Friday, 5 June 2026

வருணன் | சர்க்கம் – 023 (54)

Varuna | Sarga-023 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நிவாதகவசர்களுடன் ஏற்பட்ட நட்பு; காலகேயர்களை வென்று, வித்யுத்ஜிஹ்வனை கொன்றது; இராவணன், தெய்வீகப் பசுவான சுரபியை வணங்கியது; வருணனின் புத்திரர்களை வென்றது...

Ravana bowing to the Divine cow Surabhi also known as Kamadhenu

இரணஸ்லாகியான தசக்ரீவன் {போரைப் புகழ்பவனும், பத்துக் கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன்}, திரிதசபுங்கவனான {முப்பத்து முக்கோடி தேவர்களில் சிறந்தவனான} யமனை வெற்றி கொண்ட பிறகு, தன் சகாயர்களை {உதவியாளர்களை/அமைச்சர்களைப்} பார்த்தான்.(1) பிறகு, {யமனின்} தாக்குதலில் காயமடைந்து, உதிரம் தோய்ந்த உடலைக் கொண்ட ராவணனைக் கண்ட ராக்ஷசர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவனை அணுகினர்.(2) மாரீசன் முதலிய பிரமுகர்கள் ஜயத்தை {ராவணனின் வெற்றியைப்} போற்றி வாழ்த்திய பின்னர், ராவணனால் ஆறுதல் கூறப்பட்டவர்களாக புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறினர்.(3) 

பிறகு அவன் {ராவணன்}, ரசாதலத்திற்குச் செல்லும் வழியில், வருணனால் நன்கு பாதுகாக்கப்படுவதும், தைத்திய, உரக கணங்களின் {கூட்டத்தாரின்} வசிப்பிடமாக இருப்பதுமான நீர்நிதியில் {நீரை நிதியாகக் கொண்ட கடலில்} பிரவேசித்தான்.(4) அவன் {ராவணன்}, வாசுகியால் பாலிதம் செய்யப்படும் {ஆளப்படும் நாகலோகத்தின்} போகவதி புரிக்குச் சென்று, நாகர்களை வசப்படுத்திக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியுடன் {ரத்தினங்கள் நிறைந்ததும், தைத்தியர்களுக்கு உரியதுமான} மணிமயீ புரிக்குச் சென்றான்.(5) அங்கே {மணிமயீபுரியில், பிரம்மனிடம்} வரங்களைப் பெற்றவர்களான நிவாதகவசர்கள் எனும் தைத்தியர்கள் {திதியின் வழித்தோல்களான அசுரர்கள்} வசித்து வந்தனர். அந்த ராக்ஷசன் {ராவணன்} அவர்களை எதிர்கொண்டு யுத்தம் செய்வதற்காக அறைகூவி அழைத்தான்.(6) விக்ராந்தர்களும் {வீரம் மிகுந்தவர்களும்}, பலசாலிகளும், யுத்த வெறி கொண்டவர்களுமான அந்த தைத்தியர்கள் அனைவரும், பெரும் மகிழ்ச்சியுடன் நானாவித ஆயுதங்களை ஏந்திக் கொண்டு அங்கே வந்தனர்.(7) மேலும் குரோதமடைந்த ராக்ஷசர்களும், தானவர்களும் {தனுவின் மைந்தர்களான அசுரர்களும்}, சூலங்கள், திரிசூலங்கள், குலிசங்கள் {வஜ்ராயுதங்கள்}, பட்டிசங்கள் {வல்லயங்கள்}, வாள்கள், பரசுகள் {கோடரிகள்}ஆகியவற்றைக் கொண்டு அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தாக்கிப் பிளந்தனர்.(8) அங்கே {போர்க்களத்தில்} இவ்வாறு யுத்தம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வருடத்திற்கும் மேல் {காலம்} கடந்து சென்றாலும், இருதரப்பினரில் எவருக்கும் விஜயமோ, வீழ்ச்சியோ {வெற்றியோ, தோல்வியோ} ஏற்படவில்லை.(9)

