Wednesday, 17 December 2025

இராவணன் பிறப்பு | சர்க்கம் – 009 (48)

The birth of Ravana | Sarga-009 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுமாலியின் மகளான கைகசிக்கு தசக்ரீவன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகியோர் பிறந்தது; கோகர்ணத்தில் அவர்கள் தபம் செய்தது...

Vishravas and Kaikesi

சிறிது காலத்திற்குப் பிறகு சுமாலி என்ற நாமத்தைக் கொண்ட {பெயருடைய} ராக்ஷசன், ரசாதலத்திலிருந்து வந்து சர்வ மர்த்யலோகத்திலும் {மனிதர்களின் உலகம் முழுவதும்} அலைந்து திரிந்தான்.(1) அவன் நீல மேகத்தைப் போலத் தோற்றமளித்தான், தப்த காஞ்சனத்தாலான {புடம்போட்ட பொன்னாலான} குண்டலங்களை அணிந்திருந்தான். பத்மம் இல்லாத ஸ்ரீயை {தாமரை இல்லாத லக்ஷ்மியைப்} போன்ற தன் கன்னிகையை {மகளை} உடன் அழைத்து வந்தான்.(2) 

பிறகு அந்த ராக்ஷசேந்திரன் மஹீதலத்தில் சுற்றித் திரிந்தபோது, தனேஷ்வரன் புஷ்பகத்தில் {குபேரன் புஷ்பகவிமானத்தில்} செல்வதைக் கண்டான்.(3) விபுவும், புலஸ்தியதனயருமான தன் பிதாவை {வல்லமைமிக்கவரும், புலஸ்தியரின் மகனுமான தன் தந்தை விஷ்ரவஸைப்} பார்க்க, அமரர்களைப் போலவும்,  தபனனுக்கு {சூரியனுக்கு} ஒப்பாகவும் பிரகாசித்தபடியே, தன் சொந்த விருப்பப்படி சென்று கொண்டிருக்கும் அவனை {குபரனை ராக்ஷசன் சுமாலி} கண்டான்.(4) ஆச்சரியமடைந்தவனாக மர்த்யலோகத்தை {மனிதர்களின் உலகத்தை} விட்டு வெளியேறி ரசாதலத்திற்குள் நுழைந்த அந்த மஹாமதிமிக்க ராக்ஷசன் {சுமாலி}, இவ்வாறு சிந்தித்தான்:(5) "நாம் எப்படி இவ்வாறு வளரப் போகிறோம்? செழிப்பை அடைய என்ன செய்யப் போகிறோம்?"{என்று நினைத்தான்}[1]. பிறகு அந்த ராக்ஷசன், கைகசி என்ற நாமம் {பெயர்} கொண்ட தன் மகளை அழைத்தான்.(6)

[1] வலியார் எல்லாம் கீழ்ப்பட்டு
மற்றையவரே மேற்பட்டுப்
புலிவாழ் இடத்தே பசுவுறைந்து
போர் ஆர் ஆழித் தேரராய்
அலியாம் இவனே ஆண் ஆகி
அஞ்சாது இலங்கை உட்புகுந்து
நலிவார் இன்றி அரசு ஆளக்
கண்டேம் நாராயணனாலே

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 188ம் பாடல், இராவணன் பிறப்பு படலம் 

பொருள்: "{நம்மைப் போன்ற வலிமைமிக்கவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டிருக்க, {வலிமையற்ற} மற்றவர்கள் மேம்பட்டு நிற்க, புலி வாழ்ந்த இடத்தில் பசு இருப்பதைப் போல, {நாம் வாழ்ந்த இடத்தில் எளியவர் தங்கி} போர்த்தொழிலுக்கு உரிய தேரைக் கொண்டவர்களாக, {ஆண்மையற்ற} அலியான இவனே {குபேரனே} ஆணாகி அஞ்சாமல் இலங்கைக்குள் புகுந்து தன்னை வருத்துபவர் எவரும் இல்லாமல் அரசு ஆளக் கண்டோம்; {இவையாவும் அந்த} நாராயணனால் {நேர்ந்தவை" என்று நினைத்தான் சுமாலி} பின்னர் வரப்போகும் 12ம் சுலோகம் இந்தச் சிந்தனைக்கு சற்றும் பொருந்தவில்லை. இந்தப் பாடல் ஒட்டக்கூத்தருக்கும், வால்மீகிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுவதற்காக இங்கே சுட்டப்படுகிறது.

{சுமாலி, தன் மகளான கைகசியிடம்}, "புத்ரீ, இது {கன்னிகா} தானத்திற்கான காலமாகும். யௌவனம் கடந்து செல்கிறது. நிராகரிப்புக்குப் பீதியடைபவர்களால் நீ ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை[2].(7) தர்மத்தில் புத்தியுடைய நாங்கள் அனைவரும் உனக்காக {உன் திருமணத்திற்காக} முயன்று வருகிறோம். புத்ரீ, நீ சாக்ஷாத் ஸ்ரீயின் {லட்சுமியின்} சர்வ குணங்களையும் பெற்றவளாக இருக்கிறாய். மானத்தில் கருத்துள்ள அனைவருக்கும் ஒரு கன்னிகையின் பிதாவாக இருப்பது துக்கமேயாகும்.(8) கன்னிகையை மணமகளாகக் கோருபவன் எவன் என்பது தெரிவதில்லை.(9) புத்ரீ, நீ சாக்ஷாத் ஸ்ரீயின் {லட்சுமியின்} சர்வ குணங்களையும் பெற்றவளாக இருக்கிறாய். மாதாவின் குலம், பிதாவின் குலம், அவள் எங்கே கொடுக்கப்படுகிறாளோ அது {அந்தக் கணவனின் குலம்} என ஒரு கன்னிகை சதா மூன்று குலங்களையும் {இவள் நற்பெயர் எடுக்க வேண்டுமே என்ற கவலையுடன் கூடிய} சந்தேகத்தில் வைத்திருக்கிறாள்.(10) பிரஜாபதிகளின் குலத்தில் பிறந்தவரும், முனிவர்களில் மிகச் சிறந்தவரும், புத்ரி {மகளே}, பௌலஸ்தியருமான விஷ்ரவஸை {கணவராக} நீயே தேர்ந்தெடுப்பாயாக.(11) பாஸ்கரனுக்கு சமமான பிரகாசம் கொண்ட அந்த தனேஷ்வரனை {குபேரனைப்} போன்ற புத்திரர்கள் உனக்குப் பிறப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" {என்றான் சுமாலி}.(12)

[2] தர்மாலயப் பதிப்பில், "சங்கைகள் கொண்டவர்களாய் இருப்பதைப் பற்றி நீ பாணிக்ரஹணம் செய்யப்படாமலிருக்கின்றனை" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் தமிழ்ப்பதிப்பில், "நாங்கள் மறுத்துவிடுவோமோ? என்ற பயத்தால் உன்னைப் பெண் கேட்டு எவரும் வரவில்லை" என்றிருக்கிறது. ஸ்ரீநிவாச ராகவாசாரியர் பதிப்பில், "நாங்கள் இப்போது பயந்து இப்பாதாள லோகத்திலொளித்திருப்பதால், யாங்கள் வெளியே சென்று உன்னை யெவர்க்கும் பாணிக்கிரஹணம் செய்து கொடுப்பதற்கில்லை" என்றிருக்கிறது.

அதைக் கேட்ட கன்னிகை {கைகசி}, பிதாவின் வசனத்திற்கு கௌரவமளித்து {தன் தந்தையான சுமாலியின் சொல்லுக்கு மதிப்பளித்து}, விஷ்ரவஸ் எங்கே தபத்தில் ஈடுபட்டிருந்தாரோ, அந்த இடத்திற்கு வந்து நின்றாள்.(13) இதற்கிடையில், ராமா, துவிஜரான புலஸ்திய தனயர் {இருபிறப்பாளரும், புலஸ்தியரின் மகனுமான விஷ்ரவஸ்}, நான்காம் பாவகனை {அக்னியைப்} போல அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருந்தார்.(14) தன் பிதாவின் கௌரவத்தால் அவள் {தந்தையிடம் கொண்ட மதிப்பால் கைகசி} அந்தப் பயங்கர வேளையைக் குறித்துச் சிந்தித்தாளில்லை. அவள் அவரை அணுகி, அவர் முன் தலை வணங்கி நின்று அவரது சரணங்களை {கால்களைப்} பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த பாமினி {அழகிய பெண்}, தன் கட்டைவிரல் நுனியால் பூமியில் மீண்டும் மீண்டும் கீறிக் கொண்டிருந்தாள்.(15)

அழகிய இடையைக் கொண்டவளும், பூர்ணச் சந்திரனைப் போன்ற முகத்தைக் கொண்டவளும், சொந்த தேஜஸ்ஸால் ஒளிர்பவளுமான அவளைப் பார்த்து, அந்தப் பரமோதாரர் {தாராள மனம் கொண்ட விஷ்ரவஸ் பின்வருமாறு} கூறினார்:(16) "பத்ரே {மென்மையான பெண்ணே}, நீ யாருடைய துஹிதை {பெண்}? நீ எங்கிருந்து வருகிறாய்? சோபனையே {அழகானவளே}, இங்கே உனக்கு என்ன காரியம்? என்ன காரணத்திற்காக வந்தாய்? என்பதை உள்ளபடியே சொல்வாயாக" {என்று கேட்டார் விஷ்ரவஸ்}.(17)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த கன்னிகை, கைகளைக் கூப்பிக் கொண்டு {பின்வருமாறு} கூறினாள், "முனியே, ஆத்மபிரபாவத்தால் {உமது சொந்த சக்தியால்} நீர் என் கருத்தை அறிவீராக.(18) ஆனால், பிரம்மரிஷியே, நான் பிதாவின் கட்டளைப்படி இங்கு வந்திருக்கிறேன் என்பதை அறிவீராக. கைகசி என் நாமம் {பெயர்}; மற்றவற்றை நீரே அறிவீராக" {என்றாள் கைகசி}.(19)

{விஷ்ரவஸ்} முனிவர், தியானத்தில் ஆழ்ந்து சென்று இந்த வாக்கியத்தைச் சொன்னார், "பத்ரே {மென்மையானவளே}, உன் மனோ கதியின் {எண்ணத்தின்} காரணத்தை நான் புரிந்து கொண்டேன்.(20) மத்தமாதங்க காமினி {மதம் கொண்ட யானை போன்ற விருப்பம் கொண்டவளே}, மகனுக்கான ஆசையால் உண்டான மதத்துடன் {போதையுடன்} நீ பயங்கர வேளையில் என்னிடம் வந்திருக்கிறாய்.(21) பத்ரே, நீ எத்தகைய மகன்களைப் பெறுவாய் என்பதை இதோ என்னிடம் கேட்பாயாக. அவர்கள் பயங்கரமானவர்களாகவும், பயங்கர வடிவம் கொண்டவர்களாகவும், பயங்கர ஜனங்களுக்குப் பிரியமானவர்களாகவும் இருப்பார்கள்.(22) அழகிய இடையைக் கொண்டவளே, நீ குரூர கர்மங்களைச் செய்யும் ராக்ஷசர்களைப் பெற்றெடுப்பாய்" {என்றார் விஷ்வரஸ்}. அவரது வசனத்தைக் கேட்டதும் அவள் தலைவணங்கி இந்தச் சொற்களைக் கூறினாள்:(23) "பகவானே, பிரம்மவாதியான உம்மிடமிருந்து இத்தகைய துராசாரம் கொண்ட புத்திரர்களைப் பெற நான் விரும்பவில்லை. எனக்கு அருள் செய்வதே உமக்குத் தகும்" {என்றாள் கைகசி}.(24)

முனிபுங்கவரான விஷ்ரவஸ், அந்தக் கன்னிகை இவ்வாறு சொன்னதும், ரோஹிணியிடம் பூர்ணச்சந்திரனைப் போல கைகசியிடம் மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்:(25) "அழகிய முகம் கொண்டவளே, பஷ்சிமத்தில் {இறுதியில்} பிறக்கும் உன் மகன் எவனோ, அவனே {விபீஷணனே} என் வம்சத்துக்குத் தகுந்த தர்மாத்மாவாக இருப்பான்" {என்றார் விஷ்ரவஸ்}.(26)

அவர் {விஷ்வரஸ்} இவ்வாறு சொல்லி சிறிது காலம் கழிந்ததும், ராமா, அந்தக் கன்னிகை {கைகசி} பயங்கர ராக்ஷசரூபம் கொண்ட ஒரு பயங்கர மகனைப் பெற்றெடுத்தாள்.(27) அவன் பத்துக் கழுத்துகளையும், பெரும் {கோரைப்} பற்களையும் கொண்டிருந்தான். அவன் நீல அஞ்சனத்திற்கு {கரிய மைக் குவியலுக்கு} ஒப்பானவனாக இருந்தான். அவனுக்கு சிவந்த உதடுகளும், இருபது புஜங்களும் {கைகளும்}, பெரும் வாயும், {தீச்சுடர் போல} ஒளிரும் தலைமுடியும் இருந்தன.(28) அவன் பிறந்த அந்த காலத்தில் நரிகள் வாயில் தீப்பிழம்புகளைக் கக்கின. ஊனுண்ணும் பறவைகளும், விலங்குகளும் இடப்புறம் மண்டலமாகத் திரிந்தன {இடப்பக்கமாக வட்டமிட்டன}.(29) மேகங்கள் கழுதைகளைப் போல ஸ்வனம் எழுப்பின; {இந்திர} தேவன் உதிர மழை பொழிந்தான்; சூரியன் பிரகாசிக்க வில்லை. மஹா உல்கங்கள் {எரிகொள்ளிகள்} புவியில் விழுந்தன.(30) ஜகம் அதிர்ந்தது; பயங்கர வாதம் {காற்று} வீசியது; கலங்கடிக்கப்பட முடியாத சரிதாம்பதியான சமுத்திரமும் {ஆறுகளின் தலைவனான கடலும்} கலக்கம் அடைந்தது.(31)

பிறகு பிதாமஹனுக்கு {பிரம்மனுக்கு} சமமானவரான அவனது பிதா {விஷ்ரவஸ்}, அவனுக்கு ஒரு நாமத்தை {பெயரைக்} கொடுத்தார், "இவன் தசக்ரீவங்களுடன் {பத்துக் கழுத்துகளுடன்} பிறந்திருப்பதால் தசக்ரீவன் என்று அழைக்கப்படுவான்" {என்றார்}.(32)

அவனுக்குப் பின் மஹாபலவானான கும்பகர்ணன் பிறந்தான். அவனது விபுலமான பிரமாணத்திற்கு {பெரும் உடலளவுக்கு} நிகரான பிரமாணத்தை {உடலளவைக்} கொண்டவன் {உலகில் வேறு} எவனும் இல்லை.(33) பிறகு, சூர்ப்பணகை என்றழைக்கப்படும் சிதைந்த முகத்துடன் கூடியவளும்[3][4]. கைகசியின் பஷ்சிம சுதனாக {கடைசி மகனாக} தர்மாத்மாவான விபீஷணனும் பிறந்தனர்.(34) அந்த மஹாசத்வனான {பெரும் வலிமைமிக்கவன்} பிறந்த போது, அவன் மீது புஷ்ப வர்ஷம் {மலர் மாரி} பொழிந்தது.(35) அவன் பிராணனை அடைந்ததும் நபஸ்தலத்தில் இருந்து தேவ துந்துபிகள் ஒலித்தன. அந்தரிக்ஷத்தில் இருந்து, "சாது, சாது {நன்று, நல்லது}" என்ற வாக்கியம் கேட்டது.(36) அந்த மஹா ஓஜஸர்கள் {பெரும் வலிமைமிக்கவர்கள்} இருவரும் அங்கே மஹாரண்யத்தில் {பெருங்காட்டில்} வளர்ந்தனர். பிறகு தசக்ரீவன், கும்பகர்ணன் ஆகிய இருவரும் உலகத்திற்கு வேதனையை ஏற்படுத்தினர்.(37) கும்பகர்ணன், நித்யம் தர்மவத்ஸலர்களான மஹரிஷிகளை பக்ஷித்தும், நிறைவடையாமல் மூவுலகங்களையும் விழுங்கியபடி திரிந்து கொண்டிருந்தான்.(38) தர்மாத்மாவான விபீஷணன், நித்யம் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் இருந்தான். அவன் தன் இந்திரியங்களை வென்று, நியதத்துடன் {விரதக் கட்டுப்பாட்டுடன்} ஆகாரத்தை உண்டு, அத்யயனத்தில் {வேதம் ஓதுவதில்} ஈடுபட்டான்.(39)

[3] கிஷ்கிந்தா காண்டம் 58ம் சர்க்கத்தின் 4ம் அடிக்குறிப்பிலும்யுத்த காண்டம் 7ம் சர்க்கம் 1ம் அடிக்குறிப்பிலும் சூர்ப்பணகை ராகை என்ற கைகசியின் தங்கைக்குப் பிறந்தவளாகச் சொல்லப்படுகிறாள். 

[4] பண்ணார் மொழியாள் அவள் வயிற்றில்
பருத்த இடையும் பருங்கழுத்தும்
விண்ணார் மேகத்து இடி என்ன
வெடித்த குரலும் உடையாளாய்
கண்ணார் கனலும் புகையும் எழக்
கனன்று காலன் கருக்குலைய
பெண்ணாய்ப் பிறந்தார் வெருக்கொள்ளப்
பிறந்தாள் பெரிய சூர்ப்பணகை

- ஒட்டக்கூத்தர் உத்தர காண்டம் 198ம் பாடல், இராவணன் பிறப்பு படலம் 

பொருள்: பண்போன்று மொழிபவள் {கைகசி}, வயிற்றிலிருந்து பருத்த இடையும், பருத்த கழுத்தும், விண்மேகத்து இடி என வெடித்தாற் போன்ற குரலும் உடையவளாய், கண்ணில் நிறைந்த கனலும், புகையும் எழக் கோபித்து காலனும் {யமனும்} கரு கலங்கவும் பெண்ணாகப் பிறந்தவர்கள் அச்சம் கொள்ளவும் பெரிய உருவத்தையுடைய சூர்ப்பணகை பிறந்தாள்.

சிறிது காலத்திற்குப் பிறகு, அங்கே வைஷ்ரவண தேவன் வந்தான். தனேஷ்வரன், தன் பிதாவைக் காண புஷ்பகத்தில் வந்தான் {தன் தந்தையான விஷ்ரவஸைக் காண புஷ்பக விமானத்தில் வந்தான்}.(40) தேஜஸ்ஸால் எரிபவனைப் போலத் தெரியும் அவனை {குபேரனைக்} கைகசி கண்டாள். அப்போது, அங்கே வந்த தசக்ரீவனிடம் ராக்ஷசி {ராவணனிடம் அவனது அன்னை ராக்ஷசி கைகசி பின்வருமாறு} சொன்னாள்:(41) "புத்திரா, தேஜஸ்ஸால் சூழப்பட்ட உன் பிராதா வைஷ்ரவணனை {உன்னுடன் பிறந்தவனான குபேரனைப்} பார். பிராத்ருபாவத்தில் {சகோதரபாவத்தில்} நீங்கள் சமமானவர்களே என்ற பார்வையில் உன்னையும் அப்படியே பார்.(42) தசக்ரீவா, பெரும் விக்ரமம் கொண்டவனே, என் புத்திரா, வைஷ்ரவணனுக்கு ஒப்பாவது எப்படியோ, அப்படிப்பட்ட யத்னத்தை {முயற்சியை} நீ செய்வாயாக" {என்றாள் கைகசி}.(43)

பிரதாபவானான தசக்ரீவன், தன் மாதாவின் வசனத்தைக் கேட்டான். ஒப்பிலாத கோபமடைந்தவன், அவளிடம் ஒரு பிரதிஜ்ஞை செய்தான் {பின்வருமாறு வாக்குறுதி அளித்தான்}:(44) "பிராதாவுக்குத் துல்லியனாகவோ, அதிகனாகவோ ஆவேன் என்ற சத்தியத்தை உனக்கு பிரதிஜ்ஞை செய்கிறேன் {என்று உண்மையில் உனக்கு உறுதி கூறுகிறேன்}. நான் மேலும் ஓஜஸை {வலிமையை} அடைவேன். உன் ஹிருதயத்தை அடைந்த சந்தாபத்தைக் கைவிடுவாயாக" {என்றான் தசக்ரீவன்}.(45) 

பின்னர் அனுஜன் {தம்பியான கும்பகர்ணன்} சகிதனான தசக்ரீவன், அதே கோபத்துடன் ஒரு செயற்கரிய கர்மத்தைச் செய்ய விரும்பி தபங்களில் தன் மனத்தை நிலைநிறுத்தினான்.(46) தபம் செய்வதன் மூலம் தன் விருப்பத்தை அடைய முடிவு செய்த அவன், தன் நிறைவுக்காக கோகர்ணத்தின் சுபமான ஆசிரமத்திற்குச் சென்றான்.(47) அனுஜர்களுடன் {தம்பிகளான கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோருடன்} கூடிய அந்த ராக்ஷசன் {தசக்ரீவன்}, ஒப்பற்ற விக்கிரமத்துடன் உக்கிர தபத்தைச் செய்தான். அவன் விபுவான பிதாமஹனை {சர்வ வல்லமையுள்ள பிரம்மனை} நிறைவடையச் செய்தான். அவன் {பிரம்மன்}, ஜயத்தை {வெற்றியைத்} தரும் வரங்களை அவனுக்குக் கொடுத்தான்.(48)

உத்தர ராமாயணம் சர்க்கம் – 009ல் உள்ள சுலோகங்கள்: 48

Previous | Sanskrit | English | Next