்}, நந்தியாவட்டைகளாலும், தென்னைகளாலும், மேலும் பிரியாலங்களாலும், பனசங்களாலும் {சாரப்பருப்பு மரங்களாலும், பலா மரங்களாலும்},(5) கொன்றைகளாலும், பச்சிலைகளாலும், மேலும் பிரியாலைகளாலும் {சாரப்பருப்பு மரங்களாலும்}, வகுலங்களாலும் {மகிழ மரங்களாலும்}, மேலும் இவை போன்ற இன்னும் பல மரங்களாலும் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த வனாந்தரத்தில் {காட்டின் உட்பகுதியில்}, மதனனால் {காமனால்} உந்தப்பட்டவர்களும், மதுரமான குரல் கொண்டவர்களுமான கின்னரர்கள்,(6) எங்கே மகிழ்ச்சி பெருகி மனம் திருப்தியடையுமோ, அங்கே சமமாக {ஒன்றாக இணைந்து} பாடினார்கள்.(7) {மரங்களால்} பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த வனாந்தரத்தில்[1] வித்யாதரர்கள், மதம் {மதுவெறி} கொண்டு களிப்படைந்தவர்களாக, அந்த மதத்தால் கண்கள் சிவந்தவர்களாக, யோசிதைகளுடன் {பெண்களுடன் / மனைவிகளுடன்} ஒன்றிணைந்து விளையாடியபடியே பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(8) 

[1] "பிருத்பாஸிதவனாந்தரே" என்ற சொல் 7ம் சுலோகத்திற்குப் பின் ஒட்டி வந்திருக்கிறது. இதன் பொருள், "பிரகாசித்துக் கொண்டிருந்த வனாந்தரத்தில்" என்பதாகும்.

தனதாலயத்தில் {குபேரன் வாழும் இடத்தில்} பாடிக் கொண்டிருந்த அப்சரஸ் கணங்களின் மதுர ஸ்வரமானது {இனிய குரலானது}, மணிகளின் ஒலியைப் போன்றதொரு பெரும் நாதமாக அங்கே கேட்கப்பட்டது.(9) பவனனால் {காற்றால் / வாயுதேவனால்} அசைக்கப்படும் மரங்கள், புஷ்பவர்ஷத்தை {மலர்மாரியைப்} பொழிந்து கொண்டு, அந்த சைலத்தையே நறுமணமுடையதாக்குவதைப் போல, வசந்த காலத்திற்குரிய நறுமணத்தை வீசின.(10) புஷ்பங்களின் மதுவையும், மகரந்தத் துகள்களையும் தன்னுள் கலந்து, அந்த கந்தத்தை ஏந்தி வந்த சுகமான அனிலன் {தென்றலானவன் / வாயு தேவன்}, ராவணனின் காமத்தை மேலும் வளர்க்கும் விதத்தில் வீசினான்.(11) இசையினாலும், புஷ்பங்களின் செழிப்பினாலும், மேலும் வாயுவின் குளிர்ச்சியினாலும், {கைலாச} கிரியின் குணத்தினாலும், தொடர்ந்து வந்த இரவுப் பொழுதினாலும், மேலும் சந்திரனின் உதயத்தினாலும்,(12) காமனின் வசத்தை அடைந்தவனும், மஹாவீரியனுமான அந்த ராவணனோ, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடியே சசியை {சந்திரனை} உற்று நோக்கிக் கொண்டிருந்தான் {பார்த்துப் பார்த்து உருகினான்}.(13)

இதற்கிடையில், அங்கே திவ்யாபரண பூஷிதையும் {தெய்வீக அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவளும்}, சர்வ அப்சரஸ்களிலும் சிறந்தவளும், திவ்ய புஷ்ப விபூஷிதையுமான ரம்பை {தெய்வீக மலர்களால் அலங்கரிக்கப்பட்டவளுமான ரம்பை},(14) திவ்ய சந்தனம் பூசப்பட்ட அங்கங்களுடனும், மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடனும், பூர்ணச் சந்திரனைப் போன்ற முகத்துடனும், திவ்ய உத்சவத்திற்கு {தெய்வீகத் திருவிழாவிற்கு} தயாராகச் சென்றாள்.(15) கண்களையும், மனத்தையும் கொள்ளை கொள்ளும் திரண்ட மேகலையால் {அரைஞாணால்} அலங்கரிக்கப்பட்ட தன் ஜகனத்தை {இடுப்புப் பகுதியை}, ரதியின் {ரதி தேவியின் / சிற்றின்பத்தின்} உத்தம பரிசைப் போல் தாங்கிக் கொண்டும்,(16) ஆறு ருதுக்களுக்கும் {பருவ காலங்களுக்கும்} உரிய மலர்களில் இருந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட திலகத்தை {நெற்றியில்} வரைந்து கொண்டும்,(17) நாணத்தினால் காந்தியும், அழகும் பொருந்திய ஒப்பற்ற ஸ்ரீயை {லக்ஷ்மியைப்} போல் பிரகாசித்துக் கொண்டும், நீருண்ட மேகத்தைப் போல, நீல நிற வஸ்திரத்தைப் போர்த்திக் கொண்டும்,(18) {இருந்த} எவளுடைய முகம் சந்திரனுக்கு நிகராகவும், புருவங்கள் இரண்டும் சேர்ந்து வில்லைப் போன்று சுபமாகவும் {அழகாகவும்}, தொடைகள் கரிகரத்தின் {யானையுடைய துதிக்கையின்} வடிவிலும், கைகள் இரண்டும் தளிர் போன்ற மென்மையுடனும் இருந்தனவோ, அத்தகையவள் {அந்த ரம்பை, உறங்கிக் கொண்டிருந்த ராவணனின்} சைனியத்திற்கு மத்தியில் நடந்து சென்றபோது, ராவணனால் உற்று நோக்கப்பட்டாள்.(19) 

காமனின் பாணங்களுக்கு வசப்பட்ட ராவணன், {தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து} எழுந்து வந்து, அங்கே லஜ்ஜையுடன் {நாணத்துடன்} நடந்து சென்று கொண்டிருந்தவளின் கரத்தை {ரம்பையின் கையைப்} பற்றிக் கொண்டு, புன்னகைத்தபடியே அவளிடம் {பின்வருமாறு} பேசினான்:(20) "அழகிய இடையாளே, ஸ்வயமாக {தானாக} எங்கே செல்கிறாய்? எந்த சித்தியை {எத்தகைய பேற்றை} அடையப் போகிறாய்? உன்னை அடையப் போகும் அந்த செழிப்பான காலம் {உன்னை அனுபவிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட காலம்} எவனுடையதோ?(21) இன்றைய பத்ம, உத்பலங்களின் சுகந்தத்தைக் கொண்டதும் {அன்றலர்ந்த தாமரை, செங்கழுநீர் மலர்களின் நறுமணத்தை வீசுவதும்}, தேவாமிர்தத்தின் ரசத்தை {சுவையைப்} போன்றதுமான உன் முக ரசத்தில் {உன் முகத்தின் / அதரத்தின் சுவையை நுகர்ந்து}[2] இன்று திருப்தியடையப் போகிறவன் எவனோ?(22) பீரு {அச்சமுடையவளே}, சுபமாகவும் {அழகாகவும்}, இடைவெளியில்லாமலும், சுவர்ணக்கும்பங்களுக்கு {பொற்குடங்களுக்கு} நிகராகவும் பருத்திருக்கும் உன் இரு மார்பகங்களின் ஸ்பரிசத்தைப் பெறும் நெஞ்சம் எவனுடையதோ?(23) சுவர்ணச் சக்கரத்திற்கு {தேரின் தங்கச் சக்கரத்திற்கு} நிகரானதும், சுவர்ண மாலைகளால் சூழப்பட்டதும், அகன்றதும், ஸ்வர்க்கத்தின் ரூபமாகவே {வடிவமாகவே} திகழ்வதுமான உன் ஜகனத்தை {இடுப்புப் பகுதியை} இன்று அனுபவிக்கப் போகிறவன் எவனோ?(24) பீரு {அச்சமுடையவளே}, இன்று என்னைவிட உயர்ந்த புமான் {ஆண்மகன்} எவன்? என்னை மீறி நீ எவனிடம்தான் செல்கிறாயோ? அவன் சக்ரனா {இந்திரனா}? விஷ்ணுவா? அல்லது அஸ்வினிகளா? இது சோபனமல்ல {நல்லதல்ல}.(25) அகன்ற இடையைக் கொண்டவளே, சுபமான இந்தப் பாறைத் தளத்தின் மேல் {அமர்ந்து} நீ சிரமம் களைவாயாக.(26) மேலும், திரிலோகங்களிலும் என்னைவிட உயர்ந்த பிரபு எவன் இருக்கிறான்? இல்லவே இல்லை.(27) எனவே, திரிலோகங்களின் தலைவர்களுக்குத் தலைவனும், விதியை விதிப்பவனுமான இந்த தசானனன் {ராவணன்}, இவ்வாறு உன்னிடம் கைகளைக் கூப்பிப் பணிவுடன் யாசிக்கிறான்; என்னை நீ அடைவாயாக" {என்றான் ராவணன்}.(28)

[2] பிற தமிழ் பதிப்புகளில் முகரஸம் என்பது உதட்டின் சுவை என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இப்பொழுது பத்மம், உத்பலம் இவைகளின் நறுமணமுள்ளது, தேவாமிருதத்தின் ருசிக்கு ஈடாயிருக்கிறதுமான உனது அதராமிருதத்தினுடைய திருப்தியை இத்தருணத்தில் எவன் அடையப் போகிறான்" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பில், "உன்னுடைய முகத்தில் தாமரை, ஆம்பல் மலர்களின் நறுமணம் வீசுகிறது; உதடுகளில் அமுதத் தாரை பொழிகிறது. இன்று, இந்த அமுத் துளிகளைச் சுவைத்து மனநிறைவு அடையப்போகிறவன், யார்?" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "அமுத்தினின்றும் அமுதஸாரத்தை யருந்துவதுபோல், உனது முகத்தாமரையினின்றும் அதராமிருதத்தைப் பருகித் திருப்தியடையும் புண்ணியசாலி யாவன்?" என்றிருக்கிறது. "வத்-ஆநந-ரஸஸ்ய / அத்ய / பத்ம-உத்பல-ஸுகந்திந: | ஸுதா-அம்ருத-ரஸஸ்ய / இவ / க: / அத்ய / த்ருப்திம் / கமிஷ்யதி" என்பது மூலத்தின் பதச்சேதம். அந்தக் குறிப்பிட்ட பதங்களின் பொருள் பின்வருமாறு "த்வத்-ஆநந-ரஸஸ்ய – உன் முகத்தின் ரசத்தை {சுவையை}; ஸுதா-அம்ருத-ரஸஸ்ய) – தேவாமிர்தத்தின் ரசத்தை {சுவையை}" என்பதாகும்.

இவ்வாறு சொல்லப்பட்ட ரம்பை, நடுங்கியபடியே கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} கூறினாள், "அருள்புரிவீராக. {என்னிடம் நீர்} இவ்வாறு பேசுவது தகுந்ததல்ல. நீரே எனக்கு குருவானவர் {ஆசிரியர் / பெரியவர் / மாமனார் ஆனவர்}.(29) {ஒருவேளை எனக்கு}  அந்நியர்களால் ஏதேனும் அவமானம் நேர்ந்தால், உம்மால் {நான்} ரக்ஷிக்கப்பட வேண்டியவள். தர்மத்தின்படி நான் உமது மருமகள் ஆவேன். அதையே {அந்த உண்மையையே நான்} உமக்குக் கூறுகிறேன்" {என்றாள் ரம்பை}. (30)

பிறகு, சரணங்களை {பாதங்களை} நோக்கிய முகத்துடன் {தலைகுனிந்து} நின்று கொண்டிருந்தவளும், கண்ட மாத்திரத்திலேயே ரோமஹர்ஷனம் அடைந்தவளுமான அவளிடம் {தன்னைப் பார்த்த பயத்தால் மயிர்ச்சிலிர்ப்பை அடைந்தவளுமான ரம்பையிடம்}, அப்போது தசக்ரீவன் {ராவணன்,  பின்வருமாறு} கூறினான்:(31) "என் மகனின் பாரியையாக {மனைவியாக} இருந்தால்தானே நீ என் மருமகளாவாய்" என்றதும், ராவணனுக்கு மறுமொழியாக "திண்ணமாக {ஆம் நான் உமது மகனின் மனைவிதான்}" என்று சொல்லிவிட்டு, அந்த ரம்பை {பின்வருமாறு} கூறினாள்:(32) "இராக்ஷசபுங்கவரே, திரிலோகங்களிலும் புகழ்பெற்றவரும், உம் பிராதா வைஷ்ரவணரின் {உம்முடன் பிறந்த குபேரரின்} புத்திரரும், என் பிராணனுக்கு நிகரான பிரியத்திற்குரியவரும், நளகூபரர் என்று அழைக்கப்படுபவருமான உம் மகனுக்கு தர்மத்தின் அடிப்படையிலான பாரியை {மனைவி} நான்.(33) எவர் தர்ம நெறியில் விப்ரராக {அந்தணராக} விளங்குகிறாரோ, வீரியத்தில் க்ஷத்திரியராக விளங்குகிறாரோ, கோபத்தில் அக்னியாவாரோ, பொறுமையில் வசுதைக்கு {பூமிக்கு} நிகராவாரோ,(34) அத்தகையவரும், லோகபாலரின் மகனுமான அவரை {குபேரரின் மகனுமான நளகூபரரைச்} சந்திக்கவே நிச்சயித்திருந்தேன். அவரையே உத்தேசித்து என்னுடைய இந்த சர்வ அலங்காரங்களும் செய்யப்பட்டன.(35) எனவே, என் பாவம் {உணர்வு / அன்பு} அவர் மீது நிலைத்திருக்கிறதேயன்றி, வேறு எவரிடமும் இல்லை.(36) இராஜரே, அரிந்தமரே {பகைவரை அடக்குபவரே}, அந்த சத்தியத்தின் பெயரால் என்னை விடுவிப்பதே உமக்குத் தகும்.(37) தர்மாத்மாவான அவர் {என் கணவர் நளகூபரர்}, என்னை எதிர்பார்த்தே பேராவலுடன் காத்திருக்கிறார். எனவே, அங்கே உமது மகனுக்கு விக்னத்தை உண்டாக்குவது {தடையேற்படுத்துவது} உமக்குத் தகுந்ததல்ல. என்னை விடுவிப்பீராக.(38) இராக்ஷசபுங்கவரே, சாதுக்களால் ஆசரிக்கப்பட்ட மார்க்கத்தில் {நல்லோர் பின்பற்றிய வழியில்} செல்வீராக. நீர் என் மதிப்பிற்குரியவர். அதேபோல, நான் உம்மால் பாதுகாக்கப்பட வேண்டியவளாகவே இருக்கிறேன்" {என்றாள் ரம்பை}.(39)

இவ்வாறு சொல்லப்பட்ட தசக்ரீவன், பணிவுடையவன் போல {பின்வருமாறு} மறுமொழி கூறினான், "'நான் உமது மருமகள்' என்று நீ எதைச் சொன்னாயோ, அந்தக் கிரமம் ஏகபத்னிகளுக்கே பொருந்தும் {அந்த நெறி ஒருவனுக்கு ஒருத்தி என்ற தர்மத்தில் வாழும் பெண்களுக்கே பொருந்தும்}. ஸுரர்களால் {தேவர்களால்} சாஸ்வதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேவலோக நிலைப்பாடு இதுதான் {பின்வருவதுதான்}.(40) அப்சரஸ்களுக்குப் பதி {கணவன்} என்பவன் இல்லை {ஒருவனும் கணவன் கிடையாது}. மேலும், ஒருவனுக்கே ஒரு ஸ்திரீ மனைவி என்பதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.(41) நீ எதைச் சொன்னாயோ, அஃது ஏக பத்னிகளுக்குரிய கிரமமாகும் {விதியாகும்}" என்று இவ்வாறு சொன்ன அந்த ராக்ஷசன் {ராவணன்}, பாறை மீது அவளை அமரச் செய்து, காம போகத்தில் மூழ்கி மைதுனங்கொள்ளத் தொடங்கினான்.(42)

அதன்பிறகு விடுபட்டதும், கலைந்து போன மாலைகளுடனும், ஆபரணங்களுடனும் கூடிய ரம்பை, கஜேந்திரனால் {தலைமை யானையால்} விளையாட்டாக மிதித்துக் கலக்கப்பட்ட நதியைப் போல பெருங்கலக்கத்தை அடைந்தாள்.(43) அவிழ்ந்து, கலைந்த கேச நுனிகளுடனும், நடுங்கும் தளிர்களைப் போன்ற கரங்களுடனும் {கைகளுடனும்} மலர்கள் நிறைந்த லதை {கொடி} பவனனால் {காற்றால்} அடித்து துவம்சம் செய்யப்பட்டதைப் போலத் தெரிந்தாள்[3].(44) இலஜ்ஜையுடனும், பீதியுடனும் நடுங்கிய அவள் {ரம்பை}, கைகளைக் கூப்பி வணங்கியபடியே நளகூபரனை நெருங்கி, அவனது பாதங்களில் விழுந்தாள்.(45)

[3] இதன் பிறகு ரம்பை ராவணனை சபித்ததாக ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டம் சொல்கிறது. இது வால்மீகியில் இல்லை.

வந்தி யாக நீ மாநில மாதர்தம்
சிந்தையால் அன்றி யாவரைத் தீண்டினும்
கந்த வார்குழலார் கற்பு எரியினால்
வெந்து வீழ்தி என்று ஏகினள் விம்மனாள்.

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 494ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: "பலவந்தப்படுத்துபவனாக நீ இப்பெரும் நிலத்திலுள்ள மாதரின் சிந்தை உடன்பாட்டாலன்றி யாவரைத் தீண்டினாலும், மணமிக்க நீண்ட கூந்தலைக் கொண்ட அவர்களின் கற்பு என்கிற தீயினால் வெந்து வீழ்வாயாக" என்று சபித்துவிட்டு, தேம்பியபடியே சென்றாள்.

மஹாத்மாவான அந்த நளகூபரன், அவளை அந்த நிலையில் கண்டதும், "என்ன இது? பத்ரே {அன்பானவளே}, என் பாதங்களில் விழுகிறாயே?" என்று வினவினான்.(46)

அவள் நெடும் பெருமூச்சுவிட்டு, மேலும் நடுக்கத்துடன், கைகளைக் கூப்பியபடியே, எது நடந்ததோ, அதை {உள்ளபடியே, பின்வருமாறு} அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள்:(47) "தேவரே, இதோ, திரிவிஷ்டபத்திற்கு {தேவலோகத்திற்குச்} செல்ல தசக்ரீவர் வந்திருக்கிறார். சைனியத்தின் சஹாயத்துடன்  இந்த நிசி {இரவு} அவரால் இங்கே கழிக்கப்பட்டது.(48) உம்மை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, நான் அவரால் பார்க்கப்பட்டேன். அரிந்தமரே, அவரால் கைப்பற்றப்பட்டேன்; "நீ யாருடையவள்?" என்று அவரால் கேட்கவும் பட்டேன்.(49) எது சத்தியமோ, அவை யாவும் என்னால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. காம மோஹிதத்தால் ஆட்கொள்ளப்பட்ட அவர், என்னுடைய அந்தச் சொற்களைக் கேட்டாரில்லை {செவியில் கொண்டாரில்லை}.(50) தேவரே, "நான் உமது மருமகள்" என்று என்னால் யாசிக்கப்பட்டும், அவை யாவற்றையும் பின் தள்ளிய அவரால் பலவந்தமாக நான் அவமதிக்கப்பட்டேன்.(51) நல்விரதரே, என்னுடைய இந்த அபராதத்தை பொறுத்துக் கொள்வீராக {என் குற்றத்தை மன்னிப்பீராக}. சௌம்யரே, ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கும் இடையிலான பலம் துல்லியமானதல்லவே? {சமமானதல்ல}" {என்றாள் ரம்பை}.(52)

இதைக் கேட்டபோது, வைஷ்ரவணாத்மஜன் {குபேரனின் மகனான நளகூபரன்} கடுங்குரோதமடைந்தான். அவளுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கேட்டு, தியானத்தில் ஆழ்ந்தான்.(53) அப்போது, அவனுடைய அந்தக் கர்மத்தை {ராவணனின் கொடுஞ்செயலை} அறிந்து, உணர்ந்து, குரோதத்தால் கண்கள் சிவந்த வைஷ்ரவணாத்மஜன் {நளகூபரன்}, ஒரு முஹூர்த்தத்திற்குள் தன் கையில் நீரை எடுத்துக் கொண்டான்.(54) நீர் முழுவதையும் ஏந்தி, எது விதியோ, அதன்படி ஆசமனஞ்செய்து {நீரைத் தொட்டுத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு}, ராக்ஷசேந்திரனுக்குக் கொடுஞ்சாபத்தை எப்படி கொடுத்தானெனில்,(55) "பத்ரே {அன்பானவளே}, நீ விருப்பமில்லாதவளாக இருந்தும், எதனால் அவரால் பலவந்தமாக அவமதிக்கப்பட்டாயோ, அதனாலேயே அவர் {தம் மீது} விருப்பமில்லாத அந்நிய யுவதியை {பெண்ணை} நெருங்க முடியாதவராவார் {தீண்ட முடியாதவராவார்}.(56) காமத்தால் பீடிக்கப்பட்ட அவர், {தம் மீது} விருப்பமில்லாத பெண்ணை எப்போது அவமதிப்பாரோ, அப்போதே அவருடைய தலை ஏழு துண்டுகளாக வெடித்துச் சிதறும்" {என்றான் நளகூபரன்}[4].(57)

[4] நல்லார் புகழும் நளகூபரன் ஒருவன்
இல்லாளைத் தேராது தீண்டில் இராவணனாம்
பொல்லா ஒழுக்கத்தான் பொன் முடிகளோடு தலை
எல்லாம் பொடி ஆகி வீழ்க எனச் சபித்தான்.

 - ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 496ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: நல்லோரால் புகழப்படும் நளகூபரன், "ஒருவனுடைய இல்லாளின் உள்ளத்தை ஆராயாமல் தீண்டினால், தீய ஒழுக்கம் கொண்ட ராவணன், தன் பொன் மகுடங்களுடன் கூடிய தலைகள் அனைத்தும் பிளந்து பொடியாகி வீழ்வானாக" என்று சபித்தான்.

இதன் அடிக்குறிப்பில், "'எனைத் துணைய ராயினு மென்னாந் தினைத் துணையும் தேரான் பிறனில் புகல்' (திருக்குறள் - 144) என்பது இங்கு நினைக்கத்தகும். தேராது என்பது அவள் உள்ளத்தை ஆராயாது என்றும், தன்பிழையை ஓராது {ஆராயாது} என்றும் பொருள்படும். இங்கு இருபொருளும் ஏற்கும்" என்றிருக்கிறது. மேற்கண்ட குறளின் பொருள், "ஒருவர் எத்துணைப் பெரிய பெருமை, கல்வி, அல்லது புகழ் உடையவராக இருந்தாலும், காம மயக்கத்தால் தினையளவும் (மிகச்சிறிய அளவுகூட) ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய இல்லத்தில் நுழைவாரானால் {பிறர் மனைவியை அடைவாரானால்}, அதனால் அவருக்கு என்ன பயன்? அவர் தனது தகுதியை இழந்து அழிந்து போவார்" என்பதாகும்.

ஜுவலிக்கும் அக்னிக்கு சமமான பிரபையுடன் கூடியதாக அந்த சாபம் உரைக்கப்பட்டபோது, தேவதுந்துபிகள் முழங்கின, வானத்தில் இருந்து புஷ்ப விருஷ்டி {மலர்மாரி} பொழிந்தது. பிதாமஹனை முகமாகக் கொண்ட {பிரம்மனை முதலாகக் கொண்ட} சர்வ தேவர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.(58) சர்வ லோகங்களின் கதியையும் {நல்வழியையும்}, அந்த ராக்ஷசனின் மிருத்யுவையும் {ராவணனின் மரணத்திற்கான காரணத்தையும்} அறிந்த ரிஷிகளும், பித்ருக்களும் நிகரற்ற பெரும்பிரீதியை அடைந்தனர்.(59)

அந்த தசக்ரீவனோ, ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் {மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும்} அந்த சாபத்தைக் கேட்டு, {அது முதல், தன் மீது} விருப்பமில்லாத நாரீகளிடம் {பெண்களிடம்} மைதுனபாவங்கொள்ளும் விருப்பத்தை விட்டொழித்தான்.(60) அவனால் கவர்ந்து வரப்பட்ட பதிவிரதைகளான சர்வ ஸ்திரீகளும், {தங்கள்} மனத்திற்குப் பிரியமாக நளகூபரனால் விடுக்கப்பட்ட அந்த சாபத்தைக் கேட்டுப் பெரும்பிரீதியை அடைந்தனர்.(61) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 026ல் உள்ள சுலோகங்கள்: 61

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அனரண்யன் அனலை அரம்பை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேதுமதி கைகசி கௌ சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சுரபி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி