Sunday, 12 April 2026

இயக்ஷராக்ஷச யுத்தம் | சர்க்கம் – 014 (30)

The war between Yakshas and Rakshasas | Sarga-014 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனும், அவனது மந்திரிமாரும், யக்ஷர்கள் மீது தொடுத்த தாக்குதல்...

The battle between Rakshasas and Yakshas ChatGPT

அவன் {ராவணன்}, நித்யம் பலம் மிக்கவர்களான ஆறு அமைச்சர்களுடன் சென்றான். அவர்கள் மஹோதரன், பிரஹஸ்தன், மாரீசன், சுகன், சாரணன்,(1) நித்யம் சமர்செய்யத் துடிக்கும் வீரனான தூம்ராக்ஷன் ஆகியோராவர். இந்தப் புகழ்மிக்கவர்களால் சூழப்பட்ட அந்த ஸ்ரீமான் {ராவணன்}, உலகங்களை எரித்து விடுபவனைப் போலக் குரோதத்துடன் சென்றான்.(2) அவன் புரங்கள் {நகரங்கள்}, நதிகள், சைலங்கள், வனங்கள், உபவனங்கள் பலவற்றை ஒரு முஹூர்த்தத்தில் கடந்து சென்று, கைலாச கிரியை அடைந்தான்.(3)

துராத்மாவான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, யுத்தத்தில் பெரும் உற்சாகத்துடனும், குரோதத்துடனும் அந்த கிரியில் தன் மந்திரிகளுடன் இருப்பதைக் கேள்விப்பட்ட,(4) யக்ஷர்களால் அந்த ராக்ஷசனின் முன்னிலையில் நிற்க முடியவில்லை. "அவன் ராஜனின் பிராதா {தங்கள் மன்னனான குபேரனுடன் பிறந்தவன் இந்த ராவணன்}" என்பதைப் புரிந்து கொண்டு தனேஷ்வரன் {குபேரன்} எங்கிருந்தானோ, அங்கே சென்றனர்.(5) அவர்கள் சென்று, அவனது பிராதா {குபேரனுடன் பிறந்த ராவணன்} செய்யத் திட்டமிட்டிருக்கும் அனைத்தையும் சொன்னார்கள். தனதனின் {குபேரனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் அவர்கள் யுத்தம் செய்யப் புறப்பட்டனர்.(6) அப்போது அந்த பலம் {ராக்ஷசப்படை} பெருங்கடலைப் போலக் கொந்தளித்தது. அது சைலத்தை {மலையை} அசைப்பதைப் போல நைர்ருத ராஜனை {ராவணனை} அசைத்தது.(7)

பிறகு யக்ஷர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும் இடையில் ஒரு பயங்கர யுத்தம் மூண்டது. இராக்ஷசனின் அமைச்சர்கள் கலக்கமடைந்தனர்.(8) நிசாசரன் தசக்ரீவன் அத்தகைய அந்த சைனியத்தைக் கண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடியே, குரோதத்துடன் அவர்கள் மீது பாய்ந்தான்.(9) அந்த ராக்ஷசேந்திரனின் அமைச்சர்கள் கோர விக்ரமர்களாக இருந்தனர். அவர்கள் அந்த யக்ஷர்களில் ஆயிரம் பேருடனும், ஒருவர் பின் ஒருவராகப் போரிட்டனர்.(10) கதைகள் {கதாயுதங்கள்}, முசலங்கள், அசிகள் {வாள்கள்}, சக்திகள், தோமரங்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டபோதும், தசக்ரீவன் அந்த சைனியத்திற்குள் {யக்ஷர்களின் படைக்குள்} புகுந்தான்.(11) அப்போது அந்த தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, மேகக்கூட்டங்கள் மழையைப் பொழிவதைப் போல மறைக்கப்பட்டவனாக, மூச்சுவிடமுடியாத அளவுக்கு அங்கே தடுக்கப்பட்டான்.(12) 

இயக்ஷர்களின் சஸ்திரங்களால் தாக்கப்பட்டாலும், அவன், மேகத்தாரைகளால் நனைக்கப்பட்ட மஹீயை {மலையைப்} போலக் கலங்காதிருந்தான்.(13) அந்த துராத்மா, காலதண்டத்திற்கு ஒப்பான தன் கதையை {கதாயுதத்தை} உயர்த்தினான். பிறகு அவன், அந்த சைனியத்திற்குள் பிரவேசித்து, யக்ஷர்களை யமக்ஷயத்திற்கு {யமனின் இருப்பிடத்திற்கு} அனுப்பி வைத்தான்.(14) வாதத்தால் {தூண்டப்பட்ட} அக்னியைப் போல, விஸ்தீரணமாகச் சிதறிக் கிடக்கும் விறகுக் கட்டைகளைப் போன்ற யக்ஷர்களின் சைனியத்தை அவன் எரித்தான்.(15) எஞ்சியிருந்த யக்ஷர்கள், வாதத்தால் {காற்றால்} விரட்டப்படும் மேகங்களைப் போல, மஹா அமைச்சர்களான மஹோதரன், சுகன் ஆகியோரால் தாக்கப்பட்டனர்.(16)

தாக்கப்பட்டவர்களில் சிலர், பங்கமடைந்து போர்க்களத்தில் விழுந்தனர். இரணத்தில் {போர்க்களத்தில்} கோபத்துடன் தங்கள் கூர்மையான பற்களால் உதடுகளைக் கடித்தனர்.(17) களைப்படைந்த அவர்கள், போர்க்களத்தில் தங்கள் சஸ்திரங்களை இழந்து, அன்யோன்யம் ஆலிங்கனம் செய்த படியே {தழுவிக் கொண்ட} அந்த யக்ஷர்கள், ஜலத்தால் {நொறுங்கும்} கரைகளைப் போலக் கலக்கம் அடைந்தனர்.(18) பிருத்வீ தலத்தில் {பூமியில்} யுத்தம் செய்து, கொல்லப்பட்டு ஸ்வர்க்கத்திற்குச் சென்றவர்களாலும், இவற்றைக் காண வானத்தில் கூடியிருந்த ரிஷிகள் சங்கத்தினராலும் {முனிவர்கள் கூட்டத்தாலும்} வானத்தில் இடைவெளி இல்லாமல் போனது.(19)

மஹாபலவான்களான யக்ஷேந்திரர்கள் பங்கமடைந்ததைக் கண்டு, மஹாபாஹுவான தனாதியக்ஷன் {குபேரன்} வேறு யக்ஷர்களை அனுப்பினான்.(20) இதற்கிடையில், ராமா, வாகனங்களுடன் கூடிய மாபெரும் படையுடன், சம்யோதகண்டகன் என்றழைக்கப்படும் யக்ஷனையும் அனுப்ப, அவன் பாய்ந்து வந்தான்.(21) அவன் சக்கரத்தால் தாக்கும் விஷ்ணுவைப் போல, மாரீசனைத் தாக்கினான். அவன் {மாரீசன்} புண்ணியம் இழந்த கிரஹத்தைப் போல சைலத்திலிருந்து பூதலத்தில் {மலையில் இருந்து தரையில்} விழுந்தான்.(22) ஒரு முஹூர்த்தம் கழிந்து, நனவு மீண்டு, அந்த நிசாசரன் {மாரீசன்} ஓய்ந்திருந்தான். பிறகு, அவன், அந்த யக்ஷனுடன் போரிட்டான். அவனும் {யக்ஷன் சம்யோதகண்டனும்} தோற்று ஓடிச் சென்றான்[1].(23)

[1] ஏக வீர அரக்கர் இயக்கரைப்
போக நூறி புனல் பெரும் காற்றினும்
நாக மோழையினும் புக நாடு போர்
ஏக கண்டகன் என்போன் உரறினான்.(287)
ஆயவன் நிலை கண்டு, அவனோடு அடல்
மாயை யாவையும் வல்ல மாரீசனாம்
தீயவன் சென்று தாக்கலும் திண்திறல்
சாய மோதினன் தன் கரத் தண்டினால். (288)
மயங்கி வீழ்ந்து தெளிந்த மாரீசனும்
தயங்கு பூண் வலி சாய இயக்கரைத்
தியங்கி ஓடத்துரந்து அவன் சேனை மண்
முயங்கி வீழக் கதைகொண்டு மோதலும். (289)

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 287 முதல் 289 வரையுள்ள பாடல்கள், வரையெடுத்த படலம்

பொருள்: ஒரே தன்மையிலான வீரத்தைக் கொண்ட ராக்ஷசர்கள், யக்ஷர்களை விரட்டி அழித்ததால், மழையுடன் கூடிய பெரிய காற்றிலும் நாகம் நுழைந்த வழியிலும் ராக்ஷசர்கள் புக விரும்புதற்குரிய கடுமையான போரினை ஏக கண்டகன் என்னும் யக்ஷன் ஆரவாரத்துடன் செய்தான்.(287) அத்தகைய அவனது நிலைமையைக் கண்டு, அவனோடு வலிமை மிக்க மாயைகள் அனைத்தையும் செய்யவல்லவனான மாரீசன் எனும் தீயவன் சென்று தாக்கவும், அவனது திண்ணிய வலிமை சாயுமாறு, ஏக கண்டகன் தன் கைத் தண்டினால் அவனைத் தாக்கினான்.(288) கதையால் அடிபட்டு, உணர்வு மயங்கி, வீழ்ந்து பின், தெளிந்த மாரீசனும், விளங்குகின்ற அணிகலன்களும், வலிமையும் வீழச் சோர்ந்து ஓடும்படி யக்ஷர்களைத் துரத்திய பின்பு, {அந்த ஏககண்டகனின்} படை மண்ணைத் தழுவிக் கீழ் விழும்படி தன் கதையைக் கொண்டு தாக்கினான்.(289)

பிறகு, காஞ்சனத்தால் அழகூட்டப்பட்டு, வைடூரியத் துகள்களால் மறைக்கப்பட்டு, வாயில் காப்போரின் எல்லையாக இருந்த தோரண வாயிலுக்குள் அவன் {ராவணன்} நுழைந்தான்.(24) இராஜனே {ராமா}, அவ்வாறு, நிசாசரன் தசக்ரீவன் நுழைந்தபோது, சூரியபானு என்றழைக்கப்பட்ட துவாரபாலன் {வாயிற்காப்பாளன்} அவனைத் தடுத்தான்.(25) யக்ஷனால் தடுக்கப்பட்டாலும், அந்த நிசாசரன் உள்ளே பிரவேசித்தான். இராமா, தடுக்கப்பட்டவனாக இருப்பினும், அந்த ராக்ஷசன் நிற்காதிருந்தான்.(26) பிறகு, தோரண வாயிலைத் தகர்த்த யக்ஷன் {சூரியபானு},  அதைக் கொண்டே அவனை {ராவணனைத்} தாக்கியதால், சைலத்தில் தாதுக்கள் வழிவதைப் போல உதிரம் அருவியாக ஓடியது.(27) சைலத்தின் சிகரத்தைப் போன்றிருந்த தோரணத்தால், அந்த வீரன் {ராவணன்} தாக்கப்பட்டாலும், ஸ்வயம்புவின் {பிரம்மனின்} வரதானத்தால், அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.(28) பிறகு, அவன், அதே தோரணத்தைக் கொண்டே அந்த யக்ஷனைத் தாக்கினான். அந்த யக்ஷன், உடல் பஸ்மம் {சாம்பல்} ஆகிக் காணாமல் போனான்.(29) 

அப்போது, அந்த ராக்ஷசனின் பராக்கிரமத்தைக் கண்ட {யக்ஷர்கள்} அனைவரும் ஓடிச் சென்றனர். பிறகு, பயத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள், குகைகளிலும், நதிகளிலும் நுழைந்தனர் {பதுங்கிக் கொண்டனர்}. களைப்படைந்த அவர்கள், முகம் வெளிறியவர்களாகத் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டனர்.(30)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 014ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next