Friday, 15 May 2026

புஷ்பக விமானம் | சர்க்கம் – 015 (45)

The Pushpaka vimana - The ariel car | Sarga-015 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசர்களுக்கும், யக்ஷர்களுக்கும் இடையில் நடந்த யுத்தம்; புஷ்பக விமானத்தைக் கவர்ந்து சென்ற ராவணன்...

Kubera speaking to Ravana in battlefield at Alakanandha

பிறகு, ஆயிரக்கணக்கான யக்ஷேந்திரர்கள் அஞ்சி ஓடுவதைக் கண்ட தனாதியக்ஷன் {குபேரன்}, மஹாயக்ஷனான மாணிசரனை {மாணிபத்ரனை} நோக்கி இதை கூறினான்:(1) "இயக்ஷேந்திரா, துர்விருத்தனும் {தீய நடத்தை கொண்டவனும்}, பாவ சித்தம் கொண்டவனுமான ராவணனைக் கொல்வாயாக. யுத்தசாலிகளான யக்ஷ வீரர்களுக்கு நீ அடைக்கலம் கொடுப்பாயாக" {என்றான் குபேரன்}.(2)

இவ்வாறு சொல்லப்பட்டதும், வெல்லப்பட முடியாதவனும், மஹாபாஹுவுமான மாணிபத்ரன், நான்காயிரம் யக்ஷர்களால் சூழப்பட்டவனாகச் சென்று அவர்களுடன் {ராக்ஷசர்களுடன்} போரிட்டான்.(3) பிறகு அந்த யக்ஷர்கள், கதைகள் {கதாயுதங்கள்}, முசலங்கள் {உலக்கைகள்}, பிராசங்கள் {ஈட்டிகள்}, சக்திகள் {வேல்கள்}, தோமரங்கள், முத்கரங்கள் ஆகிய ஆயுதங்களை ஏந்தி, தாங்கள் தாக்குண்டதைப் போலவே ராக்ஷசர்களைத் தாக்கினர்.(4)  மேலும் அவர்கள், சியேனங்களை {பருந்துகளைப்} போல லகுவாகச் சென்று, "எனக்கு இடம் கொடு" என்றும், "என் இடத்தை விட்டுப் போகமாட்டேன்" என்றும் சொல்லி உக்கிரமான போரில் ஈடுபட்டனர்.(5) அப்போது, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மவாதிகளான ரிஷிகளும் வந்து, அந்த உக்கிரமான போரைக் கண்டு திகைப்படைந்தனர்.(6)

பிரஹஸ்தன், ரணத்தில் ஆயிரம் யக்ஷர்களைக் கொன்றான். அதேபோல மஹோதரனும் அவர்களில் ஆயிரம்பேரைக் கொன்றான்.(7) பிறகு, ராஜனே {ராமா}, கடும் குரோதத்துடன் போரிட விரும்பிய மாரீசன், நிமிஷாந்தர மாத்திரத்தில் இரண்டாயிரம் பேரைக் கொன்றான்.(8) இயக்ஷர்களின் நேரான யுத்தம் எங்கே? மாயாபலம் பொருந்திய ராக்ஷசர்களின் யுத்தம் எங்கே? எனவே, புருஷவியாக்ரா {மனிதர்களில் புலியே, ராமா}, அவர்கள் {ராக்ஷசர்கள்} யுத்தத்தில் ஏற்றம் பெற்றனர்.(9) அந்த மஹாரணத்தில் {பெரும்போரில்} மாணிபத்ரன், தூம்ராக்ஷனோடு மோதினான். குரோதத்துடன் முஸலத்தால் மார்பில் தாக்குண்டாலும், நிலை குலையாத அவன் {மாணிபத்ரன்}, தன் கதையை {கதாயுதத்தைக்} கொண்டு அவனை {தூம்ராக்ஷனைத்} தாக்கினான்.(10) அப்போது மாணிபத்ரன், தன் கதையால் {கதாயுதத்தால்} ராக்ஷசன் தூம்ராக்ஷனைத் தாக்கியதும், அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.(11) 

தூம்ராக்ஷன் அடிபட்டு சோணிதத்தில் நனைந்தவனாகக் கீழே விழுவதைக் கண்ட தசானனன் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன்}, போரில் மாணிபத்ரனை நோக்கிப் பாய்ந்தான்.(12) மாணிபத்ரனும், குரோதத்துடன் தன்னை விரட்டி வரும் தசானனைக் கண்டான். இயக்ஷபுங்கவனான அவன் {மாணிபத்ரன்}, மூன்று சக்திகளால் {வேல்களால்} அவனை {ராவணனைத்} தாக்கினான்.(13) இவ்வாறு தாக்குண்டவன் {ராவணன்}, ரணத்தில் மாணிபத்ரனின் மகுடத்தைத் தாக்கினான். அந்தத் தாக்குதலில் அவனது {மாணிபத்ரனின்} மகுடம் ஒரு பக்கமாகச் சரிந்தது.(14) அப்போதும் அவன் அசையாமல் நின்று போரிட்டுக் கொண்டிருந்தான். அன்றிலிருந்து அந்த யக்ஷன் {மாணிபத்ரன்}, "பார்ஷ்வமௌளி {சரிந்த மகுடம் கொண்டவன்}" என்று அழைக்கப்பட்டான். இராஜனே, அந்த மஹான் {மாணிபத்ரன்}, அவமானமடைந்ததைக் கண்டு, அந்த சைலத்தில் பெரும் முழக்கம் எழுந்தது.(15)

அப்போது, கதாதரனாக தனாதியக்ஷன் {கைகளில் கதாயுதம் ஏந்தியபடி கருவூலத் தலைவனான குபேரன்} தூரத்தில் தோன்றினான். அவன் சுக்கிரன், பிரௌஷ்டபதன் {என்கிற மந்திரிகளாலும்}, பத்மன், சங்கன் ஆகியோராலும் {என்ற நிதித் தலைவர்களாலும்} சூழப்பட்டிருந்தான்[1].(16) சாபத்தின் காரணமாகத் தன் கௌரவத்தை இழந்திருந்த தன் பிராதாவை {தன்னுடன் பிறந்த ராவணனைக்} கண்டபோது, அந்த மதிமிக்கவன் {குபேரன்}, பைதாமஹ குலத்திற்குத் தகுந்த {தன் பாட்டனான பிரம்மனின் குலத்திற்குத் தகுந்த இந்த} வசனத்தைச் சொன்னான்:(17) "துர்மதியோனே, உன்னை நான் செய்யவிடாமல் தடுப்பது என்னவென்பதை நீ புரிந்து கொண்டாயில்லை. தீச்செயல்களின் பலன்களைப் பெற்று, நிரயத்தை அடைந்த {நரகத்திற்குச் சென்ற} பிறகே அதை நீ அறிந்து கொள்வாய்.(18) துர்மதியோனே, மோஹத்தால் விஷத்தைப் பருகுவதைப் புரிந்து கொள்ளாதவன், தன் கர்மத்தின் பலனை அதன் பரிணாம அந்தத்திலேயே {செயலின் விளைவை அது வளர்ந்து முடியும்போதே} அறிந்து கொள்வான்.(19) தர்மத்திற்கு இணக்கமற்ற ஏதொன்றையும் தேவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதுவே {அந்த அதர்மமே}, இத்தகைய அறியாமை எனும் நிலைக்கு உன்னை இட்டு வந்துள்ளது.(20) மாதா, பிதா, ஆசாரியர் ஆகியோரை இகழ்பவன் எவனோ, அவன் பிரேதராஜாவின் வசத்தை அடைந்ததும் {யமனின் ஆளுகைக்குள் அகப்பட்டதும்}, தன் தீச்செயல்களுக்கான பலன்களைக் காண்கிறான்[2].(21) 

[1] விவேக் தேவ்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "உடல் வடிவம் ஏற்று வந்த பத்மம், சங்கம் என்ற அழைக்கப்படும் நிதிகளால் குபேரன் சூழப்பட்டிருக்கிறான். பத்மன், பத்மத்தில் (தாமரையில்) இருந்து வெளிப்பட்டவன், சங்கன், சங்கத்தில் (சங்கில்) இருந்து வெளிப்பட்டவன். மாணிபத்ரனே பொதுவாக குபேரனின் தளபதியாக இருப்பவன். பிரௌஷ்டபதம் என்பது பூரட்டாதி, உத்திரட்டாதி என்ற இரு நக்ஷத்திரங்களின் கூட்டுப் பெயராகும். அனேகமாக இந்த நக்ஷத்திரமும், சுக்கிரனும் (வெள்ளியும்) குபேரனுடன் உடல் வடிவத்தில் இருந்திருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[2] தந்தை தாயரைத் தம் முனைச் சார்குரு
அந்தணாளரைச் சீறும் அறிவு இலோர்
இந்த வையத்து இரும்பழி எய்தி மேல்
அந்த வையத்து அருநரகு எய்துவார்.

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 308ம் பாடல், வரையெடுத்த படலம்

பொருள்: தந்தையையும், தாயார்களையும், தன் அண்ணனையும் தம்மால் சாரப்படுத்தற்குரிய குருவையும், அந்தணரையும் கோபித்து வருத்தும் அறிவிலாதவர்கள் இவ்வுலககில் பெரும்பழி ஏய்தி, அதற்கு மேல் அவ்வுலகில் {மறுமையில்} பொறுத்தற்கரிய நரகத்தை அடைவார்கள்.

நிலையற்ற இந்த சரீரத்தை அடைந்தும் தபம் செய்யாதவன் எவனோ, அந்த மூடன் விதி வசப்பட்டவனாக இறந்த பின்னர் வருந்தி அல்லலுறுகிறான்.(22) தர்மத்திலிருந்தே ராஜ்ஜியம், தனம், சௌக்யம் ஆகியன விளைகின்றன. எனவே, சுகத்தின் அர்த்தத்திற்காவது, பாபத்தைக் கைவிட்டு, தர்மத்தைப் பின்பற்றுவாயாக.(23) பாபத்தின் பலன் துக்கமாகும். அதை இம்மையிலேயே {இவ்வுலகிலேயே} அனுபவிக்க நேரிடும். எனவே, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் மூடனே பாபத்தைச் செய்வான்.(24) துர்புத்தி கொண்ட எவனுடைய சித்தத்திலும் நன்மதி பிறக்காது. அனைத்தையும் தேவமே {விதியே} இயக்குகிறது. எவனும் கொல்லப்படும்போது, தைவத்தாலேயே {விதியாலேயே} கொல்லப்படுகிறான். ஒருவன் செய்யும் கர்மம் {செயல்} எத்தகையதோ, அத்தகைய பலனையே அவன் அனுபவிக்கிறான்.(25) புண்ணிய கர்மம் செய்த நரர்களே, அதன் பலனாக புத்தி, ரூபம், பலம், புத்திரர்கள், சௌரியம், தீரம் ஆகியவற்றை இந்த உலகத்தில் அடைகிறார்கள்.(26) இத்தகைய மதியைக் கொண்ட நீ நிரயத்தையே அடைவாய் {நரகத்திற்கே செல்வாய்}. இத்தீய நடத்தைக்கான நிர்ணயத்தைக் குறித்து இனியும் நான் உன்னிடம் பேசப் போவதில்லை" {என்றான் குபேரன்}.(27)

இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்டதும், அவனது {ராவணனின்} அமைச்சர்கள் எதிர்த்து வந்தனர். மாரீசன் தலைமையிலான அனைவரும் தாக்குண்டவர்களாகத் திரும்பி ஓடினர்.(28) பிறகு, மஹாத்மாவான யக்ஷேந்திரன், தசக்ரீவனை {குபேரன், ராவணனைத்} தாக்கினான். அவனது கதையால் தலையில் தாக்குண்டாலும் அந்த இடத்தில் இருந்து அவன் {ராவணன்} நகர்ந்தானில்லை.(29) பிறகும், இராமா, அவ்விருவரும் பெரும்போரில் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தாக்கிக் கொண்டாலும், அவர்கள் கலக்கத்தையோ, சோர்வையோ, கோபத்தையோ அடைந்தார்களில்லை.(30)

Ravana and Kubera battle in Alakanandha
பின்னர், தனதஸ்தன் {குபேரன்}, ஆக்னேயாஸ்திரத்தை அவன் {ராவணன்} மீது ஏவினான். இராக்ஷசேந்திரனோ, வாருணாஸ்திரம் கொண்டு அதை முறியடித்தான்.(31) பிறகு, ராக்ஷசேஷ்வரன், ராக்ஷச மாயைகளைப் பயன்படுத்தினான். மேலும் அவன் நூறாயிரம் {ஒரு லக்ஷம்} ரூபங்களை எடுத்தான்.(32) வியாக்ரம் {புலி}, வராஹம் {பன்றி}, மேகம், பர்வதம் {மலை}, சாகரம், மரங்கள், யக்ஷர்கள், தைத்தியர்களின் ரூபங்களுக்கு ஒப்பானவனாக தசானனன் தோன்றினான்.(33) அவன் ஏராளமான வடிவங்களை எடுத்தாலும், அங்கே அவன் இருப்பவனாகத் தோன்றினானில்லை. இராமா, பிறகு, தசானனன், ஒரு மஹத்தான அஸ்திரத்தை இருப்புக்கு அழைத்தான்.(34) அவன் {அந்த அஸ்திரத்தால் ஈர்க்கப்பட்ட} ஒரு பெரிய கதையைச் சுழற்றி தனதனின் தலையில் தாக்கினான். இவ்வாறு அவனால் தாக்கப்பட்டவன் {குபேரன்} சோணிதத்தில் நனைந்தான்.(35) தனாதிபன், வேர்கள் வெட்டப்பட்ட அசோக மரத்தைப் போல விழுந்தான்.(36) பிறகு அவன், பத்மம் முதலிய நிதிகளால் {பத்மநிதி உள்ளிட்ட செல்வங்களின் அதிபதிகளால்} சூழப்பட்டான். அவர்கள், தனதனை நந்தன வனத்திற்குக் கொண்டு சென்று களைப்பாற்றினர்.(37)

தனதனை வென்றதில், மனத்தில் பெரும் மகிழ்ச்சியடைந்த ராக்ஷசேந்திரன் {ராவணன்}, ஜயலக்ஷணமாக அவனது {தன் வெற்றியின் அடையாளமாக குபேரனின்} புஷ்பக விமானத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.(38) காஞ்சன ஸ்தம்பங்கள் நாட்டப்பட்டதும், வைடூரியம், மணிகளாலான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், முத்து மாலைகள் தொங்கவிடப்பட்டதும், சர்வ காம பலன்களை {அனைத்து ஆசைகளுக்குமான பலன்களை} அருள வல்லதும்,(39) மனோவேகம் கொண்டதும், விரும்பியபடி இயக்கவல்லதும், காமரூபமானதும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லதும்}, பறக்கவல்லதும், காஞ்சன மணிகளாலான படிக்கட்டுகளைக் கொண்டதும், தப்த காஞ்சனத்தாலான வேதிகைகளை {புடம்போட்ட பொன்னாலான பீடங்களை / மேடைகளைக்} கொண்டதும்,(40) தேவர்களை சுமப்பதும், அழிவற்றதும், கண்களுக்கும், மனத்திற்கும் சுகமளிக்கவல்லதும், பக்தியால் உண்டான அற்புதச் சித்திரமாக பிரம்மனால் நிர்மிதம் செய்யப்பட்டதும்,(41) சர்வ காமங்களோடும் நிர்மிதம் செய்யப்பட்டதும், உத்தமமானதும், மனோஹரமானதும், குளிர்ச்சியோ, வெப்பமோ இன்றி சர்வ ருதுக்களிலும் {பருவ காலங்கள் அனைத்திலும்} சுகத்தைக் கொடுக்க வல்லதும், சுபமானதுமான அதில் {மங்கலமானதுமான அந்த புஷ்பக விமானத்தில்},(42) தன் வீரியத்தால் வெற்றியடைந்தவனான அந்த ராஜா {ராவணன்} ஏறிக் கொண்டு, தன் விருப்பப்படி சென்றான். செருக்கினாலடைந்த உற்சாகத்தில் இருந்த அந்த துர்மதியான், திரிபுவனங்களையும் {மூவுலகங்களையும்} தான் வென்றுவிட்டதாக நினைத்தான்.(43) வைஷ்ரவணனை {குபேரனை} வென்றபின் அவன் கைலாசத்தில் இறங்கினான்.(44) சொந்த தேஜஸ்ஸால் விபுலமான ஜயத்தை {மாபெரும் வெற்றியை} அடைந்தவன் {ராவணன்}, விமலமான கிரீடத்தையும், ஹாரத்தையும் அணிந்து கொண்டான். பரம விமானத்தைச் செலுத்திச் சென்ற அந்த நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, சதஸ்ஸிலுள்ள அனலனை {சபையிலுள்ள / வேள்விக்குண்டத்திலுள்ள அக்னியைப்} போல ஒளிர்ந்தான்.(45)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 015ல் உள்ள சுலோகங்கள்: 45

Previous | Sanskrit | English | Next