Pasupata Astra | Sarga-021 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: யமனிடம் விரைந்து சென்று ராவணனின் வரவை அறிவித்த நாரதர்; நரகத்தின் பாபிகளை விடுவித்த ராவணன்; யமகிங்கரர்களுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த யுத்தம்...
இவ்வாறு நன்கு சிந்தித்த அந்த விப்ரேந்திரர் {பிராமணர்களில் சிறந்தவரான அந்த நாரதர்}, நடந்ததை அப்படியே கூறுவதற்காக, லகு விக்ரமத்துடன் {வேகமான நடையுடன்} யமனின் சதனத்தை {இருப்பிடத்தை} நோக்கிச் சென்றார்.(1) அங்கே அவர் {நாரதர்}, அக்னியை முன்னிறுத்திக் கொண்டு, பிராணிகளில் {உயிரினங்களில்} எவருக்கு எத்தகைய விதானத்தை வழங்க வேண்டுமோ {எவருக்கு எத்தகையதைச் செய்ய வேண்டுமோ}, அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் யம தேவனை தம் முன்னே கண்டார்.(2)
அந்த யமன், அங்கே வந்து சேர்ந்த நாரத மஹரிஷியைக் கண்டு, தர்மத்திற்கிணங்க அர்க்யம் {முகம், கைகளைக் கழுவுவதற்கான நீரை} அளித்து, அவரை சுகமாக அமரச் செய்து, {பின்வருமாறு} கூறினான்:(3) "தேவரிஷியே, எங்கும் க்ஷேமமா {நலமா}? தர்மம் எங்கும் நசியாமல் இருக்கிறதா? தேவ, கந்தர்வர்களால் சேவிக்கப்படுபவரே, இங்கே வந்ததற்கான உமது காரியம் என்ன?" {என்று கேட்டான் யமன்}.(4)
அப்போது, பகவானான நாரத ரிஷி {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினார், "நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக. பிறகு, விதானத்தை விதிப்பாயாக {செய்ய வேண்டியதைச் செய்வாயாக}.(5) பித்ருராஜாவே {மூதாதையரின் மன்னா}, தசக்ரீவன் என்ற நாமத்தைக் கொண்ட இந்த நிசாசரன் {பத்துக் கழுத்துகளைக் கொண்டவனும், இரவுலாவியுமான இந்த ராவணன்}, எளிதில் வெல்வதற்கரியவனான உன்னைத் தன் விக்ரமத்தால் வசப்படுத்த இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(6) பிரபோ, இந்தக் காரணத்தாலேயே நான் துரிதமாக இங்கே வந்து சேர்ந்தேன். தண்டத்தை {காலதண்டத்தை} ஆயுதமாகக் கொண்ட உனக்கு இன்று என்ன நேரப் போகிறதோ?" {என்றார் நாரதர்}.(7)
இதற்கிடையில், உதிக்கும் அம்சுமந்தனை {சூரியனைப்} போல ஒளிரும் அந்த ராக்ஷசனின் விமானம் {ராவணனின் புஷ்பக விமானம்} வந்து கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து அவர்கள் கண்டனர்.(8) மஹாபலவானான அவன் {ராவணன்}, தன் புஷ்பகத்தின் பிரபையால் {ஒளியால்} அந்த இடம் முழுவதையும் இருளற்றதாகச் செய்தபடியே சமீபத்தில் வந்து சேர்ந்தான்.(9) மஹாபாஹுவான அந்த தசக்ரீவன், அங்கேயும், இங்கேயும் பிராணிகள் {உயிரினங்கள்}, தங்களின் நல்வினைகளுக்கும், தீவினைகளுக்கும் உரிய கர்மத்தை {புண்ணிய, பாபங்களின் பலன்களை} அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.(10) அவன் {ராவணன்}, பயத்தை ஏற்படுத்துபவர்களும், உக்கிரமானவர்களும், கோர ரூபம் உடையவர்களும், யமனின் அனுசரர்கள், பணியாட்களுடன், அந்த யமனின் சைனிகர்களையும் {படைவீரர்களையும்} பார்த்தான்.(11)
அங்கே வதைக்கப்படுபவர்களும், துன்புறுத்தப்படுபவர்களுமான தேஹிகளையும் {பாவம் செய்த பூவுலக மனிதர்களையும்} அவன் கண்டான். அவர்கள், தீவிர வலியால் கூச்சலிட்டுக் கொண்டும், மஹாநாதத்துடன் {பெரும் முழக்கத்துடன்} கதறிக் கொண்டும் இருந்தனர்.(12) அவர்கள் கிருமிகளாலும், கொடூரமான நோய்களாலும் பக்ஷிக்கப்பட்டனர் {உண்ணப்பட்டனர்}.(13) மேலும் அவர்கள், கேட்க வேதனை அளிப்பவையும், பயத்தை ஏற்படுத்துபவையுமான சொற்களைப் பேசிக் கொண்டும், சோணிதத்தை {ரத்தத்தை} நீராகக் கொண்ட வைதரணீயை {வைதரணியாற்றைப்} பலமுறை கடந்து கொண்டும் இருந்தனர்.(14) அதார்மிகர்கள் {பாபிகள்}, கொதிக்கும் மணலில் {தப்த வாலுகா என்றழைக்கப்படும் கொதிக்கும் மணல் நகரத்தில்} மீண்டும் மீண்டும் வெந்து துடித்தனர்; அசிபத்ர வனத்தில் {கத்தி போன்ற இலைகளைக் கொண்ட காட்டில் / நரகத்தில்} பிளக்கவும் பட்டனர்.(15) ரௌரவத்திலும் {என்ற பயங்கர நரகத்திலும்}, க்ஷார நதியிலும் {அரிக்கும் நீரைக் கொண்ட ஆற்றிலும்}, க்ஷுர தாரைகளிலும் {சவரக்கத்தி போன்ற கூர்மையான விளிம்புகளைக் கொண்ட நரகத்திலும்}, தண்ணீரை யாசிப்பவர்களும், தாகத்தில் தவிப்பவர்களும், பசியால் வாடுபவர்களும் இருந்தனர்.(16) சவ பூதங்களும் {உயிரற்றது போன்ற உடல்களுடையவர்களும்}, மெலிந்தவர்களும், வர்ணமிழந்தவர்களும், கலைந்த தலைமுடி கொண்டவர்களும், அழுக்கும், சேறும் நிறைந்த உடலைக் கொண்டவர்களும், தீனர்களும், வறண்டவர்களும், {பயத்தால் அங்கும் இங்கும்} ஓடிக் கொண்டிருப்பவர்களும் அங்கே இருந்தனர்.(17)
இராவணன் தன் மார்க்கத்தில், நூற்றுக் கணக்கானவர்களையும், ஆயிரக் கணக்கானவர்களையும் கண்டான். அவர்களில் சிலர், தங்கள் சொந்த நல்வினைகளால் முக்கிய கிருஹங்களில் {சிறந்த மாளிகைகளில்}, கீத, வாத்திய ஒலிகளுடன், ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருப்பதையும் ராவணன் கண்டான்.(18) கோக்களை {பசுக்களை} தானம் செய்தவர்கள் பசுக்களின் ரசங்களையும் {பால், நெய் போன்றவற்றையும்}, அன்னத்தை {உணவை} தானம் செய்தவர்கள் அன்னத்தையும், கிருஹங்களை {வீடுகளை} தானம் செய்தவர்கள் கிருஹங்களையும் எனத் தங்கள் சொந்த கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.(19) சுவர்ணம், மணி {ரத்தினம்}, முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமதைகள் {அழகிய பெண்கள் அவர்களைச்} சூழ்ந்திருந்தனர்.(20) மஹாபாஹுவான அந்த ராக்ஷசாதிபன் ராவணன், தார்மிகர்களையும், தங்கள் சொந்த தேஜஸ்ஸினால் ஒளிரும் வேறு சிலரையும் அங்கே கண்டான்.(21)
பிறகு, பலவானான ராவணன், தங்கள் சொந்த தீவினைகளின் கர்மத்தால் {நரகத்தின் யமதூதர்களால்} உடல் கிழிக்கப்பட்டுத் துன்புறுபவர்களைத் தன் விக்ரமத்தால் பலவந்தமாக விடுவித்தான்.(22) இராக்ஷசனான அந்த தசக்ரீவனால் விடுவிக்கப்பட்ட அந்தப் பிராணிகள் {உயிரினங்கள்}, எதிர்பாராததும், சிந்தனைக்கு எட்டாததுமான சுகத்தை ஒரு முஹூர்த்த காலம் அடைந்தன.(23) பெரும் புகழ்மிக்கவனான ராக்ஷசனால் பிரேதர்கள் {இறந்த பிறகு நரகத்திற்குச் சென்றவர்கள்} விடுவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, பிரேத கோபர்கள் {அந்தப் பிரேதர்களைக் காப்பவர்களான யமதூதர்கள்} பெருங்குரோதமடைந்து ராக்ஷசேந்திரனை {ராவணனை} நோக்கிப் பாய்ந்தனர்.(24)
பிறகு, தர்மராஜனின் {யமனின்} படைவீரர்களான சூரர்கள் ஓடிவந்தபோது, சர்வ திக்குகளில் இருந்தும் ஹல, ஹலா என்ற {ஆரவார} சப்தம் எழுந்தது.(25) நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான அந்த சூரர்கள், பிராசங்கள், பரிகங்கள், சூலங்கள், முசலங்கள், சக்திகள், தோமரங்கள் ஆகியவற்றை புஷ்பகத்தின் {ராவணனின் புஷ்பக விமானத்தின்} மீது பொழிந்து தாக்கினர்.(26) அவர்கள், தேனீக்களைப் போல அந்தப் புஷ்பகத்தின் ஆசனங்களையும், பிராசாதங்களையும் {மாளிகைகளையும்}, வேதிகைகளையும் {மேடைகளையும்}, தோரணங்களையும் சீக்கிரமாக உடைத்து நொறுக்கினர்.(27) தேவர்களின் உறைவிடமான அந்தப் புஷ்பகம், போர்க்களத்தில் உடைத்துச் சிதைக்கப்பட்டாலும், அது பிரம்ம தேஜஸ்ஸினால் {பிரம்மனின் ஆற்றலால்} எப்போதும் போல அக்ஷயமாக {அழிவற்றதாக} இருந்தது.(28)
அந்த மஹாத்மாவின் சேனை, எண்ணற்றதாகவும், மிகப் பெரியதாகவும் இருந்தது. அதன் முன்னணியில் நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான சூரர்கள் இருந்தனர்.(29) பிறகு, சூரர்களான அவனது அமைச்சர்களும், ராஜாவான அந்த தசானனனும் {பத்து முகங்களைக் கொண்ட ராவணனும்}, நூற்றுக்கணக்கான விருக்ஷங்கள், சைலங்கள், பிராசாதங்கள் {மரங்கள், மலைகள், மாளிகைகள்} ஆகியவற்றைக் கொண்டு, தங்கள் விருப்பத்திற்கும், பலத்திற்கும் தகுந்தபடி போரிட்டனர்.(30) அந்த ராக்ஷசேந்திரனின் அமைச்சர்கள், சர்வ சஸ்திரங்களாலும் பலமாகத் தாக்கப்பட்டவர்களாக, சோணிதம் {ரத்தம்} தோய்ந்த அங்கங்களுடையவர்களாக மஹத்தான போரைச் செய்தனர்.(31) மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்ட ராமா}, மஹாபாகர்களான யமனுடையவர்களும் {பெரும் பராக்கிரமசாலிகளான யமனுடைய வீரர்களும்}, ராவணனுடைய மந்திரிகளும் அன்யோன்யம் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.(32)
மஹாபலவான்களான யமதர்மனுடைய படைவீரர்கள், {ராவணனின்} அந்த அமைச்சர்களை விட்டுவிட்டு, அந்த தசானனனையே {பத்து முகங்களைக் கொண்ட ராவணனையே} நோக்கி, சூலங்களை மழையாகப் பொழிந்தபடி பாய்ந்து சென்றனர்.(33) பிறகு, அந்த ராக்ஷசாதிபன், அந்தத் தாக்குதல்களால் உடல் பிளக்கப்பட்டு, சோணிதம் தோய்ந்த அங்கங்களுடன் முற்றும் மலர்ந்த அசோகத்தை {அசோக மரத்தைப்} போல அந்தப் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} காட்சியளித்தான்.(34) பலவானான அவன் {ராவணன்}, தன் அஸ்திர பலத்தால் சூலங்கள், கதைகள் {கதாயுதங்கள்}, பாசங்கள் {பாசக் கயிறுகள்}, சக்திகள் {வேல்கள்}, தோமரங்கள், சாயகங்கள் {கணைகள்}, முசலங்கள் {உலக்கைகள்}, பாறைகள், விருக்ஷங்கள் {மரங்கள்} ஆகியவற்றைப் பொழிந்தான்.(35) மரங்கள், பாறைகள், சஸ்திரங்கள் ஆகியவற்றின் அந்த மிகக் கடும் வர்ஷம் {மழை} தரணீதலத்தில் {பூமியின் பரப்பில்} யம சைனியத்தின் மீது விழுந்தது.(36) நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான அவர்கள் {யம சைனியத்தினர்}, அவை அனைத்தையும் நொறுக்கி, அவனுடைய {ராவணனின்} அஸ்திரங்களையும் தடுத்து, கோரமானவனும், ஏகனுமான {தனியனுமான} அந்த ராக்ஷசனை {ராவணனைத்} தாக்கினர்.(37)
பெரும் மேகக் கூட்டங்களால் {சூழப்படும்} சைலத்தை {மலையைப்} போல, பிண்டிபாலங்கள், சூலங்கள் ஆகியவற்றால் மூச்சு விட முடியாதபடி, அவனைச் சூழ்ந்து கொண்டு பலமாகத் தாக்கினர்.(38) கவசம் அவிழ்ந்தவனும், குரோதமடைந்தவனும், பெருகி ஓடும் சோணிதத்தால் {குருதியால்} நனைக்கப்பட்டவனுமான அவன் {ராவணன்}, புஷ்பகத்தை விட்டுவிட்டு, பிருத்வியில் {தரையில்} நின்றான்.(39) பிறகு அவன், கார்முகத்தை {வில்லை} ஏந்தி, பாணங்களைக் கையில் எடுத்து சமரில் {போர்களத்தில்} முன்னேறி வந்தான். ஒரு முஹூர்த்தத்திற்குள் நனவு மீண்டு, குரோதமடைந்த அந்தகனைப் போல் நின்றான்.(40) அவன் {ராவணன்}, திவ்யமான பாசுபத அஸ்திரத்தைத் தன் கார்முகத்தில் பூட்டியபிறகு, "நிற்பீராக, நிற்பீராக" என்று அவர்களிடம் கூறிவிட்டு, அந்த சாபத்தை {வில் வளையும் வகையில்} இழுத்தான்.(41) அப்போது, அந்த இந்திர அரி {இந்திரனின் பகைவனான ராவணன்}, போர்க்களத்தில் சாபத்தை {வில்லைத்} தன் காது வரை இழுத்து, திரிபுரத்தில் சங்கரனை {சிவனைப்} போலக் குரோதத்துடன் அந்த சரத்தை {பாசுபதாஸ்திரத்தை} ஏவினான்[1].(42)
[1] வரிசிலை கையில் வாங்கி வாள் எயிற்று அரக்கன் ஈசன்பொருபடை விடுதலோடும் பொங்கு எரி பரந்து மண்டத்தருமன் வெஞ்சேனை தாவத் தாவியது ஆலம் என்னத்திரிபுரம் என்ன வெந்து தீய்ந்தனர் சிலைக்கை வீரர்- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 392ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: வாள் போன்ற பற்களையுடைய ராக்ஷசன் {ராவணன்}, ஈசனின் ஆயுதத்தை {பாசுபதத்தை} ஏவியதும், அது பெருந்தீயைப் பரப்பி, நெருங்கி {யம} தர்மனின் கொடிய சேனை தாவி ஓடுமாறு, நஞ்சுபோலத் தாவிச் சென்றது. வில்லேந்திய கைகளுடன் கூடிய யமனின் சேனைவீரர்கள் திரிபுரம் எரிந்தது போல வெந்து தீய்ந்தனர்.
அந்த சரத்தின் ரூபம் {கணையின் வடிவம்}, கோடைகால வனத்தை எரிப்பதும், எங்கும் பரவி எழுவதுமான காட்டுத் தீயைப் போல, புகையில்லாத ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது.(43) இரணத்தில் {போர்க்களத்தில்} ஏவப்பட்ட அவனுடைய அந்தச் சரம் {பாசுபதாஸ்திரம்}, ஜுவாலைகளை {நெருப்புச் சுடர்களை} மாலையாகக் கொண்டு, ஊனுண்ணும் விலங்குகளால் பின்தொடரப்பட்டு, புதர்களையும், பெரும் மரங்களையும் பஸ்மம் {சாம்பல்} ஆக்கிவிட்டுப் பாய்ந்து சென்றது.(44) வைவஸ்வதனின் {விவஸ்வான் என்றழைக்கப்படும் சூரியனின் மகனான யமனின்} அந்த சைனியத்தினர், அந்த ரணத்தில், அதன் தேஜஸ்ஸால் {பாசுபதாஸ்திரத்தின் நெருப்பொளியால்} எரிக்கப்பட்டு, காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட மரங்களைப் போல {மடிந்து} விழுந்தனர்.(45) பிறகு, பீம விக்ரமனான ராக்ஷசன் {பயங்கர வலிமையுடன் கூடிய ராக்ஷசன் ராவணன்}, தன் அமைச்சர்களுடன் சேர்ந்து, இந்த மேதினியை நடுங்கச் செய்பவனைப் போல மஹாநாதம் எழுப்பினான் {பெரும் முழக்கம் செய்தான்}.(46)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 021ல் உள்ள சுலோகங்கள்: 46
| Previous | | Sanskrit | | English | | Next |
