Sunday, 17 May 2026

வேதவதி | சர்க்கம் – 017 (43)

Vedhavathi | Sarga-017 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வேதவதியைக் கண்டு காமுற்ற ராவணன்; சாபம் கொடுத்துத் தீக்குளித்த வேதவதி, சீதையாக அவதரித்தது...

Vedhavathi and Ravana

பிறகு, ராஜனே {ராமா}, மஹீதலத்தில் சுற்றித் திரிந்த மஹாபாஹுவான ராவணன், ஹிமவத் வனத்தை {இமய மலையில் உள்ள ஒரு காட்டை} அடைந்து அங்கே சுற்றித் திரிந்தான்.(1) அங்கே கருப்பு மான் தோல் அணிந்தவளும், ஜடை தரித்தவளுமான ஒரு கன்னிகையை அவன் கண்டான். ஆர்ஷ விதிகளுக்குப் பொருத்தமாக {வேதவிதிப்படி தபம் செய்யும்} தேவதையைப் போல அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(2)

மஹாவிரதத்துடன் கூடிய அந்தக் கன்னிகை, அழகிய ரூபம் கொண்டவளாக இருப்பதைக் கண்டவன், காமத்தாலும், மோஹத்தாலும் பீடிக்கப்பட்டவனாகப் புன்னகைத்தபடியே {பின்வருமாறு} கேட்டான்:(3) "பத்ரே {மென்மையானவளே}, உன் யௌவனத்திற்கு {இளமைக்கு} எதிராக நீ செயல்படுவதேன்? பொருத்தமற்ற இச்செயல் உன் ரூபத்துக்கு ஒவ்வாதது.(4) பீரு {அச்சமுள்ளவளே}, ஒப்பற்றதாயிருக்கும் இத்தகைய உன் ரூபம் நரர்களில் காமத்தை ஓங்கி வளரச் செய்யும். இவ்வாறான நிர்ணயத்துடன் {முடிவுடன்} தபம் செய்வது உனக்கு முறையல்ல.(5) பத்ரே, நீ யார்? யாருடையவள் {உன் தந்தை யார்}? உன் பர்தா {கணவன்} யார்? பீரு {பயந்தவளே}, உன்னை அனுபவிக்கும் அந்த நரனே, புவியில் பெரும் புண்ணியவானாவான்.(6) உன்னிடம் கேட்கும் எனக்கு ஹேதுவாக அனைத்தையும் சொல்வாயாக. ஏன் {யாருக்காக} இந்த சிரமம்?" என்று அந்தப் புகழ்பெற்ற கன்னிகையிடம் ராவணன் கேட்டான்.(7)

அந்த தபோதனை {தபத்தையே செல்வமாகக் கொண்ட வேதவதி} விதிப்படியான ஆதித்யங்களைச் செய்த பிறகு {அதிதி பூஜைகளை / விருந்தோம்பல்களைச் செய்த பிறகு பின்வருமாறு} கூறினாள், "என் பிதாவான குசத்வஜர், மகிமைமிக்க பிரம்மரிஷியாவார். பிருஹஸ்பதியின் மகனான அந்த ஸ்ரீமான், பிருஹஸ்பதிக்குத் துல்லியமான புத்தியை {அறிவைக்} கொண்டவராவார்.(8) நித்தியம் வேதாப்பியாஸங்களை {வேதங்களை இடைவிடாமல் பயிற்சி} செய்து கொண்டிருக்கும் அந்த மஹாத்மாவின் {குசத்வஜரின்} வாக்கையே {சொல்லையே} வடிவமாக ஏற்றுப் பிறந்த கன்னிகையான நான், வேதவதி என்ற பெயரில் அழைக்கப்பட்டேன்.(9) பிறகு, தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், பன்னகர்கள் ஆகியோர், என் பிதாவை மகிழ்ச்சியுடன் அணுகி என்னை வரமாக {என்னை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்க} வேண்டினார்கள்.(10) இராக்ஷச ரிஷபரே {ராக்ஷசர்களில் காளையே}, என் பிதா என்னை அவர்களுக்கு அளித்தாரில்லை. நிசாசரரே {இரவுலாவியே}, அதற்கான காரணத்தை நான் உமக்குச் சொல்கிறேன், கேட்பீராக.(11) திரிலோகேசரும், ஸுரேஷ்வரருமான {மூன்று உலகங்களின் தலைவரும், தேவர்களின் தலைவருமான} விஷ்ணுவே மருமகனாக வேண்டுமென என் பிதா கருதினார். எனவே, என் பிதா வேறு எவருக்கும் என்னைக் கொடுக்கவில்லை.(12)

என்னை அவருக்கே {விஷ்ணுவுக்கே} அளிக்க விரும்பினார். தம்பு என்ற பெயரைக் கொண்டவனும், தன் பலத்தில் செருக்குடையவனுமான தைத்தியர்களின் ராஜா இதைக் கேட்டுக் கோபமடைந்தான்.(13) இராத்திரியில் சயனித்துக் கொண்டிருந்த என் பிதா, அந்தப் பாபியால் கொல்லப்பட்டார்.(14) பிறகு, தீனமானவளும், மஹாபாக்யவதியுமான என் ஜனனீ {தாய்}, என் பிதாவின் சரீரத்தையே அணைத்துக் கொண்டு ஹவ்யவாஹனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசித்தாள்.(15) பிறகு, நாராயணனைக் குறித்த என் பிதாவின் மனோரதத்தை சத்தியமாக்க {என் தந்தையின் மனவிருப்பத்தை நிறைவேற்ற} அப்போதிலிருந்து அவரையே {விஷ்ணுவையே} என் ஹிருதயத்தில் சுமந்து வருகிறேன்.(16) இந்தப் பிரதிஜ்ஞையுடனே நான் கடுமையான தபங்களைச் செய்து வருகிறேன். இராக்ஷசபுங்கவரே, {என்னைக் குறித்த} இவை யாவற்றையும் நான் உம்மிடம் கூறிவிட்டேன்.(17) நாராயணரே என் பதி {கணவர்}; அந்தப் புருஷோத்தமரைத் தவிர வேறு யாருமில்லை. நாராயணரைத் தேடுவதற்காகவே நான் கோரமான நியமங்களை ஆசரிக்கிறேன் {பின்பற்றுகிறேன்}. இராஜரே, பௌலஸ்தியநந்தனரே, நான் உம்மை அறிந்து கொண்டேன். இனி செல்வீராக.(18) என் தபங்களால் மூவுலகிலுமுள்ள யாவற்றையும் நான் அறிவேன்" {என்றாள் வேதவதி}.(19)

மஹாவிரதங்களை உறுதியுடன் கடைப்பிடிக்கும் அந்தக் கன்னிகையிடம் மீண்டும் ராவணன் {பின்வருமாறு} பேசினான். அவன் விமானத்தின் உச்சியில் இருந்து இறங்கியதும், கந்தர்பனால் {மன்மதனால்} பீடிக்கப்பட்டான்.(20) "அழகிய இடையைக் கொண்டவளே, அகங்காரத்தாலன்றி இத்தகைய மதி {எண்ணம்} உனக்கு உண்டாகாது. மான் போன்ற கண்களை உடையவளே, விருத்தர்களுக்கு {முதியோருக்கு} நீ புண்ணியங்களின் குவியலெனப் பிரகாசமாக ஒளிர்வாய்.(21) சர்வ நற்குணங்களாலும் நிறைந்தவளே, நீ இவ்வகையில் பேசக்கூடாது. திரிலோக சுந்தரியே, பீரு {பயந்தவளே}, உன் யௌவனம் {இளமை} கடந்து போகிறது.(22) பத்ரே, நான் லங்காதிபதி; தசக்ரீவன் என்ற பெயர் பெற்றவன். அத்தகையவனான எனக்கு நீ பாரியையாகி {மனைவியாகி}, விரும்பும் சுக போகங்களை அனுபவிப்பாயாக.(23) விஷ்ணு என்று எவனையோ நீ அழைக்கிறாயே, அவன் எவன்? பத்ரே, நீ விரும்பும் அவன், வீரத்தினாலும், தபத்தினாலும், போகங்களினாலும், பலத்தினாலும் எவ்வகையிலும் எனக்கு நிகரானவன் அல்லன்" {என்றான் ராவணன்}.(24)

போகத்தினாலும், பலத்தினாலும் அவன் அவளிடம் இவ்வாறு கூறியதும், வேதவதி அவனுக்குப் பதிலளித்தாள்.(25) அந்தக் கன்னிகை அந்த நிசாசரனிடம் {பின்வருமாறு} கூறினாள், "அப்படிச் சொல்லாதீர். திரிலோகாதிபதியான விஷ்ணு, சர்வலோகங்களாலும் நமஸ்கரிக்கப் படுபவராவார். இராக்ஷசேந்திரரான உம்மைத் தவிர வேறு எந்த புத்திமான் அவரை அவமதிப்பான்?" {என்றாள் வேதவதி}.(26)

வேதவதி இவ்வாறு சொன்னதும், அந்த நிசாசரன், அங்கே சென்றான். அப்போது, தன் உள்ளங்கையால் அந்தக் கன்னிகையின் தலைமுடியை பற்றினான்.(27) பிறகு, குரோதமடைந்த வேதவதி, தன் கையால் தன் கேசத்தை {கூந்தலை} அறுத்தாள்.  அப்போது அவளது கரம் {கை}, அவளது கேசத்தை வெட்ட அசியாக {கத்தியாக} மாறிச் செயல்பட்டது.(28) அந்த நிசாசரனை எரித்துவிடுபவளைப் போல, அவள் ரோஷத்தில் எரிந்து கொண்டிருந்தாள். மரணத்தை அடைவதற்காக அக்னியை மூட்டியவள் {பின்வருமாறு} சொன்னாள்:(29) "அநாரியா, நீ என்னைத் தீண்டியதால் நான் ஜீவிக்க விரும்பவில்லை. எனவே, ராக்ஷசா, நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் ஹுதாசனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசிப்பேன்.(30) பாபாத்மாவே, வனத்தில் உன்னால் நான் தீண்டப்பட்டேன். எனவே, உன் வத அர்த்தத்திற்காக {உன்னைக் கொல்வதற்காக} நான் மீண்டும் உற்பத்தியாவேன் {பிறவி எடுப்பேன்}[1].(31) பாபநிச்சயம் கொண்ட ஒரு புருஷனை ஒரு ஸ்திரீயால் {பாபம் செய்யத் தீர்மானித்த ஓர் ஆடவனை ஒரு பெண்ணால்} கொல்ல முடியாது. உனக்கு நான் சாபமளித்தால் என் தபங்களுக்குக் குறைவேற்படும்.(32) நான் செய்த {நற்செயல்கள்}, கொடுத்த {தானங்கள்}, வளர்த்த {வேள்விகள்} ஏதேனும் இருந்தால், {மறுபிறவியில்} யோனியில் ஜனிக்காத சாத்வியாக {கருப்பையில் பிறக்காத நற்பெண்ணாக} ஒரு தர்மியின் மகளாவேன்" {என்றாள் வேதவதி}.(33) இப்படிக் கூறிய அவள் {வேதவதி}, ஓங்கி எரியும் நெருப்பில் பிரவேசித்தாள். திவத்திலிருந்து திவ்யமான புஷ்பவிருஷ்டி பொழிந்தது {வானத்திலிருந்து தெய்வீகப் பூமாரி பொழிந்தது}.(34) 

[1] வாடா மலரோன் வரச் செருக்கால் மற்று எனைநீ
கூடாதன சொல்லிக் கூசாது தீண்டினையால்
ஏடா உனக்கும் இலங்கைக்கும் உன் கிளைக்கும்
கேடாகத் தோன்றுவேன் என்றாள் கிளர் சினத்தாள்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 345ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: வாடாத மலரோன் {தெய்வீகத் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன் கொடுத்த} வரத்தின் செருக்கால் பொருந்தாத தீயவற்றைச் சொல்லிக் கூசாமல் என்னைத் தீண்டினாய். ஏடா, உனக்கும், இலங்கைக்கும், உன் உறவினர்களுக்கும் கேடு வருமாறு நான் பிறப்பேன்" என்றாள் கிளர்ந்தெழுந்த கோபமுடையாள் {வேதவதி}.

பத்மத்தில் {தாமரை மலரில்} மீண்டும் தோன்றிய அவள், பத்மத்திற்கு {தாமரைக்கு} சமமான பிரபையுடன் பிரகாசித்தாள். பூர்வத்தைப் போலவே அங்கே அவளிடம் அந்த ராக்ஷசன் {ராவணன்} வந்தான்.(35) கமல கர்பத்தில் பிறந்த அவளைத் தன் கிருஹத்திற்கு {வீட்டிற்கு} அவன் எடுத்துச் சென்றான். இராவணன், அவளை எடுத்து, தன் மந்திரிகளிடம் காட்டினான்.(36) அவர்களில் ஒருவன் லக்ஷணங்களை ஆராய்ந்து அறிந்து, ராவணனிடம் {பின்வருமாறு} கூறினான், "இந்த நல்லிடையாள், உமது கிருஹத்தில் இருந்தால், உம்மை வதம் செய்வாள் எனத் தெரிகிறது" {என்றான் மந்திரி}.(37) இராமா, இதைக் கேட்ட ராவணன், அவளை அர்ணவத்தில் {கடலில்} வீசினான். அவளும் க்ஷிதியை {தரையை} அடைந்து யஜ்ஞ {வேள்வி} பீடத்தின் மத்தியில் புகுந்தாள்.(38) இராஜனின் ஹலமுகத்தால் எழுப்பப்பட்டபோது அந்த சதீ மீண்டும் தோன்றினாள் {கலப்பை நுனியால் உழுதபோது அந்தக் கற்புடைய நாயகி மீண்டும் தோன்றினாள்}.[2] பிரபோ {தலைவா}, அவளே ஜனக ராஜனின் நன்மகளாவாள். அவளே உன் பாரியையாவாள் {உன் மனைவி சீதையாவாள்}, மஹாபாஹோ {பெருந்தோள்களையுடைய ராமா}, நீயே ஸனாதன விஷ்ணுவாவாய்.(39) 

[2] 35ம் சுலோகம் முதல் 39ம் சுலோகத்தின் பாதி வரையுள்ள இந்தப் பகுதி வேறு பதிப்புகளில் காணக்கிடைக்கவில்லை. கோரக்பூர் கீதா பிரஸ் ஆங்கிலப் பதிப்பில் இந்தப் பகுதி இருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில் இப்பகுதி அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இப்படி வேதவதி தாமரை மலரில் தோன்றினாளென்ற ஸங்கதி சில ஸ்ரீகோசங்களில் காணப்படாமையாலும், இதற்கு வியாக்கியான மில்லாமையாலும், இதனை அதிக பாடமென்கிறார்கள்" என்றிருக்கிறது.

பூர்வத்திலேயே அவளது குரோதத்தால் கொல்லப்பட்டவனும், சைலத்தைப் போன்றவனுமான சத்ருவை, உன் அமானுஷ்ய வீரியத்தினால் {ராமா} நீ வீழ்த்தினாய்.(40) இவ்வாறே அந்த மஹாபாக்யவதி, மரிப்போரின் உலகில் மீண்டும் பிறந்தாள். க்ஷேத்ரத்தில் ஹலமுகத்தால் எழுப்பப்பட்டு {வேள்வி செய்வதற்கான இடத்தைக் கலப்பையால் உழுதபோது}, வேதிகையில் அக்னியைப் போலத் தோன்றினாள்.(41) பூர்வத்தில் கிருத யுகத்தில் வேதவதி என்ற பெயர் பெற்றவள், திரேதா யுகத்தில் அந்த ராக்ஷச வதத்தின் அர்த்தத்திற்காக {ராவணனைக் கொல்வதற்காக சீதையாகத்} தோன்றினாள்.(42) அவள் மஹாத்மாவான ஜனகனின் மைதிலி குலத்தில் உற்பத்தியானாள் {பிறந்தாள்}. அவள் சீதையில் {கொழுமுனையில்} தோன்றியவள் என்பதால், சீதை என்றே மானுஷர்களால் அழைக்கப்படுகிறாள்.(43) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 017ல் உள்ள சுலோகங்கள்: 43

Previous | Sanskrit | English | Next