Mahishmati and Narmada | Sarga-043 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கார்த்தவீரியனுடன் போரிட மாஹிஷ்மதி சென்ற ராவணன்; அவனில்லாததைக் கண்டு விந்திய மலையின் அருகில் உள்ள நர்மதையை அடைந்தது. ராவணன் செய்த சிவபூஜை...
பிறகு, மஹாதேஜஸ்வியான ராமன் வியப்படைந்து, மீண்டும் வணங்கிவிட்டு, ரிஷிசத்தமரான {முனிவர்களில் முதன்மையானவரான} அகஸ்தியரிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்.(1) "பகவானே, துவிஜோத்தமரே {இருபிறப்பாளர்களில் உயர்ந்தவரே}, எப்போது முதல் மேதினியைக் குரூர ராக்ஷசன் {ராவணன்} சுற்றித் திரிந்தானோ, அப்போது {முதல்} உலகங்கள் சூனியமாகவே {வெறுமையாகத்தான்} இருந்தனவா என்ன?(2) அப்போது இங்கே {பூமியில்} ராஜாவோ, ராஜாவுக்கு இணையானவனோ எவனொருவனுமே இல்லையா என்ன? இராக்ஷஸேஸ்வரனான ராவணன் எதனால் {எவ்விடத்திலும்} அவமானத்தை {செருக்கொழிந்து தோல்வியை} அடையவே இல்லை?(3) அல்லது பிருத்வியை {பூமியை} ஆள்பவர்கள் வீரியம் இழந்தே விட்டார்களா? மேலும், பல நிருபர்கள் {அரசர்கள்} சிறந்த அஸ்திரங்களால் {யுத்த களத்திலிருந்து} துரத்தப்பட்டவர்களாக முற்றிலும் வெல்லப்பட்டனரா?" {என்று கேட்டான் ராமன்}.(4)
இராகவனின் சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, பகவானான அகஸ்திய ரிஷி, பிதாமஹன் ஈஸ்வரனை {பிரம்மன் சிவனை நோக்கிப் புன்னகைப்பது} போலப் புன்னகைத்தபடியே ராமனிடம் {பின்வருமாறு} சொன்னார்:(5) "பார்த்திபரிஷபா {அரசர்களில் காளையே}, ராமா, பிருத்வீபதே {பூமியின் தலைவா}, இவ்விதமாகவே, பார்த்திபர்களை {மன்னர்களைத்} துன்புறுத்திக்கொண்டே ராவணன் பிருத்வியில் சுற்றித் திரிந்தான்.(6) பிறகு, எங்கே வஸுரேதஸின் சாந்நித்தியம் {அக்னிதேவனின் நேரடி இருப்பு} எப்போதும் இருக்கவே செய்ததோ, {அந்த} சொர்க்கபுரிக்கு இணையான பிரபையையுடைய {ஒளியையுடைய}, மாஹிஷ்மதி[1] என்ற பெயருடைய நகரை {ராவணன்} வந்தடைந்தான்.(7) எங்கே அந்த வஸுரேதஸின் பிரபாவத்தினால் {அக்னிதேவனுடைய ஆற்றலால்}, அக்னிக்கு இணையான நிருபனே {அரசனே} இருந்தானோ, {அங்கே அந்த அரசன்} அர்ஜுனன் என்ற பெயருடையவனிடம், எப்போதும் அக்னி ஹோம குண்டத்தில் துயில் கொண்டிருந்தான்.(8) அப்போது, அதே நாளிலேயே[2], பலசாலியும், ஹைஹயாதிபதியும், ஈஸ்வரனுமான {தலைவனுமான} அந்த அர்ஜுனன், ஸ்திரீகள் சஹிதனாக {தன் அந்தப்புரப் பெண்களுடன்} நர்மதையில் இன்புறச் சென்றிருந்தானோ.(9)
[1] ஹரிவம்சம், ஹரிவம்ச பர்வம் பகுதி 33ல், 4ம் சுலோகத்தில், மன்னன் மஹிஷ்மானால் மாஹிஷ்மதி நகரம் அமைக்கப்பட்ட குறிப்பிருக்கிறது. தற்காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் நர்மதை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மஹேஸ்வர் (Maheshwar) என்ற இடமே அன்று கார்த்தவீரிய அர்ஜுனன் ஆண்ட புகழ்பெற்ற 'மாஹிஷ்மதி' நகரமாகும். புராண காலத்தில் அவந்திக்கு அருகில் இருந்த சேதி நாட்டின் தலைநகரம் இந்த மாஹிஷ்மதி. மஹாபாரதக் காலத்தில் சிசுபாலன் இங்கே ஆட்சி செய்தான்.
[2] இராவணன் மாஹிஷ்மதி நகரை அடைந்த அதேநாளில் கார்த்தவீரிய அர்ஜுனன் தன் அந்தப்புரத்துப் பெண்களுடன் சேர்ந்து இன்புற்றிருக்க நர்மதை ஆற்றுக்குச் சென்றிருந்தான்.
பிறகு, அதே நாளிலேயே, ராக்ஷசேந்திரனான ராவணன் அங்கே {மாஹிஷ்மதி} வந்தடைந்தான். அந்த ராவணனோ, அவனுடைய {மன்னன் அர்ஜுனனுடைய} அமைச்சர்களிடம் {பின்வருமாறு} கேட்டான்:(10) "நிருபதி அர்ஜுனன் எங்கே? சீக்கிரமாக, சரியாக {உண்மையாக} உரைக்கக் கடவீர். நான் ராவணன். நரர்களில் சிறந்தவனுடன் யுத்தத்தை விரும்பியே வந்திருக்கிறேன் {மனிதர்களிற் சிறந்த உங்கள் அரசன் அர்ஜுனனிடம் போர் புரியும் ஆவலுடன் இங்கே வந்திருக்கிறேன்}. எனது வருகையும்கூட {அவனிடம்} முன்னதாகவே உங்களால் அறிவிக்கப்படட்டும்" {என்றான் ராவணன்}.(11)
இவ்விதமாக ராவணனால் கூறப்பட்டதும், மிகச் சிறந்த அறிஞர்களான அந்த அமைச்சர்கள், மஹீபதி அங்கில்லாததை ராக்ஷசபதியிடம் உரைத்தனர் {பூமியை ஆளும் அரசன் அர்ஜுனன் அங்கில்லாததை ராக்ஷசர்களின் தலைவனான ராவணனிடம் உரைத்தனர்}.(12)
விஸ்ரவஸின் புத்திரன் {ராவணன்}, அர்ஜுனன் {வெளியே} சென்றிருப்பதை அந்நகரத்து மக்களிடம் {குடிமக்களிடம் / அமைச்சர்களிடம்} கேட்டுவிட்டு, {அங்கிருந்து} புறப்பட்டு, ஹிமவத்துக்கு {இமயமலைக்கு} இணையான விந்திய கிரியை {விந்திய மலையை} வந்தடைந்தான்.(13) அந்த ராவணன், ஆகாயத்தை முட்டுவது போலவும், மேதினியிலிருந்து மேலெழுவது போலவும், மேகக்கூட்டங்களை ஆக்கிரமித்து {சூழ்ந்து} நிற்பது போலவும் {விளங்கிய} அந்த விந்தியனை {விந்திய மலையைப்} பார்த்தான்.(14) ஆயிரக்கணக்கான சிகரங்களைக் கொண்டதும், சிங்கங்கள் வசிக்கும் குகைகளுடன் கூடியதும், அருவிகளிலிருந்து விழும் நீரால் {ஏற்படும் சத்தத்தால்}, உரத்த அட்டஹாசத்துடன் {சிரிப்புடன்} கூடிய கடலைப் போன்றதும்,(15) மிக உயர்ந்த சிகரங்களைக் கொண்டதும், தேவ, தானவ, கந்தர்வர்களாலும், அப்சரஸ் கணங்களாலும், கின்னரர்களாலும், மேலும் தங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் {மனைவிகளுடன்} விளையாடிக் கொண்டிருப்பவர்களாலும் சொர்க்கமாகவே மாறியதும் {விளங்கியதும்},(16) பெருகியோடும் நதிகளாலும், ஸ்படிகத்துக்கு ஸமமான ஜலத்தாலும் {தூய்மையான நீராலும்}, அசையும் நாக்குகளையும், படங்களையும் {தலைகளையும்} கொண்ட அனந்தனை {ஆதிசேஷனைப்} போலவே {அந்த விந்தியம்} அசைவற்று நின்று கொண்டிருந்தது.(17)
பிறகு ராவணன், ஆகாயத்தை நோக்கி {உயரத்} தாவி எழுவதும், பல்வேறு குகைகளைக் கொண்டதும், ஹிமவத்துக்கு {இமயமலைக்கு} இணையானதுமான அந்த விந்திய கிரியைப் பார்த்துக் கொண்டே, நர்மதையை நோக்கிச் சென்றான்.(18) அசையும் {உருளும்} கற்களைக் கொண்ட ஜலத்தை {நீரைக்} கொண்டவளும், புண்ணியமானவளும், மேற்குக் கடலை நோக்கிப் பாய்பவளும்,(19) வெயிலின் உஷ்ணத்தால் {வெப்பத்தால்} வாடியவையும், தாகம் கொண்டவையுமான மஹிஷங்களாலும் {எருமைகளாலும்}, காட்டு மான்களாலும், சிங்கங்களாலும், சிறந்த சார்தூலங்கள் {புலிகள்}, ரிக்ஷங்கள் {கரடிகள்}, கஜங்களாலும் {யானைகளாலும்} கலக்கப்பட்ட நீர்த்துறையைக் கொண்டவளும்,(20) சக்ரவாகங்களாலும் {அன்றில் பறவைகளாலும்}, காரண்டவங்களுடனும் {நீர்க்காகங்களுடனும்}, ஹம்ஸங்கள் {அன்னப்பறவைகள்}, நீர்க்கோழிகளுடனும், மேலும் எப்போதும் மதம் கொண்டு, அழகாகக் கூவிக் கொண்டிருக்கும் ஸாரஸங்களாலும் {செங்கால் நாரைகளாலும்} முழுமையாகச் சூழப்பட்டவளும்.(21) மலர்ந்த மரங்களால் தலைச்சூடியவளும், சக்ரவாகங்களின் இணையையே {அன்றில் ஜோடிகளை} ஸ்தனங்களாகக் கொண்டவளும், பரந்த மணல் திட்டுகளையே இடையாகக் கொண்டவளும், ஹம்சங்களின் {அன்னப்பறவைகளின்} வரிசையையே அழகிய மேகலையாகக் கொண்டவளும்,(22) புஷ்பங்களின் மகரந்தப் பொடிகள் {பூந்தாதுக்கள்} பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவளும், ஜலத்தின் நுரைகளையே தூய்மையான வெண்கச்சையாகக் கொண்டவளும், ஜலத்தில் இறங்கி மூழ்குவதால் {அலாதியான} சுகமான ஸ்பரிசத்தை {தீண்டுதலைத்} தருபவளும், மலர்ந்த உத்பலங்களையே {கருநெய்தல்களேயே} சுபமான கண்களாகக் கொண்டவளும், ஸரிதங்களில் {ஆறுகளில்} சிறந்தவளுமான அந்த நர்மதையை {கண்டு},[3] புஷ்பக {விமானத்தில்} இருந்து உடனே இறங்கினான் {நர்மதையான அவளை நெருங்கினான்}.(23) அந்தத் தசாநனன், இஷ்டத்திற்குரிய சிறந்த நாரியை {பெண்ணைப்} போலத் தழுவி {அவளுக்குள் இறங்கி மூழ்கி}, பல்வேறு முனிவர்களால் சேவிக்கப்பட்ட அவளுடைய {அந்த நர்மதையின்} ரம்யமான மணல் திட்டுகளில் {அமர்ந்தான்}.(24) பிறகு, ராக்ஷசபுங்கவனான {ராக்ஷசர்களில் முதன்மையான} அந்த ராவணன், தன் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்களுடன் சேர்ந்து, "இவள் கங்கையே" என்று நர்மதையைப் புகழ்ந்துரைத்தான்.(25)
[3] ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டம், கார்த்தவீரியார்ச்சுனப் படலம், 586ம் பாடல் நர்மதையின் அழகை பின்வருமாறு வர்ணிக்கிறது.இன்னமாமலையின் எழிலினை நோக்கிஇராவணன் எழில்நுரை ஆடைமன்னிய காஞ்சி திகழ்வரை அல்குல்வஞ்சிநேரிடை சுழி உந்திபொன் அணி ஆரம் புளினம் என் கொங்கைபொருகயல் கண் அறல் கூந்தல்அன்னமென் நடைசேர் நருமதை என்னும்அரிவையைத் தெளிவுறக் கண்டான்.பொருள்: இத்தன்மையான {விந்திய} மலையின் அழகினைப் பார்த்த பின்பு, ராவணன் அழகிய நுரையாகிய புடவையையும், நிலைபெற்ற காஞ்சி {மரம்} விளங்குகின்ற பக்கமலையாகிய அல்குலையும், வஞ்சிக் கொடியாகிய நுண்ணிய இடையினையும், நீர்ச்சுழியாகிய உந்தியையும், மலையிலுள்ள பொன்னாலான அழகிய ஆரத்தையும், மணற்குன்றுகளாகிய கொங்கைகளையும், ஒன்றோடொன்று போர்புரியும் கயல்களான கண்களையும், கருமணலாகிய கூந்தலையும், அன்னங்களின் நடையாகிய மென்னடையையும் கொண்ட நருமதை என்னும் நங்கையைத் தெளிவாகப் பார்த்தான்.
நர்மதையின் தரிசனத்தில் பிறந்த மகிழ்ச்சியை அடைந்த ராக்ஷசாதிபன் {ராவணன்}, அங்கே விளையாட்டாக, சுகன், சாரணன் {ஆகிய இரு} அமைச்சர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(26) "இந்த சூரியன் {தன்} ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களால் ஜகத்தைக் காஞ்சனமயமாகவே மாற்றிவிட்டு, கொடும் வெப்பத்தை வெளியிடுபவனாக, நபத்தின் மத்தியப் பகுதியை {உச்சிவானத்தை} முழுமையாக வந்தடைந்திருக்கிறான்.(27) என்னை (பூஜையில்) வீற்றிருப்பவனாக அறிந்த உடனேயே, திவாகரன் {இந்த சூரியன், தன் கொடும் வெப்பத்தை மாற்றி} சந்திரனைப் போல {குளிர்ச்சியானவனாக} மாறுகிறான்.(28) மேலும், நர்மதையின் ஜலத்தால் குளிர்ச்சியடைந்தவனும், சுகந்தனும் {நறுமணமிக்கவனும்}, சிரமத்தை {களைப்பைப்} போக்குபவனுமான அநிலனுங்கூட (காற்றான வாயுவுங்கூட), என் மீதான பயத்தால் இதோ இவ்விடத்தில் சமாஹிதத்துடன் {மிகுந்த அடக்கத்துடன்} வீசுகிறான்.(29) மேலும் கூட, ஸரித்துகளுள் {ஆறுகளில்} சிறந்தவளும், நர்ம வர்தினியுமான {பேரின்பத்தைப் பெருக்குபவளுமான} நர்மதை, தன் முதலைகள், மீன்கள், பறவைகள், அலைகளுடன், {என் மீதான பயத்தால்} அச்சமடைந்த அங்கனையை {பெண்ணைப்} போல {அசையாமல்} நிற்கிறாள்.(30) அப்படியிருக்க, யுத்தகளத்தில் இந்திரனுக்கு சமமான நிருபர்களின் சஸ்திரங்களால் {அரசர்களின் ஆயுதங்களால்} காயப்படுத்தப்பட்டு, சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டது போல, உதிரத்தால் {நீங்கள் அனைவரும்} முழுமையாக நனைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.(31) அத்தகைய நீங்கள் அனைவரும், மதங்கொண்டவையும், மஹாபத்மம் {பெரும் தாமரை}[4] போன்ற முகங்களைக் கொண்டவையுமான மஹாகஜங்கள் {பெரும் யானைகள்} கங்கையில் {இறங்குவது} போல, சுபமானவளும், அமைதியும், இன்பமும் தருபவளுமான நர்மதையில் {நர்மதை ஆற்றில்} இறங்கி நீராடுவீராக. இந்த மஹாநதியில் நீராடிவிட்டு உங்களது பாபங்களை முழுமையாகப் போக்கிக் கொள்வீராக.(32) நானும் கூட, இன்று, சரத் காலத்து இந்துவின் {சந்திரனின்} ஒளிக்கு சமமான பிரபை பொருந்திய இந்த மணற்பரப்பில், கபர்திக்குரிய புஷ்ப உபஹாரத்தை {ஜடாமுடியைத் தரித்த சிவனுக்குரிய மலர் வழிபாட்டை} மெதுவாக {மிகுந்த கவனத்துடன்} செய்யப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(33)
[4] 'மஹாபத்ம-முகாஃ' என்ற சொல்லுக்கு 'மகாபத்மம் போன்ற முக அமைப்பு' என்றும் பொருள் கொள்ளலாம். அதே சமயம், யானைகளைப் பற்றிப் பேசும்போது 'மகாபத்மம்' என்பது அஷ்டதிக்கஜங்களில் {எட்டு திக்கு யானைகளில்} ஒரு புகழ்பெற்ற திக்குயானையின் பெயராகும். எனவே, 'மகாபத்மம் என்னும் திக்குயானையின் வம்சத்தைச் சேர்ந்த' என்ற பொருள்பட 'மஹாபத்ம வம்சத்தைச் சேர்ந்தவையுமான' என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்.
இராவணனால் இவ்வாறு கூறப்பட்ட பிரஹஸ்த, சுக, சாரணர்களுடனும், மஹோதர, தூம்ராக்ஷர்களுடனும் கூடிய பிறரும் {பிற ராக்ஷசர்களும்} நர்மதையில் {நீராடுவதற்காக} இறங்கினர்.(34) அத்தகைய ராக்ஷசேந்திர கஜங்களால் {யானை போன்ற ராக்ஷசவீரர்களால்}, நர்மதா நதியானது, வாமனன், அஞ்சனன், பத்மன் முதலான மஹாகஜங்களால் {மாபெரும் திக்குயானைகளால் கலக்கப்படும்} கங்கையைப் போலப் பெரிதும் கலக்கப்பட்டது.(35) மகாபலவான்களான அந்த ராக்ஷசர்கள் நர்மதையில் நீராடிய பிறகு, கரையேறி, ராவணனுடைய பலி வழிபாட்டிற்காக {சிவபூஜைக்காக}[5] புஷ்பங்களைக் கொண்டு வந்தனர்.(36) மனத்திற்கு இனியதும், வெண்மேகத்தின் ஒளிக்கு நிகரான பிரபையை {பிரகாசத்தைக்} கொண்டதுமான அந்த நர்மதையின் மணற்பரப்பில், ஒரு முஹூர்த்தத்திற்குள் புஷ்பமயமான கிரியே {மலர்களாலேயே ஆன ஒரு மலையே} அந்த ராக்ஷசர்களால் குவிக்கப்பட்டது {உருவாக்கப்பட்டது}.(37)
[5] 33ம் சுலோகத்தில் கபர்திக்குரிய புஷ்ப உபஹாரத்தை கவனத்துடன் செய்யப் போவதாக ராவணன் சொல்கிறான். அதனால் இங்கே அடைப்புக்குறிக்குள் சிவபூஜை என்று கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு புஷ்பங்கள் குவிக்கப்பட்டதும், ராக்ஷசேஷ்வரனான ராவணன், மஹாகஜம் {மாபெரும் யானை} கங்கையில் {இறங்குவதைப்} போல, நீராடுவதற்காக {நர்மதை} நதியில் இறங்கினான்.(38) அந்த ராவணன், அங்கே {அந்த நர்மதையாற்றில் சாஸ்திர} விதிமுறைகளின்படி நீராடிவிட்டு, மிகவுயர்ந்த ஜபத்தை {மஹாமந்திரத்தை} ஜபித்து முடித்துவிட்டு, அந்த நர்மதையின் நீரிலிருந்து கரையேறினான்.(39) பிறகு, ஈரமான அம்பரத்தை {உடையைக்} களைந்துவிட்டு, வெண்ணிற ஆடைகளை உடுத்தி, கைகளைக் கூப்பிக் கொண்டு {பூஜை நடக்கும் இடத்தை நோக்கிச்} செல்லும் ராவணனை, சர்வ ராக்ஷசர்களும் பின்தொடர்ந்து சென்றனர்.(40) இராக்ஷசேஷ்வரனான ராவணன் எங்கெங்கே செல்கிறானோ, ஆங்காங்கே அவனுடைய இயக்கத்திற்கு வசப்பட்டவர்களாக, வடிவெடுத்து வந்த அசலங்களை {மலைகளைப்} போன்றவர்கள் {அந்த ராக்ஷசர்கள்}, ஜாம்பூநதமயமான லிங்கத்தை[6] {தூய பொன்னாலான சிவலிங்கத்தை அவனுடன் கூடவே} சுமந்து சென்றனர்.(41)
[6] ஜாம்பூநதமயம்: 'ஜாம்பூநதம்' என்பது பிரபஞ்சத்தின் மிகத் தூய்மையான, தெய்வீகத் தங்கத்தைக் குறிக்கும். புராணங்களின்படி, மேரு மலையின் உச்சியில் உள்ள பிரம்மாண்டமான ஜம்பூ (நாவல்) மரத்தின் பழச்சாறு நதியாக ஓடி, அங்கிருக்கும் மண்ணுடன் கலந்து இயற்கையிலேயே முற்றிலும் மாசற்ற, அக்னி போன்ற பிரகாசமிக்க பொன்னாக மாறுகிறது. ஜம்பூ நதியில் தோன்றுவதால் இதற்கு 'ஜாம்பூநதம்' என்று பெயர். இராவணன் வழிபாட்டிற்காக எப்போதும் தன் கூடவே எடுத்துச் செல்லும் சிவலிங்கம் இத்தகைய உன்னதமான, தெய்வீகத் தங்கத்தினால் ஆனது என்பதை இச்சொல் உணர்த்துகிறது.
இராவணனோ, மணலாலான வேதிகையின் மத்தியில் {பீடத்தின் மையப்பகுதியில்} அந்த லிங்கத்தை ஸ்தாபித்து {பொன்னாலான சிவலிங்கத்தை நிறுவி}, கந்தங்களாலும் {நறுமணச் சந்தனங்களாலும்}, அம்ருத கந்தங்கொண்ட புஷ்பங்களாலும் {தேவாமிர்தத்தைப் போன்ற நறுமணம் மிக்க மலர்களாலும் {அந்த லிங்கத்திற்கு} அர்ச்சனை செய்தான்.(42) பிறகு, அந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, நல்லோர்களின் துயரத்தைப் போக்குபவனும், உயர்ந்தவரிலும் உயர்ந்தவனும், வரங்களை அளிப்பவனும், சந்திரனின் ஒளிக்கதிர்களை ஆபரணமாகப் பூண்டவனுமானவனுக்கு {சிவனுக்கு} முறைப்படி அர்ச்சனை செய்துவிட்டு, தன் கைகளை விரித்தபடி {துதிகளைப்} பாடினான்; மேலும் அவன் {அந்த லிங்கத்தின்} முன்னே ஆனந்தக் கூத்தாடினான்.(43)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 031ல் உள்ள சுலோகங்கள்: 43
| Previous | | Sanskrit | | English | | Next |
