The one with a yellow eye | Sarga-013 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மாளிகையில் கும்பகர்ணன் துயலச் சென்றது; இராவணனின் அத்துமீறல்கள்; குபேரனால் அனுப்பப்பட்ட தூதன் கொல்லப்பட்டது...
சிறிது காலத்திற்குப் பிறகு லோகேஷ்வரனால் {பிரம்மனால்} அனுப்பப்பட்ட நித்திரையானவள் ரூபம் கொண்டு வந்து கும்பகர்ணனை ஆட்கொண்டாள்.(1) அப்போது ஆசனத்தில் அமர்ந்திருந்த பிராதாவிடம் {ராவணனிடம்}, கும்பகர்ணன் இந்தச் சொற்களைக் கூறினான், "நித்திரை என்னைப் பெரிதும் வருத்துகிறது. இராஜரே, எனக்கு ஓர் ஆலயத்தை {வசிப்பிடத்தை} அமைப்பீராக" {என்றான்}.(2)
பிறகு அந்த ராஜா {ராவணன்} விஷ்வகர்மாவைப் போன்ற சில்பிகளை {கட்டடக் கலைஞர்களை} நியமித்தான். ஒரு யோஜனை விஸ்தீரணமும் {அகலமும்}, இரு மடங்கு நீளமும் கொண்டதான அஃது ஒளிமிக்கதாக இருந்தது.(3) ஸ்படிகம், காஞ்சனம் {பொன்} ஆகியவற்றாலான அழகிய ஸ்தம்பங்களால் {தூண்களால்} அஃது அலங்கரிக்கப்பட்டு, காணத்தகுந்ததாகவும், குறைகளற்றதாகவும் கும்பகர்ணனுக்காக அஃது அமைக்கப்பட்டது.(4) அதில் வைடூரியத்தாலான படிக்கட்டுகளும், கிங்கிணி மணிகள் கட்டிய சாளரங்களும், தந்தங்களாலான தோரணங்களும் {நுழைவாயில்களும்}, வஜ்ரத்தாலான வேதிகைகளும் {வைரத்தாலான மேடைகளும்} இருந்தன.(5) இவ்வாறு, அந்த ராக்ஷசன் {ராவணன்}, மனோஹரமானதாகவும் {மனத்தைக் கொள்ளை கொள்வதாகவும்}, புண்ணியமான மேருவிலுள்ள குகையைப் போல எங்கும் நித்யம் சுகமானதாகவும், சர்வ சுகங்களையும் அனுபவிக்கச் செய்வதாகவும் அதை அமைத்தான்.(6)
மஹாபலவானான கும்பகர்ணன் அங்கே சென்று நித்திரையில் ஆழ்ந்தான். அவன் பல்லாயிரம் ஆண்டுகள் அங்கே சயனித்தாலும் எழுந்தானில்லை.(7) கும்பகர்ணன் நித்திரையால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, கட்டுப்பாடில்லாதவனாக தேவர்கள், ரிஷிகள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரைத் துன்புறுத்தினான்.(8) அழகிய உத்யானங்கள், நந்தனங்கள் எவையெவை இருந்தனவோ, அவற்றை தசானனன் பெருங்குரோதத்துடன் சென்று உருவழித்தான்.(9) அந்த ராக்ஷசன், கஜத்தை {யானையைப்} போல, நதிகளில் கிரீடை செய்தான் {விளையாடினான்}; வாயுவைப் போல விருக்ஷங்களை முறித்தான்; வஜ்ரத்தை {இடியைப்} போல மலைகளைத் தகர்த்தான்.(10)
தசக்ரீவனின் நடத்தையை தனேஷ்வரன் {குபேரன்} புரிந்து கொண்டான். தர்மஜ்ஞனான அவன் தன் குலத்திற்குத் தகுந்த நடத்தையை நினைவில் கொண்டான்.(11) பிறகு அந்த வைஷ்ரவணன், தசக்ரீவனின் ஹிதத்திற்காக {நன்மைக்காக}, தன் பிராதாவைக் காண லங்கைக்கு ஒரு தூதனை அனுப்பினான்.(12) அவன் {அந்தத் தூதன்} லங்கா நகரத்திற்குச் சென்று விபீஷணனைச் சந்தித்தான். அவன் {விபீஷணன்}, தர்மத்திற்கு இணக்கமாக அவனைக் கௌரவித்து, அவனது வருகையை {வருகைக்கான காரணத்தைக்} குறித்துக் கேட்டான்.(13) விபீஷ்ணன் ராஜனின் ஞாதிகளுடைய குசலம் {குபேரனின் உற்றார் உறவினர் நலனைக் குறித்து} விசாரித்தான். பிறகு, சபையில் அமர்ந்திருந்த தசானனனை {பத்து முகங்களைக் கொண்ட ராவணனை} அவனுக்குக் காட்டினான்.(14)
அங்கே அவன் சொந்த தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ராஜனைக் கண்டு, "ஜயம் {வெற்றி} உண்டாகட்டும்" என்ற சொற்களால் அவனை பூஜித்துவிட்டு அமைதியடைந்தான்.(15)
அங்கே அவன் சிறந்த விரிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தான். பிறகு அந்தத் தூதன் தசக்ரீவனிடம் இந்த வாக்கியத்தைக் கூறினான்:(16) "இராஜரே, உம் பிராதா சொன்ன அனைத்தையும் நான் இப்போது உமக்குச் சொல்கிறேன். "வீரா, குலம், நடத்தை ஆகிய இரண்டும் ஒப்பானவை.(17) சாதுவாக இருக்க வேண்டுமெனில் நீ செய்யும் காரியங்களை இத்தோடு நிறுத்துவாயாக. சாத்தியமெனில் சாதுக்களின் தர்மத்தில் நிலைநிற்க முயற்சிப்பாயாக.(18) நந்தனம் பங்கம் செய்யப்பட்டதை நான் பார்த்தேன். இரிஷிகள் கொல்லப்பட்டதைக் கேட்டேன். இராஜனே, உன்னைக் குறித்த தேவர்களின் உத்யோகத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டேன்[1].(19) இராக்ஷசாதிபா, நீ மீண்டும் மீண்டும் என்னைப் புறக்கணித்தாய். பாலன் அபராதம் {தவறு} செய்தாலும், அவனது பந்துக்கள் {உற்றார் உறவினர்} அவனிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.(20)
[1] இந்த சர்க்கத்தின் 33ம் சுலோகத்தில், "தேவர்களும், முனிவர்களும் உன்னை வதம் செய்வதற்கான உபாயங்களைக் குறித்துச் சிந்திக்கின்றனர்" என்று குபேரன் சொல்லி அனுப்புவதாக வருகிறது. இஃது அதற்கான பீடிகையே.
எனவே, தர்மத்தைக் கடைப்பிடிக்க ஹிமவதத்திற்கு பின்புறம் {இமய மலைச் சாரலுக்குச்} சென்றேன். அங்கே நான், நியதங்களுடன் கூடியவனாகவும், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாகவும் ரௌத்திரமான விரதத்தைக் கடைப்பிடித்தேன்.(21) தேவியுடன் கூடிய பிரபுவை {பார்வதியுடன் சேர்ந்திருக்கும் சிவனை} அங்கே நான் தேவோமயமாகக் கண்டேன். தைவத்தால் {விதிவசத்தால்} என் இடது கண்ணை அங்கே இருந்த தேவியின் மீது வைத்தேன்.(22) உருத்ராணி, ஒப்பற்ற ரூபத்தை ஏற்றவளாக அங்கே இருந்தாள். "இந்த சுபமான பெண் யார்?" என்று அறிவதைத் தவிர என்னில் வேறு நோக்கம் இல்லை. (23) தேவியின் திவ்ய பிரபாவத்தால் என் இடது கண் எரிந்தது. புழுதியால் ஒளி மறைக்கப்பட்டதைப் போல, {மண்ணின்} இளஞ்சிவப்பு நிறமாக அது {இடது கண்} மாறியது[2].(24) பிறகு நான் அந்த மலையில் இருந்த மற்றொரு விஸ்தீரணமான பகுதிக்குச் சென்றேன். அங்கே எண்ணூறு வருஷங்கள் மௌனமாக இருந்து ஒரு மஹாவிரதத்தைக் கடைப்பிடித்தேன்[3][4].(25)
[2] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனையும், பார்வதியையும் குபேரன் பொறாமையுடன் பார்த்ததால் அவனது கண் அழிந்து போனது. அதன்பின்னர், அவன் இழந்த அந்தக் கண்ணுக்குப் பதிலாக ஒரு மஞ்சள் நிறக் கண் கொடுக்கப்பட்டது. வழக்கமான கதையில் சிறிய மாறுபாட்டுடன் இங்கே இது கொடுக்கப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.
[3] ஸ்ரீநிவாஸராகவாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இஃது கேதாரவிரதமென்பர்" என்றிருக்கிறது.
[4] இமயத்து ஐம்முகத்து ஈசனை நோக்கி யான் எழில்சேர்சிமையத்துத் தவம் செய்கின்ற வேலையில் சிவனோடுஉமையைக் கண்டு இந்த உத்தமி யாவளோ என ஓர்சமையத்து ஆங்கு அவள் சலித்து எனைத் தழல் எரிய விழிப்ப {260}பார்த்த என் இடக் கண்ணது பற்பமாய் வீழவேர்த்து மெய்குலைந்து அவ்விடத்து இருக்க யான் வெருவிசீர்த் தவம்திகழ் சிலம்பின் வேறு ஓர் இடம் சேர்ந்துபேர்த்தும் முன்பு போல் பெருந்தவம் புரிந்தனன் பேணி {261}- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 260, 261ம் பாடல்கள், வரையெடுத்த படலம்பொருள்: இமய மலையின் எழில்மிக்க சிகரத்தில் இருந்த ஐந்து முகங்களைக் கொண்ட ஈசனை நோக்கி நான் தவம் செய்தபோது, சிவனோடு உமையும் வரக் கண்டு, இந்த உத்தமி யாரோ என கவனிக்கின்ற சமயத்தில் அவள் அருவருத்து என்னைத் தீயெழுமாறு விழித்துப் பார்க்க,{260} பார்த்துக் கொண்டிருந்த என் இடது கண் வெந்து நீறாய்த் தரையில் வீழ, நான் வியர்த்து மெய் நடுங்கி, அவ்விடத்தில் இருக்கவும் அஞ்சி சிறப்புடைய தவம் விளங்குகின்ற இமயமலையில் வேறோர் இடம் சேர்ந்து, மீண்டும் முன்பு போலவே புலன்கள் புறம்போகாதபடி போற்றிப் பெரும் தவத்தைப் புரிந்தேன்.{261}
அந்த நியமம் நிறைவடைந்ததும் மஹேஷ்வர தேவன் அங்கே தோன்றினான். மனத்தில் பிரீதியடைந்த அந்தப் பிரபு, பிரீதியுடன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(26) "தேவியின் ரூபத்தைக் கண்டதால் பைங்கல்யம் கிடைத்தது {உன் கண் பிங்கள வர்ணத்தை அடைந்தது}. தர்மஜ்ஞா, உன் தபத்தாலும், சிறந்த விரதத்தாலும் நான் பிரீதியடைந்தேன்.(27) நான் இந்த விரதத்தை நிறைவேற்றியிருக்கிறேன், தனாதிபா, நீயும் அவ்வாறே {நிறைவேற்றியிருக்கிறாய்}. இத்தகைய விரதத்தை நிறைவேற்றும் மூன்றாவது நபர் வேறு யாரும் கிடையாது.(28) இது கடைப்பிடிப்பதற்கரிய விரதமாகும். முன்பு இதை நானே அறிமுகப்படுத்தினேன். எனவே, சௌம்யா, தனேஷ்வரா, என்னுடனான நட்பை ஏற்றுக் கொள்வாயாக.(29) அனகா {பாபமற்றவனே}, உன் தவத்தால் வெல்லப்பட்ட என்னை நண்பனாக்கிக் கொள்வாயாக. தேவியின் பிரபாவத்தால் உன்னுடைய இடது கண் எரிந்தது.(30) எனவே, ஏகாக்ஷிபிங்களன் {மஞ்சள் நிற ஒற்றைக் கண்ணைக் கொண்டவன்} என்ற பெயர் உனக்கு சாஷ்வதமாக {என்றென்றும்} நிலைத்திருக்கும்" {என்றான் சிவன்}. இவ்வாறு சங்கரனின் நட்பைப் பெற்று, அவன் அனுமதியுடன் திரும்பினேன்.(31)
வந்ததும் நீ செய்யும் பாபங்களைக் குறித்துக் கேள்விப்பட்டேன்.(32) குலதூஷணமான அதர்மிஷ்டத் தொடர்பைத் தவிர்ப்பாயாக {நம் குலத்திற்குக் கேட்டை விளைவிக்கும் இந்தப் பாபச் செயல்களைக் கைவிடுவாயாக}. இரிஷி சங்கத்தினரும், ஸுரர்களும் உன் வதத்திற்கான உபாயங்களைக் குறித்துச் சிந்திக்கிறார்கள்" {என்ற குபேரனின் சொற்களை ராவணனிடம் சொன்னான் அந்தத் தூதன்}.(33)
இவ்வாறு சொல்லப்பட்டதும், குரோதத்தால் கண்கள் சிவந்த தசக்ரீவன், தன் கைகளைப் பிசைந்து, பற்களைக் கடித்தபடியே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(34) "தூதா, நீ பேசுவது எவனுடைய வாக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். இனி நீ உண்மையில் இருக்கப் போவதில்லை. உன்னை ஏவிய என் பிராதாவும் இனி உண்மையில் இருக்கப் போவதில்லை.(35) தனரக்ஷகன் கூறியனுப்பியது எதுவோ, அஃது எனக்கு ஹிதமானதல்ல. மூடன், மஹேஷ்வரனுடன் கொண்ட நட்பைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான்[5].(36) உன்னால் எது சொல்லப்பட்டதோ, அஃது என்னால் பொறுத்துக் கொள்ளப்பட முடியாதது. தூதா, இவ்வளவு காலம் நான் அவனைப் பொறுத்துக் கொண்டேன்.(37) எனக்கு ஜியேஷ்டன் {மூத்தவன்} என்றும், குரு {பெரியவன்} என்றும் மதித்துக் கொல்லாதிருந்தேன். ஆனால் அவனது வாக்கியத்தைக் கேட்ட பிறகு, ஒரு முடிவைத் தீர்மானித்திருக்கிறேன்.(38) என் பாஹு வீரியத்தால் {கைகளின் வலிமையால்} மூன்று உலகங்களையும் நான் வெல்வேன்.(39) இந்த முஹூர்த்தத்திலேயே அவன் ஒருவனை மட்டுமல்லாமல் நான்கு லோகபாலர்களையும் நான் யமக்ஷயத்திற்கு அனுப்பி வைக்கப் போகிறேன்" {என்றான் ராவணன்}.(40)
[5] ஆசுஇல்லாது அரன் ஒப்பவன் அளகையில் அவனாம்ஈசன் தோழனாம் அவையெலாம் என்முனம் சார்ந்துபேசும் தூதனார் பெறுவன இவை என வாளால்வீசினான் அவன் இருதுணியாக மண் வீழ்ந்தான்- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 267ம் பாடல், வரையெடுத்த படலம்பொருள்: ஒரு குற்றமுமற்று உலகிற்கு ஆதாரமாக இருக்கும் சிவனுக்கு ஒப்பானவன் அளகாபுரியில் உள்ள அவனாம் {அந்தக் குபேரனாம்}, அதற்கு மேலும் அந்தச் சிவனின் தோழனாம். அப்பெருமையெல்லாம் மூவுலகுக்கும் தலைவனாகிய என் முன் வந்து பேசிய தூதுவனார் பெறுவனவாகிய பரிசுகள் இவை என்று கூறியபடியே தன் கைவாளால் வீசினான் {ராவணன்}. அத்தூதுவன் இரண்டு துண்டங்களாகத் தரைமேல் வீழ்ந்தான்.
இவ்வாறு சொன்ன லங்கேசன், தன் கட்கத்தால் {வாளால்} தூதனை வெட்டினான். துராத்மாக்களான ராக்ஷசர்கள் பக்ஷிப்பதற்கு அவனை {தூதனின் உடலைக்} கொடுத்தான்.(41) பிறகு, ஸ்வஸ்த்யயனம் {பயணத்திற்கு நலம் விளைவிக்கும் சடங்குகளைச்} செய்த ராவணன், தன் ரதத்தில் ஏறி, மூன்று உலகங்களையும் வெல்ல விரும்பி, தனேஷ்வரன் எங்கிருந்தானோ அங்கே சென்றான்.(42)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 013ல் உள்ள சுலோகங்கள்: 42
| Previous | | Sanskrit | | English | | Next |
