Indra captured | Sarga-029 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனைக் கட்டிய இந்திரன்; இந்திரனை மாயையில் கட்டிய இந்திரஜித்; இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்திரன்...
பிறகு, இருள் சூழ்ந்த போது, அந்த சர்வ தேவராக்ஷசர்களும் தங்கள் பலத்தில் மதங்கொண்டவர்களாகப் பரஸ்பரம் அழித்தபடியே {தொடர்ந்து} போர் செய்தனர்.(1) ஆனால், பிறகு, தேவசைனியத்தால் ராக்ஷசர்களின் பெரும்பலம் {பெரிய படையானது} யுத்தத்தில் பத்தில் ஒரு பங்காக ஸ்தாபிதம் செய்யப்பட்டது {எஞ்சியிருக்குமாறு செய்யப்பட்டது}. மிச்சமுள்ள பகுதி யமக்ஷயத்திற்கு {யமனின் இருப்பிடத்திற்குக்} கொண்டு செல்லப்பட்டது.(2) எனினும், அந்த இருள் சூழ்ந்த யுத்தத்தில், பரஸ்பரம் யுத்தம் செய்கிறவர்களான அந்த சர்வ தேவ ராக்ஷசர்களும் அன்யோன்யம் அறிந்து கொண்டார்களில்லை {ஒருவரையொருவர் அடையாளம் கண்டார்களில்லை}.(3)
அந்த இருள் ஜாலத்தால் {இருள் கூட்டத்தால்} சூழப்பட்டதில், இந்திரனும், ராவணனும், மஹாபலவானான ராவணியும் {இந்திரஜித்தும்} என அந்த மூவரும் மட்டுமே மோஹம் {திகைப்பை} அடைந்தார்களில்லை.(4) அந்த ராவணன், க்ஷணத்தில் சர்வ பலமும் {படையும்} கொல்லப்பட்டதைக் கண்டு, தீவிரமான குரோதத்தை அடைந்தான். மேலும் மஹாநாதத்தையும் வெளிப்படுத்தினான்.(5) மேலும் குரோதத்தினால் வெல்வதற்கரியவன் {ராவணன்}, சியந்தனத்தில் {தேரில்} அமர்ந்திருக்கும் சூதனிடம் இவ்வாறே சொன்னான், "பரசைனியத்தின் மத்திமவழியாக {பகைவர் படையின் நடு வழியே}, எதுவரை அந்தமோ {முடிவோ} அதுவரை என்னை அழைத்துச் செல்வாயாக.(6) இன்று சமரில் மஹா கோரமான நானாவித ஆயுதங்களால், {மற்றும்} விக்ரமங்களால் ஸ்வயமாக {நானே} இந்த சர்வ திரிதசர்களையும் {முப்பத்து முக்கோடி தேவர்களையும்} யமசாதனத்திற்கு {யமனின் இருப்பிடத்திற்கு} அழைத்துச் செல்கிறேன்.(7) நான் இந்திரனை வதம் செய்வேன். தனதனை {குபேரனை}, வருணனை, யமனை, திரிதசர்களைக் கொன்றுவிட்டு, அதன் பிறகு, மேலே {உயர்ந்த பதவியில்} நானே நிலை பெறுவேன். மேலும் கவலை கொள்ள வேண்டியதில்லை. சீக்கிரமாக என் ரதத்தைச் செலுத்துவாயாக.(8) இன்று உன்னிடம் இருமுறை உறுதியாகக் கூறுகிறேன். எதுவரை அந்தமோ {முடிவோ}, அதுவரை என்னை அழைத்துச் செல்வாயாக.(9) நாம் எங்கே இருக்கிறோமோ, அஃது இந்த நந்தனப் பகுதியாகும் {தேவலோக நந்தவனமாகும்}. எங்கே உதயப் பர்வதமோ {உதய மலை இருக்கிறதோ}, அங்கே இன்று நீ என்னை அழைத்துச் செல்வாயாக" {என்றான் ராவணன்}.(10)
