Friday, 3 July 2026

அகலிகை | சர்க்கம் – 030 (55)

Ahalya | Sarga-030 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனிடம் சென்ற பிரம்மன்; இந்திரஜித் வேண்டிய வரத்தை அளித்து, இந்திரனை விடுவித்தது; கௌதமரின் சாபத்தைக் குறித்து இந்திரனிடம் சொன்னது...

Ahalya and Gautama

{அகஸ்தியர் ராமனிடம்}... அதிபலவானான மஹேந்திரன், ராவணனின் மகனால் {இந்திரஜித்தால்} வெல்லப்பட்டபோது, ஸுரர்கள் {தேவர்கள்}, பிரஜாபதியை {பிரம்மனை} முன்னிறுத்திக் கொண்டு லங்கைக்குச் சென்றனர்.(1) அங்கு, புத்திரர்களாலும், பிராதாக்களாலும் {உடன்பிறந்தோராலும்} சூழப்பட்டிருந்த ராவணனை அடைந்து, ககனத்தில் {ஆகாயத்தில்} நின்றுகொண்டு, பிரஜாபதி ஸாமப் பூர்வமாக {பிரம்மன் சமாதானமான முறையில் பின்வருமாறு} கூறினான்:(2) "வத்சா {குழந்தாய்}, ராவணா, உன் புத்திரனின் {இந்திரஜித்தின்} யுத்தத்தில் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன். ஆஹோ {என்னே ஆச்சரியம்}, இவனுடைய விக்ரமமும், அதன் உயர்வும், உனக்குத் துல்லியமாகவோ, அதிகமாகவோ கூட இருக்கின்றன.(3) உன் தேஜஸ்ஸால் {ஆற்றலால்} திரிலோகங்கள் முழுமையுமே வெல்லப்பட்டிருக்கின்றன; {எடுத்த} பிரதிஜ்ஞை {உறுதிமொழி} பலனுள்ளதாகச் செய்யப்பட்டது; நிச்சயம் உன் புத்திரனால் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன்.(4) இராவணா, மேலும், அதிபலவானும், வீர்யவானுமான உன்னுடைய இந்தப் புத்திரன் {மேகநாதன்}, ஜகத்தில் “இந்திரஜித்” என்றே நன்கு அறியப்பட்டவனாக இருப்பான்.(5) இராஜனே, எவனைத் துணையாகக் கொண்டு உன்னால் திரிதசர்கள் {முப்பத்து முக்கோடி தேவர்கள்} வசத்தில் வைக்கப்பட்டார்களோ, {அந்த} ராக்ஷஸன் {இந்திரஜித்} பலவானே; {அவன்} வெல்வதற்கரியவனுமே ஆவான்.(6) எனவே, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, பாகசாஸனனான[1] மஹேந்திரன் {இந்திரன்} விடுவிக்கப்படட்டும். மேலும், இவனுடைய விடுதலைக்காகத் திவௌகஸர்கள் {விண்ணில் வாழ்பவர்களான தேவர்கள் ஏதேனும்} கொடுக்கட்டும்" {என்றான் பிரம்மன்}.(7)

[1] பாகன் என்ற அசுரனை அழித்து, ஆள்பவனான பெரும் இந்திரன்

பிறகு, மஹாதேஜஸ்வியும் {பேராற்றல் வாய்ந்தவனும்}, சமிதிஞ்ஜயனுமான {யுத்தத்தில் வெற்றியடைபவனுமான} இந்திரஜித் {பின்வருமாறு} கூறினான், "தேவா, இவன் {இந்திரன்} விடுவிக்கப்படுகிறானெனில், நான் அமரத்வத்தை {மரணமில்லாப் பெருவாழ்வை} வேண்டுகிறேன்.(8) நாற்கால்களையுடையன, ஆகாசத்திற்சஞ்சரிப்பன, அல்லது பிற மஹௌஜசங்கள் {பெரும் வலிமைமிக்கவை}, விருக்ஷங்கள் {மரங்கள்}, புதர்கள், செடிகள், கொடிகள், புற்கள், கற்கள், {பூமியைத் தாங்கும்} மலைகள்[2] ஆகியவற்றிடம் இருந்தும் {மரணமில்லா அமரத்வத்தை நான் வேண்டுகிறேன்" என்றான் இந்திரஜித்}.(9) 

[2] இங்கே இருக்கும் சொல் "மஹீப்ருதாம்". இதன் பொருள் பூமியைத் தாங்கும் மலைகள் என்பதாகும்.

"அனைத்து ஜந்துக்களுமே அன்யோன்யம் {உயிரினங்களுமே ஒன்றுக்கொன்று} அஞ்சவேண்டியதாக {இருக்கும்போது} அஞ்சுகின்றன. எனவே, இவ்வுலகத்தில் அனைத்துக்கும் அனைத்திலிருந்துமே பயம் உண்டாகும்",(10) {என்ற} பிறகு, மஹாதேஜஸ்வியான பிரஜாபதி {பிரம்மன்}, மேகநாதனை {இந்திரஜித்தை} நோக்கி, “புவியில் எந்தப் பிராணிக்கும் சர்வ அமரத்வம் இல்லவே இல்லை {முழுமையாக மரணமின்றி வாழும் நிலை அமையாது}. நாற்கால்களையுடையனவுக்கும், பக்ஷிகளுக்கும் {பறவைகளுக்கும்}, அல்லது மஹௌஜஸான பூதங்களுக்கும் {பேராற்றல்வாய்ந்த உயிரினங்களுக்கும்} கூட இல்லை” என்று கூறினான்.(11)

பிரபுவான இந்திரஜித், பிதாமஹனால் {பெரும்பாட்டனான பிரம்மனால் இவ்வாறு} கூறப்பட்ட மாற்றமற்ற சொல்லைக் கேட்டான்.(12) பிறகு, மஹாபலவானான மேகநாதன் {இந்திரஜித்}, அங்கு நின்றிருந்தவனிடம் {பிரம்மனிடம்}, “சதக்ரதுவின் விமோக்ஷணத்தில் சித்தி {இந்திரனை விடுதலை செய்யாத வெற்றி} உண்டாகட்டும். அல்லது {அதற்கான நிபந்தனையாக நான் சொல்வது} கேட்கப்படட்டும்.(13) சத்ருக்களை முற்றாக ஜயிக்க விரும்பும் நான், நித்யமும் ஹவ்யங்களாலும் {வேள்விப் பொருள்களாலும்}, மந்திரங்களாலும் பாவகனை {அக்னியை} நன்றாகப் பூஜித்து, என் இஷ்டப்படி யுத்த களத்தில் இறங்கும்போது,(14) விபாவஸுவிடமிருந்து அஷ்வங்கள் {வேள்வி நெருப்பிலிருந்து குதிரைகள்} பூட்டப்பட்ட ரதம் எனக்காக உதிக்கட்டும்; அதிலிருக்கும் {அந்தத் தேரிலிருக்கும்} எனக்கு அமரத்தன்மை உண்டாகட்டும். இதுவே எனது நிச்சயமான வரம் {நான் கேட்கும் உறுதியான வரமாகும்}.(15) தேவா, விபாவசுவிடம் {அக்னியில்} அந்த ஜபமும், ஹோமமும் முற்றுப்பெறாமல் இருக்கையில், யுத்தகளத்தில் {நான்} யுத்தம் செய்தால், அப்போது எனக்கு விநாசம் {மரணம்} உண்டாகட்டும்.(16) தேவா, சர்வ புமான்களுமே {மனிதர்களுமே} தபத்தால் அமரத்வத்தைப் பெறுகின்றனர். என்னாலோ, விக்ரமத்தால் இந்த அமரத்வம் உண்டாக்கப்பட்டு இருக்கிறது" {என்றான் இந்திரஜித்}.(17) “அப்படியே ஆகட்டும்” என்று பிதாமஹனான தேவன் {பிரம்மன்} அவனிடம் {இந்திரஜித்திடம் அந்த} வாக்கியத்தைக் கூறவும் செய்தான்[3]. இந்திரஜித்தால் சக்ரன் விடுவிக்கவும் பட்டான்; ஸுரர்களும் திரிதிவத்திற்குச் சென்றனர் {தேவர்களும் விண்ணுலகத்திற்குச் சென்றனர்}.(18)

[3] ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம், திக்கு விசயப் படலம் 575ம் பாடலில், இராவணனே பிரம்மனிடம் சாகாவரம் கேட்கிறான். 576ம் பாடலில் பிரம்மன் மறுக்கவே, 577ம் பாடலில் இந்திரஜித் வேறு வரம் கேட்கிறான். அது பின் வருமாறு

ஆயாது விரிஞ்சன் கூற 
  அரக்கர்கோன் மைந்தன் சொல்லும்
தீயிடைப் பிறந்த தெய்வத் 
  தேரில்நின்று யான் போர்செய்ய
ஆயுவுக்கு இறுதி வாரா
  வகை எனக்கு அருள் நீ என்ன
நீ அது பெற்றாய் என்றான் 
  நிருதன் மற்று இது நிகழ்த்தும்

பொருள்:  அந்தச் செய்தியைப் பிரம்மன் கூறியதும் ராவணனின் மைந்தன் {இந்திரஜித்} சொல்லுவான், "நெருப்புக்கு நடுவே பிறந்ததும், தெய்வத்தன்மை வாய்ந்ததுமான தேரில் நின்று நான் போர் செய்யும்போது என் ஆயுளுக்கு முடிவு வாராதபடி எனக்கு {வரம்} அருள் நீ" என்று வேண்ட, {பிரம்மன்} நீ அதைப் பெற்றாயாக என்றான். அந்த அரக்கன் இதனைச் சொல்லலானான்.

இதற்கிடையில், ராமா, தீனனும் {வருந்தியவனும்}, ஆடையொளியை இழந்தவனுமான இந்திரன், சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டவனாக, தியானத்தில் மூழ்கினான்.(19) ஆனால், அத்தகைய நிலையில் இருந்த அவனை {இந்திரனைக்} கண்டு, தேவனான பிரஜாபதி {பிரம்மன்}, "சதக்ரதுவே {நூறு வேள்விகளைச் செய்தவனே}, முன்பு நீ என்ன கொடுஞ்செயலைச் செய்தாய்? (20) அமரேந்திரா {இறவாதவர்களின் தலைவா}, என்னால் பல பிரஜைகள் {உயிரினங்கள்} சிருஷ்டிக்கப்பட்டன. அவ்வாறே, பிரபுவே, அனைத்து விதத்திலும் ஏகவர்ணமும் {ஒரே நிறமும்}, ஸமாபாஷையும் {ஒரே மொழியும்}, ஏகரூபம் {ஒரே வடிவமும்} கொண்டவையாக {அவை இருந்தன}.(21) அவற்றின் {அந்த உயிரினங்களின்} தோற்றத்திலோ, லக்ஷணத்திலோ {குண அமைப்பிலோ} விசேஷமேதும் {வேறுபாடு ஏதும்} இல்லை. எனவே, ஏகாக்ர {ஒருமுகப்படுத்தப்பட்ட} மனத்துடன் கூடிய நான், அந்தப் பிரஜைகளைக் குறித்து {ஆழமாகச்} சிந்தித்தேன்.(22) அப்படிப்பட்ட நான், அவற்றுக்குள் விசேஷம் {உயிரினங்களுக்குள் வேறுபாடு} உண்டாகும் பொருட்டு, ஒரு ஸ்த்ரீயை நிர்மிதம் செய்தேன். எது எது பிரஜைகளின் ஒவ்வொரு அங்கத்திலும் சிறப்பானதாக இருந்ததோ, அஃது அஃது {அவளை உருவாக்குவதில்} எடுத்தாளப்பட்டது. (23)

பிறகு, ரூபகுணங்களால் {வடிவம், பண்புகளில் சிறந்தவளான} அஹல்யா என்னும் ஸ்த்ரீ என்னால் நிர்மிதம் செய்யப்பட்டாள்[4]; இங்கு {இவ்வுலகில்} “ஹலம்” என்ற பெயர் வடிவின்மையாகும். அதிலிருந்து உண்டானது “ஹல்யம்” {வடிவமற்றது} எனப்படும். (24) எதனால் ஹல்யம் {வடிவக்குறை} இல்லாதிருந்ததோ, அதனால் “அஹல்யா” என்று அவள் புகழ்பெற்றாள். சக்ரா {இந்திரா}, “அஹல்யா” என்ற அவளுடைய நாமம் {பெயர்} என்னால் நிலைநிறுத்தப்பட்டது. (25) 

[4] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "உழப்படாத, அல்லது ஏர் ஓட்டப்படாத என்று பொருள் கொண்டது, "அஹல்யை" எனும் சொல். எனவே, இது களங்கமற்ற ஒருவரைக் குறிக்கிறது. இதனாலேயே அவள் "அஹல்யை" என்று அழைக்கப்பட்டாள்" என்றிருக்கிறது.

தேவேந்திரா, ஸுரரிஷபா {தேவர்களில் காளையே}, அந்த நாரி {பெண்} நிர்மிதம் செய்யப்பட்டவுடன், "இவள் யாருக்குரியவளாகப் போகிறாள்?" என்ற சிந்தனை {கவலை} அப்போது எனக்கு உண்டாயிற்று.(26) ஆனால், சக்ரா {இந்திரா}, நீ அப்போது, உன் உயர்ந்த ஸ்தானத்தின் காரணமாக, பிரபோ, புரந்தரா, “இவள் எனக்குப் பத்னியாக {மனைவியாக} வேண்டும்” என்று அந்த நாரீயை மனத்தால் நினைத்தாய்.(27) ஆனால் அவளோ {அஹல்யையோ}, மஹாத்மாவான கௌதமரிடம் நியாசபூதமாக {ஒப்படைக்கப்படும் / அடைக்கலப் பொருளாக} என்னால் ஒப்படைக்கப்பட்டாள். மேலும் பல வருஷங்களுக்குப் பின் அவராலேயே திருப்பி {என்னிடமே} ஒப்படைக்கப்பட்டாள்.(28) பிறகு, அந்த மஹாமுனியின் மஹா தைரியத்தையும் {சிறந்த மனவுறுதியையும்}, தபஸ்ஸில் {அவருக்கிருந்த} ஸித்தியையும் {மேன்மையையும்} முழுமையாக அறிந்தபோது, அவள் அவருக்கே பத்னியாக {மனைவியாகக்} கொடுக்கப்பட்டாள்.(29) 

அப்போது, தர்மாத்மனே, பெருங்குரோதமடைந்த நீயோ, அந்த முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றதும், அக்னிசிகையை {நெருப்பின் தழலைப்} போல ஒளிரும் அந்த ஸ்த்ரீயைக் கண்டாய்.(30) சக்ரா, காமத்தால் பீடிக்கப்பட்டவனாகவும், கோபத்துடன் கூடியவனாகவும் இருந்த உன்னால் அவள் அவமதிக்கப்பட்டாள் {களங்கமடையச் செய்யப்பட்டாள்}[5]. அப்போது, ஆசிரமத்தில் அந்த பரமரிஷியால் நீ காணப்பட்டாய்.(31) பிறகு, தேவேந்திரா, குரோதமடைந்தவரும், பரமதேஜஸ்வியுமான அவரால் {கௌதமரால்} சபிக்கப்பட்டவன் ஆனாய். அதனாலேயே நிலைமையின் தலை கீழ் மாற்றத்தை {வீழ்ச்சியை} அடைந்தவன் ஆனாய்.(32) "எதனால் என் பத்தினி {என் மனைவியான அஹல்யை} பயமின்றி உன்னால் அவமதிக்கப்பட்டாளோ, வாசவனே, ராஜனே, அதனாலேயே நீ போரில் சத்ருவின் கைகளில் அகப்படுவாய்.(33) ஆனால், துர்புத்தியுடையவனே, எது உன்னால் இங்கு தொடங்கி வைக்கப்பட்டதோ, அந்த ஒழுக்கக்கேடு மானுஷர்களின் உலகங்களிலும் பரவும். இதில் சந்தேகமில்லை.(34) அதில் {மனிதர்கள் செய்யும் அந்தப் பாபத்தில்} எவன் கர்த்தாவோ {எவன் அந்தச் செயலைச் செய்வானோ}, அவனுக்கு அரைப்பங்கும், {மீதி} அரைப்பங்கு உன் மேலும் வந்து விழும். மேலும் உன் ஸ்தானம் {பதவி} நிலையானதாக இருக்காது[6]. இதில் சந்தேகமில்லை.(35) எவனெவன் ஸுரேந்திரனாகிறானோ {தேவர்களின் தலைவனாகிறானோ}, அவன் நிலையானவனாக இருக்கமாட்டான். இந்த சாபம் என்னால் விடுக்கப்பட்டது", என்று அவர் {கௌதம முனிவர்} அப்போது உன்னிடம் கூறினார். (36)

[5] பாலகாண்டம் 48ம் சர்க்கத்தில் இந்த அகலிகை நிகழ்வு சொல்லப்படுகிறது, அதில் 17ம் சுலோகத்தில், இந்திரன் {கௌதம} முனிவேஷம் தரித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 

[6] பாலகாண்டம் 48ம் சர்க்கம், 27ம் சுலோகத்தில் கௌதமர் இந்திரனுக்கு சாபம் கொடுப்பது சொல்லப்பட்டுள்ளது. அதில், "என் ரூபத்தை ஏற்று இந்த ஏற்பில்லா காரியத்தைச் செய்ததால், நீ கனிகளற்றவனாவாயாக {விரைகளற்றவனாவாய்}" என்று மட்டுமே கௌதமர் இந்திரனைச் சபிக்கிறார்.

மஹா தபஸ்வியான அவர் {கௌதமர்}, தம் பாரியையை {மனைவி அஹலிகையைக்} கடிந்து {பின்வருமாறு} கூறினார், "துர்வினீதே {அடக்கமற்றவளே}, என் ஆசிரமத்திற்கு சமீபத்திலேயே உருவற்றுப் போவாயாக.(37) நீ, ரூப, யௌவன ஸம்பன்னையாக {அழகும், இளமையும் நிறைந்தவளாக} இருந்தும் எதனால் கட்டுப்பாடற்றவள் ஆனாயோ, அதனால் நீயொருத்தியே உலகத்தில் ரூபவதியாக {வடிவழகியாக} இருக்கப் போவதில்லை. (38) மேலும், எத்தகைய அந்த ஒருமையை {தனி அழகைச்} சார்ந்து நிலைதவறும் இந்த மயக்கம் வந்து சேர்ந்ததோ, {அத்தகைய} உன் ரூபத்தை, சர்வ பிரஜைகளும் அடைவார்கள். இதில் சந்தேகமில்லை" {என்றார் கௌதமர்}.(39)

அன்றிலிருந்து பெரும்பாலும் பிரஜைகள் அழகிய ரூபம் கொண்டவர்களாக {இருந்தனர்}. அப்போது அவள் அந்த மஹரிஷி கௌதமரை {பின்வருமாறு} சமாதானப்படுத்தினாள்:(40) "விப்ரரே {பிராமணரே, என்} அக்ஞானத்தால் {அறியாமையால்}, உமது ரூபத்தில் {வந்த} தேவனால் {இந்திரனால் நான்} அவமதிக்கப்பட்டேன். விப்ரரிஷியே {பிராமண முனிவரே, இது என்} சுய விருப்பத்தினால் இல்லை; {எனவே, எனக்கு} அருள்புரிவதே உமக்குத் தகும்" {என்றாள் அகலிகை}[7].(41) 

[7] அகலிகை இப்படி மன்றாடுவது பாலகாண்டத்தில் சொல்லப்படவில்லை. முந்தைய சுலோகத்தில் (39ம் சுலோகத்தில்) அகலிகையின் அழகை உலகப் பிரஜைகள் அனைவரும் பகிர்ந்து கொள்வர் என்று கௌதமர் சாபமிட்டதால், அதன் பிறகே பிரஜைகளுக்குப் பலவிதமான ரூபங்கள் (அழகு வேறுபாடுகள்) உண்டாகின என்றாகிறது.

அஹல்யையால் இவ்வாறு கூறப்பட்ட அந்த கௌதமர் {பின்வருமாறு} மறுமொழி கூறினார், "இக்ஷ்வாகுக்களில் {இக்ஷ்வாகு வம்சத்தில்} மஹாதேஜஸ்வியான மஹாரதன் {பேராற்றல்வாய்ந்தவனான சிறந்த போர்வீரன்} ஒருவன் பிறக்கப் போகிறான்.(42) உலகத்தில் ராமன் என்ற பெயரில் புகழ்பெற்றவன், வனத்திற்கு வரப்போகிறான். பெருந்தோள்களுடனும், மானுஷ உருவத்துடனும் {கூடிய} விஷ்ணுவாகப் பிராமணர்களின் காரியத்திற்காக {வரும்} அவனை நீ எப்போது காண்பாயோ, பத்ரே {மங்கலப் பெண்ணே}, அப்போது புனிதமானவளாக ஆவாய்.(43) உன்னால் எந்தத் தீச்செயல் செய்யப்பட்டதோ, {அதை} அவனே தூய்மைப்படுத்த வல்லவனாவான். அவனுக்கு ஆதித்யத்தை {விருந்தோம்பலைச்} செய்த உடனேயே, என் சமீபத்தில் வந்து சேர்வாய்.(44) வரவர்ணினியே {அழகான பெண்ணே}, அப்போது நீ என்னுடனேயே வசிப்பாய்[8]" {என்றார் கௌதமர்}. 

[8] பாலகாண்டம் 48ம் சர்க்கம் 29 முதல் 32ம் சுலோகம் வரை கௌதமர் அகலிகைக்குக் கொடுக்கும் சாபமும், விமோசனமும் சொல்லப்பட்டுள்ளன. அது பின்வருமாறு, "பல்லாயிரம் வருடங்கள் நீ இங்கேயே இருப்பாயாக. உணவில்லாமல் வாயுபக்ஷணம் செய்து {காற்றை உண்டு}, பஸ்மத்தில் {சம்பலில் / புழுதியில்} புரண்டுருண்டு, பழியுணர்ந்து வருந்தி, உயிரினங்கள் எதனுக்கும் புலப்படாதவளாக இந்த ஆசிரமத்திலேயே வாழ்ந்திருப்பாயாக. தசரதாத்மஜனும் {தசரதனின் மகனும்}, தடுக்கப்பட முடியாதவனுமான ராமன், இந்த கோர வனத்திற்குள் வரும்போது நீ தூய்மையடைவாய். துர்விருத்தம் {தீய நடத்தை} கொண்டவளே, அவனை {ராமனை} வரவேற்று, லோபத்தையும் {பேராசையையும்}, மோஹத்தையும் {மயக்கத்தையும்} கைவிட்டு மகிழ்ச்சி அடைந்து நீ என் அருகில் உன்னுடலைத் தரிப்பாய்" என்றிருக்கிறது.

இவ்வாறு கூறிவிட்டு, அந்த விப்ரரிஷி {பிராமண முனிவர்} தமது ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(45) பிரம்மவாதியின் பத்தினியான அவள் {மனைவியான அந்த அஹல்யை}, மஹத்தான தபத்தையும் செய்துவந்தாள். அந்த முனிவர் சாபம் கொடுத்ததாலேயே இவை அனைத்தும் வந்து சேர்ந்தன {நிகழ்ந்தன}.(46) வாசவா {வசுக்களின் தலைவா, இந்திரா}, மஹாபாஹோ {பெருந்தோள்களை உடையவனே}, உன்னால் எந்த தீச்செயல் செய்யப்பட்டதோ, அதை நீ நினைத்துப் பார்ப்பாயாக. அதனாலேயே சத்ருவால் நீ கைப்பற்றப்பட்டாய். வேறு எதனாலும் இல்லை.(47) தேவேந்திரா, உனது புத்ரனும் கூட மஹாரணத்தில் {பெரும்போரில்} மடியவில்லை. ஆரியகனால் {தாய்வழி தாத்தனான புலோமனால்} அழைத்துச் செல்லப்பட்டுப் பெருங்கடலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறான்.(48) நல்ல சமாஹிதத்துடன் {மன ஒருமைப்பாட்டுடன்} சீக்கிரமாகவே நீ வைஷ்ணவ யக்ஞத்தை {வேள்வியைச்} செய்வாயாக. அந்த யக்ஞத்தால் தூய்மை அடைந்தவனான பிறகு, திரிதிவத்தை {தேவலோகத்தைச்} சென்றடைவாயாக" {என்றான் பிரம்மன்}[9].(49)

[9] இங்கே சொல்லப்பட்டது போல, ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டத்தில் அகலிகை கதையும், பிரம்மன் இந்திரனிடம் பேசும் நிகழ்வும் விரிவாகச் சொல்லப்படவில்லை. ஒரே பாடலில் பிரம்மன் இந்திரனுக்குப் பதில் கூறிவிட்டுச் சென்று விடுகிறான்.  திக்கு விசயப் படலத்தில் வரும் அந்த 580ம் பாடல் பின்வருமாறு

அன்னதன்மையனாய் நின்ற 
  அமரர் கோன் தன்னை நோக்கிக்
கல்நிகர் தோளாய் முன்பு 
  கௌதமன் இட்ட சாபம்
உன்னை வந்து உறுதலாலே 
  உனக்கு இது வந்தது உன்தன்
பொன்நகர் புகுதி என்று 
  விட்டு அயன் போயினான் ஆல்

பொருள்: அவ்வாறு மிக்க துயருடன் யாரையும் தலைதூக்கிப் பார்க்காது முகம் கவிழ்ந்து நின்ற இந்திரனைப் பார்த்து, "திரண்ட கல்லை ஒத்த வலிய தோளையுடையவனே, முன்பு {அகலிகையால் நீ செய்த தவறுக்காக} கவுதமன் இட்ட சாபம் இப்போது உன்னை வந்து அடைதலால் உனக்கு இந்த இழிநிலை வந்தது; இனி உனக்குரிய பொன்னகரத்திற்குப் போவாயாக" என்று சொல்லி அவனை விடுத்துப் பிரம்மன் தன்னுலகத்திற்குப் போனான்.

மஹேந்திரனோ, இதைக் கேட்டுவிட்டு, வைஷ்ணவ யக்ஞத்தையும் செய்து முடித்து, மீண்டும் திரிதிவத்தை {தேவலோகத்தை} அடைந்தான். அந்த தேவராட் {தேவர்களின் அரசனான இந்திரன், அங்கிருந்தபடி மீண்டும்} ஆட்சி செய்தான்.(50) என்னால் எது விவரிக்கப்பட்டதோ, இதுவே இந்திரஜித் என்ற பெயருடையவனின் பலம் ஆகும். அவனால் தேவேந்திரனே வெல்லப்பட்டான். அப்படியிருக்க, மற்ற பிராணிகளைப் {உயிரினங்களைப்} பற்றி என்ன கூறுவது?" {என்றார் அகஸ்தியர்}(51)

அகஸ்தியரின் வசனத்தைக் கேட்டபோது, ராமனும், லக்ஷ்மணனும், "ஆச்சரியம்" என்று கூறினர். அப்போது {அங்கிருந்த} வானரர்களும், ராக்ஷசர்களும் {அவ்வாறே ஆச்சரியமடைந்தனர்}.(52) இராமனின் அருகில் நின்று கொண்டிருந்த விபீஷணனோ, "ஆச்சரியம். புராதனமாக {முற்காலத்தில்} எது {என்னால்} பார்க்கப்பட்டதோ, {அது, எனக்கு} இன்று நினைவூட்டப்பட்டது" {என்ற} வாக்கியத்தைக் கூறினான்.(53) இராமனோ அகஸ்தியரிடம், "{இது} சத்தியம். {முன்பே} என்னாலும் கேட்கப்பட்டுள்ளது" {என்று} கூறினான்.(54)

{அகஸ்தியர் தொடர்ந்தார்}, "இவ்வாறே, ராமா, புத்திரனுடனும் கூடிய எவனால் போர்க்களத்தில் ஸுரேஸ்வரனான சக்ரன் {தேவர்களின் தலைவனான இந்திரன்} வெல்லப்பட்டானோ, {அந்த} லோககண்டகனான {உலகங்களுக்கு முள்ளாக விளங்குபவனான} ராவணன் வலிமையுடன் உருவெடுத்தான்.(55) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 030ல் உள்ள சுலோகங்கள்: 55

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி