Lanka attained from Kubera | Sarga-011 | Uththara Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுமாலியின் வேண்டுகோள்; பிரஹஸ்தனின் தூண்டுதல்; குபேரனிடம் சென்ற தூதன்; இலங்கை ராவணன் வசமானது...
அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகளான ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர்} வரம் பெற்றதை அறிந்த சுமாலி, தன் பயத்தைக் கைவிட்டு, தன் தொண்டர்களுடன் ரசாதலத்திலிருந்து எழுந்து வந்தான்.(1) அந்த ராக்ஷசனின் {சுமாலியின்} அமைச்சர்களான மாரீசன், பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மஹோதரன் ஆகியோரும் கோபத்துடன் எழுந்து வந்தனர்.(2)
அமைச்சர்களுடன் ராக்ஷசபுங்கவர்கள் புடைசூழச் சென்ற சுமாலி, தசக்ரீவனை அணுகி, அவனைத் தழுவிக் கொண்டு {பின்வரும்} இதைக் கூறினான்:(3) "வத்ஸா {அன்புக் குழந்தாய்}, இந்த மனோரதம் நிறைவேறியது பெரும்பேறாகும். திரிபுவனங்களிலும் சிறந்தவரிடம் {மூவுலகங்களிலும் சிறந்தவரான பிரம்மனிடம்} இருந்து உத்தம வரத்தைப் பெற்றிருக்கிறாய்.(4) எதனால் நாங்கள் லங்கையைக் கைவிட்டு ரசாதலத்திற்குச் சென்றோமோ, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, அந்த விஷ்ணுவிடம் கொண்ட மஹத்தான பயம் {இப்போது} நீங்கியது.(5) அவனிடம் கொண்ட பயத்தால் பீடிக்கப்பட்டு எங்கள் ஆலயங்களைக் கைவிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வெளியேறிய நாங்கள் அனைவரும் சேர்ந்து ஓடிச் சென்று ரசாதலத்திற்குள் பிரவேசித்தோம்.(6) எங்கள் லங்கா நகரம் ராக்ஷசர்களுக்கு ஏற்றது. அங்கே, உன் பிராதாவும் {உன்னுடன் பிறந்தவனும்}, மதிமிக்கவனுமான தனாதியக்ஷன் {தனத்தின் தலைவனான குபேரன்} வசித்திருக்கிறான்.(7) அனகா {பாவமற்றவனே}, சாம, தானங்களினால் அதை மட்டும் நாம் திரும்பப் பெறுவது சாத்தியமென்றால், மஹாபாஹோ, அப்போது நாம் காரியம் நிறைவேறியவராவோம்.(8) ஐயா, நீ லங்கேஷ்வரனாவாய். இதில் சந்தேகமில்லை. மூழ்கிப் போன இந்த ராக்ஷச வம்சத்தை நீயே எழுச்சியடையச் செய்தாய். மஹாபலவானே, எங்கள் அனைவருக்கும் நீயே பிரபு ஆவாய்" {என்றான் சுமாலி}.(9)
அப்போது தசக்ரீவன், இவ்வாறு சொன்ன தன் மாதாமஹனிடம் {தாய்வழி தாத்தாவிடம் பின்வருமாறு} கூறினான், "வித்தேசர் எங்களுக்கு குரு {நிதிகளின் தலைவரான குபேரர் எங்களுக்குப் பெரியவர் / மூத்தவர்} ஆவார். நீர் இவ்வாறு பேசலாகாது" {என்றான் ராவணன்}.(10)
சாமம் {பேசித் தீர்ப்பது} கூட ராக்ஷசேந்திரனால் {ராவணனால்} நிராகரிக்கப்பட்டதும், அவனது கருத்தை அறிந்து கொண்ட ராக்ஷசன் {சுமாலி} எதுவும் பேசாதிருந்தான்.(11) பிறகு, சிறிது காலம் ராவணன் அங்கேயே {சிலேஷ்மாதகவனத்திலேயே} வசித்திருந்தான். பிறகு, இந்த வாக்கியத்தைச் சொன்ன நிசாசரன் தசக்ரீவனிடம்,(12) பணிவுடன் காரணத்தை விளக்கும் வகையில் பிரஹஸ்தன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(13) "தசக்ரீவா, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, நீ இவ்வாறு பேசுவது முறையல்ல. சூரர்களிடையே சகோதரத்துவம் கிடையாது. என் சொற்களைக் கேட்பாயாக.(14) சகோதரிகளும், பரமரூபிணிகளுமான அதிதியும், திதியும் ஒன்றாக கஷ்யப பிரஜாபதியின் பாரியைகளாக இருந்தனர்.(15) அதிதி, திரிபுவனேஷ்வரர்களான தேவர்களைப் பெற்றெடுத்தாள். திதியும் கசியபரிடம் புத்திரர்கள் பலரைப் பெற்றெடுத்தாள்.(16) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்த ராவணா}, இந்தப் புரீயும் {லங்கையும்}, வனங்களும், அர்ணவங்களும் {கடல்களும்}, பர்வதங்களும் சூழ்ந்த மஹீயும் மகிமைமிக்க அந்த தைத்தியர்களுக்கு உரியவையாக இருந்தன.(17) மகிமைமிக்க பிரபு விஷ்ணு சமரில் அவர்களை {ராக்ஷசர்களைக்} கொன்று அழிவற்ற இம்மூவுலகங்களையும் தேவர்களின் வசமாக்கினான்.(18) நீ ஒருவன் மட்டும் இதற்கு நேர்மாறாகச் செயல்படவில்லை. நான் சொன்னதைப் போல ஸுராஸுரர்கள் செய்ததையே நீயும் செய்வாயாக" {என்றான் பிரஹஸ்தன்}.(19)
இவ்வாறு சொல்லப்பட்டதும் தசக்ரீவன் தன் அந்தராத்மாவுக்குள் மகிழ்ச்சியடைந்தான். ஒரு முஹூர்த்தம் சிந்தித்த பிறகு அவன், "அப்படியே ஆகட்டும்" என்றான்.(20) வீரியவானான அந்த தசக்ரீவன் அந்த மகிழ்ச்சியுடனேயே க்ஷணதாசரர்கள் {இரவுலாவிகள்} சகிதனாக அன்றே வனத்திற்குச் சென்றான்.(21)
பிறகு, நிசாசரனான தசக்ரீவன், திரிகூட மலையை அடைந்தான். அவன் வாக்கிய கோவிதனான பிரஹஸ்தனைத் தூதனாக அனுப்பினான்,(22) "பிரஹஸ்தரே, நைர்ருதபுங்கவரிடம் {குபேரரிடம்}[1] சீக்கிரம் சென்று {பின்வருமாறு} சொல்வீராக. அந்த வித்தேசரிடம் {குபேரனிடம்} சாமப் பூர்வமான இந்த என் சொற்களைச் சொல்வீராக.(23) "இராஜரே, இந்த லங்காபுரி மஹாத்மாக்களான ராக்ஷசர்களுக்கு உரியதாகும். சௌம்யரே, இங்கே நீர் வசித்திருப்பது உமக்குத் தகுந்ததல்ல.(24) அதுல விக்ரமரே {ஒப்பிலா வீரம் படைத்தவரே}, இதை எங்களுக்கு நீர் திருப்பிக் கொடுத்தால் எனக்குப் பிரீதியுண்டாகும். நீதியும் கடைப்பிடிக்கப்பட்டதாகும்" {என்று சொல்வீராக" என்று பிரஹஸ்தனிடம் சொன்னான் ராவணன்}.(25)
[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ஏதோ பிழை இருப்பதாகத் தெரிகிறது. குபேரன் இங்கே ராக்ஷசர்களில் காளை என்று குறிப்பிடப்படுகிறான்" என்றிருக்கிறது.
அவன் தனதனால் ரக்ஷிக்கப்பட்ட {பிரஹஸ்தன் குபேரனால் பாதுகாக்கப்பட்ட} லங்காம்புரீக்குச் சென்றான். பிறகு, அவன் வித்தபாலனிடம் {செல்வத்தைக் காப்பவனான குபேரனிடம்} இந்தச் சொற்களைக் கூறினான்:(26) "நல்விரதம் கொண்டவனே, நான் உன் பிராதாவான {உன்னுடன் பிறந்த} தசக்ரீவனால் அனுப்பப்பட்டேன். மஹாபாஹோ, சஸ்திரம் தாங்கிய அனைவரிலும் சிறந்தவனே, உன் சமீபத்தை அடைந்திருக்கிறேன்.(27) சர்வ சாஸ்திர விசாரதா {சாஸ்திரங்கள் அனைத்திலும் தேர்ச்சிமிக்கவனே}, மஹாபிரஜ்ஞா {பேரறிவாளனே}, இதைக் கேட்பாயாக. வித்தேசா, தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்} கூறியவையே என் வசனமாகும்.(28) இந்த ரம்யமான புரீ, உண்மையில் சுமாலி முதலியவர்களுக்கு உரியதாக இருந்தது. விசாலாக்ஷா {நீண்ட விழிகளைக் கொண்டவனே}, பூர்வத்தில் இது பீமவிக்ரமர்களான ராக்ஷசர்களால் அனுபவிக்கப்பட்டது.(29) விஷ்ரவாத்மஜா {விஸ்ரவஸின் மகனே}, அவன் உன்னிடம் தெரிவிப்பது இதுவே. எனவே, தாதா {ஐயா}, சாமத்தால் {பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியாகக்} கேட்பவனுக்கு இதைத் திருப்பிக் கொடுப்பாயாக" {என்றான் பிரஹஸ்தன்}.(30)
பிரஹஸ்தனின் இந்தச் சொற்களை வைச்ரவண தேவன் கேட்டபிறகு, வாக்கியவிசாரதனான பிரஹஸ்தனிடம் இந்த வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினான்:(31) "என் பிதா, நிசாசரர்கள் சூன்யமான {இரவுலாவிகள் இல்லாத} இந்த லங்கையை எனக்கு தத்தம் செய்தார். தானம், மானம் முதலிய குணங்களைக் கொண்ட யக்ஷர்கள் என்னுடன் வசித்து வருகின்றனர்.(32) தசக்ரீவனிடம் சென்று இதைச் சொல்வீராக. "மஹாபாஹோ, என்னுடைய இந்த புரத்தையும் {நகரத்தையும்}, கண்டகம் {முட்கள்} இல்லாத இந்த ராஜ்யத்தையும் நீயும் சேர்ந்து அனுபவிப்பாயாக" {என்று சொல்வீராக" என்றான் குபேரன்}[2].(33)
[2] அன்னவாசகம் கேட்ட அருநிதிக்கோன்வரும்கருமம் மனத்தின் ஆய்ந்தேஎன் அரசும் என் பதியும் என் தம்பியினதுஅன்றே எனக்கு என் தம்பிசொன்னபடி செய்வென் எனச் சொல்லி விடுத்துஅவன் தனக்குச் சொன்னவெல்லாம்தன்னுடைய தந்தைக்குத் தான் கூறக்கேட்டு அந்தத் தவத்தோன் கூறும்- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 213ம் பாடல், இராவணன் பிறப்பு படலம்பொருள்: {பிரஹஸ்தன் சொன்ன} அந்தச் சொல்லைக் கேட்ட குபேரன், இனி வரும் கருமம் யாது என்பதைத் தன் மனத்தில் ஆராய்ந்து பார்த்து, என் அரசாட்சியும், என் நகரமும் என் தம்பிக்கும் உரியதே. எனக்கென்று என்ன இருக்கிறது? தம்பி சொன்னபடி {லங்கை நகரை} தம்பிக்குத் தந்து விடுகிறேன் என உடன்பட்டுச் சொல்லியனுப்பிவிட்டு, அவன் தனக்குச் சொன்ன அனைத்தையும் தன்னுடைய தந்தைக்குச் சொல்ல, அதைக் கேட்ட தவத்தோன் {விஷ்ரவஸ்} சொன்னான்.
இதைச் சொல்லிவிட்டு தனாதியக்ஷன் தன் பிதாவிடம் சென்றான் {செல்வத்தின் தலைவனான குபேரன் தன் தந்தையான விஷ்வரசிடம் சென்றான்}.(34) அவன் தன் குருவை வணங்கிவிட்டு, ராவணனின் விருப்பத்தை {பின்வருமாறு} தெரிவித்தான், "தாதா {ஐயா}, இந்த தசக்ரீவன் என்னிடம் ஒரு தூதரை அனுப்பி,(35) "பூர்வத்தில் ரக்ஷோகணங்கள் {ராக்ஷசர்கள்} வசித்து வந்த லங்கா நகரத்தைத் திருப்பிக் கொடுப்பீராக" என்று கேட்கிறான். நல்விரதங்களைக் கொண்டவரே, நான் இங்கே எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சொல்வீராக" {என்று கேட்டான் குபேரன்}.(36)
பிரம்மரிஷியும், முனிபுங்கவருமான விஷ்வரஸ், கைகளைக் கூப்பி நிற்கும் தனதனிடம் {குபேரனிடம் பின்வருமாறு} கூறினார், "புத்திரா, என் சொற்களைக் கேட்பாயாக.(37) மஹாபாஹு, தசக்ரீவன் என் சன்னிதானத்தில் {முன்னிலையில்} இதைக் கூறினான். அந்த துர்மதி கொண்டவனை நான் கண்டித்தேன்; பல வகையிலும் அவனுக்கு எடுத்துரைத்தேன்.(38) குரோதத்துடன் நான் மீண்டும் மீண்டும் சொல்லியும் அவன் ஏற்க மறுக்கிறான். புத்திரா, தர்மத்திற்கு இணக்கமான என் சொற்களை நீ கேட்பாயாக.(39) அந்த துர்மதி படைத்தவன், வரம் பெற்ற மயக்கத்தில் மதிக்கத்தக்கனவற்றை மதியாதிருக்கிறான். என் சாபத்தால் பயங்கர இயல்பை அடைகிறான் என்பதை அவன் அறிகிறானில்லை.(40) எனவே, மஹாபாஹோ, தரணீதரமான கைலாசத்திற்கு நீ செல்வாயாக. உன்னை அனுசரிப்போருடன் சேர்ந்து லங்கையைக் கைவிட்டு வெளியேறி அங்கே {கைலாசத்தில்} வசிப்பாயாக.(41) நதிகளில் உத்தமமானதும், ரம்மியமானதுமான மந்தாகினி நதி அங்கே இருக்கிறது. அது சூரியனைப் போன்று ஒளிரும் காஞ்சனமயமான பங்கஜங்களால் {பொற்தாமரைகளால்} மறைக்கப்பட்டிருக்கிறது.(42) குமுதங்களும் {ஆம்பல்களும்}, உத்பலங்களும் {நெய்தல்களும்}, சுகந்தமான பிற மலர்களும் அங்கே இருக்கின்றன.(43) தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், உரகர்கள், கின்னரர்கள் ஆகியோர் அங்கே சென்று மகிழ்ச்சியுடன் தங்கள் பொழுதைக் கழிக்க விரும்புகிறார்கள்.(44) தனதா {குபேரா}, இந்த ராக்ஷசனிடம் வைரம் {பகை} கொள்வது உன்னால் பொறுத்துக்கொள்ளத் தக்கதன்று. அவன் எப்படிப்பட்ட பரம வரத்தைப் பெற்றிருக்கிறான் என்பதை நீ அறிவாய்" {என்றார் விஷ்ரவஸ்}.(45)
இவ்வாறு சொல்லப்பட்டவன், பிதா எனும் கௌரவத்தால் {தந்தையின் மீது கொண்ட மதிப்பால்} உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு, தாரம், புத்திரர்கள் {மனைவி, மக்கள்}, அமைச்சர்கள், வாகனங்கள், தனம் ஆகியவற்றுடன் புறப்பட்டுச் சென்றான்.(46)
பிறகு, பிரஹஸ்தன் தசக்ரீவனிடம் சென்று, தன் அமைச்சர்கள் மற்றும் அனுஜர்களுடன் {தம்பிகளுடன்} இருந்த அந்த மஹாத்மாவை மகிழ்ச்சியுடன் கண்டு இந்த வசனத்தைச் சொன்னான்:(47) "இலங்கா நகரம் சூனியமாகிவிட்டது {வெறுமையாகிவிட்டது}. தனதன் {குபேரன்} அதைக் கைவிட்டுச் சென்றுவிட்டான். எங்களுடன் அங்கே பிரவேசித்து, ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பாயாக" {என்றான் பிரஹஸ்தன்}.(48)
இவ்வாறு தசக்ரீவனிடம் பிரஹஸ்தன் சொன்னதும், அந்த மஹாபலவான் {ராவணன்}, தன் பிராதாக்களுடனும் {தன்னுடன் பிறந்தோருடனும்}, படைவீரர்களுடனும் சேர்ந்து லங்கா நகருக்குள் பிரவேசித்தான்.(49) தனதனால் கைவிடப்பட்டதும், நன்கு வகுக்கப்பட்ட மஹாபாதைகளுடன் {நெடுஞ்சாலைகளுடன்} கூடியதுமான அதில் {லங்கையில்}, ஸ்வர்க்கத்தில் தேவாதிபனைப் போல அந்த தேவாரி {தேவர்களின் பகைவனான ராவணன்} ஏறினான்.(50) பிறகு அந்த தசானனன், க்ஷணதாசரர்களால் {இரவுலாவிகளால்} நிறுவப்பட்டவனாக அந்தப் புரீயில் வசித்திருந்தான். அந்தப் புரீ, நீல மேகங்களுக்கு ஒப்பான நிசாசரர்களால் {இரவுலாவிகளால்} பூர்ணம் அடைந்தது.(51) அப்போது தனேஷ்வரன் {குபேரன்}, பித்ரு வாக்கியத்தை கௌரவித்து, சசியைப் போன்று விமலமான கிரியில் {சந்திரனைப் போன்ற களங்கமற்ற வெண்மையான கைலாச மலையில்} தன் புரீயை அமைத்துக் கொண்டான். புரந்தரனின் அமராவதி எப்படியோ, அப்படியே சர்வ அலங்காரங்களுடன் கூடிய பவனங்களால் {மாளிகைகளால்} அதை {அந்த அளகாபுரி நகரத்தை} அலங்கரித்தான்.(52)
உத்தர ராமாயணம் சர்க்கம் – 011ல் உள்ள சுலோகங்கள்: 52
| Previous | | Sanskrit | | English | | Next |
