Yama | Sarga-022 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இயமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடந்த கடும்போர்; யமனை வேண்டிய பிரம்மன்; யமன் மறைந்தது...
அந்த வைவஸ்வதப் பிரபு {சூரியனின் மகனும், தலைவனுமான யமன்}, அவனுடைய மஹாநாதத்தை {ராவணனின் பெரும் முழக்கத்தைக்} கேட்டுவிட்டு, தன் சத்ரு விஜயமடைந்தான் என்றும், தன் சொந்த பலம் {படை} அழிவடைகிறது என்றும் கருதினான்.(1) மேலும் அவன் {யமன்}, தன் படைவீரர்கள் கொல்லப்பட்டதை அறிந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன், தன் சூதனிடம் {தேரோட்டியிடம்}, "இந்தத் தேரைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக" என்று கூறினான்.(2)
அப்போதே அவனுடைய சூதன் {யமனின் தேரோட்டி}, திவ்யமான மஹாரதத்தைக் கொண்டு வந்து நின்றான். மஹாதேஜஸ்வியான அவனும் {யமனும்} அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தான். அவனுக்கு முன்னால் பிராசம், முத்கரம் ஆகியவற்றை ஏந்தியபடி {யமனின் தளபதியான} மிருத்யு நின்றான்.(3) இந்த அழிக்க முடியாத மூவுலகங்களும் எவனால் சுருக்கப்படுகின்றனவோ {யுகாந்தத்தில் அழிக்கப்படுகின்றனவோ}, அந்த யமனின் முதன்மை ஆயுதமும், திவ்ய தேஜஸ்ஸினால் ஜுவலிக்கும் அக்னியைப் போன்றதுமான காலதண்டம்[1] மூர்த்திமானாக {உடல் கொண்டு வந்து} அருகில் வந்து நின்றது.(4) அதன் பக்கவாட்டுகளில் எவ்வித இடைவெளியுமின்றி காலபாசங்கள் {பாசக் கயிறுகள்} நிலைபெற்றிருந்தன.(5) பாவகனின் ஸ்பரிசத்திற்கு ஒப்பான மூர்த்தத்துடன் கூடிய முத்கரமும் {நெருப்பின் தீண்டலுக்கு ஒப்பான உஷ்ணமும், ஒளியும் கொண்ட சம்மட்டி ஆயுதமும் உடல் கொண்டு வந்து அங்கே} நின்றது.(6) அப்போது, காலன் {யமன்}, இவ்வாறு சர்வ லோகங்களுக்கும் பயத்தை உண்டாக்கும் வகையில் குரோதத்துடன் இருப்பதைக் கண்டதும், மூவுலகங்களும் கலக்கமடைந்தன; திவௌகசர்களும் {தேவலோகவாசிகளும்} நடுங்கினர்.(7)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது தண்டனை வழங்குவதற்கான யமனின் தண்டக்கோலாகும்" என்றிருக்கிறது.
பிறகு அந்த சூதன் {தேரோட்டி}, அழகிய பிரபையுடன் கூடிய அந்த அஷ்வங்களை {குதிரைகளை} வேகமாகச் செலுத்தினான். பயங்கர போர்க்குரலுடன் கூடியவனும் {யமனும்}, எங்கே ராக்ஷசாதிபதி {ராவணன்} இருந்தானோ அங்கே சென்றான்.(8) ஹரிஹயங்களுக்கு {இந்திரனின் பச்சைக் குதிரைகளுக்கு} ஒப்பானவையும், மனத்தின் வேகத்திற்குத் துல்லியமானவையுமான அவனுடைய அந்த ஹயங்கள் {யமனின் குதிரைகள்}, எங்கே அந்தக் கடும்போர் நடந்து கொண்டிருந்ததோ அங்கே ஒரு முஹூர்த்தத்திற்குள் யமனைக் கொண்டு சேர்த்தன.(9) அத்தகைய பயங்கரத் தோற்றத்தைக் கொண்டதும், {மரண தேவனான} மிருத்யுவுடன் கூடியதுமான ரதத்தை {யமனின் தேரைப்} பார்த்த ராக்ஷசேந்திரனின் {ராவணனின்} அமைச்சர்கள் திடீரெனச் சிதறி ஓடினர்.(10) இலகுவான சித்தத்தைக் கொண்ட {மனவலிமையற்றவர்களான} அவர்கள், சுயநனவை இழந்தவர்களாக, பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாக, "இங்கே போரிடுவதற்கு நாம் சமர்த்தர்களல்லர்" என்று தங்களுக்குள் கூறியபடியே திசைகளை நோக்கி {எங்கும்} ஓடிச் சென்றனர்.(11)
ஆனால், அந்த தசக்ரீவனோ, அத்தகையதும் {பயங்கரமானதும்}, உலகங்களுக்கு பயத்தை உண்டாக்குவதுமான ரதத்தைப் பார்த்த பின்பும் சற்றும் கலங்கினானில்லை. அதைப் போலவே, கொஞ்சமேனும் பயத்திற்கும் அவன் ஆட்பட்டானில்லை.(12) கடுங்குரோதமடைந்த அந்த யமனோ, ராவணனை அணுகி, சக்திகளையும், தோமரங்களையும் ஏவினான். அவை ராவணனின் மர்மங்களை {உயிராதாரமான உடலின் முக்கியப் பகுதிகளைப்} பிளந்தன.(13) அப்போது அந்த ராவணனோ, ஸ்வஸ்தனாக {சற்றும் சோர்வடையாத நலத்துடன்}, மழைமேகம் மழையைப் பொழிவதைப் போலத் திண்ணமாக அந்த வைவஸ்வதனின் ரதத்தின் மீது சரவர்ஷத்தைப் பொழிந்தான் {சூரியனின் மகனான யமனின் தேர் மீது கணை மாரியைப் பொழிந்தான்}.(14) பிறகு, மஹா சக்திகளாலும் {பெரும் சக்தி ஆயுதங்களாலும்}, சரங்களாலும் அவனது பெரும் மார்பு தாக்கப்பட்டது. அந்த ராக்ஷசன் {ராவணன்}, சல்லியங்களால் பீடிக்கப்பட்டவனாக {கணைமுனைகளால் துன்புற்று} மறுதாக்குதல் தொடுக்கும் சக்தியற்றவனானான்.(15) இவ்வாறு அமித்ரகர்ஷிணனான {பகைவரை அழிப்பவனான} யமன், போர்க்களத்தில் ஏழு இரவுகள் நானாவித ஆயுதங்களைக் கொண்டு, தன் ரிபுவை {பகைவனான ராவணனை} சுயநனவற்றவனாகவும், முகம் திரும்பியவனாகவும் {புறமுதுகிடுபவனாகவும்} ஆக்கினான்.(16)
அப்போது, யமராக்ஷசர்கள் இருவருக்குமிடையில் {யமனுக்கும், ராவணனுக்கும் இடையில்} கொடும்போர் நடந்தது. வீரா {ராமா}, ஜயத்தை {வெற்றியை மட்டுமே} பெரிதும் விரும்புகிறவர்களான அவர்கள், போர்களில் சற்றேனும் திரும்பும் இயல்பற்றவர்களாக இருந்தனர்.(17) அப்போது, தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகள் ஆகியோர் பிரஜாபதியை {பிரம்மனை} முன்னிட்டுக் கொண்டு அந்தப் போர்க்களத்தில் ஒன்றுகூடினர்.(18) அப்போது, ராக்ஷசர்களில் முக்கியனும் {ராவணனும்}, பிரேதங்களின் ஈஷ்வரனும் {யமனும்} கடுங்குரோதமடைந்ததால், உலகங்களுக்கு சம்வர்த்தத்தை {அழிவு காலத்தைப்} போன்ற நிலை ஏற்பட்டது.(19) பிறகு, ராக்ஷசேந்திரனும் {ராவணனும்}, இந்திரனின் அசனியை {வஜ்ராயுதத்தைப்} போன்ற பிரபையுடன் {ஒளியுடன்} கூடிய சாபத்தில் {வில்லில்} நாணேற்றி, ஆகாசத்தை இடைவெளியற்றதாக மாற்றும் வகையில் பாணங்களைப் பொழிந்தான்.(20) நான்கு கணைகளால் மிருத்யுவையும் {யமனின் தளபதியான மரண தேவனையும்}[2], ஏழால் சூதனையும் {ஏழு கணைகளால் தேரோட்டியையும்} தாக்கிவிட்டு, சீக்கிரமே நூறாயிரங்களால் {ஒரு லக்ஷம் கணைகளால்} யமனை அவனது மர்மங்களில் {முக்கிய உடலுறுப்புகளில்} தாக்கினான்.(21)
[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "மிருத்யு (மரணம்) என்பது பொதுவாக யமனின் மறுபெயராகக் கருதப்பட்டாலும், இங்கு அது தனியான {உடல் கொண்டு வந்த} மற்றொருவனாக விவரிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
அப்போது, குரோதமடைந்த யமனின் வதனத்திலிருந்து {முகத்திலிருந்து} பெருமூச்சுடன் சேர்ந்து, ஜுவாலை மாலைகளுடனும் {நெருப்பு வளையங்களுடனும்}, தூமத்துடனும் {புகையுடனும்} கூடிய கோபபாவகம் {கோபாக்னி} வெளிப்பட்டது.(22) அப்போது, {அங்கிருந்த} தேவ, தானவர்களின் முன்னிலையில், அந்த ஆச்சரியத்தைப் பார்த்த மிருத்யுவும், காலனும், பெரும் மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் {போர் ஆவேசமும்} அடைந்தவர்களாக மாறினர்.(23)
இன்னும் குரோதமடைந்த மிருத்யு, வைவஸ்வதனிடம் {சூரியன் மகனான யமனிடம் பின்வருமாறு} கூறினான், "பாபியான இந்த ராக்ஷசனை நான் கொல்லும் மட்டும் இந்தப் போர்க்களத்தில் என்னை {கட்டுப்படுத்தாமல்} விடுவீராக. வரம்புகள் {இயற்கையின் நியதிகள்} மாறாதன என்பதால் இன்று இந்த ராக்ஷசன் மடிவான்.(24)
{ஏனெனில்} ஹிரண்யகசிபு, ஸ்ரீமான் நமுசி, அப்படியே சம்பரன், விசந்தி, தூமகேது ஆகியோரும், வைரோசனனான பலியும் {விரோசனனின் மகனான மகாபலியும்},(25) தம்புகன், தைத்திய மஹாராஜன் விருத்திரன் {விருத்திராசுரன்} ஆகியோரும், அப்படியே பாணனும் {பாணாசுரனும்}, ராஜரிஷிகளும், சாஸ்திர வித்தகர்களும், கந்தர்வர்களும், மஹா உரகர்களும்,(26) ரிஷிகள், பன்னகர்கள், தைத்தியர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், அதே போல அப்சரஸ் கணங்களும், யுகாந்த சுழற்சியில் {பிரளய காலத்தில்} மஹா அர்ணவங்களுடன் கூடிய பிருத்வியும் {பெருங்கடல்களுடன் கூடிய பூமியும்},(27) {அதன்} பர்வதங்கள் {மலைகள்}, சரித்துகள் {ஆறுகள்}, மரங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்ததாகவும், {முன் சொன்ன} இவர்கள் யாவரும், வெல்வதற்கரியவர்களான இன்னும் பல பலவான்களும் {என்னால்} அழிக்கப்பட்டனர்.(28)
{இவர்கள் யாவரும்} என் பார்வையால் வீழ்த்தப்பட்டவர்கள். {அப்படியிருக்க} இந்த நிசாசரனை {இரவுலாவியான ராவணனைக்} குறித்து சொல்லவும் வேண்டுமோ?(29) சாது {நன்று}, தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் இவனைக் கொல்லும் மட்டும் என்னை {கட்டுப்படுத்தாமல்} விடுவீராக. எத்தகைய பலவானாக இருப்பினும் என்னால் பார்க்கப்பட்டு ஜீவித்தவன் எவனும் இல்லை.(30) இஃது என் பலம் என்பதல்ல. இஃது {இந்த வரம்பு} இயல்பாகவே வரையறுக்கப்பட்டது. என்னால் பார்க்கப்பட்டவன், ஒரு முஹூர்த்த காலம் கூட ஜீவித்திருக்க மாட்டான்" {என்றான் மிருத்யு}.(31)
அவனது {மிருத்யுதேவனின்} இத்தகைய வசனத்தைக் கேட்ட பிரதாபவானான தர்மராஜன் {பேராற்றல் வாய்ந்தவனான யமன்}, அங்கே இருந்த மிருத்யுவிடம், "நீ இங்கேயே இருப்பாயாக. நான் இவனைக் கொல்கிறேன்" என்று கூறினான்.(32)
பிறகு, குரோதத்தில் சிவந்த கண்களுடன் கூடிய வைவஸ்வத பிரபு, அமோகமான {வீண் போகாத} காலதண்டத்தைத் தன் கையில் எடுத்து ஓங்கினான்.(33) எதன் பக்கவாட்டுகளில் காலபாசங்கள் முழுவதும் நிலைபெற்றிருக்குமோ, {எதன்} அருகில் பாவகனுக்கும், அசனிக்கும் {நெருப்புக்கும், இடிக்கும்} ஒப்பான பிரகாசமுடைய முத்கரம் மூர்த்திமானாக {உலக்கை ஆயுதம் வடிவம் தாங்கி} வீற்றிருக்குமோ,(34) எது பார்வைக்கு இலக்கான உடனேயே பிராணிகளின் பிராணன்கள் பறிக்கப்படுமோ, அதனால் {அந்தக் காலதண்டத்தால்} தீண்டப்பட்ட பிறகோ, வீழ்த்தப்பட்ட பிறகோ என்னவாகும் என்று சொல்லவும் கூடுமோ?(35) பலவானான அவனால் {யமனால்} தீண்டப்பட்டதும், ஜுவாலைகளால் சூழப்பட்ட அந்தப் பேராயுதம் {காலதண்டம்}, ராக்ஷசனை எரிப்பது போல அதிர்ந்தது {கொழுந்துவிட்டு எரிந்தது}.(36) அப்போது, போர்க்களத்தில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர். மேலும், யமன் தன் தண்டத்தை ஓங்கி நிற்பதைக் கண்டு, ஸுரர்கள் {தேவர்கள்} அனைவரும் கலக்கமடைந்தனர்.(37)
யமன் தன் தண்டத்தால் ராவணனைத் தாக்க முனைந்த போது, சாக்ஷாத் பிதாமஹனே {பிரம்மனே} நேரில் தோன்றி இதைக் கூறினான்:(38) "வைவஸ்வதா {சூரியனின் மகனே, யமனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, அமிதவிக்ரமா {எல்லையற்ற வலிமையைக் கொண்டவனே}, இது நிச்சயம் கூடாது. அந்த தண்டத்தால் நீ இந்த நிசாசரனை {இரவுலாவியான ராவணனைக்} கொல்லக்கூடாது.(39) திரிதசபுங்கவா {தேவர்களில் முதன்மையானவனே}, என்னால் இவனுக்கு வரம் நிச்சயமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய என்னால் எவை சொல்லப்பட்டனவோ, அந்தச் சொற்களைப் பொய்யாக்கும் காரியத்தை நீ செய்யலாகாது.(40) தேவனோ, மானுஷனோ, எவன், என்னைப் பொய்யனாகச் செய்வானோ, அவனால் மூன்று உலகங்களும் பொய்யாக்கப்படும் {அழிக்கப்படும்}. இதில் சந்தேகம் இல்லை.(41)
மூவுலகங்களுக்கும் பயத்தை விளைவிக்கக்கூடிய ரௌத்திரமான இதை {காலதண்டத்தைக்} குரோதத்துடன் நீ ஏவினால், பிரியமானவர், பிரியமற்றவர் என்ற வேறுபாடின்றி பிரஜைகளை அழித்துவிடும்.(42) ஏனெனில், சர்வ பிராணிகளிடத்தும் அமோகமானதும் {வீண் போகாததும்}, அமிதப்ரபையை {எல்லையற்ற ஒளியைக்} கொண்டதுமான இந்தக் காலதண்டம், பூர்வத்தில் மிருத்யுவை {மரண தேவனை} முன்னிறுத்தி என்னால் சிருஷ்டிக்கப்பட்டது.(43) எனவே, சௌம்யா, உன்னால் இது {காலதண்டம்} நிச்சயமாக ராவணனின் தலையில் ஏவப்படக்கூடாது. ஏனெனில் இது {ஒருவன் மீது} விழுந்தால் எவனும் ஒரு முஹூர்த்தம் கூட ஜீவித்திருக்கமாட்டான்.(44) இது {காலதண்டம்} விழுந்தும் இந்த ராக்ஷசன் மரிக்காமல் போகலாம்[3]; அல்லது இந்த தசக்ரீவன் மரித்தும் போகலாம். {மரித்தால் நான் ராவணனுக்குத் தந்த வரம் பொய்த்துப் போகும். மரிக்காமல் போனால் மரணத்தை முன்னிறுத்திச் செய்த காலதண்டம் பொய்த்ததாகும். எனவே}, இவ்விரு நிலைகளிலும் பொய்மையே உண்டாகும்.(45) எனவே, நீ இந்த உலகங்களைக் காக்கக் கருதினால், லங்கேசனை {ராவணனை} நோக்கி நீ ஏவியிருக்கும் இந்த தண்டத்தைத் திரும்பப் பெறுவாயாக. மேலும் என்னை சத்தியவானாக்குவாயாக" {என்றான் பிரம்மன்}.(46)
[3] திண் தடம்புயத் தென்னிலங்காதிபன்பண்டு பெற்ற வரத்தின் பலத்தினால்தண்டு நீ விடின் ஆங்கவன் தன் உயிர்உண்டிடாது விடுதல் ஒழிதியால்- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 404ம் பாடல், திக்கு விசயப் படலம்பொருள்: "திண்மையான பெருந்தோள்களைக் கொண்ட தென்னிலங்கையின் அதிபன் {ராவணன்}, முன்பு {தபம் செய்து} பெற்ற வரத்தின் வலிமையால், {கால} தண்டத்தை நீ விட்டாலும் அஃது அவன் உயிரை உண்ணாது. {எனவே, அதை} விடுவதை நிறுத்துவாயாக" {என்றான் யமனிடம் பிரம்மன்}
மேலும், இவ்வாறு சொல்லப்பட்ட போது, தர்மாத்மாவான யமன் {பின்வருமாறு} அவனுக்கு மறுமொழி கூறினான், "இதோ இந்த தண்டம் திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் நீரே எங்களை ஆளும் {அதிகாரம் கொண்ட} பிரபுவாக இருக்கிறீர்.(47) இப்போது போர்க்களத்தில் நின்று கொண்டு, நான் செய்வதற்கு சாத்தியமானது என்ன? வரத்தை முன்னிறுத்தி வரும் இவன் {ராவணன்} என்னால் வதம் செய்யத் தக்கவனல்லன்.(48) எனவே, இதோ இந்த ராக்ஷசனின் பார்வையிலிருந்து மறைந்து போகிறேன்" என்று கூறிவிட்டு, தன் ரதத்துடனும் {தேருடனும்}, தன் அஷ்வங்களுடனும் {குதிரைகளுடனும்} அங்கேயே அப்போதே {யமன்} மறைந்து போனான்.(49)
ஆனால் தசக்ரீவனோ, அவனை {யமனை} வென்றுவிட்டதாக {அறிவிக்கும் வகையில்} தன் பெயரை முழங்கியபடியே, மீண்டும் புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்} ஏறி யமசாதனத்திலிருந்து {யமனின் இருப்பிடத்திலிருந்து} வெளியேறினான்.(50) அந்த வைவஸ்வதன் {சூரியனின் மகனான யமன்}, பிரம்மனை முன்னிறுத்திக் கொண்டு தேவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் திரிதிவத்திற்கு {தேவலோகத்திற்குச்} சென்றான்; நாரத மஹாமுனியும் {அவ்வாறே யமனுடன் சென்றார்}.(51)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 022ல் உள்ள சுலோகங்கள்: 51
| Previous | | Sanskrit | | English | | Next |
