Nandheeshwara | Sarga-016 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனை சபித்த நந்தி; கைலாசத்தை பெயர்த்த ராவணன்; அவனது செருக்கு அழிந்தது; தன் பெயரை அடைந்தது; சங்கரனிடம் ஒரு வாளைப் பெற்றது...
{அகஸ்தியர் ராமனிடம் தொடர்ந்தார்}, "இராமா, ராக்ஷசாதிபன் {ராவணன்} தன் பிராதாவான தனதனை {குபேரனை} வென்றான். பிறகு அவன், மஹாசேனன் {முருகன்}[1] பிறந்த மஹத்தான ஷரவணத்திற்கு {நாணல் காட்டிற்குச்} சென்றான்.(1) பிறகு, ருக்மமயமாக {தங்க மயமாக} இருக்கும் மஹத்தான ஷரவணத்தைக் கண்டான். அஃது, இரண்டாவது பாஸ்கரனை {சூரியனைப்} போல ஒளிக் கதிர்களின் வலைப்பின்னல்களால் சூழப்பட்டிருந்தது.(2) அவன், அந்த பர்வதத்தின் மீதேறி ரம்மியமானதொரு வனாந்தரத்தை {காட்டுப் பகுதியைக்} கடந்து சென்றான். பிறகு, ராமா, அங்கேயே அந்தப் புஷ்பகம் {புஷ்பக விமானம்} நகராமல் நிற்பதைக் கண்டான்.(3) விருப்பத்தை அறிந்து செல்லக்கூடிய புஷ்பகம் அங்கேயே நிற்பதைக் கண்ட ராக்ஷசேந்திரன், தன் அமைச்சர்கள் சூழ {பின்வருமாறு} சிந்தித்தான்:(4) "என் விருப்பப்படி செல்ல வேண்டிய புஷ்பகம், எதன் நிமித்தம் செல்லாமல் இருக்கிறது? இது பர்வதத்தின் உச்சியில் உள்ள எவனோ ஒருவனின் செயலாகவே இருக்க வேண்டும்" {என்று நினைத்தான்}.(5)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாசேனனே கார்த்திகேயனாவான். குழந்தையாக நாணற்புதரிலேயே அவன் விடப்பட்டான்" என்றிருக்கிறது.
பிறகு, ராமா, புத்திகோவிதனனான {புத்திசாலித்தனத்தில் வல்லவனான} மாரீசன், அவனிடம் {பின்வருமாறு} கூறினான், "இராஜனே, புஷ்பகம் செல்லாததற்குக் காரணம் இல்லாமல் இல்லை.(6) ஒருவேளை இந்தப் புஷ்பகம், தனதனை {குபேரனைத்} தவிர மற்ற எவனுக்கும் வாஹனமாகாதோ, என்னவோ? எனவே, தனாதியக்ஷன் {குபேரன்} இல்லாததால் இஃது இயங்காமல் இருக்கிறதோ, என்னவோ?" {என்றான் மாரீசன்}.(7)
இந்த வாக்கியத்தின் முடிவில், அங்கே கராளனும் {அழகற்ற தோற்றம் கொண்டவனும்}, கிருஷ்ண பிங்களனும் {கரிய பழுப்பு நிறத்தைக் கொண்டவனும்}, வாமனனும் {குள்ள வடிவம் கொண்டவனும்}, விகடனும் {கோமாளி போல் தெரிபவனும்}, முண்டீயும் {மொட்டைத் தலை கொண்டவனும்}, குறுகிய கைகளைக் கொண்டவனும், பலவானுமான நந்தி தோன்றினான்.(8) பவனின் {சிவனின்} அனுசரனானவன் {நந்தி}, அவனை {ராவணனை} அணுகிப் பேசினான். அந்த நந்தீஷ்வரன், இந்தச் சொற்களைத் தயக்கமின்றி ராக்ஷசேந்திரனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(9) "தசக்ரீவா, விலகச் செல்வாயாக. சங்கரர் இந்த சைலத்தில் கிரீடித்திருக்கிறார் {கைலாச மலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்}. சுபர்ணர்கள், நாகர்கள், யக்ஷர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், ராக்ஷசர்கள் {ஆகியோரும்},(10) எங்குமுள்ள அத்தனை பூதங்களும் {உயிரினங்கள் அனைத்தும்} எட்ட இயலாதவாறு இந்தப் பர்வதம் அமைக்கப்பட்டிருக்கிறது" {என்றான் நந்தி}. நந்தியின் இந்தச் சொற்களைக் கேட்டதும், குரோதத்தில் அவனது குண்டலங்கள் {ராவணனின் காதணிகள்} நடுங்கின[2].(11)
[2] சங்கு அமலை உந்திடு தடங்கல்அநந்தசயனம்தனில் இருஞ்செங்கமலையும் திகழ்முகுந்தனும்அயன்தனொடு இருந்திரிபுரம்மங்கழல் செய் சங்கரனும் மங்கையும்மகிழ்ந்து இனிது இருந்த இடம் இத்துங்கமலை என்று இரதம் இங்கு வருகின்றலது தன்றுதிறலோய்.(318)படிக்கு அழிவினைச் செய்மிகுபற்றலர்கள் முப்புரம் நெருப்பின் விழ ஓர்வடிக்கணை தொடுத்தவன் மலைக்குமிசை புட்பகநடக்க அரிது இங்குஅடிக்கு அழிவினைச் செயல் அகப்படுகைநிச்சயம் அகற்று இரதம் என்றுஇடித்து அவன் உரைத்திட இரக்கம் இல்அரக்கன் இது உரைத்து இது செய்தான்.(319)- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 318, 319ம் பாடல்கள், வரையெடுத்த படலம்பொருள்: சங்குகள் ஒலியுடன் நீந்தித் திரியும் பெருங்கடல் பாம்பணையில் பள்ளி கொள்ளும் சிவந்த தாமரையில் இருக்கும் திருமகளும், விளங்கும் திருமாலும், பிரம்மனும், பெரிய திரிபுரம் அழியுமாறு எரித்த சங்கரனும், உமை மங்கையும் மகிழ்ந்து இனிதாக இருந்த இடம் இந்த தூய்மையான மலை என்று எந்தத் தேரும் இங்கு வருவதில்லை, நெருங்கிய வலிமையுடையவனே.(318) பூமியில் உள்ள உயிர்களுக்கு அழிவினை ஏற்படுத்திய பெரும் பகைவர்கள் வந்த முப்புரம், நெருப்பில் பட்டு வேகுமாறு கூரிய அம்பொன்றைத் தொடுத்தவன் {சிவன்} தங்கியுள்ள {கைலாச} மலைக்கு மேல் புஷ்பக விமானம் இயங்குதல் அரிது. அடிக்கு {சிவனின் திருவடிகள் பெருமைக்கு} அழிவினைச் செய்யாதே. செய்தால் நிச்சயம் அகப்படுவாய். எனவே, ரதத்தை இங்கிருந்து அகற்றுவாயாக" என்று {நந்தி} இடித்து உரைத்திட, இரக்கம் இல்லாத அரக்கன் {இராவணன்} இதைச் சொல்லி, இதனைச் செய்தான்.(319)
அவன் {ராவணன்}, ரோஷத்தால் நயனங்கள் {கண்கள்} சிவந்து, புஷ்பகத்திலிருந்து கீழ இறங்கி, "இந்த சங்கரன் எவன்?" என்று கேட்டுவிட்டு, சைலத்தின் அடிவாரத்தை அடைந்தான்.(12) அங்கே அவன் {ராவணன்}, தேவனுக்கு அருகில் நந்தி நிற்பதைக் கண்டான். ஒளிரும் சூலத்தை ஏந்தியிருக்கும் இரண்டாவது சங்கரனைப் போல அவன் {நந்தி} இருந்தான்.(13) அந்த ராக்ஷசன், வானர முகத்துடன் கூடியவனாக அவனை {நந்தியைக்} கண்டு[3], அலட்சியமாகப் புறக்கணித்துவிட்டு, நீர் நிறைந்த மேகத்தைப் போல பரிகாசத்துடன் உரக்கச் சிரித்தான்.(14)
[3] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த உரை, வானரன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. நந்திக்குக் குரங்கு முகம் கிடையாது. அவன் மனித உடலுடன் கூடிய காளையின் முகத்தைக் கொண்டவனாவான். எனவே, இங்கே வானரன் என்பதைக் குரங்கு என்று புரிந்து கொள்ளலாகாது. உண்மையில் வானரன் என்பது ஒரு குறிப்பிட்ட வகை மனிதன் என்றே ஆகும்" என்றிருக்கிறது.
சங்கரனின் மற்றொரு அவதாரமான பகவான் நந்தி, அவன் மீது குரோதம் கொண்டான். பிறகு, அங்கே தோன்றிய தசானனனிடம் {ராவணனிடம் பின்வருமாறு} கூறினான்:(15) "வானர ரூபத்தில் இருக்கும் என்னை நீ அவமதித்தாய். அசனிக்கு {இடிக்கு} ஒப்பான ஒரு சிரிப்பை உதிர்த்துப் பரிகசித்தாய்.(16) எனவே, எனக்கு சமமான வீரியமும், தேஜஸ்ஸும், என்னைப் போன்ற ரூபமும் கொண்ட வானரர்கள், உன் குலத்தின் வத அர்த்தத்திற்காக {உன்னையும், உன் குலத்தையும் அழிப்பதற்காக} உற்பத்தியாவார்கள்.(17) நகங்கள், பற்கள் ஆகியவற்றையே ஆயுதமாகக் கொண்டவர்களாகவும், மனோவேகத்துடன் கலங்கடிக்கும் குரூரர்களாகவும், யுத்தோன்மத்தத்தாலும் {போர்வெறியாலும்}, பலத்தாலும் நிறைந்தவர்களாகவும், ஊர்ந்து செல்லும் சைலங்களைப் போன்றவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.(18) அவர்கள், உன்னுடைய பிரபலமான செருக்கையும், கொழுப்பையும், உன் புத்திரர்கள், அமைச்சர்களுடன் சேர்த்து அழிக்கப் போகிறார்கள்[4].(19) நிசாசரா {இரவுலாவியே}, இப்போதே உன்னைக் கொல்லும் சாத்தியம் எனக்கில்லையா, என்ன? நீ {என்னால்} கொல்லப்பட மாட்டாய். ஏனெனில், நீ ஏற்கனவே உன் கர்மங்களால் {செயல்களால்} கொல்லப்பட்டுவிட்டாய்" {என்றான் நந்தி}.(20)
[4] ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், அடைப்புக்குறிக்குள், "அன்றியும், தேவர்களின் வேண்டுகோளால் ஸ்ரீமகா விஷ்ணு தசரத நந்தனனாய் ஸ்ரீராமனெனப் பெயர்பூண்டு மானிடவுருவமாகத் திருவவதரித்து உன் உயிரையொழிக்கப் போகின்றனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஸ்ரீமகாவிஷ்ணு இராமனாக அவதரிப்பாரென்று இங்கு கூறியது சில புஸ்தகங்களில் காணப்படவில்லை; அதையிங்கெடுத்து இராவணனுக்கு உரைக்க வேண்டுவது அவசியமின்றெனத் தள்ளப்பட்டது போலும். "அந்த ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராகவனாக அவதரித்து வந்தனர் போலு"மென யுத்த காண்டத்தில் இராவணனே கூறுவதனால், இந்த ரகசியம் இராவணனுக்கு முன்பே தெரியுமென்றும், தன்னை ஸம்ஹாரஞ்செய்யவே ஸ்ரீராமன் அவதரித்திருக்கின்றானெனத் தெரிந்தே இராவணன் தான் முக்தியடையும் பொருட்டு ஸீதாபஹரணம் முதலான செய்கைகளைச் செய்தானென்றும் விளங்கின்றமையின், இங்கு அதைக் கூறியது தக்கதே யென்பர் சிலர்" என்றிருக்கிறது.
மஹாத்மாவான அந்த தேவன் இவ்வாறு சொன்னபோது, தேவதுந்துபிகள் முழங்கின, வானத்தில் இருந்து புஷ்ப விருஷ்டி {மலர்மாரி} பொழிந்தது.(21) அந்த மஹாபலவான் {ராவணன்}, நந்தியின் வாக்கியத்தைக் குறித்துச் சிந்தித்தானில்லை {கவலை கொண்டானில்லை}. {கைலாச} பர்வதத்தை அடைந்த தசானனன், இந்த வாக்கியத்தைக் கூறினான்:(22) "நான் சென்று கொண்டிருந்தபோது, எதனால் புஷ்பகத்தின் இயக்கம் தடைபட்டதோ, கோபதே {பசுபதியே}[5], அத்தகைய உனது சைலத்தை நான் வேரோடு பெயர்த்தெடுப்பேன்.(23) எந்தப் பிரபாவத்தினால் பவன் {சிவன்}, நித்தியம் ராஜாவைப் போலக் கிரீடித்திருக்கிறான் {விளையாடிக் கொண்டிருக்கிறான்}? பயஸ்தானத்தை {அச்சந்தரும் ஆபத்தான நிலையை} அடைந்துள்ள அவன் {சிவன்}, அறியப்பட வேண்டியதை {இந்த அச்சம் குறித்து} அறிந்தானில்லை" {என்றான் ராவணன்}.(24)
[5] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோபதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோ என்றால் பசு என்றும், பூமி என்றும் பொருள் கொள்ளலாம். எனவே கோபதி என்பதை பசுக்களின் தலைவன் என்றும், பூமியின் தலைவன் என்றும் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
இராமா, இவ்வாறு கூறிவிட்டு, தன் புஜங்களால் பர்வதத்தை {மலையின் அடியில் தன் கைகளைக் கொடுத்து} அவன் தூக்கினான். அவன் சீக்கிரமாக அதை எடைபோடவும் {குலுக்கவும்} சைலம் அதிர்ந்தது.(25) பர்வதத்தின் அசைவால் தேவகணங்கள் நடுங்கின. அப்போது, பார்வதியும் நடுக்கத்தில் மஹேஷ்வரனைத் தழுவிக் கொண்டாள்.(26) பிறகு, ராமா, தேவர்களில் சிறந்த மஹாதேவனான ஹரன், லீலையாகத் தன் பாதாங்குஷ்டத்தால் சைலத்தை அழுத்தினான் {விளையாட்டாகத் தன் காலின் பெருவிரலால் அந்தக் கைலாச மலையை அழுத்தினான்}.(27) அப்போது, சைலத்தில் இருந்த அவனது புஜங்கள் பீடிக்கப்பட்டன {மலையின் அடியில் இருந்த அவனது கைகள் நசுங்கின}. இராக்ஷசனின் அமைச்சர்கள் அங்கேயே திகைத்து நின்றனர்.(28)
அந்த ராக்ஷசன், தன் புஜங்கள் பீடிக்கப்பட்ட ரோஷத்தில் {கைகள் நசுங்கிய வலியாலும், அவமானத்தால் உண்டான கோபத்தாலும்} மூன்று உலகங்களையும் நடுங்கச் செய்யும் வகையில் திடீரெனக் கதறினான்.(29) யுகக்ஷயத்தில் {யுகங்களின் முடிவில்} தோன்றும் வஜ்ரத்தால் அவன் நசுக்கப்பட்டதைப் போல அவனுடைய அமைச்சர்கள் நினைத்தனர். அப்போது, இந்திரனை முன்னிட்டுக் கொண்டு சென்ற தேவர்களும் தங்கள் பாதையில் தடுமாறினர்.(30) சமுத்திரங்கள் கொந்தளித்தன; பர்வதங்கள் அதிர்ந்தன. யக்ஷர்களும், வித்யாதரர்களும், சித்தர்களும், "இஃது என்ன?" என்று கேட்டனர்.(31)
அவன் அலறிக் கொண்டிருந்தபோது, அவனது மந்திரிகள் அவனிடம் {பின்வருமாறு} கூறினர், "உமாபதியும், நீலகண்டனுமான மஹாதேவனை நிறைவடையச் செய்யும் வகையில் வேண்டுவாயாக.(32) தசானனா, அவனைத் தவிர வேறு சரணத்தை {புகலிடத்தை} நாங்கள் காணவில்லை. அவனையே போற்றித் துதித்து நீ சரணடைவாயாக.(33) கிருபையுடைய சங்கரன், மனம் நிறைந்து உனக்கு அருள்புரிவான்" {என்றனர் ராவணனின் அமைச்சர்கள்}. இவ்வாறு தன் அமைச்சர்களால் சொல்லப்பட்டதும் அவன் விருஷபத்வஜனை {காளைக் கொடியைக் கொண்ட சிவனைப்} போற்றினான்.(34) அந்த தசானனன், சாமத்தின் {சாம வேதத்தின்} பல்வேறு ஸ்தோத்திரங்களால் அவனை வணங்கினான். கதறிக் கொண்டே அந்த ராக்ஷசனுக்கு ஆயிரம் ஆண்டுகளும் கடந்தன.(35)
பிரபுவான மஹாதேவன், பிரீதியடைந்தவனாக சைலத்தின் உச்சியில் நின்றான். இராமா, தசானனனின் புஜங்களை விடுவித்துவிட்டு, அவன் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(36) "தசானனா, உன் வீரியத்தையும், துணிவையும் கண்டு நான் பிரீதியடைந்தேன். சைலத்தால் நசுக்கப்பட்டு நீ கதறியது பயங்கரமாக இருந்தது.(37) இதனால் மூன்று உலகங்களும் அச்சத்தால் கதறின. எனவே, ராஜனே, இனி நீ ராவணன் என்ற நாமத்தால் {கதறச் செய்பவன் என்ற பெயரால்} அறியப்படுவாய்.(38) தேவர்கள், மானுஷர்கள், யக்ஷர்கள், மேலும் ஜகதீதலத்தில் {இவ்வுலகில்} உள்ள பிறரும், லோகராவணனான {உலகங்களைக் கதறச் செய்பவனான} உன்னை ராவணன் என்றே அழைப்பார்கள்.(39) பௌலஸ்தியா, நீ விரும்பும் பாதையில் தயக்கமின்றி செல்வாயாக. இராக்ஷசாதிபதா, நான் உன்னை அனுமதிக்கிறேன். நீ செல்வாயாக" {என்றான் சிவன்}.(40)
இவ்வாறு சொல்லப்பட்டதும் லங்கேசன் ஷம்புவிடம் தானே {பின்வருமாறு} கூறினான், "மஹாதேவா, என்னிடம் நீ பிரீதியடைந்திருந்தால், நான் வேண்டும் வரத்தை எனக்கு அருள்வாயாக.(41) தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள், குஹ்யகர்கள், நாகர்கள் ஆகியோராலும், வலிமைமிக்கவர்களான பிறராலும் அவத்யத்வம் எனக்குப் பிராப்தமானது {மேற்கண்ட இவர்களால் நான் கொல்லப்படாதிருக்கும் நிலை ஏற்கனவே எனக்கு வாய்த்திருக்கிறது}.(42) தேவா, மானுஷ கணங்கள் {மனிதக் கூட்டம்} அற்பமானவை என்றே நான் கருதுகிறேன். திரிபுராந்தகா, பிரம்மனிடம் இருந்து {ஒரு வரத்தின் மூலம்} தீர்க்காயுசு எனக்கு வாய்த்திருக்கிறது.(43) நான் வாஞ்சிக்கும் சஸ்திரத்தையும், {தீர்க்காயுள் குறையாமல்} எஞ்சிய ஆயுசையும் எனக்கு நீ தருவாயாக" {என்று ராவணன் கேட்டான்}. இராவணன் இவ்வாறு சொன்னதும், அந்த சங்கரன் அவனிடம்,(44) பேரொளிமிக்கதும், சந்திரஹாசம் என்று அழைக்கப் படுவதுமான ஒரு கட்கத்தை {வாளைக்} கொடுத்தான். பிறகும் அந்த பூதபதி, எஞ்சிய ஆயுசு முழுவதையும் அவனில் நிலைக்கச் செய்தான்.(45)
சம்பு அதை {வாளை} அவனுக்குக் கொடுத்துவிட்டு, இதைச் சொன்னான், "நீ இதை அவமதிக்கலாகாது. அப்படிப் புறக்கணிக்கப்பட்டால், இஃது என்னிடமே வந்து சேரும்; இதில் சந்தேகமில்லை" {என்றான் சிவன்}.(46)
இவ்வாறே மஹேஷ்வரன் அவனுக்கு ராவணன் என்ற பெயரைச் சூட்டினான். மஹாதேவனை வணங்கிய பிறகு அவன் புஷ்பகத்தில் ஏறினான்.(47) பிறகு, ராமா, மஹீதலமெங்கும் சுற்றித் திரிந்த ராவணன், மஹாவீரியமிக்க க்ஷத்திரியர்களை ஆங்காங்கே துன்புறுத்திக் கொண்டிருந்தான்.(48) அந்த க்ஷத்திரியர்களில் சிலர் தேஜஸ்விகளாகவும், சூரர்களாகவும், யுத்தம் செய்வதில் விருப்பம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவனது ஆணையை மீறுபவர்கள், தங்கள் உற்றார் உறவினர்களுடன் சேர்த்து அழிக்கப்பட்டனர்.(49) 'இந்த ராக்ஷசன் வெல்லப்பட முடியாதவன்' என்பதை அறிந்தவர்கள் பிராஜ்ஞர்களாக {அறிஞர்களாகக்} கருதப்பட்டனர். பலத்தில் செருக்கடைந்திருந்த அந்த ராக்ஷசனிடம் அவர்கள், "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்றனர்.(50)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 016ல் உள்ள சுலோகங்கள்: 50
| Previous | | Sanskrit | | English | | Next |