பின்னர், மூவுலகங்களுக்கும் கதியாக {புகலிடமாக} இருப்பவனும், அழிவற்ற தேவனுமான பிதாமஹன் {பெரும்பாட்டன் பிரம்மன்}, தன் சிறந்த விமானத்தில் அமர்ந்து  கொண்டு அங்கே துரிதமாக வந்து சேர்ந்தான்.(10) முதிர்ந்தவனான பிதாமஹன் {பிரம்மன்}, நிவாதகவசர்களின் அந்த ரணகர்மத்தை {போர் நடவடிக்கையைத்} தடுத்து நிறுத்தி அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(11) "ஸுராசுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும் கூட} யுத்தத்தில் இந்த ராவணனை வெல்வது நிச்சயம் சாத்தியமல்ல. {அதைப் போலவே} நீங்களும், அமரர்களாலும் {தேவர்களாலும்}, தானவர்களாலும் {அசுரர்களாலும்} அழிக்கப்பட முடியாதவர்கள்.(12) உங்களுக்கு இந்த ராக்ஷசனுடன் சகித்வமே {ராவணனுடன் நட்பேற்படுவதே}  பொருத்தமானது. நண்பர்களுக்குள் சர்வ அர்த்தங்களும் பிரிக்கப்பட முடியாதவை {பொருள்கள் அனைத்தும் பொதுவானவை}. இதில் சந்தேகமில்லை" {என்றான் பிரம்மன்}.(13)

பிறகு, அங்கே {அந்தப் போர்க்களத்தில்} ராவணன், நிவாதகவசர்களுடன் சேர்ந்து அக்னி சாக்ஷியாக சக்யம் செய்து கொண்டான் {நிவாதகவசர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான்}. அப்போது, அவர்கள் பிரீதிமான்கள் ஆகினர் {இருதரப்பும் பகைமறந்து பரஸ்பரம் மகிழ்ச்சியும் கொண்டனர்}.(14) பிறகு தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, நியாயப்படியான அர்த்தங்களை {பொருள்களைப்} பெற்றுக் கொண்டு, தன் சொந்த நகரத்திற்கும், அந்த நகரத்திற்கும் வேறுபாடின்றி அவர்களுடன் ஒரு வருட காலம் தங்கியிருந்து, அவர்களின் பிரியத்தையும் பெற்றான்.(15) பிறகு, மாயைகளில் ஒரு நூறையும் கற்று முடித்தான். நீரின் இந்திரனுடைய புரத்தை {வருணனின் நகரத்தைத்} தேடி ரஸாதலத்தில் சுற்றித் திருந்தான்.(16) பிறகு, காலகேயர்களால் ஆளப்பட்டு வந்த அச்மம் என்றழைக்கப்படும் நகரத்திற்கு {பாறை நகரத்திற்குச்} சென்று, அங்கே தங்கள் பலத்தில் செருக்குடைய காலகேயர்களைக் கொன்றான்.(17) அந்தப் போர்க்களத்தில் இருந்தபோது, சூர்ப்பணகையின் பர்த்தாவும் {கணவனும்}, தன் மைத்துனனும், பெரும் பலம் மிக்கவனும், அந்த பலத்தில் செருக்குடையவனும், போர்க்களத்தில் தன் நாவால் {தன் உதடுகளை} நக்கிக் கொண்டிருந்தவனுமான ராக்ஷசன் வித்யுஜ்ஜிஹ்வனைத் தன் வாளால் வெட்டித் துண்டாக்கினான்.(18) அவனை {வித்யுத்ஜிஹ்வனை} ஒரு முஹூர்த்தத்திற்குள் வென்று {வீழ்த்திய பின்னர்}, நானூறு தைத்தியர்களையும் {காலகேய அசுரர்களையும்} கொன்றான்.(19) 

பிறகு, அந்த ராக்ஷசாதிபன் {ராவணன்}, வெண்மேகத்தின் ஒளியைக் கொண்டதும், கைலாசத்தை {கைலாச மலையைப்} போல் ஒளிர்வதுமான வருணனின் திவ்ய ஆலயத்தை {தெய்வீக மாளிகையைப்} பார்த்தான்.(20) சுரபி {காமதேனு} எனும் பசுவானவள், பால் சுரந்தபடியே அங்கே {வருணலோகத்தில்} நின்று கொண்டிருந்தாள். எவளுடைய பால் பெருக்கினால் க்ஷீரசாகரமும் {பாற்கடலும்},(21) பசுக்களும், சிறந்த விருஷபேந்திரங்களும் {தலைமைக் காளைகளும்} தோன்றினவோ, எவளிடம் இருந்து குளிர்ந்த கதிர்களைக் கொண்டவனும், நிசாகரனுமான {இரவை உண்டாக்குபவனுமான} சந்திரன் உதித்தானோ, அவளை அங்கே {அந்தப் பசுவை அந்த வருணலோகத்தில்} ராவணன் கண்டான்.(22) பாலின் நுரையை {மட்டுமே} உண்ணும் பரமரிஷிகள் ஜீவிப்பதற்கு எவளை முழுமையாகச் சார்ந்திருக்கின்றனரோ, {தேவர்களுக்கான} அம்ருதமும்[1], ஸ்வதா போஜிகளுக்கான ஸ்வதாவும் எவளிடம் உண்டாகின்றனவோ {ஸ்வதா என்ற மந்திரச் சொல்லுடன் அளிக்கப்படும் பொருளை உண்ணும் பித்ருக்களுக்கான [மூதாதையர்களுக்கான] உணவும் எவளிடம் உண்டாகின்றனவோ},(23) உலகத்தின் நரர்கள், சுரபி என்ற பெயரில் எவளை அழைக்கிறார்களோ, அத்தகைய பரம அற்புதமானவளை {பரம அற்புதமான சுரபியை / காமதேனுவை} ராவணன் பிரதக்ஷிணஞ் செய்தான் {வலம் வந்து வணங்கினான்}[2].(24) 

[1] "அமிர்தமும், தேவர்கள் உண்ணும் சுரையும் அவளிடமே {சுரபியிடமே} உற்பத்தியாகின்றன" என்று நாம் ஒப்பிடும் பதிப்புகளில் ஒரு பதிப்பில் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இது ஒருவகை மது" என்றிருக்கிறது. மூலத்தில், "யம் ஸமாஷ்ரித்ய ஜீவந்தி பேனபா꞉ பரமர்ஷய꞉ அம்ருதம் யத்ர சோத்பன்னம் ஸ்வதா ச ஸ்வதபோஜினாம்" என்றிருக்கிறது. இதில் எங்கும் சுரை, அல்லது சுராபானம் என்பது குறிப்பிடப்படுவதாகத் தெரியவில்லை.

[2] பைவிரி நாகத்து அணைமேல் பரன்துயில்கொள்
பரந்த பாற்கடலில் 
தெய்வ நெடுஞ் சுரபிதனைச் சென்னிநிலம்
உற வணங்கித் திறலின் மிக்க
மைவரைபோல் மெய் அரக்கன் வந்து உனக்குத்
தோற்றேன் என்று உரைத்தல் அன்றி
வெய்யமர்செய்குதல் செய்யாது எங்கு ஒளித்தான்
வருணன் என விளம்பும் வேலை

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 413ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்:  படம் விரிந்த பாம்பணைமேல் பரன் {திருமால்} துயில் கொள்ளும் பரந்த பாற்கடல் {அந்தக் கடலைக் கடைந்த போது} தந்தவளும், தெய்வத் தன்மை வாய்ந்தவளும், உயர்ந்தவளுமான சுரபியை {காமதேனுவைத்} தலை நிலத்தில் பட வணங்கிவிட்டு, வலிமை வாய்ந்தவனும், கரிய மலை போன்ற உடலைக் கொண்டவனுமான ராக்ஷசன் {ராவணன், வருணலோகத்தவரை} நெருங்கி வந்து, "உனக்குத் தோற்றேன் என்று சொல்லட்டும், அல்லது கொடும்போர் புரியட்டும். இவற்றைச் செய்யாமல் வருணன் எங்கே ஒளிந்து கொண்டான்" என்று கேட்டான்.

பிறகு அவன் {ராவணன்}, மஹாகோரமானதும் {பேரச்சத்தை விளைவிப்பதும்}, பலவிதங்களிலான பலங்களால் {பல்வேறு படைகளால்} பாதுகாக்கப்படுவதுமான அதில் {வருணனின் மாளிகைக்குள்} பிரவேசித்து, அங்கே சரத் கால வெண்மேகத்தின் நிறத்திலான நூற்றுக் கணக்கான {நீர்த்} தாரைகளால் சூழப்பட்டதும், நித்யம் மகிழ்ச்சி பொங்குவதுமான வருணனின் உத்தம கிருஹத்தைக் கண்டான்.(25) அந்தப் போர்க்களத்தில் பலாதியக்ஷர்களால் {வருணனின் படைத்தலைவர்களால்} தாக்கப்பட்ட பிறகு, அவர்களைக் கொன்றுவிட்டு, {அங்கிருந்த} படைவீரர்களிடம் {பின்வருமாறு} கூறினான், "ராஜாவிடம் {வருணனிடம்} சீக்கிரம் செய்தியை {பின்வருமாறு} அறிவிப்பீராக.(26) 'இராவணன், யுத்தத்தை நாடி வந்திருக்கிறான். அவனுக்கு யுத்தத்தைக் கொடுப்பீராக. அல்லது, "நான் வெல்லப்பட்டேன்" என்று கைகளைக் கூப்பிவிட்டால், உமக்குப் பயமில்லை' என்று சொல்வீராக" {என்றான் ராவணன்}.(27)

இதற்கிடையில், மஹாத்மாவான வருணனின் புத்திர, பௌத்திரர்களும் {மகன்களும், பேரன்களும்}, குறிப்பாக கௌவும், புஷ்கரனும் {கௌ, புஷ்கரன் எனும் பெயர்களையுடைய மகன்களும்} குரோதத்துடன் வெளியே வந்தனர்.(28) வீரிய  குணத்தைக் கொண்டவர்களான அவர்கள் {வருணனின் அந்த வாரிசுகள்}, தங்களின் சொந்தப் படைகளால் சூழப்பட்டவர்களாக, உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போல் ஒளிர்பவையும், விரும்பிய வேகத்தில் செல்லக்கூடியவையுமான ரதங்களை {தேர்களில் குதிரைகளைப்} பூட்டினர்.(29) பிறகு, ஸலிலேந்திரனின் புத்திரர்களுக்கும் {நீரின் தலைவனான வருணனின் மகன்களுக்கும்}, மதிமிக்கவனான ராவணனுக்கும் இடையில் ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்துவண்ணம் கொடூர யுத்தம் தொடங்கியது.(30)

மஹா வீரியமிக்க ராக்ஷசன் தசக்ரீவனின் அமைச்சர்களால் வாருண பலம் முழுமையும் {வருணனின் படை முழுவதும்} க்ஷண நேரத்தில் முற்றிலும் வீழ்த்தப்பட்டது.(31) அப்போது வருணனின் மகன்கள், போர்க்களத்தில் தங்கள் சொந்த பலம் சரஜாலங்களால் {தங்கள் சொந்தப் படை, ராக்ஷசர்களின் கணைக் கூட்டங்களால்} துன்புறுத்தப்படுவதைப் பார்த்து, ரண கர்மத்திலிருந்து {போர் நடவடிக்கையிலிருந்து} பின்வாங்கினார்கள்.(32) அவர்கள் மஹீதலத்தில் {பூமியின் பரப்பில்} இருந்தபோது, புஷ்பகத்தில் {விமானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த} ராவணனைக் கண்டு, சீக்கிரமாகச் செல்லக்கூடிய தங்கள் சியந்தனங்கள் {தேர்கள்} மூலம் உடனே ஆகாசத்தில் நுழைந்தனர்.(33) அவர்கள் {வருணபுத்திரர்கள்} துல்லியமான ஸ்தானத்தை {சமமான இடத்தை / ஏற்ற இடத்தை / ஒரே உயரத்தை} அடைந்த பிறகு, அவர்களுக்கிடையிலான ஆகாச யுத்தம், தேவ தானவர்களுக்கிடையிலானதைப் போல மஹத்தானதாகவும், கொடூரமானதாகவும் இருந்தது.(34) அதன் பிறகு அவர்கள், அந்த யுத்தத்தில் பாவகனுக்கு {நெருப்புக்கு} ஒப்பான சரங்களால் ராவணனை முகம் திரும்பச் செய்து {புறமுதுகிடச் செய்து}, பெரும் மகிழ்ச்சியடைந்து, விதவிதமான வெற்றி முழக்கங்களை எழுப்பினர்.(35)

அப்போது, வீரனான மஹோதரன், ராஜன் {ராவணன்} தாக்கப்படுவதைக் கண்டு, குரோதமடைந்து, மிருத்யு {மரண} பயத்தைக் கைவிட்டு, யுத்தம் செய்யும் ஆவலுடன் {எதிரிகளை} நோக்கினான்.(36) அந்த யுத்தத்தில், விரும்பிய இடங்களுக்குச் செல்லக்கூடியவையும், பவனனுக்கு {காற்றுக்கு} ஒப்பானவையுமான அந்த பயங்கரமானவை {வருணனுடைய மகன்களின் தேர்களில் பூட்டப்பட்ட குதிரைகள்}, மஹோதரனின் கதையால் தாக்கப்பட்டு,  பூமியை நோக்கி வீழ்ந்து மடிந்தன.(37) அந்த வருண புத்திரர்களின் படைவீரர்களையும், நூற்றுக்கணக்கான ஹயங்களையும் {குதிரைகளையும்} கொன்ற பிறகு, அவர்கள் ரதங்களற்றவர்களாக {தேர்களை இழந்தவர்களாக ஆகாசத்தில்} நிற்பதைப் பார்த்த உடனேயே அவன் மஹாநாதம் செய்தான் {மகோதரன் வெற்றி முழக்கத்தை எழுப்பினான்}.(38) மஹோதரனால் தாக்கி நொறுக்கப்பட்ட அவர்களின் ரதங்கள் {வருண புத்திரர்களின் தேர்கள், அவற்றில் பூட்டப்பட்டிருந்த} அஷ்வங்களுடனும் {குதிரைகளுடனும்}, கொல்லப்பட்ட சாரதிகளுடனும் {தேரோட்டிகளுடனும்} பிருத்வீதலத்தில் {தரையில்} வீழ்ந்தன.(39)

மஹாத்மாவான அந்த வருண புத்திரர்களோ, தங்கள் ரதங்களைக் கைவிட்டு, ஆகாசத்திலேயே நிலைத்து நின்று, தங்கள் சொந்தப் பிரபாவத்தினால் சற்றும் கலக்கடமடையாமல் இருந்தனர்.(40) {தங்கள் கைகளில் இருந்த} தனுசுகளில் நாணேற்றிக் கொண்டு, மஹோதரனை {கணைகளால்} தாக்கித் துளைத்துவிட்டு, குரோதத்துடன் ஒன்றாகத் திரண்டு சமரில் {அந்தப் போர்க்களத்தில்} ராவணனை நோக்கிப் பாய்ந்தனர்.(41) குரோதமடைந்த அவர்கள் {வருண புத்திரர்கள்}, தங்கள் சாபத்திலிருந்து {வில்லிலிருந்து} ஏவப்படுபவையும், வஜ்ரத்திற்கு {இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு} ஒப்பானவையுமான பயங்கர சாயகங்களினால் {கணைகளால்}, மேகங்கள் ஒரு மஹாகிரியை {மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பெரும் மலையைப் பிளப்பதைப்} போல, அவனை {ராவணனைப்} பிளந்தனர்.(42) 

அப்போது குரோதமடைந்த தசக்ரீவன், காலாக்னியைப் போலச் சீறியெழுந்து, மஹா கோரமான சர வர்ஷத்தால் அவர்களின் மர்மங்களைத் தாக்கினான் {கணை மழையால் வருணனுடைய படைவீரர்களின் உயிர் நிலைகளைத் தாக்கினான்}.(43) அதனால் {ராவணனின் அந்தத் தாக்குதலால்} திடீரெனப் பதாதிகள் {அங்கிருந்த காலாட்படை வீரர்கள்} தளர்ந்து சரிந்த பிறகும், {அவர்களின் மேல்} விசித்திரமான முசலங்கள் {உலக்கைகள்}, நூற்றுக்கணக்கான பல்லங்கள் {ஈட்டி போன்று கூர்முனைக் கணைகள்},(44) பட்டிசங்கள், சக்திகள், சதக்னிகள் ஆகியவற்றையும், அதே போலத் தோமரங்களையும், வானத்தில் அவர்களுக்கு மேல் நின்றுகொண்டிருந்த அந்த வெல்வதற்கரியவன் {ராவணன்} பொழிந்தான்.(45) பலத்த காயமடைந்த பதாதி வீரர்கள் {காலாட்படை வீரர்கள்}, அறுபது வயதான குஞ்சரங்கள் {முழு வளர்ச்சியடைந்து மதம்பிடித்த யானைகள்} பெருஞ்சேற்றில் சிக்கித் தவிப்பதைப் போல, நிலைகுலைந்து விழுந்தனர்.(46)

மஹா ஓஜஸ்ஸுடன் கூடிய {வருணனின்} மகன்கள், தளர்ந்து, நிலைகுலைந்து தவிப்பதைக் கண்டு, பெரும் மகிழ்ச்சியடைந்த ராவணன், பெரும் மேகத்தைப் போல நாதம் செய்தான்.(47) பிறகு அந்த ராக்ஷசன் {ராவணன்} மஹாநாதத்தை எழுப்பியபடியே, {மழைத்} தாரைகளைப் பொழியும் மேகத்தைப் போல, நானாவித ஆயுதங்களைக் கொண்டு வாருணர்களை {வருணனின் மகன்களை / வருணனின் படையினரைத்} தாக்கினான்.(48) பிறகு, அனைவரும் முகம் திரும்பி தரணீதலத்தில் விழுந்ததும் {புறமுதுகிட்டுத் தரையில் விழுந்ததும்}, போர்க்களத்தில் இருந்து, தங்கள் சொந்த ஆட்களால் அவர்கள் {வருணனின் மகன்கள்} சீக்கிரமாகத் தங்கள் தங்கள் கிருஹங்களுக்குள் கொண்டு சேர்க்கப்பட்டனர்.(49) 

அப்போது அந்த ராக்ஷசன் {ராவணன்} அங்கிருந்தவர்களிடம், "வருணனிடம் {நான் போரில் வென்ற செய்தியை} அறிவிப்பீராக" என்று கூறினான்.(50) பிரஹஸன் என்ற பெயரைக் கொண்ட வருணனின் மந்திரி, ராவணனை நோக்கி {பின்வருமாறு} கூறினான், "மஹாராஜா ஜலேஷ்வரர் {வருணன்}, பிரம்மலோகத்திற்குச் சென்றிருக்கிறார்.(51) வீரரே, எவரை நீர் அழைக்கிறீரோ, அந்த வருண மன்னர், காந்தர்வம் கேட்க {இசைப்பாடல்கள் கேட்க பிரம்மலோகம்} சென்று விட்ட நிலையில், உமது வீண் முயற்சியால் பயன் என்ன? {இங்குள்ளவர்களில்} யாவர் ஆற்றல்மிகு வீரர்களோ, அந்த {வருண} குமாரர்கள் அனைவரும் {உம்மால்} வீழ்த்தப்பட்டனர்" {என்றான்}.(52)

இதைக் கேட்ட அந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்}, தன் பெயரை அறிவித்துக் கொண்டு, மகிழ்ச்சி நாதம் செய்தபடியே வருணாலயத்தைவிட்டு வெளியேறினான்.(53) அந்த ராக்ஷசன், எந்தப் பாதையில் வந்தானோ, அதே வழியில் திரும்பி, நபஸ்தலத்தை {ஆகாயத்தை} அடைந்து லங்கையை நோக்கிச் சென்றான்.(54) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 023ல் உள்ள சுலோகங்கள்: 54

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அனரண்யன் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கேதுமதி கைகசி சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தேவவர்ணினி நந்தி நாரதர் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி