Naradha | Sarga-020 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நாரதரைக் கண்ட ராவணன்; அவரால் தூண்டப்பெற்றது; யமனை எதிர்த்து யமலோகம் சென்ற ராவணன்...
இராக்ஷசாதிபன் பிருத்வியில் இருந்த மர்த்தியர்களை {பூமியில் இருந்த மனிதர்களை} அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது, மேகக் கூட்டத்திற்கிடையில் இருந்த முனிபுங்கவரான நாரதரை அணுகினான்.(1) நிசாசரன் தசக்ரீவன், அவரை வணங்கி, குசலம் விசாரித்து, அவர் வந்ததற்கான காரணத்தையும் கேட்டான்.(2)
மஹாதேஜஸ்வியும், அளவற்ற பிரபையைக் கொண்டவரும், தேவரிஷியுமான நாரதர், அங்கே மேகங்களுக்குப் பின்னால் புஷ்பகத்தில் நின்று கொண்டிருந்த ராவணனிடம் {பின்வருமாறு} கூறினார்:(3) "இராக்ஷசாதிபதே, சௌம்யா, விஷ்ரவஸின் மகனே, நற்குலத்தில் தோன்றியவனே, உன் விக்ரமத்தைக் கண்டு நான் பிரீதியடைகிறேன்.(4) தைத்தியர்களைக் கொன்ற விஷ்ணுவைப் போல, கந்தர்வர்களையும், உரகர்களையும் தாக்கும் உன்னையும், உன் வீரத்தையும் கண்டு நான் நிறைவடைகிறேன்.(5) கேட்பாயெனில், அவசியம் நீ கேட்க வேண்டிய சிலவற்றை நான் உனக்குச் சொல்வேன். இராக்ஷசசத்தமா {ராக்ஷசர்களில் வலிமைமிக்கவனே}, அடுத்து நீ செய்ய வேண்டியதைக் கேட்பாயாக. தாதா {குழந்தாய் / ஐயா}, நான் சொல்வதில் கவனம் செலுத்திக் கேட்பாயாக.(6)
தாதா, தைவதைகளாலும் {தேவர்களாலும்} வதைக்கப்பட முடியாதவனான நீ, இவர்களை {மனிதர்களை} ஏன் கொல்கிறாய்? இவ்வுலகம் {இவ்வுலககத்தினர்} எப்போது மிருத்யு {மரண} வசத்தை அடைந்ததோ, அப்போதே வதமடைந்துவிட்டது {அழிவடைந்துவிட்டது}.(7) தேவ, தானவ, தைத்திய, யக்ஷ, கந்தர்வ, ராக்ஷசர்களால் வதைக்கப்பட முடியாதவனான நீ, உலகைத் துன்புறுத்துவது தகாது.(8) எது சிறந்தது என்பதில் நித்யம் குழப்பமடைந்து, மஹத்தான விசனங்களால் {துன்பங்களால்} சூழப்பட்டு, ஜரையாலும் {முதுமையாலும்}, நூற்றுக்கணக்கான வியாதிகளாலும் நிறைந்த இத்தகைய உலகத்தை {உலகத்தினரை} எவன் அழிப்பான்?(9) எங்கேயும், எவனும், அந்தந்த அனிஷ்ட உபகமங்களால் {பல்வேறு வகையான விரும்பத்தகாத நிகழ்வுகளால்} இடைவிடாமல் பாதிக்கப்படும்போது, மானுஷலோகத்தில் {மனிதர்களின் இவ்வுலகில்} எந்த மதிமான் யுத்தம் செய்வதில் விருப்பம் கொள்வான்?(10) தைவத்தால் ஹதம் செய்யப்பட்டு {விதியால் அழிக்கப்பட்டு}, பசி, தாகம், ஜரை {முதுமை} முதலியவற்றால் சுருங்கி, விசாதத்திலும் {கவலையிலும்}, சோகத்திலும் மூழ்கியிருக்கும் உலகத்தை {உலகத்தினரை} நீ அழிக்காதே[1].(11)
[1] போரார் வெஞ்சிலை அரக்க பொருள் அல்லாநரியோடும் பொருமோ சீயம்தீராத தீவினையால் அடர்ப்புண்டுதிண்பசி நோய் மூப்பின் நொந்துசோரா இம்மானுடரைத் தொடர்ந்து அடர்ந்தாய்எனக் கேட்டோம் துன்னார் போரில்பேராத நிலையுடையோய் பிணம் வெட்டிவாள் முறித்துப் பெறும் பேறு உண்டோ- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 372ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: போர்த்திறன்மிக்க கொடிய வில்லை ஏந்தியவனே {ராவணா}, மதிக்கப்படாத நரியோடு சிங்கம் போரிடுமோ? நீங்காத தீவினையால் பீடிக்கப்பட்டும், பசியினாலும், நியோனாலும், மூப்பினாலும் வருந்தியும் சோர்வுறாமல் வாழும் இம்மனிதர்களைத் தொடர்ந்து அவர்களுடன் போரிடுகிறாய் எனக் கேட்டேன். போரில் பின்னிடாத் திண்ணிய நிலை உடையவனே, உயிர் நீங்கிய பிணத்தை வெட்டி வாளை முறித்துக் கொள்வதால் நீ பெறும் பேறு ஏதேனும் உண்டோ?
இராக்ஷசேஷ்வரா, மஹாபாஹு, சற்றே இந்த மானுஷனைப் பார்ப்பாயாக. அறியாமையில் மூழ்கி, விசித்திர அர்த்தங்களுடன் {எண்ணங்களுடன்} கூடிய எவனும் தன் கதியை அறிந்து கொள்கிறானில்லை.(12) சில இடங்களில், மகிழ்ச்சியுடன் கூடிய ஜனங்கள், வாத்தியங்களின் இசையையும், நடனத்தையும் சேவிக்கின்றனர் {அனுபவிக்கின்றனர்}. வேறு சில இடங்களில் துன்புறும் பிறர், நயன, ஆனனங்களில் {கண்களிலும், முகங்களிலும்} கண்ணீர்த் தாரைகளுடன் அழுது கொண்டிருக்கின்றனர்.(13) மாதா, பிதா, சுதன் {தாய், தந்தை, பிள்ளை} மீதான சினேகத்தினாலும், பாரியை {மனைவி}, பந்துக்களிடம் {உறவினர்களிடம்} கொண்ட மனப்பற்றினாலும் மோஹமடையும் இந்த ஜனங்கள், தங்கள் கிலேசத்தை புத்தியில் கொள்ளாமல் அழிவை நோக்கிச் செல்கிறார்கள்.(14) மோஹத்தால் வீழ்ந்து கிடக்கும் உலகத்தை இப்படித் துன்புறுத்தியது போதும். சௌம்யா, மர்த்தியலோகம் {இந்த மனித உலகம்} உன்னால் வெல்லப்பட்டது. இதில் சந்தேகமில்லை.(15) இவர்கள் அனைவரும் அவசியம் யமசானத்தை அடைவார்கள் {யமனின் இருப்பிடத்திற்குச் செல்வார்கள்}. எனவே, பரபுரஞ்ஜயா {பகைவரின் நகரங்களை வெல்பவனே}, பௌலஸ்தியா, யமனை அடக்குவாயாக.(16) அவன் வெல்லப்பட்டால், அனைத்தும் வெல்லப்பட்டதாகும். இதில் சந்தேகமில்லை." {என்றார் நாரதர்}.
இவ்வாறு {நாரதரால்} சொல்லப்பட்டதும், தன் சொந்த தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த லங்கேசன் {ராவணன்}, புன்னகைத்தபடியே அங்கிருந்த நாரதரை வணங்கிவிட்டு, அவரிடம் {பின்வருமாறு} கூறினான்:(17) "மஹரிஷியே, தேவ, கந்தர்வர்களுடன் தடையின்றி திரிபவரே, சமரபிரியரே {போரை விரும்புகிறவரே}, ரசாதலத்தை {பாதாள லோகத்தை} வெற்றி கொள்ளும் பொருட்டுச் செல்லவே நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.(18) மூன்று உலகங்களையும் வென்று, நாகர்களையும், ஸுரர்களையும் {தேவர்களையும்} வசப்படுத்திய பிறகு, அமிர்தத்தைப் பெறும் பொருட்டு, ரசாலயத்திலுள்ள சமுத்திரத்தை மீண்டும் கடையப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(19)
அப்போது, பகவானான நாரத ரிஷி, தசக்ரீவனிடம் {பின்வருமாறு} கூறினார், "எனில், நீ வேறு மார்க்கத்தில் செல்லப்போகிறாய். அஃது எங்கே?(20) உண்மையில் பிரேதராஜபுரத்தை {பிரேதங்களின் ராஜனான யமனின் நகரத்தை} நோக்கிச் செல்லும் இது செல்வதற்கரியதாகும். அமித்ரகர்ஷனா {பகைவரை ஒடுக்குபவனே}, யமனுக்குரிய இந்த மார்க்கமே வெல்வதற்கரியதுமாகும்" {என்றார் நாரதர்}.(21)
அந்த தசானனன், சரத்கால வெண்மேகம் போல் ஒளிரும் ஒரு சிரிப்பை உரக்க உதிர்த்து, "முடிந்தது" என்று கூறிய பிறகு, {பின்வரும்} இந்த வசனத்தையும் சொன்னான்:(22) "எனவே, பிராமணரே, இவ்விதம் நான் வைவஸ்வதனை வதம் செய்யும் {யமனைக் கொல்லும்} ஆயத்தத்துடன், எங்கே சூரியாத்மஜன் நிருபனாக {சூரியனின் மகனான யமன் ஆட்சியாளனாக} இருக்கிறானோ, அந்த தக்ஷிணத்தை {தென்பகுதியை / தென்திசையை} நோக்கிச் செல்லப் போகிறேன்.(23) பகவானே, போரை விரும்புகிறவனான நான், குரோதத்துடன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன். பிரபோ, 'லோகபாலர்கள் நால்வரையும் முற்றாக வெல்வேன்' என்று {ஏற்கனவே வஞ்சினம் உரைத்திருக்கிறேன்}.(24) எனவே, பிரேதராஜபுரம் நோக்கி இதோ புறப்பட்டேவிட்டேன். பிராணிகளுக்கு {உயிரினங்களுக்குப்} பெரும் துன்பத்தை விளைவிப்பவனுக்கு மிருத்யுவை {யமனுக்கு மரணத்தை} விதிக்கப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(25)
இவ்வாறு கூறிய தசக்ரீவன், அந்த {நாரத} முனிவரை வணங்கிவிட்டு, தக்ஷிணத்தை {தென்திசையை} நோக்கிப் புறப்பட்டுச் சென்று, தன் மந்திரிகள் சகிதனாக பிரவேசித்தான்.(26) மஹாதேஜஸ்வியான நாரதரோ, ஒரு முஹூர்த்தம் தியானத்தில் ஆழ்ந்தார். விப்ரேந்திரரான அவர், தூமமற்ற பாவகனைப் போல {அந்தணர்களில் சிறந்தவரான நாரதர், புகையற்ற நெருப்பைப் போலப் பின்வரும்} சிந்தனையில் ஆழ்ந்தார்:(27) "இந்திரனுடன் கூடிய மூன்று உலகங்களையும், சராசரங்களையும் {அசைவன, அசையாதனவற்றையும் அதனதன்} ஆயுள் தீர்ந்ததும் ஒடுக்குபவன் எவனோ, அத்தகையவனும், தர்மத்திற்கு இணங்குபவனுமான காலனை வெல்வது எங்ஙனம்?(28) எவன், தன்னால் கொடுக்கப்பட்டதற்கும் {கொடுக்கப்பட்ட தானங்களுக்கும்}, செய்யப்பட்டதற்கும் {செய்யப்பட்ட நல்வினை, தீவினைகளுக்கும்} சாக்ஷியாக இரண்டாவது பாவகனை {நெருப்பைப்} போல இருக்கிறானோ, எந்த மஹாத்மாவால் உலகத்தினர் விழிப்புணர்வை அடைந்து, வெற்றியடைய முயல்கிறார்களோ,(29) எவனால் நித்யம் மூவுலகத்தினரும் பயத்தால் பீடிக்கப்பட்டு ஓடுகின்றனரோ, அவனிடம் {அத்தகைய யமனிடம்} எப்படி இந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்} தானே நேரடியாகச் செல்ல முற்படுகிறான்.(30) எவன், நன்மை, தீமைகளுக்கான விதாதாவாகவும் {பலன்களை அளிப்பவனாகவும்}, தாதாவாகவும் {அவற்றை நடத்துபவனாகவும்} இருக்கிறானோ, எவனால் மூன்று உலகங்களும் வெல்லப்படுகின்றனவோ, அத்தகையவனை எப்படி {ராவணன்} வெல்லப் போகிறான்?(31) இருப்பினும், இவன் வேறு என்ன விதத்தில் செயல்பட்டு, நிலைநிற்கப் போகிறான் என்ற கௌதூஹலத்தால் யமசாதனத்திற்கு {பேரார்வத்தால் தூண்டப்பட்டவனாக யமனின் இருப்பிடத்திற்கு} நான் செல்லப் போகிறேன்.(32) அன்யோன்யம் யமராக்ஷசர்களுக்கிடையில் {யமன், ராக்ஷசன் ராவணன் ஆகியோர் இருவருக்குமிடையில்} நடக்கப் போகும் கடும் மோதலை நான் நேரடியாகவே காணப் போகிறேன்" {என்று நினைத்தார் நாரதர்}.(33)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 020ல் உள்ள சுலோகங்கள்: 33
| Previous | | Sanskrit | | English | | Next |
