Tuesday, 7 July 2026

விடுதலையும் செருக்கும் | சர்க்கம் – 033 (23)

Freedom and Arrogance | Sarga-033 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை விடுவிக்குமாறு கார்த்தவீரியனை வேண்டிய புலஸ்தியர்; மறுபேச்சின்றி ராவணனை விடுவித்த கார்த்தவீரியன்...

புலஸ்தியரின் முன்னிலையில் ராவணனை விடுவிக்கும் கார்த்தவீரியார்ஜுனன்

வாயுவைப் பிடித்ததைப் போல, ராவணன் பிடிக்கப்பட்டது {ராவணன் பிடிக்கப்பட்ட அந்தச் செய்தி},[1] திவத்தில் தைவதங்களால் {தேவலோகத்தில் தேவர்களால்} பேசப்படுவதைப் புலஸ்தியர் கேட்டார்.(1) பிறகு, பௌலஸ்திய தாயாத்யம் {புலஸ்தியரான தம் மரபுரிமை வாரிசும், தம் பேரனுமான ராவணன்} மீது கொண்ட சினேஹத்தால் பெரிதும் தூண்டப்பட்டவராக {தூண்டப்பட்ட புலஸ்தியர்}, எங்கே ராவணன் {இருந்தானோ, அந்த} மாஹிஷ்மதி என்ற பெயர் கொண்ட புரீக்குச் சென்றார்[2].(2) 

[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு சிறிய எல்லைக்குள் காற்றை அடக்கி வைக்க முடியாததைப் போல, ராவணனைக் கட்டி, அவனைப் பிடித்துச் செல்வதும் இயலாத காரியம்" என்றிருக்கிறது.

[2] இங்கே புலஸ்தியர் வருகிறார். ஆனால் ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்டத்தில் ராவணன் சிறைபட்டச் செய்தியை விபீஷணன் சொல்லி, பிரம்மனே மாஹிஷ்மதிக்கு வருகிறார். ஒட்டக்கூத்தர், உத்தரகாண்டம், கார்த்தவீரியார்ச்சுனப் படலம், 600ம் பாடல் பின்வருமாறு

கெட்ட வாள் அரக்கர் கிளர்பெரும்
  பயத்தால் கேடுஇல்சீர் இராவணன் அமரில்
பட்ட பாடு எல்லாம் வீடணற்கு உரைப்பப்
  பரிவுறு மனத்தினன் அவன் போய்ச்
சிட்டனாய் உள்ள பிதாமகற்கு உரைப்பச்
  சிந்தை நொந்து அச்சிறை விடுப்பான்
வட்ட மாமதில் சூழ் அருச்சுனன் வாழும் 
  வளநகர் மாமுனி வந்தான்.

பொருள்: தோற்றுப் போன கொடிய அரக்கர்கள் கிளர்ந்து எழுந்த பெரும் பயத்தால் இதுவரை யாருக்கும் கெட்டோடுதல் இல்லாத சிறப்பைக் கொண்ட ராவணன் போரில் அர்ஜுனனிடம் பட்டபாடு எல்லாவற்றையும் விபீஷணனுக்குச் சொல்ல, இரக்கம் பொருந்திய மனத்தினனாகிய அந்த விபீஷணன் சென்று தம் குடிக்கெல்லாம் சிறந்தவனாக விளங்கும் பிரம்மனுக்குச் சொல்ல, அது கேட்டு மனம் வருந்தி அந்தச் சிறையிலிருந்து ராவணனை விடுவிக்கும் பொருட்டு வட்டமான பெரிய மதில் சூழ்ந்துள்ள அர்ஜுனன் வாழ்கின்ற வளநகர்க்குச் சிறந்த பிரம்மதேவன் வந்தான்.

அந்த துவிஜர் {இருபிறப்பாளரான புலஸ்தியர்}, வாயு மார்க்கத்தை ஆசரித்து, வாயுவுக்கு துல்லியமான வேகத்தில் {காற்றின் வழியைப் பின்பற்றி, காற்றுக்கு இணையான வேகத்தில்}, மனத்தின் பாய்ச்சலுக்கு ஒப்பான விக்ரமத்துடன் {ஆற்றலுடன்} மாஹிஷ்மதி புரீயை அடைந்தார்.(3) அந்த பிரம்மா {பிரம்மனின் மகனான புலஸ்தியர்}, அமராவதிக்கு நிகராக ஒளிர்வதும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்த மக்கள் நடமாடுவதுமான {மாஹிஷ்மதி} புரீக்குள், இந்திரனின் அமராவதிக்குள் {நுழைவதைப்} போலப் பிரவேசித்தார்.(4) பாதசாரியான ஆதித்யனைப் போல {கால்களால் நடந்து வரும் சூரியனைப் போல}, இறங்கி வருபவரும், {ஒளிமிக்கவரானதால்} பார்ப்பதற்கரியவருமான அவரை {புலஸ்தியரை}, அப்போது அவர்கள் {காவலர்கள் / மக்கள்} அடையாளம் கண்டு {கார்த்தவீரிய} அர்ஜுனனிடம் தெரிவித்தனர்.(5) 

ஹைஹயாதிபன் {கார்த்தவீரியன், அவர்களின்} வசனத்தில் இருந்து {வந்திருப்பது} புலஸ்தியர் என்பதை அறிந்து கொண்டு, தன் சிரசின் மேல் கைகளைக் குவித்துக் கொண்டு, தபஸ்வியை {புலஸ்தியரை} எதிர்கொண்டு அழைக்கச் சென்றான்.(6) அவனுடைய புரோஹிதர், அர்க்கியத்தையும் {முகம், கைகளைக் கழுவுவதற்கான நீரையும்}, மேலும் அவ்வாறே மதுபர்க்கத்தையும் {தேன், தயிர், நெய் கலந்த புனித உணவையும்} எடுத்துக் கொண்டு, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} முன்னால் {தேவகுருவான} பிருஹஸ்பதியைப் போல, ராஜனுக்கு {கார்த்தவீரியனுக்கு} முன்னால் நடந்து சென்றார்.(7) பிறகு, அர்ஜுனன், உதிக்கும் பாஸ்கரனை {சூரியனைப்} போல வந்து கொண்டிருக்கும் அந்த ரிஷியைக் கண்டு, கலக்கமடைந்து, இந்திரன் ஈஷ்வரனை {சிவனை வணங்குவதைப்} போல, {புலஸ்தியரை} வணங்கினான்.(8) 

அந்த ராஜேந்திரன் {கார்த்தவீரியன்} அவருக்கு மதுபர்க்கத்தையும், பசுவையும், பாத்யத்தையும் {கால்களைக் கழுவுவதற்கான நீரையும்}, அர்க்கியத்தையும் {முகத்தையும், கைகளையும் கழுவுவதற்கான நீரையும்} அளித்துவிட்டு, மகிழ்ச்சியால் தழுதழுத்த குரலில் புலஸ்தியரிடம் {பின்வருமாறு} கூறினான்:(9) "துவிஜேந்திரரே {இருபிறப்பாளர்களில் தலைவரே}, காண்பதற்கரிய தங்களை இன்று எதற்காக நான் பார்க்கிறேனோ, அதற்காகவே, இந்த மாஹிஷ்மதி {நகரமானது}, அமராவதிக்குத் துல்லியமானதாக இன்று செய்யப்பட்டது {தேவலோகத் தலைநகருக்கு நிகரானதாக உயர்த்தப்பட்டது}.(10) தேவரே, இன்று நான் குசலமடைந்தேன் {நலமடைந்தேன்}. இன்று என் விரதங்கள் குசலமடைந்தன. இன்று என் ஜன்மம் பலனுள்ளதாயிற்று. இன்று என் தபம் பலனுள்ளதாயிற்று. ஏனெனில், தேவகணங்களால் வணங்கத்தக்க தங்கள் சரணங்களை நான் வணங்குகிறேன்.(11) பிரம்மரே {பிரம்மரின் மகனே}, இந்த ராஜ்ஜியம், என்னுடைய புத்திரர்களான இவர்கள், என்னுடைய தாரங்களான {மனைவியரான} இவர்கள், இத்தகைய நாங்கள் {உமக்கு} என்ன செய்ய வேண்டும்? என்ன காரியம் {உள்ளது}? தாங்கள் எங்களுக்கு ஆணையிடுவீராக" {என்றான் கார்த்தவீரியன்}.(12)

புலஸ்தியர், அந்தப் பார்த்திபனிடம் {பூமியை ஆள்பவனான கார்த்தவீரியனிடம்}, தர்மங்கள், அக்னிகள் {வேள்விகள்}, புத்திரர்களின் மங்கலத்தை விசாரித்தபிறகு, ஹைஹயர்களின் ராஜாவான அர்ஜுனனிடம் {பின்வருமாறு} சொன்னார்:(13) "நரேந்திரா {மனிதர்களின் தலைவா}, அம்புஜ பத்ராக்ஷா {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே}, பூர்ணச் சந்திரனைப் போன்ற ஆனனத்தை {முகத்தைக்} கொண்டவனே, உன் பலம் {வலிமை} ஒப்பற்றதாகும். ஏனெனில், தசக்ரீவன் உன்னால் வெல்லப்பட்டிருக்கிறான்.(14) எவனுக்குப் பயந்து, சாகர, அநிலர்கள் இருவரும் அசைவற்றவர்களாகி நின்றனரோ {கடலும், காற்றும் அசைவற்றனவாகி நின்றனவோ}, அத்தகையவனும், போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவனுமான என் பௌத்திரனான இவன் {என் பேரனான இந்த ராவணன்}, போரில் உன்னால் கட்டப்பட்டிருக்கிறான்.(15)  உன்னால் என் புத்திரகனின் {குழந்தையான / பேரனான ராவணனின்} புகழ் பருகப்பட்டது; {அவனது} பெயரும் பரவலாக அறிவிக்கப்பட்டது. என் வாக்கியத்தால் யாசிக்கப்படுபவனான நீ, {என்} வத்ஸன் {அன்புக்குழந்தை} தசானனனை விடுவிப்பாயாக" {என்றார் புலஸ்தியர்}.(16)

புலஸ்தியரின் ஆணையை மறுக்காதேற்று, ஒரு சொல்லும் பேசாதிருந்த பார்த்திபேந்திரன் {கார்த்தவீரிய} அர்ஜுனன், பெரும் மகிழ்ச்சியுடன் ராக்ஷசேந்திரனை விடுவித்தே விட்டான்.(17) அந்த அர்ஜுனன், அந்த திரிதச அரியை {தேவர்களின் பகைவனான அந்த ராவணனை}, முழுமையாக விடுவித்து, திவ்ய ஆபரண, மாலை, அம்பரங்களால் {ஆடைகளால் அவனை} நன்கு பூஜித்து {கௌரவித்து}, அக்னியுடனும், அஹிம்சையுடனும் கூடிய {அக்னியை சாட்சியாக வைத்து வலம் வந்து, ஒருபோதும் தீங்கிழைக்காத} நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அந்த பிரம்மனின் மகனை {புலஸ்தியரை} வணங்கி, தன் கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(18)

பிரதாபவானான ராக்ஷசேந்திரன் {ராவணன்} முழுமையாக வீழ்த்தப்பட்டு, லஜ்ஜையும் {வெட்கமும்}, அவமானமும் அடைந்து, புலஸ்திய முனிவராலும் அணைத்துக் கொள்ளப்பட்டு, ஆதித்யங்கள் {விருந்தோம்பல்கள்} செய்யப்பட்டவனாக அனுப்பி வைக்கப்பட்டான்.(19) பிதாமஹனின் {பிரம்மனின்} மகனும், முனிபுங்கவருமான {முனிவர்களில் முதன்மையானவருமான} புலஸ்தியர், தசக்ரீவனை விடுவித்துவிட்டு, பிரம்மலோகத்தைச் சென்றடைந்தார்.(20) இவ்வாறு மஹாபலம் வாய்ந்த அந்த ராவணன், கார்த்தவீரியனிடம் பெரும் அவமானத்தை அடைந்தான். எனினும், புலஸ்தியரின் வசனத்தினால் மீண்டும் விடுவிக்கப்பட்டான்.(21)

இராகவநந்தனா {ரகு வம்சத்திற்கு மகிழ்ச்சியளிப்பவனே}, இவ்வாறு, பலவான்களைக் காட்டிலும் பலவான்கள் உண்டு. எவன் தனக்கு பிரியத்தை விரும்புகிறானோ, அவனே பிறரை அவமதிக்கும் காரியத்தைச் செய்யக் கூடாது.(22) பிறகு, பிசிதாசனர்களின் {ஊனுண்ணும் ராக்ஷசர்களின்} அந்த ராஜா {ராவணன்}, ஆயிரம் கைகளைக் கொண்டவனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} நட்பைப் பெற்ற செருக்கால், மீண்டும் நிருபர்களை {மன்னர்களை} அழிக்கத் தொடங்கி, சர்வ பிருத்வியிலும் சுற்றித் திரிந்தான்.(23) 

உத்தர ராமாயணம் சர்க்கம் – 033ல் உள்ள சுலோகங்கள்: 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகஸ்தியர் அனரண்யன் அனலை அரம்பை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் உமை ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேதுமதி கைகசி கௌ சங்கன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுந்தரி சுமாலி சுரபி சூரியபானு சூர்ப்பணகை திருணபிந்து துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிவாதகவசர்கள் பத்மன் பரத்வாஜர் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிரௌஷ்டபதன் புரூரவஸ் புலஸ்தியர் புஷ்கரன் மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மிருத்யு யமன் வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹேதி