Monday, 18 May 2026

மருத்தன் | சர்க்கம் – 018 (36)

Maruttha | Sarga-018 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடனான போரில் இருந்து விலகிய மருத்தன்; தாங்கள் மறைந்து கொள்ள இடமளித்த உயிரினங்களுக்கு வரங்களைக் கொடுத்த தேவர்கள்...

Ravana's war challenge to King Marutta, who was doing Maheshwara Yajna

{அகஸ்தியர் ராமனிடம்}... வேதவதி ஹுதாசனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசித்த பிறகு, அந்த ராவணன் புஷ்பகத்தில் ஏறி, மேதினியைச் சுற்றி வந்தான்.(1) பிறகு, உசீரபீஜத்தை {உசீர பீஜம் / காந்தாரம் என்ற நாட்டை} அடைந்து, நிருபதியான {மன்னனான} மருத்தன் யஜ்ஞம் செய்வதைக் கண்டான்.(2) சாக்ஷாத் பிருஹஸ்பதியின் பிராதாவும் {நேரடியாகப் பிருஹஸ்பதியுடன் பிறந்தவரும்}, தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, சம்வர்த்தர் என்ற பெயருடையவருமான பிரம்மரிஷி, சர்வ தேவ கணங்கள் சூழ, அங்கே {காந்தாரத்தில்} யாகம் செய்வித்துக் கொண்டிருந்தார்.(3) 

    அந்த ராக்ஷசன் {ராவணன்} பெற்ற வரங்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதை தேவர்கள் கண்டனர். அவனைக் கண்டு பீதியடைந்த அவர்கள் திர்யக்யோனிகளுக்குள் நுழைந்தனர் {அச்சமடைந்த தேவர்கள் விலங்குகள், பறவைகளின் உடல்களுக்குள் மறைந்து கொண்டனர்}.(4) இந்திரன் மயூரமாகவும் {மயிலாகவும்}, தர்மராஜா வாயஸமாகவும் {யமன் காகமாகவும்} மாறினர். தனாதியக்ஷன் {குபேரன்} ஓணானாகவும், வருணன் ஹம்சமாகவும் {அன்னப்பறவையாகவும்} மாறினர்.(5)

அரிசூதனா {பகைவரை அழிப்பவனே, ராமா}, எஞ்சிய தேவர்களும் இவ்வாறே மறைந்தனர். யஜ்ஞத்தைத் தூய்மையற்றதாக்கும் நாயைப் போல, ராவணன் அங்கே {காந்தார நாட்டில்/ கண்டகார்} பிரவேசித்தான்.(6) இராக்ஷசாதிபன் ராவணன், அந்த ராஜனை {மருத்தனை} அணுகி, "எனக்கு யுத்தத்தைக் கொடுப்பாயாக. அல்லது, "நான் வெல்லப்பட்டேன்" என்று சொல்வாயாக" என்றான்.(7)

பிறகு, {காந்தார நாட்டின்} நிருபதியான மருத்தன், அவனிடம், "நீ யார்?" என்று கேட்டான். அப்போது ராவணன் தன் சிரிப்பை விட்டுவிட்டு, இந்த வாக்கியத்தைக் கூறினான்:(8) "பார்த்திபா, உன் குதூஹல பாவத்தால் நான் பிரீதியடைகிறேன். தனதனின் அனுஜனான {குபேரனின் தம்பியான} ராவணனாக என்னை நீ அறிந்தாயில்லை.(9) திரிலோகங்களிலும் என் பலத்தை அறியாதவன் வேறு எவன் இருப்பான்? அத்தகைய நான், என் பிராதாவை வென்று இந்த {புஷ்பக} விமானத்தைக் கொண்டு வந்தேன்" {என்றான் ராவணன்}. பிறகு, நிருபனான மருத்தன் ராவணனிடம் இவ்வாறு கூறினான்:(10) "நீ ரணத்தில் உன் ஜ்யேஷ்ட பிராதாவை வென்ற தன்யன் {பாக்கியசாலி} ஆனாய். திரிலோகங்களிலும் உன்னைப் போல் போற்றத் தகுந்தவர் வேறு எவரும் இல்லை.(11) அதர்ம சகிதனான உன்னை இந்த உலகம் {ஒருபோதும்} சிலாகிக்காது. பிராதாவை {உடன் பிறந்தானை} வீழ்த்தும் துராத்மாவின் கர்மத்தை {செயலைச்} செய்ததற்காக உன்னை நீயே சிலாகித்துக் கொள்கிறாய்[1].(12) முன்பு சாதாரண தர்மத்தைக் கடைப்பிடித்தே வரத்தை அடைந்தாய் என்று அறிந்திருக்கிறேன். நீ பேசும் இத்தகைய வகையில் நான் முழுமையாகக் கேட்டதில்லை.(13) இங்கேயே நிற்பாயாக. துர்மதியோனே, நீ என்னிடம் இருந்து உயிருடன் திரும்பமாட்டாய். கூர்மையான பாணங்களால் இதோ உன்னை யமக்ஷயத்திற்கு {யமனின் வசிப்பிடத்திற்கு} அனுப்புவேன்" {என்றான் மருத்தன்}.(14)

[1] மன்னன் குபேரனை முன் வாள் அமரில் போர் வென்று
பொன்னின் விமானமாம் புட்பகமும் கைக்கொண்ட
என்னை அறியாயோ என்ன இறை உனக்கு
முன்னவனைப் போர்வென்ற மூர்க்கனோதான் என்றான்

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 353ம் பாடல், திக்கு விசயப் படலம்

பொருள்: "மன்னனான குபேரனை முன்பு வாட்போரில் வென்று, அந்த வெற்றியின் பயனாகப் பொன்னாலான புஷ்பக விமானத்தையும் கைப்பற்றிய {ராவணனான} என்னை அறிந்தாயில்லையோ" என்று {ராவணன்} கூற, {மருத்தன்}, "உனக்கு முன்னவனை {உன் அண்ணன் குபேரனைப்} போரில் வென்ற மூர்க்கனோ நீ" என்று {இகழ்ந்து} கூறினான்.

பிறகு அந்த நராதிபன் {மருத்தன்}, தன் சராசனத்தையும், சாயகங்களையும் {வில்லையும், அம்புகளையும்} எடுத்துக் கொண்டு, குரோதத்துடன் ரணத்திற்குச் சென்றான். சம்வர்த்தர் மார்க்கத்தை {பாதையை} மறித்து அவனைத் தடுத்தார்.(15) அந்த மஹாரிஷி, மருத்தனிடம் கொண்ட சினேஹத்திற்கு இணக்கமாக {பின்வருமாறு} கூறினார், "ஏற்கத் தகுந்தது என்று கருதினால் என் வாக்கியத்தைக் கேட்பாயாக.(16) மஹேஷ்வரனின் இந்த ஸத்ரம் {இந்த சிவயாகம் போதுமென்று} நிறுத்தப்பட்டால் குலத்தை எரித்துவிடும்.(17) தீக்ஷிதனுக்கு {யாகம் தொடங்க தீக்ஷை பெற்றவனுக்கு} யுத்தம் தகுமோ? தீக்ஷிதனுக்குக் குரோதம் தகுமோ? அந்த ராக்ஷசன் வெல்லப்படமுடியாதவன் என்பதால், ஜயம் {வெற்றியைக்} குறித்த சந்தேகம் நித்யம் உண்டாகும்" {என்றார் சம்வர்த்தர்}.(18)

பிருத்வீபதியான அந்த மருத்தன், தன் குருவின் வாக்கியத்தைக் கேட்டுப் பின்வாங்கினான். அவன் தன் சரங்களையும், சாபத்தையும் {வில்லையும்} கைவிட்டு, ஸ்வஸ்தத்துடன் மகமுகமாக {நலத்துடன் வேள்வியின் தலைவனாக / யாகத்தைத் மீண்டும் தொடங்கியவனாக} இருந்துவிட்டான்.(19) அப்போது சுகன்,[2] அவனை வெல்லப்பட்டவனாக எண்ணி, "ராவணர் வெற்றி பெற்றார்" என்று பெரும் மகிழ்ச்சியுடன் முழங்கினான்.(20) யஜ்ஞத்திற்கு வந்து, அங்கே இருந்த மஹரிஷிகளை பக்ஷித்த பிறகும், அவர்களின் உதிரத்தில் விதிருப்தியுடன் {திருப்தியடையாமல்} மஹீயெங்கும் சுற்றித் திரிந்தான் {ராவணன்}.(21) 

[2] இராமாயணம், யுத்த காண்டம், 20ம் சர்க்கத்தில் சுக்ரீவனிடம் தூதனாக சுகன் என்பானை ராவணன் அணுப்பினான். 

இராவணன் சென்ற பின், தேவர்களும், இந்திரன் உள்ளிட்ட திவௌகசர்களும் {சொர்க்கவாசிகளும்} தாங்கள் அடைந்த யோனிகளுடைய சத்வங்களிடம் {தாங்கள் மறைந்திருந்த உடல்களுடைய உயிரினங்களிடம்} பேசினார்கள்.(22) 

பெரும் மகிழ்ச்சியடைந்த இந்திரன், நீலபர்ஹியான மயூரத்திடம் {கருந் தோகைகளைக் கொண்ட மயிலிடம்}, "தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, உன்னிடம் நான் பிரீதியடைந்தேன். இனி புஜகங்களிடம் {பாம்புகளிடம்} உனக்குப் பயமில்லை.(23) இனி உன் பர்ஹத்தில் {தோகையில்} என்னுடைய இந்த ஆயிரம் கண்களும் இருக்கப் போகின்றன. மழை பொழியும் போது நீ மகிழ்ச்சியைக் காண்பாய். அதுவே பிரீதிலக்ஷணம் {அன்பின் அடையாளம்} ஆகும்" {என்றான் இந்திரன்}. இவ்வாறே அந்த ஸுரேஷ்வரனான இந்திரன் மயூரத்திற்கு {தேவர்களின் தலைவனான இந்திரன் மயிலுக்கு} வரத்தை அளித்தான்.(24) முற்காலத்தில், நராதிபா {மனிதர்களின் தலைவனான ராமா}, மயூரங்களின் பர்ஹங்கள் நீலமாகவே இருந்தன {மயில்களின் தோகைகள் கரியனவாகவே இருந்தன}. ஸுராதிபதியின் வரத்தைப் பெற்ற பின்னர் மயூரங்கள் அனைத்தும் அங்கிருந்து திரும்பிச் சென்றன.(25)

இராமா, கிழக்கு வம்சத்தில் {வேள்விச் சாலையின் கிழக்குப் புறத்தில் நின்றிருந்த வாயஸத்திடம் தர்மராஜன் {காகத்திடம் யமன் பின்வருமாறு} கூறினான், "உன்னிடம் நான் பிரீதியடைந்தேன். பிரீதியுடன் கூடிய என் வசனத்தைக் கேட்பாயாக.(26) விதவிதமான ரோகங்களால் நான் பிராணிகளைப் பீடிக்கிறேன் {பல்வேறு நோய்களால் உயிரினங்களைத் துன்புறுத்துகிறேன்}. நான் பிரீதியடைந்ததால், அவற்றால் உன்னை அவ்வாறு செய்ய முடியாது {நோய்களால் உன்னைத் துன்புறுத்த முடியாது}. இதில் சந்தேகமில்லை.(27) விஹங்கமா {பறந்து செல்பவனே}, என் வரத்தால், உனக்கு மிருத்யு {மரண} பயம் உண்டாகாது. நரர்கள் {மனிதர்கள்} உன்னைக் கொல்லாத வரை, நீ நிலைத்திருப்பாய்.(28) என் ஆளுகைக்குள் ஆட்பட்டவர்கள் {மரணமடைந்த மனிதர்கள்} பசியாலும், பயத்தாலும் வாட்டப்படுகிறார்கள். நீ உண்ணும் போது, அவர்கள் தங்கள் பந்துக்களுடன்  திருப்தியடைவார்கள்[3]" {என்றான் யமன்}.(29)

[3] கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "என் உலகத்தில் பசியினால் தவித்துக் கொண்டிருக்கும் யாதனாசரீரிகளான மானுடர்கள் (மண்ணுலகில் உள்ள அவர்களுடைய புதல்வர் முதலியோரால்) உனக்கு உணவு கொடுத்து உன் பசியைப் போக்கினால், அவர்களும் உற்றார்-சுற்றத்தார்களும் (பசிதீர்ந்தவர்களாகத்) திருப்தி அடைகிறார்கள்" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "இந்த என்னோடுவாசிகளான மானிடர்கள் பசியினால் துன்பமுற்று தவிக்கிறவர்களாயிருக்கையில் நீ புசிப்பாயானால் அவர்கள் பந்துக்களுடன் கூடினவர்களாய் திருப்தியடைந்தவர்களாய் ஆவார்கள்" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "மரித்து எனது நாட்டில் வந்து சேர்ந்திருக்கின்ற இந்த மானிடர்கள் பசியினால் பெருந்துன்பமுற்றுத் தவிக்கையில், நீ புசிப்பாயானால், அவர்கள் தம் பந்துக்களுடனே திருப்தியடைந்தவராவார்கள்" என்றிருக்கிறது.

கங்கையின் நீரில் நீந்திக் கொண்டிருந்த ஹம்சத்திடம் வருணன் {பின்வருமாறு} கூறினான், "பத்ர ரதேஷ்வரா {இலைகளையே தேராகக் கொண்டவனே}, பிரீதியுடன் கூடிய இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(30) சந்திர மண்டலத்திற்கு ஒப்பான, சௌம்யமான, மனோஹரமான வர்ணத்துடனும், நீரின் நுரைக்கு சமமான சுத்தமான பிரபையுடன் உன் உடல் பிரகாசிக்கும்.(31) என் சரீரத்தை {தடாகம் முதலிய நீர் நிலைகளை} அடைந்து நீ நித்யம் எனது அன்புக்குரியவனாக இருப்பாய். நீ ஈடு இணையற்ற பிரீதியைக் காண்பாய். அதுவே பிரீதியின் லக்ஷணமாகும் {என் அன்பின் அடையாளமாகும்}" {என்றான் வருணன்}.(32) இராமா, முற்காலத்தில் ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்} வெண்ணீல {சாம்பல்} வர்ணமாக இருந்தன. இறக்கைகளின் நுனிகள் நீலமாக {கரியனவாக} இருந்தன. அதன் அடிப்பகுதி பசும்புல்லைப் போல் நிர்மலமாக இருந்தது.(33)

பிறகு வைஷ்ரவணன் {குபேரன்}, கிரியின் மீது நின்றிருந்த ஓணானிடம் {பின்வருமாறு} கூறினான், "உன்னிடம் நான் பிரீதியடைந்தேன். உனக்கு நான் ஹிரண்ய வர்ணத்தை {பொன் நிறத்தைத்} தருவேன்.(34) உன் சிரம் {தலை} நித்யம் குறைவற்றதாக இருக்கும். என் பிரீதியினால் இந்தக் காஞ்சன வர்ணம் உன்னுடையதாக இருக்கும்" {என்றான் குபேரன்}.(35) இவ்வாறே, அந்த யஜ்ஞ உத்ஸவத்தில் {வேள்வித் திருவிழாவில்} ஸுரர்கள் அவற்றுக்கு {அந்த உயிரினங்களுக்கு} அந்தந்த வரங்களை அளித்தனர். பிறகு, அவர்கள் ராஜனிடம் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் தங்கள் பவனங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(36) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 018ல் உள்ள சுலோகங்கள்: 36

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அஞ்சனை அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கோமுகன் கௌ சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்ரீவன் சுந்தரி சுமாலி சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் தாரன் தாரை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரதன் பரத்வாஜர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் யுதாஜித் ராகு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி