Anaranya | Sarga-019 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குச் சென்ற ராவணன்; அனரண்யனைக் கொன்றது; இராவணன் அடைந்த சாபம்...
இராக்ஷசாதிபன் தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, மருத்தனை வென்று, அங்கிருந்து புறப்பட்ட பிறகு, நரேந்திரர்களின் நகரங்களுடன் யுத்தம் செய்ய விரும்பினான்.(1) மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பான வலிமையுள்ள ராஜேந்திரர்களை அணுகிய அந்த ராக்ஷசேந்திரன், "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பீராக.(2) அல்லது, "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறுவீராக. இதுவே என் நிச்சயமாகும் {தீர்மானமாகும்}. இதற்கு முரணாகச் செயல்படுபவர்களுக்கு மோக்ஷம் உண்டாகாது {விடுதலை கிடைக்காது}.(3) தர்ம நிச்சயம் கொண்டவர்களும், அச்சமற்றவர்களும், பிராஜ்ஞர்களுமான பார்த்திபர்களும் {அறிஞர்களுமான மன்னர்களும்}, மஹாபலவான்களான ராஜர்களும் அன்யோன்யம் {ஒருவருக்கொருவர்} ஆலோசனையில் ஈடுபட்டனர். அவர்கள், தங்கள் ரிபு {பகைவன்} அடைந்திருக்கும் வரத்தின் பலத்தை அறிந்து, தாங்கள் வெல்லப்பட்டதாகக் கூறினர்.(4) தாதா {ஐயா, ராமா}, துஷ்யந்தன், ஸுரதன், காதி, கயன், ராஜா புரூரவன் {புரூரவஸ்}[1] உள்ளிட்ட இந்த சர்வ பார்த்திபர்களும், "நாங்கள் வெல்லப்பட்டோம்" என்று கூறினர்.(5)
[1] மஹாபாரதம், ஆதிபர்வம், பகுதி 68 முதல் 74 வரை துஷ்யந்தனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது, காதியின் கதை, மஹாபாரதம், வன பர்வம் 115ம் பகுதியிலும், சாந்தி பர்வம் 49ம் பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளது. கயனின் கதை மஹாபாரதம், துரோண பர்வம், பகுதி 66ல் சொல்லப்பட்டுள்ளது, புரூரவஸின் கதை மஹாபாரதம், ஆதிபர்வம் 75ம் பகுதியிலும், சாந்தி பர்வம் 72, 73ம் பகுதிகளிலும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மஹாபாரதம் நிகழ்வுகள் நடந்ததற்கு, வெகு காலத்திற்கு முன்னர் நிகழ்ந்த கதைகள் இவை. மஹாபாரதப் பாத்திரங்களின் உரையாடலுக்கு நடுவே உதாரணத்திற்காகச் சொல்லப்படும் முன்கதைகளே இவை. இந்த சுலோகமோ, சர்க்கமோ இடைசெருகலாக இல்லாவிட்டால், மேற்கண்ட இந்த ஐவரும் திரேதா யுகத்தில், ராவணன் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர்கள்; அல்லது தசரதனின் சமகாலத்தவர்கள் என்று கொள்ள வேண்டியிருக்கும்.
பிறகு, ராக்ஷசாதிபனான ராவணன், அயோத்யையை அடைந்தான்.(6) சக்ரனால் {இந்திரனால் பாதுகாக்கப்படும்} அமராவதியைப் போல, அஃது {அந்த அயோத்தி நகரம்} அனரண்யனால் பாதுகாக்கப்பட்டது. அந்த புருஷசார்தூலன் {மனிதர்களில் புலியான அந்த அனரண்யன்}, புரந்தரனுக்கு சமமான பலம்வாய்ந்தவனாக இருந்தான்.(7) இராவணன் அந்த ராஜனை அணுகி, "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பாயாக. அல்லது, நான் வெல்லப்பட்டேன்" என்று சொல்வாயாக. இதுவே என் சாசனம் {கட்டளை}" என்றான்.(8)
அயோத்யாதிபதியான அனரண்யன், அந்தப் பாபாத்மாவின் சொற்களைக் கேட்டு, கடுங்குரோதம் கொண்டவனாகி அந்த ராக்ஷசேந்திரனிடம் {பின்வருமாறு} கூறினான்:(9) "இராக்ஷசாதிபதே, நான் உனக்கு யுத்தத்தைத் தருகிறேன். இங்கேயே நிற்பாயாக. இதோ சீக்கிரம் நான் ஆயத்தமாகிறேன். நீயும் அவ்வாறே செய்வாயாக" {என்றான் அனரண்யன்}.(10)
பூர்வத்திலேயே அவன் {அனரண்யன்}, அவனது {ராவணனின்} மஹத்தான பலம் {பெரும்படை} வெற்றிபெற்று வருவதைக் கேட்டிருந்தான். அந்த நரேந்திரனின் பலம் {மனிதர்களில் தலைவனான அந்த அனரண்யனின் படை}, ராக்ஷச வதம் செய்வதற்கு ஆயத்தமாகிப் புறப்பட்டது.(11) அதில் பத்தாயிரம் நாகங்களும் {யானைகளும்}, ஒரு நியுதம் வாஜிகளும் {ஒரு லக்ஷம் குதிரைகளும்}, பல்லாயிரக்கணக்கான ரதங்களும் இருந்தன. பதாதிகளும் {பல்லாயிரக்கணக்கான காலாட்படையினரும்} இருந்தனர்.(12) அவர்கள், தங்கள் பதாதிகளையும், ரதங்களையும் முன்னிட்டு, மஹீயை மறைத்துக் கொண்டு, ரணத்திற்கு {போர்க்களத்திற்குப்} புறப்பட்டுச் சென்றனர். யுத்த விசாரதா, அங்கே உண்டான மஹத்தான யுத்தத்தில்,(13) நிருபதியான அனரண்யனும், ராக்ஷசேந்திரனும் அற்புதமாகத் தோன்றினர். பிறகு, ராவண பலம் {படை} அந்த மஹீபதியின் பலத்தை {பூமியின் தலைவனான அனரண்யனின் படையை} அடைந்தது.(14)
ஹுதத்தின் அனலனுடன் ஹவ்யத்தைப் போல {வேள்வியின் தீயுடன் ஆகுதியைப் போல}, அவை {அனரண்யனின் படைகள்} அனைத்தும் உத்தம விக்ரமத்தை வெளிப்படுத்தி நீண்ட காலம் யுத்தம் செய்த பிறகு அழிவை அடைந்தன.(15) கூட்டத்தினுள் நுழைந்து, பாவகத்தில் {நெருப்பில்} சிக்கிய விட்டிற்பூச்சிகளைப் போல, அவை எரிந்து கொண்டிருப்பதைக் கண்டவன் விரைவில் பின்தங்கிவிட்டான். ஹுதத்தின் அனலனில் ஹவ்யத்தைப் போல {வேள்வியின் தீயில் ஆகுதியைப் போல}, அங்கே அவனது பலம் {படை} அழிந்து போனது.(16) அந்த நரேந்திரன் {மக்களின் தலைவனான அந்த அனரண்யன்}, மஹாபலம் {தன்னுடைய பெரும்படை} அழிந்து போவதைக் கண்டான். அது {அந்தக் காட்சி} நூறு வன ஆபகங்கள் மஹார்ணவத்தை {நூறு காட்டாறுகள் பெருங்கடலை} அடைவதைப் போல இருந்தது.(17) பிறகு அவன், சக்ரதனுவுக்கு {இந்திரனின் வில்லுக்கு} ஒப்பான ஒரு தனுசை எடுத்தான். அந்த நரேந்திரன், குரோதத்தில் மூர்ச்சித்தவனாக ராவணனை அணுகினான்.(18)
அனரண்யனைக் கண்டதும், அவனது {ராவணனின்} அமைச்சர்களான மாரீசன், சுகன், சாரணன், பிரஹஸ்தன் ஆகியோர் {சிங்கத்தைக் கண்ட} மான்களைப் போலச் சிதறி ஓடினர்.(19) அப்போது, இக்ஷ்வாகு குல நந்தனனான அவன் {இக்ஷ்வாகு குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அனரண்யன்}, அந்த ராக்ஷசேந்திரனின் {ராவணனின்} தலையை நோக்கி எண்ணூறு பாணங்களை ஏவினான்.(20) இவ்வாறு அந்த பாணங்கள் பாய்ந்தாலும், மேகங்களிலிருந்து கிரியின் உச்சியில் விழும் நீர்த்தாரைகளைப் போல அவற்றால் அவனுக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.(21) இதனால் குரோதமடைந்த ராக்ஷச ராஜனின் உள்ளங்கையால் தாக்கப்பட்டபோது, அந்த நிருபதி {அனரண்யன்}, தன் ரதத்தில் இருந்து கீழே விழுந்தான்.(22) அந்த ராஜன் நடுங்கியபடியே பூமியில் விழுந்தது, வஜ்ரத்தால் எரிக்கப்பட்ட ஆரண்யத்தின் மரம் விழுவதைப் போலிருந்தது.(23)
அந்த ராக்ஷசன் சிரித்துக் கொண்டே இக்ஷ்வாகுக்களின் பிருத்வீபதியை நோக்கி {பின்வருமாறு} பேசினான், "என்னை எதிர்த்து யுத்தம் செய்து என்ன பலன் அடைந்தாய்?(24) அதிபனே, மூவுலகங்களிலும் என்னுடன் துவந்தம் செய்ய எவரும் இல்லை. போகங்களில் இன்புற்று வந்த நீ, என் பலம் குறித்து கேட்டறிந்தாயில்லை என்று நான் சந்தேகிக்கிறேன்" {என்றான் ராவணன்}.(25)
அவன் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, ராஜன் மந்த ஸுரத்தில் {மெல்லிய குரலில் இந்த} வாக்கியத்தைக் கூறினான், "காலத்தின் வரையறைக்கு அப்பாற்பட்டு {காலத்தை மீறி இப்போது} நான் செய்வதற்கு சாத்தியமானது என்ன?(26) இராக்ஷசா, தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் உன்னால் நான் வெல்லப்படவில்லை. காலத்தின் போக்கால் {வயோதிகத்தால்} நான் வீழ்த்தப்பட்டேன். அதற்கு ஹேதுவான பூதமாக {என் வீழ்ச்சிக்கான காரணக் கருவியாய் மட்டுமே} நீ அமைந்தாய்.(27) பிராணபரிக்ஷயத்தில் {உயிர் போகும் தருணத்தில் இருக்கும்போது}, நான் செய்வதற்கு சாத்தியமாவது என்ன? இராக்ஷசா, யுத்தம் செய்து கொண்டிருக்கும்போதே உன்னால் கொல்லப்பட்டேன். எனினும், நான் முகம் திரும்பினேனில்லை {புறமுதுகிடவில்லை}.(28) இராக்ஷசா, நீ இக்ஷ்வாகு வம்சத்தானை இழிவாகப் பேசிவிட்டாய்[2]. நான் {தானம்} கொடுத்திருந்தால், ஹுதம் {வேள்வி} வளர்த்திருந்தால், நல்ல தபங்களைச் செய்திருந்தால், பிரஜைகளை {குடிமக்களைப்} பாதுகாத்திருந்தால் என் சொற்கள் சத்தியமாகட்டும் {உண்மையாகட்டும்}.(29) மஹாத்மாக்களான இக்ஷ்வாகுக்களின் இந்தக் குலத்தில் தாசரதியாக {தசரதனின் மகனாக} ராமன் என்ற பெயரில் ஒருவன் பிறப்பான். அவனே உன் பிராணன்களைப் பறிப்பான்"[3] {என்றான் அனரண்யன்}.(30)
[2] இந்த சர்க்கத்தின் சுலோகம் எண் 25ல், "போகங்களில் இன்புற்று வந்தவன் என்பதால் நீ என் பலத்தைக் குறித்து அறிந்தாயில்லை" என்று ராவணன் சொன்னதையே, அனரண்யன் தனக்கும், தன் குலத்துக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்பாகக் கருதுகிறான்.
[3] காலத்தினை ஞாலத்தவர் எவரே கடப்பவர்தாம்ஆலக் கொடு மனத்தோய் அவமதித்தாய் என்னை அதனால்கோலத் தசரதராமன் என் குலத்தோன் கொடுங்கணையால்தாலக் குலைபோல் நின்தலை தரைவீழ்கெனச் சபித்தான்.- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 369ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: இவ்வுலகத்தில் காலத்தை வெல்பவர் எவர்? நஞ்சு போன்ற கொடிய மனத்தையுடையவனே, என்னை அவமதித்தாய். அதனால், அழகுடைய தசரதராமன் என்ற என் குலத்தவனின் கொடிய அம்பினால் உன் தலைகள் பனங்காய்க் குலை போல் தரையில் வீழ்க" என்று சபித்தான்.
அந்த சாபம் இட்ட அளவில், நீருண்ட மேகங்களைப் போல தேவதுந்துபிகள் முழங்கின. வானத்திலிருந்து புஷ்பவிருஷ்டி {மலர்மாரி} பொழிந்தது.(31) பிறகு, ராஜேந்திரா {மன்னர்களின் தலைவா, ராமா}, அந்த ராஜா திரிவிஷ்டப ஸ்தானத்தை {சொர்க்கத்தில் உள்ள தன் வசிப்பிடத்தை} அடைந்தான். அந்த நிருபன் {மன்னன்} ஸ்வர்க்கத்தை அடைந்ததும், அந்த ராக்ஷசன் அங்கிருந்து சென்றான்.(32)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 019ல் உள்ள சுலோகங்கள்: 32
| Previous | | Sanskrit | | English | | Next |