அவனுடைய அந்த வசனத்தைக் கேட்டுவிட்ட பிறகு, அந்த சாரதி, மனோவேகம் கொண்ட துரகங்களை {குதிரைகளை} சத்ருக்களின் மத்திம வழியிலேயே செலுத்தவும் செய்தான்.(11) அவனுடைய அந்த நிச்சயத்தை அறிந்து கொண்டு, அப்போது ரதஸ்தனாக {தேரில் அமர்ந்திருப்பவனாகப்} போர்க்களத்தில் இருப்பவனான, தேவேஷ்வரன் சக்ரன், அந்த தேவர்களை {நோக்கி} பிறகு {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(12) "ஸுரர்களே {தேவர்களே}, என் வாக்கியத்தைக் கேட்பீராக. எது எனக்குப் பிடித்தமானதோ, அது, ஜீவனுடன் கூடிய ராக்ஷசன் தசக்ரீவன் நன்றாகக் கைப்பற்றப்படுவதே {ஆகும்}.(13) ஏனெனில், அதிபலவானான இவன் {ராவணன்}, சைனியங்களுடன், பவன ஓஜஸ்ஸுடன் கூடிய ரதத்தினால் {காற்றின் வேகத்துடன் கூடிய தேரினால்}, பர்வங்களில் {பௌர்ணமி, அமாவாசைகளில்} பொங்கி எழும் அலைகளைக் கொண்ட சமுத்திரம் போலச் செல்லப் போகிறான்.(14) ஏனெனில், வரதானத்தால் பெரிதும் பயமற்றவனான இவன், இன்று கொல்வதற்கு சாத்தியமானவன் அல்லன். எனவே ராக்ஷசனைக் கைப்பற்றுவோம். போரில் நீங்கள் விழிப்புடன் இருப்பீராக.(15) எவ்வாறு பலி {பலிச் சக்கரவர்த்தி} சிறைபிடிக்கப்பட்டது முதல் {இன்று வரை} மூவுலகமும் என்னால் அனுபவிக்கப்படுகிறதோ, அவ்வாறே இந்தப் பாபியின் சிறைபிடித்தல் எனக்குப் பிடித்தமானது" {என்றான் இந்திரன்}.(16)
மஹாராஜா {ராமா}, பிறகு சக்ரன் {இந்திரன்}, ராவணனை விட்டுவிட்டு வேறொரு தேசத்திற்கு {இடத்திற்குச்} சென்று, ரணத்தில் ராக்ஷசர்களை அச்சுறுத்தியபடியே யுத்தம் செய்தான்.(17) {போர்க்களத்திலிருந்து} பின்வாங்காதவனான தசக்ரீவன் வடக்கு வழியாகப் பிரவேசித்தான். சதக்ரதுவோ, தக்ஷிண பக்கவாட்டு வழியாகப் பிரவேசித்தான் {நூறு வேள்விகளைச் செய்த இந்திரனோ, தெற்குப் பகுதி வழியாக நுழைந்தான்}.(18) பிறகு ராக்ஷசாதிபனான அவன் நூறு யோஜனை தொலைவு நுழைந்தவனாக தேவர்களின் சர்வ பலத்தை சரவர்ஷங்களால் {கணைமாரியால்} மறைத்தான்.(19) ஆனால் பிறகு, சக்ரன் தன் பலம் {இந்திரன் தன் படை} சிதறி ஓடுவதைப் பார்த்தபோது, சற்றும் கலங்காமல் தசானனனை நோக்கி {ராவணனை நோக்கித்} திரும்பினான்.(20) இதற்கிடையில், சக்ரனால் ராவணன் பிடிக்கப்பட்டதைக் கண்ட தானவ, ராக்ஷசர்களால், "ஹா, நாம் அழிந்தோம்" என்ற நாதம் {ஓலம்} எழுப்பப்பட்டது[1].(21)
[1] அன்ன காலையில் நூறுயோசனை உள்புகுந்து அணி கெட்டிடத்தன் நெடும்படை சாய நூறுதசக்ரீவனை வானுளோர்மன்னவன் படையோடு வந்துவளைப்ப வஞ்ச அரக்கத் அத்தென் இலங்கை மன் வீடினான் எனநொந்து சிந்தை தியங்கினர்- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 563ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: அப்போது நூறு யோசனை தொலைவு உள்ளே புகுந்து அணிவகுப்புக் கெடுமாறும், தனது நெடிய படை சாயுமாறும் அழிக்கின்ற ராவணனை தேவர்கள் தலைவனான இந்திரன் படையோடு வந்து வளைத்துக் கொள்ள, வஞ்சனைமிக்க அரக்கர்கள் அந்தத் தென் இலங்கைக்கு மன்னவனாகி ராவணன் இறந்தான் என்று சிந்தை நொந்து திகைத்தனர்.
பிறகு, குரோதத்தில் மூர்ச்சித்த ராவணி {இந்திரஜித்}, பெருங்குரோதமடைந்தவனாக ரதத்தில் ஏறி மிகக் கொடூரமான அந்த சைனியத்திற்குள் பிரவேசித்தான் {தேவர்களின் படைக்குள் நுழைந்தான்}.(22) முன்பு கோபதியால் {பசுபதியான சிவனால் வரமாகக்} கொடுக்கப்பட்ட அந்த மஹா மாயைக்குள் பிரவேசித்து {மற்றவர்களுக்குப் புலப்படாமல் மறைந்து கொண்டு}, பெரும் ஆவேசமடைந்தவனாக அந்த சைனியத்திற்குள் பிரவேசித்தான்; {அப்படையினரை நாலாபுறமும்} விரட்டி அடித்தான்.(23) அவன் சர்வ தேவதங்களையும் {இந்திரஜித் தேவர்கள் அனைவரையும்} விட்டுவிட்டுச் சக்ரனை மட்டுமே நோக்கிப் பாய்ந்தான். மேலும் மஹாதேஜஸ்வியான மஹேந்திரன், {இந்திரஜித் மாயைக்குள் புகுந்து மறைந்திருந்ததால்} தன் எதிரியின் மகனைப் பார்க்கவும் இல்லை.(24)
அங்கே ராவணி {இந்திரஜித்}, கவசம் நழுவியவனாக, மஹாவீரியம் மிக்க திரிதசர்களால் தாக்கப்பட்ட போதிலும் கூட, {தேவர்களை} எதுவுமே செய்தானில்லை.(25) அவன் {இந்திரஜித்}, வந்து கொண்டிருக்கும் மாதலியை உத்தம சரங்களால் தாக்கிய பிறகு, மீண்டும் மீண்டும் மஹேந்திரனை பாண வர்ஷத்தால் {கணை மழையால்} சுற்றிலும் மூழ்கடித்தான்.(26) பிறகு, சக்ரன் {இந்திரன்}, தன் ரதத்தை விட்டுவிட்டதும் சாரதியையும் அனுப்பிவிட்டு, ஐராவதத்தில் நன்றாக ஏறிக் கொண்டு ராவணியை {இந்திரஜித்தைத்} தேடினான்.(27) மாயாபலம் கொண்டவனான அவன் {இந்திரஜித்}, அங்கே பார்வைக்குப் புலப்படாதவனாகிவிட்டுப் பிறகு அந்தரிக்ஷத்தில் சஞ்சரிப்பவன் ஆனான். இந்திரனை {மாயையால்} முற்றிலும் சூழப்பட்டவனாகச் செய்துவிட்டு, அவன் சரங்களுடன் முன்னோக்கிப் பாய்ந்தான்.(28)
எப்போது ராவணியானவன் {இந்திரஜித்}, அந்த இந்திரனைக் களைப்படைந்தவனாக அறிந்து கொண்டானோ, அப்போது அவனை மாயையினால் கட்டிப்போட்டு, உடனேயே தன் சைனியத்தை நோக்கிக் கொண்டு சென்றான்.(29) ஆனால், மஹாரணத்தில் அவனால் {இந்திரஜித்தால்} பலவந்தமாகக் கொண்டு செல்லப்படும் அந்த மஹேந்திரனைக் கண்ட சர்வ அமரர்களும், "என்னதான் ஆகுமோ?" என்று சிந்தித்தனர் {கவலை கொண்டனர்}.(30) இந்திரன் வித்யாவானாக இருந்தபோதிலுங்கூட, எவனால், {எவனது} மாயையால் பலவந்தமாகக் கொண்டு செல்லப்படுகிறானோ, {அத்தகையவனும்} ஸமிதிஞ்ஜயனும் {போரில் எப்போதும் வெற்றியே கொள்பவனும்}, மாயாவியுமான அந்தச் சக்ரஜித் {எவருக்கும்} புலப்பட்டானில்லை.(31) இதற்கிடையில், சர்வ ஸுரகணங்களும் {தேவ கூட்டத்தினரும்} குரோதமடைந்தபோது, ராவணனை முகந்திரும்பச் செய்து {புறமுதுகிடச் செய்து}, சரவர்ஷத்தால் {கணைமழையால்} சுற்றிலும் மூழ்கடித்தனர்.(32) அப்போது, ராவணனோ, {பன்னிரு} ஆதித்யர்களையும், {எட்டு} வசுக்களையும் எதிர்கொண்டபோது, சத்ருக்களால் காயமடைந்தவனான அவனால், போர்க்களத்தில் யுத்தம் செய்வதற்கு இயலவில்லை.(33)
யுத்தத்தில் பார்வைக்கு முன் வந்து நின்ற {கண்ணுக்குத் தெரியும்படி நின்ற} அந்த ராவணி {இந்திரஜித்}[2], தாக்குதல்களால் சிதைக்கப்பட்டவனும், மிகவும் சோர்ந்தவனுமான அந்தப் பிதாவை {தன் தந்தை ராவணனைப்} பார்த்து, இதைக் கூறினான்:(34) "வருவீராக. தாதா {ஐயா}, நாம் செல்வோம். இரணகர்மம் {போர் நடவடிக்கைகள்} நிறுத்தப்படட்டும். நமக்கு வெற்றி. {இஃது} உமக்கு அறியப்பட்டதாகட்டும். ஜுவரம் {பிணி} நீங்கியவராக, ஸ்வஸ்தமாக {நலமாக} இருப்பீராக.(35) எவன் ஸுரசைனியத்திற்கும், திரிலோகங்களுக்கும் பிரபுவோ, அத்தகைய இவனே {இந்திரன்} தைவபலத்தால் {சிறை} பிடிக்கப்பட்டான்; ஸுரர்கள் செருக்குடைந்தவர்கள் ஆக்கப்பட்டனர்.(36) ஓஜஸ்ஸால் பகைவனை {வலிமையால் இந்திரனை} அடக்கி, திரிலோகங்களையும் இஷ்டம்போல் அனுபவிப்பீராக. இங்கு உமக்கு வீணான சிரமத்தால் என்ன {பயன்}? ஆனால் இன்று யுத்தம் பலனற்றது" {என்றான் இந்திரஜித்}.(37)
[2] தமிழ்ப்பதிப்புகளில், இவ்விடத்தில், "மாயையால் தன்னை மறைத்துக் கொண்டவனாக இருந்தபடி" என்று இருக்கிறது. குறிப்பாக, ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "தகப்பன் உடம்பெங்கும் அடிபட்டு இளைப்புற்றுத் தவிப்பது கண்டு அவனை நோக்கி மகன் மாயையில் மறைந்தவனாகவே" என்று இருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "மறையாது கட்புலனாகுவானாயின், உடனே தேவேந்திரன் கொலை செய்துவிடுவானென்றபடி" என்றிருக்கிறது. ஆங்கிலப் பதிப்புகளிலும், "remaining invisible" என்றே இருக்கிறது. ஆனால் மூலத்தில், இங்கே, "தர்ஷனஸ்தோ" என்ற சொல் இருக்கிறது. இதன் பொருள் "பார்வைக்குத் தோன்றும்படி நிற்பவன்" என்பதாகும். 23 முதல் 28 வரையிலான ஸ்லோகங்களில், இந்திரஜித் 'மஹா-மாயைக்குள்' பிரவேசித்து 'அத்ருஸ்யஃ', அதாவது, கண்ணுக்குத் தெரியாதவனாக மறைந்து நின்றுதான் இந்திரனைக் கட்டிப்போட்டான். ஆனால், 34-வது ஸ்லோகத்திற்கு வரும்போது, இந்திரனைச் சிறைபிடித்த மாபெரும் வெற்றியைத் தன் தந்தையிடம் நேரில் அறிவிக்க விரும்புகிறான். எனவே, அதுவரை தான் மாயப் போர்வையில் ஒளிந்திருந்த நிலையை விடுத்து, காயங்களுடன் நின்ற தன் தந்தையின் துயரத்தைத் துடைப்பதற்காக, அவன் முன்னால் நேரில் வந்து தோன்றி {தர்ஷனஸ்த꞉}, "தந்தையே, வருவீராக..." என்று பேசத் தொடங்குகிறான்.
பிறகு, அந்த தைவத கணங்கள் ரண கர்மத்திலிருந்து விலகின {தேவ கூட்டங்கள் போர் நடவடிக்கையிலிருந்து விலகின}. இராவணியின் அந்த வாக்கியத்தைக் கேட்ட அவன் {ராவணன்}, நிம்மதியான மனத்தையே உடையவனானான்.(38) பிறகு, போரின் கவலை நீங்கியவனும், பிரபுவும், வெற்றியை அடைந்தவனுமான அந்த நிசாசராதிபன் {ராவணன்}, தன் பவனத்தை {மாளிகையை} நோக்கி மகிழ்ச்சியடைந்தவனாகச் சென்றான். மேலும் தன் மகனை அடைந்து {அருகில் அழைத்துப் பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(39) "பெரும் வலிமைக்கு நிகரான அந்தப் பராக்கிரமங்களினால் என் குலத்தின் மதிப்பும், பெருமையும் அதிகரிக்கப்பட்டன. ஏனெனில், ஒப்பிலா பலம் பொருந்திய இந்தத் திரிதசபதியும் {இந்திரனும்}, திரிதசர்களும் {தேவர்களும்} இன்று உன்னால் முற்றிலும் வெல்லப்பட்டனர்.(40) சைனியத்தால் சூழப்பட்டவனான நீ, வாசவனை {வசுக்களின் அதிபதியான இந்திரனை} ரதத்தில் ஏற்றிக்கொண்டு, இங்கிருந்து {லங்கா} நகரத்திற்கு அழைத்துச் செல், போவாயாக. நானும் கூட, மிக வேகமாகச் செல்லும் உனக்குப் பின்னால் அமைச்சர்களுடன் கூடியவனாகப் பின்தொடர்ந்து வருகிறேன்" {என்றான் ராவணன்}.(41)
பிறகு, வீரியவானான அந்த ராவணி, படையால் சூழப்பட்டவனாக வாகனங்களுடனும் கூடியவனாக, திரிதசபதியை {இந்திரனைப்} பிடித்துக் கொண்டு, தன் பவனத்தை {மாளிகையை} அடைந்து, {உடன்} போரிட்ட ராக்ஷசர்களை அனுப்பி வைத்தான்.(42)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 029ல் உள்ள சுலோகங்கள்: 42
| Previous | | Sanskrit | | English | | Next |
